Monday, December 31, 2012

இனிய 2013!
சென்றோடிற்றே பன்னிரெண்டு

செண்டோடிங்கே நின்றோமின்று

ரெண்டாயிரத்துப் பதின்மூன்று

கண்டானந்தம் பெறவென்று...


தொடங்கிடும் பதின்மூன்று

தந்திடட்டும் வரமொன்று

திசையெங்கும் அன்பென்று!திக்கிறது பதின்மூன்று

உன்னதப் படுத்துவோம் அதை

உத்வேகத்துடன் முன்நின்று!The gaiety and happiness
a new Day brings...

the joyful excitements
a new Week unveils...

the spectacular ideas 
a new Month lays out...

the myriad opportunities 
a new Year unfolds...

May you have more,
more of them in 2013!

Wednesday, December 26, 2012

தண்ணென்று ஒரு காதல்...மையல் கொண்டவன் மனதில் தான் 

மையம் கொண்டிருந்ததறிந்துண்-

மையில் மகிழ்ந்து போன மயில்

தண்ணென்றிருக்கும் நீரையள்ளி

தன் நெஞ்சறிய அவன் மீதிறைத்து 

என்னென்னவோ என்றெழுந்த 

எண்ணங்களைப் பகிர்ந்தாள். 

<<>>

(ஓவியம்: ஓவிய மேதை மாதவன்)
நன்றி: வெங்கட் நாகராஜ் (அவர் தன் blog இல்
இந்தப் படத்தை கொடுத்து அதற்கான
கவிதைகளை வரவேற்றிருக்கிறார்.
http://www.venkatnagaraj.blogspot.com/2012/12/blog-post_24.html)   

Saturday, December 22, 2012

முயற்சிக்க ஒரு பயிற்சி


அன்புடன் ஒரு நிமிடம் - 23


முயற்சிக்க ஒரு பயிற்சி

ரைமணி நேரத்துக்கு மேலாயிற்று அவர் உள்ளே நுழைந்து. கிஷோர் அவரைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அத்தனை ஆழ்ந்திருந்தான் தான் செய்து கொண்டிருந்த வேலையில்.

என்ன நினைத்தாரோ ராகவ், தன் இருப்பை காட்டிக் கொள்ளாமலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆச்சரியம் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. என்ன ஒரு ஈர்ப்பு!

கிஷோர் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கவில்லை, ஃபேஸ்புக்கில் மூழ்கியிருக்கவில்லை. துணிகளை அயன் செய்துகொண்டிருந்தான், அவ்வளவுதான். ஆனால் அந்தக் காரியத்தில்தான்  என்ன ஒரு ஈடுபாடு!

உலர்த்திய ஆடைகளை ஹேங்கரோடு எடுத்து வந்து சோபாவில் ஒரு குழந்தையைப் போலக் கிடத்தியிருந்தான். ஒவ்வொரு சட்டை அல்லது பேண்டை எடுக்கும்போதும் அதை நெஞ்சோடு சேர்த்து வைத்து நீவி விட்டு பின் மெதுவாக ஹேங்கரிலிருந்து விடுவித்து, மேஜையில் பிங்க் செவ்வகமாக விரித்திருந்த விரிப்பில் படர்த்தினான்.

அந்த வரிசை! முதலில் காலர், பின் தோள் புறம், கைகள்அதுவே ஒவ்வொரு உடைக்கும் சரியான ஒரு வரிசையில், வேறெப்படி செய்தாலும் சரிவராது என்கிற மாதிரி கச்சிதமாக...

பக்கத்தில் அழகிய பௌலில் தண்ணீர் வைத்திருந்தான். வெல்வெட் போன்ற ஒரு சிறு துணி. அதை அவன் அதில் அமிழ்த்தி எடுத்த விதமே ஒரு தூரிகையை கலரில் முக்கியது போல மிருதுவாக...இதமாக தண்ணீரைத் தெளித்தது ஏதோ கல்யாண வரவேற்பில் பன்னீர் தெளித்த மாதிரி..., இஸ்திரிப் பெட்டியை முன்னோக்கித் தோய்த்தது பெருங்கடலில் கப்பல் செல்லுவது போல...

ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அழகாக, லயித்து லயித்து செய்கிறான்! ஒவ்வொரு அசைவும் எத்தனை நளினமாக! எழும் ஒவ்வொரு சப்தமும் எத்தனை லயத்தோடு! வைத்த கண்ணை எடுக்கவில்லை அவர்.

