Sunday, May 30, 2010

கவிதை(கவலை) நேரம்


ரு நெடு நாள் சிநேகிதி போல
அந்த விற்பனைப் பெண் என்னிடம்
நிறையப் பேசினாள்.
என் நிறுத்தத்தில்
காலியிருக்கைகளுடன் பஸ்
உடனே வந்து நின்றது.
விலை அதிகமெனினும்
படிக்க விரும்பிய புத்தகம்
நண்பரிடம் படிக்கக் கிடைத்தது.
டி.வியில் அந்த புதுப்படம்
பார்த்து முடிக்கும் வரை
யாரும் கதவைத் தட்டவில்லை.
என்றாலும் ஈதொன்றும்
அன்றிரவு நான் அமர்ந்து
கவிதை எழுதுகையில்
நினைவுக்கு வரவில்லை.

Sunday, May 23, 2010

அப்பா ஒரு நாளும்...



('நம் உரத்த சிந்தனை' மாத இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை)


''என்னம்மா திடீர்னு குண்டைத் தூக்கிப் போடறே?'' ஆத்திரமாக அலைபேசியை முறைத்தான் விகாஸ்.

''இல்லேடா, ரொம்ப வேண்டியவராச்சேன்னு... ரெங்கசாமின்னு அவர் கூட படிச்சவராம். பக்கத்து டவுனில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. அவர் வாங்கின லோனுக்கு அப்பா ஜாமீன் கையெழுத்துப் போட்டிருக்காரு. செக் எழுதிக் கொடுத்திட்டாங்க. அந்த ஆள் பணத்தைக் கட்டலே. ஊரை விட்டே ஓடிட்டாரு. இப்ப ரெண்டு லட்சம் எடுத்து வைக்கணும். இல்லேன்னா அப்பாவை அரெஸ்ட் பண்ணிருவாங்க.''

விகாஸ் சுற்றிலும் பாத்தான். ஐ.டி. கம்பெனியின் ஏஸி ஹால். என்னதான் மெல்லப் பேசினாலும் தெளிவாய்க் கேட்கும் மற்றவர்களுக்கு. தன் கியூபிகளை விட்டு வெளியே வந்தான்.

''என்னம்மா இது, என்ன நினைச்சிருக்கீங்க? ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?'' இரைந்தான்.

''இல்லேப்பா, வேணுமின்னா செய்தாரு? அவரும் எதிர்பார்க்கலே இப்படி ஆகுமின்னு. நீ சப்போர்ட் பண்ணுவேங்கிற நம்பிக்கையில இருக்காரு.''

கோபம் தலைக்கேறிற்று. ''இதான்! இதான் நீங்க எனக்கு செய்யக்கூடாதது! அதை செஞ்சிட்டாரு அப்பா! நான் படிச்சது, வேலை பார்க்கிறது, முன்னேறினது எல்லாத்தையும் இது அர்த்தமில்லாம செஞ்சிட்டுதில்ல?... சரி சரி, பிரசினையை ஏற்படுத்தியாச்சு. இனி நான் இதை பாடித்தானே ஆகணும்? என் சேமிப்பு எல்லாத்தையும் பொறுக்கிட்டு வர்றேன்''

''சரிப்பா.''

''ம், உங்களால எனக்கு என்ன பிரயோசனம்? இத பாரும்மா, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கறது எல்லாம் பெரிசில்லே. அப்புறம் அதுக்கு உலை வெக்கிறது கொஞ்சமும் சரியில்லே. அவர்ட்ட சொல்லு. இதான் கடைசி.'' படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டான்.

று நாள். மனைவியின் திட்டுக்களை காதில் போட்டுக் கொண்டு, அவளிடம் கெஞ்சி செக்கில் ஜாயின்ட் கையெழுத்தை வாங்கிக் கொண்டு பாங்கில் பணம் எடுக்க வந்தபோது..

அலை பேசி துடித்தது. எடுத்தான். அப்பா.

''அந்த பிரசினையை நானே சமாளிச்சிக்கிறேண்டா. உன் உதவி தேவையில்லை.''

