Wednesday, November 22, 2017

நல்லதா நாலு வார்த்தை... 84

’சிலர் தாங்கள் செல்லுமிடமெல்லாம் 
சந்தோஷத்திற்குக் காரணமாகிறார்கள்.
மற்றவர் தாங்கள் சென்றுவிடும்போதெல்லாம்.’
- Oscar Wilde
('Some cause happiness wherever they go;
others whenever they go.')


'என்ன பெற்றுக்கொள்ள முடிகிறது 
அதிலிருந்து நம்மால் 
என்பதை வைத்து அளவிடப்படவேண்டும்
ஒரு புத்தகத்தின் மதிப்பு.'
- James Bryce
('The worth of a book is to be measured
by what you can carry away from it.')


’உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழி 
வேறு யாரையேனும் உற்சாகப்படுத்த முயல்வதுதான்.’
- Mark Twain
(”The best way to cheer yourself up is to try 
to cheer somebody else up.’)


'அறிவிலிதான் அளவிடுவான் தண்ணீரின் 
ஆழத்தை இரு கால்களாலும்.'
- African Proverb
('Only a fool tests the depth of water with both feet.')


’எங்கே நீ சென்றாலும் 
எல்லா உன் இதயத்தோடும் செல்.’
-Confucius
('Wherever you go, go with all your heart.')


’அதிசயங்களற்றுத் தவிக்காது
அவனி ஒருபோதும்;
அதிசயித்தலற்று மட்டுமே.’
-G. K. Chesterton
(’The world will never starve for want of wonders;
but only for want of wonder.’)


’மாற்றப்படவே உருவாக்கப் படுகின்றன 
அபிப்பிராயங்கள் -
மற்றெப்படி உண்மை 
அடையப்பட முடியும்?’
-Lord Byron
('Opinions are made to be changed - or 
how is truth to be got at?')


'எத்தனை உனக்கு சாத்தியமென 
எண்ணுகிறாயோ அதனினும்
எள்ளளவேனும் அதிகம் செய் தினமும்.'
-Lowell Thomas
('Do a little more each day than you think you possibly can.')


'அதிகாலை நாலு மணிக்கு 
அழைக்க முடிகிற நண்பர்கள் 
அமைந்திருப்பதுவே விசேஷம்.'
-Marlene Dietrich
('It's the friends you can call up at 4 a.m. that matter.')


'மற்றவர்கள் உன்னைப் பற்றி 
கொண்டிருக்கும் அபிப்பிராயம்
அவர்களின் பிரசினை,
உன்னுடையதல்ல.'
- Elisabeth Kubler-Ross
('The opinion which other people have of you
is their problem, not yours.')

><><><

Friday, November 17, 2017

அவள் - (கவிதைகள்)

431.
நான் பேச நீ நினைப்பதை
பேசுகிறேன்
நீ பேசாமலேயே...
<<>>

432
நீ அருகிருக்க உன் அழகை
நீ அகல உன் மன அழகை
என எப்போதும்...
><><

433.
மழையற்ற நேரங்களில்
நீயே என் மழை.
><><

434.
வாழ்வில் நீ வந்தபின்
சிலிர்ப்பதே வாழ்வானது.
><><
435.
இப்படி ஒரு நீ எனக்கு இருப்பதை
இன்னமும் நம்ப முடியாமல் நான்.
><><
436.
நாளில் நீ நுழைந்ததும்
நாளே வினாடியானது.
><><

437
இலையப்பமோ இஞ்சிப்பச்சடியோ
மாக்கோலமோ மருதாணியோ
கண் சிமிட்டோ கசக்கலோ
எதுவோ ஒன்றால்
நாளை டயரியாக்கிவிடுகிறாய்...
><><

438
சிலிர்க்க வைக்கிறது உன் அன்பு,
சிரித்து ரசிப்பதோடு சரி என் பங்கு.
><><

439
ஏதோ சொல்ல வாயெடுக்கிறேன்..
எப்படியோ புரிந்து விடுகிறது
அதற்குள் உனக்கு.
><><

 440
எந்தப் பக்கம் திரும்பி
உன்னிடம் பேசுவது,
எல்லா பக்கமும்
நீ தெரிகையில்?
><><

Wednesday, November 15, 2017

மௌனம் புரிந்தது...

அன்புடன் ஒரு நிமிடம்... 119

”புறப்படுங்க. நீங்கதான் வந்து புத்தி சொல்லணும்.”
”யாருக்கு?”
”எங்கப்பாவுக்கு.”
சாத்வீகன் விழித்தார்.  ஒரு நிமிடம்தான்.  ”சரி.”
விளக்கினான் ஷ்யாம். நண்பரின் மகன். ”இன்னமும் அவர் காலத்திலேயே இருக்கிறார். பழம்பெரும் விஷயங்களைப் பேசிக்கொண்டு... இந்த தலைமுறையின் வேகமும் சரி, விவரமும் சரி அவர்கிட்டே இல்லே. எப்படி என்னத்தை பேசமுடியும் நான் அவரிடம்?  கொஞ்சமும் மாறவேமாட்டேங்கிறார். நீங்கதான்...”
”சொல்லிட்டேயில்லே?... புறப்படு.”

