Monday, May 27, 2013

நல்லதா நாலு வார்த்தை .... 7


'இன்றியமையாதவராக
இருப்பது
இனிமையானதுதான். ஆனால்
இனிமையானவராக
இருப்பது அதைவிட
இன்றியமையாதது.'

-John Templeton
(‘It is nice to be important but
it’s more important to be nice.’)

** 
லகின் சுமையை
ஒருவருக்கேனும்
எளிதாக்கும் எவருமே
உபயோகமற்றவர் இல்லை.

-Charles Dickens
(‘No one is useless in this world who
lightens the burden of it to anyone else.’)

** 
முழுமையாய்
உணரும் பரவசத்தை
முதன்மையாய்
ஓரிடத்தில்
காட்டுவதே சிரிப்பு.

- Josh Billings
(‘Laughter is the sensation of feeling good all over 
and showing it principally in one place.’)  

** 

ங்கே அன்போ
அங்கே வாழ்க்கை.

-Mahatma Gandhi
(‘Where there is love there is life .’)

**

பூக்களுக்கு கதிரொளி போல
புன்னகை, மனிதருக்கு.

- Joseph Addison
(‘What sunshine is to flowers, smiles are to humanity.’)

** 
'எந்தப் பெரிய மனிதரும்
குறை சொல்வதில்லை
சந்தர்ப்பம் வாய்க்கவில்லையென்று.’

- Emerson
(‘No great man ever complains of want of opportunity.’)

** 
'அறிவிலிகள் இரு வகை ;
தம் கருத்துக்களை
மாற்றிக்கொள்ள முடியாதவர்கள்;
மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள்.

- Josh Billings

(‘There are two kinds of fools: those  who can’t
change their opinions and those  who won’t.’)

****
(படம் நன்றி: கூகிள்)

Wednesday, May 22, 2013

பயணங்கள் வீணாவதில்லை...


அன்புடன் ஒரு நிமிடம் - 34

பயணங்கள் வீணாவதில்லை...

வீட்டுக்கு வந்திருந்த தங்கை ரேணுகாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார் சாத்வீகன். முகத்தில் கவலை ரேகைகள். நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் அவள். உங்க மருமகன் அடிக்கடி ஒரு பொண்ணைப் பார்த்து பேசிக்கிட்டு இருக்கிறான் அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்வான்போல இருக்கு... என்ன பண்றதுன்னே...

பேஷா பண்ணி வெச்சுடுவோம். ஒரு பெரிய வேலை முடிஞ்சது.

இல்லீங்கண்ணா, அது ரொம்ப வசதியான குடும்பத்தில செல்லமா வளர்ந்த பொண்ணுன்னு தெரியுது. ரவிக்கு இருபத்தெட்டாகியும் இன்னும் சொல்லிக்கிற மாதிரி ஒரு வேலையில செட்டில் ஆகலே. நாம எங்கே, அவங்க எங்கே? நடை உடை பாவனைன்னு பார்த்தா அவளும் கொஞ்சம் சௌகரியத்தை விரும்பற பொண்ணு மாதிரி தெரியுது.

அட்வைஸ் ஏதும் பண்ணிடலியே நீ அவனுக்கு?” என்றார் பதற்றமாக.

இல்லே, இல்லே. அப்புறம் இன்னும் அதிகமாயிடும்! உங்க தங்கை நான். எனக்கு தெரியாதா?”

சரி, நான் பார்க்கிறேன்... என்றவர் ரவியைப் பற்றி எதுவும் கேட்காமல் அவனுடன் படித்த பழகிய நண்பர்களைப் பற்றி ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்த வாரம் அவனை போனில் அழைத்தவர், ரவி, எனக்கொரு ட்ரிப் கோவை, சேலம், சென்னைன்னு போகவேண்டியிருக்கு. கொஞ்சம் துணைக்கு வாயேன். பழைய பாக்கி எல்லாம் வசூல் பண்ண வேண்டியிருக்கு. முன்னால ஒரு புத்தக வியாபாரம் பண்ணினேனில்லையா?”

, வர்றேன் மாமா!

