Saturday, April 29, 2023

"அத்தனையும் பொய்யாச்சு ராசா.."


“ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்தி"ருக்கும் யேசுதாஸ் குரலுக்கு “மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து..” என்று எசப்பாட்டு கொடுக்க இவர் குரல் தான் பொருத்தம். வீணைத் தந்தியின் மென்மையுடன் போட்டியிடும் அளவுக்கு ஒடுங்கியெழும் குரலில் ‘நான் மாமரத்தின் கீழிருந்து..’வை அவர் பாடும் நேர்த்தி! அந்த “உன்னாலே தூக்கம் போயாச்சு, உள்ளார ஏதேதோ ஆயாச்சு!” போயாச்சு -வை அவர் இழுக்கிற இழுப்பில் நம் கவலையெல்லாம் போயாச்சு! “மாமன் நினைப்பில் சின்னத் தா...யிதான்,” என்று இழுத்துப் பாடிவிட்டு “மாசக் கணக்கில் கொண்ட நோ...யிதான்” பாடும்போது நானோ மீட்டர் குறையாது.

ஸ்வர்ணலதா! இன்று பிறந்தநாள்.
இசைக் குடும்பம். இசை பயின்றவர். 3 வயதில் பாட ஆரம்பித்தவர். note உணர்ந்து noteworthy ஆகப் பாடக் கேட்கணுமா?
இவர் பாடல்களில் போவோமா ஒரு ஊர்கோலம்? “போவோமா ஊர்கோலம்.. பூலோகம்ம்ம்ம்ம்ம்…” எத்தனை ம்முக்கு நீண்டாலும் குறையாத மென்மை, உம் போட்டு கேட்க வைக்கும்.
எந்தப் பாட்டு? ‘காட்டு குயில் பாட்டு’ச் சொல்லவா? ‘கானங்கருங்குயிலை கச்சேரிக்கு வரச்’ சொல்லவா? ‘அக்கடா’ன்னு இவர் தொடங்கினால் ‘துக்கடா’ன்னு நாம விட முடியாம கட்டிப் போட்டு விடும் பாடல்கள்!
மாஸ்டர்பீஸ் “என்னுள்ளே..!" ஒரு பூ விரிவதைப் போல அந்த குரல் மெல்ல எழுகிறது. “என்னுள்ளே.. என்னுள்ளே..” என்று ராகத்தின் ஜீவனுக்குள் இட்டுச்செல்லும் குரல்! “கூடு விட்டு கூடு.. ஜீவன் பாயும் போது..” இந்த வரி! குரலின் சிலிர்ப்பில் தனிமையின் தவிப்பை உணர வைக்க முடியுமா? முடிகிறது. அடுத்த வரியில் அவரே பாடுவது போல ‘ஒரு வார்த்தை இல்லை கூற!’
“மாலையில் யாரோ..”வில் “நெஞ்சமே பாட்டெழுது, அதில் நாயகன் பேரெழுது..” என்று உச்ச ஸ்தாயியில் பாடும்போது எந்த உயரத்துக்கு எடுத்துச் செல்லணுமோ அதுவரை எடுத்துச் சென்று நிறுத்துகிறார். அதற்கு ஒரு அங்குலம் கூட மேலெழாமல்… மூன்று முறையும்… awesome! அந்த மாபெரும் இசைக் கோலத்துக்கு முழு நியாயமும் வழங்கியிருப்பார் தான் பாடிய விதத்தால்.
அந்த அசத்தல் பாட்டு! “ஆட்டமா தேரோட்டமா?” ஆடறேன், வலை போடறேன் என்று வார்த்தைகளை இசைவாக, இசையால் முடிச்சுப் போடும் ஸ்டைல்! இவருக்காகவே இசையமைத்ததோ என்று திகைக்க வைக்கும் பாடல் அது. அந்த ஓங்கி ஒலிக்கும் ‘ராக்கம்மா’வில் “அட, ராசாவே பந்தல் கட்டு, புது ரோசாப்பூ மாலை கட்டு…” வை எப்படித்தான் சற்றும் டோன் குறையாமல் கிசு கிசுப்பாகப் பாட முடிகிறதோ?
சொல்ல வேண்டியதில்லை. “போறாளே பொன்னுத்தாயி...” பற்றி. நேஷனல் அவார்டே கிடைத்துவிட்டது. ஜானகிக்கு ஒரு ‘தூரத்தில் நான் கண்ட இதயம்..’ என்றால் இவருக்கு ஒரு ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்.’
மாசி மாசம் பாடலில் ‘ஆகா பிரமாதம்’ சொல்ல வைக்கும் அந்த "ஆசை ஆகா ப்ரமாதம் ... மோக கவிதா ப்ரவாகம் !" அடுத்து “உலகம் உறங்குது, மயங்குது, ஆஹாஹா…” என்று இழுப்பது, ஆஹாஹா! அருண்மொழியுடன் ‘சக்தி வேலி'ல் 'மல்லிகை மொட்டு மனதைத் தொட்டு…'விட்ட பாடல்!
எஸ் பி பியுடன் போட்டி போட்டு இனிமையை வீசுவார் “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்” பாடலில். கார்த்திக்குடன் “ஒன்னப்புதட்டு புல்லாக்கு..” பாடலில் (சின்ன ஜமீன்) “பொழுதன்னிக்கும் குழந்தையைப்போல் இருந்திட்டயே..” வரியில் அப்படியே எம் எஸ் ராஜேஸ்வரியின் குழைவு கொஞ்சும்.
ராவை அவர் உச்சரிக்கும் ரகங்களில் “ர்ர்ராஜாவைப் போல் ஐயராத்துப் பிள்ளை” தனி ரகம். “மாசி மாசத்"தில் “நாளை எண்ணி நான் காத்திருந்தேன், மாமன் உனக்குத்தானே!”வில் உனக்குத்தானேவை அவர் ஒலிக்கும் பாங்கு தனி... “சந்திரரே வாரும்..” பாடும் அழகைக் கண்டு ‘அந்தி வானம் தந்தனத்தோ பாடும்’. வளமான “விடலைப் புள்ளை நேசத்துக்கு..” ராகத்துக்கு இவர் குரல் தனி சோபை தரும். ரஹ்மானின் “முகாப்லா..” பாடலின் வித்தியாச ராகம் இவரிடமிருந்து ஒரு வித்தியாச குரலை கொண்டு வந்திருக்கும்.
அப்புறம் இவருக்காகவே பிறந்த பாடல் ஒன்று உண்டு. “ஆத்தோரம் தோப்புக்குள்ளே..” ('பாஞ்சாலங்குறிச்சி') இந்தப் பாட்டை யாராலும் ஒரு முறை கேட்க முடியாது, ஆமாம், நிறுத்த முடியாது நூறு முறை கேட்கிற வரை. பிழிந்து விடும் இதயத்தை. கழுகு கவ்வும் இரையாக கொண்டு போகப்பட்டு விடுகிறோம் பாட்டோடு.
“மேகாத்து மூலையில மேகம் கருக்கையில சுக்குத் தண்ணி வெச்சுத் தர ஆசைப் பட்டேன்..” இப்படி நாயகியின் ஒவ்வொரு ஆசையையும் அவர் பாட, வரிக்கு வரி நம் உணர்வு பிசையப்பட, "அத்தனையும் பொய்யாச்சு ராசா.."ன்னு சொல்லும்போது குரலின் சோகம் உலுக்கும். “ஒத்தயிலே நிற்குதிந்த ரோசா..”ன்னு முடிக்கும்போது அப்படியே நிற்கிறோம் அவரை இழந்து விட்டோமே என்று...
>><<

