Monday, July 31, 2023

மூன்றாவது...


 ‘Kaajal’ படத்தில் ஒரு துணைப் பாத்திரத்தில் வருவார் அந்த நடிகை. பத்மினிக்கும் அவருக்குமான காட்சிகளை பார்க்கும்போது (ரோஷமூட்டும் காட்சியில் இவர் சொல்லும் வசனம் ஒன்று பத்மினியின் காதுகளில் மட்டுமல்ல, பார்ப்போர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்) இணையான அழகும் நடிப்பும் உள்ள இவர் எப்படி இன்னும் பெரிய கதாநாயகி ஆகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. எண்ணி சில வருடங்களிலேயே most sought-after ஹீரோயின் ஆகிவிட்டார். திலீப் குமார், தேவ் ஆனந்த் ஜோடியாக நடித்ததோடு ராஜேஷ் கன்னாவோடு பத்துப் படங்களில் most successful ஜோடியாக.

Mumtaz…. இன்று பிறந்த நாள்! இனிய
வாழ்த்துக்கள்
!
அவரின் திரை வாழ்க்கையை மூன்று பருவமாக பிரிக்கலாம். 1. சாந்தாராம் படங்கள் (Stree, Sehra) உட்பட பெரிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தது... 2. பத்துப் பதினைந்து தாராசிங் படங்களில் ஹீரோயினாக வந்தது. 3. டாப் ஹீரோயினாக ஜொலித்தது.
நட்சத்திரம் ஆக்கிய படம் ‘Do Raaste’ துணை வேடம், சில காட்சிகள்தான் என்றாலும் நான்கு பாடல் காட்சிகள் அவருக்கு கொடுத்திருந்தார் இயக்குநர் Raj Khosla.
கலகலவென்று சிரிக்கும் அந்த innocent laughter.. சட்டென்று அகல விரியும் கண்கள்... பதினெட்டைத் தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் முகம்... இதெல்லாம் அவருக்கே ஆன சில அடையாளங்கள்!
திலீப்குமாருடன் ‘மாந்தோப்பில் நின்றிருந்தேன்..’ இந்திப் பாடலுக்கு ‘ராம் அவர் ஷ்யாம்’ படத்தில் ஆடும்போதும் சரி, ’காஞ்சீரே.. காஞ்சீரே..’ என்று ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'வில் தேவ் ஆனந்த் தேடும்போது ஆடைத் தொழிற்சாலைக்குள் ஒளிந்தோடும்போதும் சரி, அந்தப் பெரிய கதாநாயகர்களுடன் ரம்மியமாகக் காட்சியை பகிர்ந்து கொள்வார், Not to mention ‘பிரம்மச்சாரி’யில் ஷம்மி கபூருடன் ‘ஆஜ்கல் தேரே மேரே ப்யார்....’ என்ற அந்த அட்டகாச நடனம்!
ரிகார்டுகளில் ஒன்று ராஜேஷ் கன்னாவுடன் நடித்த எட்டுப் படங்களின் பிளாட்டினம் ஜூபிலி. நடிப்பில் கலக்கிய படம் அவருடன் ‘Aap Ki Kasam’ என்றால், முத்திரை பதித்த படம் சஞ்சீவ் குமாருடன் ‘Khilona’ (இந்தி எங்கிருந்தோ வந்தாள்). உச்சக் காட்சியில் ஞாபகம் இல்லையா, ஞாபகம் இல்லையா என்று ஒவ்வொன்றாகச் சொல்லி சஞ்சீவ்குமாரின் நினைவு நியூரான்களை ஆக்டிவேட் செய்ய பதைபதைப்புடன் கதறும் காட்சியில் ‘இதோ, இன்னொரு மீனாகுமாரி’யாகியிருப்பார். (Filmfare Award).
‘அரங்கேற்றம்’, படம் இந்தியில் அரங்கேற்றம் ஆனபோது (‘Aaina’), நடிப்புக்கு மற்றொரு நல்ல வாய்ப்பு.
ஆனால் பின்னி யெடுத்தது தேவ் ஆனந்தின் மனைவியாக ‘தேரே மேரே ஸப்னே’ யில் தான்! நடிகை ஹேமமாலினியுடன் பழகும் கணவனின் போட்டோ பார்த்து கோபத்தில் இருப்பார். கண்ணைக் கசக்கிக் கொண்டு அடுக்களையில். வீட்டுக்கு வரும் தேவ் அவள் பேச்சைப் பார்த்து, என்ன ஆச்சுன்னு கேட்டபடி அவளிடம் வர, அந்த சண்டைக்கிடையிலும், “ஷூவைப் போட்டுட்டு அடுக்களைக்குள்ளே வராதீங்க, ஆமா!”ன்னு கத்துவது ஓ, மறக்க முடியாத சீன்.
><><><

