Sunday, November 27, 2016

நன்றாகவும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 110

”நீ இந்த ரூமிலேயே படுத்துக்க. அதோ அந்தக் கட்டில்.” என்றார் சாத்வீகன்.
தலையாட்டினான் சிவா. அவரது நண்பரின் பேரன். அவருக்கு வெளியூரில் ஒரு வேலை. பத்து நாளைக்கு அவனை நண்பரின் வீட்டில் விட்டுச் சென்றார். 
”தாத்தா ரொம்ப ஜோவியல். உனக்கு போரே அடிக்காது,” என்று அவனிடமும், ”இந்தப் பயல் சுத்த சோம்பேறி, கொஞ்சம் நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்,” என்று இவரிடம் தனியாகவும் சொல்லிப் போனார்.

மறு நாள் காலை எட்டு முப்பது. அப்போதுதான் எழுந்துவந்தான்  சிவா. உடனே சாத்வீகன் வந்து அவனின் படுக்கை விரிப்பை மடிப்பதைப் பார்த்தான். அவரின் படுக்கை விரிப்பு ஏற்கெனவே அழகாய் இரண்டாக மடித்து வைக்கப் பட்டிருந்தது.
”தாத்தா, இப்படிக் கொடுங்க. நானே மடிச்சு...”
”இல்லேப்பா, இது கஷ்டம்..”
”என்ன கஷ்டம்? நான் பண்றேனே...  நான் தூங்கிய ஷீட்டை நான்தானே மடிக்கணும்?'
"இல்லேப்பா, இதை நான் எப்படி மடிப்பேன்னா.. வாரத்தில ஏழு நாள் இல்லையா,  முதல் நாள் இரண்டா மடிப்பேன். மறு நாள் அதையும் இரண்டாக, அதாவது மூணு முறை மடிப்பேன். அடுத்த நாள் நாலு. இப்படி ஏழாம் நாள் ஏழு மடிப்பு வரும்.” 
”அப்படியா, சரி, நானும் அப்படியே மடிச்சிடறேன்,” என்றான்.
ஆறாவது நாளன்று அவனால அதற்கு மேல் அழுத்தி மடிக்க முடியாமல் திணறுவதைப் பார்த்த அவர், ”என்னப்பா கஷ்டமா இருக்கா?” அதே நேரம் அவரது ஷீட் துளி பிசிறு இல்லாமல் மடிக்கப்பட்டு கம்பீரமாக வீற்றிருந்தது. 
”ஆமா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.’
அதை வாங்கி இன்னும் இலகுவாகவும் லாவகமாகவும் மடித்துக் காட்டினார். ”முதல் நாள் ஜஸ்ட் ரெண்டாக மடிக்கும்போதே நான் அந்த மடிப்பை நல்ல அழுத்தமாக மடித்து அந்த இடத்தை நல்ல நீவிக் கொடுத்து... இப்படி ஒவ்வொரு நாளும் அந்த ஃபோல்டை அழுத்தமாக செய்வதால் கடைசிவரை எனக்கு எளிதாய் இருக்கிறது. வாழ்க்கையில் நமக்கு வயது ஏற ஏற பொறுப்பு அதிகரிச்சுட்டே போகும்.ரெண்டாக மடிக்கும் காலத்திலிருந்து ஏழாக மடிக்கும் காலம் வரும்.அப்போது நாம் கஷ்டத்தைக் கண்டு துவளாமல் இருக்க ரெண்டாக மடிக்கும்போதே அதை நன்றாக மடிக்க பழகிக்கொண்டு விடணும். வாழ்க்கையில் பொறுப்பு அதிகரித்துக் கொண்டே போகிறதால, நாம் பொறுப்பை ஏற்க, எல்லா தளத்திலும் எல்லா விதத்திலும் பழகிக்கொள்வது நல்லதுதானே?”.
அவன் அப்படியே யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அந்த கருத்தை நல்லவே உள்வாங்கிக் கொண்டுவிட்டான் என்றே தோன்றியது இவருக்கு. மறுவாரம் அவனது தாத்தா நன்றி சொல்லியபோது அது நிச்சயமானது.  
(’அமுதம்’ ஏப்.2015 இதழில் வெளியானது)

Sunday, November 20, 2016

அவள் - கவிதைகள்


341.
எப்படி ஜீவிக்க முடிகிறது உன்னால்,
எனக்கு மகனுக்கு மகளுக்கு என்று
இதயத்தை முழுவதுமாகப்
பங்கிட்டுக் கொடுத்துவிட்டு?

