Thursday, March 31, 2016

உதவுகிற வேலை...


அன்புடன் ஒரு நிமிடம் - 101

 பாதி தூரம் சென்றபின் அன்றைக்கு ஆபீஸ் இல்லையென்று அறிந்ததும் வீடு திரும்பிய சித்ரா அந்தக் காட்சியை எதிர்பார்க்கவில்லை. 
அத்தனை பாத்திரங்களையும் சுற்றிப் பரப்பி வைத்து கழுவிக் கொண்டிருந்தான் தியாகு. 
"என்னங்க நீங்க செய்யறீங்க இதெல்லாம்.... கமலாம்மா எங்கே?”
”அவ இன்னிக்கு லீவாம். சொல்லிட்டுப் போயிட்டா. சரி, கொஞ்சம் பாத்திரம் தானேன்னு நானே...’
அவனுக்கு ஆபீஸ் பத்து மணிக்குத்தான். சித்ராவுக்கு ஏழரைக்கே கிளம்ப வேண்டும். வேலைக்கு வரும் கமலாம்மா எட்டு மணிக்கு வந்து வீடு பெருக்கி பாத்திரம் தேய்த்துவிட்டுப் போவாள். 
”அதான் ஞாயிறு அவளுக்கு லீவு தர்றோமே... சரி, விடுங்க. நான் பார்த்துக்கறேன் மீதியை. நேரமாச்சு உங்களுக்கு!” என்று சொன்னாளே தவிர மனசில் ஏதோ நெருடிற்று. இவர் ஏதோ சமாளிக்கிற மாதிரி இருக்கே... 
அதே தெருவில் கடைசி வீட்டிலிருந்த தோழி பத்மாவின் காதில் விஷயத்தைப் போட, அடுத்த பத்தாவது நாளே தெரிந்துவிட்டது. அந்தப் பத்து நாளுமே கமலம்மா வருவதில்லை என்று. இவனோ தினமும் அவள் வந்துவிட்டுப் போனதாக... வீடு நீட் ஆக இருந்தது. பாத்திரங்கள் சுத்தமாக...
”என்னங்க இது? அவ வர்றதேயில்லையாமே?” நேரடியாகவே கேட்டாள்.
”கண்டு பிடிச்சிட்டியா? முடிஞ்ச பின்னாடி உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்,” என்றான் தியாகு. முகத்தில் கலவரம் இல்லை. ”விஷயம் இதுதான். கமலாம்மாவின் மகன் சேகருக்கு ஆக்ஸிடெண்ட்ல தலையில அடி.  ரெண்டு மாசம் தினமும் கிட்டேயிருந்து கவனிக்கணும்.  சிகிச்சைக்கும் செலவாகுதுங்கிறதால வேலையை விடவும் யோசனை.  அவளுக்கு எப்படி  உதவலாம்னு யோசிச்சேன்.  அதனால இப்படி சொன்னேன். மாசாமாசம் நம்ம வீட்டுக்கு வர்ற நேரத்தில் உன் மகனை கிட்ட இருந்து கவனிச்சுக்க, இந்த ரெண்டு மாசமும் உன் வேலையை நான் செய்துக்கறேன்னு சொன்னேன். தயங்கினா. ஆனா எனக்கு அதில ஒரு திருப்தின்னு வற்புறுத்தி...”
ஆச்சரியத்தை மீறி அவன் மீது ஒரு பெருமை தோன்றிற்று.
('அமுதம்’ ஜனவரி 2015 இதழில் வெளியானது)

நல்லதா நாலு வார்த்தை...66


'கடுமையாக முயற்சி செய்யும் மனிதனுக்கு ஒரு
கை கொடுக்கிறார் கடவுள்.'
- Aeschylus
('God lends a helping hand to the man who tries hard.')
<>

'நம்முள் ஆனந்தத்தைக் 
கண்டுகொள்வது எளிதல்ல;
வேறெங்கும் அதைக் 
கண்டுபிடிப்பது சாத்தியமல்ல.' 
- Agnes Repplier
('It is not easy to find happiness in ourselves, and
it is not possible to find it elsewhere.')

<>

'களை என்பதென்ன? 
அதுவரையில் அதன் குணநலன்கள் 
கண்டறியப்பட்டிராத 
ஓர் செடி.'
- Emerson
('What is a weed? A plant whose virtues 
have never been discovered.')
<>

'எந்த வேலையிலும் 
வெற்றிக்கான முதல் படி 
அந்த வேலையில் 
ஆர்வமுடையவராதல்.'
- William Osler
('The very first step towards success in
any occupation is to become interested in it.')
<>

'அன்பும் நட்புமே
ஆகச் சிறந்த வைத்தியம்.'
- Hubert H Humphery
('The greatest healing therapy is friendship and love.')
<>

’அனுபவத்தின் மதிப்பானது
நிறைய பார்ப்பதில் இல்லை
விவேகமாகப் பார்ப்பதில்.’
- William Osler
('The value of experience is not in seeing much, 
but in seeing wisely.')
<>

’சிலசமயம் நானே எனக்கு 
வியத்தகு ஆலோசனைகளை வழங்குகிறேன்,
ஆனால் அதை எடுத்துக் கொள்ள 
இயலாமல் இருக்கிறேன்.’
Mary Wortley Montagu
(”I sometimes give myself admirable advice but
I am incapable of taking it.’)
<>

'கதகதப்பான ஓர் புன்னகையே
கனிவின் பிரபஞ்ச மொழி.'
- William Arthur Ward
('A warm smile is the universal language of kindness.')
<>

திறமையால் விஞ்ச இயலாவிடில்
முயற்சியால் வாகை சூடு.'
- Dave Weinbaum
('If you can't excel with talent, triumph with effort.')
<>

'ஆனால் ஆனந்தம் என்பது 
மனிதனுக்கும் அவன் 
நடத்தும் வாழ்க்கைக்குமான 
எளிய இணக்க நிலையன்றி வேறென்ன?’
- Albert Camus
(’But what is happiness except the simple harmony
between a man and the life he leads?’)


><><><><

Sunday, March 6, 2016

அவள் - (கவிதைகள்)


260
ஒரு பார்வை பார்த்தாய்
உள்ளத்தில் பூத்தாய்.

261
ஆகச் சிறந்ததையே 
எதிலும் நாடும் நீ
என்னில் மறந்ததேன்?

262
நினை என்னை நினை என
உனை நான் வேண்டுவதுபோல
நனை என்னை நனை என
மலர்கள் மழையிடம்.

263
உன்னை நினைப்பதை 
நிறுத்தி விட்டேன்
தும்மல் வராமலிருக்க
24 மணி நேரமும் உனக்கு.

264
நீ மட்டுமே அறிந்தது: 
என் மனதின் மொழி.

265
என் ஒரு நாள் பேச்சு
ஒரு நிமிடத்தில் புரிகிறதுனக்கு.
உன் ஒரு நிமிடப் பேச்சு
புரிய ஒரு நாளாகிறதெனக்கு.


266
சென்று கொண்டேயிருக்கும் நினைவுகள்
சென்றடைவது எப்போதும்
உன்னிடத்திலேயே.

267
எல்லா அன்பையும் 
எடுத்துக் கொண்டுவிட்டாய்
மொத்தக் குத்தகைக்கு நீயெனில்
எனக்கென்ன மிஞ்சும்
யோசித்துப்பார் நீயே.


268
பல்லவி மட்டுமே நான்
பாடுகிறேன்
சரணங்கள் பாடுவது நீயே.

269
நினைத்தாலே
கவிதையாகி விடுகிறாய் 
நீ.

><><><><