Friday, October 23, 2015

அதைத்தானே...

அன்புடன் ஒரு நிமிடம் (நிமிடக் கதை - 89)

ஜனனி தன் நெடு நாள் தோழி சுமதியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள். ஸ்கூலிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். கல்யாணத்துக்குப் பிறகு அவள் வடக்கே மீரட், பாட்னா  என்று போய்விட்டாள். இப்போது டெல்லியில்.
“என்ன உன்னை போனில் பிடிக்க முடிகிறதே இல்லை?” செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் சுமதி.
“வீட்டில் வேலை ஜாஸ்தி…” இழுத்தாள்.
“எப்படி இல்லாம இருக்கும். நீ இருக்கிறது கூட்டுக் குடும்பம் இல்லையா? மாமனார் மாமியாரைப்  பார்க்கணும், அவ்வப்போது வந்து போகிற நாத்தனார்களைக் கவனிக்கணும். உன் புருஷன், பிள்ளைகளைக் கவனிக்கறதுக்கே நேரம் கிடைக்காது. இதிலே தனியா டயம் எடுத்து என்னோட பேச எங்கே இருக்கும் நேரம்?”
“அதெல்லாம் இல்லே… என் வேலைகளே ஏகத்துக்கு  ”
”அதான் அப்பவே சொன்னேன், எப்படியாவது தனிக் குடித்தனம் வந்துருன்னு. என்னைப் பார்த்தியா ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாம  நிம்மதியா இருக்கேன்? கொஞ்சமாவது கேட்டியா? அசடு!”
”அங்கே என்ன சத்தம்?”
”அதுவா,  காலிங் பெல்.. ஒரு நிமிஷம் அப்படியே இரு லைனில்…” பேசிவிட்டு வந்தாள் சுமதி. “அவர் ஆபீஸ் நண்பர். பக்கத்து வீடுதான். அவங்க தாத்தா பாட்டி ஊரிலேர்ந்து வந்திருக்காங்களாம். அவங்களைக் கொஞ்சம் நான் பார்த்துக்கணும். அதான் வந்து சொல்லிட்டுப் போறார். அதான்.”
“ஓஹோ?”
“ஆமா. அப்பப்ப இங்கே நடக்கிறதுதான்.  . இப்படி அவங்களுக்கு சில ஹெல்ப் நாங்க பண்ணுவதும் அவங்க எங்களுக்குப் பண்ணுவதும் உண்டு. அதை மாதிரி.. இப்ப நான் போய் கூட இருந்து  உதவிகள் செய்து கொடுத்து அவங்களை பார்த்துக்குவேன். என்ன அந்த வீடு கொஞ்சம் கசமுசன்னு இருக்கும். சரி போனை வெக்கட்டா.”
சிரித்தபடியே போனை வைத்த ஜனனி மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். “அடி என் ஆசைத் தோழி,  இதைத்தானே இங்கே நான் என் சொந்த மாமனாருக்கும் மாமியாருக்கும் செய்திட்டு சந்தோஷமா இருக்கேன் அதும் கசமுச இல்லாத  இந்த வீட்டுக்குள்ளேயே..  அப்புறம் என்னை ஏன் நீ அசடா நினைக்கிறே?”
(”அமுதம்’ செப். 2014 இதழில் வெளியானது)
><><><

3 comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!