மூன்று முறை சிறந்த நடிகர் ஆஸ்கார்...

ஆஸ்கார் சரித்திரத்திலேயே மூன்று முறை சிறந்த நடிகர் ஆஸ்கார் வாங்கிய ஒரே ஒருவர் தான் உண்டு. மார்லன் பிராண்டோ? இல்லை. ஸ்பென்சர் டிரேஸி? டஸ்டின் ஹாஃப்மேன்? ரிச்சர்ட் பர்ட்டன்? பீட்டர் ஓ டூல்? பால் நியூமேன்? இவங்க யாரும் இல்லை.

Daniel Day-Lewis ஆம், ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை அகாடெமி அவார்ட். (My Left Foot 1990, There will be Blood 2008, Lincoln 2013)

இந்தத் தலைமுறையின் உலகச் சிறந்த நடிகராக கருதப் படுகிறவர்... இன்று பிறந்த நாள்!
ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’யில் நடித்தவர். ஸ்பீல்பர்க்கின் 'லிங்கனிலு'ம்!
ஏற்றுக் கொண்டதெல்லாம் பெரும்பாலும் உணர்ச்சிகரமான, ஆர்ப்பரிக்கிற ரோல்கள். ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் நாடக நடிகராக இருந்து வந்தவர், நாடகத்தின் நேரடி த்ரில்லை திரையில் அனுபவிக்க வைத்து விடுவார்.
ஆக்ரோஷமாக கத்துவதில் ஓர் அழகு, அழகாக உச்சரிப்பதில் ஓர் அமரிக்கை, அமரிக்கையாக காதலிப்பதில் ஒரு ஸ்டைல்!
சிறுவயதில் மற்ற பசங்களால் கேலி செய்யப்படுவதைத் தவிர்த்து தன் நேரத்தை மிமிக்ரி செய்வதில் செலவழித்ததுதான் நடிகர் ஆவதற்கு அடித்தளமிட்டது.
வெரைட்டி தான் இவர் forte. ரொம்பவே ஸெலக்டிவ், கேரக்டர்களைத் தேர்ந்தெடுப்பதில். விதவிதமான கதாபாத்திரங்களிடையே வித்தியாசத்தை அனாயாசமாக காட்டுவார்.
நடிப்பில் துடிப்பைக் கொண்டுவர இவர் எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு எல்லை இல்லை. ‘The Ballad of Jack and Rose’ படத்தில் மனைவியைப் பிரிந்து பதின்ம வயது மகளுடன் தனியே வாழும் கேரக்டருக்காக இவர் மனைவியை விட்டு தனியே வசித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ‘Gangs of NewYork’ படத்தில் நடிக்கும்போது ஷூட்டிங் நாட்கள் முழுக்க நியூயார்க் பாஷையிலேயே பேசிக்கொண்டிருப்பார். படத்தில் நடித்து முடித்தபின் பாத்திரத்திலிருந்து வெளி வருவதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்வாராம்.
பிரபல நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் நாடகம் அது. ‘The Crucible’. அந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் அவர் மகளை காதலித்து மணந்தார்.
காவியம் அது. Cerebral palsy நோய் வாய்ப்பட்ட பையன். இடது காலை மட்டுமே சரியாய் இயக்க முடிகிறவன். எல்லாராலும் உதாசீனப் படுத்தப்பட்டவனை அரவணைக்கும் அன்னைக்கு அவனிடம் நம்பிக்கை. ஓவியனாக, எழுத்தாளனாக உருவாகிறான். ‘My Left Foot’ படத்தில். உலகின் தலைசிறந்த நூறு நடிப்புக்களில் 11-வதாக பிரிமியர் பத்திரிகை அதைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை.
2017-இல் 'Phantom Thread’ படத்தில் நடித்ததோடு திரைக்கு End Card போட்டார்.
சொன்னது: ‘உங்களுக்கென்று ஒரு ரிதம் இருக்கும். அதைக் கண்டு கொள்வதுதான் உங்களை அறிந்து கொள்வதில் ஒரு முக்கியமான விஷயம். என்னுடைய ரிதம் கொண்டுதான் நான் நடிக்கிறேன்..’
>><<

Friday, April 28, 2023

புலிட்சர் பரிசு நாவல்...


