Friday, January 26, 2024

ஹாலிவுட் ஹாண்ட்ஸம்...


ஒரே கதா பாத்திரத்தை இரண்டு படத்தில் நடித்து அந்த இரண்டுக்குமே ஆஸ்கார் நாமினேஷன் பெற்று அதில் ஒன்றுக்கு ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஒரே நடிகர் அவர்.

Paul Newman.. ஹாலிவுட்டின் ஹாண்ட்ஸம் நடிகர்களில் ஒருவர்! நீலக் கண் வண்ணன். இன்று பிறந்தநாள்!
Green Lantern காமிக்ஸில் வரும் சூபர் ஹீரோ Hal Jordan -ஐ வரைய இன்ஸ்பிரேஷன் இவர்தான்னா இப்பத்திய ரசிகர்களுக்கு விளங்கும். 'Butch Cassidy and Sundance Kid' யில் Robert Redford உடன் சேர்ந்து கலக்கினாரே அவர்தான்.. 14 மில்லியனில் தயாரித்து 116 மில்லியன் டாலர் ஈட்டிய பிரம்மாண்ட ‘The Towering Inferno’-வின் நாயகன்.
வசூல் நட்சத்திர லிஸ்ட் ஒரு கணிப்பில் வருடம் 1967-இல் 3-ஆம் இடத்தில் இருந்தார், 68-இல் 2 ஆம் இடம், 69-இல் முதலிடம்! 70-லும் முதலிடம்!
கார் ரேஸ் என்றால் க்ரேஸ்! அள்ளிக்கொண்ட அவார்ட் அதிகம். இவரது மூன்றாவது முகம், ஒரு கொடை வள்ளல். தன் ஃபுட் கம்பெனி ஒன்றின் அனைத்து லாபத்தையும் நன்கொடையாக்கிய தொகை 300 கோடி ரூபாய்க்கும் மேலே..
தான் நடித்த முதல் படத்தை (The Silver Chalice) 1950களின் படுமட்டமான படம் என்று சொன்னது வேறு யாருமில்லை, அவரேதான். பார்த்தவங்க மன்னிச்சுக்குங்கன்னு முழுப் பக்க விளம்பரம் கொடுத்தாராம். திரும்ப நாடக மேடைக்கு போயிட்டார். அப்புறம் பேர் வாங்கியதும் ஸ்டார் ஆகியதும் குத்துச் சண்டை வீரர் Rocky Glaciano -வாக நடித்த 'Somebody Up There Likes Me' படத்திலிருந்து!
6 தடவை நாமினேட் செய்யப்பட்டாலும் 1986 இல் தான் ஆஸ்கார் கிடைத்தது. 30 வருஷம் முந்தியே அது கிடைத்துவிட்டது மனைவி Joanna Woodward -க்கு.. (50 வருஷ ஆதர்ஷ தம்பதி!)
கறுப்பு வெள்ளைதான் கதைக்குப் பொருத்தமாக இருக்குமென்று தொடங்கிய 'Cat on a Hot Tin Roof’ கலர் படமாக எடுக்கப்பட்டது, காரணம் இவரது நீலக் கண்களும் நாயகி எலிசபெத் டெய்லரின் வயலெட் கண்களும் ரசிகர்களின் ஃபேவரிட் ஆயிற்றே என டைரக்டர் நினைத்தாராம்.
அசப்பில் மார்லன் பிராண்டோ போலவே இருப்பதால் ஆட்டோகிராஃப்காரர்கள் அவரென்று இவரை மொய்த்ததுண்டு.
என் பட வசூலை விட என் ஃபுட் கம்பெனியின் ஸாலட் வசூல் அதிகமாயிருக்கிறதே! என்பார் தமாஷாக..
Quote?
'மற்றவர்களின் குணாதிசயத்தை எடுத்துக் கொண்டு கொஞ்சம் நம் அனுபவத்தைக் கலந்து அளிப்பதுதான் நடிப்பு!'

