Wednesday, October 28, 2015

அவள் - (கவிதைகள்)


190
ஆயிரம் கவிதை எழுதிவிட்டால்
அரை சதவிகிதம் உன்னைப்
அறிந்துகொண்டுவிட்டேன் என்று
அர்த்தம்.
><><

191.
ஒவ்வொரு வினாடியும்
உணரும் உன் மனதை
தீட்ட முயலுகிறேன் ஓர்
ஓவியமாக.
><><

192.
எட்டிப் பார்த்துவிட்டு உன்னை
என் கவிதை சொன்னது,
ஊஹூம், என்னால் முடியாது
சரியாக வர்ணிக்க.
><><

193.
எத்தனை தூரமிருந்தாலும்
எனக்கு நீ தெரிவது
க்ளோசப்பில்.
><><

194.
வரைய முயலுகிறேன்
உன் மனதை...
அத்தனை அழகை
கான்வாஸில் வடிக்க
என் தூரிகையால்
முடியவில்லை.
><><

195.
கண்டதும் உன்னை
கையும் ஓடலை
காலும் ஓடலை
கவிதையும் ஓடலை.
><><

196.
தேவையே இல்லை
உன்னோடான வாழ்க்கையில்
எடிட்டிங்.
><><><

Friday, October 23, 2015

அதைத்தானே...

அன்புடன் ஒரு நிமிடம் (நிமிடக் கதை - 89)

ஜனனி தன் நெடு நாள் தோழி சுமதியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள். ஸ்கூலிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். கல்யாணத்துக்குப் பிறகு அவள் வடக்கே மீரட், பாட்னா  என்று போய்விட்டாள். இப்போது டெல்லியில்.
“என்ன உன்னை போனில் பிடிக்க முடிகிறதே இல்லை?” செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் சுமதி.
“வீட்டில் வேலை ஜாஸ்தி…” இழுத்தாள்.
“எப்படி இல்லாம இருக்கும். நீ இருக்கிறது கூட்டுக் குடும்பம் இல்லையா? மாமனார் மாமியாரைப்  பார்க்கணும், அவ்வப்போது வந்து போகிற நாத்தனார்களைக் கவனிக்கணும். உன் புருஷன், பிள்ளைகளைக் கவனிக்கறதுக்கே நேரம் கிடைக்காது. இதிலே தனியா டயம் எடுத்து என்னோட பேச எங்கே இருக்கும் நேரம்?”
“அதெல்லாம் இல்லே… என் வேலைகளே ஏகத்துக்கு  ”
”அதான் அப்பவே சொன்னேன், எப்படியாவது தனிக் குடித்தனம் வந்துருன்னு. என்னைப் பார்த்தியா ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாம  நிம்மதியா இருக்கேன்? கொஞ்சமாவது கேட்டியா? அசடு!”
”அங்கே என்ன சத்தம்?”
”அதுவா,  காலிங் பெல்.. ஒரு நிமிஷம் அப்படியே இரு லைனில்…” பேசிவிட்டு வந்தாள் சுமதி. “அவர் ஆபீஸ் நண்பர். பக்கத்து வீடுதான். அவங்க தாத்தா பாட்டி ஊரிலேர்ந்து வந்திருக்காங்களாம். அவங்களைக் கொஞ்சம் நான் பார்த்துக்கணும். அதான் வந்து சொல்லிட்டுப் போறார். அதான்.”
“ஓஹோ?”
“ஆமா. அப்பப்ப இங்கே நடக்கிறதுதான்.  . இப்படி அவங்களுக்கு சில ஹெல்ப் நாங்க பண்ணுவதும் அவங்க எங்களுக்குப் பண்ணுவதும் உண்டு. அதை மாதிரி.. இப்ப நான் போய் கூட இருந்து  உதவிகள் செய்து கொடுத்து அவங்களை பார்த்துக்குவேன். என்ன அந்த வீடு கொஞ்சம் கசமுசன்னு இருக்கும். சரி போனை வெக்கட்டா.”
சிரித்தபடியே போனை வைத்த ஜனனி மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். “அடி என் ஆசைத் தோழி,  இதைத்தானே இங்கே நான் என் சொந்த மாமனாருக்கும் மாமியாருக்கும் செய்திட்டு சந்தோஷமா இருக்கேன் அதும் கசமுச இல்லாத  இந்த வீட்டுக்குள்ளேயே..  அப்புறம் என்னை ஏன் நீ அசடா நினைக்கிறே?”
(”அமுதம்’ செப். 2014 இதழில் வெளியானது)
><><><

Friday, October 16, 2015

நல்லதா நாலு வார்த்தை - 55.


