Monday, March 29, 2010

அவை எனக்கே சொந்தம்!


என்னுடைய கவலைகள்

என்னவென்று கேட்காதீர் தயவு செய்து.

என்னுடைய கவலைகள்

எனக்கே உரியவை.

உமக்கவை புரியாது ஒரு நாளும்.

என் கவலைகளை நான்

நேசிக்கிறேன்.

அவை இல்லாமல் என்னால்

ஒரு நாளைக்கூட ஓட்ட முடியவில்லை.

சில கவலைகளுடன் நான்

பழகிப்பழகி

கடைசியில் அவை இல்லாமல்

நிம்மதியாக உறங்க முடியவில்லை.

என் மனதில் அறை எடுத்துத் தங்கும்

சில கவலைகள்

வெகு நாள் சிநேகத்தில்

வாடகை பாக்கிகூட வைத்திருக்கின்றன.

எவ்வளவோ நான் முயன்றாலும்

சில கவலைகள் என்னை மறந்து

அல்லது நான் அவற்றை மறந்து

காணாமல் போய்விடுகின்றன.

ஆனாலும் என் கவலைகளை நான்

நேசிக்கிறேன்.

அவை இல்லாமல் வாழ என்னால் முடியாது...

Saturday, March 20, 2010

தூங்காத கண்ணென்று ரெண்டு...



டிக்கடி தூக்கம் வராமல் அவதிப்படுகிற எனக்கு அறிவுரை, வழியுரை பொழிப்புரை எல்லாம் சொன்ன என் மாமா இந்த உதாரணத்தை சொன்னார். ''மாமன்னன் நெப்போலியன் எப்போது நினைத்தாலும் அழகாகத் தூங்கி விடுவானாம். போர்க்களத்துக்கு குதிரையில் போய்க் கொண்டிருக்கும்போது கூட அந்தக் குதிரையின் மேலமர்ந்தபடியே அரைமணி, கால் மணி தூங்கி விடுவான். எப்படி இது தங்களுக்கு சித்தியாகிறது என்று கேட்ட தன் அமைச்சருக்கு அவன் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? புறாக்கூண்டு மாதிரி என் மனதில் நிறைய கூடுகளைக் கற்பனை செய்து கொள்கிறேன். என்னுள் உள்ள பிரசினைகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து விட்டு சரி, இதை நாளைக்குக் கவனிக்கலாம் என்று சொல்லியபடி அவற்றை ஒவ்வொரு கூண்டிலாக அடைத்து விடுவேன். அப்புறம் நிம்மதியாக தூங்கி விடுவேன்!''


இதை கேட்டதுமே நான் உற்சாகமாகி விட்டேன். இன் ஃபாக்ட் அப்போதே தூக்கம் வந்துட்ட மாதிரி சொக்கிப் போனேன் அந்த ஐடியாவில்.


அன்றிரவே அதை அமுல், செரிலாக் எல்லாம் படுத்தினேன். வாடி, வாடி என்று ஒவ்வொரு பிரசினையாக எடுத்து அலசி அதை கூண்டில் அடைத்துக் கொண்டிருந்தேன்.


திடீரென்று விழித்த என் மனைவி, இன்னும் தூங்கலையா என்று கேட்டபோது நான் அமைதியாகச் சொன்னேன், ''கொஞ்சம் இரு, இன்னும் நாலஞ்சு கூண்டு தான் பாக்கி, அப்புறம் ஜம்முனு தூங்கிருவேன்!''

''அதெல்லாம் நாளைக்கு கூட்டில் அடைக்கலாம் உங்க புறாக்களை! மணி ஆறரை ஆச்சு, எழுந்து வேலைக்குப் போகிற வழியைப் பாருங்க!'' என்றாள்.

சே! நெப்போலியன் காலம் மாதிரியா இப்ப? ஒரு மனுஷனுக்கு எவ்வளவு பிரசினை இருக்கு! அதை யாராச்சும் யோசிக்கிறாங்களா?

Wednesday, March 10, 2010

நினைப்பதெல்லாம் மறந்துவிட்டால்...


''அருமையான பிளாட் சார்! ஆல் அஃ ப் எ ஸடன் வந்தது. மிஸ் பண்ணிட்டேன், சே!'' அலுத்துக் கொண்டார் நண்பர் மாதவன்.

ஒரு நிமிஷம், அவர் சொன்னது நீங்க நினைக்கிற அந்த பிளாட் இல்லே, கதை எழுத ஒரு பிளாட்.

''கடையில சாமான்கள் வாங்கிட்டிருந்தப்ப அந்த நாட் தோணிச்சு. மனசில அசை போட்டு ஜோரா ஒரு பிளாட் உருவாச்சு. அப்புறம் மத்த வேலைகளுக்கிடையில் எப்படியோ மறந்து போச்சு. இப்ப உட்கார்ந்து நாலு மணி நேரமா நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன், ஊஹூம், ஞாபகம் வரவே மாட்டேங்குது. சே, போனது போனது தானா?''