Wednesday, January 24, 2024

கவிதை பாடும் கவிதா...


"உப்புக் கருவாடு.." (முதல்வன்) பாட்டில் அந்த மிக மென்மைக் குரலைக் கவனித்திருப்பீர்கள். துளிப்பிசிறில்லாமல் அஸால்டாக ராகத்தை இழுக்கும் அந்த லாவகம்... அப்புறம் 'காதலர் தினம்' படத்தில் "தாண்டியா ஆட்டம்.." ஆடிய குரல். சரணத்தில்தான் தொடங்குவார் ரெண்டு பாட்டிலும்.

கவிதா கிருஷ்ணமூர்த்தி! இன்று பிறந்த நாள்!
கல்லூரித் தோழி இவரைத் தன் தந்தை பிரபல இசையமைப்பாளர் ஹேமந்த் குமாரிடம் அறிமுகப்படுத்த, அவர் தன் இசைநிகழ்ச்சிகளில் பாடவைத்தார். இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த் (பியாரிலால்) இவரது க்ளாஸிகல் இசையறிவைக் கண்டு வாய்ப்புகளை அந்த வளமான குரலுக்கு வழங்க.. கவிதா கிருஷ்ணமூர்த்தியின் பாடல்களை நாம் கேட்க ஆரம்பித்தோம்.
அட்டகாசமாக ஸ்ரீதேவி ஆடுவாரே ‘Mr. India’வில், “ஹவா ஹவாயி…”? அந்த அசத்தல் லக்‌ஷ்மி - ப்யாரி பாடல் டாப் இடம் வாங்கித் தந்தது. படத்தில் இவரின் மற்றொரு சூபர் ஹிட்: "Karte Hain Hum Pyaar Mr.India Se..”
ஆர்.டி.பர்மனின் இசையில் இவர் அழகாகப் பாடியது '1942 A Love Story’ படத்தில். மனிஷாவுக்கு பாடிய “Pyaar Hua Chupke Se…”வை மறக்க முடியுமா?
1995, 96, 97 என்று வரிசையாக மூன்றும் 2003 இல் ஷ்ரேயா கோஷலுடன் சேர்ந்து ஒன்றுமாக நான்கு Filmfare அவார்ட்!
கணீரென்று ஒலிக்கும் செல்லக் குரலை மெல்ல ரசிக்க வேண்டுமானால், “Aaj Main Upar…” (‘Khamoshi’) கேட்டால் போதும். கிசு கிசு குரலின் இனிமையை ரசிக்க இருக்கவே இருக்கிறது ‘ரிதம்' படத்தின் “காற்றே என் வாசல் வந்தாய்…”
அப்புறம்... சொல்லணுமா என்ன... சும்மா விளாசியிருப்பார் அந்தப் பாடலை! ஆம்மா, "ஜும்மா சும்மா தே தே..." தான்! ("Jumma Chumma De De.." - 'Hum')
>><<

Saturday, January 20, 2024

ஒரே படத்தில் உலக அளவில் ஸ்டார்...


மூன்று முறை மரணம் நெருங்கிற்று அந்தச் சிறுவனை. ஒரு முறை கார் மோதியது. மற்றொரு முறை குதிரையிலிருந்து தவறி விழுந்தான். ஒரு பூகம்பத்தின்போது, தொங்கிக் கொண்டிருந்த மூன்றாம் மாடியறையிலிருந்து மீட்கப்பட்டான்.