'இறவாமையை நான்
எனது படைப்புக்கள் மூலமாக 
சாதிக்க விரும்பவில்லை 
நான் இறவாமையை சாதிக்க நினைப்பது 
இறக்காமலிருந்து.'
- Woody Allen
('I don't want to achieve immortality through my work,
I want to achieve immortality through not dying.')

<>

'பற்றிக்கொள்ள வாழ்வில்,
மெத்தச் சிறந்த விஷயம்,
ஒருவரை ஒருவரே.'
-Audrey Hepburn
('The best thing to hold on in life is each other.')
<>

'கடைசியில் கணக்கிடுவது
வாழ்ந்தது நாம் எத்தனை 
வருஷம் என்றல்ல;
வருஷங்களில் எத்தனை நாம் 
வாழ்ந்தது என்றே.'
- Abraham Lincoln
('In the end, it's not the years in
your life that count. It's the life in your years.')

<>

’மனதை எந்த அளவுக்கு
மகிழ்ச்சியாக இருக்கும்படி 
அமைத்துக் கொள்கிறார்களோ 
அந்த அளவுக்கு 
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் நிறையப்பேர்.’
- Abraham Lincoln
('Most folks are as happy as they make up their minds to be.')
<>

'உங்களை நீங்கள் ரசிக்க ரசிக்க 
மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறீர்கள்
அது உங்களை தனித்தன்மை 
வாய்ந்தவராக்குகிறது.'
- Walt Disney
('The more you like yourself,
the less you are like anyone else,
which makes you unique.')
<>

'எப்படி நாம் இருக்கிறோமோ 
அப்படியே இருந்துகொண்டிருந்தால்
எப்படி ஆக வேண்டுமோ 
அப்படி ஆக முடியாது.'
- Max de Pree
('We cannot become what we need to be by
remaining what we are.')
<>

'ஒரு வார வேலையை விட
களைப்பூட்டுவது 
ஒரு நாள் கவலை.'
- John Lubbock
('A day of worry is more exhausting
than a week of work.')

<><><><>

Friday, October 9, 2015

அவள் - (கவிதைகள்)

183

சற்றுத் தேடி வருகிறேன்
என் சகியை என்று
கிளம்பிப்போன நெஞ்சம்
கிடைக்கவேயில்லை
திரும்ப எனக்கு.


184
உன்னை அழைத்தால்
ஏன் திரும்பிப் பார்க்கின்றன
பூக்கள்?


185
தொட்டதும் திடுக்கிட்டுத்
திரும்புகிறேன்
யாருமில்லை.
தொட்டது இதயத்தை நீ.

186.
முன்னே படர்ந்திருக்கும்
வார்த்தைக் குவியலில்
உனக்கான வார்த்தைகளை
தேர்ந்தெடுக்கிறேன்
பூத்தொடுப்பது போல.

187.
கண்கள் அவளுடையவை.
காந்தம் கண்களுடையவை
என்கிறாள்.

188.
எத்தனை எளிதாய் இருக்கிறது
இதயத்தைக் கழற்றி
உன்னிடம் தந்துவிட்டு
கைவீசி நடப்பது!

189
பிரியத்தின் 
பிரியம்
நீ.

-)()()()(-
(படம் - நன்றி: கூகிள்)

Saturday, October 3, 2015

விவாதம் மட்டும்...

