Monday, March 30, 2020

முதல் திரையரசி..

The First Lady of the Indian Screen… தேவிகா ராணி! இன்று பிறந்தநாள்!
பேர் பெற்ற குடும்பம். அப்பாவோ The First Indian Surgeon General of Madras. அம்மா ரவீந்திரநாத் தாகூரின் மருமகள்.

1928. இங்கிலாந்துக்கு படிக்கச் சென்றார். அங்கே  சைலண்ட் படம் எடுத்த ஹிமாஷு ராய்க்கு காஸ்ட்யூம் ஆலோசகரானவர், சைலண்டாக அவரைக் காதலித்து மணந்துகொண்டார். ஜெர்மனியில் இருவரும் படமெடுக்கும் கலையை பயின்றுவிட்டு இங்கு வந்து, படமெடுக்க ஒரு ஃபைனான்சியரை அணுகினால், ஏற்கெனவே முதல் திரைப்படமான 'ஆலம் ஆரா'வுக்குக் கொடுத்து  கையைச் சுட்டுக் கொண்டவர், கையை விரித்துவிட்டார். ஆனால் அவர் மகன் ராஜ் நாராயண் கை கொடுத்தார். பாம்பே டாக்கீஸ் உருவானது, இந்தியத் திரையுலக வளர்ச்சி வித்திடப்பட்டது.

ராய் நாயகனாக நடிக்க ராணி நாயகி. படம் 'கர்மா'. இந்தியாவில் தயாரான முதல் ஆங்கிலப் படம். முதல் முத்தக் காட்சி.
நடித்த பிரபல படம் 'அச்சுத் கன்யா.' கேள்விப் பட்டிருப்பீங்க. ஜோடி நம்ம அசோக் குமார்! இசையமைத்தது ஒரு பெண். ஸரஸ்வதி தேவி.

10 வருடம் 15 படங்கள்! பிறகு 5 வருடம் பாம்பே டாக்கீஸை நடத்தியபோது
திலீப் குமாருக்கு முதல் படம் (Jwar Bhata), அசோக் குமாரின் சூபர்ஹிட் படம் (Kismat தமிழில் 'பிரேம பாசம்')...

முதல் தாதா சாஹிப் அவார்டை இந்த முதல் திரையரசிக்கு வழங்கியது 1970இல்.

Thursday, March 26, 2020

டைரக்டர்களின் டைரக்டர்...

Lawrence of Arabia, The Bridge on the River Kwai, Dr Zhivago... அற்புதமான படங்கள் இல்லையா மூன்றும்? ஆக்கிய கரம் ஒன்றே! 
David Lean. இன்று பிறந்த நாள்.
முதலிரண்டுக்கும் சிறந்த இயக்குநர் ஆஸ்கார். தவிர ஏழு படத்துக்கு ஆஸ்கார் நாமினேஷன். Peter O’Toole, Katherin Hepburn என்று இவர் டைரக்ட் செய்த பதினொரு நடிகர்களுக்கு ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்திருக்கிறது என்றால் எப்பேர்ப்பட்ட டைரக்டர்!

Clap boy ஆகத் தொடங்கியவர் எடிட்டராகி, டைரக்டராகி 3-வது படத்துக்கே கேன்ஸ் விழாவில் பரிசு கிடைத்தது. 1999-இல் British Film Institute நூறு பிரிட்டிஷ் படங்களை தேர்ந்தெடுத்ததில் முதல் 30 இல் 5 இவர் படம், அதிலும் முதல் 5 இல் 3.
மறக்க முடியாத அனுபவம் அது என்கிறார் Steven Spielberg, இவர் தன் Lawrence of Arabia படத்தைப் போட்டு தன்னுடைய கமெண்டரி கொடுத்தபோது. "என் எல்லா படத்துக்கும் அது உதவிற்று!" 

டைரக்டர்களின் டைரக்டர். Titanic வரைக்கும் இவர் இன்ஃப்ளூயன்ஸ் இருப்பதைப் பார்க்கலாம். இவரையே தன் மாடலாக எடுத்துக் கொண்டு நடித்தாராம் Stunt Man படத்தில் Peter O’Toole.

Quote?
'எந்தப் படத்திலும் நீங்க ரொம்ப ஞாபகம் வைத்திருப்பது படத்தைத்தான். வசனம் ஒரு போர்.'
'சினிமா என்பது நாடகப்படுத்திய யதார்த்தம். அதை தன் டெக்னிக்குகள் தெரியாமல் நிஜப் படுத்திக் காட்ட வேண்டியது டைரக்டரின் வேலை.'

Monday, March 23, 2020

நடந்த கதை...