இப்படி உயிர் பிழைத்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு உடல் கட்டமைப்பில் நாட்டம் வரக் காரணமாயிருந்த க்ரேட் ஹீரோ.
ஸ்டீவ் ரீவ்ஸ் நடித்த என்று பெரிதாக போஸ்டரில் போட்டு விளம்பரம் வரும், 1950 களில்! ஆஜானுபாகுவான என்றால் இப்படீன்னு காட்டுகிற நடிகர். புஜபல பராக்கிரமத்தால் ஜெயிக்கிற வாள்சண்டைப் படங்கள்.
Steve Reeves… இன்று பிறந்த நாள்!
மார்பு 52''க்கு அகன்று உடம்பு 6' 1” க்கு உயர்ந்தவர். அள்ளிய கோப்பைகளிலும் படிப்படியாக உயர்ந்தார். 1946-இல் Mr. Pacific Coast, 1947-இல் Mr. America, 1948-இல் Mr. World, 1950-இல் Mr. Universe!
மிலிடரியில் இருந்தபோது செய்த ட்ரக் லோடிங் வேலையும் ஜிம் பயிற்சியும் மிகவும் உதவியிருந்தது கட்டான உடலமைப்புக்கு. 400பவுண்ட் எடையை ஜஸ்ட் நுனி விரல்களால் இடுப்பு வரை உயர்த்துவார் அனாயாசமாக. வாரம் 3 முறை பயிற்சி செய்து வாழ்நாள் முழுக்க உடலைக் கச்சிதமாக வைத்திருந்தவர்.
ஹீரோவாகலாம் என்று ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவரை முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய வேடங்கள்.
15 பவுண்ட் எடை குறைக்கச் சொன்னார் சிசில் பி டிமிலி. அந்தப் பிரசினையில் இழந்த படம் 'ஸாம்சன் அன் டிலைலா' ரொம்ப நாளாச்சு, அடுத்த சரியான ரோல் கிடைக்க.
அதான் 'ஹெர்குலிஸ்'! அந்த ஒரே படத்தில் உலக அளவில் ஸ்டார்! அடுத்து ‘Hercules Unchained.’ 25 நாடுகளில் வசூல் மன்னர். ஐரோப்பாவிலேயே அதிக சம்பள ஹீரோவானார். இவரது படமொன்று இரண்டு வருடமாக ஒரு தியேட்டரில் 24 மணி நேரமும் திரையிடப்பட்டு ஓடியதாம்.
கச்சிதமான உடலமைப்புக்கு காலாகாலத்துக்கு ரோல் மாடலாக இருந்தவர். கணக்கில்லா ரசிகர்கள். எங்கே சென்றாலும் ஆரவாரம். ஜம்மென்று ஜிம்முக்குப் போக ஆரம்பித்தனர் வாலிபர்கள். இன்றைக்கும் இருக்கிறது ரசிகர் மன்றம்.
வரிசையாக வந்தன... ‘Goliath and the Barbarians’, ‘The Thief of Baghdad’, ‘The Last Days of Pompeii’...
குதிரையில் துரத்தும் காட்சிகளுக்கு டூப் வேண்டாம், பிரமாதமாக ஓட்டுவார். Sylvester Stallone, Arnold Schwarzenegger-க்கு ரோல் மாடல் இவர்தான்.
‘The Last Days of Pompeii’ ஷூட்டிங்கில்.. ஓட்டிய ரதம் தடம் புரண்டு மரத்தில் மோத, தோள் பட்டை இடம் பெயர்ந்தது.
ஹெர்குலிஸ் படத்தில் செயினை உடைத்துக்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி. செயின் இரும்பு இல்லை, மரம்தான். என்றாலும் அடித்தால் காயம் பலமா இருக்குமே? அடிப்பது மாதிரி இழுத்தார். டைரக்டர் சொல்கிறார், பலமா அடிய்யா என்று.
காயம் படுமே சார்? - இவர்.
பட்டால்தான்யா அவங்களுக்கு சம்பளம்! என்று கத்தினாராம் அவர்.

>><<

Friday, January 19, 2024

முதலில் மேடையில்...

