Thursday, January 26, 2017

நல்லதா நாலு வார்த்தை...78

'ஓய்வைத் தேடுவதில்
களைத்துப் போகிறார்கள்
மனிதர்கள்.'
-Lawrence Sterne
('Men tire themselves in pursuit of rest.')
<>

'சுய உரிமைக்கான
பெரும் விலையே
பொறுப்பேற்றல்.'
- Eli Schleifer
('Responsibility is the high price of self ownership.')
<>

வளரவும், வளர்ந்த பின்பும்
தன்னைக் குழந்தையாக
வைத்திருக்கவும் முடிகிறவரே
உண்மையில் மனிதர்.’ 
- Erich Kastner
(’A real person is one who can grow up and still remain a child.')
<>

'எதைப் பொருட்படுத்தாதிருப்பது
என்பதறியும் கலையே
விவேகமென்னும் கலை.'
- William James
('The art of being wise is the art of knowing what to overlook.')
<>

’ஏதோ ஓர் எதிர்கால இலக்குக்காக
மட்டுமே வாழ்வது சாரமற்றது.
 மலையின் மருங்குகளே
வாழ்வாதாரம் தருகிறது
அதன் சிகரம் அல்ல.’
-Robert M Pirsig
('To live for some future goal is shallow. it's the
sides of the mountain that sustains life, not the top.')
<>

'எங்கே போகிறோம் என்பதறியாதவர்
ஓர் நல்ல பயணி;
எங்கிருந்து வருகிறோம் என்பதறியாதவர்
ஓர்சிறந்த பயணி.'
- Lin Yutang
('A good traveller is one who does not know where he is going to,
and a perfect traveller does not know where he came from.')
<>

'மகிழ்ச்சி என்பது நாம் தேர்ந்தெடுக்கிற,
சமயங்களில் பிரயாசை தேவைப்படுகிற ஒன்று.'
-Aeschylus
('Happiness is a choice that requires effort at times.')
<>

'இருவித மனிதர் இவ்வுலகில்.
‘நான்’ மனிதர், ‘நாம்’ மனிதர்.
‘நாம்’ மனிதராக இருக்கவே
நான் எப்போதும் முயன்றிருக்கிறேன்.'
- Clint Eastwood
('There are two kinds of people in this world. 'I' people
and 'we' people. I've always tried to be a 'we' person.')
<>

’நிஜ ஆனந்தம் என்பது 
நிகழ்காலத்தை ரசிப்பது,
என்னவாகுமோவென்று
எதிர்காலத்தைப் பற்றியிராமல்.’
- Lucius Annaeus Seneca
('True happiness is to enjoy the present,
without anxious dependence upon the future.')
<>

'இளம் எழுத்தாளர்களுக்கு நான் 
ஆலோசனை சொல்வதானால்
எழுத்தைப் பற்றியோ தங்களைப் பற்றியோ
எழுத்தாளர்கள் உரைப்பதைக்
கேட்காதீர்கள் என்பேன்.'
-Lillian Hellman
('If I had to give young writers advice, I would say
don't listen to writers talking about writing or themselves.')
><><