‘இனி உன்னால் நேராக நடக்கவே முடியாது,’ என்றார் அந்தச் சிறுமியின் காலைக் கீறிய கண்ணாடியை அகற்றிய டாக்டர். ஆனால் அவளோ தினமும் விடாமல் நடந்ததோடு நடனப் பயிற்சியையும் தொடர்ந்தாள்.. ஆறே மாதத்தில் கால் சரியாகி நடனமும் ஓகே. கோரஸில் ஒருவராக ஆடிக் கொண்டிருந்தவரை ஃபில்ம் டெஸ்ட் எடுத்த M.G.M வாய்ப்பளிக்க, Joan Crawford என்ற ஸ்டார் உதயமானார். கிட்டத்தட்ட 60 வருஷம் காமிரா முன்... ஹாலிவுட்டின் 10 வது பெண் சாதனையாளராக American Film Insititute… 'Mildred Pierce' படத்துக்காக ஆஸ்கார்…
23 3 2020.. பிறந்தநாள்!
'தெரியாத விஷயம்' என்ற படத்தில் நடிக்கும்போதுதான் தெரிந்து கொண்டாராம், காமிரா முன் நிற்பதற்கும் காமிரா முன் நடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை!
எட்டு முறை Clark Cable உடன் ஜோடியாக... எட்டாவது முறை விசேஷம். கேபிளின் மனைவி, நடிகை Carole Lombard பிளேன் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட அவரது ரோலில் இவர் நடித்ததோடு அந்தச் சம்பளத்தை அப்படியே ஆக்ஸிடெண்டில் உதவிய ரெட் கிராஸுக்கு அளித்துவிட்டார்.
Quotes?
'காதல் ஒரு தீ. அது இதயத்துக்குக் கதகதப்பைத் தருகிறதா உங்கள் வீட்டையே எரிக்கப் போகிறதா என்பதை உங்களால் சொல்லவே முடியாது.' 
'திறமைக்கு அடுத்த படியாக ஒரு நடிகைக்கு முக்கியம் என்று நான் நினைப்பது அவளது ஹேர் டிரஸ்ஸர்.'

Friday, March 20, 2020

யோகமும் காதலும்...


'யோகமும் காதலும் துணிந்தவரையே நாடும்.'
'அப்பழுக்கற்ற ஆனந்தம் என்றொன்று கிடையாது;
சற்றே கவலை எப்போதும் இருக்கும் அதனூடே .'
'நேசிக்கப் பட வேண்டுமானால்
நேசிக்க முடிகிறவராக இரு.'
'முந்திச் செல்ல மற்ற குதிரைகள் இருக்கும்போது ஓடும் அளவுக்கு,
மற்ற நேரத்தில் ஓடுவதில்லை குதிரைகள்.' 
'பழக்கங்கள் குணாதிசயமாக மாறுகின்றன.'
'ஓய்வெடுங்கள். ஆறப்போட்ட நிலம்
அறுவடையை அள்ளிக் கொடுக்கிறது.'
2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னவர் Ovid. (கி மு 47 - கி பி. 18 )
ரோம் நகரத்துக் கவி. எழுத்துக்காக அரசு வேலையைத் துறந்தவர்.
உலக வரலாற்றையும் கிரேக்க இதிகாசங்களையும் இணைத்து இயற்றிய Metamorphoses என்ற 15 வால்யூம் நூல் ஷேக்ஸ்பியரையே ஈர்த்த காவியம்.

Thursday, March 19, 2020

ஆறாவது அறிவு...

ஆவிகளைக் காண்கிற கோல் என்ற சிறுவனுக்கு ஆலோசனை சொல்லும் மனோ நிபுணராக ப்ரூஸ் வில்லிஸ் (Bruce Willis) வருகிறார். அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று அவர் முயல்வதும் இன்னொரு பக்கம் தன் மனைவி தன்னை அடியோடு அலட்சியப் படுத்துவதை சகிப்பதுமாக உழலுகிறார். 
நிறைவேறாது போன ஏதோ ஒன்றுக்காக அலையும் ஆவிகளுக்கு அதை முடிக்க உதவலாமே என சிறுவனுக்கு ஒரு வழியமைத்துக் கொடுக்கிறார். உதாரணமாக, தன் சித்தி விஷம் தந்து தன்னைக் கொன்றுவிட்டதை தற்செயலாக விடியோ எடுத்திருந்த சிறுமி கைராவின் ஆவி, தன் தங்கைக்கும் அதே விஷ(ய)ம் நடந்துவிடக் கூடாதே என்று துடிக்கிறது. அந்த விடியோ டேப் அவளது தந்தைக்குக் கிடைக்கச் செய்கிறான் கோல். ஆவி சாந்தியடைகிறது.
பதிலுக்கு இவருக்கு உதவ நினைக்கிறான் சிறுவன். அவர் பேசும் போதெல்லாம் கேளாது செல்லும் மனைவியிடம் அவள் தூங்கும்போது சென்று அவளைத் தான் மிக மிக நேசிப்பதை சொல்லச் சொல்கிறான். சொல்கிறார் ப்ரூஸ். அவளும் தூக்கத்தில் பதில் சொல்கிறாள். இந்தக் கடைசிக் காட்சியில்தான் அந்த breath taking சஸ்பென்ஸ்! படம்: ‘The Sixth Sense.’
'புதிய பறவை'க்குப் பின் அந்த அளவு ஷாக் தரும் கதாநாயகன் இதில்தான்! சஸ்பென்ஸ் தெரிந்தபின் மறுபடி முதலிலிருந்து பாருங்கள். எல்லா காட்சிகளுமே ரசிக்கலாம் வேறொரு வடிவத்தில்.
பிரபல மனோஜ் நைட் ஷ்யாமளன் எழுதி இயக்கிய படம் அது. இருவருக்கும் அது ஒன்றே போதும்!
Bruce Willis.. இன்று பிறந்த நாள்! 
‘Die Hard’ அவரை உலக பாப்புலர் ஆக்கியது தெரிந்ததே. ஆக 2.5 பில்லியன் டாலர் வசூலித்திருக்கின்றன இவர் படங்கள், அப்புறம் டாப் டென்னில் இடம் பெறக் கேட்பானேன்?

