Thursday, December 30, 2010

புதுச் சட்டை
''டேய் பாலு, என்னடா பண்றே அங்கே? ஒரு பேபி சட்டைக்கு காஜா போட இவ்வளவு நேரமா?'' கத்திய டெய்லர் ஷண்முகம், ''சே! புதுசா வர்ற பசங்களை வேலைக்கு சேர்த்துக்கிட்டா இப்படித்தான்!'' என்று எரிச்சல் பட்டார்.''நான் அன்னிக்கே சொன்னேனே இவன் சரியில்லேன்னு... அவனுக்கு தோணற மாதிரி வேலை செய்யறான். நேத்து நாலு சட்டைக்கு அரை மணி நேரத்தில பட்டன் தைச்சு, காஜா போட்டுட்டான். இன்னிக்கு ஒரு சின்ன சட்டையை வெச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கான். ஊஹூம், இவன் தேற மாட்டான்.'' என்று அலுத்துக் கொண்டான் சண்முகத்தின் உதவியாளன் கிருஷ்ணன்.


''சரி, சரி! அதை நீ வாங்கி முடிச்சுடு. பாலு, கொடுடா அதை கிருஷ்ணன் கிட்டே.'' என்று இரைந்தார் சண்முகம்.


''வேணாங்க முதலாளி, இதோ முடிச்சிடறேன்,'' என்று இறைஞ்சிய பாலு, கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுக்க, காத்திருந்த வாடிக்கையாளர் வாங்கிகொண்டு விரைந்தார்.


அவர் போனதும் சண்முகம் இவனிடம், ''ஏண்டா இந்த சின்ன வேலைக்கே இத்தனை நேரம் எடுத்துக்கிட்டா நாளைக்கு நீயெல்லாம் எப்படிடா பெரிய டெய்லரா வரப்போறே?'' என்று அதட்டினார்.


''அது வந்துங்க... இதைச் சின்ன வேலையா நான் நினைக்கலீங்க. ஆறு மாச குழந்தைக்கான சட்டை இது. குழந்தை சட்டையை எப்பவும் வாயிலேதான் கொண்டு போகும். இல்லீங்களா? அப்ப பட்டன் கழன்று அதன் வாய்க்குள்ளே போயிடக்கூடாது இல்லையா? அதான் பட்டனை நல்ல அழுத்தித் தைச்சு காஜாவையும் ஸ்ட்ராங்காப் போட்டேன். அதான் கொஞ்சம் கூடுதலா நேரமாயிட்டுது. மன்னிச்சுக்குங்க'' என்றான் பாலு.


சண்முகத்தின் முகம் சட்டென்று கனிந்தது. அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து சொன்னார்.
''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''

(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)

Thursday, December 16, 2010

உள் காயம்

உள் காயம்

கையின் மணிமுட்டிக்கருகே

அந்தக் காயம்.

ஆழமானது அல்லதான்.

ஆனாலும் அது என்னைப்

பாடாய்ப் படுத்திற்று.

சுற்றியுள்ள வீக்கம்

சிறு மேடாயினும் என்னைச்

சிணுங்க வைத்தது.

துடித்துத்தான் போனேன்.

காயம் இருந்தது

என் மகள் கையில் அல்லவா?

###

உயர மயக்கங்கள்


டித் தண்டில் ஏற ஆரம்பிக்கையில்

அந்த அணிலுக்குத் தெரியவில்லை

போய்க்கொண்டேயிருக்கும்

அதன் உயரம் என்று.

என்றாலும் ஏறிச் சென்றது

தென்னையின் மேலே மேலே.

மயக்கம் வருகிற வரையில்.

தொடரவும் துணிவின்றி

தாவவும் அருகில் கிளையின்றி

செங்குத்தாக இறங்கவும் தயங்கி

நின்றிருந்த ஒரு கணத்தில்

உலக மொத்தத்திலிருந்தும் தன்

தனிமையை உணர்ந்தது.

###

Wednesday, December 8, 2010

அனுபவம்


விசாலத்தால் தன் கணவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பத்து வருஷத்துக்கு முன் வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டதால் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் உதவி கேட்டு வந்த தன் தம்பிக்கு தயவு தாட்சண்யமில்லாமல் மறுத்து விட்டார். இன்று அவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க தன்னை அழைக்கிறார்.


''என்ன திடீர் கரிசனம்?'' வெகுண்டு கேட்டாள்.

''வந்து பாரேன்.''

பார்த்த பிறகு... ''என்னங்க இப்படி ஒரு லட்ச ரூபாயைத் தூக்கிக் கொடுத்து இதை வெச்சு எல்லாத்தையும் சரி பண்ணிக்கோ, எனக்குத் திருப்பித் தர வேண்டாம்னுட்டீங்க?''

ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார். ''பார் விசாலம், அப்ப அவன் அனுபவமில்லாமல் வியாபாரத்திலே சறுக்கின நேரம். அப்ப என்ன உதவி யார் பண்ணினாலும் மேலும் மேலும் சறுக்கத்தான் செய்வான். தானா எழுந்திருக்கப் பழக முடியாது. எல்லா உதவியையும் வாங்கிட்டான். எல்லா சொத்தையும் இழந்திட்டான். இப்ப அவனிடம் அனுபவம் தவிர எதுவுமில்லை. இதுதான் அவனுக்கு உதவி செய்ய வேண்டிய நேரம். அதான் அந்த ஐயாயிரம் ரூபாயை இப்ப கொடுத்தேன்.''

''எங்கே, ஒரு லட்சமில்லே தூக்கிக் கொடுத்தீங்க?''

''அதே தான் இது. என்ன முழிக்கிறே? அன்னிக்கு அவனுக்குக் கொடுக்காத அந்த ஐயாயிரத்துக்கு எக்ஸ்டென்ஷன்லே ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டேன். அந்த ஏரியா இப்ப டெவெலப் ஆகிட்டதால் அந்த கிரவுண்டைத்தான் ஒரு லட்ச ரூபாவுக்குப் போன வாரம் வித்தேன். அதைத்தான் அவனுக்குக் கொடுத்தோம்.''


விசாலம் பேசத் தெரியாமல் தவித்தாள்.

(குமுதம் 14-12-2005 இதழில் வெளியானது)

Saturday, December 4, 2010

வேகம்ரியிட்ட காகிதத்தைப்
பார்க்கும் போதெல்லாம்
வரிந்தெழுதத் தோன்றுகிறது
உடனடியாய் ஒரு கவிதை.

ருகிற கவிதை வரிகளோ
சாயம் பூசியதாய்
யார் மனதிலும்
மாயம் புரியாததாய்
சில சமயம்
எனக்கே அந்நியமாய்
.

னதில் முளையிட்ட அனுபவம்
தன்னுணர்வுடன் வெளிப்படுகையில்
மட்டுமே அல்லவா
தேடவேண்டும் நான்
தாளையும் பேனாவையும்?


----

Wednesday, November 24, 2010

விளையும் பயிர்ய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா தங்கள் வயலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். பயிர்களெல்லாம் விளைந்து அறுவடைக்குத் தயாராக. மத்தியான சாப்பாட்டை வயலுக்கே எடுத்து வரும்படி சொல்லியிருந்தார் மனைவியிடம்.

தூரத்தில் வரும்போதே கோமதியின் நடை தளர்ந்திருந்ததைக் கவனித்தார். புரிந்தது அவருக்கு. மகனைப் பற்றிய கவலை. வெளியூருக்கு மேல்படிப்புக்காக செல்லப்போகும் அவன் பிரிவை எண்ணி! மரத்தடியில் வரப்போரமாக அவர் அமர்ந்துகொள்ள, பதார்த்தங்களோடு வார்த்தைகளையும் பரிமாறலானாள்

''என்னங்க, பையனை இத்தனை தூரம் அனுப்பணுமா? சின்னப் பையன், அவனுக்கு என்ன தெரியும்? நமக்குத்தான் ஊரிலே நிலம், வீடு எல்லாம் இருக்கே, நம்மோட நின்னு இங்கேயே வளரட்டுமே? பக்கத்து ஊர் காலேஜிலேயே முடிஞ்ச மட்டும் படிக்கட்டுமே? பத்திரமா நல்லா பாத்துக்கலாமில்லையா? ''

''உன் கவலை எனக்குப் புரியாம இல்லே கோமு,'' என்றார் கனிவாக.
''எனக்கும் அதே கவலைதான். இதோ இந்த மரத்தடியிலே நிக்கிற பயிர் எல்லாம் நிழல்லே சொகுசா இளைப்பாறுது. மத்த பயிர் எல்லாம் வெயில்லே வாடுது. இது மாதிரி தானே நம்ம பையனும் வாடுவான் அங்கே?''

கோமதி அந்தப் பயிர்களைப் பார்த்தபடியே தலையாட்டினாள், ''ஆமாங்க.''

''ஆனா நீ இன்னொண்ணைக் கவனிச்சியா? இந்தப் பயிர்கள் எல்லாம் எப்படி வளர்ச்சி குறைவா, விளைச்சல் குறைவா இருக்கு தேவையான வெயில் கிடைக்காம? அதுபோலத்தான் நம்ம பையனும்! வெளியுலக வெளிச்சம் அவனுக்குத் தேவை. தகுந்த மதிப்பெண் இருக்கிறதாலே சென்னையிலே நல்ல காலேஜில் அட்மிஷன் கிடைச்சிருக்கு. விளையும் பயிர் அவன். அவனைப் போய் பாதுகாப்புக் கயிற்றாலே கட்டிப் போடலாமா?''

அவர் இதமாக எடுத்துச் சொன்னதைப் பதமாகப் புரிந்து கொண்டாள் அந்த அன்னை.

('குமுதம்' 24-01-05 இதழில் வெளியானது)

Saturday, November 13, 2010

பதில் ஒன்றே!

(ஈரோடு திண்டல் ரோட்டரி சங்கமும் 'சிகரம்' இதழும் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை )மாதவன் அவரே காரை ஒட்டிக்கொண்டு வந்திருந்தார் கிராமத்துக்கு. அவருக்கு இரண்டு பிரசினைகள். அவைதாம் அப்பாவைத் தேடிக்கொண்டு வரவைத்தது. ஏதாவது வழி சொல்லுவார் என்ற நம்பிக்கை.


அம்மா காலமான பிறகும் அப்பா தன் ஐந்து ஏக்கர் தென்னந்தோப்பையும் தோட்டத்தையும் பார்த்துக்கொண்டு, அவருண்டு அவரின் புத்தகங்கள் உண்டு என்று அந்த கிராமத்து வீட்டில் தனியாக வாழ்ந்தார். வற்புறுத்திய மகனிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார், ''என்னையும் உங்களோட வெச்சுக்க ஆசைப்பட்டா நீங்களும் கிராமத்தில தங்கிடறது தான் ஒரே வழி.''என்று. அது அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.மாதவன் சென்னையில் ஒரு கணினி கம்பெனியில் டிவிஷனல் மானேஜராக நல்ல சம்பளம், ஃப்ரீ க்வாட்டர்ஸ், கார், சமூகத்தில் நல்ல அந்தஸ்து, அழகான மனைவி, காலேஜில் படிக்கிற இரு பையன்கள், பெண்...


ஆனால் இன்னொரு பக்கம்...


அதுதான் பிரசினை. அதுதான் அப்பாவைத் தேடி கொண்டு வரவைத்தது.காரை ஊருக்குள் விடாமல் தோப்புக்குச் செலுத்தினார். இந்நேரம் அவர் எங்கே இருப்பார் என்று தெரியும்.


வெண்டைக்காய் தோட்டத்தில் களை பறித்துக் கொண்டிருந்த சுப்பையா ஆச்சரியமே இல்லாது பார்த்தார் மகனை. ''என்ன விஷயம்? ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கே...''


''உங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு தான். கொஞ்சம் பிரசினை எனக்கு... வீட்டுக்குப் போகலாமாப்பா?''


''இல்லை, இதை முடிச்சிட்டுப் போகலாம்,'' என்று ஒரு கூடையை மகன் பக்கம் நகர்த்தினார்.