1981 இல் வெளியான Dirk Bogarde, Glenda Jackson நடித்த அந்தப் படத்தின் ('The Patricia Neal Story') கதை இதுதான்:

அவள் ஒரு நடிகை. 30 வயதில் அதுவும் கருவுற்றிருக்கும்போது தாக்குகிறது கடும் பக்கவாதம். தீர்ந்தோம் என்றே நினைக்கிறாள். ஆனால் மனம் தளரவில்லை. ஆரம்பிக்கிறாள் தன் போராட்டத்தை. அனைத்து மருத்துவ முறைகளையும் ஆலோசனைகளையும் உபயோகிக்கிறாள். அயராது உதவுகிறார் அவளின் எழுத்தாளர் கணவரும். இறுதியில் வெற்றி பெற்றெழுகிறவர் மீண்டும் திரையில் நடிக்கிறார்.

விஷயம் என்னன்னா இது உண்மையிலேயே நடிகை Patricia Neal -க்கு நடந்தது. கணவர் வேறு யாருமல்ல, பிரபல எழுத்தாளர் Roald Dahl. 25 கோடி பிரதிகள் விற்ற புத்தகங்கள் எழுதியவர்.

Patricia Neal.. இன்று பிறந்த நாள்!


முதலில் மேடையில் நடித்து டோனி அவார்ட் வாங்கியதால் வார்னர் படங்களில் நடிக்க வாய்ப்பு. வாழ்க்கையின் வலிய பிடிகளை எதிர்த்துப் போராடும் பெண்ணாகவே வருவார் பெரும்பாலும்.

John Wayne -உடன் நடிக்க லண்டன் சென்ற போது Roald Dahl -ஐ சந்தித்தார். மணந்து கொண்டார். 'A Face in the Crowd', 'Breakfast at Tiffany’s' என்று வரிசையாக பல படங்கள். பால் நியூமனுடன் நடித்த ‘Hud’ ஆஸ்கார் வாங்கித் தந்தது.

திடீரென்று தாக்கியது ஸ்ட்ரோக். மூன்று வாரங்கள் நினைவற்று... எழும்போது வலப் பக்கம் அசைவற்று! பேச்சற்று!

அவரும் கணவருமாக அதை எதிர் கொண்டு போராடி.. ரெண்டே வருடத்தில் வென்று… மறுபடியும் நடித்தபோது ஒன்றுக்கு ஆஸ்கார் நாமினேஷன்!

உலக சினிமாவில் உயர் தடம் ..


உலக சினிமாவில் உயர் தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவர்... 12முறை நாமினேட் செய்யப்பட்டு 4 முறை best foreign film ஆஸ்கார்!
Fellini. இன்று பிறந்தநாள்!

கனவையும் வாழ்வையும் தன் படங்களில் கலந்தளிப்பது ஃபெலினியின் பாணி. ‘Felliniesque’ என்று இவர் பாணியை ஒரு வகையாக்கி அதற்கொரு வார்த்தையையும் கொடுத்தாச்சு.

காமிக்ஸுக்குத்தான் முதலில் வசனம் எழுதிக் காமித்தார்.
பத்திரிகையில் வேலை. பேட்டி கண்ட பிரபல நடிகர் நண்பராகிவிட, அவர் நடித்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுத வாய்ப்பு. அப்படியே டைரக்டரானார்.

Paparazzi என்றால் அறிவீர்கள். பிரபலங்களைப் படம் எடுப்பவர்களை அப்படி அழைப்பாங்க. அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது இவரது ‘La Dolce Vita’ படத்தில் வந்த ஒரு போட்டோகிராஃபரின் பெயரிலிருந்துதான்.

உலகின் தலைசிறந்த படங்களில் 10 வது படமாக இவரது '8 1/2' என்ற படம் 1963 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப்படம் எடுக்க ஆரம்பிக்கும்போது இவருக்கு தான் என்ன எடுக்க வந்தோம் என்பதே மறந்துவிட அதையே ஒன் லைனாக தீர்மானித்து படத்தை எடுத்துமுடித்தார். (பிரபல Marcello Mastroianni தான் ஹீரோ.)
Amarcord, Roma: மற்ற இவரின் பிரபல படங்கள்.