அழகிய நடிகர்...

திடீரென்று முடியாமல் போன, கான்சர் நோயாளி அம்மாவை டாக்டரிடம் அழைத்துச் செல்ல தன் முதலாளி ரஹ்மானிடம் கார் கேட்கிறார் டிரைவர் சஷி கபூர். காரைத் திருப்பி விடவரும்போது ரஹ்மான் தன் அடியாளைக் கொலை செய்து விடுவதைப் பார்த்து விடுகிறார். "நீ எதையும் பார்க்கலே. உங்கம்மாவுக்கு கான்சர். ஆபரேஷன் பண்ணணும். உங்கிட்ட பணமில்லை. அதை நான் தர்றேன். அவ்வளவுதான்." என்கிறார் ரஹ்மான் அமைதியாக. அம்மாவுக்காக சம்மதிக்கிறான். கொலைக் குற்றம் விழுந்ததோ அப்பாவி ராஜ்குமார் மீது. அவருக்காக வாதாடும் சுனில்தத் கோர்ட்டில் சஷியைப் பின்னியெடுக்கிறார். "இந்த கீதை மேல சத்தியமா சொல்!" மனமுடைந்துபோய் சஷி கோர்ட்டில் கதறுகிறார் உண்மையை.
‘WAQT’ (1965) படத்தில் வரும் காட்சி. சஷி கபூரின் நடிப்பு உருக வைக்கும்.
Sashi Kapoor...மார்ச் 18. பிறந்த நாள்!
கபூர் சகோதரர்களில் இளையவர். 'Jab Jab Phool Khile', 'Hasina Maan Jayegi', 'Kabhi Kabhi', 'Deewar', 'Sharmilee'… அடுக்கிகொண்டே போகலாம் பிரபல படங்களை. ஆங்கிலப் படங்களிலும் நடித்தவர். ( The Householder, Shakespeare Wallah) தவிர, படத் தயாரிப்பாளரும்: '36 Chowrangee Lane', 'Junoon' 
எழுபதுகளில் highest paid நடிகர்களில் இரண்டாவது இவர்தானாம். Most Handsome Actor என்று அழைக்கப்பட்ட அவரது காதல் மனைவி Jennifer Kendal ஓர் ஆங்கில நடிகை.

Tuesday, March 17, 2020

கிக் ஸ்டார்ட்...


சர்ர்ர்ர்ர்... அடுத்த முறை  பைக்கை ஸ்டார்ட் பண்ணும்போது ஒரு மைக்ரோ செகண்ட் அவரை நினைவு கொள்ளுங்க. Gottlieb Daimler. ஏன்னா அவருதான்  'பைக்'கையே உலகில் 'ஸ்டார்ட்' பண்ணினவர்!
Gottlieb Daimler… இன்று பிறந்த்நாள்!


எந்த வாகனத்திலும் ஏற்றக்கூடிய சிறிய வேகமான எஞ்சின் தயாரிப்பதே அவர் லட்சியம். ஆங்காங்கே நீராவியில் ஓடிக் கொண்டிருந்தன நாலு சக்கர வாகனங்கள்.வேறு வழிகளை முயன்றார். உடன் வேலை பார்த்த Wilhelm Maybach உதவியுடன் தயாரித்தார் ஒரு 4 stroke internal combustion எஞ்சினை. ஒருவகை பெட்ரோலில் இயங்கக்கூடிய அதை முதலில் சைக்கிள் மாதிரி ஒன்றில் பொருத்த. உலகின் முதல் மோட்டார் சைக்கிள்!  அசப்பில் ஏதோ சித்திரவதை சாதனம் மாதிரி பயமுறுத்திய அதற்கு சவாரி கார் (Reitwagen) என்று பேர் இட்டனர். அதனால் அவர் பெற்ற பேர்: 'மோட்டார்சைக்கிளின் தந்தை'. 