கோவையில் இறங்கியதும் ஹோட்டலில் ரூம் போட்டார். சரி, ரவி, பக்கத்திலதான் கடைகள். போயிட்டு மத்தியானம் வந்திடறேன் நீ இங்கே உன் பிரண்ட்ஸ் யாரும் இருந்தா போய்ப் பார்த்துவிட்டு மத்தியானம் ரூமுக்கு வந்துரு. நைட் சேலத்துக்கு புறப்படறோம்.

அவன் யோசித்தான்.

யாருமே பிரண்ட்ஸ் இல்லியா இங்கே?”

, சுரேஷ்னு ஒருத்தன்... இங்கே தான் ராம் நகர்ல இருக்கான்....

யாரு அந்த ராமசாமி மகனா? அவரு இங்கே தான் இருக்கிறாரா?”
  
இல்லே, கல்யாணத்துக்கப்புறம் அவன் இங்கே தனிக் குடித்தனம்...

ஓ அவனுக்கு கல்யாணம் ஆயிட்டுதா?.. சரி, சாப்பிட வந்துரு.

நண்பகல் அவன் வர நேரமாயிற்று. 

சேலத்தில் அவர் சொல்ல காத்திருக்க வில்லை. அவர் அந்தப் பக்கம் புறப்பட்டாரோ இல்லையோ, இவன் இந்தப் பக்கம் தன் நண்பனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பி விட்டான்.

சென்னையிலும். இவர், நான் வர கொஞ்சம் நேரமாகும், நீ வந்து அறையிலேயே இரு,” என்றபோதுநானும் தாம்பரத்தில என் பழைய நண்பனைப் பார்க்கணும்... என்று பதில் வந்தது.

பரவாயில்லே, எப்ப வேணா வா. பத்தரைக்கு தானே டிரெய்ன்?”

டுத்த மாதம் தங்கை வந்தபோது கேட்டார். என்ன உன் மகன் ஏதோ லவ் அது இதுன்னு... இன்னும் அப்படியேதான் சொல்லிட்டிருக்கானா?”

அதென்னமோ தெரியலே... இப்ப அந்தப் பேச்சையே காணோம்! குறிப்பா சொன்னால், உங்களோட ஒரு ட்ரிப் போய் வந்ததிலேருந்து! ஆமா, அங்கே என்ன நடந்தது?”

விசேஷமா ஒண்ணும் நடக்கலியே? அங்கே இப்ப வசிக்கிற இவனோட பழைய நண்பர்களைத்தான் போய் பார்த்துட்டு வந்தான். எல்லாம் லவ் மேரேஜ் பண்ணினவங்க. எப்படி எதிர்ப்புக்களை சமாளிச்சு வெற்றி கண்டு இப்ப சந்தோஷமா குடித்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறாங்கன்னு பார்த்துட்டு வந்திருப்பான்.

அப்படீன்னா அவன் முன்னைவிட தன் காதல் விஷயத்தில் வேகமா இல்லே இருக்கணும்?”

அதானே? ஒரு வேளை அவன் நினைச்ச மாதிரி அவங்க இல்லையோ என்னவோ?” என்றார் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு.


('அமுதம்'  பெப்ருவரி 2013 இதழில் வெளியானது.)

<<<<>>>>
(படம்- நன்றி: கூகிள்)

Sunday, May 19, 2013

நல்லதா நாலு வார்த்தை... 6




றிவாற்றல்
ஆரம்பித்து வைக்கும்
அபார வேலைகளை
உழைப்பு ஒன்றே
முடித்து வைக்கிறது.

- Joseph Joubert
(‘Genius begins great works;
labour alone finishes them.’)

*
சினமுற வேண்டாத
விஷயம் இரண்டு:
தவிர்க்க முடிவது, 
தவிர்க்க முடியாதது.
- Thomas Fuller

(‘Two things a man should never be angry at:
what he can help, and what he cannot help.’)

*
ருவரிடமே தேடாதீர்கள்
ஒவ்வொரு நற்பண்பையும்!

- Confucius
(‘Seek not every quality in one individual.’)

 *

'வெல்ல இயலாதுபோவது
வெகு தற்காலிகமானது.
வேண்டாம் என 
விட்டுவிடுவதுதான் அதை
நிரந்தரமாக்குகிறது!'

-Marilyn vos Savant
(‘Being defeated is often a temporary condition.
Giving up is what makes it permanent.’)

