Thursday, June 28, 2012

தொலை நோக்கு




மிக மிக தொலை தூரத்தில்
மின்னிடும் நட்சத்திரத்தை,
பார்க்கும் கணத்தில்
இருப்பதல்ல பார்ப்பது
என்றாலும் நம்புகிறாய்.
அந்தக் கணத்திலும் அது
அங்கே இருக்கிறது என்று.

ஆயினும் அதிசயம்,
சற்றுமுன் நெகிழ வைத்த
உன் மீதான
என் அன்பு
இந்தக் கணமும் அங்கே இருப்பதை
ஏன் நம்ப மறுக்கிறாய்?

<<<>>>

Wednesday, June 20, 2012

நிச்சயம், ஒரு மில்லி மீட்டர்.



அன்புடன் ஒரு நிமிடம் - 9



யுத்தம். காலையிலேயே அம்மாவுக்கும் மகனுக்கும். பார்த்துக் கொண்டுதான் இருந்தார் வாசு. ஆனால் எதுவும் கேட்பதாயில்லை அவர். அவனும் ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டு புறப்பட்டுப் போனான் காலேஜுக்கு.

மாலையில் அவனை அழைத்துக் கொண்டு மாலுக்குப் போனார். வழக்கமாகப் போவதுதான். வாரம் ஒரு முறை. அன்றைக்குப் பார்த்துத்தானா அந்த முறை வர வேண்டும்? அப்பா நிச்சயம் கேட்கப் போகிறார் என்று பயந்து கொண்டே வந்தான்.

கேட்டால் எப்படி சொல்ல வேண்டும், அம்மா தரப்பில் நியாயம் எப்படி அணுவளவும் இல்லை என்று விளக்க வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே நடந்தான். அப்பா மடக்கி மடக்கி என்னவெல்லாம் கேட்பார், அதற்கு எப்படியெல்லாம் சரியான பதில் கொடுக்கலாம்... அவன் நடந்துகொண்டதன் அடிப்படைக் காரணங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் அப்பா சற்று வருத்ததோடு இருப்பார், அவர் அப்படி இருக்கத் தேவையில்லை என்று காட்ட வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? வழக்கத்துக்கு அரை சதவிகிதம் கூட உற்சாகம் குறையாமல் காணப்பட்டார் அப்பா.

சைண்டிஃபிக் கால்குலேட்டர் கேட்டிருந்தியே, அதை முதல்ல முடிச்சிடுவோம், என்று எலெக்ட்ரானிக் ஷாப்புக்குள் நுழைந்தார். பொருத்தமான ஒன்றை சௌகரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல முறை உள்ளே போய்வந்தார் செல்ஸ்மேன். ஆனால் அந்த கேப்பில் கூட வாசு வாயைத் திறக்கவில்லை. அவனுக்கு சந்தோஷமான ஏமாற்றம்.

அப்பாடா! இவர் அதை மறந்துவிட்டார் போல. அப்படியே விட்டுட்டாரென்றால் நல்லது. 

அதுவே தொடர்ந்தது அடுத்த ஸ்டாலிலும், அதற்கு அடுத்த ஸ்டாலிலும். பர்சேஸ் முடிந்ததும் வழக்கம்போல நுழை வாயிலை ஒட்டியிருந்த மக்டொனால்டுக்குள் வந்து அமர்ந்தார்கள்.

, இப்ப ஆற அமர விசாரிக்கலாம்னு தான் இதுவரை கேட்காமல் இருந்திருக்கிறார் போல. இப்ப எப்படியும் கேட்டு விடுவார்...

ஆனால் மனுஷன் இங்கேயும் அதுபற்றி வாயைத் திறக்கவே இல்லையே? ஆனால் அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை. அவனுக்குள் ஒரு உந்துதல். தன் தரப்பை சொல்லியே ஆக வேண்டும். அவர் கேட்டாலும் கேட்காவிட்டாலும்!