முதல் 3 கி.மீ. ஓட்டிக் காட்டியதில் 12 கி.மீ. வேகம் எடுத்தது. மோ.சைக்கிளோடு நிறுத்தவில்லை. ஓடும் ஒவ்வொன்றிலும் அதைப் பொருத்திப் பார்த்தனர். படகு, ட்ராலி, ஏன், பறக்கும் பலூனிலும். 


பாரிஸில் (1894) நடந்த உலகளாவிய கார் ரேஸில் கலந்துகொண்ட 102 கார்களில் கடைசிவரை வந்த 15 காருமே இவரது டெய்ல்மர் எஞ்சின் பொருத்தியது என்றால் கேட்கணுமா என்ன? தொடர்ந்து கார் இண்டஸ்ட்ரியிலும் இறங்கி, தன் கார் (Mercedes) தடம் பதித்தார்.  


Interestingly, இவர் காரை ஓட்டுவதில் interest காட்டியதில்லை.


Monday, March 16, 2020

சாத்தியதைகள்..

'தன்னுடைய குறைகளை வெல்ல முடியாதவனே 
தன்னிடம் குறைகள் இல்லை என்று 
உலகத்துக்கு நிரூபிக்க விழைகிறான்.'
('Only a man who cannot conquer his deficiencies 
feels the need to convince the world that he has none.')

'எல்லையற்ற சாத்தியதைகள் உள்ள இவ்வுலகில்
சாத்தியதையே அற்றுப் போவதற்கான சாத்தியதையும் உண்டு.'
('In a world of unlimited possibilities 
there is always the possibility 
that there are no possibilities.')

'பேச முயற்சிக்காதபோதுதான் 
மனம் எதையும் நன்றாகத் தெரிவிக்கிறது'.
('The heart communes best when it does not try to speak.')


'நம்பிக்கை என்பது யதார்த்தத்தை எற்றுக் கொள்ளாமை.'
('Hope is the denial of reality.')

சொன்னவர் Margaret Weis.
பிரபல நாவலாசிரியை.(The Lost King, The Darksword Trilogy..)
இன்று பிறந்த நாள்!

Sunday, March 15, 2020

ஒளிக்கும் எடையுண்டு...




அந்த மாபெரும் தியரியை 1915 -இலேயே கண்டுபிடித்துவிட்டார் ஐன்ஸ்டீன், ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதற்கான ஆதாரம் வேணுமே? அதைக் 'காட்டி' அவரை ஸ்டார் ஆக்கியது 1919 -இல் வந்த சூரிய கிரகணம்தான்!
நிலையானது என்று நாம் நினைக்கும் Time Space என்ற ஃப்ரேமில், ஈர்ப்பு விசையானது மாற்றத்தை உண்டாக்கும், ஒளியின் பாதையை வளைக்கும் என்று தன் General Theory of Relativity -யை முன்வைத்தார் ஐன். 
ரொம்பச் சின்ன அளவிலான அதை நிரூபிக்கணுமானால் மாபெரும் பொருள் ஒன்றின் அருகே செல்லும் ஒளி வளைவதைக் காட்டணும். சூரியன் மாதிரி ஒன்று. ஆனால் சூரியன் ஒளிரும்போது ஒளியை அளப்பது எப்படி? 
பிரசினையைக் கையில் எடுத்துக் கொண்டார் Sir Arthur Eddington என்ற வானியலாளர். காத்திருந்தார் அடுத்த சூரிய கிரகணத்துக்காக. அது வந்தது 1919-இல். ஆளுக்கு சில பிளேட்டுகளை எடுத்துக் கொண்டு ஆப்பிரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் ஓடினர் அவரும் நண்பரும். இடி மின்னல், மேக மறைவு எல்லாம் தாண்டி அகப்பட்டது ரெண்டே படம். அதில் ஒன்றே போதுமாயிருந்தது. ஸன்னுக்குப் பின்னிருந்த ஸ்டார்கள் 1.75 arcseconds இடம் மாறித் தெரிந்தன, சூரியனின் ஈர்ப்புவிசை வளைத்த ஒளியால்!
உலக அளவில் ஒளி விழுந்தது ஐன்ஸ்டீன் மீது.
லண்டன் பத்திரிகையில் தலைப்பு செய்தி:
'எங்கே இருக்குமென்று கணிக்கப் பட்டதோ அங்கே இல்லை நட்சத்திரங்கள்! ஆனால் யாரும் கவலைப்பட வேண்டாம்!'
Eddington எழுதினார் தன் கவிதையில்:
'ஒரு விஷயம் நிச்சயம்: ஒளிக்கும் எடையுண்டு.
பாயும் ஒளிக்கதிர்கள் பகலவன் பக்கத்தில்
படர்வதில்லை நேராக.'
Albert Einstein... 
பிறந்த நாள்: March 14 !