அன்புடன் ஒரு நிமிடம்.. (நிமிடக்கதை - 88)

வாசுவின் கம்பெனியில் அந்த மீட்டிங்.
மூன்று மணிக்கு கூடுவதாக ஏற்பாடு.
இரண்டு மணிக்கு தன் வலது கையான செந்திலை அழைத்தார் வாசு.
“எல்லா ஏற்பாடும் செய்திட்டேன்.சார்.”
“வேண்டாம் கேன்சல் செய்துரு.”
”சார்?”
”ஐந்து மணிக்கு நடக்கட்டும்.”
”எம். டி. வந்திட்டிருப்பாரே?”
”சொல்லிட்டேன். ஐந்துக்குத்தான் வருவார்.”
”ஏன் இந்த சேஞ்ச்னு…?”
”சொல்றேன். என்னென்ன விஷயம் எல்லாம் டிஸ்கஸ் பண்றோம்கிறதை நேத்திக்கே சொல்லியிருக்கோம் எல்லார் கிட்டேயும், இல்லையா?”
”ஆமா.”
”இப்ப நீ என்ன பண்றே… எல்லாரிடமும் ஆளுக்கொரு மெமோ பேட் கொடுக்கிறே. அவங்கவங்க இந்த இஷ்யூ பத்தி என்ன என்ன சஜஷன் சொல்ல நினைச்சாங்களோ அதை அப்படியே எழுதிக் கொடுத்திட சொல்லி கலெக்ட் பண்ணிக்கறே. நாலரைக்கு என்கிட்ட தந்திடறே. என்னோடதையும் எம். டி.யோடதையும் நான் கலெக்ட் பண்ணிக்குவேன். ஒவ்வொருத்தர் பாயிண்டையும் நான் படிப்பேன். டிஸ்கஷன் அங்கே நடக்கும். அது மட்டும்!”
”சார், நேரடியா அங்கேயே அவங்கவங்க கருத்தை அவங்களே சொல்றதுதானே நல்லா இருக்கும்?”
”நல்லாதான் இருக்கும் ஆனா அதில ஒரு சிக்கல் இருக்கு. போனதடவை என்ன நடந்தது? ஒவ்வொருத்தரா எழுந்து ஒரு சஜஷனை சொல்ல மத்தவங்க அதை பிரிச்சு மேய்ஞ்சு ஏகத்துக்கு சந்தேகங்களைக் கிளப்பி கடைசியில உருப்படியா ஒரு ஐடியாவும் தேறலே.  புரடக்‌ஷனிலும் சரி மார்கெட்டிங்லேயும் சரி, ஒரு மாசம் எந்த புது விஷயமும் நடக்கலே.”
”உண்மைதான். ஏன் சார் அப்படி நடக்குது?”
”எல்லாருக்கும் ஆளுக்கொரு ஈகோ இருக்கு. இன்னொருத்தர் சொல்றதை தலையாட்டுவதா அப்படீன்னு! அது தவிர மற்றவங்க ஐடியா ஏற்கப்பட்டுட்டா தனக்கு வெயிட் குறைஞ்சிடுமோங்கிற பதற்றத்தில் அளவுக்கு அதிகமாவே அதை ஆராய ஆரம்பிச்சிடறாங்க. தங்களோட திறமையை உபயோகிக்கிறதை விட்டிட்டு.”
”இப்ப மட்டும் அப்படி நடக்காதா?”
”நடக்காது. ஏன்னா நான் எந்த சஜஷன் யாருடையதுன்னு சொல்லப் போறதில்லே. ஒவ்வொண்ணா ஐடியாவை மட்டும்…”
”அப்பவும் தங்களோடதைத் தவிர மற்றதை காரசாரமா விமரிசிப்பாங்கதானே?”
”மாட்டாங்க. ஏன்னா அதுல எது என்னோட சஜஷன், எது எம் டி யோடதுன்னும் தெரியாது இல்லையா?”
”சார்!” வியந்து போனான் அவன். ”மீட்டிங்ல ஐடியா எதும் தேறுதோ இல்லையோ இந்த உங்க ஐடியா ஏஒன்!”
”அங்கேயும் நல்லாவே கொட்டப் போகுது.  நிறைய தேறப் போகுது பார் இந்தத் தடவை!” 
(”அமுதம்’ செப்.2014 இதழில் வெளியானது)

>>><<<
(படம்- நன்றி:கூகிள்)