அப்பா காலையில நான் ஏன் அம்மாகிட்ட அப்படி சொன்னேன்னா... என்று ஆரம்பித்து அவன் பாயிண்டுகளைக் கொட்டித் தீர்த்துவிட்டான்.

அமைதியாகக் கேட்டார் வாசு. நீ ஏன் அப்படி செய்தேன்னு நான் கேட்கவே இல்லையே?

இருந்தாலும் நீங்களும் சண்டையை பார்த்தீங்கல்லியா?. அதான்...

யெஸ். பார்த்தபிறகு, இதே பாயிண்டுகளை அங்கே நீ சொன்னதையும் நான் கேட்ட பிறகு, எதற்கு இன்னொரு முறை விளக்கம்?

விழித்தான்.

நான் சொல்லட்டுமா எது உன்னை சொல்ல வைத்ததுன்னு? என்றார், Its  the uncertainty you feel about in your being right. உன் செயலின் மேல் உனக்கிருக்கிற நம்பிக்கைக் குறைவுதான் உன்னை பேச வைத்தது அதைப் பற்றி.  அதில் உனக்கு முழு நிச்சயம் இருந்திருந்தால் நீ அதைப் பற்றி, அதுவும் அதை நான் பார்த்த பிறகு, கவலைப் பட்டிருக்கவே மாட்டாய்.

 “ஆமா, தலையை ஆட்டினான் வெட்கத்துடன்.

இதில் வெட்கப்பட எதுவுமில்லைடா. In fact, இது தேவையான ஒன்று. தெளிவை நோக்கி நம்மை இட்டுச் செல்வது. ஒரு மில்லிமீட்டர் கூட ஐயமின்றி நம் செயலை நாம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக நம்புவதுதான் தவறு. நான் விட்டாலும் என்னோடு பேசி உன் நியாயத்தை நிச்சயம் செய்துகொள்ள நினைக்கிறியே அதுதான் முக்கியமும் உனக்கே பயன் தருவதும்!

<<<>>>


Saturday, June 16, 2012

வாரா வசந்தங்கள்...




வானம் வசப்படுமோ இல்லையோ
கவிதை வசப்படாது,
விட்டுவிட்டேன்.

கூட்டம் வசப்படுமோ இல்லையோ
நட்பு வசப்படாது,
விட்டுவிட்டேன்.

ஞானம் வசப்படுமோ இல்லையோ
சாந்தம் வசப்படாது,
விட்டுவிட்டேன்.

இன்னும்...
வசப்படாத சங்கீதம்,
வசப்படாத காதல்,
வசப்படாத சமையல் என்று
வைத்திருக்கிறேன் நிறைய
ஒவ்வொன்றாய் விட்டுவிடுவதற்கு.


Thursday, June 7, 2012

அதற்காகத்தானே சொன்னார்?



அன்புடன் ஒரு நிமிடம் 8. 

அதற்காகத்தானே சொன்னார்?

“”காலையில் என்ன சண்டை அம்மாவோடு? பரசு வந்ததும் வராததுமாக கேட்டார் அப்பா.

‘’பச்சைத் தண்ணீரில் குளிக்க சொல்றாப்பா.”

“ஏன் வெந்நீர் என்ன ஆச்சு?

“ஹீட்டரில் ஏதோ பிரசினை. வேலை செய்யலே.”

“அப்ப காரணம் இருக்கு. அப்புறம் என்ன?

“அதுக்காக? பச்சைத் தண்ணியில. எப்படி... என்னால நினைச்சே பார்க்க முடியலே.”

“எதுக்காக நினைக்கணும்? நேரா விஷயத்தைப் பண்ணிடவேண்டியதுதானே?

“என்னப்பா சொல்றீங்க?

“யோசிச்சிட்டெல்லாம் இருக்கப்படாதுன்னு சொன்னேன். அவ்வளவுதான்.”

“அது சரி. அதுக்காக குளிர்ந்த தண்ணியில எப்படி... இது வரை நான் ஒரு தடவை கூட அதில குளிச்சதில்லையே?