Friday, March 13, 2020

குரலில் ஒரு ஸ்டைல்! ஸ்டைலில் ஒரு குரல்!


குரலில் ஒரு ஸ்டைல்! ஸ்டைலில் ஒரு குரல்!
பாடிய மொழிகளை அடுக்குவதைவிட எல்லா மொழிகளிலும் பாடியிருக்கிறார் என்று சொல்லிவிடலாம் சுருக்கமாக. 
SHREYA GOSHAL... March 12. பிறந்தநாள்!
தன் சரிகமப.. வை முதலில் பாடி அவார்ட் வாங்க்கியது ZEE TV -யின். 'சரிகமப' ரியலிடி ஷோவில்.
இனிய அந்தக் குரல் இயக்குநர் Sanjay Leela Bhansali யின் காதில் பட்டு 'தேவதாஸ்' படத்தில் சேர்க்கப்பட்டு.. அந்த 'Bhaire Piyaa… ’Dola Re..’ உதடு குவித்துப் பாடிய பாடல்கள் நேஷனல் அவார்ட், ஃபில்ம்ஃபேர் அவார்ட், ஃபில்ம்ஃபேர் ஆர்.டி. பர்மன் அவார்ட் என்று அவார்டுகளைக் குவித்தன.
ஆல்பம் (கார்த்திக்ராஜா) படத்தில் தன் செல்லக் குரலில் 'செல்லமே செல்லம்...' என்று வந்தார் தமிழில். அப்புறம் எதையென்று சொல்ல? ' உன்னைவிட......'(ஒன்னை விட..?) என்று மத்திய ஸ்தாயியில் இழுப்பாரே கமலஹாசனுடன் 'விருமாண்டி'யில்? பிறகு பிதாமகனில் வீசிய 'இளங்காற்று..' ஆனால் எனக்குப் பிடித்த பாடல் என்னவோ 'எனக்குப் பிடித்த பாடல்..'தான். ஜூலீ கணபதி'யில் ஜெய்ராம் காரை ஓட்டிக்கொண்டு மலைச் சரிவில் விரைகையில் டேஷ் போர்டில் ஒலிக்குமே அது! என்ன ஒரு நச் குரல்!அதற்கு முன் சில்லென்று ஒரு காதலில் சில்லென்று ஒரு பாடல்: 'முன்பே வா என் அன்பே வா...' (ரஹ்மான்). 'சின்னக் கண்ணிலே..' (தோனி - இளையராஜா) பாடலை வேறு யார் அத்தனை வீச்சுடன் பாட முடியும்!
அமிதாப் நடித்த Cheeni Kum படத்தில் (இளையராஜா) அந்த 'Jaane Do Na…' வை வளைத்து வளைத்து பாடும் லாவகமே தனி. நாலு வயசிலேயே சங்கீதம் படிக்க ஆரம்பிச்சவராச்சே?
இசையை தன் ஆக்ஸிஜன் என்னும் இவர் லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்ட ஒரே பாடகர்.பெங்காலி உட்பட எல்லா மொழி பாடலையும் உச்சரிப்பைக் குறிக்க உதவியாக இருக்கும் என்று இந்தியில் எழுதி பாடுவாராம்.

Wednesday, March 11, 2020

மணலில் கயிறு...

'Father of Silicones' என்று அவர் அழைக்கப்பட்டால் சும்மா இல்லை. 
James Franklin Hyde… 1934 -இல் போட்டியாக வந்த பிளாஸ்டிக்கை ஆராய்ந்து எதிர்கொள்ள  ஒரு கம்பெனியால் அமர்த்தப்பட்ட ஆர்கானிக் கெமிஸ்ட்ரியின் அதி புத்திசாலி. Flame Hydrolysis என்றவோர் முறையில் fused silica -வைக் கண்டுபிடித்தபோது ஒரு தங்கப் பெட்டகத்தைத் திறக்கிறோம் என்றவர் அறியவில்லை. 
டெலெஸ்கோப்பிலும் ராடாரிலும் விண்கலங்களிலும் அது பயன்பட்டது வெறும் ஆரம்பமே. அவர் எதிர்பார்த்ததும் அந்தளவே. ஆனால் அதுவோ சீசாவுக்குள்ளிருந்து வெளிப்பட்ட பூதம்! பின்னாட்களில் ஆப்டிக் ஃபைபர் உருப்பெறக் காரணமானது. அதனால் தொலை தொடர்பு மனோ வேகமானது. இன்னொரு பக்கம், விட்டுப்போன விழித்திரையை ஒட்டுப்போட, செயற்கை இருதய வால்வுகளை உருவாக்க என்று மெடிகல் உலகிலும் கலக்கல். கடைசியில் சிலிகான் ச்சிப்பாக கணினிக்குள்ளேயே நுழைந்து... இப்ப நீங்க இதை தம்மாத்துண்டு செல் போனிலும் படிக்க முடிவது அதன் (அவரது) சாகசம்தான்! 
ஒரு தனி மனிதரின் உன்னத உழைப்பு! எத்தனை 'ஜன்னல்கள்' திறக்கின்றன!
பெற்ற patents நூற்றுக்கு மேல். சிலிகானை மையமாக வைத்து இன்னொரு பீரியாடிக் டேபிளையே இயற்றிவிட்டார்.
இன்று பிறந்த நாள்!