Gregory Peck நடித்த, 3 ஆஸ்கார் வாங்கிய அற்புதப் படம், ‘To Kill A Mocking Bird’ நினவிருக்கிறதா? அந்தப் புலிட்சர் பரிசு நாவலை எழுதியவர்...

Harper Lee. இன்று பிறந்தநாள்!
வருடத்துக்கு 10 லட்சம் விற்றதோடு 40 மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது அது. தவிர, அவர் எழுதிய ஒரே நாவல் ‘Go Set A Watchman.’
முக்கியமான விஷயம் ஒன்றை மொழிந்தார்:
‘அவருடைய கோணத்திலிருந்து யோசித்துப்
பார்த்தாலொழிய நீங்கள் ஒருவரைச்
சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.’
படிப்பது பற்றி:
‘அதை இழந்து விடுவோமோ என்ற பயம்
தோன்றும் வரை நான் வாசிக்கவில்லை.
சுவாசிப்பதை நேசிப்பவர் எங்கே இருக்கிறார்கள்?’
மேலும் சொன்னவை:
‘கண்ணுக்குத் தோன்றுகிற அளவுக்கு
மோசமானதல்ல விஷயங்கள்.’
‘உரிச்சொற்களைக் களைந்து விட்டால்
உண்மைகள் கிடைத்து விடும்.’
‘சரியாய் யோசிக்கிறவர்கள் தங்கள்
திறமையில் பெருமை கொள்ள மாட்டார்கள்.’
‘ஒருவர் தன் விரோதிகளை கண்டனம் செய்யலாம்,
ஆனால் அவர்களை நன்கு அறிந்து கொள்வது
இன்னும் விவேகமானது.’
><><

ஐந்து வயது ஆர்வம்..


‘Camp Nowhere’ 1994 இல் வந்த படம். ரெண்டு வாரத்துக்குத்தான் ஏதோ ஒரு சின்ன வேடத்தில் நடிக்க அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு இருந்தாங்க. முக்கியமான நடிகை ஒருவர் திடீரென்று ஒதுங்கிக் கொண்டார். என்ன செய்வது? யோசித்த டைரக்டர் இவரை அந்த ரோலுக்கு ப்ரமோட் செய்தார். அசத்திவிட்டார் அந்தப் பாத்திரத்தில். சின்ன, பெரிய திரை இரண்டிலும் ஸ்டார் ஆகிவிட்டார்.

Jessica Alba… அழகிய நடிகைகளில் மிக அழகிய நடிகைகளில் ஒருவர். இன்று பிறந்த நாள்.
‘Fantastic Four’(2005)-இன் விண் பெண் உடனே நினைவுக்கு வருவார். நான்கு பேர் சென்ற அந்த விண்வெளிக்கலம் காஸ்மிக் கதிர் வீச்சுக் கற்றை மேகம் ஒன்றில் மோதி விட அது அவர்கள் உருவை அடியோடு மாற்றிவிட.. உருவில்லாமலே போன மிஸ் எக்ஸாக வருவார் இவர் அதில். செமத்தியான வேடம். செம ஹிட் படம். அங்கேதான் சந்தித்தார் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த தன் வருங்கால கணவரை. பார்ட் 2 விலும் விண் பவனி வந்தார்.
ஐந்து வயதில் ஆக்ஸிடென்டில் கண் இழந்து விட்ட பெண் வயலினிஸ்ட் அவள். ஆப்ரேஷன் செய்து மாற்று கார்னியாவை ஏற்றுக்கொண்டால்... இப்ப கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது! அச்சுறுத்தும் காட்சிகள். செத்துப் போனவர் கூட கண்ணுக்கு தெரிகிறார். என்ன விசித்திரம்! தேடிக்கொண்டு புறப்படுகிறாள் கண் அளித்தவரையும், காரணத்தையும்.. ‘The Eye’ அவருடைய கண்ணான படங்களில் ஒன்று.
சூப்பர் ஹியூமன்பீயிங் ஆக ஜீன் மாற்றப்பட்டவராக வரும் ‘Dark Angel’ -இல் இன்னொரு வித்தியாசமான ஜெஸிகாவைப் பார்க்கலாம். சொல்லணுமா ‘ஸன் ஸிற்றி' பற்றி? ('Sin City' 2005)
ஐந்து வயதிலேயே ஆர்வம் நடிப்பில். சின்ன வயசில் ஹாலிவுட்டை சுற்றிப் பார்க்க வந்தபோது ஏன் நானும் இங்கே வசிக்கக் கூடாது என்ற நினைப்பு ஓடியதாம் மனதில்..
‘பாத்திரத்துக்கு ஏற்ற தோற்றத்தை வழங்கினால் போதாது, ஏற்ற நடிப்பை வழங்க முடிய வேண்டும், இல்லாவிட்டால் நான் காணாமல் போய்விடுவேன்,’ என்கிறார்.
‘கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவதன் பியூட்டி என்னவென்றால் உங்களுடைய எல்லா விஷயத்தையும் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள், அவர் வாழ்க்கையின் ஒரு பங்காக இருப்பதற்கு உறுதி தருகிறீர்கள்..’ என்று வாழ்வின் அந்த அழகிய தருணத்தை கொண்டாடுகிறார்.
'மிக அழகானவர்கள்' பட்டியல்களில் மிக அதிகமாக இடம்பெறும் இவர் சொல்லுவது, ‘எல்லோருமே அழகுதான்,, மனசுக்குள் அழகானவராக இருப்பதுதான் முக்கியம்.’
><><

