Thursday, January 12, 2017

அது மட்டும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 112

வந்தவனைக் கேட்டார் ராகவ், ”எங்கே போயிட்டு வர்றே?”
”சினிமாவுக்குத்தான்.” பேரை சொன்னான் கிஷோர்.
"எப்படியிருந்திச்சு?"
"சுத்த போர். முதல்லேயிருந்தே... உட்கார முடியலே. அவஸ்தை."
"ஓஹோ?” 
”கதை நல்லாவே இல்லே.. எதும் புதுசா இருந்தால்தானே?” கொஞ்ச நேரம் அதை விமரிசித்தான்.
அத்தை டீ எடுத்து வந்தாள். 
”போன மாசம் ஏதோ உனக்கும் யாழினிக்கும் சண்டைன்னு காதில விழுந்ததே?”
”அதுவா...ஆமா.  அன்னிக்கு காலையில அவ பண்ணின டிபன் எனக்கு கொஞ்சம்கூட  பிடிக்கலே, சாப்பிடாம ஒரு விள்ளலிலேயே எழுந்து போயிட்டேன். அவ ஏதோ சொல்ல நானும் சொல்ல...சண்டையா வளர்ந்திட்டது.”
”ரெண்டு பேரும் ஒரு வாரமா பேசலைன்னு சொன்னாள் அவள்.”
”ஆமா. அவதான் அதை பெரிசாக்கிட்டா. டிபன் நல்லா பண்ணலேன்னா, சொல்லத்தான் செய்வாங்க.’
”அப்படீங்கறே?”
”ஆமா. ஏன், நைட்ல சப்பாத்தி  மாவைப் பிசைந்து வைப்பாள். சுட்டு எடுக்கிறது நான்தான். எத்தனையோ நாள், என்ன இப்படி வேகாமல் இருக்குன்னு கேட்டிருக்கா. நான் அதை கண்டுக்கறதில்லையே?”
”சரி, உன்னை ஒண்ணு கேக்கறேன். இப்ப நீ பார்த்துட்டு வந்த படம் உனக்கு சுத்தமா பிடிக்கலேன்னு சொன்னே. பார்த்து முடிச்சிட்டு வந்து தானே அதை சொல்றே. ஆனால் அவள் செய்த டிபனை நீ ஒரு விள்ளலுக்கு மேல் சாப்பிடாமலேயே எழுந்து வந்துட்டு அப்படி விமரிசிச்சா எப்படி?”
”என்னால சாப்பிட முடியலியே..”
”தாம்பரத்தில உன் பெரியம்மா வீட்டுக்கு ஒரு தடவை போயிருந்தப்ப அவங்க ராவாதோசைன்னு ஒண்ணு செஞ்சு போட்டாங்களே தொடவே முடியாதபடிக்கு? அது உனக்கு பிடிக்கவே இல்லேன்னு உன் மூஞ்சியே சொல்லிச்சு. அதை ஏன் முழுசும் சாப்பிட்டே? ஏன்னா அது அவங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னுதானே?” 
”அது...”
”அதான் நான் சொல்ற விஷயம். அங்கே உன்னால சாப்பிட முடியுது. அதே மாதிரி இதை நீ சாப்பிட்டு முடிச்சுட்டு அப்புறம் அவகிட்ட, கஷ்டப்பட்டு சாப்பிட்டேன், நல்லாயில்லே, எனக்கு பிடிக்கலே, நீ சிரமப்பட்டு பண்ணியிருக்கியேன்னு நான் சாப்பிட்டேன்னு சொல்லும்போது  அதை அவள் சரியா எடுத்துக்கொண்டு, அடுத்த முறை எப்படி மாற்றி செய்து இம்ப்ரூவ் செய்யலாம்னு யோசிப்பாள். ஏன் உன்கிட்டேயே அதுபத்தி டிஸ்கஸ் பண்ணுவா. இதபாரு,  டிபன் நல்லாயில்லே உனக்கு பிடிக்கலேன்னு நீ அவளிடம் வருத்தப்படறது, சத்தம் போடறது, கோபிச்சுக்கறதுல்லாம் பெரிசில்லை. எல்லா வீட்டிலேயும் வழக்கமா நடக்கிறதுதான். அவளுமே அப்படி உன் சப்பாத்தியை கிண்டல் செய்திருக்கா. ஆனா சாப்பிடாம எழுந்து போறது, அத்தனை கஷ்டப்பட்டு செய்தவங்க மனசை சங்கடப்படுத்தும் இல்லையா? அவள் கோபம் நியாயமானதில்லையா?”
”ஓ, அப்ப நான்தான்...”
”ஆமா, நீதான் அவளை சமாதானப் படுத்தணும். நல்ல சப்பாத்தியா சுட்டுக் கொடுத்தாவது.”
(”அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான வழிகாட்டல்.....

நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடம்!!

Chellappa Yagyaswamy said...

பெண்டாட்டி கோபம் எப்போதுமே நியாயமானது - என்று எடுத்துக்கொண்டால் மட்டுமே ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்ற உலக மகா உண்மையை மீண்டும்பு ஒருமுறை புரிந்துகொண்டேன்!...
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!