Friday, October 31, 2014

நல்லதா நாலு வார்த்தை....38


மெதுவாகவே நட. 
உன்னிடம்தான் 
வந்து சேரவேண்டும் 
நீ.’
- Proverb
(‘Walk slowly. All you can ever 
come to is yourself.’)
<> 
எந்த இரு மனிதரும் 
படிப்பதில்லை
ஒரே புத்தகத்தை.'
- Edmund Wilson
(‘No two persons ever read 
the same book.’)
<> 
எதையும் அடைய மிக விரும்பும் முன்,
எத்தனை மகிழ்வுடன் இருக்கிறார் 
அதனை அடைந்தவர் தற்போது
என்பதை பார்க்க வேண்டும் கவனமாக.’
- La Rouchefoucauld
(‘Before strongly desiring anything we should look 
carefully into the happiness of its present owner.’)
<> 
சேவை செய்வதெப்படியென 
சென்று கண்டு கொண்டவர்களே 
நின்று மகிழ்வர் நிஜத்தில் 
என்றறிவேன் நான்.’
- Albert Schweitzer
(‘One thing I know: the ones among you 
who will be really happy are those who will 
have sought and found how to serve.’)
<> 
நம் அறியாமையின் எல்லையை 
அறிந்து கொள்ள மட்டுமே 
அளவற்ற அறிவு தேவைப்படுகிறது.’
- Thomas Sowell
(‘It takes considerable knowledge just 
to realize the extent of your own ignorance.’
<> 
வெற்றியின் இலக்கணம் சற்றே எளிது:
உங்களின் சிறந்ததைச் செய்திடுக,
உலகோர் விரும்பலாம் அதை.’ 
Sam Ewing
(‘Success has a simple formula: do your best, 
and people may like it.’)
<> 
விரும்பும் போதெல்லாம்
திரும்ப நினையுங்கள்,
இனிய நினைவுகள் ஒருபோதும்
இற்றுப் போவதில்லை.’
- Libbie Fudim
(‘Recall it as often as you wish, a 
happy memory never wears out.’)

>>>0<<<

(படம்- நன்றி; கூகிள்)

Sunday, October 26, 2014

அவரவருக்கு...

அன்புடன் ஒரு நிமிடம் - 67.