Friday, July 28, 2023

ஏ ஒன் திரைப்படங்கள்...


ஹாலிவுட்டுக்கு எம்.ஜி.எம் என்றால் நமக்கு ஏ.வி.எம். (மற்ற தூண்கள் ஜெமினியும் மாடர்னும் பட்சிராஜாவும் விஜயா வாகினியும்…)

ஏ ஒன் திரை ஓவியங்களைத் தந்த ஏ.வி.எம் ஸ்தாபகர்…
ஏ.வி.மெய்யப்பன்… இன்று பிறந்த நாள்!
திரையில் ‘ஏ.வி.எம்’ என்று ஒளிர்ந்ததும் ஒலித்ததும் நிமிர்ந்து உட்காருவோம் நம்பிக்கையுடன். ஒருநாளும் பொய்த்ததில்லை.
சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்று அவர் இளவயதிலேயே ஆரம்பித்த இசைத்தட்டுக் கம்பெனி வெற்றிகரமாக சுழன்று ஏ.வி.எம் ஸ்டூடியோவாக வந்து நின்றது. ‘அல்லி அர்ஜுனா’.. ‘ரத்னாவளி’... எடுத்த முதல் இரு படங்களும் தோல்வி அடைந்தபோதும் எடுத்து வைத்த அடியை நிறுத்தாமல் தொடுத்தார் தன் கணைகளை.
மராத்தி படத்தை தமிழில் ‘நந்தகுமார்’ என்று தயாரித்து பதின்ம வயது டி.ஆர்.மகாலிங்கத்தை அறிமுகப்படுத்தினார். அந்தக் காலத்திலேயே ஸ்டூடியோ இல்லாமல் வாடகைக்கு இடம் எடுத்து அவுட்டோரில் படமாக்கியிருக்கிறார்.
சினிமாவை கரைத்துக் குடித்தவரின் ஊர் காரைக்குடி. இரண்டாம் உலகப்போரின் போது அங்கேயே ஒரு ஸ்டூடியோவை தொடங்கினார். பம்மல் சம்பந்த முதலியார், பாவலர் பாலசுந்தரம் நாடகங்களை எல்லாம் படமாக்கினார். வேதாள உலகம், சபாபதி, பராசக்தி....
‘பராசக்தி’ தந்தவரின் ஆரம்ப ஸ்தாபன பெயர் பிரகதி. பிரகதியின் ‘ஸ்ரீவள்ளி’ நினைவிருக்கிறதா? “காயாத கானகத்தே.. 'நின்று உலாவும்' நற்காரிகையே…” டி.ஆர். மகாலிங்கம் குமாரி ருக்மணியை வலம் வர, நகர்வதே தெரியாமல் டிராலி காமிரா நளினமாக ஊர்ந்து அவர்களை வலம் இடம் வர… ‘ஸ்ரீ வள்ளி’ 'வென்று உலாவியது' தமிழ்நாட்டை. (டிராலியை எப்படி அழகாக உபயோகிப்பது என்று தெரிஞ்சுக்கலாம்!) முதல் முதலாகப் பின்னணிப் பாடல் இடம் பெற ஆரம்பித்தது அதில்தான்.
ப. நீலகண்டன் எழுதி எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்திக்கொண்டிருந்த நாடகத்தை (‘நாம் இருவர்’) படமாக தயாரித்து இயக்கினார். அந்த முதல் பிரமாண்ட வெற்றிப் படம் 150 படங்களுக்கு மேல் தயாரித்தவரை நிலைநிறுத்தியது. பெரும்பாலும் குடும்ப படங்களே... அவர்களே புகழ் பெற்ற குடும்பம் ஆச்சே?