''அப்பா வந்து நான் என்ன சொன்னேன்னா...''

''அதான் எல்லாம் சொல்லிட்டியே. அம்மா சொன்னா.''

வைத்துவிட்டார்.

தொடர்ந்த ஞாயிற்றுக் கிழமை கிளம்பி ஊருக்கு வந்தான். நடந்தது பற்றி யாரும் பேசவில்லை. சாப்பாடு, குளியல் என்று வழக்கம் போல் நடந்தது. அம்மா மார்க்கெட்டுக்குப் போய் அவனுக்குப் பிடித்த வஞ்சிர மீன் வாங்கி வந்து பொரித்தாள்...

நேராக சுந்தரம் மாமா வீட்டுக்கு வந்தான். அப்பாவின் நெருங்கிய நண்பர். நடந்ததை எல்லாம் சொன்னான். பொறுமையாகக் கேட்டார்.

''நீ அவசரப்பட்டுட்டே!'' என்றார்.

''புரியலியே மாமா.''

''கொஞ்ச நாள் முந்தி நீ ஏதோ ஒய்வு நேரத்தில் சாப்ட்வேர் பிராஜெக்ட்ஸ் எடுத்து செய்யப்போறேன், அதுக்கு சில லட்சம் பணம் வேணும், நம்ம பூர்விக வீட்டை வித்திடலாமான்னு கேட்டியா?''

''ஆமா.'' ஞாபகம் வந்தது. அப்பாவும் சரிப்பா, பண்ணிடுவோம்னு பச்சைக் கொடி காட்டியிருந்தார்.

''என்கிட்டே வந்து அதை சொன்னான். விக்கிறதுக்கு ஆள் பார்க்க சொன்னான். அப்ப நான் கேட்டேன், ஏண்டா, உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறதே அந்த வீடு ஒண்ணு தானே, வேறே எதுவுமே நீங்க வெச்சுக்கலியே அப்படீன்னு. அதுக்கு அவன் சொன்னான், இல்லேப்பா, நாளைக்கு எனக்கோ என் காலத்துக்குப் பிறகு அவன் அம்மாவுக்கோ ஏதும் ஆச்சுன்னா விகாஸ் பார்த்துப்பான்னு நம்பிக்கை இருக்குன்னான். எதுக்கும் உன் நம்பிக்கை சரிதானான்னு ஒண்ணுக்கு நாலு தரம் யோசிச்சுப் பார்த்துக்கன்னு சொன்னேன்.''

''சரி மாமா இப்ப அதுக்கும்...''

''போன மாசம் அதை விலை பேசி அட்வான்சும் வாங்கிட்டான். ஸோ அவனுக்கிருந்த ஒரே சொத்தையும் உனக்குக் கொடுத்திட்டான். இது போன மாச நிலைமை.''

''அப்படியா?'' குழம்பினான்.

''இப்ப அவன் ஒரு பிரசினைன்னு உனக்கு போன் பண்ணினான். நீ அவசரப்பட்டு இப்படி பேசிட்டியே?''

''பின்னே என்ன மாமா, படிக்க வெச்சிட்டு, முன்னேறி வந்தப்புறம் இப்படி நம்ம நல்ல நிலைக்கு உலை வெச்சா...''

''இத பாரு, உன்னை படிக்க வெச்சது, ஆளாக்கினது எல்லாம் அவன் சக்திக்கு ரொம்ப மேலே! கல்யாணமான புதுசில் அவனுக்கு அட்டெண்டர் வேலைதான். ஆனா உன்னை பிரைவேட் ஸ்கூலில் சேர்த்தது, தினம் சைக்கிளில் கொண்டு போய் விட்டது, சின்னக் காய்ச்சல்னாலும் ஸ்பெஷலிஸ்டிடம் காட்டினது இப்படி எத்தனையோ விஷயங்கள்...! அதெல்லாம் உன்கிட்ட எதுவும் எதிர்பார்த்து செய்ததுன்னா நினைக்கிறே? நீ நாளைக்கு கஷ்டப்படக்கூடாது, உன் மனைவி குழந்தைகளோட சந்தோஷமா வாழணும்னு தானே? ரிடையரான பிறகும் உன்னோடு வந்து உட்காராமல் இங்கேயே அவங்க பாட்டைப் பார்த்துட்டு இருக்கிறதை நினைச்சுப்பாரு. ஒரு நாளும் அவன் உனக்கொரு பிரசினையை மனமறிஞ்சு செய்ய மாட்டான். ''