Wednesday, April 26, 2023

பன்முக வித்தகர்....


‘எப்படி நாம் கடந்த காலத்தின் சந்ததியோ அதேபோல் வருங்காலத்தின் பெற்றோரும் நாம்தாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.’

சொன்னவர் Herbert Spencer (1820 -1903)
அறிவியலாளர், தத்துவவாதி...பன்முக வித்தகர். இன்று பிறந்த நாள்!
அவர் காலத்தில் மிக அதிகம் பேசப்பட்டவர்.
சர்வ சகஜமாக இன்று நாம் பயன்படுத்தும் 'Survival of the Fittest' என்ற சொற்றொடரை அமைத்தவர் இவர்தான்.
இன்னும் சொன்னவை...
‘கல்வியின் முக்கிய குறிக்கோள் அறிவு அல்ல, செயல்பாடு.’
‘அறிவியல் தேடல்களுக்குள் இறங்காதவர்கள், அவற்றைச் சுற்றியுள்ள கவிதைகளைக் கொஞ்சமும் அறிய மாட்டார்கள்.’
‘நாம் மிகுந்த விருப்பத்துடன் தேடும் பொருட்கள், கிட்டும்போது அந்த அளவு சந்தோஷத்தைக் கொண்டு வருவதில்லை. பெரும்பாலான சந்தோஷங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து வருகின்றன.’
‘நுண்கலைகளில் மிக உயர்ந்த இடத்தை இசைக்குத்தான் தர வேண்டும். எல்லாவற்றையும்விட அதுவே மனிதனின் ஆன்மாவைக் கட்டிக் காக்கிறது.’
‘அன்பு தான் வாழ்வின் முடிவு, ஆனால் அது முடிவில்லாதது. அன்பு தான் வாழ்வின் சொத்து ஆனால் செலவழிக்கத் தீராதது. அன்பு தான் வாழ்வின் பரிசு. அளிப்பதில் கிடைக்கும் பரிசு.’
‘ஒரு மனிதனின் அறிவு ஒழுங்கற்றதாக இருந்தால், அது எத்தனை அதிகம் இருக்கிறதோ அத்தனை குழப்பம் ஏற்படும்.’
‘பாரபட்சத்தை நாம் அனைவரும் எதிர்க்கிறோம் ஆனால் பாரபட்சம் நம் அனைவரிடமும் இருக்கிறது.’
><><><

என் கனவுகள்...


‘என் கனவுகள் எனக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றிற்காக நான் வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. துன்புறும்போது அவை எனக்குப் புகலிடம். தளையற்று இருக்கும்போது அவை என் ஆகப் பெரிய சந்தோஷம்.’

சொன்னவர்Mary Wollstnecraft…
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெருமைமிகு எழுத்தாளர். 38 வயதிலேயே மறைந்த முக்கியமானவர்களில் ஒருவர். இன்று பிறந்த நாள்..
அவர் காலத்தைய ஆண்களின் மட்டற்ற சுதந்திரமும் அதிகாரமும் பெண்களுக்கு ஏற்படுத்திய சிரமங்களையும் பாதிப்பையும் தன் வாழ்க்கை அனுபவங்களில் உணர்ந்தவர், பெண்ணின் உரிமையை நிலைநாட்டத் துடித்தார்.
‘A Vindication of the Rights of Woman’ என்ற அவரது புத்தகம் பெண்ணுரிமைக்காக எழுந்த பெரும் ஆக்கங்களில் ஒன்று.
இவரே ஒரு பெரிய எழுத்தாளர் என்றாலும் Frankenstein எழுதிய மேரி ஷெல்லியின் அம்மா என்பது இன்னொரு விசேஷம்.
சொன்ன இன்னும் சில:
‘எளிமையும் நேர்மையும் சேர்ந்தே பயணிக்கும், ஏனெனில் இரண்டும் உண்மையை நேசிப்பதால் வருபவை.’
‘எந்த ஒரு மனிதனும் தீமையை தீமை என்று தெரிந்து தேர்ந்தெடுப்பதில்லை, அதை சந்தோஷம் என தவறாக நினைத்துக் கொள்கிறான், தான் தேடும் நன்மை என அதை நினைக்கிறான்.’
‘நான் உன்னிடம் விரும்பியதெல்லாம் உன் இதயமே, அது போய் விட்ட பின் உன்னிடம் எனக்கு கொடுப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை.’
><><><

முதல் தந்தி...


