Friday, March 21, 2014

எதிர்பார்த்தது….


 
அன்புடன் ஒரு நிமிடம் - 56
 
சாத்வீகனுக்கு அவரைப் பார்க்க அனுதாபம் பொங்கிற்று. கேசவன் ரொம்ப வேண்டிய நண்பர். மகன் மேல் வருத்தமாக வந்தார்.

"... இப்பதான் பிளஸ் டூ பரீட்சை எழுதியிருக்கான். எப்ப பார்த்தாலும் சினிமா கனவு. பெரிய டைரக்டராகப் போறேன்னு சொல்லிட்டிருக்கான். படிப்பில துளி ஆர்வமில்லை. இந்தப் போக்கில் விட்டால் மேற்கொண்டு படிச்சு நல்ல வர்றது சந்தேகம்தான். எப்படி இவனை... எந்தத் தொழிலுக்குப் போறதாயிருந்தாலும் ஆதாரமா நல்ல அளவில படிப்பு வேணுமில்லையா? என்ன பண்றதுண்ணே..." 

இவர் அதை விட்டு விட்டு, "அப்படியா?  டைரக்டரா வரணும்கிறானா? அதில ஆர்வமிருக்கா? என்னென்ன பண்ணியிருக்கான் இதுவரை?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

"அப்படி ஏதாவது திறமை இருந்தால் பரவாயில்லையே? ஒரு சிறுகதை, நாலுவரிக் கவிதை கூட எழுதினதில்லே.  சும்மா நிறைய சினிமா பார்த்துட்டு அப்படி எடுத்திருக்காங்க, இப்படி எடுத்திருக்காங்கன்னு சொல்லிட்டிருப்பான். அவ்வளவுதான்!"

"சரி, அடுத்த வாரமே அவனை அழைச்சிட்டு வாங்க. நாம ஒரு பிரபல டைரக்டரைப் பார்க்கப் போறோம்?"

"ஐயோஎதுக்கு?" தவறான ஆளிடம் வந்து விட்டோமோ? முகத்தில் குழப்ப ரேகைகள் ... இவர் பதில் சொன்னார் காதோடு.

வீட்டுக்கு வந்ததும் கேசவன்... 

"டேய்  சம்பத், இத்தனை ஆர்வமிருக்கிற உன்னைப் பார்த்திட்டு நான் சும்மா இருந்தா எப்படி? சாத்வீகன் தாத்தாவுக்கு டைரக்டர் பரந்தாமனைத் தெரியுமாம். பெரிய டைரக்டர். இப்பவே உன்னை அவர்ட்ட உதவியாளாரா சேர்த்திடலாம்னு இருக்கோம். தொழில் படிச்சிட்டியானால் அப்படியே தொடரலாம் நீ. ரெண்டு மாசம் இப்ப லீவுதானேபாருபிடிச்சிட்டா படிப்பைக்கூட நிறுத்திடலாம்."

அவன் நம்பவியலாமல் பார்த்தான்.

டுத்த நாள். ஏற்கெனவே போனில் எல்லாம் பேசியிருந்தார் போலும். "இவன்தான் நான் சொன்ன பையன்!" என்று பரந்தாமனிடம் அறிமுகப் படுத்தினார்.

கேள்வி ஏதும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை அவர். "நாளைக்கே   வந்துருப்பா லொகேஷனுக்குகாலை அஞ்சரை மணிக்கு.   அட்ரசை வாங்கிட்டுப் போ. புதரையெல்லாம் அப்புறப் படுத்தி அழகு படுத்தியாகணும் ஏழரை மணிக்குள்ளே..."

குழப்ப ரேகைகளை மிஞ்சிக்கொண்டு சந்தோஷம் பொங்கிற்று.

ண்ணி இரண்டே வாரம்.

அப்பாவையும் அழைத்துக் கொண்டு சாத்வீகனிடம் வந்து நின்றான் சம்பத்.

"…எனக்குப் பிடிக்கலே தாத்தா."என்றான்," நான் நினைச்ச மாதிரி இல்லே."

"ண்டா,  பெரிய டைரக்டர் ஆச்சே? சான்ஸ் கிடைக்கிறதே..."