''அப்படீன்னா இப்ப பண்ணினது எனக்குப் பிரசினை இல்லையா?''

''தன்னை மீறி ஒரு கஷ்டம், பிரசினை எல்லாம் யாருக்கும் எப்ப வேணாலும் வரலாம். அதான் அவன் உனக்கு சொல்ல விரும்பின மெசேஜ்ன்னு நினைக்கிறேன்.''

''என்ன மாமா சொல்றீங்க?''

''அவன் உனக்கு செய்ய வேண்டியதை செய்துட்டான் . சொல்ல வேண்டியதையும் சொல்லிட்டான். இப்ப அவன் மனசில நம்பிக்கையை விதைக்கிறதும் ஒதுங்கிக்கிறதும் நீ எடுக்க வேண்டிய முடிவு. பார்த்து நடந்துக்க.''

இவனுக்கு லேசாய்ப் புரிந்த மாதிரி இருந்தது. அவர் தொடர்ந்தார். ''புரிஞ்சிருக்கும் உனக்கு. உங்கப்பா எனக்குத் தெரியாம எந்தக் காரியமும் பண்னினதிலலே. யாருக்கோ அவன் ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கான்னு சொன்னியே யார் அது?''

''ரெங்கசாமின்னு அவரோட நண்பர்...''

சிரித்தார். ''...அவனுக்கு ரெங்கசாமின்னு எந்த நண்பரும் கிடையாது. போயிட்டு வா.''

விகாஸ் அதிர்ச்சியில் நின்றான். ''என்னை மன்னிச்சுடுப்பா!'' மனம் இறைஞ்சிற்று...

Thursday, May 20, 2010

யோகம்!


சுகுமாருக்கு சந்தோஷத்தால் மனம் நிறைந்திருந்தது. அவன் ஆசைப்பட்ட மாதிரியே அந்தப் பதவி உயர்வு கிடைத்துவிட்டது. கடும் போட்டிக்கிடையில் வெற்றி அவனுக்கு.

''இத்தனை இளம் வயதில் இந்தப் பதவியை அடையக் கொடுத்து வெச்சிருக்கணும் சார் நீங்க!'' என்று கை குலுக்கினார் ஒரு சக அதிகாரி. மச்சம், முகராசி என்று அவன் காதுபடவே பேசினவர்களையும் கடந்து செல்ல நேர்ந்தது.

பாராட்டு விழாவில் அவனோடு கலந்து கொண்ட மனைவி ராஷ்மி வீட்டுக்கு வந்ததும் கேட்டாள்: ''என்னங்க, நீங்க ரொம்ப லக்கின்னு எல்லாரும் சொல்றாங்களே, அதுக்கு நீங்க ஏதும் பதிலே சொல்லலியே?''

அமைதியாகச் சொன்னான். ''அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான், விடு. நாலு வருஷம் முந்தி நான் பிராஞ்ச் மானேஜரா எங்க எம்.டியைச் சந்திச்ச போது அந்த வருஷம் போதுமான பர்ஃபாமான்ஸ் காட்டலேன்னு என்னை வறுத்து எடுத்திட்டாரு அவர். சாதிக்காமல் மேலே வர முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு இன்னும் நல்லா உழைச்சேன். அதனால இது முழுக்க முழுக்க என் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதின்னு எனக்கு நல்லாவே தெரியும். இதைப் புரிஞ்சுக்கலேன்னா அவங்க அவங்களையே ஏமாத்திக்கிறாங்கன்னு அர்த்தம்! அதைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.''

