Sunday, November 23, 2014

நல்லதா நாலு வார்த்தை... - 39


‘மிருதுவும் நடுநிலையும்
மிகத் தொலைவு வரும்.’
- Cervantes
(‘Fair and softly goes far.’)
<>

’உங்கள் தனித்திறமை என்பது 
கடவுள் உங்களுக்களித்த பரிசு
அதைக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பது 
கடவுளுக்கு நீங்கள் திரும்ப அளிக்கும் பரிசு.’
- Leo Buscaglia
(‘Your talent is God’s gift to you. What you do
with it is your gift back to God.’)

<>

‘அனேக முறை வருத்தப்பட்டிருக்கிறேன்
பேசிவிட்டேனே என்று,
ஒரு போதும் இல்லை 
மௌனமாயிருந்ததற்காக.’
- Publilius Syrus
(‘I often regret that I have spoken;
never that I have been silent.’)
<>

‘நான் யார் இல்லையோ 
அதற்காக நேசிக்கப்படுவதைவிட
நான் யாரோ அதற்காக 
வெறுக்கப்படுவது பரவாயில்லை.’
- Kurt Cobain
(‘I’d rather be hated for who I am,
than loved for who I am not.’)
<>

‘ஒரு வருட சம்பாஷணையில் 
ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள 
முடிவதை விட
ஒரு மணி நேர விளையாட்டில் 
அதிகம் தெரிந்துகொள்ள முடியும்.’
- Plato
(‘You can discover more about a person in
an hour of play than in a year of conversation.’)
<>

’நம்மைப்பற்றிப் பேசும் 
பத்துப் பேரில் ஒன்பது பேர் 
மோசமாக எதையோ பேசுகிறார்கள்
நல்லதாக எதையோ பேசும் ஒருவரும் 
அதை பல நேரம் 
மோசமாகப் பேசுகிறார்.’
- Rivarol
(‘Out of ten people who talk about us, nine says
something bad, and often the one person who
says something good says it badly.’)
<>

’குழந்தைப் பருவத்தைக் 
கூடவே எடுத்துச் சென்றால்
ஒருபோதும் வயதாவதில்லை.’
- Tom Stoppard
(‘If you carry your childhood with you,
you never become older.’)

><><><
(படம்- நன்றி:கூகிள்)

Monday, November 17, 2014

தவிர்க்க முடிகிற...


