Sunday, January 26, 2014

நல்லதா நாலு வார்த்தை... 24


'மகிழ்வுடன் கற்பது
மறப்பதில்லை ஒருபோதும்.'
-Alfred Mercier
('What we learn with pleasure
we never forget.')
<>

  
'இசை கேட்கையில் எந்த
இடருக்கும்அஞ்சேன்.
எதிரி எவரும் காண்கிலேன்.
ஊறுபடா நிலையடைகிறேன்.
அந்தக் காலத்துக்கும் சரி,
இந்தக் காலத்துக்கும் சரி
சொந்தக்காரனாகிறேன்.'
- Thoreau
('When I hear music, I fear no danger.
I am invulnerable. I see no foe. I am related
to the earliest times and to the latest.')
<>

'நாலு துளியேனும்
நம் மேல் விழாமல்
நாம் மற்றவர் மீது
தெளிக்க முடியாத  பன்னீரே
மகிழ்ச்சி என்பது!'
 -Emerson
('Happiness is a perfume you cannot pour on
others without getting a few drops on yourself.')
<>
 
'செயலைப்போல் விரைவில்
கவலையைக் குறைப்பது இல்.'
 - Walter Anderson
('Nothing diminishes anxiety faster than action.')
<>


'இயற்கையைக் கூர்ந்து பார்,.
இன்னும் நன்றாய்ப் புரிந்துகொள்வாய்
எல்லாவற்றையும்!'
-Albert Einstein
('Look deep into nature and then you will
understand everything better.')
<>


'வெற்றியைப்போல்
வெற்றியடைவது
வேறொன்றிலை.'
- AlexanderDumas
('Nothing succeeds like success.')
<>


'களிப்புடன் அளிப்பவர் உண்டு, அந்தக்
களிப்பே அவர்களின் வெகுமதி.'
- Khalil Gibran
('There are those who give with joy,
and the joy is their reward.')
 
<<<>>>
(படம் - நன்றி: கூகிள் )

Wednesday, January 15, 2014

கண்டு கொள்ளாத அறிவு...