(குமுதம் 19-05-10 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)


Wednesday, May 19, 2010

இரவின் பிரகாசம்


ரவுக்கு வலிக்குமென்று எல்லா
விளக்குகளையும் அணைத்துவிட்டேன்.
இதமாய் அது பூமி மேல் படர்கையில்
அதன் இருளுக்குப் பங்கம் வரக்கூடாது.
அது தடவி செல்லட்டும்
வெம்மையையும் வேர்வையையும்.
என் தோட்டத்து விருட்சங்களை
குளிர்விக்கட்டும்.
பதித்துச் செல்லட்டும் அது தன்
தண் பாதங்களை!
பதமாய் சூழும் இருள் என்
பார்வையை சற்று நிறுத்தி
சிந்தனையைத் தூண்டட்டும்!

Wednesday, May 12, 2010

துணை



'' பாருங்க ஊர்லே உலகத்திலே நடக்காததை நான் சொல்லிறலை. நீங்களா நாளைக்கு யோசிச்சு வரப்போற முடிவைத்தான் சொல்றேன். ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். வீட்டுக்கு வந்தா குழந்தையைப் பார்த்துக்கவே டயம் பத்தலே. இதுக்கிடையிலே உங்கம்மாவை எப்படிப் பார்த்துக்கறது?'' முடிவாகச் சொல்லிவிட்டாள் சாரதா.

''இல்லே சாரதா, அம்மாதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொல்றாளே,'' என்ற சேகரைப் பேசவே விடவில்லை. அதெல்லாம் எப்படி நைச்சியமாகப் பேசி கணவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு புகுந்த வீட்டில் காரியத்தைச் சாதிக்கணும்கிறது அவளுக்கு அத்துப்படி.

இந்த வெற்றியைத் தன் அம்மாவிடம் பறை சாற்றத் துடித்தாள்...

''சேகரா, நீயா என்னை முதியோர் இல்லத்திலே...'' உருக்குலைந்து போனாள் அவன் அம்மா தேவகி.

''உன் சவுகரியத்தையும் மனசிலே வெச்சுத்தாம்மா ஏற்பாடு பண்ணியிருக்கோம், பொறுத்துக்க... மேடம், நல்லா கவனிச்சுக்குங்க.''

''இங்கே எனக்குத் துணைக்கு யாருடா இருக்கா?''

''அதெல்லாம் பழகிப் போயிடும்மா... அடுத்த வாரமே வந்து பார்க்கிறோம்.'' புறப்பட்டார்கள்.

டுத்த வாரம் ஆபீசிலிருந்து மனைவியை பிக் அப் செய்தபோது...
''வா, அப்படியே விடுதியில் எங்கம்மாவைப் பார்த்துட்டு வந்துடலாம்!'' என்று அழைத்தான்.

பிரகாசமான முகத்தோடு வந்தாள் அம்மா. கலகலப்பாய் பேசினாள். ''அட, ஒரு வாரத்திலேயே மனசைத் தேற்றிக் கொண்டு விட்டாளா?'' விழித்தான் சேகர்.

''துணைக்கு ஆள் கிடைச்சிட்டுதுடா!''

''யாரும்மா?''

அழைத்து வந்து நிறுத்தியவளைப் பார்த்து அதிர்ந்தாள் சாரதா. ''அம்மா நீயா?''

''நானேதாண்டி! என்ன சொல்லியும் கேட்காம உன் மாமியாரை இங்கே கொண்டுவந்து விட்டதை அறிஞ்சேன். மனசு பொறுக்கலே எனக்கு. அதான் பேசாம நானும் உங்கண்ணன்கிட்ட சொல்லிட்டு இங்கேயே வந்து சேர்ந்திட்டேன் அவங்களுக்குத் துணையா!''