கடைசி டீஷர்ட் வரை முடித்தபின்தான் மெல்லத்திரும்பினான். அட மாமா, எப்ப வந்தீங்க?”

இப்பதான் ஒரு முப்பது நிமிஷம்

ஆமா எங்கே வந்தீங்க?”

உன் மேட்டர்தான். அன்னிக்கு ஒரு சந்தேகம் சொல்லி வழி ஏதும் இருக்கான்னு கேட்டியே, அது பத்தித்தான் ஒண்ணும் ஐடியா தேறலேன்னு சொல்லிட்டு போக வந்தேன். என்றவர் ஆனா,” என்று சொல்லி நிறுத்தினார். இஸ்திரி போடறதை இத்தனை இஷ்டத்தோட இழைத்து  இழைத்து செய்கிற இளைஞனை நான் இதுவரை பார்த்ததில்லை.”

இந்த ஒரு விஷயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அயன் பாக்ஸைக் கையில எடுத்தேன்னா போதும் அப்படியே தன்னை மறந்துடுவேன்.

இப்ப ஒரு விஷயம் சொல்லட்டுமா? அன்றாடம் நீ எத்தனையோ வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். கஷ்டமான செய்யப் பிடிக்காத வேலைகள் தான் பெரும்பாலும் அதில் இருக்கும். ஆனா செய்தாகணும். இல்லையா? அப்படி ஒண்ணை எடுத்துக்க. ஒரு நிமிஷம் அதை உனக்கு ரொம்பவும் பிடித்த வேலையாக கற்பனை செய்துக்க. அதாவது அந்த விஷயம் இதோ இந்த அயனிங் மாதிரி உனக்கு மிகவும் பிடித்த வேலையாக இருந்தால் அதை எப்படி செய்வாயோ அந்த மாதிரி நினைத்துப் பார்த்து அப்படி ஒரு முறை செய்து பார். அப்படி செய்தால் கொஞ்ச தடவைகளில் எந்த வேலையுமே அதனோடு சுலபமாக ஒன்ற முடிகிறதாக மாறிவிடும்! ஏன், நாளடைவில் சுலபமாக செய்யக் கூடியதாகக் கூட ஆகிவிடும். ட்ரை இட்! அப்புறம் தாங்க்ஸ்! நீ கேட்ட விஷயத்துக்கு உன்னிடமிருந்துதான் எனக்கும் ஜஸ்ட் நௌ ஒரு விடை கிடைச்சது!

எரிச்சலும் விருப்பக் குறைவுமா இருக்கு, எப்படி என் முன்னாலுள்ள எல்லா வேலைகளையும் கடமைகளையும் முடிக்கிறது?’ என்பதுதான் அவன் கொஞ்ச நாள் முன்பு அவரிடம் கேட்டது.
 <<<>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் எழுதியது)


Monday, December 17, 2012

மார்கழி
மாதங்களில் நானென்று

மாதவன் சொன்ன

மார்கழி பிறந்ததின்று..

காலை அதிகாலையில்

களித்தெழுந்த மனம்

கனிந்து அவன்பால் உருக

நாடும் வீடும் சுற்றம்

நாம் உள்ளும் எல்லாரும்

நலமே பெற இறைஞ்சிற்று


வாசலிலே வண்ணக் கோலம்

வார்த்தையெலாம் ராம நாமம்

குளிர் பனியில் கத கதப்பு

கூடவே வரும் சுறு சுறுப்பு

வலம் வரும்போது மனதில்

இடம் பெறும் இதமொன்று

இறைவன் பதமே சதமென்று.

<<>> 

Friday, December 14, 2012

உள்ளீடு
தோசை வார்ப்பது லேசாயில்லை. 

எப்படி எப்படியெல்லாமோ

வார்த்துப் பார்க்கிறோம்

முழு திருப்தியான வடிவம்

வருவதேயில்லை

ஓரத்தில் சற்று வீங்கி

அல்லது கரிந்து

நடுவில் குழி விழுந்து

அல்லது உப்பலாகி 

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி

ஆனால் எல்லா வடிவத்திலும்

இருந்து விடுகிறது ஒரு தோசை

வாழ்க்கையை மாதிரி.

<<>>


Friday, December 7, 2012

அவர் பங்கு...


அன்புடன் ஒரு நிமிடம் - 22

அவர் பங்கு...