"அவர் சரிதான். ஆனா வேலைதான்... தினம் உசிர் போகுது. இன்ன வேலைன்னு இல்லாம எல்லாம் செய்ய வேண்டியிருக்கு. ட்ராலி தள்றதிலேயிருந்து தெருவைக் கூட்டி சுத்தம் செய்யறது வரை... கிளாப் அடிக்கிறதிலேயிருந்து அவுட் டோரில் ஃபீல்டுக்குள்ளே ஆடு மாடு நுழைஞ்சிடாம விரட்டறது வரை... வசனம் பிரதி எடுக்கிறதிலேயிருந்து ரெண்டு கிலோமீட்டர் மலைப்பாதையில சைக்கிள் மிதிச்சு டிபன் வாங்கிட்டு வர்றது வரை... நான் எதிர்பார்த்ததே வேற..."

"இப்ப என்ன நினைக்கிறே?"

"நல்ல படிச்சு மார்க் வாங்கி பெரிய கம்பெனியில வேலை பார்த்து சம்பாதிச்சு காசு நிறைய சேர்ந்ததும் நானே ஒரு படம் தயாரிக்கலாம்னு...நீங்க அவர்ட்ட சொல்லிருங்க."  கிளம்பினார்கள்.

"தாங்க்ஸ் பரந்தாமன்,"என்றார் சாத்வீகன் போனில், ‘உங்க தொழிலின் கடினப் பக்கத்தை கொஞ்சம் முதலில் அவனுக்குக் காட்டுங்கள்,’ என்று கேட்டுக் கொண்டிருந்த டைரக்டரிடம்
<><><>
(’அமுதம்’ அக்டோபர் 2013 இதழில் வெளியானது)

(படம்- நன்றி: கூகிள்)

 

Tuesday, March 11, 2014

நல்லதா நாலு வார்த்தை – 27


'கடிகாரத்தைக் கவனியாதே;
அது செய்வதைச் செய்.
ஓடிக்கொண்டிரு.'
- Sam Levenson
('Don't watch the clock; do what it does.
Keep going.')
><>< 

'இறப்பு அல்ல, மிகப் பெரிய இழப்பு.
நாம் வாழும்போதே
நமக்குள் மடிந்துபோகிற ஒன்றே
ஆகப் பெரிய இழப்பு'
- NormanCousins
('Death is not the greatest loss in life. The greatest
loss is what dies inside us while we live.')
><>< 

'உவகை உறைந்திருக்கும் ஓரிடத்தை
உள்ளுக்குள் காணுங்கள், அந்த
உவகை வலியை
சுட்டெரித்துவிடும்.'
- Joseph Campbell
('Find a place inside where there's joy,
and the joy will burn out the pain.')
><>< 

'மமதை நமக்குஇருந்திராவிடில்
மற்றவரை அது இருப்பதாக
குறை சொல்லமாட்டோம்.'
-La Rochefoucauld
('If we did not have pride, we would not
complain of it in others.')
><>< 

'உலகின் மற்ற அனைவரும்
வெளியேறும்போது
உள்ளே நுழைபவரே
உண்மையான நண்பர்.'
- Walter Winchell
('A real friend is one who walks in
when the rest of the world walks out.')
><>< 

'தாகம் தோன்றுமுன்
கிணற்றைத் தோண்டுங்கள்!'
- Proverb
('Dig the well before you are thirsty.')
><>< 

'அன்பென்ற தேன்
அமைந்த பூவே வாழ்க்கை.'
- Victor Hugo
('Life is the flower for which love is the honey.')
<>+<>+<>
(படம்- நன்றி: கூகிள்)
 
 

Tuesday, March 4, 2014

அந்த ஒரு மதிப்பெண்…


அன்புடன் ஒரு நிமிடம் - 55 
 வாசு அப்படி செய்தது எல்லாருக்குமே ஆச்சரியமாக இருந்தது. அரசுவுக்கு அழுகையே வந்துவிடும் போல..
கொஞ்ச நேரத்துக்கு முன்... 
"நான் ஒரு அழகான ஓவியம் வரையப் போறேன்," என்றான் அரசு.
"பேஷ்!" கைதட்டினார் தாத்தா.நாங்க எல்லாரும் பார்த்து மதிப்பெண் கொடுக்கிறோம், சரியா?"
"சரி," என்றான் கண்ணில் ஆர்வத்தோடு. .
"என்ன படம் வரையப் போகிறே?"
"நீங்களே சொல்லுங்க."
"கடற்கரை ஓரம்! அந்தக் காட்சியை வரையணும். சரியா ஒரு மணி நேரம்."
டிராயிங் பேட், பிரஷ்கள், வாட்டர் கலர் பாக்ஸ், பென்சில், தண்ணீர் எல்லாம் எடுத்து ஹாலில் பரப்பினான். நடுவில் அமர்ந்தான்.
 