(குமுதம் 14-03-2005 இதழில் வெளிவந்த என் ஒரு பக்கக்கதை)

Sunday, May 9, 2010

வேற்று முகம்

ம்மா உன் முகம் நாங்கள்
அறியாததல்ல.
அன்பே அதன் வடிவம்.
எப்போதும் அதிலொரு
அனுசரணை.
'என்ன நடந்தால் என்ன,
என்னிடம் சொல்லு!'
ஆறுதல் அதன் பின்னே,
'நானிருக்கேன் கண்ணே.'
அப்பாவை எப்போதும்
சீரியசாகவே
நினைக்க முடிகிறது. ஆனால்
அம்மாவை அப்படியல்ல.
அதுதான் அம்மாவோ?
எத்தனை சத்தம் போட்டு
நீ திட்டினாலும்
அத்தனை சீரியசாய்
அது பட்டதேயில்லை.
அடி மனத்தை ஒரு நாளும்
தொட்டதேயில்லை.
ஆனால் நீ
அலுத்துக்கொண்டு சில சமயம்
எங்களிஷ்டத்துக்கு விட்டு
'எப்படியோ
போங்கள்!'
என்று சொல்லும்போது தான்
வேற்று முகம் காட்டுகிறாய்.
நாங்கள் அறியாத
ஏற்றுக்கொள்ள முடியாத
வேற்று முகம்.
வேண்டாம் அம்மா
அந்த வேற்று முகம்!

Monday, May 3, 2010

என்னங்க...

''என்னங்க, இன்னிக்கு நம்ம பையனையும் மருமகளையும் போய்ப் பார்த்துட்டு வரணும்னு சொல்லிட்டிருந்தீங்களே?'' நினைவூட்டினாள் மனைவி. ''ஆமாமா,'' என்று கிளம்பினார் சொக்கலிங்கம் மாம்பலத்துக்கு.

அங்கே சாப்பிட்டுவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.


''நேரமெல்லாம் எப்படிப் போகுதுப்பா?'' கேட்டான் விஷால்.

''அதான் நீ வாங்கிக் கொடுத்திருக்கியே ஒரு கம்ப்யூட்டர், நல்ல உபயோகமா இருக்கு. பொழுது பறக்குது!''

அப்போது விஷாலின் கம்ப்யூட்டரில் ஒரு பாப் அப் எழுந்து, ''டைம் டு விசிட் வருண்,'' என்று ரிகார்டட் வாய்ஸ் விட்டுவிட்டு ஒலித்தது. ''ஓ!'' என்றபடியே அதை 'கிளிக்'கி நிறுத்தினான்.


''பார்த்தீங்களாப்பா, நீங்களும் இப்படி உங்க கம்ப்யூட்டரில் முக்கியமான விஷயங்களை நினைவூட்ட ஏற்பாடு செய்துக்கலாம். கரெக்டா அதை அதை அப்பப்ப சொல்லிடும். எப்படி செட் பண்றதுன்னு சொல்லித் தரட்டுமா?''

''வேணாம்பா. என்னதான் கரெக்டா நினைவூட்டினாலும் அது ஒரு மெக்கானிகல் வாய்ஸ். உங்கம்மா, 'என்னங்க, சாயந்தரம் கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தீங்களே'ன்னு கனிவோட ஞாபகப்படுத்தற மாதிரி இருக்குமா?

''நல்லா சொல்லுங்க மாமா!'' என்றொரு குரல் பின்னாலிருந்து கேட்டது.

(குமுதம் 15-10-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Sunday, May 2, 2010

காட்சி 1, 2, 3...


வெளுத்த கிழக்கின் மேகங்கள்
லேசாய்ச் சிவந்து நீலப் பின்னணியில்
மஞ்சள் மாயம் காட்டி நிற்கிறது.

பனியின் கிடுக்கிப்பிடி உலுக்கிப் பின்
காலையின் புத்துணர்ச்சி பரவி
நெற்றியில் வேர்வை அரும்புகிறது.

உறவின் புறக்கணிப்பிலிருந்து மனம்
நேற்றைய நண்பர் சந்திப்புக்கு வந்து
படித்த வாழ்க்கைத் தத்துவத்தில் அமிழ்கிறது.

காட்சிகள் மாறிட
வாழ்க்கை நகருகிறது
எப்படியோ...