எதை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்று தெரிந்தவர். ‘Ladki’ என்று தான் இந்தியில் எடுத்ததை 'பெண்' என்று தமிழில்…. ‘வாழ்க்கை’ என்று தமிழில் எடுத்ததை ‘Bahar’ என்று இந்தியில்… ‘ஆதர்ச சதி’ என்று கன்னடத்தில் எடுத்ததை ‘நாக தேவதை’ என்று தமிழில்... ‘செல்லப்பிள்ளை’ என்று தமிழில் எடுத்ததை ‘வாதினா’ என்று தெலுங்கில்...
ஏவிஎம்மின் ‘வாழ்க்கை’தான் வைஜயந்தி மாலாவின் திரை வாழ்க்கையை தொடங்க வைத்தது. இந்தியிலும் அவரே நடித்து ஹிட்டாக, ஸ்டார் ஆனார்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்…” இது அப்போதே இவரது ‘பெண்’ (1954) படத்தில் வந்த பாட்டு.
பாடல்களுக்கு பெயர்போன படங்களைத் தந்து கொண்டிருந்தவர், துணிந்து பாடல் இல்லாத படத்தை தந்தார் அந்த நாளிலேயே: ‘அந்த நாள்.’ அகிரா குரோசோவாவின் ‘ரேஷமானு'க்கு ஈடாக. முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை ரசிக்க வைத்த, பல ஷாட்களில் பிரமிக்க வைத்த படம்!
இந்திக்கு கொண்டு போன ‘நானும் ஒரு பெண்’, ‘அன்னை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’... எல்லாம் இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தன என்றால், ‘Chori Chori’ ‘Chaya’ ‘‘Bhai Bhai’ ‘Jaise Ko Taisa’ என்று நேரடி இந்திப் படங்களும் தரத் தவறவில்லை. சிறந்த குழந்தைகள் படம் என்று நேஷனல் அவார்டு வாங்கிய ‘Hum Panchhi Ek Dal Ke’ ஏவிஎம் தந்த காவியம் என்றால் ‘பாவ மன்னிப்பு’ ஏவிஎம் தந்த ஓவியம்...
அவர்களின் Magnum opus என்றதும் கண் முன்பே வரும் ‘அன்பே வா’... வசூல் ரிகார்டுகளைப் புரட்டிப் போட்ட ‘முரட்டுக்காளை’...
தனியே ஞாபகப் படுத்த வேண்டியதில்லை: ‘உயர்ந்த மனிதன்’, ‘பார்த்தால் பசி தீரும்’....
டீஸண்ட் சினிமா என்று ஒரு பிரிவை ஒதுக்கினோமானால் தரமான படங்களை தவறாமல் தந்து கொண்டிருந்த இவரின் அநேக படங்கள் அதன் கீழ் வந்துவிடும்.

><<>><

Wednesday, July 26, 2023

மேடையே விருப்பம்...


‘இப்போது நீங்க அஞ்சு பேரும் உயிரோடு இருப்பது, நீங்க யாருடைய சரக்கைக் கொள்ளையடித்தீர்கள் என்ற விவரம் உங்களுக்குத் தெரியாது என்கிற ஒரே காரணத்தினால்தான்!’ என்கிறான் வில்லனிடமிருந்து வந்தவன், அந்த ஐந்து மினி சைஸ் திருடர்களிடம். உயிர் பிழைக்க அவர்களுக்கு ஒரு ஃபைனல் அஸைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. கொடுத்தது யார் என்று தெரியும் போது..?