342
எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னை
சிலசமயம் 
எதற்கென்று தெரியாமலேயே.

343.
மாங்காய் வெட்டக்
கூராய் ஒன்றைத் தேடுகையில்
கண்ணில் படுகிறது உன் 
கண்.

344.
நீ சிரிக்கையில்
அழகு அதிகரிப்பதில்லை,
அது ஏற்கெனவே  
நூறு சதம் ஆகிவிட்டதால்.

345
இடவலமாகவும்
மேலும் கீழுமாகவும்
நகரும் உன் விழி
ரிமோட்டாக எனைப்
பந்தாடுகின்றனவே?

346
நீ
மிச்சம் வைத்த எழிலை
உலகம் பங்கிட்டுக் கொண்டது.

347
அழகு
சில வேளைகளில்
உன்னைப் போலிருக்கிறது.

348.
என் உலகத்தை
தயாரித்துவிட்டு
உனக்காகக் காத்திருக்கிறேன்.

349
உவப்பளிக்கிறதோ இல்லையோ உனக்கு,
உயிர் தருகின்றன எனக்கு
இக்கவிதைகள்.

350.
சிக்கனம் சிறிதுமின்றி
வாரியிறைக்கிறாயே,
எத்தனைதான் வைத்திருக்கிறாயோ 
அன்பு?

><><><

Wednesday, November 16, 2016

நல்லதா நாலு வார்த்தை...75

'வாழ்க்கையை தெரிந்துகொள்ள வழி 
நிறைய விஷயங்களை நேசிப்பது.'
- Vincent Van Gogh
('The way to know life is to love many things.')
<>

'தங்களுக்கு ஓர் வாழ்க்கையைத்
தரக் கடமைப் பட்டிருக்கிறது இத்
தரணியென நினைக்கிறார்கள் சிலர்.'
- Clint Eastwood
('Some people feel that the world owes them a living.')
<>

’களைகளும் மலர்களே, 
அவை பற்றி நாம்
அறிவடைந்தவுடன்.'
- A. A. Milne
('Weeds are flowers too, once you get to know them.')
<>

'தணிவாகப் பேசு,
மெதுவாகப் பேசு,
ரொம்பவும் பேசிவிடாதே.'
-John Wayne
('Talk low, talk slow and don't say too much.')
<>
'உற்றுக் கவனியுங்கள் எல்லா மனிதரையும்,
பெரிதும் உங்களை.’
- Benjamin Franklin
('Observe all men, thyself most.')
<>

’ஒரு கவியாக முடியவில்லையெனில் 
ஒரு கவிதையாக இரு.’
- David Carradine
(”If you can not be a poet be a poem.’)
<>

'ஆண்டவனும் நல்ல நூற்களின் துணையும்
அவனுக்கு இருக்கிற வரையில்
எவரையும் சொல்லமுடியாது நண்பரற்றவரென.'
-Elizabeth Barrett Browning
('No man can be called friendless when he has God
and the companionship of good books.')
<>

'இளமையில் நம் சந்தோஷங்களை
செம்மைப் படுத்தவும்
முதுமையில் அவற்றைத்
திருப்தியுடன் நினைவுகூரவும்
கற்றுத் தருபவை புத்தகங்களே.'
-Leigh Hunt
('It is books that teach us to refine our pleasures when
young, and to recall them with satisfaction when we are old.')
<>

'முடிவுகளின் மீது தாவுவதுபோல
வேகமாகத் தாவுங்கள் வாய்ப்புகளின் மீது,
வெற்றி பெற வேண்டின்.'
- Benjamin Franklin
('To succeed, jump as quickly at opportunities as you do at conclusions.')
<>

'அர்த்தத்துடன் கூடிய மிகச்சில விஷயங்கள்
அதற்ற ஆகப்பெரும் விஷயங்களை விட
அதிக மதிப்புடையது வாழ்க்கையில்.'
- Carl Jung
('The least of things with a meaning is worth more 
in life than the greatest of things without it.')

