Friday, September 28, 2018

ஒன்றமுடியாத ஒன்றிரண்டு... (கவிதைகள்)



ஒன்றமுடியாத ஒன்றிரண்டு...

குடி தண்ணீர் பிடிக்கிற வரிசையில்
நாலாவதாய் நின்ற அக்காவுக்கும்
எட்டாவதாய் நின்ற மாமிக்குமிடையே
ஒன்றரை மணி நேரமாய் ஓயாத
குழாயடிச் சண்டையைப்
பார்த்து அதிர்ந்து படிக்கத் திரும்பிய
சின்னப் பையன் சிவதாணுவுக்கு
இரண்டு ஹைட்ரஜனும் ஓர் ஆக்ஸிஜனும்
சேர்ந்ததுதான் தண்ணீர் என்பதைப்
புரிந்துகொள்ள சிரமமாயிருந்தது.

அவளும்…

பாத்திரத்தை எட்டிப்பார்த்தால்
கொஞ்சம்போல சோறு மிச்சமிருந்தது
பயல் இலையில மிச்சம் வெச்ச
பச்சடி ஒரு மொளறு
எடுத்துப்போட்டு சாப்ட்டதில
ஏழெட்டு மணி மாடாக வேலை செஞ்சதுக்கு
அமுதமாக...
அரை வயித்தை திருப்தியா நெரப்பி
அம்மா வந்து பாத்தபோது
அப்பாவுக்கோ கொழம்பு நல்லா வரல,
பயலுக்கோ தொவரம் உப்பு ஜாஸ்தி.

><><><




Monday, September 24, 2018

மழலை... (கவிதைகள்)


1
காலையில் மெத்தை விரிப்பை
உதற முடியவில்லை மடித்துவைக்க.
இரவில் சொன்ன கதைகள்  
குழந்தைகளிடம் பெற்ற
ஏராளம் ஆச்சரியக் குறிகள்
எங்கும் சிந்திக் கிடந்தமையால்.
><><

2
கதையில் வரும் ராஜகுமாரியாக
தன்னை நினைத்துக் கொள்ளும் குழந்தையிடம்
சொல்ல மனசே வரவில்லை
அவள் படும் கஷ்டங்களை.
><><

3
நான் அவளுடன் பேச
மழலை மொழியொன்றை
வைத்திருக்க,
அவள் பொம்மைகளுடன் பேச
பொம்மை மொழியொன்றை
வைத்திருக்கிறாள்.
><><

4
அத்தனை பொம்மைகளையும்
தாண்டி நீடிக்கிறது
குழந்தையின் அன்புவட்டம்.
><><

Saturday, September 22, 2018

அன்பு ஆறு! (கவிதைகள்)

அன்பு - 1
அதன் அகலத்துக்கு
எல்லையில்லை.

அன்பு - 2.
எப்போது எங்கே
எத்தனை பாயும்
எனத் தெரியாதது.

அன்பு - 3.
பெரு வெள்ளம்.
ஆபத்து இல்லை.

அன்பு - 4.
நில்லாமல் கவனியாமல்
புறப்படுவது.

அன்பு - 5.
விண்ணையும் இணைக்கும்
கண்ணுக்குத் தெரியாத
கயிறு.

அன்பு - 6.
குடைகளால் தடுக்க முடியாத
மழை.
><><

Tuesday, September 18, 2018

அவள்... (கவிதைகள்)

519
நீ என் முன் அமர்ந்திருக்கிறாய்
இந்தக் கணம் என் முன் விரிகிறது
இரு, இதை நான்
சேமித்து வைக்க வேண்டும்.

520
சொல்லத்தெரியாத வார்த்தைகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது
என் காதல்.

521
ஜன்னல் தெரியும் நிலவும்
எதிர்சீட்டில் நீயும்
என்னைக் குழப்புகின்றீர்கள்,
யார் எது என.

522
வெகு காலமாக வசிக்கிறோம் என்
வெளிப்படுத்தத் தெரியாத காதலும் உன்
அடக்கிக் கொள்ள முடியாத அன்பும்
சந்திக்கும் புள்ளியில்.

523
அத்தனை அழகுக்கு
என்னிடம் வார்த்தையில்லை
என்கிறது கவிதை.
(பி.கு.:அழகைக் குறைத்துக் கொள்,
அல்லது கவிதை கேட்காதே.)

524
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை,
சிறு சிறு ஊடல்களும்
சின்னச் சண்டைகளும்
இல்லாத நம் வாழ்க்கையை!

525
அசையாது நீ
அசைகின்ற என் மனம்

526
என்ன முயன்றும் என்னால் முடியாத,
எண்ண வேகத்துக்கு ஈடு கொடுக்க,
எப்போதும் முடிகிறது உன் அழகால் மட்டும்.