சப்த நாடியும் ஒடுங்கினாற்போல் விசாரணைக்காக அமர்ந்திருக்கும் கெவின் பாத்திரம்தான் படத்தின் உயிர் நாடி. ‘The Usual Suspects’-இன் அந்த தன் முதல் காட்சியிலிருந்து காரில் ஏறும் கடைசி காட்சி வரை அவர் நடிப்பு ரசி ரசி என்று கதறும். அப்படியே அள்ளிக்கொண்டு விட்டார் Best Supporting Actor ஆஸ்காரை! நாலாவது வருடம் Best Actor பரிசையும் ('American Beauty')
Kevin Spacey... இன்று பிறந்த நாள்!
இவர் குரல் தனி ஒலி. வித்தியாசமான, மெதுவாய்த் தவழ்ந்து வரும் குரல்.
Top 10 வில்லன்கள் பட்டியலில் இரண்டு இடத்தை இரண்டு படங்களுக்காக அள்ளிக்கொண்டு விட்டவர் இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.
’Se7en’ படத்தில் சீரியல் கில்லர் ரோல் இவருக்கு. பாவத்துக்கு ஒருவராக ஏழு அப்'பாவி'களை கொலை செய்ய கிளம்பும் அவரின் மாடஸ் ஆப்பரேண்டியைக் கண்டுபிடித்து அவரைத் தூக்க முயலும் அதிகாரியாக Morgan Freeman! சபாஷ் சொல்லும் சரியான போட்டி!
சக்கைப்போடு போட்ட படம் ‘L.A.Confidential’. நட்சத்திரங்களின் வீக்நெஸை வைத்து நாலு காசு ஸைடில் பார்த்துக் கொண்டிருந்தவர், நல்ல பக்கம் சேர்ந்து உண்மைக்காக போராடும் போலீஸ் அதிகாரியாக மாறுவதை நவீனமாக சித்தரித்திருப்பார்.
திரையை விட மேடையே விருப்பம். என்ன சொல்றார்? ‘என்னதான் பிரமாதமாக நீங்கள் ஒரு படத்தில் நடித்தாலும் அதை விட நன்றாக அதில் நீங்கள் நடிக்க முடியாது. நாடகத்தில் அடுத்த செவ்வாய்க்கிழமை நீங்கள் இன்னும் பிரமாதமாக நடிக்க முடியும். அது தான் நாடகத்தின் த்ரில்!’
‘நாடக மேடை செய்து நசிந்து விட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர்கள் கதை கேட்க விரும்பும் வரை, மனிதர்கள் கதை சொல்ல விரும்பும் வரை நாடகம் உயிரோடுதான் இருக்கும்.’
நல்ல பாத்திரத்தை நாடிப் போவார். Woody Allen-க்கு Netflix சந்தா ஒன்றை அனுப்பினாராம் என் படங்களைப் பார்க்கலாமே என்றபடி. கண்டிப்பாக உங்களைப் பயன்படுத்திக் கொள்வேன் என்று அவர் பதிலளித்தார்.
Jack Lemmon தான் இவரது ரோல்மாடல். ‘எப்படி ஒரு நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் இருக்க முடியுமென்று அவர் தான் கற்றுக் கொடுத்தார் எனக்கு.’
Other Quotes? ‘வெற்றி என்பது செத்துப் போவது மாதிரி. மேலும் மேலும் வெற்றி அடையும்போது இன்னும் உயரத்தில் உங்கள் வீடுகள் அமையும். இன்னும் உயரமாகும் வீட்டுச் சுவர்கள்.’
‘மிகப்பெரும் வெற்றி அடைந்ததும் அந்த கேள்வி உங்கள் முன் வந்து நிற்கும்: இதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? கார், வீடு, வசதிகள் என்று வாங்கிக்கொண்டு ஒதுங்கி ஓய்வு எடுக்கப் போகிறீர்களா அல்லது அந்த வசதிகளை வைத்துக் கொண்டு ஏதாவது செய்து அன்பைப் பரப்பப் போகிறீர்களா?’

>><<>><<