முகத்தில் அசுவாரசியம் தெரிய உள்ளே நுழைந்த அந்த இளைஞனைப் பார்த்தான் அபிஜித். தாத்தா இருக்காரா? என்னைப் பார்க்கணும்னு சொன்னாரு. 

அழைத்துப் போனான். இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஓ, அப்பாவோட ஃபிரண்ட் நீலகண்டனோட மகன் சம்பத் இல்லே இவன்? தாத்தா எதற்காக இவனை தேடியிருப்பார்?

ஆவல் பிடரியைப் பிடித்துத் தள்ள அறைக்கு வெளியே தயங்கினான்.

அடடே, வா வா! உற்சாகமாக வரவேற்றார் சாத்வீகன். பார்த்து எத்தனை நாளாச்சு! நல்ல வளர்ந்துட்டே. இந்த பிங்க் கலர் ஷர்ட் உனக்கு நல்ல மாட்சிங்கா இருக்கு.

அவரது பிரியமான வரவேற்பில் இவன் முகத்திலிருந்த எரிச்சல் கொஞ்சம் அகன்ற மாதிரி இருந்தது. ஏதோ கேட்கணுமே என்று, “லாப் டாப்பில் என்ன பார்த்துட்டிருக்கீங்க தாத்தா?” என்றான் சம்பத்.

நீதானே என் பொன் வசந்தம் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனைத்தான்... அற்புதமான மெலடிகளை என்ன அழகா மெருகு ஏற்றி பொருத்தமான வாத்தியங்களில குழைச்சுக் கொடுத்திருக்காரு இளைய ராஜா!

ஓர் ஆர்வம் எழுந்து  அவனும் அதைக் கவனிக்க இவர் தொடர்ந்து அந்தப் பாடல்களின் இசைக்கோர்வைகளின் விசேஷங்களை பற்றி அவனுடன் கொஞ்ச நேரம் பேசினார்.

அப்புறம் நான் என் ஏன் உன்னை வர சொன்னேன்னா.. என்று ஆரம்பித்தார்.

ஒண்ணுமில்லே என் ஸ்டுடண்ட் ஒருத்தர் மகன், பேரு வருண், உன் வயசு தான் இருக்கும்.  அவனுக்கு ஒரு ஐடியா கொடுத்தேன். ஆனா அந்தப் பையனுக்கு அது வொர்க் ஆகுமான்னு சந்தேகம். உன்னை மாதிரி சாப்ட்வேர் துறையில தான் வேலை அவனுக்கு. அதான் உன்கிட்டே அதைப் பத்தி கொஞ்சம் கேட்டுப் பார்த்துட்டு அவனிடம் மறுபடி பேசலாமேன்னு... ஒரு அரை மணி நேரம் ஆகும் பரவாயில்லையா உனக்கு? ஏதும் அர்ஜண்ட் வேலை?”

பரவாயில்லே, சொல்லுங்க.

அவர் சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஆன் லைன் படிப்பைப் பற்றி... இப்போது டெஸ்டிங் எஞ்சினீயராக இருக்கும் அந்தப் பையன் வருண் தான் வாங்கற சம்பளத்தில ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து அந்த கோர்சில் சேர்ந்து படிப்பதன் மூலம் ஐந்து வருடங்களில் தன் கரீயரில் எத்தனை உயரத்துக்குப் போக முடியும் என்று விலாவாரியாக விவரித்தார்.

சம்பத் சில குறுக்குக் கேள்விகள் கேட்டான். கொஞ்சம் யோசித்தான். அவனுக்கு அது நல்ல ஒரு வழி என்றே பட்டது. அப்படியே சொன்னான்.

அப்பாடா! என்றார் அவர். இனி தைரியமா அவனிடம் இதைப் பத்திப் பேசலாம்! தாங்க்ஸ்ப்பா! என்றவர் மறக்காமல் கேட்டார், “உன்னை ரொம்ப போரடிச்சிட்டேனோ?”

அதெல்லாம் ஒண்ணுமில்லே தாத்தா! இண்டரஸ்டிங்காதான் இருந்திச்சு. ஆமா, அந்த இன்ஸ்டிட்யூஷனோட வெப்சைட் அட்ரஸ் என்ன சொன்னீங்க?”

ஒரு நிமிஷம்,” என்று தேடி எடுத்துக் கொடுத்தார். அதான் ஆல்ரைட்னு  சொல்லிட்டியே? இன்னும் ஏதாவது சந்தேகமா? பார்க்கணுமா?”