அன்புடன் ஒரு நிமிடம் - 69
புதிதாகக் கட்டி முடித்திருந்த வீடு பொலிவோடு நின்றிருந்தது. இன்று கிரகப் பிரவேசம். வந்தவர்களை வரவேற்பதற்காக வாசலில் நின்று கொண்டிருந்தார் வாசு.
இரண்டு வருடமாக பார்த்துப் பார்த்துக் கட்டின வீடு. பெருமையும் திருப்தியும் மனதில் அலைமோதிற்று.
ஆயிற்று. இன்னும் கொஞ்ச நேரத்தில் விருந்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விடுவார்கள். 
உள்ளே ஹோமத்துக்கு வேண்டிய விஷயங்களை கவனித்து விட்டு ஏதோ கேட்க அவர் அருகில் வந்த ஜனனி வாசல் ஓரமாக கவிழ்த்து வைத்திருந்த அந்த சிறிய போர்டைக் கவனித்தாள். எடுத்துப் பார்க்க, ”Leave your foot wears and lenses here.” (செருப்புக்களையும் பூதக் கண்ணாடிகளையும் விட்டுச் செல்லுமிடம்.) என்றிருந்தது.
பூதக் கண்ணாடி? அவளுக்குப் புரியவில்லை.
“என்னங்க இது?”
அவள் கை நீட்டிய திசையைப் பார்த்தார். மெல்லிய புன்னகை.  “ஆமா, நான்தான் எழுதினேன், இங்கே வைக்கலாம்னு இருந்தேன்.”
“செருப்பு சரி. பூதக் கண்ணாடி? What do you mean by that?”
”  நீ எதை நினைக்கிறாயோ அதைத்தான். ஆமா. வர்றவங்க எல்லாருமே ஊன்றிப் பார்த்து ஆளுக்கொரு குறையை சொல்லி தலைக்கு நாலு சஜஷனும் கொடுக்கிறாங்க.  அந்த சிரமம் அவங்களுக்கு தேவையில்லேன்னு சொல்லத்தான் இந்த வாசகம்.”
”ஏன் அப்படி நினைக்கிறீங்க?”
”ஏன்னா ஏற்கெனவே நிறைய பிளான் எல்லாம் போட்டு அதிலே ஆயிரத்தெட்டு கேள்விகளும்  பிரசினைகளும் வந்து அதையெல்லாம் அப்பப்ப யோசிச்சு அலசி சமாளிச்சு ஒவ்வொரு கட்டத்திலும் முடிவுகளை எடுத்து ஒரு பெரிய வேலையை செய்து முடிச்சிருக்கோம். நமக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ முடிஞ்சோ முடியாமலோ குறைகள் இருக்கத்தான் செய்யும். நம்மைப் பொறுத்தவரை எட்டு வருஷமா இருபதுக்கு இருபது போர்ஷன்ல வாடகைக்கு இருந்து பட்ட கஷ்டத்துக்கு என்ன குறை இருந்தாலும் இது சொர்க்கம். அப்படியே ஏதும் குறை இருந்தாலும் அதில் எதையும் இப்ப சரி செய்யற நிலைமையும் அவசியமும் இல்லாத போது அதை சொல்றதனால அர்த்தமில்லாத விவாதங்கள்தான் உண்டாகும். அதைத்தான் தவிர்க்க நினைக்கிறேன். ஆக, இந்த மெனக்கிடல் வேண்டாம்னு நினைக்கிறேன். அதில நான் நிச்சயமா இருக்கேன். அதான் இந்த Leave your lenses here போர்டு.”
புன்னகை இழையோடிற்று அவள் முகத்தில். “இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராப் படலியா?”
”பட்டது. அதான் நானே அதை வேண்டாம்னு எடுத்து கவிழ்த்து வெச்சிட்டேன்.”
(”அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது.)
><><><><
(படம் - நன்றி : கூகிள்)

Thursday, November 13, 2014

அவள் - 12...


72
யாரெல்லாமோ வந்து
கேட்கிறார்கள்
’என்ன ஆச்சு உனக்கு?’
கடைசியில் என் ’அவளை’
சந்தித்துவிட்டேன் என்று
சொல்லிவிடவா?

73
அன்பு வளையங்கள் கோர்த்த
அந்த மாலை
எத்தனை அழகு
உன் இதயத்துக்கு.

74.
பளிச்சென்ற உன்
பார்வையில் கூசி
பிரகாசித்துக் கொண்டிருந்த
மின்விளக்கு அணைந்துவிட்டது.
இருட்டு இன்னும்
காணாமல் போனது.

75
என்னையும் உன்னையும் சேர்த்து
அதிலிருந்து
என்னையும் உன்னையும்
கழித்தால்
எஞ்சுவதே நேசம்.

76
சிரிப்பாணியா வருதில்ல உனக்கு 
சில சமயம் என்னை 
நினைக்கும்போது?
அதுதான் நீ
அதுதான் நான்.

77. 
ரோஜாவின் இதழ்களினூடே
தேடி ஏமாந்தேன்
உன் அதரங்கள் போன்ற
மென்மையை.

78
அத்தனை துளிகளும்
உன்மேல்தான் விழுவேனென்று
அடம் பிடித்ததால்
அருவியாகிவிட்டது 
மழை.
<><><>

(படம் - நன்றி; கூகிள்)

Wednesday, November 5, 2014

வெற்றிகரமான விளக்கம்...