என் யோசனையை அவரிடம் சொன்னேன். ''இன்னிக்கு ராத்திரி தூங்கறதுக்கு முன்னே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அதை யோசிச்சு பாருங்க.''

''அப்புறம்?''

''பேசாம படுத்து தூங்கிருங்க. அவ்வளவு தான். காலையில எழுந்திருக்கும்போது தொண்ணூறு பர்சன்ட் அது ஞாபகத்துக்கு வந்திருக்கும்.''

''நிஜமாவா?''

''எனக்கும் நிறைய முறை இப்படி வெற்றி கிடைச்சிருக்கு. எந்த விஷயம் மறந்து போய்விட்டாலும் இதை முயற்சித்து பார்க்கலாம்.அது மட்டுமல்ல. சில வேளைகளில் சில பிரசினைகளில் ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவிக்கிறப்ப முடிஞ்ச வரை அதை நல்ல யோசிச்சுப் பார்த்துட்டு படுத்து உறங்கி எழுகையில் அநேகமா நம்ம ஆழ் மனம் ஒரு வழியை அல்லது முடிவு எடுப்பதற்கான ஒரு பாயிண்டை எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கலாம்,'' என்றேன்.

று நாள் மாதவன்... ''சூப்பர் சார் உங்க ஐடியா!''

''என்ன, கிடைச்சிட்டது தானே?'' பாராட்டுக்குத் தயாரானது காது.

''அதை ஏன் கேட்கறீங்க? கொஞ்சம் அதிகமா தூங்கிட்டேன்! காலையில எந்திரிச்சு நினைச்சுப் பார்த்தா போன மாசம் தியேட்டருக்குப் போய் பாதியில தூங்கிவிட்ட சினிமாவின் முடிவு, போன வருஷம் திருவிழாவில செல் போனைத் தொலைச்ச இடம், ரெண்டு வருஷம் முந்தி தொலைச்ச மச்சினியோட டெலிபோன் நம்பர், அப்படீன்னு மறந்து போன, இப்ப பிரயோஜனம் இல்லாத விஷயங்கள்லாம் வரிசையா பளிச்சுன்னு நினைவுக்கு வருது. எது ஞாபகம் வரணுமோ அதைத் தவிர!''

Saturday, March 6, 2010

தனிமை


''என்னங்க, எழுபது வயசில ஊரில் தனியா கஷ்டப்படறேன்னு சொல்ற அப்பாவை நம்மோட அழைச்சிட்டும் வர மாட்டேங்கறீங்க, போய்ப் பார்க்கவும் நேரமில்லேங்கறீங்க... இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? நான் காலையிலேயே ஊருக்குப் போய் அப்பாவோடு ஒரு நாள் பூரா வீட்டிலிருந்து அவரைக் கவனிச்சுட்டு சாயங்காலம் வந்திடறேன்.''
''அட என்ன சுமதி, முடிவே பண்ணிட்டியா?''
''ஆமா!'' புறப்பட்டாள். ''சாப்பாடெல்லாம் எடுத்து மேஜை மேலே வெச்சிருக்கேன்.''
னந்த் டி.வி. பார்த்தான். போரடித்தது. குளிக்க நினைத்தான். சோர்வாக இருந்தது. சாப்பிட்டான். தனியே சாப்பாடு இறங்கவில்லை. தூங்க முயன்றான். வரவில்லை.

ரவில்...
''நாளைக்கே போய் அப்பாவை அழைச்சிட்டு வந்திடப் போறேன்,'' என்று அறிவித்தான் ஆனந்த். ''வயசோட கைகால் நல்ல வேலை செய்யற எனக்கே ஒரே ஒரு நாளைத் தனியா கழிக்கிறதுக்கு இத்தனை கஷ்டமா இருக்கே. எழுபது வயசுக்காரர் தனியா அந்த சின்ன கிராமத்தில எத்தனை கஷ்டப்படுவார்னு இப்பதான் புரிஞ்சது.''
மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் சுமதி.
(குமுதம் 09-01-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

ராடானின் கிரியேடிவ் கார்னரில் SMART STORIES பகுதியில் இந்தக் கதை தேர்வு.

Monday, March 1, 2010

ஒன்றேனும்...



புரியாதபடி எழுதுவது எனக்கு

போதாததாகவே இருக்கிறது.

எப்படிப் புரிந்து கொண்டாயோ...

சில சமயம் புரிந்ததோ என்று கூட

எழும் தவிப்பு அபாரமானது.

என்னுள் உறுத்தி என்னைக் கொல்வது.

விரும்பத்தக்க விளைவு அல்லவே அது?

புரிந்தும் புரியாமல் எழுதுவது கூட

பரஸ்பரம் நம்பிக்கையை சிதைப்பதாகவே.

உன் அதீத மதிப்பீடும் மன

இறுக்கத்திலேயே தள்ளும் பின்னாளில்.

ஆயினும் என்ன, என்னை

அப்படியே உன்னிடம் கொண்டு சேர்க்கும்

ஒரு கவிதை கூட

இன்னமும் நான் எழுதவில்லை.