நோ தாத்தா, அதெல்லாம் ஒண்ணும் சந்தேகம் இல்லை. இன் ஃபேக்ட் எனக்கே அதில சேரலாம் போல இருக்கு,” என்றபடி அகன்றான்.

பார்த்துக் கொண்டிருந்த அபிஜித்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன தாத்தா, போன வாரம் கூட நான் ஒரு ஆன்லைன் கோர்ஸ் பத்தி உங்ககிட்டே பேசினப்ப, ஆன்லைன் படிப்புக்களைப் பத்தி எல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னீங்க. இப்ப இவன்கிட்ட பிட்டுப்பிட்டு வைக்கறீங்க?”

எனக்கென்னடா தெரியும் இந்தப் படிப்புக்களைப் பத்தி? இப்ப வந்திட்டுப் போனானே சம்பத், அவனோட அப்பா சொன்னது இந்த ஐடியா!

ஓ அப்படீன்னா இது உங்களோட ஐடியா இல்லியா?”

என்னோடதும் சேர்த்தி தான். இதை அவன் காதில் நுழைச்சது தான் என்னோட ஐடியா!

இவனுக்கு புரிந்தது.

<<<>>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் வெளியானது)

Sunday, December 2, 2012

அன்பின் இழைகள்நொடியின் துகள்களுக்குள்
நட்பைப் புகுத்திடுவோம்.

அன்பின் இழைகளைக் கோர்த்தொரு
ஆடை அணிந்திடுவோம்.

நாவின் அசைவுகளினூடே
நல்லெண்ணம் மென்றிடுவோம்.  

நம்பிக்கையின் சுவடுகளை
நடையில் பதித்திடுவோம்.

உன்னதத்தின் கொம்பினால்
உச்சி வகிடெடுப்போம்.

பார்வையின் வண்ணமதை
பரிவென்று வைத்திடுவோம்.

மனமெனும் ஆடியில்
மகிழ்வைப் பிரதிபலிப்போம்!

<<<>>>

Tuesday, November 27, 2012

தனக்கே தெரிகிறபோது...


அன்புடன் ஒரு நிமிடம் - 21

தனக்கே தெரிகிறபோது...

வாசல் பக்கம் சென்று சென்று மீண்டது யமுனாவின் பார்வை. காலையில் லேட்டாகிவிட்டது என்று கோபத்தோடு ஆபீஸ் சென்ற வினோத் என்ன மூடில் வருகிறானோ?

காலையில் மகன் யுவனைப் பிடித்து விரட்டிக் கொண்டிருந்தான்.

என்ன அங்கே நாய்க்குட்டியோட விளையாடிக்கிட்டிருக்கே? கணக்குப் பாடம் எடுத்து போடக்கூடாதா?... அன்னிக்கு ஏதோ பாஸ்ட் பெர்ஃபக்ட் டென்ஸ் புரியலேன்னு சொன்னியே, வா, ரென் அன் மார்டினை எடுத்து அந்த சேப்டரை படிச்சு எக்ஸர்சைசைப் போட்டுப் பாரு முதல்ல... காலையில படிச்சாதானே மனசில நிற்கும்?...” அப்படி இப்படி அவனை செலுத்தியதில் அரைமணிக்கு மேல் காணாமல் போய்விட்டது. பாக்கி தினசரி விஷயங்களை அரக்கப் பரக்க முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாகக் கிளம்பினான். லேட்டு, லேட்டுதான் இன்னிக்கு!

ஆனால் என்ன ஆச்சரியம்! சிடுசிடு முகத்தை எதிர்பார்த்தவளுக்கு சிரித்த முகம் காட்சி தந்தது. உள்ளே நுழைந்த கணவன் முகத்தில் உற்சாகம் பொங்கி வழிந்தது.

தெரியுமா இன்னிக்கு ஆபீஸில? மேனேஜர் என்னை மட்டம் தட்டப் பார்த்தார். ஆனா நான் அவரை அவுட்விட் பண்ணிட்டேன்! Showed him his place!” என்று ஆரம்பித்தான்.

அப்படி என்னங்க பண்ணினார்?”