அன்புடன் ஒரு நிமிடம் - 68

“என்ன முயன்றாலும் புரிஞ்சுக்கவே முடியலே… ஒரு வார்த்தை. அதற்குள் அடுத்தடுத்து வரும் ஒரே எழுத்துக்கு உச்சரிப்பு மட்டும் இரண்டு விதமா இருக்கு!” அலுத்துக்கொண்டான் பரசு.

“ஓஹோ?” என்றார் வாசு.

“ஆனால் டாட், அந்த வார்த்தையிலேயே அடுத்தடுத்து வரும் இன்னொரு எழுத்து! அதுவோ ஒரே உச்சரிப்பில் வருது.”

“அதென்ன வார்த்தையோ?”

“ரெண்டு நிமிஷம் தர்றேன், நீங்களே கண்டுபிடியுங்க!”

இரண்டாவது நிமிஷம்….

“Failure!” என்றார் வாசு, ”நீயே சொல்.”

“Success!” என்றான் அவன். “பாருங்க அதில வர்ற அந்த C யை! முதல் C வருதே அது க் என்கிற மாதிரி வருது. அடுத்த  C-யோ, ஸ் என்கிற உச்சரிப்பில்! வேடிக்கையா இல்லை?”

“இல்லை!” என்றார், “ஆச்சரியமா இருக்கு. In fact, அர்த்தமுள்ளதா படுது.

“எப்படி? எப்படி?” பரசு முகத்தில் ஆவல்.

“வெற்றிக்கான வார்த்தை அல்லவா அது?அதனாலேயோ என்னவோ வெற்றிக்கான ஓர் வழி அப்படி அதிலே அமைஞ்சிருக்கு. அடுத்தடுத்து வந்தாலும் C- யின் உச்சரிப்பு மாறுபடுது. அதாவது எப்ப நம்மை மாத்திக்கணுமோ அப்ப நம்மை நாம் மாத்திக்கணும், அப்பதான் வெற்றியடைய முடியும்.”

“அட, விளக்கம் வெகு ஜோர்!” கை தட்டினான் பரசு. “ஆனால் அதே வார்த்தையில் வர்ற S என்கிறஎழுத்தைப் பாருங்க. அடுத்தடுத்து வந்தாலும் ஒரே உச்சரிப்பு தானே அதற்கு?”

“யோசிச்சுப்பார். அதுவும் வெற்றிக்கான இன்னொரு வழியைத்தானே சொல்லுது? எப்ப ஒன்றிச் செயல் படணுமோ அப்ப ஒன்றிச் செயல்படணும் என்கிற பாடத்தை!”

”Successful விளக்கம்தான்!”

(”அமுதம்’ பெப்ரவரி 2014 இதழில் வெளியானது.)

(படம்- நன்றி: கூகிள்.)

Sunday, November 2, 2014

அவள் - 11

66
கவிதைகளுடன்
கைகோர்த்தபடி
பயணிக்கிறேன்
உன் நினைவுகளுடன்.

67
உயரம் தாண்டும் போட்டி
வைத்தால்
எவெரெஸ்டைத் தாண்டிவிடும்
உன் உன்னதம்!

68
நிலவோடு உன்னை
ஒப்பிடுவதை
நிறுத்திவிட்டேன்
நிலவை
க்ளோசப்பில் பார்த்து
ஏமாந்த பிறகு.

69
இரண்டில் ஓர் விரலைத் தொடு
என்கிறேன்.
நீ
எதைத் தொட்டாலும்
சரி என்கிறது
என் மனம்.

70
தினம் 12.01 க்கு
ஆரம்பிக்கிறது
உன் தினம்,
ஆம், உன் தினம் முடிந்த
அடுத்த வினாடி.

71
உன் சிரிப்பு
ஏற்படுத்தும் தகிப்பை
உன் பார்வையின்
குளுமை
தணிக்கிறது.

>>>0<<<
(படம்- நன்றி;கூகிள்)