அன்புடன் ஒரு நிமிடம் - 52

"பாலைக் காய்ச்சி ஒரு வாரம் ஆச்சு, இன்னும் வந்து பார்க்கலை நீ!"   திட்டித் தீர்த்துவிட்டான் நண்பன். இதோ இன்றைக்கே என்று புறப்பட்டுவிட்டான் வினோத், மூன்றே மாதத்தில் புது வீட்டைக் கட்டி முடித்துவிட்ட தியாகு தம்பதியை மனதுக்குள் வியந்துகொண்டு.
கிளம்பும்போதே யமுனாவுடன் யுத்தம்.   இன்றைக்கும்!
ரெண்டு நாளைக்கு ஒரு தகராறு முளைத்துக் கொண்டே இருக்கும். 'இதை அங்கே வைக்காதீங்க!'... 'அதை என் ஏன் எனக்கு சொல்லலே?'... நாலு தடவை கேட்டும் வாங்கி வராத டிரஸ்....
என்ன நமக்கு மட்டும் இப்படி....?
சிந்தனையோடே பைக்கை ஓட்டிச் சென்றான். 
"இப்பதான் உன் வாட்சில் பத்து  மணி ஆச்சா?" கேட்டான் தியாகு பன்னிரண்டு மணிக்கு.
காத்திருந்த நண்பனைக் கண்டதும் மனதிலிருந்த ஆத்திரத்தை கொட்டினான்.
"என்ன பண்றதுடா, வழக்கம் போல வீட்டில தகராறு...." நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான், "எப்பவும் இப்படித்தான் நடக்கிறது. பழகிப் போச்சு. என்ன ஆச்சரியமாப் பார்க்கிறே? நீயெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறியோ?"
"சரி சரி, வீட்டை சுத்திப் பார்த்து சொல்லு எப்படி வந்திருக்குன்னு..." இழுத்துப் போனான்.
சும்மா சொல்லக் கூடாது. பார்க்கப் பார்க்க ஒவ்வொரு அம்சமும்  அருமை அருமை என்று கூவிற்று வீடு.
பின்பக்கம் வந்தபோது அந்த சிறிய தண்ணீர்த் தொட்டி. சற்றே பழைய பாணியில்  கொஞ்சமும் அந்த இடத்துக்குப் பொருத்தமில்லாமல்...
'இது எண்டா இங்கே? அழகாய் அமைச்சிருக்கிற சின்ன கார்டன் ஸ்பேசில் இடைஞ்சலாய்...?"
"இதுவா? ஏதோ  மீன் வளர்க்கப் போகிறாளாம் அவள். கஷ்டம், நல்லாயிருக்காதுன்னு சொன்னேன். கேட்கலே. ஒகே சொல்லிகிட்டேன் எனக்கு."
"உனக்கா?"
"ஆமா. என்னைப் பொறுத்த வரை இது நான் கண்டு கொள்ளாத அவளின் அறியாத்தனம்."
அதெப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? இவனுக்குக் கோபமே வராதா? சுத்த சோப்ளாங்கி. மனதில் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இவனால். 
"மேற்கொண்டு பேசினால் பெரிசா சண்டை வரும்னு  கண்டுக்காம விட்டிட்டியாக்கும்?"
"அதெப்படி, பேசணும்னு  நினைக்கவே இல்லியே?"
புரியவில்லை இவனுக்கு. அந்த அளவுக்கு பயப்படறானா? அந்த அளவுக்கு அடிக்கடி சண்டைகள் வருமாயிருக்கும். "ஏம்பா உங்களுக்குள்ளே தினம் ரெண்டு சண்டை வருமா?"
சிரித்தான். "மாசம் ஒண்ணு வந்தாலே அபூர்வம்."
"அதெப்படி அதெப்படி? நம்ப முடியலியே? என்னடா  அந்த டெக்னிக்? ஒற்றுமை ரகசியம்?"
ஒன்றும் பேசாமல் "வா, வந்து முன்கட்டைப் பாரு," என்று அழைத்துப் போனான்.
வீட்டின் இடது பக்க வெளியில் வந்தபோது...
அந்த ஊஞ்சலைப் பார்த்தான். அதை அவனால் கொஞ்சமும் சகிக்க முடியவில்லை. ஏறி ஆடுவதற்கு தோதாக ஏரியா கொஞ்சமும் இல்லாமல்...  பலகையும் ரொம்பவே ஒல்லியாக... இதுவும் அவள் விருப்பம் போல. இவன் வாயையே திறந்திருக்க மாட்டான்.
அந்த நிமிடம் செல் ஒலித்தது. ஆபீசில் இருந்து அவசர அழைப்பு. "டேய்  என் ஹெல்மெட்டை உள்ளே மேஜை மேல வெச்சேன், எடு.  இதோ ஆபீசில் என்னன்னு கேட்டிட்டு வந்திடறேன்!"
வாசலுக்கு வந்து பைக்கை உதைத்தான்.
ஹெல்மெட்டை நீட்டிய தியாகுவிடம் சும்மாவேனும் கேட்டான். "ஆமா, அதென்னடா அந்த ஊஞ்சல், மகா  கேவலமாய்?" பதிலைக் கேட்க ஆர்வமில்லாத குரலில்.
இவன் கியரைப் போட அவன் சொன்னான்  
"அதுவா? அது அவள் கண்டு கொள்ளாத என்னோட அறியாத்தனம்!"
சட்டென்று  பைக் விரைய, பட்டென்று பிடிபட்டது அந்த ஒற்றுமை ரகசியம்! 

('அமுதம்' செப்டம்பர் 2013 இதழில் வெளியானது.)
<<>>
(படம் - நன்றி: கூகிள்)