Tuesday, March 10, 2020

உதவிடவே உதித்தவர்...

பாடம் நடத்திக் கொண்டிருந்தார் அந்த நர்ஸ். ஓடிவந்த ஏழைச் சிறுமி தன் தாய்க்கு சுகமில்லை என அழைத்தாள். பார்க்கச் சென்றால், குறுகிய சந்துக்களின் வழியே திறந்த கழிவிடங்களினூடே ஒடுங்கிய படிகளேறி ஒரு சிறிய வீட்டில் நுழைந்தால், பிரசவித்து ரெண்டே நாளான அந்தத் தாய் குழந்தையுடன் அழுக்கடைந்த படுக்கையில் ரத்தம் நிறைய இழந்த நிலையில்..
அந்தக் காட்சி அவரை உலுக்கிற்று. அவளைக் காப்பாற்றிய அந்தக் கணம் அவர் வாழ்வில் அதி முக்கியமானது. காலேஜும் லேபரட்டரியும் மறந்தார். படித்த படிப்பைக் கொண்டு நேரடியாக ஏழ்மைச் சுற்றுப் புறத்துடன் தொடர்பு கொள்ளத் தீர்மானித்தார். 
அவர் Lillian Wald.. இன்று பிறந்த நாள்!
அது 1893. Public Health Nurse என்ற கருத்தை உருவாக்கினார். மருத்துவ மனைக்கு வெளியே நடுத்தர, ஏழை மக்களுக்கு உதவும் தாதிகள் என்று சொல்லலாம். வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு படிப்பில் உதவுதாகட்டும், பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதாகட்டும் முன் நின்றார். பொது ஆரோக்கியத்துக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் பாடுபட தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. 
'வித்தியாசமான கலாசாரம் கொண்டு விரிந்த சுற்றுப்புறமே இந்த உலகம்' என்பதுதான் அவரது தீர்மானமான நம்பிக்கை..

முதல் பவனி..

விண்கலம் ஒன்றில் பூமி வலம் வந்த முதல் மனிதர் அவர். 327 கி.மீ உயரத்தில் 27400 கி மீ வேகத்தில் பறந்த 108 நிமிடம் சிறந்த இடம் பெற்றுவிட்டது வரலாற்றில்.
Yuri Gagarin... 
புறப்படுமுன் அவர் சொன்ன ‘Let’s Go!’, எதைத் தொடங்கு முன்னும் சொல்லும் ஒன்றாக பிரபலமாகிவிட்டது.
எடையற்ற நிலையில் இயங்குவது கடினம். எல்லாமே ஆட்டமாடிக் செய்யப்பட்டு கிரௌண்ட் கண்ட்ரோலும் கொடுக்கப்பட்டாலும் ஒரு எமெர்ஜென்ஸிக்கு அவரே இயக்க வழியும் கொடுக்கப்பட்டது.
குறித்த இடத்துக்கு சற்றே அப்பால் (250 கி மீ) விண்ணுடையும் பாராசூட்டுமாக தரை இறங்கியதும் பயந்து நின்ற ஒரு அம்மாவையும் பெண்ணையும் பார்த்து, "பயப்படாதீங்க, நான் உங்கள் நாட்டவன்தான்."
கண்டங்களின் கரைகளைக் கண்டவர் சொன்னது: "வளிமண்டலத்திலிருந்து ஒளிக் கதிர்கள் சிதற, அடிவானம் ஆரஞ்ச் வண்னத்தில் மின்ன, அது வானவில்லின் ஒவ்வொரு வண்ணமாக மாற, என்னவொரு வர்ணனைக்கடங்காத வண்ண அடுக்கு!" அத்தனை அழகு உலகு, அழித்து விடாதீர்கள்! என்றொரு வேண்டுகோளும் வைத்தார், கோளின் அழகைக் கண்டதும்.
ஆறு வருடத்துக்குப் பின் ஒரு மிக்5 விமானத்தை சோதனையோட்டம் பார்த்தபோது விபத்தில் பலியானார்.

Monday, March 9, 2020

பாத்திரம் பத்திரம்...


பொக்கிஷமாகப் பாதுகாத்த தன் 300 வருட ஆன்டீக் பீங்கான் பிளேட்டுக்கள்! கழுவும்போது வேலையாள் உடைத்துவிடுவதைப் பொறுக்க முடியவில்லை அந்தப் பெண்ணால். தானே செய்யவும் சிரமம். அதற்கொரு மெஷின் இருந்தல் எத்தனை நன்றாயிருக்கும்! தேடினார். கிடைக்கவில்லை. நாமே ஒன்றைக் கண்டு பிடித்துவிட வேண்டியதுதான் என்று இறங்கினார். கணவர் கடன் வைத்துவிட்டு மரித்துவிட கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயமும் நேரிட.. 