"நாலஞ்சு  வழிகளைக் கையாண்டு பார்த்துட்டேன் ", ஒவ்வொன்றாகச் சொன்னான் கிஷோர், "ஊஹூம்! அவளைத் திருத்தவே முடியலே மாமா".
"என்ன, திருத்தறதா?"
"ஆமா. சோர்ந்துட்டேன். சாயந்தரம் ஏழு மணியாயிட்டா போதும், உட்கார்ந்துடறா  பொட்டி முன்னால. யானை வந்து தும்பிக்கை வெச்சு நெம்பினாக் கூட அசைக்க முடியாது. மாத்தி மாத்தி பட்டனை அமுத்தி ... ரிமோட் உடைஞ்சது மட்டும் அரை டஜன்!" 
"ம்.. ம்.. "
"அன்னிக்கு பாருங்க  டாக்டர்கிட்டே செக் அப் பண்ணிட்டு ஏழரை மணிக்கு வர்றேன். ஒன்பதரை மணிக்குடாக்டர் என்ன சொன்னார்னு  கேட்கிறான்னா பார்த்துக்குங்க."
"அடடே! Surely, a mind-blowing topic !" பரவசமாகி விட்டார்  ராகவ். "ஆஹா இதைப் பத்தி ஒரு கலந்துரையாடலே நடத்தலாம் போல இருக்கே!" வாட்சைப் பார்த்தார்....."கூப்பிடறேன் ஒவ்வொருத்தரா நம்ம ஆட்களை!"  
"புலம்பறேன் நானு,  உங்களுக்கு  விளையாட்டா இருக்காக்கும்?"
அதற்குள் அவர் யாருக்கோ நம்பரை அழுத்தினார் 
ஸ்பீக்கர் போனில்  "ஹலோ?" என்றது  ரஞ்சித் குரல்.  
"ஒரு ருசிகரமான விவாதம்! இப்ப! இங்கே! வந்துடறியா?"
"ஐயோ மாமா, நானிப்ப ஒரு கெட் டுகெதர்ல  இருக்கேன். பிரண்ட்ஸ் கூட ஒரு புத்தகம் வெளியீடு சம்பந்தமா."
"அவ்வளவுதானா?"
"உங்களுக்கு என்ன, எல்லாருக்குமே அப்படித்தான் தோணும்!  ஆனா எனக்கு இதானே வாழ்க்கையிலே ஆகப் பிடிச்ச விஷயம்? இங்கேதானே அப்பப்ப என்னை நான் ரீசார்ஜ் பண்ணிக்கிறேன்? எப்படி விட்டிட்டு வரமுடியும்? நோ வே."
அடுத்த போன்  அரவிந்துக்கு.
"...தெரியுது,  நீ இப்ப உன் ரசிகர் மன்ற வேலைகள்லே இருக்கே. ஆனா இங்கே ஒரு முக்கியமான டாபிக் அலச வேண்டியிருக்கு."
"...வந்துருவேன். ஆனா விட்டிட்டு வந்தேன்னு வையுங்க. அங்கே  வந்து உம்முன்னு தான் இருப்பேன். பட்டும் படாம ... கவனம்  இல்லாம ... தேவையா? யோசிச்சுக்குங்க."
அடுத்து சரண்...
"எங்கேடா இருக்கே? மணி ஆறரை ஆச்சே. கிளம்பலியா ஆபீசை விட்டு?"
"கிளம்பியாச்சு அப்பவே. கிளப்ல இருக்கேன். ஷட்டில்காக் விளையாடிட்டு இருக்கேன்."
 "வீட்டுக்கு போகலியா? தேடமாட்டாளா கல்பனா?"
"ஆ, அதெப்படி? இதான் எனக்கு மோஸ்ட்  பேவரிட் டைம் அஃப் த  டே ! அதில் கை வைக்க விடுவேனாக்கும் ?"
"சரி இங்கே ஒரு டிபேட்.  நீ ... "என்றவரை இடை மறித்தான்  கிஷோர்.  "வீட்டுக்கே வராதவன் இங்கே எங்கே வரப்போறான்? விடுங்க மாமா!"
அடுத்து ராஜேஷை கூப்பிட்டபோது அவன் படு இண்டரஸ்டாக புதிதாய் வந்த அவன் ரொம்ப நாளாய் தேடிய ஏதோ ஓர்  கர்நாடக சங்கீத சி டி வாங்க ஓடிக்கொண்டு இருந்தான். "நமக்கு அது உயிராச்சே!"
"சே ஒருத்தனையும் பிடிக்க முடியலியே!" இவன் பக்கம் திரும்பினார். கிஷோர் வாசலுக்குத் தாவியிருந்தான்.
"புரியுது மாமா நீங்க புகட்ட வர்ற விஷயம். அவங்க அவங்களுக்கு ஏதோ  ஒரு விஷயம் இருக்கு அப்படியே ஆவலோடு மூழ்கிவிட! அன்றாட வாழ்க்கையை எதிர் கொள்ள அது அவங்களுக்குத் தேவையாவும் இருக்கு.  எனக்கும்தான்  இருக்கு. ஃ பிரண்ட்ஸோட  அரட்டை! அவளுக்கு டி .வி. ரெண்டு மணிநேரம்! நான்தான் பெரிது பண்ணிட்டேன். வர்றேன்!" 
(’அமுதம்’ பெப்ரவரி 2014 இதழில் வெளியானது)

(படம் - நன்றி : கூகிள்)

Wednesday, October 22, 2014

அவள் - 1059
அதைவிட அழகிய மலரை
அகிலத்தில் பார்த்ததில்லை: 
உன் மனம்.

60
ஒரே படகில்
பயணிக்கிறோம்
மூன்று பேரும்:
நீ, நான், என் கவிதை.