அப்பா! மாறவே மாட்டார் இவர்! இவருக்கு இந்தத் தோட்டம் தான் டிஸ்னி லேண்ட்... களை பறிப்பது தான் கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்... முணுமுணுத்த படியே பறிக்க ஆரம்பித்தார்.


''சொல்லு.''


''ரெண்டு பிரசினைப்பா எனக்கு. ரெண்டும் என்னைப் பிய்க்குது.'' ஆரம்பித்தார்.''எல்லா வசதியும் இருக்கு. ஆனா நிம்மதியில்லே.''


''ஏண்டா?''


''செலவு. அதிக செலவு! என்னால முடிஞ்ச வரை போராடறேன். முடியலே.''


''உனக்குத்தான் நல்ல சம்பளம் வருதுன்னு சொல்வியே?''


''தாராளமாவே வருது. ஆனா அதைக்கொண்டு சமாளிக்க முடியலியே... எந்த செலவையும் கட்டுப் படுத்த முடியலே.''


''இப்படி மொத்தமா சொன்னா எப்படி? ஏதாவது ஒரு அம்சத்தை சொல்லேன்.''


''மாசா மாசம் பெட்ரோல் செலவு மட்டும் ரெண்டாயிரம் ரூபாய் வருது.''


''ரெண்டாயிரமா?''


''ஆமா, ரெண்டு கார் இருக்கில்ல? ஒரே சமயத்தில் நானும் ஆபீஸ் போகணும்.சாயந்தரம் ரேவதி கிளப் போவாள். மத்தவங்க ட்யூஷன். அதான் இன்னொரு வண்டி வாங்கினேன்.''


''ஓஹோ? சரி, உன் அடுத்த பிரசினை?''


''அது கொஞ்சம் வேறே மாதிரி.'' கை வலிக்கவே கூடையை கீழே வைத்தார்.''வர வர உடம்பு மோசமாயிட்டே போகுது. டயபடிஸ், கொலேஸ்ட்ரால் ரெண்டும் இருக்குது. பிரஷர் ஒருபக்கம் ஏறிட்டே போகுது.''


''டாக்டர் என்ன சொல்றார்?''


''இதையெல்லாம் கண்ட்ரோல் பண்ணலேன்னா இருதயத்தை பாதிக்கும்கிறார். ஹைபர்டென்ஷன் வந்து ஸ்ட்ரோக் வந்துரும்கிறார்... ஏற்கெனவே வீட்டு செலவுப் பிரசினையினால சோர்ந்து போயிருந்தேனா, இதுவும் சேர்ந்து தூக்கமே இல்லாம போச்சு. டிப்ரஷன் இருக்கலாம்னு சொல்றார் டாக்டர்...''


களைகளை களைந்தபடியே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் சுப்பையா. எதுவும் சொல்லவில்லை.வீட்டுக்கு திரும்பினார்கள். மனசுக்குள் லேசாக உணர்ந்தார் மகன். அப்பாவிடம் கொட்டிய திருப்தி.மறு நாள். மாதவனையும் அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு கிளம்பினார். மண்பாதை வழியே நடக்கையில்...


''மாதவா, சின்ன வயசில் உனக்கு நிறைய விடுகதைஎல்லாம் போடுவேனே ஞாபகமிருக்கா?''


''ஆமாப்பா.'' நினைவு வந்தது. நிலா நாட்களில் மாடியில் அமர்ந்து தினுசு தினுசாக விடுகதைகள், புதிர்கள்...''எருக்கம் இலை பழுப்பதேன்? எருமைக் கன்று அழுவதேன்? அப்படீன்னு எல்லாம் கேட்பேனே?''


''ஆமா. ரெண்டுக்கும் ஒரே ஆன்ஸர் தான். பாலின்றி!''


''அது மாதிரி உன் ரெண்டு பிரசினைக்கும் ஒரே தீர்வு தான்.''


மாதவன் திடுக்கிட்டு நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தார்.


''இப்படி உட்கார், சொல்றேன்!'' கால்வாய்க்கரை ஓரமாக அமர்ந்தனர்.


''உங்களை மாதிரி காரிலும் ஆபீசிலும் கான்ஃப்ரன்ஸிலுமாக உட்கார்ந்தே நாளைக் கழிக்கிறவங்க சீக்கிரமே உடல் தளர்ந்திடறாங்க. தசைகள் கட்டுவிட்டுப் போகுது. ரத்த ஓட்டம் குறையுது. எடை அதிகமாகுது. டயபடிஸ் வருது. பி.பி. ஏறுது. இதுக்கெல்லாம் காரணம் போதுமான உடலசைவு இல்லாதது தான். உடற் பயிற்சி தான் இதற்கு நிவாரணம். ஏரோபிக் எக்ஸர்சைஸ்னு எல்லாம் கேள்விப்பட்டிருப்பியே...''


இந்த மாதிரி சங்கதிகளை எல்லாம் படிக்க எங்கே நேரம் இருக்கு அவருக்கு? அப்பாவுக்கோ படிப்புதான் முதல் உணவு.


''ஒழுங்கா உடற் பயிற்சி செய்யறதால உடலின் கெமிஸ்டரியில் ஏற்படற மாற்றம் ஏராளம். நம்ம உடம்பில மொத்தம் ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு ரத்தக் குழாய்கள் இருக்கு. தசைக்குப் பாசனம் செய்கிற வாய்க்கால்கள்! தசைகள் சும்மா இருக்கும்போது இதில கொஞ்சம் தான் திறந்து மூடுது. ஆனால் உடற் பயிற்சி செய்யறபோது 50 மடங்கு அதிகம் குழாய்கள் திறந்து மூடுது. ஏன், புது ரத்தக் குழாய்களே உருவாகுது... மூளைக்கும் எத்தனையோ நன்மைகள். ஞாபகசக்தி அதிகமாகுது. ஆராய்ந்து தெளியும் திறன் சக்தி கூடுது. ஒரு மன இளக்கம் ஏற்படும். அப்புறம் எப்படி டிப்ரஷன் அங்கே இருக்கும்?''


இவ்வளவு விஷயம் இருக்கா? வியந்தார். ''அப்ப நான் கொஞ்சம் இதெல்லாம் செய்ய நேரம் ஒதுக்கணுமே..?''''தனியே நேரம் ஒதுக்க வேணாம்னு தான் சொல்ல வந்தேன். நீ ஆபீஸ் போய் வர்ற நேரம் தான் இருக்கே?''


''என்னது?''


''ஆமா. உலகத்திலேயே சிறந்த எளிமையான பாதுகாப்பான உடற் பயிற்சியை நீ அப்ப செய்யலாமே! தினம் ஆபீசுக்கு நடந்து போய் வா. வேகமா கையை வீசி... ஸ்ட்ரைடிங்னு சொல்லுவாங்க, அப்படி. தவறாம இதை தொடர்ந்து செய்து பார்.''


''பார்த்தா?''


''உன் ரெண்டாவது பிரசினையும் தீர்ந்திடும்.''


''அப்படியா?''


''எஸ். பெட்ரோலுக்காக செலவாகிற ஒரு கணிசமான தொகை மிச்சமாயிடும். நீ இப்படி நடந்து போகிறதைப் பார்த்தா நிச்சயம் ரேவதியும் பிள்ளைகளும் காரை தேவையில்லாம எடுக்கிறதைக் குறைச்சுக்குவாங்க. பெட்ரோல் பில்லும் சரி, டாக்டர் பில்லும் சரி, குறைஞ்சிரும்.''பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் மாதவன். மனதில் ஏராளம் மாற்றங்கள். தீர்மானங்கள்.


''அது மட்டுமில்லே. இப்படி செய்யறதில உனக்கொரு ஆத்ம திருப்தியும் உண்டாகும் பார். பெட்ரோலை இப்படி உபயோகிக்கிறதால உலகத்தில மிஞ்சி இருக்கிற ஏரிசக்தியை வேகமா அழிச்சுத் தீர்க்கிறோம். இயற்கையின் சுழற்சியில் அளவோடு உண்டாகிற அபூர்வ சக்திகளை இப்படி அபரிமிதமா வீணாக்கிறது பாவம் இல்லையா? இந்த மாதிரி நம்ம காரியங்களை நாமே செய்யறதன் மூலம் அதை தவிர்க்கலாம். அதில நமக்கொரு சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். விலை மதிக்க முடியாத விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றத்தை விட்டுறணும்னு சொல்லலை.ஆனா அது நம்மை சுகபோகங்களுக்கு அடிமையாக்கிடக் கூடாது இல்லையா?''


''உண்மைதாம்பா. நேத்திக்கு உங்களோட கொஞ்ச நேரம் களை பிடுங்கினப்போ அதை நானே உணர்ந்தேன். முதல்ல கஷ்டமா இருந்தது, ஆனா கடைசியில வேறெப்போதும் உண்டாகாத ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம் உண்டானது.''


''நல்லவே புரிஞ்சிக்கிட்டே. இந்த வேடிக்கையைப் பார். ஒரு பக்கம் ஏரி சக்தியை வீணாக்கிட்டு இன்னொரு பக்கம் மனித சக்தியை அளவுக்கு மீறி ஊளைச் சதையா உடம்பில தேக்கி வைக்கிறோம். நாளைக்கு ரெண்டினாலேயும் கஷ்டப்படப் போறோம்!'' என்று சிரித்தார்.


மாதவனும் சிரித்தார்.''உங்க விடுகதை புரியுதுப்பா!''


''ஆமா, உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்? குடும்பச் செலவு கூடுவதேன்? இது தானே உன் கேள்வி? என் பதில் என்ன தெரியுமா?''


''தெரியும்,'' என்றார் மாதவன், ''உழைப்பின்றி!''.#####

Tuesday, November 2, 2010

காரணம் நான் உன்..ன்புள்ள சுந்தர்,


நீ சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு சென்றிருப்பதாக பழநி சொல்லித் தெரிந்து கொண்டேன். வெகு விரைவிலேயே மிகப் பெரிய டைரக்டராக வருவேன் என்று நீ சபதம் செய்திருப்பதாகவும் அவன் சொன்னான்.


வகுப்பை கட் அடித்துவிட்டு நீ எழுதும் கவிதைகளைப் பார்க்க நேர்ந்த போதே உனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.


'வானில் பறக்கும் மேகத்துக்குத் தெரியுமா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மயிலின் ஏக்கம்?' என்ற உன் கவிதையை நான் எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்திருக்கிறேன் தெரியுமா?


பொதுத் தேர்வைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் ராத்திரியெல்லாம் கண் விழித்து ஒரு நாடகம் எழுதினாயே, நினைவிருக்கிறதா? அதைப் படித்த போதே உனக்குள் ஒரு கதாசிரியனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன்.


ஒரு பணக்காரப் பெண் ஏழை வாலிபனைக் காதலித்து அந்தக் காதலுக்காக தன்னுடைய எல்லா சுகங்களையும் இழந்து, கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்கிறாள் என்ற அந்தக் கதை சினிமாவாக எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.


உன் அக்காவின் கல்யாணம், அம்மாவின் தீராத நோய், குடும்பத்தின் பொருளாதார நலிவு என்கிற மாதிரி சின்ன சின்னப் பிரசினைகளைப் பற்றியெல்லாம் அனாவசியமாக நீ அலட்டிக்கொள்ளாதே! அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை? நீ உன் பி.இ. படிப்புக்கான வேலையில் சேர்ந்துவிட்டாயானால் உனக்கான ஆஸ்கர் பரிசை நீ வாங்குவது எப்போது?


இப்படியெல்லாம் எழுதி உன்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே! காரணம் நான்...


உன் அன்புள்ள,


அப்பா.


(13-02-2005 விகடனில் பிரசுரமானது. )

Friday, October 15, 2010

உதிர்ந்திடும் மந்திரம்...யதின் சுருக்கங்களுக்குப் பின்னே

வாழ்வின் பெருக்கங்கள்

வாழ்ந்ததற்கு அடையாளமாய்..


தெருவில் எறியப்படுகின்ற

தேய்ந்த எந்திரங்கள்.

படித்து முடித்துவிட்ட

பாடப் புத்தகங்கள்.


வனித்துக் கொள்ள மட்டுமே நாங்கள்

கவனிக்கப்பட அல்ல.