 வாஷிங்டனில் அமர்ந்து அந்த ஜெனரலின் உருவப்படத்தை அமைதியாக தீட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓவியர். வருடம் 1825. இளம் மனைவிக்குத் திடீர் நோய் என்று தந்தை அனுப்பிய கடிதம் வந்தது குதிரைத் தபாலில். விரைந்தார் ஊருக்கு. சேதி கிடைக்குமுன்பே இறந்துவிட்ட மனைவியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. செய்தி வந்து சேர நாட்கள் ஆனதே காரணம். மாளாத சோகத்திலிருந்து மீளாத அவர் மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது. ‘துரிதம் உண்டாக்குவேன் கடிதம் செல்ல!’

நிகழ்வு 2. கப்பலில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அவர், ஐரோப்பாவிலிருந்து. சக பயணியான அமெரிக்க விஞ்ஞானி, எலெக்ட்ரோ மேக்னெடிஸத்தில் ஐரோப்பாவில் நடத்திய சோதனைகளைப் பற்றிச் சொல்லுகிறார். இவர் மூளையில் பளிச்! ‘தொலை தூரத்துக்கு சிக்னலைக் கொண்டு செல்ல உபயோகிக்கலாமே இதை?’ முயன்றார். தந்தியை முந்தி சிந்தித்தவர்கள் 36 வருடமாக 26 கம்பிகளுடன் போராடிக் கொண்டிருக்க, ஒரே கம்பிக்குள் கொண்டு வந்தார். அந்த Code -ஐ எழுதினார் Morse.
Samuel Morse…. இன்று பிறந்த நாள்!
Patent கிடைத்தாலும் patronage கிடைக்கவில்லை. ஆறு வருடம் போராடி அரசின் நிதி உதவி பெற்று அமைத்தார் ஒரு ஐம்பது மைலுக்குத் தந்திக் கம்பங்களை. உதவிக்கு போராடிய பேடண்ட் அதிகாரி மகள் அந்த பைபிள் வாசகத்தை சொன்னாள் முதல் தந்தியாக! ‘What hath God wrought?’
தந்திக்குப் பிந்திய விளைவுகள் அமோகம். சேதிகள் புறாக்களாகப் பறந்தன. யுத்தத்திலும் சத்தமில்லாமல் உதவிற்று சத்தமிட்டு! நிகழ்வுகளில் ஒன்று: லண்டனில் தன் காதலியை கொன்று விட்டு தப்பி ஓடுகிறான் ரயிலில் ஒருவன். தந்தியில் அடையாளம் கொடுக்கப்பட்டு அவன் இறங்கும் போது தயாராக அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில்!
அடுத்த 30 வருடத்துக்குள் அமெரிக்கா நெடுகிலும் நீண்ட தந்திக் கம்பி, அட்லாண்டிக்கையும் நீந்திச் சென்றது ஐரோப்பாவுக்கு. முதல் டெலிக்ராமை விக்டோரியா ராணி தந்தியித்தார் அமெரிக்க அதிபர் Buchanan -க்கு.
ஆங்காங்கே போட்டிக் கம்பங்களை நாட்டிய கம்பெனிகளிடமிருந்து போராடிப் பெற வேண்டியதாயிற்று உரிமைகளை. கப்பலில் வந்த விஞ்ஞானியும்கூட சொந்தம் கொண்டாட, சக பயணிகளின் சாட்சியால் ஜெயித்தார். மில்லியன்களை சந்தித்தார். ஐரோப்பாவில் மட்டும் கிடைத்தது 400000 ஃப்ராங்குகள். (இவருக்குப் 18 வருட முன்பே வேறொருவர் கண்டுபிடித்துவிட்டார் தந்தியை என்றொரு 'வதந்தி'யும் உண்டு.)
சூபர் ஹிட் படம், A Beautiful Mind, அதில் Priceton University யில் வரவேற்று பேசும் புரஃபசர் ‘உங்களில் யார் மோர்ஸ் ஆகப் போகிறீர்கள்?’ என்பார்.
மரிப்பதற்குப் பத்து மாத முன் அவர் சிலையொன்றை நிறுவி, ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் கலந்துகொண்ட மோர்ஸ், உலக முழுதுக்கும் ஒரு தந்தியைக் கொடுத்தார்: ‘குட் பை!’.
><><><

Saturday, April 22, 2023

வாழ்வின் சோகம்... இலக்கிய வேகம்....


எந்த ஒரு மீட்டிங்கிலும் சரி, கூட்டத்தை நோக்கி, உங்களில் பள்ளிநாட்களில் ‘Jane Eyre’ படிக்காதவர்கள் விரல் உயர்த்துங்கள் என்று சொன்னால் விரல் உயர்த்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை புகழ் பெற்ற அந்த (துணைப்பாடக்) கதையை எழுதியவர்...

