Tuesday, April 28, 2015

அவள்... (கவிதைகள்)

121.
உன்னைக் கவிதையில்
வடிப்பதற்குள் வந்துவிடுகிறது
மூன்றாவது வரி.
<>

122
எங்கே தொடங்கினாலும்
கடலில் முடியும் நதிகள்போல
என் நினைவுகள்.
உன்னிடம்.
<>

123
ஏழையாக இறக்க மாட்டேன்
பொக்கிஷமாக உன் நினைவுகள்.
<>

124
முடிவதில்லை ஒரு நாளும்
உனக்கு ஸீ யூ சொல்ல.
<>

125
மனதின் எங்கோ ஒரு
புள்ளியில் தொடங்கி
மனதையே ஒரு
புள்ளியாக்கிவிட்டாய்.
<>

126
எப்படி இருக்க முடிகிறது
உன்னால் மட்டும்
அப்படி ஒரு நீயாக?
<>

127
உன் இமைகளின் படபடப்பில்
கொட்டிச் சிதறின என்
மனதிலிருந்த கவிதைகள்!
><><><

Sunday, April 19, 2015

எல்லாமே சரியாக...

அன்புடன் ஒரு நிமிடம் - 79
வாசலில் தலையாடிற்று. எட்டிப் பார்த்தார் சாத்வீகன்.
அன்பரசன்.
சரி, யாரைப் பற்றியோ குறைப்பட்டுக் கொள்ள வந்திருக்கிறார் வழக்கம் போல. அரை மணி நேரம் காதைக் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று நினைத்தால்…
அவர் ஆரம்பித்தது தன் சொந்த மகனைப் பற்றி.
புலம்பித் தள்ளிவிட்டார். “ஆளே மாறிட்டாங்க. பெண்டாட்டி பேச்சுக்கு ஆடறான். ஒவ்வொரு அடியும் அவளைக் கேட்டுத்தான் எடுத்து வைக்கிறான்.  மனசுக்கு கஷ்டமா இருக்கு.”
“மனோஜா? கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷம் இருக்குமா?
“ஆமா. முதலில் அவளுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலே. ஒரு வருஷம் இவனும் மதுரைக்கு மாற்றல் வாங்கிப் போனான். இப்ப ரெண்டு பேரும் ஊருக்கு வந்தாச்சு. ஆனா ஒரு வருஷத்தில ஆளே அடியோட மாறிட்டான்! சே, எப்படியெல்லாம் வளர்த்த பையன்!”
”தெரியும் தெரியும்.” தலையை பலமாகவே ஆட்டினார்.
“அவனுக்காகவே சாயந்திரம் சீக்கிரம் வீட்டுக்கு வருவேன். கோவில் சினிமா எல்லா இடத்துக்கும் நானே அழைச்சிட்டுப் போவேன்.
”பாடத்தில மட்டும் இல்லை, எல்லா விஷயமும் சொல்லிக் கொடுப்பேன். எங்கே எப்படி நடந்துக்கணும், யார்கிட்ட எப்படிப் பேசணும் எல்லாம் சொல்லிக் கொடுப்பேன்.
”பிளஸ் டூவில் மார்க் குறைஞ்சப்ப மேற்கொண்டு என்ன படிச்சு எப்படி மேலே வர்றதுன்னு மண்டையை உடைச்சு பிளான் போட்டுக் கொடுத்தேன்.
”எந்த வேலைக்கு எப்படி தயார் பண்ணணும்னு சொல்லித் தருவேன். கூடவே உட்கார்ந்து நோட்ஸ் எடுத்துக் கொடுப்பேன்.
”நல்ல பாட வரும் அவனுக்கு. கர்னாடிக் மியூசிக் கத்துக்கவான்னு கேட்டான். வேண்டாம் மெல்லிசை பழகுன்னு சொல்லி அவனை கத்துக்க வெச்சு ஒரு மெல்லிசைப் பாடகன் ஆக்கினது யாரு?
”அவன் வேலை பார்க்கிற கம்பெனியில் சூப்பர்வைசர் போஸ்ட் காலியானபோது தயங்கின அவனை அப்ளை செய்ய வைத்து உற்சாகப் படுத்தி இண்டர்வியூவில் கலந்துக்க வெச்சு… எத்தனை சிரமப்பட்டிருப்பேன்! இல்லேன்னா கிடைச்சிருக்குமா?
”இருபது வயசு வரைக்கும் நீச்சல் தெரியாம இருந்தவனை அது எத்தனை முக்கியம்னு சொல்லி கத்துக்க வெச்சதும் மர்ம நாவலைப் புரட்டிட்டிருந்தவனை இலக்கியப் புத்தகங்கள் பக்கம் திருப்பினதும்…”
எல்லாவற்றையும் கேட்டவர் சொன்னார்
”அப்படிப் பார்த்தால் எல்லாமே சரியாத்தானே நடந்திருக்கு? நீங்க தானே அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து செய்யும்படி பழக்கிவிட்டீர்கள்?  அதைத்தானே அவன் இப்போதும் செய்கிறான்? இப்போது, அவன்கூடவே எப்போதும் இருந்து சொல்லிக் கொடுக்க இன்னொரு முக்கியமான நபர் வந்திருக்கிறார். அவ்வளவுதான். இதில் என்ன இருக்கிறது ஆச்சரியப்பட? வளர்ந்த பிறகும் சுயமாக தீர்மானிக்க, எது நல்லது என்று பார்த்து செயல்பட அவனுக்கு போதுமான சந்தர்ப்பங்களும் அனுபவங்களும் அப்போது கிடைக்காதது காரணமாக இருக்கலாம். 
”இன்னொரு விதத்தில் பார்த்தால் இதனால் பெரிய பாதிப்பு எதும் ஏற்பட்டு விடப் போவதில்லை. முன்பு உங்கள் ஆலோசனைகளும் வழி நடத்துதலும் கொண்டு, இப்ப நீங்களே சொன்ன மாதிரி, விளைந்தவை அனைத்தும் முன்னேற்றங்களே! அதேபோலவே இப்பவும் நடக்கலாம் இல்லையா? பொறுத்திருந்து பார்த்து அவர்கள் கேட்கும்போது ஆலோசனை சொல்வதோடு நிறுத்திக் கொள்லலாமே?” 
(’அமுதம்’ ஜூன் 2014 இதழில் வெளியானது.)
><><><