வீசப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காமல்

தழுவி எடுத்துக்கொள்ளப்

பழகிவிட்டோம்.


விடைகள் கிடைக்காத உள்ளத்தை

உடையாமல் கொண்டு செல்ல

நடையின் வேகம் குறைந்தோம்.


முதிர்ந்ததும் உதிர்ந்துவிடும்

மந்திரம் தெரியவில்லை.
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்

இங்கிதமும் அறியவில்லை.

சுமந்து எம்மை மறு நாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்

தள்ளாடும் நாட்கள்...


நிஜ விழுதுகளில் ஊஞ்சலாடியதொரு

காலம்...இன்று

நினைவுகளையே விழுதாய் ஊன்றி

நிற்கிறோம் நாங்கள்.


னவலியின் அழுத்தத்தில்

உடல்வலி மறக்கிறோம்.

உடல் வலியின் உக்கிரத்தில்

மனமிருப்பதையே மறக்கிறோம்...


(அவள் விகடன் 27-08-2010 இதழில் பிரசுரம்)Wednesday, October 6, 2010

தெரியாத விடை


ன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. கணேஷ் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

''இது உங்களுக்கு எத்தனையாவது இன்டர்வியூ?'' என்றார் ஒரு அதிகாரி.

''இருபத்தாறாவது!''

பின் அங்கிருந்த மற்றவர்கள் மாறி மாறி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தனர். எல்லாமே கஷ்டமான கேள்விகள். முதல் கேள்விக்கே தெரியாது என்று பதில் சொன்னான். அது மட்டுமல்ல, அவர்கள் அடுத்தடுத்துக் கேட்ட எட்டுக் கேள்விகளுக்குமே தெரியாது என்றுதான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

ஒரு மௌன இடைவெளி. வேறு ஏதாவது கேள்வி இருக்கா என்பது போலத் தயக்கத்துடன் பார்த்தான் கணேஷ். இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது அவனுக்கு. ஆனால்...

''உங்களை செலெக்ட் செய்து விட்டோம்!'' என்றார்கள்.

''தேங்க்யூ சார்!'' விழிகள் விரிய ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்தவனிடம் அந்த அதிகாரிசொன்னார்...

''என்னடா எந்தக் கேள்விக்குமே நாம சரியா பதில் சொல்லலையே எப்படி இந்த வேலையை நமக்குக் கொடுக்கிறாங்கன்னு பார்க்கறீங்களா? நாங்க கேட்டதெல்லாம் ரொம்பக் கடுமையான, இந்த சேல்ஸ்மேன் வேலைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கேள்விகள். நாளைக்கு நீங்க எங்கள் தயாரிப்பை விற்கப் போகிறப்போ இந்த மாதிரி எத்தனையோ கேள்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்ப உங்களுக்குத் தேவை பொறுமையும் விடா முயற்சியும்! எங்கள் கேள்விகளுக்கு நீங்க கொஞ்சம் கூடப் பதறாமல் தெரியாது... இது பத்திப் படிக்கலேன்னு பொறுமையா பதில் சொன்னீங்க. இப்படி எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காம இருக்கிறதுதான் நாங்க உங்ககிட்டே எதிர்பார்க்கிற தகுதி!''

(விகடன் 06-03-05 இதழில் பிரசுரம்)

Monday, September 6, 2010

நுணுக்கம்

சிநேகிதரும் சக தொழிலதிபருமான பாலகுமாரைப் பார்க்கச் சென்ற சபேசனுக்கு ஒரே வியப்பு.

போன வாரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் உதவி .மானேஜர்களை அழைத்து, ''அந்த ராம் நகர் பிராஞ்சில் மார்கெட்டிங் ஃபிகர் ரொம்ப டவுனாகியிருக்கு, உடனே பார்த்து சரிப்படுத்துங்க!'' என்று பணித்ததைப் பார்த்திருந்தார்.
இன்று போயிருந்தபோது அவரது உதவி மானேஜர் ஒருவர் வந்து, ''சரி பண்ணிட்டோம் சார். ராம் நகர் பிராஞ்சில் 30 பர்சன்ட் ஆர்டர் அதிகரிச்சிருக்கு,'' என்று தெரிவித்தார்.

அவர் அகன்றதும் நண்பரைக் கேட்டார். ''என்னப்பா இது, உன் ஸ்டாஃப் பிரமாதம்! எனக்கும் இருக்கிறாங்களே! எந்தப் பிரசினைன்னாலும் உட்கார வெச்சு எப்படி எப்படி சரி பண்ணனும்னு லிஸ்டே போட்டுக் கொடுக்கிறேன். நடக்கலேன்னு தலையைச் சொறிஞ்சிட்டு வந்து நிக்கிறாங்க.''

''அதுதான் காரணம்!'' என்றார் பாலகுமார், ''பிரசினையைச் சரி பண்ணனும்னு சொன்னால் போதும். என்ன செய்யணும் எப்படி செய்யணும்னு அவங்களா யோசிச்சு சரி பண்ணிடுவாங்க. நாமே அப்படி செய் இப்படி செய்னு பொம்மை மாதிரி இயக்கினா செயல்பாடு ஜீரோ தான், தெரிஞ்சுக்க.''

('குமுதம்' 04-11-2009)
Tuesday, August 3, 2010

முன்னால் ஒரு வார்த்தை


''ன்னடா பெண்டாட்டி கிட்டே நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டவன் மாதிரி இருக்கே?''
கேட்ட மதுவிடம், ''அதாண்டா நடந்தது!'' என்றான் பரசு.

''என்ன ஆச்சு?''

''ஒண்ணுமில்லே, பூச்செடி வாங்கித் தந்தேன். அதை சரியா நட்டுவைக்கத் தெரியாம எல்லாம் வீணாப் போச்சு. 'இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியலியே?'ன்னு சொன்னேன். அவ்வளவுதான், 'எப்ப பார்த்தாலும் எனக்கு இதுகூடத் தெரியலே, அதுகூடத் தெரியலேன்னு தானே சொல்றீங்க'ன்னு திட்டிட்டு அவங்கம்மா வீட்டுக்குப் போயிட்டா!'' என்றான் சோகத்துடன்.

''அட, இதே வாக்கியத்தைத்தான் நானும் இன்னிக்குக் காலையிலே என் மனைவிகிட்டே சொன்னேன். ஆனா நோ ப்ராப்ளம்.''

''உன் பெண்டாட்டி அப்படி.''

''இல்லே, நான் சொன்ன விதம் அப்படி! ஒரு சின்ன வித்தியாசம் தான். அப்படி சொல்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சேர்த்தேன்.''
''என்ன அது?''
''அட, என்னென்னவோ பெரிய விஷயம் எல்லாம் அழகாச் செய்யறியே? இது ஒரு சின்ன விஷயம். இது தெரியலியான்னேன்!''

''புரிஞ்சது. இனி எனக்கும் பிரச்னை வராது.''

(குமுதம் 17-09-2008 இதழில் வெளியானது)

Sunday, July 18, 2010

ஆனால் நானோ...

ன்பை நான் பார்த்தேன்,
அன்பு என்னைப் பார்க்கவில்லை.
பாசத்தை நான் பார்த்தேன்,
பாசம் என்னைப் பார்க்கவில்லை.
வாழ்க்கையை நான் பார்க்கிறேன்,
வாழ்க்கை என்னைப் பார்க்காத போதும்!


தரவில்லை, ஆனாலும் கண்களில் ஒளி!
அடுத்த வேளை சோறில்லை,
ஆனாலும் முகத்தில் நம்பிக்கை!

''இல்லீங்க,
அவங்க சிரிக்கச் சொன்னாங்க
போட்டோவுக்கு!''

Tuesday, July 6, 2010

தெளிதல்

வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும். குழப்பம் மிகும் நேரங்களில் நான் தேடி ஓடுவது அவர் வீட்டுக்குத் தான்.

அப்படித்தான் அன்றைக்கும் போயிருந்தேன். ஒரு நூல்கண்டில் மும்முரமாக சிக்கல் பிரித்துக் கொண்டிருந்தார் மாமா. என்னைக் கண்டதும், ''வாம்மா சக்தி, விஷயம் இல்லாம வரமாட்டியே?'' என்று சிரித்தார்.

''எல்லாம் என் அப்பா விஷயமாத்தான் மாமா. எப்பவும் டென்ஷனாவே இருக்கார். எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறார். எல்லார் மேலேயும் அனாவசியத்துக்குக் கோபம். எப்படி அவரை சமாதானம் பண்றதுன்னே தெரியலே. ஏதாவது வழி சொல்லுங்களேன்!''

''முன்னேயெல்லாம் ரொம்ப நிதானமா இருப்பாரேம்மா? ஆபீசில் ஏதாவது பிரச்னையோ?'' என்று என்னிடம் பேச்சுக் கொடுத்தபடியே நூல்கண்டின் சிக்கலை விடுவிக்க ஆரம்பித்தார் அவர். பொறுமையாக நூலின் முனையைத் தேடியெடுத்து ஒவ்வொரு முடிச்சாக பிரித்தெடுக்கலானார்.

''எதுக்கு மாமா இவ்ளோ சிரமப்படறீங்க? இது சாதா நூல் தானே? சிக்கல் பகுதியைக் கட் பண்ணி எடுத்திட்டு மீதியை உபயோகிச்சுக்கலாமே?'' என்றேன்.

''அசடு, அசடு..! நூலை உபயோகிக்கவா இவ்வளவு மெனக்கெட்டு சிக்கலைப் பிரிச்சிட்டிருக்கேன்? இது என் தினசரி பிராக்டிஸ்மா! வேணும்னே நூல்கண்டில சிக்கல் பண்ணிக் கொடுத்துட்டுப் போவா என் பொண்ணு. தினமும் இப்படிச் சிக்கலைப் பிரிச்செடுக்கிறதில் ஒரு அரை மணி நேரமாவது செலவழிப்பேன். அதுல என் மனசை ஒருமுகப் படுத்தி நான் காட்டுற ஈடுபாடும், பொறுமையும், தொடர் முயற்சியும் தான் எந்தப் பிரச்னையையும் அதே மாதிரி அணுக உதவுது. சரி, அது போகட்டும்... உன் பிரச்னைக்கு என் ஆலோசனை என்னன்னா...''

''எனக்குத் தெரிஞ்சிடுச்சு! தாங்க்ஸ் அங்கிள்! நான் வரேன்,'' விரைந்தேன் வீட்டுக்கு.

(விகடன் 09-04-06 இதழில் வெளியானது)

Friday, July 2, 2010

அவன் மட்டும்...


சி வருடங்களுக்கு முன்
நான் அவனை
நேருக்கு நேர் சந்தித்தேன்.
அவன் மட்டும் ஒத்துழைத்தால்
நிறைய நிறைய
சாதிக்க முடியும் என்று
தெரிந்து கொண்டேன்.
ஆனால்
அவனிடம் கொஞ்சம்
அறியாமை இருந்தது,
அறிய வைத்தேன்.
சோம்பேறித்தனம் இருந்தது,
சுறுசுறுப்பை ஊட்டினேன்.
அகந்தை இருந்தது,
அகற்றினேன்.
மெல்ல மெல்ல அவன் வளர்ந்து
ஆளானான்.
என்னை ஆளாக்கினான்.
சொல்லிக் கொண்டேன் நன்றி
அவனாகிய எனக்கு!
Friday, June 25, 2010

எப்படி?


ணேஷை எல்லாரும் சூழ்ந்து கொண்டனர். ''எப்படிடா? எப்படிடா?''
எல்லார் வாயிலிருந்தும் ஒரே கேள்வி.

''ரெண்டு மணி நேரம் கெஞ்சிப் பார்த்தேன், ஸ்போர்ட்ஸ் குட்ஸ் விற்கிற கம்பெனி அது. ஸ்போர்ட்ஸில் அரை டன்னுக்கு சர்டிஃபிகேட் வெச்சிருக்கேன், என்னை ஏறெடுத்தும் பார்க்கலே. வேகன்சி இல்லவே இல்லேன்னு விரட்டிட்டாங்க! நீ எப்படிடா அந்தக் கம்பெனியில் வேலை வாங்கினே?'' -- ரகு.