61
நேர்ந்த யோகம்
வாழ்வில் ஒன்று:
உன்னைக் கண்டது..

62
நதியில் புது வெள்ளம்
நடந்து வந்தாற்போல்
நீ.

63
அடிக்கடி வந்துன்னைத்
தழுவி
தன்னைக்
குளுமையாக்கிக் கொள்கிறது
தென்றல்.

64
யாரும் பற்ற முடியாது
இரும்புக் கோட்டைக்குள்
இருக்கிறது பத்திரமாக
என் மீதான
உன் அன்பு.

65
உன் சிரிப்பில்
புறப்பட்டு மேலெழுந்து
என் விழியில் வந்திறங்கும்
தானியங்கி விமானம்.

>>><<<
(படம்- நன்றி: கூகிள்)

Friday, October 17, 2014

நல்லதா நாலு வார்த்தை - 37’அனேக விஷயங்களை 
அதிவிரைவில் செய்ய ஒரே வழி, 
ஒரு சமயத்தில் 
ஒரு விஷயத்தை மட்டுமே செய்வது!’
- Anonymous
(‘The quickest way to do many things is
to do only one thing at a time.’)

<>

'அன்பான இதயமே
அனைத்தறிவின்
ஆரம்பம்!’
- Thomas Carlyle
(‘A loving heart is the
beginning of all knowledge.’)

<>

’பிறருக்காக வாழ்கையில் 
பின்னும் கடினமாகிறது வாழ்க்கை,
ஆனால் அது மாறுகிறது
இன்னும் செழிப்பாகவும் இன்பமாகவும்!’
- Albert Schweitzer
(‘Life becomes harder for us when we live for others,
but it also becomes richer and happier.’)

<>

'ஒளியும் இருளும் கலந்த 
ஒவ்வொரு கணமும் 
ஓர் அதிசயம்.’
- Walt Whitman
(‘Every moment of light and
dark is a miracle.’)
<>

’எதிர்காலத்தைப் பற்றிய 
மிகச் சிறந்த விஷயம்
என்னவென்றால் அது 
ஒரு தடவைக்கு 
ஒரு தினமாகவே வருகிறது.’
- Abraham Lincoln
(‘The best thing about the future is
that it comes one day at a time.’)
<>

’வாழ்க்கை எதற்காக என நான்
வருந்திச் சிந்தித்ததுண்டு;
உயிரோடிருப்பதே போதுமான காரணம் என
உணருகிறேன் இப்போது.’
- Joanna Field
(’I used to worry about what life was for
– now being alive seems sufficient reason.’)
<>
'உங்கள் அன்பளிப்புகளை விட 
உங்களை அளிப்பதையே 
உவந்து மிக வேண்டுகிறார்கள் 
உங்கள் குழந்தைகள்.’
- Jesse Jackson
(’Your children need your presence
more than your presents.’)
><><><
(படம் - நன்றி; கூகிள்)

Monday, October 13, 2014

மகன்கள்...
அன்புடன் ஒரு நிமிடம் - 66.