பென்சிலால் கோடு போட்டுக் கொண்டு அதை அழித்து வரைந்து சரியாக்கி... சுற்றிலும் வர்ணகளைப் பரப்பிக் கொண்டு வர்ணம் தீட்ட ஆரம்பித்தான்.
வரைந்து முடித்ததும்  முதலில் தாத்தாவிடம் நீட்டினான்.
சின்னப் பையன் வரைந்தது என்று சொல்ல முடியவில்லை. அத்தனை அழகாகவும் தத்ரூபமாகவும்...
பத்துக்குப் பத்து உடனே போட்டுக் கொடுத்துவிட்டார். ஜனனி லேசில் எதையும் பார்த்து அசந்து பாராட்டுகிறவள் அல்ல. ஆனால் அவள் புருவங்களே உயர்ந்தனஅவளும் பத்துக்குப் பத்து போட்டு விட்டாள்
சித்தப்பா சந்தீப் அந்த நேரம் அண்ணனைப் பார்க்க வரஅம்மா விஷயத்தை சொல்ல, அவனும் வாங்கிப் பார்த்தான். "அட, அருமையா வரைஞ்சிருக்கானே !" அவன் பி. ஆர்க். படிக்கறவன் என்பதால் அவனுடைய பாராட்டு அறையில் விசேஷ கவனம் பெற்றதுஅவனிடமிருந்தும் பத்து
இன்னும் ஒரே ஒருத்தர் பாக்கி. வாசு வெளியே சென்றிருந்தார்.  
காலிங் பெல் அடித்தது. அவர்தான். ஹாலில் அமர்ந்தவரிடம் நீட்டினான் தன ஓவியத்தை. "அப்பவே முடிச்சிட்டேன். உங்க மார்க்குக்காகக் காத்திருக்கேன்."
கவனமாக பார்த்தார். "முதல்ல அடிப்படைப் படம் சரியா வரையப்பட்டிருக்கு. பலே. அடுத்தது ப்ரபோர்ஷன் கரெக்டா கொடுத்திருக்கே. பேஷ். அப்புறம் வர்ணங்கள் சரியாக தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கே. குட். கடைசியா மொத்த பிரசன்டேஷன்.  தேவையான ஆழத்தோடு முழுமையா வந்திருக்கு." 
சரி இவரும் அந்தப் பத்தை கொடுத்துவிடுவார் என்று நினைத்தால் பத்துக்கு ஒன்பதே கொடுத்தார்.
அவன் முகம் வாடிவிட்டது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி.
கோபமாக உள்ளே சென்றுவிட்டான்.
'என்ன இப்படி பண்ணிட்டீங்க... அம்சத்துக்கு அம்சம் உங்க அளவு பாராட்டாத நாங்களே ஃபுல் மார்க் கொடுத்துட்டோம். நீங்க அப்படி அதை புகழ்ந்து தள்ளிவிட்டு  இப்படி..."
அவர் அமைதியாகச் சொன்னார். "அந்த ஒரு மார்க் நான் என் குறைத்துக் கொடுத்தேன் தெரியுமா? இங்கே பார்! பிரஷ்லேர்ந்து பென்சில் வரை எல்லாத்தையும் அப்படியே இறைய விட்டிருக்கான் பார். வரைஞ்சு முடிச்சதும் தன பொருட்களை எடுத்து அதனதன் இடத்தில் திரும்ப வைக்கணும் இல்லையா? அதுவும் முக்கியம்கிறதாலதான் அந்த மார்க்கைக் குறைத்தேன்."
உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த அரசு கம்பீரமாக நடந்து வந்து தன பொருட்களை அடுக்க ஆரம்பித்ததிலேயே தெரிந்தது அப்பாவின் அக்கறையை அவன்  சரியாகப் புரிந்து கொண்டுவிட்டான் என்பது
 
(’அமுதம்’ அக்டோபர் 2013 இதழில் வெளியானது.)
(படம்- நன்றி: கூகிள்)