527
கற்பனை நின்றதும்
உன் மீதான
கனவுகள் தொடங்கின..

528
விழியாடும் அழகு.
அழகாடும் விழி.

><><

Wednesday, September 12, 2018

அவளுக்கொரு காரணம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 128

வந்ததும் வராததுமாக கேட்டார் ராகவ். "ஏம்மா கிஷோர் மீது உனக்கு ஏதாச்சும் மனத்தாங்கல்...?"

"ஏன் கேட்கறீங்க? அவர் ஏதாச்சும் சொன்னாரா? " யாழினியின் குரலில் யாதொரு ஆச்சரியமும் இல்லாததைக் கவனித்தார். டீ போட ஆரம்பித்தாள் அவருக்கு.

"ம்..என்னமோ அப்படியொரு எண்ணம் அவனுக்கு. நேரடியா விஷயத்துக்கு வர்றேன்.  போன மாசம் உனக்காக ஒரு வாஷிங் மெஷினும் கூடவே ஒரு டிரையரும் சர்ப்ரைஸா வாங்கிகொண்டு வந்து கொடுத்தானில்லையா?  நீ என்ன பண்ணினே? வாஷிங் மெஷினை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை உன்னோட அக்காவுக்குக் கொடுத்திட்டே, இப்ப வேண்டாம்னு.   அதில அவனுக்கு வருத்தம். உனக்குக் கஷ்டம் குறையணுமேன்னு அல்லவா அவன் ஆசையோடு... ?”

”அது வந்து..”

”அதை விடு, அதுக்கு முன்னாடி ஒரு முறை உனக்கு ஒரு டிஷ் வாஷர் வாங்கிகொண்டு வந்தப்ப  நீ என்ன பண்ணினே... அது இப்ப வேணாம்னு சொல்லி அவன் தங்கைக்கு ப்ரசண்ட் பண்ணிட்டே.”

”ஆமா, பண்ணினேன்...” டீயை எடுத்து மேஜையில் வைத்தாள்.

”இப்படி அவன் உன் வேலை சௌகரியத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்தாலும் நீ அதை முழுமையா பயன் படுத்திக்கலைன்னு அவனுக்கு ரொம்பவே கவலை. மனசில உனக்கு அவன் மேலான வருத்தம் ஏதும் இருக்குமோன்னு தோணறதில என்ன ஆச்சரியம்?”

‘டீயை முதல்ல சாப்பிடுங்க,” என்றவள் சிரித்தபடி விளக்கினாள். ”எனக்கு வேலை சிரமமே இருக்கக் கூடாதுன்னு அவர் பார்த்துப் பார்த்து வாங்கித் தர்றாருதான். ஆனா முழுக்க முழுக்க எனக்கு வேலையே இல்லாம போயிட்டா எப்படி...எனக்கும் ஏதாச்சும் உடற்பயிற்சி வேண்டாமா? இல்லேன்னா  நான் சோம்பேறியாகி விடுவேன்... இந்த சின்ன வயசில், என்னால முடிகிற காலத்தில் நான் என்னால் முடிந்த அளவுக்கு வேலைகளை செய்து என்னைப் பழக்கிக் கொண்டால்தானே வயதான காலத்தில் நல்லது? உங்களுக்கே தெரியும், இப்பல்லாம் முன்னே மாதிரி கூட்டுக் குடும்பம் சான்ஸ் இல்லையே... நாளைக்கு நாமேதான் நம்மைப் பார்த்துக்கணும்கிற நிலை வந்தால் உதவுமில்லையா? அவர் வாங்கித்தந்த எல்லாத்தையும் பயன்படுத்தாம இப்படி சுருக்கிகொண்டது எனக்கு கைக்கு தேவையான அளவு வேலை கொடுக்குது. அதனால்தான்...”

அவளுடைய காரணத்தைக் கேட்டதும் அமைதியானார்.  ”நல்ல நோக்கம்தான். அப்ப அதை அவனிடமே சொல்லியிருக்கலாமே?”

”அவருக்கு என் கஷ்டம்தான் பிரதானம். இந்தக் கோணத்தில் அவரால பார்க்கமுடியாது. சம்மதிக்க மாட்டார். அதான் காரணம்லாம் சொல்லிட்டிருக்கலை. எப்படியும் உங்ககிட்டே  சொல்லுவார், கேட்பீங்க, சொல்லலாம், நீங்க அவருக்கு பக்குவமா எடுத்து சொல்வீங்கன்னு...நீங்க சொன்னால் சரின்னு சொல்லிடுவார்னு இருந்தேன்.”