*
'நிரப்பக்
கொடுக்கப்பட்ட குவளையே
வாழ்க்கை.'

- William Brown
(‘Life is a glass given us to fill.’)
  
*
 மைதியான கடல்கள்
உருவாக்குவதில்லை
அருமையான மாலுமிகளை.’

- African Proverb
(‘Smooth seas do not make skillful sailors.’)
 
 *
ன்னைத் தவிர
வேறேதும்
தராது அமைதி.

-Emerson
(‘Nothing can bring you peace but yourself.’) 

Monday, May 13, 2013

உருப்படியான விஷயம்...



அன்புடன் ஒரு நிமிடம் - 33

உருப்படியான விஷயம்...

ந்த விஷயத்துக்காக மாமா அத்தனை அலட்டி, தன்னையும் விரட்டி உடனடியாக போய் அறிவுரை சொல்லத் தொடங்கினரோ அந்த விஷயத்தை அவரே இப்படி கைகழுவுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கிஷோர். சே, சொதப்பிட்டாரே!

சாயங்காலம் கிஷோர் வந்து, மாமா, நம்ம மகேஷ் அவங்கப்பாவை முதியோர் இல்லத்தில கொண்டு போய் சேர்க்க எல்லா ஏற்பாடு பண்ணிட்டான்! என்று சொன்னதும் அவர் பதைபதைத்ததைப் பார்க்க வேண்டுமே? கையிலிருந்த கண்ணாடித் டம்ளரை நழுவ விட்டு... 'ஓ, மை!' என்றொரு அலறல் இட்டு... சேர்த்திட்டானா?”

இன்னும் இல்லை. நாளைக்கு...

கிளம்பு, கிளம்பு, உடனே அவனைப் பார்த்து எடுத்து சொல்லி அப்படி செய்துடாம தடுக்கணும்!

யெஸ், நானும் அவனைப் பார்த்துப் பேசி அவன் மனசை மாத்தணும்னுதான் உங்களிடம் விஷயத்தை சொல்லி உங்களையும் அழைச்சிட்டுப் போக வந்தேனாக்கும்!

அதற்குள் அவர் காரை ஸ்டார்ட் பண்ணியிருந்தார்.

போன இடத்திலும், வாங்க, உட்காருங்க, பிரேமா, ஸ்னாக்ஸ் எடுத்திட்டு வா! எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து! என்றவனை மேற்கொண்டு ஒரு வார்த்தை பேச விடவில்லை.

அப்பா விஷயமா நீ ஏதோ முடிவெடுத்திருக்கேன்னு கேள்விப்பட்டேன் அதான் ஓடிவந்தேன். நான் சொல்லப் போறதைக் கொஞ்சம்கவனி... கிடு கிடுவென்று ஆரம்பித்தார்.

அதற்குள் பிரேமா பிளேட் நிறைய காரா பூந்தி கொண்டு வந்து வைத்தாள்.

அவர் ஒவ்வொரு பாயிண்டாக அழுத்தமாக சொல்ல ஆரம்பிக்க கிஷோரும் கூடவே தன்னுடையவற்றை எடுத்து இயம்பலானான். மகேஷ் இவர்கள் சொன்னதை கேட்டு மௌனமாக தலையசைத்துக் கொண்டிருந்தான். 

நாலைந்து நிமிஷம் போயிருக்கும். மாமா பேச்சை குறைத்துவிட்டு, கிட்டத்தட்ட நிறுத்திவிட்டு சுவாரசியமாக காரா பூந்தியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ரசித்து மென்று தின்பதைப் பார்த்து இவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. காட்டிய ஜாடையையோ விட்ட முறைப்பையோ அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

அதோடு ரசித்து ரசித்து சாப்பிட்ட விதம் இருக்கிறதே... பல்லைக் கடித்துக் கொண்டு கிஷோர் தனக்குத் தோன்றிய அறிவுரைகளைத் தொடர்ந்தான், நச், நச்சென்று அடுக்க ஆரம்பித்தவர் சைலண்டாக ரிட்ரீட் ஆகிவிட்ட எரிச்சலை விழுங்கிவிட்டு! (‘வீட்டுக்கு வரட்டும், பேசிக்கிறேன்!’)