மத்தியானத்திலிருந்தே தேவையில்லாம என்னை ஒட்டிட்டிருந்தாரு. அடிக்கடி காபினுக்கு அழைத்து, என்ன வினோத், அந்த பாலன்ஸ் ஷீட் என்னாச்சு? போனவாரமே தொடங்கினீங்களே அந்த இண்டெரிம் ரிப்போர்ட் இன்னும் முடியலையாக்கும்? எனக்கு இந்த காஸ்ட் ரிடக்ஷன் ப்ரஜக்ஷனை போட்டுக் கொடுங்கன்னு வற்புறுத்த ஆரம்பிச்சார்.  பார்த்தேன். இது சரியில்லையே, இப்படியே விட்டால் நல்ல பிரிச்சி மேஞ்சிருவாரு நம்மை. அப்புறம் நம்ம திறமையோட வேல்யூ நமக்கே ஜீரோவாகப் படுமேன்னு சுதாரிச்கிக்கிட்டேன். சார், இத பாருங்க, எனக்கென்ன வேலை செய்யறதில இன்ட்ரஸ்டே இல்லைன்னு சொல்ல வர்றீங்களா? எல்லாம் இருக்கு. எல்லாம் அந்தந்த டைமில தான் முடியும்னு காட்டமா பதில்களை சொன்னேன். அவ்வளவுதான். அசந்து ரிட்ரீட் ஆயிட்டார். பின்னே நம்மகிட்டே நடக்குமா?”

அப்புறம் என்ன ஆச்சு?”

அப்புறம் என்ன, நான் நான்தான்னு புரிஞ்சிக்கிட்டாரு. மூணு மணிபோல இருக்கும். கிட்டே வந்தார். என்ன வினோத், ஒண்ணும் சீரியஸா எடுத்துக்கலையே? ஒரு சின்ன ரிக்வஸ்ட். எனக்கு இந்த ப்ரஜக்ஷனை இன்னிக்கு அனுப்பியாகணும். நீங்க நினைச்சா முடியும். நல்லாவே போடுவீங்களே? போட்டுக் கொடுத்தீங்கன்னா ரொம்பவும் அப்ரிஷியெட் பண்ணுவேன்னு முகத்தில புன்னகையோட சொன்னாரு. நானும் உடனே அதைப் போட்டுக் கொடுத்தேன். அதட்டாம வற்புறுத்தாம இப்படி சொல்ல வேண்டிய விதத்தில சொன்னால்தானே நானும் மனப்பூர்வமா மனம் ஒன்றி அதில ஈடுபட முடியும், ரிசல்டும் நல்லாயிருக்கும்?” என்று தன் சாமர்த்தியத்தையும் சமர்த்தையும் அவளிடம் சமர்ப்பித்தான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. மனதில் ஏதோ ஓட, வேறெங்கோ தாவிற்று பார்வை.

யமுனாவின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தான் வினோத். மூலையில் மேஜையடியில் அமர்ந்து பாடம் படித்துக்  கொண்டிருந்த விகாஸ்!

காலையில் அவனை தான் அதட்டியதும் விரட்டியதும் நினைவுக்குள் விரிந்தது இவனுக்கு. அவனிடம் நானும் இப்படி நடந்து கொண்டிருந்தால் இன்னும் முனைப்பாக இறங்கியிருப்பானோ தன் படிப்பில்?’
<<<>>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் எழுதியது)

Tuesday, November 20, 2012

நிமிடங்கள்...
ண்ணீரில் முகம் பார்க்க
நேரமிருக்கா  எறும்புக்கு?

தன் அழகை தான் ரசிக்க
மனசிருக்கா தாமரைக்கு?

தான் தொட்டதை தழுவிக்கொள்ள
தயங்கிடுதாகுதாணங்களில்ுமே மனம் தண்ணீரும்?

வான் விட்டதை தரைக்குத் தர
ஏன் என்கிறதா மழை?

எங்கிருந்தோ வீசும் தென்றல்  
இடைநிற்க யோசிக்குதா?

எழில்சொட்ட மலரும் பூக்கள்
எதையேனும் யாசிக்குதா

<<<>>>

Monday, November 12, 2012

காத்திருந்த காட்சி...அன்புடன் ஒரு நிமிடம் - 20.  

காத்திருந்த காட்சி...

வாசலில் வந்து இறங்கியவரைப் பார்த்ததுமே அபிஜித்துக்கு வரப்போகும் காட்சியின்  டிரைலர் மனதில் தோன்றிவிட்டது. அப்பாஜி மாமா! சாத்வீகனின் நண்பர்.

ஆஹா! தாத்தா இப்போது பொங்கி வெடிக்கப் போகிறார்! இப்ப நாம இங்கே இருக்கணுமா வேண்டாமா? அவர் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போவதைப் பார்க்கவேண்டுமா?