ஹாஸ்டலுக்கு சென்று மகனைப் பார்த்து வந்த கையோடு புறப்பட்டு ஊருக்கு வந்திருந்தார் கௌதம்.
"எப்படி இருக்கிறீங்கப்பா?" என்றபடி வேகமாக உள்ளே நுழைந்தவரை  உற்று நோக்கினார் சாத்வீகன்.
முகம் சிவந்திருந்தது. ஆத்திரம் இரு கண்ணிலும் கொப்பளித்தது.
"வா வா,  உட்கார்!"
"உட்கார நேரமில்லை. நேத்து யுவனைப் பார்த்தேன். இந்தப்பயல்... நான் உங்ககிட்டே கொஞ்சம்  பேசணும்பா..."
"இரு இரு. இப்பதான் உனக்கு போன்  பண்ண நினைச்சேன் நான். ரெண்டு மூணு விஷயம் மனசுக்குள்ளே வெச்சு மாய்ஞ்சுட்டிருக்கேன்... இதோ, மறக்கறதுக்குள்ளே  கேட்டிடறேன்." 
"என்னப்பா நீங்கநேரம் காலம் புரியாம? சரி சரி, சட்டுனு கேளுங்க!" என்றார் நிலை கொள்ளாமல்.
"ஆமா நீ உன் மனசில என்ன நினைச்சுட்டிருக்கே? மாசம் முப்பதாயிரம் போல மிச்சம் பிடிக்கலாம்பான்னு போன வருஷம் ஒரு நாள் சொன்னே. மாசா மாசம் அதை ஒரு சீட்டுப் போடுன்னு  ஆறு மாசமா நானும் உன்னை வற்புறுத்திட்டே இருக்கேன்இன்னிக்கு வரை செய்யலே. நாளைக்கு உன் பொண்ணு கல்யாணம்சொந்த வீடு அது இதுன்னு எத்தனை பொறுப்பு இருக்கு? கொஞ்சமாவது நான் சொல்றதை..."
"இல்லேப்பா  அது வந்து பண்ணணும்தான். அப்படி இப்படின்னு தள்ளிப் போச்சு..."
"சரி அதிருக்கட்டும்.  ஒரு  நாளைக்கு பத்து மணி நேரம் உட்கார்ந்து பார்க்கிற வேலை உன்னோடதுகண்டிப்பா எக்சர்சைஸ் தேவை, உன் வீட்டுக்கு பக்கத்திலேயே எனக்குத் தெரிஞ்ச ஆள் ஒரு ஜிம் தொடங்கி இருக்கான் போய்ப்பாருன்னு எத்தனை தடவை போன் பண்ணிட்டேன்! ஒரு நடை எட்டிப் பார்த்தியா?"
"அது நேரமில்லாம... இந்த வாரம் சேரணும் ..."
"இப்படியே எத்தனை வாரம் சொல்லுவே? சரி அதை விடு. சதா வீட்டிலேயே போரடிச்சு உட்கார்ந்திருக்கிறா யசோதா, அவளை அழைச்சிட்டு  திருப்பதி, புவனேஷ்வர்னு ஒரு ட்ரிப் இந்த வருஷமாவது போயிட்டு வான்னு கத்தறேன் ஒவ்வொரு வாட்டி  நீ வரும்போதும்! உன் காதில கொஞ்சமாவது ஏறுதா? ஊஹூம்!"
"போகணும்பாஅடுத்த வருஷம் கண்டிப்பா..."
"என்னமோ செய். உனக்காகத்தான் சொல்லுறேன். என்ன சொல்லியும் ஒரு பிரயோஜனமில்லே. பெத்த அப்பன்  சொல்றானேன்னு  கொஞ்சமாவது கேட்கிறியா?" அலுத்துக் கொண்டார் சாத்வீகன். "இருக்கட்டும்,  யுவனைப்  பத்தி என்னமோ சொல்ல வந்தியே... அதை இப்ப சொல்லு."
"அது ஒண்ணுமில்லேப்பா." இழுத்தார். வார்த்தைகள் வரவில்லை. ஏறக்குறைய அதே விஷயத்தைத் தானே அவரும் தன்  மகனைப்பற்றி அப்பாவிடம் குறைப் பட்டுக் கொள்ள  வந்திருந்தார் ? அவன் நல்லதுக்காக என்ன  எடுத்துச் சொன்னாலும் சொல்வதையொன்றும் கேட்பதில்லை என்று?  ஆனால்...
இத்தனை வயதான நாமே சிலசமயம் அப்படி நடந்து கொள்ளும்போது இள வயது மகன் அப்படி இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? பொறுமையாகத்தான் சரி செய்யணும் அவனை! அத்தோடு கொஞ்சம் தன்னையும்
"...நல்லா படிச்சிட்டிருக்கான்னு சொல்ல வந்தேன்பா,"என்றார்  அமைதியாக.
மனதுக்குள் சிரித்துக் கொண்டார் அவர் தந்தை!
(’அமுதம்’ பெப்ருவரி 2014 இதழில் வெளியானது)
><><><
(படம்- நன்றி: கூகிள்)