><><><><

Wednesday, November 9, 2016

முதல் தேவை.. (நிமிடக்கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 108

"நாளைக்கு லீவு சொல்லிரு," என்றான் வினோத் தியாகுவிடம் போனில்.
என்ன விஷயம் என்று  மறு நாள் அவனிடம் சொன்னான். "காரை மாத்திடலாம்னு... பெரிய கார் எடுக்கலாம்னு இருக்கேன். இந்தா பிராச்சர்ஸ்.  செலெக்ட் பண்ணிரலாம் எதுன்னு...” நாலைந்து பிரம்மாண்டமான ரகங்கள் அதில் வித விதமாக...
கொஞ்ச நேரம் ஒவ்வொன்றாகப் பார்த்து ஒன்றை தேர்ந்தெடுத்தார்கள்.
”ஆமா, பணம் எல்லாம் ரெடி பண்ணிட்டியாக்கும்?’
”ஒ! மாடியில விசாலமா ஒரு ரூம் கட்டணும்னு வெச்சிருந்தேன், அதை அப்புறம் பார்த்துக்கலாம்னு... என்னைச் சுத்தி எல்லாரும் அது இதுன்னு அமர்க்களப் படுத்தறாங்க. நாங்க எத்தனை நாளைக்குத்தான் இந்த சின்ன காரையே...”
”ரைட். வாங்கிட வேண்டியதுதான். ஆனா ஒரே ஒரு விஷயம் எனக்கு உதைக்குது. போன வாரம் சொல்லிட்டிருந்தியே ஆபீசில ஏதோ டெஸ்டுக்கு படிக்கணும்னு... அப்புறம் பையன் படிப்பில கூடவே இருந்து கொஞ்சம் கவனம் செலுத்தணும்னு... அது ஞாபகம் வந்தது.”
”அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”
”ஒண்ணே ஒண்ணுதான். கார் வந்து நின்னிரும் வீட்டில. அடுத்த அஞ்சு வருஷத்தில அதை நீ எத்தனை முறை உபயோகிப்பேங்கிறதுதான்...  சொல்லேன்.”
இது என்ன திடீர்னு ஒரு கேள்வியைத் தூக்கிப் போடறான் இவன்! யோசித்தான் வினோத். “டெஸ்டு, பையன் படிப்புன்னு இருக்கிறதால அடுத்த நாலைஞ்சு வருஷத்தில அதை எடுத்திட்டு டூர் போகிறது கம்மியாத்தானிருக்கும். ரொம்ப எல்லாம் உபயோகிக்க முடியாதுதான்.”
”அதைத்தான் சொல்ல வந்தேன். ஹவ் மச் யு நீட் இட் - அதை வெச்சு தீர்மானி. ஆசைப்பட்டதை வாங்கிட்டோம்கிற சந்தோஷம் கொஞ்ச நாள் இருக்கும்.  நம்மகிட்டயும் பெரிய கார் இருக்குங்கிற திருப்தி இன்னும் கொஞ்ச நாளைக்கு. அதுக்கப்புறம்? உபயோகிக்கிறதைப் பொறுத்துத்தானே திருப்தியும் சந்தோஷமும்? யசி”
யோசித்தான். சரிதான்..
”அதே சமயம் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதை வாங்கினால் உன் தேவைகள் அப்ப அதிகமா இருக்கலாம். அந்த அளவுக்கு இதை உபயோகிக்கலாம். என்ன நான் சொல்றது?” 
மௌனமாக தலையாட்டினான். 
”பேசாமல் அந்த மாடி அறையைக் கட்டு. இப்ப அமைதியா தனிமையா உட்கார்ந்து டெஸ்டுக்கு படிக்கவும் சரி, பையனுக்கு உதவியா பக்கத்தில அமர்த்தி சொல்லிக் கொடுக்கவும் சரி, அட்டகாசமா உபயோகப்படும்!”
ரைட் என்று சிரித்தான் வினோத்.
('அமுதம்’ ஏப்-2015 இதழில் வெளியானது)