”அவன் கொடுத்த வேலையை செய்ய வந்தால் நீ அதே வேலையைத் திருப்பிக் கொடுத்திட்டியே...” சிரித்தபடி சொன்னார்.
><><
('அமுதம்' செப். 2015 இதழில் வெளியானது)

Monday, September 10, 2018

அவள் - கவிதைகள்

509
நானும் என் கவிதைகளும்
இந்த இரவு முழுதும்
விழித்துக்கொண்டு.

510
அதரங்களின் அழகை
அதிகரிக்கும் கண்களா,
கண்களின் அழகை
அதிகரிக்கும் அதரங்களா?

511
கொண்டுவர முடியவில்லை,
நீ வார்க்கும் தோசையின்
விரியும் ஓசையை
என் கவிதையில்.

512
நாம் சந்தித்தபோதிருந்த
குளம் வற்றிவிட்டது..
மனம் இன்னும் நிரம்பியே.

513
உன் கண்ணின் ஒளியில்
என் முன்னே வழி.


514
குறுஞ்சிரிப்பே அதரங்களில்!
மீதியை கண்களே செய்துவிடுவதால்.

515
இன்னும் முடியவில்லை
சந்தித்த கணம்.

516
அழகான பூ எது
நதி எது, தெரியாது.
ஆனால் உலகிலேயே அழகான
புன்னகை உன்னுடையது.

517
நுணுக்கமாய் ஓர் மூளை அணு அசைய,
ஏதோ வயதில் மனதில் பதிந்த
எதுவோ ஓர் அழகுத் தடம்
இவள்தான் இவள்தான் என்று கூவ,
வேறு மறுத்த மனம்.

518
புன்னகையில் வளைந்து
மேலேறும் இதழ்க் கடையில்
உருவாகும் அதரப் படகு.

><><><

Thursday, September 6, 2018

காலம் சார்ந்தும்...(நிமிடக்கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 127

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் யமுனா. இது மூன்றாவது முறை. சொல்லிவிட வேண்டியதுதான்.

அப்போதுதான் அவன் நண்பன் விஸ்வா வந்துவிட்டுப் போயிருந்தான். வழ்க்கம்போல் உற்சாகமாக ஆரம்பித்தான் வினோத்.  

"நினச்சாலே ஆச்சரியமா இருக்கு. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சவங்க. இப்ப நான் சேல்ஸ் எக்ஸிகியூடிவா இருக்கேன். அவனைப் பாரு, ஒரு சாதாரண ஸ்டில் ஃபோட்டோகிராஃபரா... நிலையான சம்பளம் இல்லாம.. வர்ற ஆர்டர்களை நம்பிக் கொண்டு... எங்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணினா என் லெவலுக்கு அவன் ஐம்பது பர்சண்ட்தான் வந்திருக்கான்.”

 ”மெதுவா மெதுவா.. அவர் பைக் இன்னும் வீட்டைவிட்டுப் போகலே.. சரி, நல்லா யோசிச்சுப் பார்த்துத்தான் சொல்றீங்களா?”

“ஆமா நீயே சொல்லு. இப்ப அவனோட மாத வருமானம் சராசரியாப் பார்த்தா பதினையாயிரம் வருது. அப்பா அம்மாவோட ஆறு பேர் கொண்ட குடும்பம்.  நாம மூணே பேருக்கு என் வருமானம் இருபதாயிரம்.”

புன்னகையுடன் சொன்னாள்,  ”இப்ப நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்க ரெண்டு பேரோட வெற்றியையோ வாழ்க்கையையோ ஒப்பிட்டுப் பார்க்கிறதுன்னா நிச்சயமா அது இப்படியில்லே. கம்பேர் செய்வதானால் உங்க ரெண்டு பேரையுமே உங்க வயசையொட்டிய ஒரு ஐடியல் பர்ஸனோடு அல்லவா பண்ணிப் பார்க்கவேண்டும்? உங்க வயசில் ஒரு சராசரி நபர் எந்த உயரத்துக்குப் போக முடியும், எத்தனை சாதிக்க முடியும் வாழ்க்கையில் அப்படீன்னு ஒரு அளவுகோலை வெச்சு அந்த அளவுக்கு நீங்க மேலேவா, சமாமாகவா அல்லது கீழேவா எங்கே வந்திருக்கிறீங்கன்னு பார்க்கணும். அடுத்தது, அப்படி பார்த்தால்  நீங்க ரெண்டு பேருமே அந்த லெவலுக்குக் கீழேதான் வருவீங்கன்னு நான் நினைக்கிறேன்.”

யோசித்தான்.  ”உண்மைதான். முப்பத்தஞ்சு வயசில் ஒரு சராசரி மனிதன் இன்னும் மேலே போக முடியும்..ஆனாலும் அதில நான் அவனை விட ரொம்பவே முன்னாடி இருக்கேன். பரவாயில்லே.”