Charlotte Bronte... ஏப்ரல், 21. பிறந்த நாள்.
கதையில் ஜேன் படும் துன்பங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, அதனை உருவாக்கியவர் வாழ்க்கையில் பட்டது. சின்னவயதில் கொண்டு விடப்பட்ட பள்ளி விடுதியில் சார்லெட்டும் 4 சகோதரிகளும் சந்தித்த கஷ்டங்கள்! தங்களில் இருவரைப் பறிகொடுத்தே மீண்டார்கள்
சார்லட்டுக்கு 10 வயது இருக்கும்போது அப்பா சில படை வீரர் பொம்மைகளை வாங்கி வந்தார். சகோதரிகள் அந்த பொம்மைகளுக்கு பெயரும், குணமும், உலவிட ஓர் உலகமும் கொடுத்தார்கள். அந்தக் கற்பனை உலகுக்கு Angria என்று பெயரிடப்பட்டது. அவர்களை வைத்து கதையும் கவியும் புனைந்தார்கள்.
ஆம், வாழ்வின் சோகத்திலிருந்து இலக்கியம்தான் அவர்களை வெளியில் எடுத்து சென்றது. பெண்கள் பெயரில் எழுதினால் வரவேற்பில்லை (ஆம் அப்படி ஒரு காலம் இருந்தது!) என்பதால் ஆண் புனைபெயர்களில் அவர்கள் எழுதினார்கள். அவர்களே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இரண்டு பிரதிகள்தாம் விற்றது என்றாலும் சோர்ந்து போகவில்லை.
சார்லட் அனுப்பி வைத்த கவிகளைப் பார்த்து அவர் திறமையை ஒப்புக்கொண்ட கவிஞர் Robert Southey, ஆனாலும் இதற்கெல்லாம் ஏது பெண்களாகிய உங்களுக்கு நேரம்? வேண்டாமே, என்று பதில் எழுதியதையும் பொறுத்துக் கொண்டார்.
எழுதிய முதல் நாவல் 9 முறை திரும்பி வந்தது. அடுத்ததுதான் Jane Eyre. உடனடி ஹிட்! by Currer Bell என்று வெளியிட்ட பப்ளிஷருக்கு அடுத்த வருடம் தான் தெரிந்தது அது பெண் என்று. மற்றொரு சகோதரியின் நாவலுக்கும் மகத்தான வரவேற்பு. ஆம், ‘Wuthering Heights’ எழுதிய Emily Bronte தான் அவர்.
தந்தையின் உடல்நிலை, தம்பியின் கடன் என்று பல தடைகள், அவர் தனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள. தம்பியையும் இரு சகோதரிகளையும் ஒரே வருடத்தில் பறி கொடுத்தார். மூன்று முறை தனக்கு வந்த ப்ரப்போசல்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனவருக்கு இறுதியில் அந்த வாய்ப்பு கூடும்போது வயது 37 ஆகியிருந்தது. மாதங்களே நீடித்தது மண வாழ்க்கை. மறைந்தார் 38வது வயதிலேயே, தன் அம்மாவைப் போல.
Quotes இரண்டு...
‘பகைமையை வளர்க்கவோ மற்றவர் தவறுகளை பட்டியலிடவோ
நேரமில்லாத அளவுக்கு வாழ்க்கை எனக்கு மிகச் சிறியதாகத் தோன்றுகிறது.’
‘மனித இதயத்தில் ரகசியப் புதையல்கள் உண்டு. காப்பாற்றும் ரகசியங்களில். மூடி வைத்த மௌனத்தில். நினைவுகள், நம்பிக்கைகள், கனவுகள், சந்தோஷங்கள்... சொல்லிவிட்டால் அவற்றின் வசீகரம் நொறுங்கி விடும்!’

Thursday, April 20, 2023

அனேகமாக புத்திசாலி...


உங்களை ஒண்ணு கேட்கிறேன்…

ஒரு கூட்டத்தில் யாராச்சும் ரெண்டு பேரின் பிறந்த தினம் ஒன்றாக இருக்க வேண்டுமானால் அங்கே குறைந்தது எத்தனை பேர் இருக்கணும்? 367 பேராவது இருக்கணுமில்லியா? ஏன்னா வருஷத்துக்கு 365, (லீப்புக்கு 366) நாள் இருக்கிறதே? அதாவது அப்படி ஒரே பிறந்த தினம் இருவருக்கு வர 100% சான்ஸ் வேண்டுமானால் குறைஞ்சது 367 பேர் வேண்டும். சரி, இப்ப 50% சான்ஸ் இருக்க எத்தனை பேர் தேவைப்படும்னு நினைக்கறீங்க? 184… 183… நில்லுங்க.
வெறும் 23 பேர் போதும்னு சொல்லுகிறது அந்த தியரி. கேள்விப்பட்டிருக்கிறீர்களா அதை? Birthday Paradox!
என்ன விளக்கம்?
முதல் நபரை எடுத்துக் கொள்ளுங்க. அவர் தன் பிறந்த தினத்தை மற்ற 22 பேருடன் ஒப்பிடுவார். அடுத்தவர் மீதி 21 பேரிடம், அடுத்தவர் மீதி 20 என்று மொத்தம் 253 ஒப்பிடுதல்கள் நடக்கும் இல்லையா?
ஒரு நபரின் பி.தினம் மற்றவருடைய பி.தினமாக இல்லாதிருக்க 364/365 அதாவது 99.72 % சான்ஸ் இருக்கிறது. 253 ஒப்பிடுதல்களுக்கும் இதே சான்ஸ் என்பதால் 253 தடவைக்கு அதை வர்க்கப் படுத்தினால் மொத்தம் ஒன்றாயில்லாமலிருக்க 49.952% சான்ஸ் வருகிறது. அதாவது ஒன்றாயிருக்க 50% சான்ஸ் வருகிறது.
நம்புவதற்கு நெம்பவே ஆச்சரியமான இந்த நிகழ் தகவு (probability).. அதை முதலில் கண்டு சொன்னவர் Richard von Mises...
ஏப்ரல் 19... பிறந்த நாள்.
Probability தவிர கணிதம், மெக்கானிக்ஸ், ஹைட்ரோ டைனமிக்ஸ், ஜியோமிதி, கால்குலஸ், ஃபிலாசஃபி, ஏரோ டைனமிக்ஸ் என்று பல்துறையில் சாதித்திருக்கும் இந்த ஆச்சரியர் ஓர் ஆஸ்திரிய விஞ்ஞானி. (1883-1953)
>><<

பொன் மனம்...


மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கைகளைப் பூட்டி அறைகளில் அடைத்து வதைகளுடன் கூடிய வைத்தியம் பார்த்தது அவரை வதைத்தது. கதவுகளைத் திறந்து விட்டார். கலந்துபேசி ,அருகாமையில் ஒரு தோழமை கொடுத்து... என்று மனோ தத்துவத்தில் புதிய அத்தியாயங்களை எழுதினார்.

'Father of Modern Psychiatry' என்று அழைக்கப்பட்ட Phillipe Pinel... இன்று பிறந்த நாள்!
மன அழுத்தம், சமூகத் தாக்கம், ஏன் உடலளவிலான பாதிப்பு கூட மனதில் பிழைகளை பிறழ்வுகளை ஏற்படுத்தலாம் என்றிவர் சொன்னது நிறைய மாற்றங்களை உண்டாக்கியது. புரிந்து உணர்ந்து குணப்படுத்தும் வழிகளைப் புகுத்தினார். நம்ம டாக்டர் V S ராமச்சந்திரனின் பிரபல 'Phantoms in the Brain' அன்பர்கள் நினைவுக்கு வரலாம்..
படித்த மருத்துவப்படிப்பு பாரிஸில் அங்கீகரிக்கப்படாததால் பல வருடங்கள் எழுத்தாளராக கழிக்க நேர்ந்தது. மனநிலை பாதித்து தற்கொலை செய்துகொண்ட நண்பரின் மறைவு இவரை மனநல மருத்துவத்தில் இறங்க வைத்தது. இவர் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று தேறி, அங்கேயே வேலைக்கு சேர்ந்திருந்த புஸின் என்பவரிடமிருந்து தயங்காமல் நிறைய கற்றுக்கொள்ளும் அளவு ஆர்வம்!

><><><

Monday, April 3, 2023

ஜோவாக, ஜோராக...

 “Que Sera, Sera... Whatever will be, will be..”

வீட்டில் பையனுடன் சேர்ந்து பாடகியான அம்மா ஜோ தினம் பாடும் பாட்டு அது. ஒருமுறை அப்பா பெஞ்சமினுடன் அவர்கள் வெளிநாடு சென்றபோது பையன் கடத்தப்பட்டு விடுகிறான். முயன்று அவன் இருக்கும் இடத்தை ஊகித்தால், அது ஒரு தூதரகம். நேரே போய் சோதனையிட முடியாது. அங்கே நடக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைப்பை எப்படியோ வாங்குகிறார்கள். பார்ட்டியில் ஜோவைப் பாடச் சொல்லவே, அவள் அந்தப் பாடலைச் சத்தமாகப் பாட, கட்டிடத்தின் உள்ளே பையனுக்குக் காவலிருந்த பெண் பரிதாபப்பட்டு அனுமதிக்க, பையன் அடுத்த வரியை விசிலடிக்கிறான். பையனை மீட்க விரைகிறார்கள். ஹிட்ச்காக்கின் 'The Man Who Knew Too Much' படத்தில் வரும் காட்சி அது.

ஜோவாக, ஜோராக பாடி நடித்தவர் Doris Day!
இன்று பிறந்த நாள்.
ஆர்வம் பெரிதாய் இல்லாமல் அவர் பாடிய பாட்டு அத்தனை 'பெரும்' ஹிட்டாகும், ஆஸ்காரும் 'பெறும்' என டோரிஸ் டே எதிர்பார்க்கவேயில்லை. தமிழிலும் வந்துவிட்டது. மறந்திருக்க மாட்டீர்கள்:
"சின்னப் பெண்ணான போதிலே..
அன்னையிடம் நான் ஒரு நாளிலே..
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா...
அம்மா நீ சொல் என்றேன்..
வெண்ணிலா நிலா... என் கண்ணல்லவா கலா..." ('ஆரவல்லி' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்)
(இந்த ஃபேமிலி ஸாங்க் கன்செப்டை வைத்து ஆயிரம் படங்கள் வந்துட்டது அப்புறம் இங்கே என்பது வேறு விஷயம்.)
1940. டான்ஸ் பயின்று காம்பெடிஷனில் வென்று ஹாலிவுட்டுக்கு மூட்டை கட்டும்போது முட்டுக் கட்டையாக அந்த ஆக்ஸிடெண்ட். போன கார் ரயிலில் மோத, காலில் அடி. அப்புறம் இசை பயின்று பாடகி. ஸ்க்ரீன் டெஸ்டில் வென்று நடிகை. விரைவில் ஸ்டார்.
டாப் டென்னில் டென் டைம்ஸ் வந்தவர். (அதில் டாப் ஒன், நாலு முறை!) கிளார்க் கேபிளிலிருந்து ராக் ஹட்சன் வரை எல்லா பெரிய ஹீரோக்களுடனும் படங்கள்.
கடனை வைத்துவிட்டு இறந்து போன கணவர், டி.வி. சீரியல் ஒன்றுக்கும் இவரைக் கமிட் செய்துவிட்டிருந்தாராம். உடல் நிலையும் மன நிலையும் சரியில்லாத போதும் சமாளித்து அதைச் செய்ததில் சூபர்ஹிட் ஆனது அந்த 'The Doris Day Show.'
பொருத்தமாயிருக்காது என இவர் மறுத்த நாயகி ரோல் 'The Sound of Music'. பிராணிகளின் ஃப்ரண்ட். வாழ்க்கையின் பிற்பகுதியை அவற்றின் நலனுக்காக செலவழித்தார்.

Saturday, April 1, 2023

விதை? இவர் போட்டது!


