Monday, August 13, 2012

உன் இடம்... அவன் இடம்...அன்புடன் ஒரு நிமிடம் - 14

உன் இடம்... அவன் இடம்...

“உலகத்தில் ரொம்ப மலிவாய்க் கிடைக்கிற விஷயம் எது தெரியுமா? கிஷோரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ராகவ்.

“ஆலோசனை தான் மாமா!” என்றான் அவன். “அதான் எங்கே போனாலும் மலிவாய், ஏன், இலவசமாய்க் கூட... கூடை கூடையாய்!”

அப்போது உள்ளே நுழைந்தான் விச்சு. அவரின் தம்பி மகன்.

“வாடா விச்சு, உன்னைத்தான் எதிர்பார்த்தேன், வரவேற்றார் ராகவ். “ஒரு முக்கியமான விஷயம் கேள்விப்பட்டேனே? அது...

“வாஸ்தவம்தான்!” தலையை ஆட்டினான், “நான் வேலையை விட்டிடலாம்னு இருக்கேன். சொந்தமா ஒரு பிஸினஸ் செய்ய உத்தேசம்.”

கேட்ட கிஷோர் முகத்தில் ஆச்சரியம் வழிந்தது. “என்ன விச்சு இத்தனை வருஷம் வேலை பார்த்து நல்ல செட்டிலாகின பிறகு இப்படி திடீர்னு?

“கொஞ்ச நாளாவே யோசனைதான். வேலை சலிச்சுப் போச்சு. கையில கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு. அதை வெச்சு எங்க வீட்டு முன்னாடியே ஒரு புக் ஷாப் தொடங்கி நடத்தலாமேன்னு நினைக்கிறேன்.”

கொஞ்சமும் தயங்காமல் கிஷோர் அவன் கையைப் பிடித்து குலுக்கினான். கோ அஹெட் விச்சு! நல்ல சென்டர் உங்க ஏரியா. பிய்ச்சுக்கும் வியாபாரம். அப்பப்ப உன் மனைவியும் வந்து கவனிச்சுக்கலாம் கடையை...” என்று ஆரம்பித்து அவன் திட்டத்தை ஆதரித்து ஒரு சின்ன லெக்சர் கொடுத்த பின்னரே ஓய்ந்தான்.

“தாங்க்ஸ், கிஷோர்... பெரியப்பா, நீங்க என்ன சொல்றீங்க?

“நான் சொல்றது இருக்கட்டும், இப்ப உன் திட்டத்துக்கு நம்ம கிஷோர் அவன் மனசில் உதித்த ஐடியாக்களை சொன்னான் இல்லையா, அதைப்பத்தி நீ என்ன நினைக்கிறே? Will they be of use to you?

Of course, they will be. என்று புன்னகைத்தான். அவன் மனசில் இருக்கிறதை அப்படியே சொல்லிட்டான், இது மாதிரி மனமார்ந்த ஆலோசனைதான் எனக்கு தேவை.”

கிஷோர் பக்கம் திரும்பினார். நான் வெல் டன் சொல்லலாமா கிஷோர்? நீ அதை யோசித்து உன் மனசில் கிடைத்த பதிலை சொல்லிட்டேதானே?

“பின்னே? தலையை ஆட்டினான் அவனும்.

“இப்ப நான் சொல்றதை அப்படியே சிந்திச்சு உனக்குத் தோணற பதிலை சொல்லணும். இதே மாதிரி உன் வேலையில் சலிப்பு உண்டாகி ஒரு பிஸினஸ் பண்ணலாம்னு மனசில் விருப்பம் எழுந்தால் நீ எப்படி யோசித்து என்ன முடிவு எடுப்பே?

“அதாவது அவன் இடத்தில் நான் இருந்தால்?” சரி என்று சிரித்தபடியே  யோசிக்க ஆரம்பித்தான்.

இரண்டாவது நிமிடமே அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. குழப்ப ரேகைகள்.

“நிச்சயமா நீ முதலில் சொன்னதை இப்ப சொல்ல மாட்டேன்னு தெரியுது.”

மீண்டும் புன்னகை உதட்டில் தவழ. “யெஸ். என்னதான் சலிப்பா இருந்தாலும் சுளையா மாதம் முப்பதாயிரம் போல வர்றதைப் போய், ஒரு குடும்பம் நடத்தற நாம  விடலாமான்னு ஒரு கேள்வி கிளம்புது.... பர்சேஸ்க்காக சென்னை, மும்பைன்னு அலையறப்போ நம்பிக்கையா ஸ்டோரை விட்டிட்டுப் போக இந்தக் காலத்தில் முடியுமாங்கிறது அடுத்த கேள்வி. அப்புறம்... நம்ம ஊரில கடன் கொடுத்தாத்தான் வியாபாரம் நடக்கும், கொடுத்துட்டு அப்புறம் அவங்க பின்னாடி அலைய முடியுமான்னு வேறொரு கேள்வி முளைக்குது ஆஹா, கொஞ்சம் அந்த இடத்தில் மானசீகமா அமர்ந்து கற்பனை செய்ய செய்ய சுவாரஸ்யமான புதிர் மாதிரி பதில் கிடைச்சுட்டே இருக்குது.”

“இது! இதுதான் நான் சொல்ல வந்தது. அந்த இடத்தில் நம்மை வைத்து பார்த்து சில நிமிடம் யோசித்துவிட்டு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தால்...”
 “they will certainly be of use. என்றான் விச்சு.
for both, என்று முடித்தான் கிஷோர், “அந்த மாதிரி யோசித்து பழக்கும்போது அத்தனைக்கத்தனை நாம் எடுக்கும் முடிவுகளும் நல்லா அமையுமில்லையா?

('அமுதம்' ஜூலை 2012 இதழ்)

<<<>>>