Monday, August 26, 2013

சில புள்ளிகள்... சில கோடுகள்...

அன்புடன் ஒரு நிமிடம் - 42

கொண்டு வைத்த காபி ஆறிப்போனது. கண்ணில் கவலைக் கிரணங்கள் கொஞ்சமும் குறையவில்லை. அத்தனை அதிகாலையிலேயே தேடி வந்திருந்த நிமலனின் சங்கடம் நல்லாவே விளங்கிற்று சாத்வீகனுக்கு. அவரது நண்பனின் பேரன்.

 “…பத்து வருஷம் வெளிநாட்டில எல்லாரையும் பிரிஞ்சிருந்துட்டு திரும்பின எனக்கு இப்படி எங்க குடும்பம் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிட்டு, ஒருத்தரை ஒருத்தர் பகையா நினைச்சுட்டு இருக்கிறதைப் பார்த்ததும் எப்படி இருக்கும் சொல்லுங்க. ஒரே அலங்கோலம். அப்படியே தலையில கையை வெச்சிட்டு உட்கார்ந்திட்டேன். பெரியண்ணா என்னடான்னா யாருமே என் பேச்சை மதிக்கிறதில்லேன்னு விலகிப் போயிட்டார், திட்டறார். அக்கா கணவருக்கும் என் தம்பிக்கும் ஒரு கல்யாண வீட்டில வெச்சு வாய்த்தகராறு முற்றி கைகலப்பில முடியப்போய் விருந்தாளிகள் வந்து விலக்கி... அக்கா என்னன்னா தன் மகள் கல்யாணத்தில் தங்கை அதிகம் பங்கெடுக்கலேன்னு எரிச்சலாகி விரோதம் வளர்த்து...  மாமாவுக்கும் அம்மாவுக்கும் சுத்தமாப் பிடிக்கிறதில்லே சித்தப்பாவுக்கு எல்லாரோடும் பகையாகி,. எங்க குடும்பத்துக்கும் இவங்களுக்கும் எந்தத்  தொடர்பும் இல்லேன்னு சொல்லிட்டு இருக்காரு...

 இன்னும் விலாவாரியாக அவன் பேசப்பேச, சரிதான், அவன் அயர்ச்சியின் விளிம்பில் இருப்பதில் எந்த வியப்புமில்லை. என்று தோன்றிற்று.

 ஒரு காலத்தில் உங்க குடும்பத்தை, குடும்ப ஒற்றுமைக்கு உதாரணமா சொல்வாங்க... 

 அதெல்லாம் போச்சு தாத்தா... நிறைய தகராறு நடந்துவிட்டது. ஆளுக்கொரு பக்கம் கறுவிட்டு திரியறாங்க. இப்ப என் பிரசினை என்னன்னா இனி எப்படி இவங்களை ஒண்ணு சேர்க்கிறதுங்கிறதுதான்! 

வாசலில் ஜனனி ஒவ்வொரு புள்ளியாக இட்டு கோலம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபடியே தலை குனிந்து பேசினான். அவனுக்கு சொல்ல வேண்டியதை எப்படி சொல்வது என்ற யோசனை ஓடிற்று இவர் மனதில்.

கொஞ்ச நேரம் இதைப் பாரேன்.  நிமிர்ந்தான்.

உனக்கான பதில் இதில் இருக்கிறது.

என்ன சொல்றீங்க தாத்தா?”

அவ்வளவு பெரிய கோலத்தை அவள் எப்படிப் போட்டு முடிக்கிறா பார்த்தியா? முதல்லே ஆங்காங்கே சில புள்ளிகளை வைக்கிறா. அப்புறம் அதைக் கோடுகளால் சேர்க்கிறா. இப்படி ஒரு பகுதி கோலம் உருவாகுது. அடுத்து அதன் நீட்சியா ஒரு திசையில் சில புள்ளிகள். அதை சேர்த்தல். அப்படி மற்ற திசைகளிலும். சேர்க்கச் சேர்க்க அடுத்த கட்டங்கள் உருவாகிப் படர்ந்து அவ்வளவு பெரிய கோலம் மெல்ல உருவெடுக்குது.

அவன் விழித்தான்.

நீ இப்ப போட வேண்டியதும் இப்படி ஒரு கோலம்தான். முதல்ல சில புள்ளிகளை வை.

 புள்ளிகள்?”

 ஆமா. அவங்களை ஒருங்கிணைக்கக்கூடிய புள்ளிகள்.

அதென்ன மாதிரி?”

 இத பாரு, உன் தங்கை மகள் கணக்கில் வீக். உன் சித்தப்பாவோட நண்பர் பிரபல கணக்கு டீச்சர். அவரிடம் சித்தப்பா வழியா இவனுக்கு ட்யூஷன் ஏற்பாடு பண்ணினா அது ஒரு புள்ளி. உன் அத்தானுக்கு நண்பர் வட்டம் பெரிசு. அதில சில பேருக்கு பெரியண்ணாவோட இன்ஷூரன்ஸ் கம்பெனியில் ஆளுக்கொரு பாலிசி எடுத்துக் கொடுத்தால் அது ஒரு புள்ளி. அம்மாவோட அடுத்த காசி டூரை மாமா ஃபிரண்ட் நடத்தற டிராவல் ஏஜென்சியில் புக் பண்ணினா அது ஒண்ணு. இன்னும் நீயே யோசிச்சா தோணுகிற இப்படிப்பட்ட புள்ளிகள். அதை முதல்ல வை. அப்புறம் கோடுகளை இழு. அதாவது இப்படி தொடர்பு ஏற்பட்டதும் அதனால ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் சொல்ற நல்ல வார்த்தைகளை மட்டும் அந்த நபர்களிடம் சொல்கிறது தான் அது. அப்புறம் அடுத்த செட் புள்ளிகள். கோடுகள்.... இப்படியே அந்தக் கோலத்தைப் போட்டு முடிச்சிடலாம் நீ.

மனக் கண்ணில் சுபம் தெரிய, தாங்க் யூ தாத்தா! என்றான் அவன்.
 
('அமுதம்' மே  2013 இதழில் வெளியானது.)
 <<>>
(படம்- நன்றி: கூகிள்)
 

Tuesday, August 20, 2013

நல்லதா நாலு வார்த்தை - 14


 

 

அனைத்து மனித 

விவேகத்தையும் 

அடக்கிவிடலாம்

இரண்டே வார்த்தையில்:-

நம்பு, காத்திரு.

- Alexander Dumas

(‘All human wisdom is summed up in two words; wait and hope.’)

<> 

மௌனம் எனும் தூக்கம்

ஊட்டுவது விவேகம்.

-Francis Bacon(‘Silence is the sleep that nourishes wisdom.’)

<> 

பெறும் உதவிகளால் அல்ல
பெறுவது நாம் நண்பர்களை;
புரியும் உதவிகளால்!
 
-Thycydides
(‘We secure our friends not by accepting
favours but by doing them.’)
 
<> 
 

நேற்றுப் படித்த பாடங்களுக்கு

நேர்மாறாக இருப்பினும் சரி

புதிய பாடங்களைக் கற்க

தயாராக இரு.

-Ellen DeGeneres

(‘Be open to learning new lessons even if they

contradict the lessons you learned yesterday.’)

<> 

இடர்ப்பாடுகளை சந்திக்காதவன் தன்

இயல் திறன் அறியாதவன்.

- Ben Jonson

(‘He knows not his own strength that hath

not met adversity.’)

<> 

இசைஎன்பது
உணர்வுகளின்
சுருக்கெழுத்து.
 
- Leo Tolstoy
(‘Music is the shorthand of emotion.’)
<> 
 

தன்னடக்கமுள்ள மனிதன்

பாராட்டப்படுகிறான்

மக்கள் அவனைப்பற்றிக்

கேள்விப்பட்டால்.’

-Ed Howe

A modest man is usually admired if people ever hear of him.’

<<<>>> 

 

(படம் - நன்றி:கூகிள்) 

 

Friday, August 16, 2013

ஒரே ஒரு வார்த்தை...

அன்புடன் ஒரு நிமிடம் - 41

மெல்லத் துயிலெழுந்து ஒரு கொட்டாவியை வெளிவிட்டபோது எட்டாகியிருந்தது மணி. உள்ளே எட்டிப் பார்த்தபோது யாழினி அதற்குள் எழுந்து குளித்து பூஜை முடித்துவிட்டு பிஸியாக இயங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தான் கிஷோர். ஞாயிற்றுக் கிழமையானாலும் அவளுக்கு வேலை குறைவில்லை போல.
 
சற்றே வெட்கமாகத்தான் இருந்தது.
 
அவன் எதிர்பார்த்த சூடு காபியில், எதிர்பாராத ஃபேவரிட் ஆப்பம் டிபனில்...  

என்ன செய்து அவளை சந்தோஷப் படுத்தலாம் அன்று என யோசித்தான்.
 
சில வழிகள் புலப்பட்டன.
 
அன்றைக்கான அவளின் தையல் வகுப்புக்கு கிளம்பினாள் யாழினி. சபாஷ், அவள் வருவதற்குள் முடித்து விடலாம்!
 
டிபன் சாப்பிட்டான பின் முதல் வேலையாக கார்டனில் காலை வைத்தான். ரோஸ், சிவப்பு, வெள்ளை என்று தொட்டிகளில் வைத்திருந்த ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மண்ணைக் கிளைத்து உரமிட்டான். ஒவ்வொன்றாக பார்த்து ஆராய்ந்து சில செடிகளுக்கு கிளையை நறுக்கி பதியம் வைத்தான். வந்ததும் பார்த்து யாழினி எத்தனை ரசிப்பாள் இதை என்று நினைக்கும்போதே பரவசமாயிருந்தது.
 
அடுத்து புத்தக அலமாரிக்கு வந்தான். குவிந்து கிடந்த அத்தனை புத்தகங்களையும் வகை பிரித்து ஒழுங்காக அடுக்கினான். வந்ததும் பார்த்து யாழினி எத்தனை ஆச்சரியப் படுவாள்!
 
பழைய ஆங்கில தமிழ் தினசரிகளை அடுக்கிக் கட்டி வைத்தான்.
 
யாழினி வந்தாள். ஒவ்வொன்றாகக் காட்டினான். ஐயோ, எத்தனை மெனக்கிட்டு... எல்லாம் நீங்களே பண்ணினீங்களா?”
 
ஆமா, எல்லாம் உன்னைக் கவரத்தான் பண்ணினேனாக்கும்! என்றான் பெருமையாக.
 
அவள் முகத்தில் சுடர் விடத் தொடங்கியிருந்த பரவசம் சட்டென்று அணைந்து போனது.
 
அவனுக்கு ஏமாற்றமாகிப் போனது.
 
என்னதான் அப்புறம் சிரித்து பேசினாலும் அவள் அப்படி ஒன்றும் மகிழ்ந்து போய்விடவில்லை என்பது உறுத்திக் கொண்டே இருந்தது.
 
புரிஞ்சுக்கவே முடியலே என்னால இவளை! என்று ஆரம்பித்து அத்தனையையும் சொன்னான்  
 
எல்லாவற்றையும் வரி விடாமல் கேட்டுக் கொண்டார் ராகவ்.
 
ஒரு புன் சிரிப்பு அவர் முகத்தில் அரும்பிற்று.

வீடு நிரம்ப பூச்செடிகள் இருந்தா எத்தனை அழகாயிருக்கும்னு அடிக்கடி சொல்லுவாள் மாமா! வீட்டுக்கு வர்றவங்க ரோஜா செடிகளை ரொம்ப ரசிப்பாங்களாம். புத்தகங்கள், துணி மணிகள்னு வீட்டில ஒவ்வொரு பொருளும் நீட்டா அடுக்கப்பட்டு உரிய இடத்தில் இருப்பதன் சிறப்பையும் வனப்பையும்  நிறைய முறை சொல்லியிருக்கா. எத்தனை சிரமப்பட்டு எல்லாம் செய்தேன்? கடைசியில் அவள் அத்தனை மகிழ்ந்ததாத் தெரியவில்லையே?”
 
நீ செய்ததெல்லாம், சிரமப்பட்டதெல்லாம் சரிதான் கிஷோர். ஒரே ஒரு வார்த்தை. அதை மாற்றிச் சொல்லியிருந்தால் போதும். அவள் அகமகிழ்ந்திருப்பாள்!
 
இவனுக்குப் புரியவில்லை. ஒரே ஒரு வார்த்தை?”
 
ஆமா, நீங்களே பண்ணினீங்களா என்று அவள் கேட்டதற்கு நீ என்ன சொன்னாய்?”
 
எல்லாம் உன்னைக் கவரத்தான் பண்ணினேனாக்கும் அப்படீன்னு சொன்னேன்.
 
அதான். அந்த வார்த்தைதான்!
 
எந்த வார்த்தை?”

உன்னைக் கவரத்தான் அப்படீன்னு சொன்னாயில்லையா? உன்னால் கவரப்பட்டுன்னு சொல்லியிருக்கணும்.
 
அவன் விழிக்க அவர் தொடர்ந்தார்.
 
ஆமா, அவள் சொன்ன நல்ல விஷயங்களை செய்து அவளை மகிழ்விக்கிறாய் என்பதை விட அந்த நல்ல விஷயங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை சந்தோஷமாக செய்தாய் என்பது தானே அவளுக்கு அதிக மகிழ்ச்சி தருவது? அந்த செயல்கள் உனக்கு ரசனையும் சந்தோஷமும் அளித்தது என்பதே அவள் பெறும் பெரும் சந்தோஷம்!
 
நல்லதொரு விஷயம் சொன்னீங்க! என்றான்.
 
('அமுதம்' ஏப்ரல் 2013 இதழில் வெளியானது)
<<>>
(படம் - நன்றி: கூகிள்)
 

Sunday, August 11, 2013

நல்லதா நாலு வார்த்தை -13


அறிவென்பது


அனுபவத்தின்


குழந்தை.


- Leonardo da Vinci


(‘Knowledge is the child of experience.’)


<> 


நாமல்லால் வேறாரும்

நமை இகழ முடியாது.

- Josh Billings

(‘No one can disgrace us but ourselves.’)


<> 

 


எல்லாவற்றுக்கும் அதன்


அழகுண்டு, ஆனால்

எல்லாரும் அதைக்

காண்பதில்லை


- Confucius


(‘Everything has its beauty, but not everyone sees it.’)


<> 


புதியவர்கள் என்போர்

புலரக் காத்திருக்கும்

நண்பர்களே!

- Rod McKuen

(‘Strangers are just friends waiting to happen.’)

<> 


விஞ்ஞானபூர்வமாக


பொருட்களை


பிரிக்கலாம் மூவகையாக:


வேலை செய்யாதன,


உடைந்து போவன,


தொலைந்து போவன.


-Russel Baker


(‘Objects can be classified scientifically into three major categories:


those that don‘t work, those that break down and those that get lost.’)


<> 


 


எப்படி அவர்கள்


மலர வேண்டியவர்களோ


அப்படி அவர்களை


நடத்துங்கள்.


எந்தஅளவு  அவர்களால்


பரிமளிக்க முடியுமோ


அந்த அளவு ஆவதற்கு


உதவியவர் ஆவீர்கள்!


– Goethe


(‘Treat people as if they were what they ought to be and


you help them to become what they are capable of being.’)


<> 


இன்றொரு தினம்


இரு நாளைக்கு இணை.


-Benjamin Franklin


(‘One today is worth two tomorrows.’)

 

<<<>>>