''உன்னை விட ரெண்டு டிகிரி அதிகம் எனக்கு. என்னையே ஓரம் கட்டிட்டாங்க!'' -- கௌதம்.

புன்னகைத்தான் கணேஷ். ''நீங்க எல்லாரும் அங்கே போய் என்ன கேட்டீங்க?''
''எங்க தகுதியைச் சொல்லி ஏதாவது வேலை காலி இருக்கான்னு தான்!''

''நான் அப்படிக் கேக்கலே. 'சார், உங்க கம்பெனி ப்ராடக்ட்ஸ் எல்லாம் நல்ல தரமானதா இருக்கு. ஆனா, எங்க ஏரியாவிலே அதை ப்ரமோட் பண்றதுக்கு சரியான ஆள் யாரும் இல்லை, அதை நீங்க உடனே கவனிக்கணும்,' அப்படீன்னேன். உடனே, 'அதுக்கு நீங்க தயாரா'ன்னு கேட்டு இன்டர் வியூ பண்ணி எனக்கு வேலை போட்டுக் கொடுத்துட்டாங்க.''

''சாதுரியம்தான்!'' என்றது அவர்கள் பார்வை.

('நாணயம் விகடன்' Oct 1-2006 இதழில் வெளியானது)

Friday, June 18, 2010

காட்சி


பொசுக்கும் வெயிலில்

தகிக்கும் பாறைகள்,

வறட்சியில் வைக்கோலாகி

வாடும் வயல்கள்,

இல்லாத காற்றால்

அசையாத மரங்கள்,

மண்டிக் கிடக்கும்

குற்றுச் செடிகள்,

மேய்ந்து மாய்ந்து

தேய்ந்த மாடுகள்

எல்லாமே கண்ணுக்கு

அழகான காட்சியாக...

குளிரூட்டப்பட்ட காரின்

வண்ணக் கண்ணாடி வழியே

பார்க்கையில்!

(கவிப்பேரரசு வைரமுத்து தேர்ந்தெடுத்த கவிதைகள்

-- குங்குமம் 18-10-2007 )

Monday, June 14, 2010

அத்தையின் ஆசை


''இத்தனை கரிச்சுக் கொட்டறியே உன் மாமியாரை, அப்படி என்ன பண்ணினாங்க?''


கேட்ட தோழியிடம் பொருமித் தள்ளினாள் கமலி, ''பின்னே என்ன, அவருக்கு நாலு நாள் புவனேஷ்வரில் ட்ரெய்னிங் வந்தது, எனக்கும் சேர்த்தது டிக்கட் போட்டிருந்தார். கடைசி நேரத்தில் எனக்கு அந்த ஊர் கோவில் பார்க்கணும்னு ஆசையா இருக்குடான்னு சொல்லி என் டிக்கட்டை கான்சல் செய்துட்டு அவரோட கிளம்பிட்டாங்க. அதான் எரிச்சல்ல இருக்கேன்.நாளைக்கே எங்கம்மாவைப் போய்ப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.''

தே நேரம் ரயிலில்...

''என்னம்மா அண்ணாவோட ஒரிசா பயணமா?'' என்று செல்லில் கேட்ட மகளிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலியின் அத்தை.

''அதுவா? கமலியோட அம்மாவுக்கு கொஞ்ச நாளா உடம்புக்கு முடியாம இருந்தது. போய் நாலு நாள் பார்த்துட்டு வரலாம்னு அவ கேட்டால் உங்கண்ணன் விட்டால் தானே? அதான் வலுக்கட்டாயமா நான் கோவிலுக்கு வரணும்னு சொல்லி டிக்கட்டை மாத்திடச் சொல்லி அவ ஊருக்குப் போயிட்டு வர்றதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டுபண்ணிக் கொடுத்திட்டேன்!''


( நன்றி : குமுதம் இந்த வாரம். )

Friday, June 11, 2010

அவனுக்காகவும்...


ங்கோ வெகு தொலைவில்
கணினி முன் அமர்ந்திருக்கும்
என் மகனும்
பசித்தெழும்போது
நான் விளைவிக்கிற
இதே போன்ற அரிசியைத்தான்
உண்ணுகிறான் என்பதை
நினைவுகூரும்போது என்
வியர்வை எங்கோ மறைந்துவிடுகிறது.
அயர்வு அகன்று விடுகிறது.
இன்னும் விளைவிக்க
வேட்கை ஏற்படுகிறது.

வெறுமை

ருமையைக்
கழுவ முடிகிறது.
வறுமையை?

Sunday, May 30, 2010

கவிதை(கவலை) நேரம்


ரு நெடு நாள் சிநேகிதி போல
அந்த விற்பனைப் பெண் என்னிடம்
நிறையப் பேசினாள்.
என் நிறுத்தத்தில்
காலியிருக்கைகளுடன் பஸ்
உடனே வந்து நின்றது.
விலை அதிகமெனினும்
படிக்க விரும்பிய புத்தகம்
நண்பரிடம் படிக்கக் கிடைத்தது.
டி.வியில் அந்த புதுப்படம்
பார்த்து முடிக்கும் வரை
யாரும் கதவைத் தட்டவில்லை.
என்றாலும் ஈதொன்றும்
அன்றிரவு நான் அமர்ந்து
கவிதை எழுதுகையில்
நினைவுக்கு வரவில்லை.

Sunday, May 23, 2010

அப்பா ஒரு நாளும்...('நம் உரத்த சிந்தனை' மாத இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை)


''என்னம்மா திடீர்னு குண்டைத் தூக்கிப் போடறே?'' ஆத்திரமாக அலைபேசியை முறைத்தான் விகாஸ்.

''இல்லேடா, ரொம்ப வேண்டியவராச்சேன்னு... ரெங்கசாமின்னு அவர் கூட படிச்சவராம். பக்கத்து டவுனில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. அவர் வாங்கின லோனுக்கு அப்பா ஜாமீன் கையெழுத்துப் போட்டிருக்காரு. செக் எழுதிக் கொடுத்திட்டாங்க. அந்த ஆள் பணத்தைக் கட்டலே. ஊரை விட்டே ஓடிட்டாரு. இப்ப ரெண்டு லட்சம் எடுத்து வைக்கணும். இல்லேன்னா அப்பாவை அரெஸ்ட் பண்ணிருவாங்க.''

விகாஸ் சுற்றிலும் பாத்தான். ஐ.டி. கம்பெனியின் ஏஸி ஹால். என்னதான் மெல்லப் பேசினாலும் தெளிவாய்க் கேட்கும் மற்றவர்களுக்கு. தன் கியூபிகளை விட்டு வெளியே வந்தான்.

''என்னம்மா இது, என்ன நினைச்சிருக்கீங்க? ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?'' இரைந்தான்.

''இல்லேப்பா, வேணுமின்னா செய்தாரு? அவரும் எதிர்பார்க்கலே இப்படி ஆகுமின்னு. நீ சப்போர்ட் பண்ணுவேங்கிற நம்பிக்கையில இருக்காரு.''

கோபம் தலைக்கேறிற்று. ''இதான்! இதான் நீங்க எனக்கு செய்யக்கூடாதது! அதை செஞ்சிட்டாரு அப்பா! நான் படிச்சது, வேலை பார்க்கிறது, முன்னேறினது எல்லாத்தையும் இது அர்த்தமில்லாம செஞ்சிட்டுதில்ல?... சரி சரி, பிரசினையை ஏற்படுத்தியாச்சு. இனி நான் இதை பாடித்தானே ஆகணும்? என் சேமிப்பு எல்லாத்தையும் பொறுக்கிட்டு வர்றேன்''

''சரிப்பா.''

''ம், உங்களால எனக்கு என்ன பிரயோசனம்? இத பாரும்மா, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கறது எல்லாம் பெரிசில்லே. அப்புறம் அதுக்கு உலை வெக்கிறது கொஞ்சமும் சரியில்லே. அவர்ட்ட சொல்லு. இதான் கடைசி.'' படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டான்.

று நாள். மனைவியின் திட்டுக்களை காதில் போட்டுக் கொண்டு, அவளிடம் கெஞ்சி செக்கில் ஜாயின்ட் கையெழுத்தை வாங்கிக் கொண்டு பாங்கில் பணம் எடுக்க வந்தபோது..

அலை பேசி துடித்தது. எடுத்தான். அப்பா.

''அந்த பிரசினையை நானே சமாளிச்சிக்கிறேண்டா. உன் உதவி தேவையில்லை.''

''அப்பா வந்து நான் என்ன சொன்னேன்னா...''

''அதான் எல்லாம் சொல்லிட்டியே. அம்மா சொன்னா.''

வைத்துவிட்டார்.

தொடர்ந்த ஞாயிற்றுக் கிழமை கிளம்பி ஊருக்கு வந்தான். நடந்தது பற்றி யாரும் பேசவில்லை. சாப்பாடு, குளியல் என்று வழக்கம் போல் நடந்தது. அம்மா மார்க்கெட்டுக்குப் போய் அவனுக்குப் பிடித்த வஞ்சிர மீன் வாங்கி வந்து பொரித்தாள்...

நேராக சுந்தரம் மாமா வீட்டுக்கு வந்தான். அப்பாவின் நெருங்கிய நண்பர். நடந்ததை எல்லாம் சொன்னான். பொறுமையாகக் கேட்டார்.

''நீ அவசரப்பட்டுட்டே!'' என்றார்.

''புரியலியே மாமா.''

''கொஞ்ச நாள் முந்தி நீ ஏதோ ஒய்வு நேரத்தில் சாப்ட்வேர் பிராஜெக்ட்ஸ் எடுத்து செய்யப்போறேன், அதுக்கு சில லட்சம் பணம் வேணும், நம்ம பூர்விக வீட்டை வித்திடலாமான்னு கேட்டியா?''

''ஆமா.'' ஞாபகம் வந்தது. அப்பாவும் சரிப்பா, பண்ணிடுவோம்னு பச்சைக் கொடி காட்டியிருந்தார்.

''என்கிட்டே வந்து அதை சொன்னான். விக்கிறதுக்கு ஆள் பார்க்க சொன்னான். அப்ப நான் கேட்டேன், ஏண்டா, உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறதே அந்த வீடு ஒண்ணு தானே, வேறே எதுவுமே நீங்க வெச்சுக்கலியே அப்படீன்னு. அதுக்கு அவன் சொன்னான், இல்லேப்பா, நாளைக்கு எனக்கோ என் காலத்துக்குப் பிறகு அவன் அம்மாவுக்கோ ஏதும் ஆச்சுன்னா விகாஸ் பார்த்துப்பான்னு நம்பிக்கை இருக்குன்னான். எதுக்கும் உன் நம்பிக்கை சரிதானான்னு ஒண்ணுக்கு நாலு தரம் யோசிச்சுப் பார்த்துக்கன்னு சொன்னேன்.''

''சரி மாமா இப்ப அதுக்கும்...''

''போன மாசம் அதை விலை பேசி அட்வான்சும் வாங்கிட்டான். ஸோ அவனுக்கிருந்த ஒரே சொத்தையும் உனக்குக் கொடுத்திட்டான். இது போன மாச நிலைமை.''

''அப்படியா?'' குழம்பினான்.

''இப்ப அவன் ஒரு பிரசினைன்னு உனக்கு போன் பண்ணினான். நீ அவசரப்பட்டு இப்படி பேசிட்டியே?''

''பின்னே என்ன மாமா, படிக்க வெச்சிட்டு, முன்னேறி வந்தப்புறம் இப்படி நம்ம நல்ல நிலைக்கு உலை வெச்சா...''

''இத பாரு, உன்னை படிக்க வெச்சது, ஆளாக்கினது எல்லாம் அவன் சக்திக்கு ரொம்ப மேலே! கல்யாணமான புதுசில் அவனுக்கு அட்டெண்டர் வேலைதான். ஆனா உன்னை பிரைவேட் ஸ்கூலில் சேர்த்தது, தினம் சைக்கிளில் கொண்டு போய் விட்டது, சின்னக் காய்ச்சல்னாலும் ஸ்பெஷலிஸ்டிடம் காட்டினது இப்படி எத்தனையோ விஷயங்கள்...! அதெல்லாம் உன்கிட்ட எதுவும் எதிர்பார்த்து செய்ததுன்னா நினைக்கிறே? நீ நாளைக்கு கஷ்டப்படக்கூடாது, உன் மனைவி குழந்தைகளோட சந்தோஷமா வாழணும்னு தானே? ரிடையரான பிறகும் உன்னோடு வந்து உட்காராமல் இங்கேயே அவங்க பாட்டைப் பார்த்துட்டு இருக்கிறதை நினைச்சுப்பாரு. ஒரு நாளும் அவன் உனக்கொரு பிரசினையை மனமறிஞ்சு செய்ய மாட்டான். ''

''அப்படீன்னா இப்ப பண்ணினது எனக்குப் பிரசினை இல்லையா?''