யோசித்தார். தண்ணீரின் அழுத்தத்தையே தேய்க்கிற கையாக்கினால் என்ன? செய்ய ஆரம்பித்தார். படிக்காத இவர் சொன்ன ஐடியாக்களை படித்த ஆண் உதவியாளர்கள் ஏற்கவில்லை தாங்கள் தோற்கும் வரை!

உருவானது ஒரு உபயோகமான டிஷ் வாஷர்! உடனே பேடன்ட் வாங்கினார். சிகாகோவில் ஓர் கண்காட்சியில் போட்டிக்கு வைக்கப்பட்டிருந்த மெஷின்களில் அதுவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உள்ளேயே ஒன்பது ஹோட்டல்கள் அதை உபயோகித்தன. முதல் பரிசை அனாயாசமாகத் தட்டிச் சென்றது.

மகளிர் அனேகருக்கு அப்போது 'அப்பாடா!'வைத் தந்த அதை ஆக்கிய Josephine Cochrane.... பிறந்தது  மகளிர் தினத்தில்.

Saturday, March 7, 2020

ஐம்பதே வார்த்தைகள்...


'சில சமயம் என் பேத்திகள்
சின்ன சின்ன கண்டுபிடிப்புகளை
நிகழ்த்தும்போது
ஏங்குகிறேன் நானுமோர்
சின்னக் குழந்தையாக இல்லையே என்று.’
இந்த அழகிய நன்மொழியைப் பகர்ந்தவர் Dr. Seuss. யார் இவர்?
ஆங்கிலத்தின் அழ.வள்ளியப்பா. எழுதிய குழந்தைகளுக்கான புத்தகங்கள் 60 கோடி பிரதிகள் விற்றிருக்கின்றன.
தவிர, ஒரு கார்ட்டூனிஸ்ட், திரைக்கதாசிரியர், தயாரிப்பாளர், கவிஞர்.... 
27 தடவை திரும்பி வந்தது அவர் எழுதியமுதல் நாவல். வெறுத்துப் போய் அதைக் கிழித்துப் போட்டு விடலாமென்று நினைத்தபடி நடந்து கொண்டிருந்தபோது வீதியில் எதிர்ப்பட்டார் அன்றுதான் பதிப்பகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்த பால்ய நண்பர். அன்றைக்கே அது தேர்வாகி பிரசுரமானது. 
Oscar, Pulitzer, Grammy என்று அவார்டுகளைக் குவித்தவர். இவருக்கும் பப்ளிஷர் ஒருவருக்கும் பந்தயம். ஐம்பதே வார்த்தைகளை மட்டும் உபயோகித்து ஒரு கதை எழுதணும். எழுதினார். Green Eggs and Ham என்ற அந்தக் கதை 6 மில்லியன் பிரதி விற்றது. இதுபோல 236 வார்த்தைகளை மட்டும் உபயோகித்து இவ்ரெழுதிய பிரபல கதை: The Cat in the Hat.
சந்தித்த சவால்கள் அனேகம், சவால்களை சந்திக்க அவர் தரும் டிப்ஸும் அனேகம். மாதிரிக்கு:
'முடிந்துவிட்டதே என்று வருந்தாதீர்,
நடந்ததே என்று மகிழுங்கள்.' 
'இன்று நீயே நீ. அது உண்மையை விட உண்மை.
உன்னைவிட நீ-யாக உலகில் யாருமில்லை’.
'உலகத்துக்கு நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம்.
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள் உலகமாக இருக்கலாம்.'
><><><

Friday, March 6, 2020

மேடையிலும் திரையிலும் மேதை..