இன்றைக்கு துப்பறியும் நாவலின் அபார வடிவம் அறிவீர்கள். ஆனா விதை? இவர் போட்டது! இவர் அமைத்த ட்ராக்கில்  இன்றுவரை க்ரைம் நாவல் ரயில் ஓடுகிறது. 

Edgar Wallace! இன்று பிறந்த நாள்.


அவரது உச்சப் புகழ்  காலத்தில் இங்கிலாந்தில் வாசிக்கப்பட்ட நாலு புத்தகத்தில் ஒன்று அவருடையது. மட்டுமா? மிக அதிகமாக (160) படமாக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒருத்தர்.  எழுதிய 170 நாவலுமே பெஸ்ட் ஸெல்லர். எழுதிக் குவித்தார். ரெண்டு செக்ரட்டரிக்கும் மூணு டிக்டேஷன் மெஷினுக்கும் ஒரே சமயத்தில் நாவல், நாடகம், கதை என்று நாளை நடத்திக் கொண்டிருப்பார். ‘One man writing machine’ அப்படீம்பாங்க. 72 மணி நேரத்தில் ஒரு நாவல் எழுதி விடுவார்.


1890 -களில் ஆப்பிரிக்காவிலிருந்து கட்டுரைகளை பிரிட்டனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது தவறுதலா வேறொரு பத்திரிகைக்கு சென்றுவிட்டது ஒரு கட்டுரை. அவங்களுக்கு பிடிச்சுப் போச்சு. அவங்க வாங்கி பிரசுரிக்க ஆரம்பிக்க, அந்த The Daily Mail இல் எடிட்டரானபோது சம்பளம் அப்போதே 4000 டாலர்!


கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்த்ததாலோ என்னவோ, உண்மைகளோடு ஒட்டி உறவாடியதால், தன் கதைகளில் பிளாட், ஃபார்முலா என்றில்லாமல் பல கோணங்கள், பல பாத்திரங்கள், பல மனப்பாங்குகள் என்று பிரமாதப் படுத்தியிருப்பார்.


சட்டத்தினால் தண்டிக்க முடியாத குற்றவாளிகளைக் கண்டறிந்து தாங்களே தண்டனை வழங்குவதற்கு ரகசிய சங்கம் அமைத்த  நாலு புள்ளிகளின் கதை தான் இவர் எழுதிய முதல் மிஸ்டரி நாவல் ‘The Four Just Men.’  கையோடு அதை தானே பப்ளிஷ் செய்ய விரும்பியவர்  கையை சுட்டுக் கொண்டார். விளம்பரத்துக்காக கொலைகாரனை கண்டுபிடிங்கள் போட்டி (அட்டையில்:  'சுவையான ஒரு கதையைப் படிப்பதோடு முடிவில் யார் கொலை செய்தது என்பதைக் கண்டு பிடித்து படிவத்தை நிரப்பி அனுப்புபவர்களுக்கு பரிசு 500 பவுண்ட்!') நடத்தியதில் பின்னும் நஷ்டம், ஒருவருக்குத்தான் பரிசு என்று அறிவிக்கத் தவறியதால்.




துணை நடிகை அம்மாவால் பாராமரிக்க முடியவில்லை.. ஆதரித்த தம்பதி தத்தெடுக்க அங்கே அக்கா க்ளாராவின் ஊக்குவிப்பில் வளர்ந்தவர். வேலைக்காக அலைந்தபோது… கப்பலில் சமையல் வேலை தெரியும் என்று ஏறியவர் தவறை உணர்ந்து அடுத்த கரையில் இறங்கி லண்டனுக்கு வழி நடந்த நாட்கள் முப்பது.


ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் கானன் டாயிலின் ‘The Hound of the Baskerville’  நாவலுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். மற்றொரு முக்கியப் படம் ‘King Kong’  தவிர நிறைய படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட் டாக்டரா’க இருந்திருக்கிறார்.


டி.வி.யில் ஓடிய  Edgar Wallace Mystery Series இல் வந்த படங்கள் 48. இன்னொரு பக்கம் Edgar Wallace Mystery Magazine  என்று ஒன்று மூன்று வருடங்கள் வெளிவந்தது.


ஒரு நண்பர் இந்த எழுத்தாளருக்கு போன் செய்தார். 'அவர் புது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்,' என்று பதில் கிடைத்தது.

'பரவாயில்லே, காத்திருக்கிறேன்!' என்றாராம் அந்த நண்பர்.


நிறைய சம்பாதித்தார். இன்னும் நிறைய செலவழித்தார். கடைசியில் விட்டுப் போனதென்னவோ கடன் தான். பொதுவாக வாழ்வின் பின் பிரபலமடையும் எழுத்தாளர்கள் அநேகம். ஆனால் இவரைப் பொறுத்தவரை வாழும் பொழுது பிரகாசித்த அளவு பின்னர் அவர் புகழ் பாடப் பெறவில்லை...  எழுதிக் குவித்தவரை எளிதாக மறந்து விட்டார்கள் பலர். 


பஞ்ச்:

பூட்டிய அறைக்குள் அந்த நபர் கொல்லப்பட்டு கிடக்கிறார் செயரில் உட்கார்ந்தபடியே. அறை வெளியே பூட்டி இருக்கிறது. அறைச் சாவியோ அவர் பாக்கெட்டில்.  எப்படி நடந்தது கொலை?  அவரது ஃபேமஸ் நாவல் ‘The Clue of the New Pin’ -இன் knot இது. 

அட்டகாசமாக அவிழ்த்திருப்பார் முடிச்சை.