''தன்னை மீறி ஒரு கஷ்டம், பிரசினை எல்லாம் யாருக்கும் எப்ப வேணாலும் வரலாம். அதான் அவன் உனக்கு சொல்ல விரும்பின மெசேஜ்ன்னு நினைக்கிறேன்.''

''என்ன மாமா சொல்றீங்க?''

''அவன் உனக்கு செய்ய வேண்டியதை செய்துட்டான் . சொல்ல வேண்டியதையும் சொல்லிட்டான். இப்ப அவன் மனசில நம்பிக்கையை விதைக்கிறதும் ஒதுங்கிக்கிறதும் நீ எடுக்க வேண்டிய முடிவு. பார்த்து நடந்துக்க.''

இவனுக்கு லேசாய்ப் புரிந்த மாதிரி இருந்தது. அவர் தொடர்ந்தார். ''புரிஞ்சிருக்கும் உனக்கு. உங்கப்பா எனக்குத் தெரியாம எந்தக் காரியமும் பண்னினதிலலே. யாருக்கோ அவன் ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கான்னு சொன்னியே யார் அது?''

''ரெங்கசாமின்னு அவரோட நண்பர்...''

சிரித்தார். ''...அவனுக்கு ரெங்கசாமின்னு எந்த நண்பரும் கிடையாது. போயிட்டு வா.''

விகாஸ் அதிர்ச்சியில் நின்றான். ''என்னை மன்னிச்சுடுப்பா!'' மனம் இறைஞ்சிற்று...

Thursday, May 20, 2010

யோகம்!


சுகுமாருக்கு சந்தோஷத்தால் மனம் நிறைந்திருந்தது. அவன் ஆசைப்பட்ட மாதிரியே அந்தப் பதவி உயர்வு கிடைத்துவிட்டது. கடும் போட்டிக்கிடையில் வெற்றி அவனுக்கு.

''இத்தனை இளம் வயதில் இந்தப் பதவியை அடையக் கொடுத்து வெச்சிருக்கணும் சார் நீங்க!'' என்று கை குலுக்கினார் ஒரு சக அதிகாரி. மச்சம், முகராசி என்று அவன் காதுபடவே பேசினவர்களையும் கடந்து செல்ல நேர்ந்தது.

பாராட்டு விழாவில் அவனோடு கலந்து கொண்ட மனைவி ராஷ்மி வீட்டுக்கு வந்ததும் கேட்டாள்: ''என்னங்க, நீங்க ரொம்ப லக்கின்னு எல்லாரும் சொல்றாங்களே, அதுக்கு நீங்க ஏதும் பதிலே சொல்லலியே?''

அமைதியாகச் சொன்னான். ''அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான், விடு. நாலு வருஷம் முந்தி நான் பிராஞ்ச் மானேஜரா எங்க எம்.டியைச் சந்திச்ச போது அந்த வருஷம் போதுமான பர்ஃபாமான்ஸ் காட்டலேன்னு என்னை வறுத்து எடுத்திட்டாரு அவர். சாதிக்காமல் மேலே வர முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு இன்னும் நல்லா உழைச்சேன். அதனால இது முழுக்க முழுக்க என் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதின்னு எனக்கு நல்லாவே தெரியும். இதைப் புரிஞ்சுக்கலேன்னா அவங்க அவங்களையே ஏமாத்திக்கிறாங்கன்னு அர்த்தம்! அதைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.''

(குமுதம் 19-05-10 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)


Wednesday, May 19, 2010

இரவின் பிரகாசம்


ரவுக்கு வலிக்குமென்று எல்லா
விளக்குகளையும் அணைத்துவிட்டேன்.
இதமாய் அது பூமி மேல் படர்கையில்
அதன் இருளுக்குப் பங்கம் வரக்கூடாது.
அது தடவி செல்லட்டும்
வெம்மையையும் வேர்வையையும்.
என் தோட்டத்து விருட்சங்களை
குளிர்விக்கட்டும்.
பதித்துச் செல்லட்டும் அது தன்
தண் பாதங்களை!
பதமாய் சூழும் இருள் என்
பார்வையை சற்று நிறுத்தி
சிந்தனையைத் தூண்டட்டும்!

Wednesday, May 12, 2010

துணை'' பாருங்க ஊர்லே உலகத்திலே நடக்காததை நான் சொல்லிறலை. நீங்களா நாளைக்கு யோசிச்சு வரப்போற முடிவைத்தான் சொல்றேன். ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். வீட்டுக்கு வந்தா குழந்தையைப் பார்த்துக்கவே டயம் பத்தலே. இதுக்கிடையிலே உங்கம்மாவை எப்படிப் பார்த்துக்கறது?'' முடிவாகச் சொல்லிவிட்டாள் சாரதா.

''இல்லே சாரதா, அம்மாதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொல்றாளே,'' என்ற சேகரைப் பேசவே விடவில்லை. அதெல்லாம் எப்படி நைச்சியமாகப் பேசி கணவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு புகுந்த வீட்டில் காரியத்தைச் சாதிக்கணும்கிறது அவளுக்கு அத்துப்படி.

இந்த வெற்றியைத் தன் அம்மாவிடம் பறை சாற்றத் துடித்தாள்...

''சேகரா, நீயா என்னை முதியோர் இல்லத்திலே...'' உருக்குலைந்து போனாள் அவன் அம்மா தேவகி.

''உன் சவுகரியத்தையும் மனசிலே வெச்சுத்தாம்மா ஏற்பாடு பண்ணியிருக்கோம், பொறுத்துக்க... மேடம், நல்லா கவனிச்சுக்குங்க.''

''இங்கே எனக்குத் துணைக்கு யாருடா இருக்கா?''

''அதெல்லாம் பழகிப் போயிடும்மா... அடுத்த வாரமே வந்து பார்க்கிறோம்.'' புறப்பட்டார்கள்.

டுத்த வாரம் ஆபீசிலிருந்து மனைவியை பிக் அப் செய்தபோது...
''வா, அப்படியே விடுதியில் எங்கம்மாவைப் பார்த்துட்டு வந்துடலாம்!'' என்று அழைத்தான்.

பிரகாசமான முகத்தோடு வந்தாள் அம்மா. கலகலப்பாய் பேசினாள். ''அட, ஒரு வாரத்திலேயே மனசைத் தேற்றிக் கொண்டு விட்டாளா?'' விழித்தான் சேகர்.

''துணைக்கு ஆள் கிடைச்சிட்டுதுடா!''

''யாரும்மா?''

அழைத்து வந்து நிறுத்தியவளைப் பார்த்து அதிர்ந்தாள் சாரதா. ''அம்மா நீயா?''

''நானேதாண்டி! என்ன சொல்லியும் கேட்காம உன் மாமியாரை இங்கே கொண்டுவந்து விட்டதை அறிஞ்சேன். மனசு பொறுக்கலே எனக்கு. அதான் பேசாம நானும் உங்கண்ணன்கிட்ட சொல்லிட்டு இங்கேயே வந்து சேர்ந்திட்டேன் அவங்களுக்குத் துணையா!''


(குமுதம் 14-03-2005 இதழில் வெளிவந்த என் ஒரு பக்கக்கதை)

Sunday, May 9, 2010

வேற்று முகம்

ம்மா உன் முகம் நாங்கள்
அறியாததல்ல.
அன்பே அதன் வடிவம்.
எப்போதும் அதிலொரு
அனுசரணை.
'என்ன நடந்தால் என்ன,
என்னிடம் சொல்லு!'
ஆறுதல் அதன் பின்னே,
'நானிருக்கேன் கண்ணே.'
அப்பாவை எப்போதும்
சீரியசாகவே
நினைக்க முடிகிறது. ஆனால்
அம்மாவை அப்படியல்ல.
அதுதான் அம்மாவோ?
எத்தனை சத்தம் போட்டு
நீ திட்டினாலும்
அத்தனை சீரியசாய்
அது பட்டதேயில்லை.
அடி மனத்தை ஒரு நாளும்
தொட்டதேயில்லை.
ஆனால் நீ
அலுத்துக்கொண்டு சில சமயம்
எங்களிஷ்டத்துக்கு விட்டு
'எப்படியோ
போங்கள்!'
என்று சொல்லும்போது தான்
வேற்று முகம் காட்டுகிறாய்.
நாங்கள் அறியாத
ஏற்றுக்கொள்ள முடியாத
வேற்று முகம்.
வேண்டாம் அம்மா
அந்த வேற்று முகம்!

Monday, May 3, 2010

என்னங்க...

''என்னங்க, இன்னிக்கு நம்ம பையனையும் மருமகளையும் போய்ப் பார்த்துட்டு வரணும்னு சொல்லிட்டிருந்தீங்களே?'' நினைவூட்டினாள் மனைவி. ''ஆமாமா,'' என்று கிளம்பினார் சொக்கலிங்கம் மாம்பலத்துக்கு.

அங்கே சாப்பிட்டுவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.


''நேரமெல்லாம் எப்படிப் போகுதுப்பா?'' கேட்டான் விஷால்.

''அதான் நீ வாங்கிக் கொடுத்திருக்கியே ஒரு கம்ப்யூட்டர், நல்ல உபயோகமா இருக்கு. பொழுது பறக்குது!''

அப்போது விஷாலின் கம்ப்யூட்டரில் ஒரு பாப் அப் எழுந்து, ''டைம் டு விசிட் வருண்,'' என்று ரிகார்டட் வாய்ஸ் விட்டுவிட்டு ஒலித்தது. ''ஓ!'' என்றபடியே அதை 'கிளிக்'கி நிறுத்தினான்.


''பார்த்தீங்களாப்பா, நீங்களும் இப்படி உங்க கம்ப்யூட்டரில் முக்கியமான விஷயங்களை நினைவூட்ட ஏற்பாடு செய்துக்கலாம். கரெக்டா அதை அதை அப்பப்ப சொல்லிடும். எப்படி செட் பண்றதுன்னு சொல்லித் தரட்டுமா?''

''வேணாம்பா. என்னதான் கரெக்டா நினைவூட்டினாலும் அது ஒரு மெக்கானிகல் வாய்ஸ். உங்கம்மா, 'என்னங்க, சாயந்தரம் கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தீங்களே'ன்னு கனிவோட ஞாபகப்படுத்தற மாதிரி இருக்குமா?

''நல்லா சொல்லுங்க மாமா!'' என்றொரு குரல் பின்னாலிருந்து கேட்டது.

(குமுதம் 15-10-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Sunday, May 2, 2010

காட்சி 1, 2, 3...


வெளுத்த கிழக்கின் மேகங்கள்
லேசாய்ச் சிவந்து நீலப் பின்னணியில்
மஞ்சள் மாயம் காட்டி நிற்கிறது.

பனியின் கிடுக்கிப்பிடி உலுக்கிப் பின்
காலையின் புத்துணர்ச்சி பரவி
நெற்றியில் வேர்வை அரும்புகிறது.

உறவின் புறக்கணிப்பிலிருந்து மனம்
நேற்றைய நண்பர் சந்திப்புக்கு வந்து
படித்த வாழ்க்கைத் தத்துவத்தில் அமிழ்கிறது.

காட்சிகள் மாறிட
வாழ்க்கை நகருகிறது
எப்படியோ...