Thursday, January 12, 2017

அது மட்டும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 112

வந்தவனைக் கேட்டார் ராகவ், ”எங்கே போயிட்டு வர்றே?”
”சினிமாவுக்குத்தான்.” பேரை சொன்னான் கிஷோர்.
"எப்படியிருந்திச்சு?"
"சுத்த போர். முதல்லேயிருந்தே... உட்கார முடியலே. அவஸ்தை."
"ஓஹோ?” 
”கதை நல்லாவே இல்லே.. எதும் புதுசா இருந்தால்தானே?” கொஞ்ச நேரம் அதை விமரிசித்தான்.
அத்தை டீ எடுத்து வந்தாள். 
”போன மாசம் ஏதோ உனக்கும் யாழினிக்கும் சண்டைன்னு காதில விழுந்ததே?”
”அதுவா...ஆமா.  அன்னிக்கு காலையில அவ பண்ணின டிபன் எனக்கு கொஞ்சம்கூட  பிடிக்கலே, சாப்பிடாம ஒரு விள்ளலிலேயே எழுந்து போயிட்டேன். அவ ஏதோ சொல்ல நானும் சொல்ல...சண்டையா வளர்ந்திட்டது.”
”ரெண்டு பேரும் ஒரு வாரமா பேசலைன்னு சொன்னாள் அவள்.”
”ஆமா. அவதான் அதை பெரிசாக்கிட்டா. டிபன் நல்லா பண்ணலேன்னா, சொல்லத்தான் செய்வாங்க.’
”அப்படீங்கறே?”
”ஆமா. ஏன், நைட்ல சப்பாத்தி  மாவைப் பிசைந்து வைப்பாள். சுட்டு எடுக்கிறது நான்தான். எத்தனையோ நாள், என்ன இப்படி வேகாமல் இருக்குன்னு கேட்டிருக்கா. நான் அதை கண்டுக்கறதில்லையே?”
”சரி, உன்னை ஒண்ணு கேக்கறேன். இப்ப நீ பார்த்துட்டு வந்த படம் உனக்கு சுத்தமா பிடிக்கலேன்னு சொன்னே. பார்த்து முடிச்சிட்டு வந்து தானே அதை சொல்றே. ஆனால் அவள் செய்த டிபனை நீ ஒரு விள்ளலுக்கு மேல் சாப்பிடாமலேயே எழுந்து வந்துட்டு அப்படி விமரிசிச்சா எப்படி?”
”என்னால சாப்பிட முடியலியே..”
”தாம்பரத்தில உன் பெரியம்மா வீட்டுக்கு ஒரு தடவை போயிருந்தப்ப அவங்க ராவாதோசைன்னு ஒண்ணு செஞ்சு போட்டாங்களே தொடவே முடியாதபடிக்கு? அது உனக்கு பிடிக்கவே இல்லேன்னு உன் மூஞ்சியே சொல்லிச்சு. அதை ஏன் முழுசும் சாப்பிட்டே? ஏன்னா அது அவங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னுதானே?” 
”அது...”
”அதான் நான் சொல்ற விஷயம். அங்கே உன்னால சாப்பிட முடியுது. அதே மாதிரி இதை நீ சாப்பிட்டு முடிச்சுட்டு அப்புறம் அவகிட்ட, கஷ்டப்பட்டு சாப்பிட்டேன், நல்லாயில்லே, எனக்கு பிடிக்கலே, நீ சிரமப்பட்டு பண்ணியிருக்கியேன்னு நான் சாப்பிட்டேன்னு சொல்லும்போது  அதை அவள் சரியா எடுத்துக்கொண்டு, அடுத்த முறை எப்படி மாற்றி செய்து இம்ப்ரூவ் செய்யலாம்னு யோசிப்பாள். ஏன் உன்கிட்டேயே அதுபத்தி டிஸ்கஸ் பண்ணுவா. இதபாரு,  டிபன் நல்லாயில்லே உனக்கு பிடிக்கலேன்னு நீ அவளிடம் வருத்தப்படறது, சத்தம் போடறது, கோபிச்சுக்கறதுல்லாம் பெரிசில்லை. எல்லா வீட்டிலேயும் வழக்கமா நடக்கிறதுதான். அவளுமே அப்படி உன் சப்பாத்தியை கிண்டல் செய்திருக்கா. ஆனா சாப்பிடாம எழுந்து போறது, அத்தனை கஷ்டப்பட்டு செய்தவங்க மனசை சங்கடப்படுத்தும் இல்லையா? அவள் கோபம் நியாயமானதில்லையா?”
”ஓ, அப்ப நான்தான்...”
”ஆமா, நீதான் அவளை சமாதானப் படுத்தணும். நல்ல சப்பாத்தியா சுட்டுக் கொடுத்தாவது.”
(”அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)

Tuesday, January 3, 2017

அவள் - கவிதைகள்

361.
நிறைவையும் ரசனையையும் நாம்
பங்கிட்டுக் கொண்டதில்
நிறையாமல் போனது நம் ரசனைகள்.

362.
எழிலும் நளினமும் 
இழைந்தால் 
நீ.

363
என்றோ நீ சொன்ன பார்க்கலாம்கள்..
இன்னும் காத்துக்கொண்டு நான்..

364.
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
எடுத்து வந்தேன் உன் இதயத்தை 
உனக்கே தெரியாமல்.

365.
இரவானால் போதும் 
உன்னிடம் பேச வந்து விடுகின்றன 
நட்சத்திரங்கள்.

366.
நீ பார்த்த நானை
பார்க்க முடியாது இன்று,
மாற்றிவிட்டாய் அழகாக.
நான் பார்த்த நீயை
பார்க்க முடியும் இன்றும்,
அப்படியே அழகாக.

367.
நீ போட்ட கோலத்தைத்
தாமும் போட முயலுகின்றன
நட்சத்திரங்கள்.

368.
எல்லா கதவுகளும் அடைத்திருந்தாலும் உன்
இதயக் கதவு
திறந்திருந்தால் போதும்.

369.
இரண்டு நான்கள்..
உன்னை சந்திப்பதற்கு முன்.
உ. ச. பி.

370.
வராமலேயே அழைத்து செல்கிறாய்
நீ போகுமிடத்துக்கெல்லாம்.

><><><