“குட். இதுவரை குளிச்சதில்லையா? அப்ப கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்!”.
வியப்போடு பார்த்தான். தமாஷ் பண்ணுகிறாரா என்ன?

அவர் தொடர்ந்தார். உன்னை யார் குளிக்க சொன்னது? நான் சொல்ற மாதிரி செய். பக்கெட்ல தண்ணியை நிரப்பிட்டு உட்கார். சொம்பில் முதல்ல கொஞ்சம் தண்ணியை எடு. கையில ஒரு அள்ளு அள்ளி அதை முகத்தில தடவிக்க. குளிராது. ஏன்னா அது நீ அடிக்கடி செய்யறது தான். அடுத்த அள்ளல் எடுத்து கைகளில தடவிக்க. குளிரும் ஆனா பொறுத்துக்க முடியும். அடுத்த அள்ளலை கால்ல தடவிக்க. அப்புறம் கழுத்தோரமா. அப்புறம் தோளில்.  அப்புறம் நெஞ்சில்... இப்படி தடவிக்க. குளிரும். ஆனா பொறுத்துக்கவும் முடியும். அப்புறம் அதே மாதிரி ஒவ்வொரு விள்ளலா எடுத்து மேலே ஒவ்வொரு இடமா தெளிக்கணும்.  இப்ப தண்ணீர் மேல கொஞ்சம் வழிஞ்சோடும். ஆனா இப்பவும் பொறுத்துக்க முடியும். இப்ப நிறுத்தி சோப் போடணும். தண்ணீரை கொஞ்சம் அதிகமா தெளிச்சு ஒவ்வொரு இடமா வழிய விடறே. இப்ப குளிர் குறைஞ்சிருக்கும். அப்புறம் மெல்ல மெல்ல சொம்பிலேர்ந்து தண்ணீரை கொஞ்சம் தாராளமா சாய்ச்சுக்கறே. இப்ப குளிர் அனேகமா மறைஞ்சிருக்கும். லேசா தலையிலயும் விடலாம். இப்ப கொஞ்சம் சுகமா கூட இருக்கும். அப்புறம் எவ்வளவு தோணுதோ அவ்வளவு ஊத்திக்க. அவ்வளவுதான். குளிச்சாச்சு. Try it for once. பிடிக்கலேன்னா விட்டுரு.”

மறு நாள். ‘’அப்பா, it works. நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன். கடைசியில குளிர் சுத்தமா போயிடுச்சு. முழுசா நல்ல ஊத்தி குளிச்சேன். இனிமே எப்ப தேவைப்பட்டாலும் பச்சைத் தண்ணீரிலேயே குளிக்கலாம் போல இருக்கு.”

“ஆல் ரைட். எப்படி இது முடிஞ்சதுன்னு தெரியுதா?

 “நீங்க சொன்ன மாதிரி சின்ன சின்ன அளவில் வரிசையா செஞ்சதினால இந்த கஷ்டமான விஷயத்தை செய்ய முடிஞ்சது, என்றவன் சொன்னான், “யோசிச்சுப் பார்த்தேன். எந்த விஷயத்தையுமே இப்படி செய்ய முடியும்கிறதும் தெரியுது”

அதற்காகத்தானே சொன்னார்?

<<<<>>>> 

Sunday, June 3, 2012

கனவும் காலமும்



னவின் வண்ணம் காய்வதற்குள்
அடுத்த
கனவுக்குள் புகுந்துவிட வேண்டும்.
நற்கனவோ அல்லவோ
நனவை அதுவே நடத்திச் செல்கிறது.
ஒப்பிட்டு அலசி ஆய்ந்து நடப்பது
ஒருபோதும் உவப்பாயில்லை.
பயத்திலோ ஆசையிலோ படகு
வளைந்தோ நெளிந்தோ
வழுக்கிச் செல்கிறது.
சிலசமயம் திரும்பியும்.