Saturday, April 17, 2010

திறமை


ப்பா, அம்மா, அண்ணன், அக்கா எல்லார் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ரவீனுக்கு,
சொல்லி வைத்தது மாதிரி எல்லாரும் கைவிரித்து விட்டனர்.
முதலில் அப்பா.
''எனக்கு கொஞ்சம் அனிமல்ஸ் படம் போட்டுத் தாங்கப்பா''
''என்ன விஷயம்டா?''
''டீச்சர் ஒரு பக்கம் நிறைய அனிமல்ஸ் படம் போட்டுட்டு வரச் சொன்னாங்க. எனக்குப் படம் போட வராது, அதான்...''
'' ஐயையோ,'' என்றார் தியாகு, ''அப்பாவுக்கு ஆபீஸ் பெண்டிங் வொர்க் இருக்கே? அர்ஜண்டா முடிக்கணுமேன்னு ஃபைலை வீட்டுக்கு எடுத்திட்டு வந்தேன். ஸாரிடா, அம்மா இப்போ வந்துருவா, வரைஞ்சு தருவா.''
அம்மா, அக்கா, அண்ணன் எல்லாரும் ஏதோ ஒரு வேலையை சொல்லி இதே போல கைவிட்டனர்.
கோபமாய் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான். வேறே வழியில்லை, நாமே முயற்சித்துப் பார்க்க வேண்டியது தான்.

ரண்டு மணி நேரம் பொறுத்து...
பின்னால் வந்து நின்ற அப்பா, ''அட, மான், யானை, கங்காரூ எல்லாம் தத்ரூபமா இருக்கே, நீயேவா வரைஞ்சே? எப்படிடா?''
''அது டிஸ்கவரி சேனல்ல பார்த்ததை ஞாபகம் வெச்சி வரைஞ்சேன்,'' என்றான் பெருமை வழிய.
அதற்குள் அம்மா, அண்ணன், அக்கா எல்லாரும் வந்து பாராட்ட, ''பார்த்தியா, நீ கேட்டதும் நாங்க யாராவது வரைஞ்சு தந்திருந்தா, உனக்குள்ளே இத்தனை திறமை இருக்கிறது உனக்குத் தெரிய வந்திருக்குமா?'' என்று கை தட்டினார் அப்பா.
அவர் சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லி நழுவிக்கொண்ட அம்மா அண்ணன் அக்காவும்!

(குமுதம் 09-08-2006 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Tuesday, April 13, 2010

தொலை(த்தவை) நோக்கு


விடலைப் பருவத்துடன்


விடை பெற்றுக் கொண்டுவிட்டது


வாழ்க்கையிலிருந்து வசந்தம்.


எதிர்பார்ப்பு அதிகமிருந்ததாலோ என்னவோ


ஏமாற்றம் சகஜப்பட்டுப் போய்விட்டது.


இங்கிதமும் சங்கோஜமும் உடனிருந்ததால்


இழந்த வாய்ப்புகள் எத்தனை எத்தனை!


என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பு


எப்பவுமே அடங்கிப் போக வைத்துவிட்டது.


எல்லாம் ஓய்ந்தபின்


இன்று நினைத்துப் பார்க்கையில்


மிச்சம் இல்லை வாழ்க்கையில்...

Monday, April 12, 2010

நனையாமலிருக்கும் நம் குடைகள்!
ல நேரங்களில் காலியாகப்
பயணிக்கும் பின்னிருக்கைகள்
வேலைக்காரி பெருக்கித் தள்ளும்
விரித்த முழுத் தாள்கள்
அப்புறம் படிக்கவென்று
ஆர்க்கும் தராமல்
அலமாரியில் நகம் கடிக்கும் புத்தகங்கள்
ஏறும் விலை என்று
ஏதும் பயிரிடாமல்
தோதாக விட்டு வைத்த வயல்கள்
கண்ணில் விபத்து பட்டதும்
கடிதில் மூடிக்கொண்ட கார்கள்
பதில் எழுத நினைத்து மறந்த கடிதங்கள்
சட்டென்று மனம் தொட்டதும்
முடிந்து வைத்த சங்கல்பங்கள்
காக்கைக்கு வைக்க மறந்த சாதங்கள்
கச்சேரிக்குப் போகத் தயங்கிய கால்கள்
பசங்களுக்கு சொல்லத் தவறிய கதைகள்
நிசங்களைத் தரிசிக்க அஞ்சிய கண்கள்
நடுவதற்கு விட்டுப் போன செடிகள்
சொல்லாத வாழ்த்துக்கள்
அள்ளாத பன்னீர்ப் பூக்கள்
கிள்ளாத மழலைக் கன்னங்கள்...

நினையாமலிருக்க முடியவில்லை
நனையாமலிருக்கும் நம் குடைகளை...

Wednesday, April 7, 2010

நம்பிக்கை


முக்கால்வாசி தேறி விட்டது. இன்னும் ஒரு பத்தாயிரம் இருந்தால் மகன் வேலையில் சேரத் தேவையான பணம் தேறிவிடும். மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது...

''ஏங்க, தாம்பரத்தில் உங்க நீலகண்ட மாமா இருக்காரில்லையா? அவரைப் பார்த்தால் என்ன?'' அருமையான யோசனைக்கு மறு பெயர் என் மனைவி.

மாமா மனைவியை இழந்தவர். பிள்ளைகள் இல்லை. ரிடையரான பின் தனியே ஒரு வீட்டில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.

''ப்படி இருக்கிறீங்க மாமா?'' என்று அவரைப் பற்றி விசாரித்தபடி வீட்டில் நுழைந்தேன். கொஞ்சம் பேசினேன்.

''நீ வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. எத்தனையோ சொந்தக்காரங்க. யாருமே எட்டிப் பார்க்கிறதில்லை. நீ ஒருத்தன் தான் தேடிவந்து விசாரிக்கிறே. ரொம்ப நன்றிப்பா.'' கைகளைப் பற்றிக் கொண்டார்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்த விஷயத்தைக் கேட்காமலேயே திரும்பி விட்டேன். எத்தனை நம்பிக்கையோடு என் வருகையில் மகிழ்கிறார்? அந்த மகிழ்ச்சி அப்படியே இருக்கட்டுமே!
(12-11-2008 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

Monday, March 29, 2010

அவை எனக்கே சொந்தம்!


என்னுடைய கவலைகள்

என்னவென்று கேட்காதீர் தயவு செய்து.

என்னுடைய கவலைகள்

எனக்கே உரியவை.

உமக்கவை புரியாது ஒரு நாளும்.

என் கவலைகளை நான்

நேசிக்கிறேன்.

அவை இல்லாமல் என்னால்

ஒரு நாளைக்கூட ஓட்ட முடியவில்லை.

சில கவலைகளுடன் நான்

பழகிப்பழகி

கடைசியில் அவை இல்லாமல்

நிம்மதியாக உறங்க முடியவில்லை.

என் மனதில் அறை எடுத்துத் தங்கும்

சில கவலைகள்

வெகு நாள் சிநேகத்தில்

வாடகை பாக்கிகூட வைத்திருக்கின்றன.

எவ்வளவோ நான் முயன்றாலும்

சில கவலைகள் என்னை மறந்து

அல்லது நான் அவற்றை மறந்து

காணாமல் போய்விடுகின்றன.

ஆனாலும் என் கவலைகளை நான்

நேசிக்கிறேன்.

அவை இல்லாமல் வாழ என்னால் முடியாது...

Saturday, March 20, 2010

தூங்காத கண்ணென்று ரெண்டு...டிக்கடி தூக்கம் வராமல் அவதிப்படுகிற எனக்கு அறிவுரை, வழியுரை பொழிப்புரை எல்லாம் சொன்ன என் மாமா இந்த உதாரணத்தை சொன்னார். ''மாமன்னன் நெப்போலியன் எப்போது நினைத்தாலும் அழகாகத் தூங்கி விடுவானாம். போர்க்களத்துக்கு குதிரையில் போய்க் கொண்டிருக்கும்போது கூட அந்தக் குதிரையின் மேலமர்ந்தபடியே அரைமணி, கால் மணி தூங்கி விடுவான். எப்படி இது தங்களுக்கு சித்தியாகிறது என்று கேட்ட தன் அமைச்சருக்கு அவன் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? புறாக்கூண்டு மாதிரி என் மனதில் நிறைய கூடுகளைக் கற்பனை செய்து கொள்கிறேன். என்னுள் உள்ள பிரசினைகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து விட்டு சரி, இதை நாளைக்குக் கவனிக்கலாம் என்று சொல்லியபடி அவற்றை ஒவ்வொரு கூண்டிலாக அடைத்து விடுவேன். அப்புறம் நிம்மதியாக தூங்கி விடுவேன்!''


இதை கேட்டதுமே நான் உற்சாகமாகி விட்டேன். இன் ஃபாக்ட் அப்போதே தூக்கம் வந்துட்ட மாதிரி சொக்கிப் போனேன் அந்த ஐடியாவில்.


அன்றிரவே அதை அமுல், செரிலாக் எல்லாம் படுத்தினேன். வாடி, வாடி என்று ஒவ்வொரு பிரசினையாக எடுத்து அலசி அதை கூண்டில் அடைத்துக் கொண்டிருந்தேன்.


திடீரென்று விழித்த என் மனைவி, இன்னும் தூங்கலையா என்று கேட்டபோது நான் அமைதியாகச் சொன்னேன், ''கொஞ்சம் இரு, இன்னும் நாலஞ்சு கூண்டு தான் பாக்கி, அப்புறம் ஜம்முனு தூங்கிருவேன்!''

''அதெல்லாம் நாளைக்கு கூட்டில் அடைக்கலாம் உங்க புறாக்களை! மணி ஆறரை ஆச்சு, எழுந்து வேலைக்குப் போகிற வழியைப் பாருங்க!'' என்றாள்.

சே! நெப்போலியன் காலம் மாதிரியா இப்ப? ஒரு மனுஷனுக்கு எவ்வளவு பிரசினை இருக்கு! அதை யாராச்சும் யோசிக்கிறாங்களா?

Wednesday, March 10, 2010

நினைப்பதெல்லாம் மறந்துவிட்டால்...


''அருமையான பிளாட் சார்! ஆல் அஃ ப் எ ஸடன் வந்தது. மிஸ் பண்ணிட்டேன், சே!'' அலுத்துக் கொண்டார் நண்பர் மாதவன்.

ஒரு நிமிஷம், அவர் சொன்னது நீங்க நினைக்கிற அந்த பிளாட் இல்லே, கதை எழுத ஒரு பிளாட்.

''கடையில சாமான்கள் வாங்கிட்டிருந்தப்ப அந்த நாட் தோணிச்சு. மனசில அசை போட்டு ஜோரா ஒரு பிளாட் உருவாச்சு. அப்புறம் மத்த வேலைகளுக்கிடையில் எப்படியோ மறந்து போச்சு. இப்ப உட்கார்ந்து நாலு மணி நேரமா நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன், ஊஹூம், ஞாபகம் வரவே மாட்டேங்குது. சே, போனது போனது தானா?''

என் யோசனையை அவரிடம் சொன்னேன். ''இன்னிக்கு ராத்திரி தூங்கறதுக்கு முன்னே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அதை யோசிச்சு பாருங்க.''

''அப்புறம்?''

''பேசாம படுத்து தூங்கிருங்க. அவ்வளவு தான். காலையில எழுந்திருக்கும்போது தொண்ணூறு பர்சன்ட் அது ஞாபகத்துக்கு வந்திருக்கும்.''

''நிஜமாவா?''

''எனக்கும் நிறைய முறை இப்படி வெற்றி கிடைச்சிருக்கு. எந்த விஷயம் மறந்து போய்விட்டாலும் இதை முயற்சித்து பார்க்கலாம்.அது மட்டுமல்ல. சில வேளைகளில் சில பிரசினைகளில் ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவிக்கிறப்ப முடிஞ்ச வரை அதை நல்ல யோசிச்சுப் பார்த்துட்டு படுத்து உறங்கி எழுகையில் அநேகமா நம்ம ஆழ் மனம் ஒரு வழியை அல்லது முடிவு எடுப்பதற்கான ஒரு பாயிண்டை எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கலாம்,'' என்றேன்.

று நாள் மாதவன்... ''சூப்பர் சார் உங்க ஐடியா!''

''என்ன, கிடைச்சிட்டது தானே?'' பாராட்டுக்குத் தயாரானது காது.