பிரபல சுவிஸ் மனோதத்துவ நிபுணர் Carl Jung கருத்துக்களால் கவரப்பட்டார். இவரது படங்களில் அவை மிளிரும்.

Quote?
'இன்னொரு மொழி என்பது வாழ்வை இன்னொரு பார்வை.'
'எல்லா கலைகளுமே சுய சரிதைதான். முத்து என்பது நத்தையின் சுயசரிதை.'

ஆச்சர்யங்களைத் தெளித்தவர்...

அவருடைய திரைக் காலத்தை அவ்வளவு எளிதாகப் புறம் தள்ளிவிட முடியாது. இன்றைக்கு நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் ஃபார்முலாவாக இருக்கும் ஹரர் படங்களுக்கு. அந்தக்காலத்திலேயே ராஜாவாக இருந்தவர். ஆடியன்ஸ் பல்ஸ் அறிந்து பதார்த்தம் பரிமாறியவர்.

பி. விட்டலாச்சார்யா… ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்தவர் வெள்ளித் திரையில். இன்று பிறந்தநாள்!

1978 -ல் வெளியான ஜெகன் மோகினியை யாரால் மறக்க முடியும்? பெரிய நட்சத்திரங்களின் படங்களையே வசூலில் ஓரம் கட்டிய படமாச்சே? சில்வர் ஜூப்ளி ஹிட், தெலுங்கிலும் தமிழிலும்! முன் ஜென்மத்தில் காதலித்து கைவிட்ட அரசனை அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்து பழிவாங்கும் பெண்ணின் கதை மீது யாருக்குத்தான் பிரேமை இராது? 2009 -இல் மறுபடியும் ரீமேக் ஆகிற அளவுக்கு பாப்புலராகிய படம். (இளையராஜா இசையில் என் கே விசுவநாதன் இயக்கினார். ஜெயமாலினி 'ரோலி'ல் நடித்தார் நமிதா..)

‘ஸ்ரீனிவாச கல்யாணம்’... ‘வீராதி வீரன்’... பக்தி படங்கள் சில. ஸ்டண்ட் படங்கள் பல… ’நாடோடி மன்னனை’ தெலுங்கில் எடுத்தார். அதைத்தவிர என் டி ராமராவை வைத்து 18 படங்கள் இயக்கினார்.

எளிய ரசிகரின் பொன்னான நேரத்தை ஃபன்னாக்கி மகிழ்வித்த வித்தகர். ‘மாயாஜால மன்னன்’ என்று ரசிகர்கள் அழைத்த விட்டலாச்சாரியாவின் படங்கள் துட்டள்ளியதில் ஆச்சர்யம் இல்லை.

கிராபிக்ஸ் இல்லாத காலத்தில் வெறும் மார்ஃபிங்கை வைத்தே திரையில் சாகசம் வரைந்தவர். டப்பிங் படங்கள் தப்பாமல் வசூல் தர ஆரம்பித்தன. ஐம்பதுகளில் ஆரம்பித்த இவர் சாம்ராஜ்யம் தொண்ணூறுகள் வரை நீடித்ததென்றால் வேறென்ன சொல்ல வேண்டும்?

உள்ளத்தில் நல்ல உள்ளம்...