கிராமத்தில்...
போய் சேர்ந்த நேரம் நண்பகல்.
விறகு அடுப்பிலிருந்து கொதிக்கக் கொதிக்க மீன் குழம்பை எடுத்துவந்துஊற்றினாள் அவன் பாட்டி. இன்னொரு அடுப்பில் வத்தல் குழம்பு மணம் மூக்கை துளைக்க...
”சுடச்சுட சாப்பாடு! எப்படி சுவையா இருக்கு, பாத்திங்களா?” என்றான் சாத்வீகனிடம்
சாயங்காலம் வரை பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அந்த டாபிக் பற்றி வாயைத் திறக்கலையே இவர். ஆச்சரியம் அவனுக்கு.
அது மட்டுமா? ”வெளியே கிளம்புவோம். ஊரை நல்லா சுத்திப் பாக்கணும்.” என்றார்
”சாப்பாடு நைட்டுக்கு?”
”வெளியே பார்த்துக்கறோம். சுடச்சுட பரோட்டா...”
சுற்றினார், சுற்றினார் அப்படி ஒரு அலைச்சல்.
திரும்பின நேரம் ஓட்டலும் திறந்திருக்கவில்லை. பசியும் உக்கிரம்.
வீட்டுக்கு வந்தால் மத்தியான சோறும் குழம்பு கொஞ்சமும். காலையில் மீந்துபோன இரண்டொரு ஆப்பமும் சாம்பாரும்தான் மீதி இருந்தது.
உற்சாகமின்றித்தான் உட்கொள்ள ஆரம்பித்தான். ஆனால் அந்த குழம்பில் பிசைந்த சோற்றின் ருசி. சாம்பார் ஊற்றிய ஆப்பத்தின் சுவை. ”அட சூப்பரா இருக்கே?” என்றான்.
’எப்படி, எப்படி இத்தனை ருசி..?” அவனே கேட்டுக் கொண்டு... சற்றே யோசித்து அவனே பதிலும் சொன்னான், “மத்தியானமே செய்ததுதான். ஆனால் அதனாலேயே அதில் உப்பும் புளியும் இன்னும் நல்லா ஊறி... மொத்த கலவையும் அலாதியாக  செட் ஆகி அருமையா இருக்கு. சுடச்சுட சாப்பிடும் புது சாப்பாட்டில் எப்படி ஒரு ருசி இருக்கோ, அது மாதிரி பழைய சாப்பாட்டின் சுவை இன்னொன்று....”
சொல்லிக் கொண்டேயிருந்தவன் சாத்வீகன் தன் பார்வையை செலுத்திய இடத்தைப் பார்த்தான். அவர் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
சாத்வீகனின் மெஸேஜ் புரிந்தது
மறு நாள் ரயிலில் திரும்ப வந்து கொனடிருந்தபோது சொன்னான்.
”யூ ஆர் ரைட். அந்தக்கால மனிதர்தான் என்றாலும் அவரிடம் அத்தனை வாழ்ந்த காலத்துக்கான பக்குவப்பட்ட பார்வை இருக்கு. அந்தப் பார்வை... அதுவும் அர்த்தமுள்ளதுதான். இந்தக்காலத்து இளைஞனான என் பார்வை மாதிரி அதுவும்!”
இவர் புன்னகைத்தார்.
><><
('அமுதம்’ ஜூலை 2015 இதழில் வெளியானது)

Tuesday, November 14, 2017

நல்லதா நாலு வார்த்தை - 83

'மட்டற்ற உழைப்புக்கு 
மாற்று இல்லை.'
<>
- Edison
('There is no substitute for hard work.')


'உண்மையான செல்வங்கள் என்பவை நம்
உள்ளே உடையதாயிருக்கும் செல்வங்களே!’
<> 
- B C Forbes
(’Real riches are the riches possessed inside.’)


'ஏதேனும் ஒரு பிராணியை நேசிக்காதவரையில் 
விழித்துக் கொள்ளாமலேயே இருக்கிறது
மனிதனின் ஆன்மாவின் ஓர் பகுதி.'
<>
-Anatole France
('Until one has loved an animal, a part of one's
soul remains unawakened.')


'ஒவ்வொருவருக்கும் தோதாகத் 
தன்னைச் செதுக்கிக் கொள்பவன்
தன்னையே விரைவில் 
தறித்து இழந்திடுவான்.'
<>
-Raymond Hull
('He who trims himself to suit everyone
will soon whittle himself away.')


'யாருக்கு நண்பர்கள் அதிகமோ 
அவருக்கு யாருமில்லை.' 
<>
-Aristotle
('He who hath many friends hath none.')


செயலோடு இணையாத ஒரு யோசனை,
மூளையில் அது உதித்த உயிரணுவைவிட 
சற்றும் அளவில் பெரிதாவதில்லை ஒருபோதும்.'
<>
- Arnold Glasow 
(’An idea not coupled with action will never get
any bigger than the brain cell it occupied.’)


அனைத்து நற்குணங்களிலும் ஆகப்பெரியது துணிவே.
ஏனெனில் துணிவு நம்மிடம் இல்லாவிடில்
மற்றவற்றில் எதையும் உபயோகிக்கும் 
சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.'
<>
- Samuel Johnson
('Courage is the greatest of all virtues,
because if you haven't courage, you may
not have an opportunity to use any of the others.')


'பணக்காரன் என்பவன் 
பணம் உடைய ஓர் ஏழையன்றி 
வேறில்லை.'
<>
- W C Fields
('A rich man is nothing but a poor man with money.')


'ஒருபோதும் நமக்குப் போதுமான அளவு 
கிடைத்திடாத ஒரு விஷயம் அன்பு. 
ஒருபோதும் நாம் போதுமான அளவு 
கொடுத்திடாத ஒரு விஷயமும் அதுவே.’
<>
- Henry Miller
('The one thing we can never get enough of is love.
And the one thing we never give enough is love.')


'திகைப்படைவது, வியப்பது என்பது
புரிந்துகொள்ளத் தொடங்குவதாகும்.’
<>
- Jose Ortega y Gasset
('To be surprised, to wonder, is to begin to understand.')

><><><><