''அதை ஏன் கேட்கறீங்க? கொஞ்சம் அதிகமா தூங்கிட்டேன்! காலையில எந்திரிச்சு நினைச்சுப் பார்த்தா போன மாசம் தியேட்டருக்குப் போய் பாதியில தூங்கிவிட்ட சினிமாவின் முடிவு, போன வருஷம் திருவிழாவில செல் போனைத் தொலைச்ச இடம், ரெண்டு வருஷம் முந்தி தொலைச்ச மச்சினியோட டெலிபோன் நம்பர், அப்படீன்னு மறந்து போன, இப்ப பிரயோஜனம் இல்லாத விஷயங்கள்லாம் வரிசையா பளிச்சுன்னு நினைவுக்கு வருது. எது ஞாபகம் வரணுமோ அதைத் தவிர!''

Saturday, March 6, 2010

தனிமை


''என்னங்க, எழுபது வயசில ஊரில் தனியா கஷ்டப்படறேன்னு சொல்ற அப்பாவை நம்மோட அழைச்சிட்டும் வர மாட்டேங்கறீங்க, போய்ப் பார்க்கவும் நேரமில்லேங்கறீங்க... இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? நான் காலையிலேயே ஊருக்குப் போய் அப்பாவோடு ஒரு நாள் பூரா வீட்டிலிருந்து அவரைக் கவனிச்சுட்டு சாயங்காலம் வந்திடறேன்.''
''அட என்ன சுமதி, முடிவே பண்ணிட்டியா?''
''ஆமா!'' புறப்பட்டாள். ''சாப்பாடெல்லாம் எடுத்து மேஜை மேலே வெச்சிருக்கேன்.''
னந்த் டி.வி. பார்த்தான். போரடித்தது. குளிக்க நினைத்தான். சோர்வாக இருந்தது. சாப்பிட்டான். தனியே சாப்பாடு இறங்கவில்லை. தூங்க முயன்றான். வரவில்லை.

ரவில்...
''நாளைக்கே போய் அப்பாவை அழைச்சிட்டு வந்திடப் போறேன்,'' என்று அறிவித்தான் ஆனந்த். ''வயசோட கைகால் நல்ல வேலை செய்யற எனக்கே ஒரே ஒரு நாளைத் தனியா கழிக்கிறதுக்கு இத்தனை கஷ்டமா இருக்கே. எழுபது வயசுக்காரர் தனியா அந்த சின்ன கிராமத்தில எத்தனை கஷ்டப்படுவார்னு இப்பதான் புரிஞ்சது.''
மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் சுமதி.
(குமுதம் 09-01-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

ராடானின் கிரியேடிவ் கார்னரில் SMART STORIES பகுதியில் இந்தக் கதை தேர்வு.

Monday, March 1, 2010

ஒன்றேனும்...புரியாதபடி எழுதுவது எனக்கு

போதாததாகவே இருக்கிறது.

எப்படிப் புரிந்து கொண்டாயோ...

சில சமயம் புரிந்ததோ என்று கூட

எழும் தவிப்பு அபாரமானது.

என்னுள் உறுத்தி என்னைக் கொல்வது.

விரும்பத்தக்க விளைவு அல்லவே அது?

புரிந்தும் புரியாமல் எழுதுவது கூட

பரஸ்பரம் நம்பிக்கையை சிதைப்பதாகவே.

உன் அதீத மதிப்பீடும் மன

இறுக்கத்திலேயே தள்ளும் பின்னாளில்.

ஆயினும் என்ன, என்னை

அப்படியே உன்னிடம் கொண்டு சேர்க்கும்

ஒரு கவிதை கூட

இன்னமும் நான் எழுதவில்லை.

Thursday, February 18, 2010

யுக்தி


ருகில் வந்த மனைவி யமுனா கேட்டாள்.

''நீங்க போகிறது உங்க பிரமோஷன் இண்டர்வியூவுக்கு. ஒரு நாள் தான் அங்கே இருக்க முடியும். அங்கே இருக்கிற உங்க சித்தப்பா மகன் முருகேஷை அவன் வேலை பார்க்கிற கம்பெனியில் போய்ப் பார்க்கணும். நேரத்துக்கு ரயிலைப் பிடிச்சுத் திரும்பணும். இத்தனை வேலைக்கிடையில் வருணையும் கூட்டிட்டுப் போய் என்ன பண்ணப் போறீங்க? அவன் படிப்பு வேற பாழாகும்.''

''எல்லாம் காரணமாத்தான் அழைச்சிட்டுப் போறேன். வந்ததும் பாரு,'' என்றார் சுப்புராம்.

ன்டர்வியூ முடிந்ததும் டைடல் பார்க் சென்றார்கள். அகன்ற லிஃப்டில் உயர்ந்து அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் பிரவேசித்தார்கள்.

ஏ.சி. நாசியை வருடிற்று. அசத்தலான க்யூபிகள்களில் பிரபுக்கள் போல அமர்ந்து வண்ணத் திரைகளுடன் உறவாடி அமரிக்கையாக பிராஜெக்டுகளைப் படைத்துக் கொண்டிருந்த இளைஞர்களை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தான் வருண். ஒவ்வொரு விஷயமாக முருகேஷிடம் கேட்க அவன் விளக்க, இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை இவனுக்கு.

த்து நாட்களுக்குப் பின்...

'என்னங்க, வருண் ஆளே மாறிவிட்டான். இப்பல்லாம் முன்னைவிட நல்லா படிக்கிறான். நல்ல மார்க் வாங்கி முருகேஷ் வேலை பார்க்கிறது மாதிரி ஒரு பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில் சேரப் போகிறானாம். யோசனையோடுதான் செயல் பட்டிருக்கீங்க!''

கணவரைப் பாராட்டினாள் யமுனா.

(01-08-2007 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Saturday, February 13, 2010

இன்று...
அக்கறையாய் நான் தொடுக்கும்
இக்கவிதை நதிக்கு
அக்கரை நீ, இக்கரை நான்.
என்னையும் உன்னையும் தொட்டபடியே
எப்போதும் ஓடும்.
எத்தனை நீ தள்ளிப்போனாலும்
அந்த அகலத்தை
இட்டு நிரப்பிக்கொள்ளும்
கவிதைப் புனல் என்னிடம்.
ஆனால்
கடல் கொள்ளுமா அந்த
வெள்ளப் பெருக்கை?
எனவே விரைந்து வந்து விடு
உற்பத்தி ஸ்தானத்துக்கே.
ஒரு துளியாய் நாம்
ஒன்றாவோம்.

Tuesday, February 9, 2010

மேட்டர் என்னன்னா... (சிரிக்க மட்டும்)

''அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு!'' என்றாள் என் சகதர்மிணி.
''அசடு, நான் என்ன ஒன்பது வழியா கேட்டேன்? சொல்லு சட்டுன்னு.''
அவ சொல்லுமுன் அது என்ன பிரசினைன்னு...

எல்லாத்துக்கும் காரணம் இந்த ப்ளாக் சீசன் தான்! ஆபீசிலேர்ந்து அடுத்த வீடு வரை யாரைப் பார்த்தாலும் ஒரு ப்ளாக் திறந்து வெச்சு தினம் எழுதித் தள்ளிட்டிருக்காங்க, என்னைத் தவிர.

ரெண்டு மாசம் முந்தி ...எங்க கிராமத்துக்குப் போயிருந்தேனா, அங்கே ஒரு ரசமான அனுபவம். எங்க சித்தப்பா என்ன பண்ணினாரு பக்கத்து வீட்டில தண்ணி இறைக்கிற மோட்டாரை எப்படி ஷெட் போட்டு வெச்சிருக்காங்கன்னு எட்டிப் பார்த்திருக்காரு. அப்போது பார்த்தா அவங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்த பொண்ணு குளிச்சிட்டிருக்கணும்? அப்பால என்ன, வறுத்தெடுத்துட்டாங்க அவரை. விலாவில நல்ல அடி.

இதை காஷுவலா ஆபீஸ் நண்பரிட்ட சொன்னேன். அடுத்த நாளே அவர் 'விலா'வாரியா தன் ப்ளாக்கில அதை எழுதிட்டார். அவர் கொடுத்த டிஸ்க்ரிப்ஷன் வேறே அது என் சித்தப்பாதான்னு எளிதா தெரியற மாதிரி இருந்தது.

அப்புறம் நான் யார்கிட்ட கிராமத்தைப் பத்தி என்ன பேசும்போதும் 'அதுவா, படிச்சுட்டேனே'ன்னு சொல்றாங்க.

போன மாசம் ஒரு வெப் சைட்டில் ஒரு ஹிலாரியஸ் ஸ்டோரி படிச்சுட்டு நண்பரிடம் சொல்ல அது அன்னிக்கு சாயங்காலமே பப்ளிஷ் ஆயிட்டது அவர் ப்ளாக்கில. என்ன நிகழ்ச்சி யார்ட்ட சொன்னாலும் மறு நிமிடமே ஒரு பொருத்தமான படத்தோட கணக்கா கணினித் திரையில ஒளிருது..

வரவர எங்கே என்ன நடந்தாலும், அதை நாலு பேர்ட்ட பகிர்ந்துக்க முடியலே. சில சமயம் நான் ஆரம்பிக்கறதுக்குள்ள அந்த என் கதையை எனக்கே சொல்றாய்ங்க. என்ன கொடுமை சார் இது?

கடைசியில என் மனைவி அந்த ஒரு வழியை சொன்னாளோ பிழைத்தேனோ!

அவ சொன்ன மாதிரி நானே ஒரு பிளாகைத் தொடங்கிட்டேன்.

ஹி, ஹி, ஏதாச்சும் இன்ட்ரஸ்டான மேட்டர் இருக்கா சொல்லுங்களேன், கேட்போம்!

Saturday, February 6, 2010

அவ்வளவே!


ரவின் நிஜ நடுக்கம்
சாமத்தின் முன்பே எழுகிறது
அஞ்ஞானத்தின் அளவுக்கேற்ப...

னிமையின் உள் பயம்
வெகு சீக்கிரமே தொடங்குகிறது
அறியாமையின் அளவுக்கேற்ப...

முதுமையின் முக வாட்டம்
இளமையிலேயே தென்படுகிறது
பக்குவமின்மையின் அளவுக்கேற்ப...

றுமையின் கோரப்பிடி
எளிதிலேயே இறுக்குகிறது
மென்மையின் அளவுக்கேற்ப...

வெறுமையின் விசுவ ரூபம்
விரைந்து வியாபிக்கிறது
புரியாமையின் அளவுக்கேற்ப...

Wednesday, February 3, 2010

தலைப்பு

''என்னங்க, மலர்ச்சரம் பத்திரிகையிலிருந்து உங்ககிட்டே ஒரு தலைப்புக் கொடுத்து கட்டுரை எழுதித்தரக் கேட்டாங்களே, எழுதி முடிச்சிட்டீங்களா?'' கேட்டாள் சுமதி, பிரபல புள்ளி பராங்குசத்தின் மனைவி.

''அதைத்தான் நாலு நாளா யாரைப்பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். யாருமே ஞாபகம் வரமாட்டேங்கறாங்க..'' தலையைச் சொறிந்து கொண்டார்.

அவளும் யோசித்தாள்.

''ஏங்க, நம்ம ராமசாமியைப்பத்தி எழுதுங்களேன்.''

''ராமசாமியா, யார் அது?'' அவருக்கு நினைவில்லை.

''அதுதாங்க, உங்ககூட காலேஜில ஒண்ணாப் படிச்சதா சொல்வீங்களே?''

''அவனா? அவன் அப்புறம் என்ன ஆனான்?'' யோசித்தார்.

''ஏதோ சமூக சேவை நிறுவனத்தில் செயலாளரா இருக்கிறதா சொன்னாரே, ஒரு முறை?'' என்றவள் அவர் எப்பவோ எழுதிய ஒரு கடிதத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தாள்.

