Tuesday, August 25, 2015

அவள்... (கவிதைகள்)

169
நீ சிரித்தாய்
இதயத்தில்  மணியடித்தது.

170
நாளின் முதல் நினப்பும்
இரவின் கடைசியும் நீ

171
திறக்காத கதவொன்று
இதயத்தில் வைத்திருந்தேன்
திறந்தே கிடக்கிறது
நீ வந்த நாளிலிருந்து

172
நிலைப்படியில் இடித்துக்கொள்கிறேன் உன்
நினைவில் தடுமாறி
நித்தமும்.

173
மனக் குகை முழுவதும்
உன் ஓவியங்கள்.

174
எனக்குள் இருக்கும் மனதுக்கு
என்னைவிட நெருக்கமாய்
இருக்கிறாய்.

175
எடையற்று உருவற்று
அலைகிறேன்
என்னை உன்னில்
பார்ப்பதால்.

><><><

Tuesday, August 18, 2015

அறிந்தோ அறியாமலோ…

அன்புடன் ஒரு நிமிடம் - 86

 
சுருக்கமாக தன் பிரசினையை சாத்வீகனிடம் சொன்னாள் விசாலம் போனில்.
”அடுத்த வாரம் இவரு ரிடயாராகிறாரு இல்லையா? சென்னையில் பெரிய வேலையிலிருக்கிற பெரியவனும் சரி, ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிற சின்னவனும் சரி இன்னும் வாயைத் திறக்கலே. நீங்கதான் பேசணும்”
பேச அழைத்தபோது பெரியவன் வந்தான்.
“அப்பாம்மாவை உன்கூட வெச்சிப் பார்த்துக்கறதில உனக்கு ஆட்சேபணை இல்லையே?”
“என்ன அப்படி சொல்றீங்க மாமா? அதானே என் ஒரே விருப்பம்?”
உற்சாகமாய் பேச்சைத் தொடர்ந்த போது அவன் அதில் உள்ள சிரமங்களை ஒவ்வொன்றாய் சொன்னான்.
ஒவ்வொன்றுக்காய் அவர் தன் பதில்களை சொன்னார். ”ஆமா, பிள்ளைகளோட படிப்பு நேரங்களும் அவங்களோட தூக்க நேரமும் சரிவராதுதான். ஆனா மாடி போர்ஷனை அவங்களுக்கு ஒதுக்கிட்டா எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காதில்லையா?”
”கரெக்ட் மாமா. ஆனா சென்னை வெயில்பத்திதான் தெரியுமே! மேலே வெம்மை ஜாஸ்தியா இருக்கும், ஒத்துக்காது அவங்களுக்கு. கஷ்டப்படுவாங்க.”
இப்படி அவன் வரிசையாய், சுருக்கமாய் பதில் தரவே, மார்க்கமில்லாமல் போனது.
சின்னவன் வரும்போதே சொல்லிக்கொண்டு வந்தான். ”கிராமத்தில என்கூடவா? அதெல்லாம் அவங்களுக்கு சரிப்பட்டு வராது மாமா.
சோர்ந்து போனார். இருந்தாலும் பேசிப் பார்க்கலாம் என்று ஒவ்வொன்றாய் சொல்ல அவன் பெருங்குரலில் காரசாரமாக விவாதித்தான்.
தெரிந்த முடிவுதான் என்றாலும் கேட்டார். “சரி, என்ன சொல்றே முடிவாய்?” 
”முடியாதுன்னுதான் நினைச்சேன். ஆனா நீங்க சொல்றதை வெச்சுப் பார்த்தா
சமாளிக்கலாம்னு தோணுது.” என்று எழுந்தான்.
அவன் போனபின் அபிஜித் கேட்டான். "என்ன தாத்தா இது, நானும் அதைத்தான் விரும்பரேன்னு வந்த மூத்தவர் முடியாதுன்னு போயிட்டார். வரும்போதே முடியாதுன்னு வந்த சின்னவர் கடைசியில சரீங்கறார்?”
"அதான் ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம். பெரியவன் அவங்களை சேர்த்துக்கறதில்லைன்னு முடிவு எடுத்திட்டான். அப்புறம் அதை செயலாக்குவதற்கான காரணங்களைத்தான் யோசிச்சான். அவன் இன்டெலிஜென்ஸுக்குத் தகுந்த அளவு அது கிடைச்சது. சின்னவன் உண்மையிலேயே அது கஷ்டம்னு நினைச்சான். ஆனா எந்த முன் தீர்மானமும் இவனுக்குக் கிடையாது. அதனால மனசில நினைக்கிற, எழுந்த பிரசினைகளைப் பேசினான். அதுக்கு நம்ம பதில் கிடைச்சப்ப அதை எடை போட்டுப் பார்த்து விவாதிச்சான். அதுக்குத்தான் தன்னோட இன்டெலிஜென்ஸை அவன் உபயோகிச்சானே தவிர அதை எப்படியாவது மறுக்கணும்னு இல்லை. அதனால அவனுக்கே அது சரிப்பட்டு வரும்னு தோணினதும் எந்த inhibition–ம் இல்லாம அதை ஏற்றுக்கொண்டான்.”
"அட இது முக்கியமான விஷயமா இருக்கே?"
"நம்ம அறிவுத் திறனை நாம எப்படியும் உபயோகிக்கலாம். நம் விருப்பத்தை வலியுறுத்தி, விருப்பப்படி காரியங்களை செய்ய முயலவும் அல்லது எது சரி, நல்லதுன்னு அலசிப் பார்த்து முடிவுபண்ணி அதை செய்ய முயலவும்!  ஆனால் பெரும்பாலோர் முதலாவதைத்தான் செய்யறாங்க, அறிந்தோ அறியாமலோ…!”
(’அமுதம்’ ஆகஸ்ட் 2014 இதழில் வெளியானது)
><><><