எந்த நல்ல பாடலையும் எந்த நல்ல பாடகர் பாடினாலும் நல்லாத்தான் இருக்கும் என்பார்கள். ஆனால் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..." "எங்கிருந்தோ வந்தான்.. ரங்கன்.." "ஓடம் நதியினிலே.." இந்த மூன்று பாடல்களையும் வேறு யார் பாடுவதாகவும் ஏனோ நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. சொல்லப்போனால் இந்தப் பாடல்கள் அவர் பாடவென்றே எழுந்ததாக இருக்குமோ?
ஆம், சில பாடல்களுக்குப் பின்னணி இவர்தான் ஒரே சாய்ஸ் இசையமைப்பாளர்களுக்கு. வார்த்தைகளை பாடலில் தெளிவாக இவரை விட யாரும் உச்சரிக்க முடியுமா? அடிக்கடி தோன்றி செல்லும் வியப்பு!
சீர்காழி கோவிந்த ராஜன்... இன்று பிறந்த நாள்!
“சிரிப்புத்தான் வருகுதையா…” என்று சிரித்தபடியே தமிழ் திரையுலகில் நுழைந்தார். படம் ‘பொன்வயல்.’ அதுவே பெரிய ஹிட். அதைத் தாண்டிச் சென்றது “வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே.. நீயும் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே..” (‘கோமதியின் காதலன்’ ஜி. ராமநாதன்) இதில் அந்த 'வந்ததேனோ'வைக் கவனியுங்கள்! நம் காதுக்கு வந்த தேனோ? அடுத்தது நம் வாழ்வில் கேட்டிராத அளவு சூப்பர் ஹிட்: “நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..” (‘ரம்பையின் காதல்.’ டி.ஆர்.பாப்பா)
“காதலெனும் சோலையிலே ராதே..” “நிலவோடு வான்முகில்…” "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்.." “உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா…” “ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…” "ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ.." என்று சில காலம் தன் கணீர் குரலில் எம்ஜிஆருக்கு ஆஸ்தான பின்னணிப் பாடகராக இடம் பெற்று வலம் வந்தார். அதில் மறக்க முடியாத மெலடி ஒன்று: “யாருக்கு யார் சொந்தம் என்பது.. என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது?” ('சபாஷ் மாப்பிளே’ கே.வி. மகாதேவன்)
பாடலும் இசையும் ஊட்டும் நம்பிக்கையைப் பன்மடங்கு அதிகரிக்க செய்யும் இவர் குரல். சாட்சி: “புதியதோர் உலகம் செய்வோம்..” “உலகம் சமநிலை பெற வேண்டும்..”
பின்னணியில் ஒலிக்கும் சோகப் பாடல்களுக்கு பிரமா(தா)னமான குரல் இவருடையது. உடனே நினைவில் ஒலிக்கும் பாடல்: "கண்ணிலே நீரெதற்கு?" முன்னணியிலும் ஆழமான சோகத்தை அழுத்தமாகத் தருவதில் அவருக்கு நிகர் அவரே. ‘கப்பலோட்டிய தமிழனி'ல் கனத்தை மனதில் ஏற்றும் “நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி…”
இவருடைய டைட்டில் சாங்ஸ் தனி விசேஷம். “ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது 'சுபதினம்'.” “அன்னையின் அருளே வா வா 'ஆடிப்பெருக்கே' வா வா வா!”(இசை: ஏ.எம்.ராஜா)
மகாதேவனின் “கல்லிலே கலைவண்ணம் கண்டான்..” கேட்கும்போது இவர் குரலின் இசை வண்ணம் காணமுடியும். கல்லில் சிலையை உளி செதுக்குவது போல அந்தப் பாட்டை செதுக்கி இருப்பார்.
“கோட்டையிலே......” என்று வெகுதூரம் இழுத்து அதில் ‘ஒரு ஆலமரத்தை’ அழகாக நடுவார் பாருங்கள், ‘முரடன் முத்து’வில்.. என்ன ஒரு ஓங்காரம்! அதற்குச் சரியாக இவருக்கு இன்னொரு தணிந்த உருக்கமான குரல் உண்டு. மாயவநாதனின் அந்த பாடல்: “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?” (‘பந்த பாசம்’) “காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது…” என்ற வரியில் அதைத் தெளிவாக உணரலாம்.