அவர் பேச்சை நிறுத்தியதை விட அந்த காரா பூந்தியை சுவையாக மென்று தின்றதை அவனால் சற்றேனும் ஜீரணிக்க முடியவில்லை.

இவன் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு மகேஷ், சரி, நான் நீங்க சொல்றதை யோசிச்சிட்டு என் முடிவை எடுக்கிறேன். என்று முடித்தபோது, மாமா தன் கவனத்தை காபியிலிருந்து அப்போதுதான் எடுத்திருந்தார்.

ன் அப்படி சொதப்பிட்டீங்க மாமா? காரா பூந்தியைக் கண்டதே இல்லையாக்கும்? சே! படபடவென்று பொரிந்து தள்ளினான், வீட்டுக்கு வந்ததும் வராததுமாய்.

பொறுமையாக அவன் திட்டை வாங்கிக் கொண்டார். அதிருக்கட்டும், உன்னை ஒண்ணு கேட்கணும். நாளைக்கு காலையில் நீ உன் ஆபீசுக்கு போகும்போது உனக்கென அங்கே ரெண்டு வேலைகள் காத்திருக்குன்னு வெச்சுக்க. ஒண்ணு நீ எத்தனை சிரமப் பட்டாலும் பலன் எதுவும் நேராத ரகம். மற்றொன்று உருப்படியா நடக்கிற ஒரு வேலை. நீ எதை தேர்ந்தெடுப்பே?”

ரெண்டாவதைத்தான். சரி அதற்கும் இதற்கும்...?”

சம்பந்தம் இருக்கு. நானும் அதைத்தான் இங்கே செய்தேன். மகேஷ்கிட்ட கொஞ்சம் பேசின உடனேயே நீ கவனிச்சியோ என்னவோ நான் கவனிச்சேன் அவன் காதுக்குள்ளே ஒரு அட்சரம் கூட நுழையலை. ஒப்புக்கு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான்....

நானும் கவனிச்சேன். ஆனா எதிர்த்து எதுவுமே சொல்லலியே அவன்?”

எதிர்த்து ஏதாவது கேட்டால், அட, நம்மை மடக்க முயன்றால் கூட அவன் கொஞ்சமாவது யோசிக்கிறான்னு அர்த்தம். அதான் நான் நிறுத்திட்டேன்.

கிஷோர் யோசித்தான்.

என்ன யோசிக்கிறே?”

மிச்சம் வைத்து விட்ட காரா பூந்தியைத்தான்!

(அமுதம் பெப்ருவரி 2013 இதழில் வெளியானது)

 <<>>

Monday, May 6, 2013

நல்லதா நாலு வார்த்தை... 5



ன்பத்தைப் பகுத்தும்,
துன்பத்தை வகுத்தும்
மகிழ்வைக் கூட்டும்,
மனச்சுமை கழிக்கும்
நட்பு! 

- Cicero
(‘Friendship improves happiness and abates misery
by the doubling of our joy and the dividing of our grief.’)

*

ப்படியோ எங்கோ ஓர் தீர்வு
என் பிரசினைக்கு உண்டு
என்று நம்பித் தேடி
தீர்க்கமாய் முன்னேறிச் செல்பவனுக்கு
வழியும் ஒளியும்
வந்து சேருகின்றன தாமே.

–James Alexander.
(‘Light and guidance comes to the man who believes
that somehow somewhere there is a solution to his problem
and goes forward with confidence to find it..’)

*

னிமேல் ஆகவிருப்பதை
இப்போதிருக்கத் தொடங்கு.

- Eusebius Hieronymus
(‘Begin to be now what you will be hereafter.’)  

*

வாழும் காலத்தின்
வடிவம் புரிந்து
சிறப்பை அறிந்து 
நமக்கது வகுக்கும்
இலக்குகள் உணர்ந்து 
அடைய முனைகையில்
அர்த்தமுள்ளதாகிறது
வாழ்க்கை.

-Dr.S.Radhakrishnan.
(‘Life becomes meaningful only when we grasp the character
of the age we live in, see its significance, understand the
objectives it sets us and strive to realize them.’)



*
'பள்ளத்தில் வீழும்போது
பாய்கிற உயரமே  
பகரும் உன் வெற்றியை!'
-George Patton
(‘Success is how high you bounce when you hit bottom.’)



***