இளக்காரம் கலந்த சிரிப்பை வாய்க்குள் புதைத்தபடியே, வாங்க மாமா! என்று அழைத்துப் போனான் உள்ளே.

முன் கதை என்ன? சும்மா இருந்த சாத்வீகனிடம் இந்த அப்பாஜி ஒரு நாள் வந்து இத்தனை ஆற்றலை மடியில் கட்டிக்கொண்டு வீட்டுப் படியில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே? அப்படி என்ன உங்களுக்கு வயதாகி விட்டது? அவனவன் எழுபதிலும் எண்பதிலும் என்னென்ன சாகசங்கள் பண்ணுகிறான்? அருமையான ஐடியா ஒண்ணு சொல்றேன். உங்களை மாதிரி ஒரு ஜீனியஸ் தான் அதை செய்ய முடியும். நீங்க செய்தா லாபம் அள்ளிக் கொண்டு வரும். என்று தொடங்கி வீட்டிலேயே ஒரே ஒரு உதவியாளரை வைத்து செய்ய முடிகிற ஒரு பிஸினஸ் ஏஜென்சி பற்றி சிலாகித்து சொன்னார்.

சாத்வீகன் அதை எடுத்து செய்ததில், போட்ட முதல் ரெண்டு லட்சம் நஷ்டம், மேற்கொண்டு ஒன்றரை கடன், அந்த உதவியாளர் ஏற்படுத்திய பிரசினைகள் என்று அவர் பட்ட பாடு சொல்லி முடியாது. ஒரு வழியாக அதற்கு மங்களம் பாடி மீள்வதற்குள் உன்னைப்பிடி என்னைப்பிடி என்றாகிவிட்டது.

ஐடியா கொடுத்த கையோடு டெல்லி சென்ற அப்பாஜி ஐந்து வருடத்துக்குப் பின் இப்போதுதான் இங்கே வருகிறார். காரசாரமாக அரங்கேறப் போகும் காட்சி இரண்டைக் காண தயாரானான். ஜகப்பிரசித்தி பெற்றதல்லவா சாத்வீகனின் சொல்லாடல்?

ஆயிற்று. அரை மணி நேரம், முக்கால் மணி என்று நேரம் ஓடியது. சாத்வீகன் அதைப் பற்றி வாயையே திறக்கவில்லை. ஒன்றுமே நடவாதது போல ஒடிக்கொண்டிருந்தது அவர்கள் சம்பாஷணை. முன்பு அவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது போல சிரிப்பும் களிப்புமாக....

ஒரு வேளை அவராகக் கேட்கட்டும் என்று காத்திருக்கிறரோ?

சற்று நேரத்தில்... எப்படி நான் கொடுத்த ஐடியா? பிஸினஸ் நல்லாப் போகுதா?” என்று வந்தவரே தொடக்க வசனத்தையும் பேசி காட்சியை துவக்கி வைத்தார்.

அனல் இருக்கட்டும், ஒரு பெருமூச்சு கூட வெளிப்படவில்லை இவரிடமிருந்து!

ஓ அதுவா? நாலு வருஷம் நடத்தினேனே! தாங்க்யூ! என்று சொன்னாரே  பார்க்கலாம்!

சப்பென்று ஆகிவிட்டது இவனுக்கு.

அவர் அகன்றதும் இவரிடம் கேட்டான். என்ன தாத்தா இது! சும்மா இருந்த உங்களை எதுவோ பண்ண சொல்லி இத்தனை பாதிப்பை ஏற்படுத்தியிருக்காரு, அவர்கிட்ட எதையும் சொல்லாம தாங்க்ஸ் வேறே சொல்றீங்களே! என்று அலுத்துக் கொண்டான்.

உதட்டிலிருந்த புன்னகை மறையாமல் அவனைப் பார்த்து சொன்னார் சாத்வீகன்: அவர் ஒரு ஐடியா கொடுத்தார். அதை ஏற்று நாம செயல்பட்டோம். அது நல்லா வரவில்லை. அவரிடம் ஏன் அதை சொல்லி அவரை சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டும்?”

யோசித்தான். புரிந்தது. தாத்தா எத்தனை பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கிறார்!

நீங்க ஒரு ஜெண்டில்மேன் தாத்தா! என்றான்.

ஜெண்டில்மேன்? அதெல்லாம் கிடையாது. மேன்! அவ்வளவுதான்!

(அமுதம் செப்டெம்பர் 2012 இதழில் எழுதியது)

<<<<>>>>