Tuesday, August 11, 2015

நல்லதா நாலு வார்த்தை.... 52


'அன்பான இதயத்தின் துடிப்பே.
சொர்க்கத்தின் 
அற்றம் வரை சென்றடையும் இசை.’
- Henry Ward Beecher
('Of all the music that reached farthest into
heaven, it is the beating of a loving heart.')
<>

’வாழ்க்கையின் சங்கடம் 
விடையே இல்லை
என்பதல்ல;
விடைகள் நிறைய என்பதே.’
- Ruth Benedict
('The trouble with life isn't that there is no answer,
it's that there are so many answers.')
<>

'வாழ்வின் ஆகப் பிரதானமான கேள்விக்கு 
தன்னைத் தவிர வேறாரும் 
பதில் தர இயலாது.
- John Fowles
('The most important question in life can never be
answered by anyone except oneself.')
<>

'சாதாரண விஷயங்களிலிருந்து
சந்தோஷத்தைச் 
சாறு பிழிவதிலிருக்கிறது
சந்தோஷமாயிருக்கும் கலை.' 
- Henry Ward Beecher
('The art of being happy lies in the power
of extracting happiness from common things.')
<>

'நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள 
நற்றருணம்
நமக்கவர்கள் தேவைப்படும் முன்பே.
- Ethel Barrymore
('The best time to make friends is
before you need them.')

<>

’அறிந்து கொண்ட சிறந்தவற்றுக்கு
உண்மையாக இல்லாமலிருத்தலே 
நிஜத்தில் ஒரே தோல்வி.’
- Buddha 
('The only real failure in life is not to be
true to the best one knows.')
<>

'சந்தோஷங்கள் எதிர்பார்ப்பினால் 
மிகப்பெரிதாகிறதெனில் 
சங்கடங்களுக்கும் அது பொருந்தும் என்பதை 
சற்றே நினைவில் கொள்ளுங்கள்.'
-Elbert Hubbard
('If pleasures are greatest in anticipation,
just remember that this is also true of trouble.')

<><><>

Friday, August 7, 2015

அவள் (கவிதைகள்)

162
எங்கிருந்தோ கிடைத்துவிடுகின்றன
வார்த்தைகள், உன்னை
எழுதும்போது.
  
163.
நீ – வாழ்க்கையில்
என்னுடைய
ஒரே ஆனந்த ஆச்சரியம்!

164.
நீயும் நானும்.
இதற்கு மேலும்
இருக்கிறதா என்ன
வாழ்க்கை?

165
மழையும் நீயும் ஒன்று -
மனதைக் குளிர்விப்பதில்.

166
நான் படித்த
ஆகச் சிறந்த கவிதை.

167
தும்பைப்பூ தோற்கிறது
உன்
இதயத்தின் வெண்மையில்
.
168
சொல்லவேயில்லை சாபமிட்டவர்
விமோசனம் நீதான் என்று.

><><><
(படம்-நன்றி:கூகிள்)