ஆம், தத்துவ பாடல் என்று வந்துவிட்டால் இவர் குரலுக்கு எதிரொலி இல்லை. 'அழகு நிலா'வின் "மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்.."ஒன்றே போதுமே?
பக்திப் பாடல்கள் இவருடைய கோட்டை. “விநாயகனே, வினை தீர்ப்பவனே..” என்று அவர் தொடங்கும்போது மனதில் எழும் நம்பிக்கைப் பிரவாகம்! “நீயல்லால் தெய்வமில்லை, முருகா...” எனும்போது எழும் பக்திப் பரவசம்!
உருக்கம் கம்பீரம் இரண்டையும் எந்தப் பாடலுக்கு எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று இவருக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதை எண்ணற்ற அந்த பக்தி பாடல்கள் சொல்லும். "அறுபடை வீடு கொண்ட திருமுருகா.." (கந்தன் கருணை) காம்போதியில் இருந்து ஹம்சநந்தி வரை ஒவ்வொரு சரணத்திலும் ஒவ்வொரு ராகத்தில் சஞ்சரிக்கும் அழகே அழகு!
தனியே ஒரு ஜாலி குரலும் வைத்திருந்தார் போல ஸ்ரீதருக்கென்று! 'அவ்வுலகம் சென்று அமுதம் உண்டு வந்த' இனிமை.. ("காதலிக்க நேரமில்லை....") "என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?" என்று கேட்கும் அந்த 'சாரதா' குரல்! அவ்வகையில் மற்றொன்று, தங்கவேலுவுக்காக 'வல்லவனுக்கு வல்லவனி'ல் பாடும், "கண்டாலும் கண்டேனே உன்போலே..."
வீச்சுப் பாடல் ஒன்றை ஒரே மூச்சில் பாடியது நினைவிருக்கிறதா? “சாட்டைக் கையில் கொண்டு, ஓங்கக் கண்டு, காளை ரெண்டு, ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு, எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு, ஓடுறா ராஜா, ஓடுறா ராஜா, ஓடுறா, ஓடுறா, ஓடுறா ராஜா…” என்ற நீளப் பல்லவியை ஒரே மூச்சில் ஒரே வீச்சில்! ரவிச்சந்திரன் மட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வரும் பாடல். (‘காதல் ஜோதி’யில் டி. கே. ராமமூர்த்தி இசையில்.)
அந்த “ஆடி அடங்கும் வாழ்க்கையடா..” இவரின் மாஸ்டர் பீஸ்! முதல் வரியை மூன்றாவது வரியில் ஆழப்படுத்திப் பாடுவது அழகு என்றால் 'தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை' என்று முடிப்பது சிலிர்க்க வைக்கும். நாலு வித்தியாச சரணங்களையும் நாலு வித உருக்கத்தில்!
காதலைக் கம்பீரமாகவும் வெளிப்படுத்துவார். “அமுதும் தேனும் எதற்கு?” என்று. கனிவாகவும்! ‘காதல் ஜோதி’யில் “உன் மேலே கொண்ட ஆசை, உத்தமியே மெத்த உண்டு..” ‘கொடுத்து வைத்தவளி’ல் “பாலாற்றில் சேலாடுது.. இரண்டு வேல் ஆடுது.. இடையில் நூல் ஆடுது.. மனது போராடுது!”
அந்தப் பாடலில் கடைசி சரணம் மட்டும் கணீர்க் குரலுடன் இவர் வந்து பாடும் போது பாடல் லிஃப்ட் ஆகும் அழகே தனி. எம் எல் வசந்தகுமாரி பாடும் “மோகன ரங்கா என்னைப் பாரடா..” பாடலில் “அலை கடல் பெற்ற அருள் பெண் போலே..” எனப் பாடியபடி! நாலுவரி நச்சென்று!
ஒரு தெம்மாங்கு இவர் பாடினால் நாலு மாமாங்கத்துக்கு நினைவிருக்கும். "சிங்கார தேருக்கு சேலை கட்டி... " இன்னும் எல்லார் மனதிலும் கூடு கட்டி இருக்கிறது என்றால் "பட்டணம் தான் போகலாமடி.." இன்னும் மனதை விட்டுப் போகவே இல்லை.
எங்கிருந்தோ ஒலிக்கும் குரல் மாதிரி இராது, இதயத்திலிருந்து ஒலிக்கும் அது! “எங்கிருந்தோ வந்தான்.. ரங்கன்..ரங்கன்..” பாடலில் “நண்பனாய்.. மந்திரியாய்.. நல்லாசிரியனுமாய்.. பண்பிலே தெய்வமாய்…” படிப்படியாக இப்படிக் குரலை ஏற்றிக்கொண்டே போய் விட்டு, “பார்வையிலே சேவகனாய்..” என்று இறகாய் இறங்கும் போது யார் மனம்தான் கிறங்காது?