சிரித்தாள். ”ரெண்டு பேருமே பின் தங்கி இருக்கீங்க. அதிலே என்ன முன்பின் ஆறுதல்?” என்றாள், ”அதுவும் தவறு. உங்க அப்பா வசதியான பிசினஸ்மேன். நல்ல சாப்பாடு, ட்யூஷன்னு உங்க வளர்ப்பே வேறே. அவரோ ஒரு அட்டெண்டரோட மகன். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதா சொல்லியிருக்கீங்க. அந்த சூழ்நிலையில அவர் இத்தனை முன்னேறினதே பெரிய விஷயம். உங்க சூழ்நிலைக்கும் வளர்ப்புக்கும் நீங்க இன்னும் நிறைய படிச்சிருக்கணும். இன்னொண்ணு, அவர் குடும்பம் பெரிசு. பொறுப்பு ஜாஸ்தி. கிடைக்கிற. நேரம் கம்மி. உங்களுக்கோ ரெண்டே பேர் குடும்பம். கிடைக்கிற டைமுக்கு நல்லா ஓடியாடி உழைச்சு கிடுகிடுன்னு இன்னேரம் ஒரு ஏரியா மானேஜரா ஆகியிருக்கணும்.” 

”அதுவும் சரிதான்.”

”இன்னும் ஒரு விஷயம். இப்ப கூட அவர் கையில் வைத்திருப்பது ஒரு கலை. ஃபோட்டோகிராபி. அதில் திறமைசாலி வேறே. ஒரு வேளை நாலைஞ்சு வருஷத்தில் அவர் பெரிய ஆளாகிவிடலாம். மாதம் அம்பதாயிரம் அறுபதுன்னு வரலாம். அந்த ஸ்கோப் உங்களுக்கு இல்லே. அதனால உங்க கம்பாரிஸன் காலத்துக்கும் கட்டுப்பட்டதுதான்.” 

”உண்மை,” என்றான் கர்வம் அகன்றவனாக.

><><><
('அமுதம்' அக். 2015 இதழில் வெளியானது)

Tuesday, September 4, 2018

நல்லதா நாலு வார்த்தை...91

'முடிந்துவிட்டதே என்று வருந்தாதீர்,
நடந்ததே என்று மகிழுங்கள்.'
- Dr. Seuss
('Don't cry because it's over,
smile because it happened.')
><><

'இன்னும் வசீகரமாக்குகிறாய் 
வாழ்க்கையை
உன் புன்னகையினால்!"
-Thich Nhat Hanh
('Because of your smile 
you make life more beautiful.')


'இரு பெரும் நாட்களுண்டு
எவரது வாழ்விலும் -
ஒன்று நாம் பிறந்த நாள்
மற்றொன்று ஏன் பிறந்தோம்
என்று கண்டுபிடித்த நாள்.'
- William Barclay
('There are two great days in a person's
life - the day we are born and the day
we discover why.')
><><


'நான் மட்டுமே மாற்ற முடியும் என் வாழ்க்கையை.
வேறு யாராலும் அதை செய்ய முடியாது எனக்காக.'
- Carol Burnett
('Only I can change my life. No one can do it for me.')
><><


'அன்பால் ஈர்க்கப்பட்டு
அறிவால் வழி நடத்தப்படுவதே
ஆகச் சிறந்த வாழ்க்கை.'
- Bertrand Russel
('The good life is one inspired
by love and guided by knowledge.')
><><


'கனிவு எப்போதுமே ஒரு
நல்ல கதையை உருவாக்குவதில்லை,
ஆனால் அது ஒரு
நல்ல வாழ்க்கையை உருவாக்குகிறது.'
- Anne Hathway
('Mellow doesn't always make for a
good story but it makes for a good life.')
><><


'ஆன்மாவை இழந்து உலகை அடையாதே.
வெள்ளியையும் தங்கத்தையும் விட  
விவேகம் மேலானது.'
- Bob Marley
('Don't gain the world and lose your soul,
wisdom is better than silver or gold.')
><><


'ஆன்மாவிலிருந்து  
தினசரி வாழ்க்கையின்
அழுக்கைத் துடைப்பது இசை.'
- Berthold Auerbach
('Music washes away from the soul
the dust of everyday life.')
><><


'தைரியம் இல்லாதவருக்கு
அதை நியாயப்படுத்த ஒரு
தத்துவம் கிடைத்துவிடுகிறது.'
- Albert Camus
('Those who lack the courage will
always find a philosophy to justify it.')
><><


'முதற் காற்று வீசும்போது
போதுமளவு ஓடுவதில்லை பெரும்பாலோர்,
இரண்டாவது ஒன்று உண்டென்று
கண்டுகொள்கிற அளவுக்கு!'
- William James
('Most people never run far enough on
their first wind to find out they've got s second.')
><><