மேடையிலும் சரி திரையிலும் சரி புகழோடு அரை சதம் வருடம் நீடிப்பதென்பது லேசா? ஆனால் Rex Harrison-க்கு அது லேசே லேசே! ரெக்ஸ் என்றால் லத்தீனில் கிங் என்று அர்த்தம். நடிப்பில் கிங் தான். மெல்லிய ரோல்களில் மில்லியன்களைக் கவர்ந்தவர். ஸர் பட்டம் கிடைத்தது 1989 -இல்.
உடனே நினைவுக்கு வருவது ‘My Fair Lady’ தான். நாடகத்தில் புரஃபசர் ஹிக்கின்ஸ் வேடத்தில் நடித்தபோது அதி சிறந்த Tony அவார்ட் வாங்கியவர் படத்தில் நடித்தபோது அதி சிறந்த திரை அவார்டான ஆஸ்கார் வாங்கினார். ஒரே வேடத்திற்கு இந்த ரெண்டு அவார்டையும் வாங்கியவர் வெகு சிலரே. இவர்தான் சரி என்று கேரி கிரான்ட் மறுத்துவிட்டார் வாய்ப்பை. இவர் எடுத்துக்கொண்ட சிரமங்கள்! முக்கால் வருட கால்ஷீட்டுக்கு ரெண்டு வருடம் அந்த காரக்டருடன் வாழ்ந்தார். வசன பாடல்களில் இடையிடையே மியூசிக் அதிரும், கொஞ்சம் பிசகினாலும் வார்த்தையை வாத்தியங்கள் அடித்துக் கொண்டு போய்விடும். டைக்கு அடியில் ஒரு மைக்ரோபோனை வைத்துக்கொண்டு... சவாலே சமாளிதான்!
மற்றொரு பிரபல பாத்திரம் 'கிளியோபட்ரா' படத்தில் சீஸர்! இந்திப் படம் ஒன்றிலும் முக்கிய வேடம் ஏற்று நடித்தது பலருக்கு மறந்திருக்கும். ‘Shalimar’. தர்மேந்திரா ஜீனத் நடிக்க, ஆர் டி பர்மன் இசையில் அது ஒரு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்.
1930 இல் மாபெரும் விளையாட்டு/ஆட்டம் என்ற படத்துடன் தன் விளையாட்டைத்/ஆட்டத்தைத் தொடங்கினார். நுணுக்கமான நடிப்பில் மன்னன். ஷாலிமாரில் ஒரு confrontation சீனில் விழிகளை மட்டும் இந்தப் பக்கமிருந்து அந்தப்பக்கம் ஓட்டுவாரே, அது!
மைக்கேலஞ்சேலோவின் வரலாற்றை 'The Agony and the Ecstasy’ என்று படமாக்கும்போது அவர் விரும்பியது டைட்டில்ரோல்; என்றாலும் Pope Julius II ஆக சார்ல்டன் ஹெஸ்டனுடன் 'சபாஷ் சரியான போட்டி!' (ஹெஸ்டனின் உயரத்தை சமாளிக்க ஷூவை ரெண்டு இஞ்ச் உயர்த்திக் கொண்டாராம்.)
பாடிய பாடல் ஆஸ்கார் பரிசு வாங்கிற்று, Dr Dolittle படத்தில். மிருகங்களுடன் பேசும் டாக்டர் வேடத்தில் வெளுத்து வாங்கினார். யூனிட்டோடு பழகியதில் கிளி 'கட்' சொல்ல பழகிவிட்டது!.
Quote?
'காமிராவை நம்பவும் ஓர் நட்பாக நினைக்கவும் நாட்களாகும், ஆனால் அதன் பிறகே நல்ல நடிகராக முடியும்.'

Tuesday, March 3, 2020

மனதுக்குள் அடித்த மணி...

கோதுமையைத் தீட்ட இத்தனை கஷ்டப் படறாங்களே? தோன்றிற்று அந்த 12 வயதுப் பையனுக்கு. அதற்கொரு மெஷினைச் செய்து அந்த மில்லுக்குக் கொடுத்துவிட்டான் அந்த 1857 இல்.

16 வயதில் ஒரு பேசும் பொம்மையைச் செய்ய முயன்றான். அதற்கு ஒரு தொண்டைக் குழாய் அமைத்து காற்றை விதமாகச் செலுத்தி நாலைந்து வார்த்தைகள் பேச வைத்துவிட்டான்.

 பேசும், கேட்கும் சக்தி இல்லாத அம்மாவும் மனைவியும்! அந்த சோகம் ஆழப் பதிந்து மனதை உந்தி விரட்டியது. எப்படியாவது ஒரு பேசும் கருவி கண்டு பிடிச்சிரணும்! அதான் லட்சியம். அதில் உக்கிரமாக உழன்றதில் இடறி விழுந்த கருவிதான் டெலிஃபோன்.

மணியடித்தது யாருக்கென்று ஊகித்திருப்பீர்கள். அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல். இன்று பிறந்த நாள்!

வார்த்தைகளை ஒலிக் கதிராக மாற்றி செலினியம் தகட்டில் செலுத்தினால் அது தூரத்திலிருக்கும் மற்றொரு தகட்டில் அப்படியே வெளிப்படுத்த, பேட்டரியுடன் கூடிய ஸ்பீக்கரில் அது ஒலித்த வித்தைதான் அவர் சிந்தையில் உதித்த விந்தை.

தவிர கண்டுபிடித்தது மெட்டல் டிடக்டர்.. பேச்சை பதிவு செய்யும் Graphophone.. கேள்வியை அளக்கும் ஆடியோ மீட்டர்.

பஞ்ச்:  கையில் ஆளுக்கொரு ஃபோனை வைத்துக் கொண்டு அலையறோம். ஆனால் கண்டுபிடித்த கிரஹாம்பெல்லோ தன் அறைக்குள் நுழைய விட்டதில்லை வேலை நடக்காது என்று.