Tuesday, January 16, 2024

பாடகியாக இருந்து நடிகை ஆனவர்...


நாலு வருடம் முன்பே Leonardo DiCaprio வுடன் ‘Romeo + Juliet’ படத்தில் நடிக்க வேண்டியது, அந்தப் பிரபல பாடகி. பொறுத்திருந்து Jet Li யுடன் ‘Romeo Must Die’ படத்தில் நாயகியானார். அந்த சேஸ் காட்சியையும் தொடர்ந்து தன் கரங்களில் அவரை ஏந்திக் கொண்டு ஜெட் லி சண்டையிடும் காட்சியையும் மறக்க முடியுமா?

Aaliyah... இன்று பிறந்தநாள்!

பிரபல பாடகியாக இருந்து நடிகை ஆனவர் லிஸ்டில் முக்கியமானவர். முதல் ஆல்பமே மூன்று மில்லியன் விற்றது.

விமான விபத்தில் 22 வயதில் உலகை பிரிந்தது துயரமானது. 22 நாடுகளில் இசை நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு இருந்தாராம் அப்போது. கடைசியாக நடித்த படம், ‘Queen of the Damned’ அடுத்த வருடம் ரிலீஸ் ஆனது. ‘Try Again..’ பாடல் கிராமி அவார்டு நாமினேஷன் பெற்றது.

Quotes?
‘தினமும் அதைச் செய்ய விருப்பம் எழ வேண்டுமானால் அந்த வேலையை நீங்கள் நேசிக்க வேண்டும்.’

‘முதலில் நீங்கள் ஜெயிக்கவில்லையானால் கையைத் துடைத்து விட்டு மீண்டும் முயற்சிக்கலாம்.’

>><<>><<

Sunday, January 14, 2024

வீராங்கனை...

 


அம்மாவிடம் தையல் படித்துக் கொண்டு அவள்பாட்டுக்கு வயற்காட்டில் சுற்றிக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பொண்ணுக்கு மீண்டும் மீண்டும் மனதில் குரல் ஒலித்தது. மகுடம் இழந்த மன்னரை மறுபடி அரியணை ஏற்றும் பணியில் இறங்கச் சொல்லிற்று அது.

படையொன்றைத் தரும்படி மன்னரிடம் சென்று கேட்டாள். அதைக் கொண்டு ஆர்லின்ஸ் நகரை மீட்டாள். தொடர்ந்தன வெற்றிகள். பிரெஞ்சு மன்னராக முடி சூட்டிக்கொண்டார் சார்லஸ்.
ஆனால் கோம்பீன் நகரை மீட்கப் போராடியபோது பிடிபட்டாள், ஆணுடை தரித்துப் போராடிய அந்த 18 வயது மங்கை. மரண தண்டனை விதிக்கப்பட்டாள்.
Joan of Arc... பெண் வீரத்தை வரலாற்றில் பொறித்த வீராங்கனை பிறந்த நாள் இன்று.

>><<>><<