''ஒ, அப்ப ஜமாய்ச்சுரலாம்,'' என்றவர் உட்கார்ந்து ரெண்டு பக்கம் எழுதி, தலைப்பை மேலே எழுதினார்:

'என்னால் மறக்க முடியாத நபர்.'(குமுதம் 04-06-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)Sunday, January 31, 2010

கண்டதே காட்சி!
சந்தித்த இடங்களிலெல்லாம்
சம்பாஷித்து மகிழ்ந்தார்கள் மனிதர்கள்.
சந்திப்பதற்கென்றே
சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அது ஒரு காலம்...
இப்போது
எல்லாமே காட்சியாக விரியவேண்டும் அவர்களுக்கு.
சில சமயம் மெகா சீரியல் காட்சியாக.
எனவே இப்போதெல்லாம்
கவிதைகளில் மட்டுமே
பேசிக் கொள்ளுகிறார்கள் மனிதர்கள்.


ஒரு நிமிடம்...

முகம் கண்டே ஒதுங்கி விடுகிறார்கள்.
நிலை அறிந்தால் நெருங்கத் தயங்குகிறார்கள்.
அப்படி உன்னிடம் நான்
என்ன யாசித்துவிடப் போகிறேன்?
அப்படி எனக்குத் தந்துவிடத்தான்
உன்னிடம் என்ன உளது
வெறும் பணத்தைத் தவிர?
உன்னிடமிருந்து பெறும் எதுவுமே என்
சோகத்தைத் துடைத்து விடப் போவதில்லை
உன்னுடன் பகிர்தலைத் தவிர!

Wednesday, January 27, 2010

அந்த ரகசியம்...

திகாலை ஐந்து மணி. வாகீஸ்வரன் எழுந்து கொண்டார். மேஜையடியில் அமர்ந்தார். நேற்று விட்ட இடத்திலிருந்து கதையை எழுத ஆரம்பித்தார்.

வாசலில் கோலமிட்டு வந்தாள் மனைவி. ''மளிகை சாமான் தீரப்போகுது. இந்த வாரம் வாங்கணும். பாக்கி முன்னூறு ரூபாய் தரணும்.''

திக்கென்றது. ''ம், சரி...'' தொடர்ந்து எழுதலானார்.

பத்து மணி. போஸ்ட்மேன் வீசிய கடிதத்தைப் படித்தாள் மனைவி.

''யாரு?''

''உங்க ஒன்றுவிட்ட ஒண்ணுவிட்ட தங்கச்சி மகன் ரகு பத்தித்தான். வேலை கிடைக்கலே, சீட்டு நடத்திப் பிழைக்கிறேன்னு உதவச் சொன்னவனை நம்பி கஷ்டப்பட்டு பணம் கட்டினீங்களே, அவன்தான்.. ஊரைவிட்டு ஓடிட்டானாம்...''

ரெண்டாயிரம் ரூபாய்! தலை சுற்றியது.

கதை தொடர்ந்தது.

பன்னிரண்டு மணி. தரகர் கந்தப்பன் எட்டிப் பார்த்தார்.

''மதுரைப் பக்கம் ஒரு வரன் வந்ததே உங்க பொண்ணுக்கு? அவங்களை நேத்து சித்திரைத் திருவிழாவில சந்திச்சு பேசினேன். வேறே தகைஞ்சுட்டதாம்.''

''அப்படியா? ம்,சரி...'' எழுத்து தொடர்ந்தது.

பிற்பகல் மணி மூன்று. நண்பர் மாதவன்.

''...அந்தப் பையன் சிவா ரொம்ப ஏழைன்னு வேலை வாங்கிக் கொடுத்தீங்களே. அவன் எல்லார்கிட்டேயும் உம்மைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிட்டிருக்கான்...''

அவனா? மனசு வலித்தது. தொடர்ந்து எழுதி முடித்தார் கதையை.

ந்தக் கதை வெளியான மறு நாள்...பரபரப்பாக அவர் வீட்டில் நுழைந்த வாசகர் அன்புராஜ் அவர் கையைப் பிடித்துக் குலுக்கித் தன் பாராட்டைத் தெரிவித்தார்.

''ரொம்பப் பிரமாதமாக இருந்திச்சு சார் கதை! காரக்டர்ஸ் மனசில எழும் வேதனைகளை, வலிகளை எப்படி சார் உங்களால இப்படி நுணுக்கமா தத்ரூபமா எழுத முடியுது?''

எப்படி என்பதை அவர் சொல்லவில்லை. ''ஏதோ வருது.''

Friday, January 22, 2010

கொடி அசைந்ததும்...'கொடி அசைந்ததும்காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?' பாட்டைக் கேட்கும் போது அதே போல் சில கேள்விகள் மனதில் எழாமலில்லை. சிலவற்றையாவது இதில் இட்டு பதில் தேட முயல்கிறேன்.


1. ஆடை குறைந்ததும் ஃபாஷன் வந்ததா, ஃபாஷன் வந்ததும் ஆடை குறைந்ததா?


2. பி.பி. வந்ததால் கோபம் வருகிறதா, கோபம் வருவதால் பி.பி. வந்ததா?


3.பத்திரிகை போரடித்ததால் டி.விக்கு மாறினார்களா, டி.வி.க்கு மாறியதால் பத்திரிகை போரடித்ததா?


4.எல்லாருமே கவிதை எழுதுவதால் கவிதை பாப்புலர் ஆனதா, கவிதை பாப்புலர் ஆனதால் எல்லாருமே கவிதை எழுதுகிறார்களா?


5. போர் அடிப்பதால் வேலைகளைத் தவிர்க்கிறோமா வேலைகளைத் தவிர்ப்பதால் போர் அடிக்கிறதா?


6.கதாநாயகன் பண்ணுகிற அசட்டுக் காரியங்களை சகிக்க முடியாததால் காமெடியனை அவர் என்ன செய்தாலும் ரசிக்கிறோமா காமெடியன் என்ன செய்தாலும் ரசிக்கும்படி இருப்பதால் க. நாயகன் பண்ணுகிற காரியங்களை சகிக்க முடியவில்லையா?


7. கிளையன்ட் ஏமாளியா இருக்கிறதால நாம புத்திசாலியாகிறோமா நாம புத்திசாலியா இருக்கிறதால கிளையன்ட் ஏமாளியாகிறாரா?


தெரிந்தால் சொல்லுங்களேன்...

Friday, January 15, 2010

கவன ஈர்ப்புகள்...


ந்தப் பாதை எங்கோ செல்கிறது
என் மனதைப் போலவே.
வளைவுக்கு அப்பால் என்ன இருக்கிறது
என்பது தெரியாது எனக்கு.
ஆர்வமோ வளைத்துப் போடமுடியாததாய்...
'இந்த வரை வந்தது போதும்,
இடத்துக்கு என்ன குறை?'
என்றிருக்க முடியவில்லை நிறைவாய்.
இதுகாறும் சேகரித்த நினைவுகளின் பலம் ஒருநாள்
இற்றுப் போய் விடக்கூடும்.
கசப்பான அனுபவங்கள் மேலும்
களைப்பேற்படுத்தி விடக் கூடும்.
இனிய ஆச்சரியங்களும் ஏன்
இருக்கக்கூடாது இதற்கப்பால்?
ஒன்று மட்டும் தெளிவாய்...
நான் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
நிற்குமிடங்கள் இளைப்பாற மட்டுமே.
அந்தப் பாதை எங்கோ செல்கிறது.
என் மனம் அதன் பின்னால் செல்கிறது.

Monday, January 11, 2010

ராத்திரியில் காத்திருக்கும்...

ணவனை இப்படி வேலை வாங்குவது பற்றி ராஷ்மியைக் குறை சொல்லாதவர்களே கிடையாது.

ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர் அவன். அதிலும் பிராஜெக்ட் லீடர். கம்பெனியில் ராத்திரி ஒன்பது மணி வரை பிசியாக வேலை செய்துவிட்டு அலுத்துக் களைத்து வீடு திரும்பும் அவனை பத்துப் பாத்திரம் தேய்க்க அனுப்பி விடுவாள் ராஷ்மி.


''என்னங்க, தண்ணியிலே புழங்கறது என் ஸ்கின்னுக்கு சரிப்பட்டு வரலே! ராத்திரி மட்டும் பாத்திரங்களை நீங்க வாஷ் பண்ணிக் கொடுத்துடுங்களேன், பிளீஸ்!'' என்று நைசாக அவன் தலையில் கட்டிவிட்டாள் அந்த வேலையை. அவனும் மறுக்காமல் அத்தனையையும் இழுத்துப் போட்டுப் பளிச்சென்று தேய்த்து வைப்பான்.


கம்பெனியிலிருந்து அவன் எத்தனை லேட்டாக வந்தாலும் தேய்க்கவேண்டிய பாத்திரங்கள் அவனுக்காகக் காத்திருக்கும். கைலியைக் கட்டிக் கொண்டு புகுந்தான் என்றால் அடுக்களைக்குள் ஒரே தாம் தூம் தான். கரிசனத்துடன் அவள் தொங்க விட்டிருக்கும் ரேடியோவிலிருந்து எஃப். எம். கேட்டபடியே வேலையை முடித்து விட்டுத்தான் சாப்பிட உட்காருவான்.


வேலைக்காரி வழியாகக் கசிந்து விட்டது இந்த விஷயம். பக்கத்து ஃபிளாட்காரியும் ராஷ்மியின் சிநேகிதியுமான நான் இதை அவளிடமே ஒரு நாள் கேட்டு விட்டேன்.


கேட்டதும் ராஷ்மி கொஞ்சம் அசந்துதான் போனாள். பிறகு மெல்லச் சொன்னாள்...


''ஸாஃப்ட்வேர் கம்பெனி வேலையைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே? அதிலும் இவர் பிராஜக்ட் லீடர் வேறே. நாள் பூராவும் பரபரப்பா இருப்பாரு. மென்டல் டென்ஷன் ஜாஸ்தி. அது ரிலீசாகிறதுக்குத்தான் இப்படி ஒரு ஏற்பாடு. உண்மையில் இது மறைமுகமா ஒரு சைக்காலஜிகல் உதவிதான் அவருக்கு. பாத்திரங்களை அவர் இஷ்டப்படி உருட்டறதிலேயும் வெளுக்கறதிலேயும், நாள் முழுக்க அவர் மனசில் தேங்கியிருக்கும் டென்ஷன் எல்லாம் வடிஞ்சுடும். முன்னைவிட இப்பல்லாம் ரொம்ப ஃ ப்ரெஷ்ஷா, சந்தோஷமா வந்து சாப்பிட உட்கார்றாரு.''

பதிலைக் கேட்டு நான் அசந்துபோய் புன்னகைத்தேன்.


(விகடன் 09-10-2005 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

Friday, January 8, 2010

அணுகு முறை


ண்பர் சேது வீட்டில் நான் நுழைந்த போது அவர் தன் பையனை வார்த்தைகளால் துவைத்துக் கொண்டிருந்தார். போன வருஷம் வாங்கிய ஐந்தாம் ராங்கை விட்டு இப்ப எட்டுக்கு வந்துட்டானாம்.
''வாத்தியார் என்ன சொன்னார்? பையன் ரொம்ப ஸ்லோன்னு சொன்னாரா?'' என்று கேட்டேன்.
''இல்லை.''
''அப்ப ஐன்ஸ்டீன் மாதிரி எல்லாம் வரமாட்டான்.''
''பையன் கணக்குல புலி.''
''அப்ப ஒரு பெஞ்சமின் ஃபிராங்லின் ஆகவும் முடியாது. ஏன்னா அவர் கணக்குல வெரி புவர்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா?''
''வரவே வராது.''
''சே, பெர்னார்ட்ஷா ஆகிறதுக்கும் சான்ஸ் இல்லே! கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா?''
''நெவர்.''
''போச்சு. எடிசன் ஆகிற வாய்ப்பும் இல்லே. சரி, அடிக்கடி ரொம்ப டல்லா இருப்பானா?''
''அப்படி நான் பார்த்ததே இல்லே.''
''அப்ப ஜேம்ஸ் வாட் மாதிரியும் வரமாட்டான் போல... ஒகே. உங்க கவலை நியாயமானது தான். இத்தனை பிரபல மனிதர்களின் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லையே இவனிடம்?''
கையைப் பிடித்துக் கொண்டார் நண்பர். ''என் கண்ணைத் திறந்தீங்க... டேய் பிரனேஷ், இங்கே வாடா,'' என்றார் மிக மிக அன்பான குரலில், ''சாரிடா!''


(குமுதம் 14-02-2007 இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை)