Wednesday, February 25, 2015

நல்லதா நாலு வார்த்தை - 43.


‘வழக்கம் என்பது
இரும்பினால்
வார்க்கப்பட்ட சட்டை.’
- Proverb
('A habit is a shirt made of iron.'
<>

‘நாட்கள் ஒவ்வொன்றும் 
நல்கிடுமே 
தனக்கேயுரிய பரிசுகளை!’
- Marcus Aurelius
(‘Each day provides its own gifts.’
<>

‘வலிமையும் வளர்ச்சியும்
தொடர்ந்து முயல்வதிலும்
அரும்பாடு படுவதிலுமே
வருவது.’
- Napoleon Hill
(‘Strength and growth come only through
continuous effort and struggle.’)
<>

‘புன்னகை என்பது 
எல்லாவற்றையும் நேராக்கும் 
ஓர் வளைவு,’
- Phyllis Diller
(‘A smile is a curve that
sets everything straight.’)
<>

‘மலர்கள்
மகிழ்வானவை’.
- P.G.Wodehouse
(‘Flowers are happy things.’)
<>

’சந்திப்போம் 
ஒருவரை ஒருவர்
எப்போதும் 
ஓர் புன்னகையுடன்!
அன்பின் தொடக்கம் 
அதுதானே?’
- Mother Teresa
(‘Let us always meet each other with a smile,
for the smile is the beginning of love.’)
<>

'வாழ்க்கை உண்மையில்
எளிதானது,
ஆனால் அதை
சிக்கலாக்கிக் கொள்வதென்று
அடம் பிடிக்கிறோம்.’
-Confucius
(‘Life is really simple but we insist
on making it complicated,’)

><><><

(படம் - நன்றி: கூகிள்) 

Saturday, February 21, 2015

44 பேரும் அவனும்...

                                                               
அன்புடன் ஒரு நிமிடம் - 75
ந்தவரின் கையில் ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது. 
”அப்பாடா ஒரு பெரிய ஜாப் முடிந்தது நல்லபடியா.” என்றார்.
”வாங்க வாங்க,“ என்றார் சாத்வீகன். “ரமேஷ், உங்க பையன் பிரமாதமா மார்க் வாங்கியிருக்கிறானாமே பிளஸ் டூவில்? இனிமேல் எதில் சேரப் போகிறான்?”
“அந்த வேலைதான் ஒரு வழியா முடிஞ்சதுன்னு சொன்னேன்.”
“அப்படியா? காலேஜில் சேர்ந்துட்டானா?”
“நோ. நோ. எதிலே சேர்க்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அதானே முக்கியம்? மெடிகலா எஞ்சினீயரிங்கா, காமெர்ஸா, இல்லை, மானேஜ்மெண்டா…”
“ஆமா அவன் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற விஷயம் ஆச்சே? எப்படி முடிவாச்சு?”
”விடுவேனா?” லிஸ்டைக் காட்டினார். “மொத்தம் 42 பேர். எனக்குத் தெரிஞ்சவங்க, அவங்க வழியாக அறிமுகம் ஆனவங்கன்னு… புரஃபசர், டாக்டர், எஞ்சினீயர், கம்பெனி சி.இ.ஓ, அப்படீன்னு நான் கையிலே தயாரிச்சு வெச்சிருந்த பட்டியல்.”
பிரமிப்பானார்.
“ஒருத்தர் விடலே. எல்லாரையும் நேரிலேயே போய்ப் பார்த்து விலாவாரியா கேட்டுட்டேன். எந்தக் கரீயர் நல்லதுன்னு… நிறைய கேள்விகள் கேட்டு அவங்க அபிப்பிராயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.”
“ஆக மொத்தம் 42 கருத்துக்கள்?”
“ஆமா.”
”அப்புறம் வேறே யாரைக் கேட்டீங்க?”
“எங்க அப்பாவைக் கேட்டேன். பிறகு என் மாமனார். .அவ்வளவுதான்!”
”ஓ?”
“எல்லாவற்றையும் வைத்து  நாலு நாள் அமர்ந்து  நானும் மனைவியுமாக அலசி முடிவு எடுத்தோமாக்கும்.ஒருத்தர் சொன்ன ஒரு பாயிண்டையும் விடாமல்.”
“ஆஹா! அப்படி எடுத்த முடிவு என்னவோ?”
சொன்னார். கேட்டுக் கொண்ட சாத்வீகன் அவர் கையைப் பிடித்து குலுக்கினார். “க்ரேட்! நல்லாவே சிரமப் பட்டிருக்கீங்க. உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆனால் ஆனால்..”
புகழ்ச் சுமையில் தலை குனிந்த அவர் நிமிர்ந்தார். “என்ன ஆனால்?”
“ஆனால் ஒரு முக்கியமான நபரோட அபிப்பிராயம், அதைக் கேட்காமல் விட்டிட்டீங்களே? அவரை எப்படி மறந்தீங்க?”
லிஸ்டை அவசரமாகத் துழாவினார். “அப்படி யாரும் விட்டுப் போகலியே? யார்…யார் அது, அத்தனை முக்கியமான ஆளு?”
சிரித்தார். “உங்க பையனைத்தான் சொல்றேன். இந்த 44 பேர் சொன்னதும் எத்தனை முக்கியமோ அதன் மொத்த அளவு முக்கியம் அவன் என்ன சொல்கிறான் என்பது!. எந்த கரீயர் அவனுக்கு ரொம்பப் பிடிக்கிறது, அவன் மனசில் வளர்ந்து விட்டிருக்கிற ஆவலும் ஆர்வமும் எந்தத் துறையை நோக்கி இதுகாறும் செலுத்தப்பட்டிருக்கிறது, எதில் தன் திறமையைக் காட்ட அவன் துடிக்கிறான், எதில் அவனுக்கு நல்ல நேக் (knack)  இருக்கிறது, யாரைப் பார்த்து அவன் தன் ஐடியல் இவர்னு நினைச்சு வந்திருக்கிறான், எந்தப் படிப்பு அவன் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதோடு மத்தவங்களுக்கும் பயனுள்ளதா மாறும் சாத்தியதை அதிகம் கொண்டிருக்கிறது….இதெல்லாம் அவனைக் கலந்து ஆலோசிச்சாத்தானே தெரியும்? என்ன நான் சொல்றது?”
அவர் ஒன்றும் பேசவில்லை. கிளம்பினார் மகனுடன் உட்கார்ந்து பேச.
('அமுதம்’ மே 2014 இதழில் வெளியானது.)
(படம் - நன்றி: கூகிள்)


Sunday, February 15, 2015

அவள் - 16.


99.
நீ
நான்
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு…
<>

100.
அப்படியே இருக்கிறாய் நீ
எத்தனை மாற்றம்
எனக்குள்!
<>

101.
எங்கிருந்து முளைத்தன
அவ்விரு சிறகுகள்
உன்னை நினைத்ததும்
இதயத்துக்கு?
<>

102.
எல்லாவற்றையும் மறந்து
இதம் பெற்றிடும்
இசை போலும் நீ.
<>

103.
ஆயிரத்தில் ஒரு பங்கே உன்
அழகை ரசிக்க முடிகிறது,
999 –ம் உன் வெட்கத்துக்குள்
ஒளிந்து கொண்டு.
<>

104.
இருக்கட்டும் இருக்கட்டும் 
நீயே வைத்துக்கொள்
இழந்தபின்தான் எத்தனை நிம்மதி 
இதயத்தை உன்னிடம்!
<>

105.
கடவுள் என்னைக்
கைவிடவில்லை:
உன்னைக்
கைகாட்டினாரே.


><><><

Thursday, February 12, 2015

நல்லதா நாலு வார்த்தை... 42.


'மிகச் சிறந்தது 
என்றுமே 
புதியது.'
- Emerson
('The excellent is new for ever.')
<>

’மிகுந்த ஆற்றலை விட
மிதமிஞ்சிய சுமை 
வேறு இல்லை.’
- Charles Schulz
('There is no greater burden
than great potential.')
<>

’ஒரு முறை உங்கள் வழியைத் 
தவற விடுவதை விட 
இருமுறை கேட்டுக்கொள்வது 
நல்லதே.’
- Proverb
(‘Better to ask twice than to
lose your way once.’)
<>

‘நிஜத்தில் நாம் எதையும் 
படைப்பதில்லை,
நகலெடுக்கிறோம் இயற்கையை
அவ்வளவுதான்!’
-- Jean Baitaillon
(‘Really we create nothing.
We merely plagiarize nature.’)
<>

‘நம்மைத் 
தொலைத்த பின்னரே
நம்மைப் 
புரிந்துகொள்ள 
ஆரம்பிக்கிறோம்.’
- Thoreau
(‘Not until we are lost do we h
begin to understand ourselves.’)
<>

'கண்ணைத் திற, உள்ளே பார்.
நீ வாழ்ந்திடும் வாழ்க்கை 
உனக்கு திருப்தி தானா?'
- Bob Marley
('Open your eyes, look within. Are you
satisfied with the life you're living?')
<>

’மகிழ்வான வாழ்க்கைக்குத் தேவை 
பெரிதாக ஒன்றுமில்லை.
அதெல்லாம் நமக்குள்ளேயே, 
நாம் சிந்திக்கும் விதத்தில் உள்ளது.’
- Marcus Aurelius
('Very little is needed to make a happy life.
It is all within yourself, in your way of thinking.')
<><><>

(படம் - நன்றி: கூகிள்)

Friday, February 6, 2015

விசாலமாய் ஓர் இடம்…


அன்புடன் ஒரு நிமிடம் - 74

கொட்டித்  தீர்த்தாள்  கோமதி.
எப்படி  இருக்கிறான்  முருகேசன்?”   ஒரு  வரிதான்  கேட்டார்  சாத்வீகன்.
அதை  ஏன் கேட்கறீங்க?  ரிடயர்  ஆனதிலேர்ந்தே  பிரசினைதான்.   எப்ப  பார்த்தாலும் டென்ஷன்..  நாளின்  பாதி  நேரம்  அப்செட்  ஆகிப்போய்த்தான்  இருப்பார்.  மன அயர்ச்சிக்கு  ஒரு  கணக்கில்லை.  எரிச்சல்,  எரிச்சல்  எப்போதும்  எல்லாரிடமும் எரிச்சல்!’’
காரணத்தைக்  கேட்டபோது
‘’யாருமே  அவர்  பேச்சைக்  கேக்கிறதில்லையாம்.  முக்கியமா  அதான்… பிள்ளைங்களும்  சரி,  நண்பர்களும்  சரி,  ஏன்  என்னையும்  சேர்த்துத்தான்  சொல்வாருஅவர்  ஒண்ணை  சொன்னா  நாங்க  ஒண்ணு  செய்யறமாம்.  ஒவ்வொருத்தர்  பண்ற காரியங்களையும்  அவரால  சகிச்சுக்கவோ  ஏற்றுக் கொள்ளவோ முடியலே.  ஓயாம திட்டறார்…”
அடுக்கிக்  கொண்டேபோக, அத்தனையும்  கேட்ட  அவர்  ஒரு   உபாயம் சொன்னார். “…அப்படி  செய்து  பாரேன்...”
கொஞ்சம்  கூட  சம்பந்தமேயில்லாமல்   என்ன  கேட்க  வந்தா  என்ன  சொல்றார் இவரு?  சரி சரி,  என்று  சொல்லிவிட்டுப்  போனாள்.
ஆறு  மாதத்துக்குப்  பின்  ஒரு  நாள்.  தேடி  வந்திருந்தாள்.
அவர்  புருவம்  உயர்த்த  அவள்  புன்னகையே  பதில்  சொல்லிற்று.
பையை  நீட்டினாள்.  அப்போதுதான்  பறித்திருந்தவை.  பிஞ்சு  வெண்டைக்காய்களும்காரட்டும்,  கீரையும்….  கண்ணைப்  பறித்தன.
நீங்க சொன்ன மாதிரியே    அவரை  வற்புறுத்தி  வீட்டிலேயும்  குளக்கரை  பக்கத்தில வாங்கிப்  போட்டிருக்கிற  பத்து  செண்டு  நிலத்திலும்  காய்கறி  செடிகள்  வைக்க சொன்னேன்.   செய்ய  வைக்கிறதுக்குள்ளே  பெரும் பாடு.  ஒரு  வழியா  தொடங்கினார் வேலையை.   அப்புறம்  கொஞ்சம்  கொஞ்சமா  அவருக்கே  ஒரு  ஆர்வம்  வந்து…  இப்பஅதில  முழுக்க  இறங்கிட்டாரு.   இப்ப  அவர்  அனாவசியமா  டென்ஷன் ஆகிறதில்லே.  சிரிச்சுப்  பேச  ஆரம்பிச்சுட்டாரு.  எரிச்சல்னா  என்ன  விலைன்னுஆச்சரியம்  தாங்கலே  பசங்களுக்கெல்லாம்.   எப்படிம்மா  இதெல்லாம்னு….   எல்லாம் மாமா  ஐடியா,  எனக்கென்ன  தெரியும்னேன்.”
உனக்கே  தெரிஞ்ச  விஷயம்தானே  அது?  தனக்குத்  தெரிஞ்ச  விஷயங்களை பிரயோகிக்க  ஒரு  வழி,  தான்  நினைக்கிற  விஷயங்களை  எந்தவித எதிர்ப்புமில்லாமல்  அப்படியே  ஏற்றுக் கொள்ள  ஒரு  விசால  இடம்…  அதில் அவருக்குக்  கிடைக்கிற  ஆறுதல்!  அது  அவர்  எரிச்சலை,  யாருமே  நம்ம வார்த்தைகளை  காதில  போட்டுக்கிறதில்லேங்கிற  அந்த  எரிச்சலையெல்லாம் கரைத்து விடும்.
அது  மட்டுமில்லை,  செடிகளை  நட்டு  வளர்க்கும்போது  நாம  நினைக்கிறபடி அவைகளை  கொண்டுவர  முடியாது.  எட்டிப்  பார்க்கும்  இடைஞ்சல்களை  எல்லாம் உடனே  களைஞ்சுட  முடியாது.  ஏற்றுக்  கொண்டுதான்  ஆகணும்.  எதிர்பார்க்கிற பலனைத்  தராது.  அந்த  மாதிரி  நேரத்தில்  எல்லாம்  அவர்   தெரிஞ்சிக்கிறது என்னவாயிருக்கும்?  நம்  கையில  இல்லை  இது,  வளர்கிற  சூழ்நிலை,  பருவ  மாற்றம்கிடைக்கிற மழைன்னு  பல  விஷயங்கள்  சேர்ந்துதான்  அதன்  போக்கைத் தீர்மானிக்கும்கிறதைத்தான்,  இல்லையா?  இந்த  விஷயம்  அவர்  உள்  மனசுக்குப் போகப்போக  தன்  பிள்ளைகள்  விஷயத்திலும்  இப்படி  பல  காரணங்கள்  சேர்ந்துதாம் அவர்கள்  போக்கைத்  தீர்மானிக்கின்றன  என்கிறதையும்  மெல்ல  மெல்ல  புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறார்.  ஆக,   இது  உதவலாம்னு  நினைச்சேன்….

(’அமுதம்’  ஏப்ரல் 2014 இதழில் வெளியானது)
><><><

Sunday, February 1, 2015

அவள் - 15


92
இன்னும் அருகில்
வருகிறாய்,
உன்னைப் பிரியும்
நாட்களில்.
><>< 

93
இதயம் நழுவி
இதயத்தில் விழுந்தது.
><>< 

94
திங்கள் ஞாயிறு ஆனது,
உன்னைக் காணும்
தினம்.
><>< 

95
அன்பு வெறும்
வார்த்தையில்லை,
அறிய வைத்தாய்.
><>< 

96
சந்திக்காத நாட்களும்
இனிக்கின்றன
சந்திப்புகளின் நினைப்பில்..
><>< 

97
பிசகில்லாத
இனிய கனவுகளுடனான
பின்னிரவுத் தூக்கம் போலும்
நீ.
><>< 

98
நீ
நுழைந்தாய்
நிமிர்ந்தது
நெஞ்சம்.


><><><>< 

(படம் - நன்றி : கூகிள்)