Wednesday, April 15, 2015

நல்லதா நாலு வார்த்தை... 45.’எத்தனை அதிகம் 
பரிவு செலுத்துகிறீர்களோ 
அத்தனை குறைவாய் 
அது தேவைப்படும் 
உங்களுக்கு.’
- Malcolm Forbes
(‘The more sympathy you give,
the less you need.’)
<>

’ஆகாரத்துக்கு உப்பு,
அழகுக்குப் புன்னகை.’
- Carlo Dossi
(’A smile is to beauty what 
salt is to food.)
<>

;ஒரு கூடை ஞாபகங்கள்
ஒரு சிறிய நம்பிக்கைக்கு
ஒருபோதும் ஈடாகா.'
- Charles Schultz
(‘A whole stack of memories never
equal one little hope.’)
<>

‘செய்ய முடியாதது
செய்ய முடிவதற்குக் 
குறுக்கே நிற்க விடாதீர்கள்.’
- John Wooden
(`Do not let what you cannot do
interfere with what you can do.’)
<>

'ஒரு போதும் சொல்வதில்லை 
இயற்கை ஒன்றும் 
விவேகம் வேறொன்றும்!'
- Juvenal
(`Never does nature say one thing
and wisdom another.')
<>

`வாழ்க்கையின் பெரும் பயன்,
அதற்கு அப்பாலும் 
நீடித்திருக்கும் ஓர் விஷயத்திற்காக 
அதை செலவிடுவதே.’
-William James
(`The great use of life is to spend it for
something that will outlast it.’)
<>

'ஓடுவது நதியல்ல,
நீர்.
நகர்வது நேரமல்ல,
நாம்.'
- Herve Bazin
(`It’s not the river that runs. but the water.
It’s not time that passes but us.’)

><><><

Friday, April 10, 2015

எனக்குள் இருந்தவன்...

அன்புடன் ஒரு நிமிடம் - 78
பார்த்துக் கொண்டேயிருந்தாள் ஜனனி. அவளால் ஜீரணிக்க முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? தெரிந்துதான் செய்கிறாரா இவர்?
வாசு, தான் கடைசியாக வேலை செய்த கம்பெனியின் உரிமையாளரை போனில் அழைத்தார்.  புதிதாகத் தான் ஆரம்பிக்கவிருக்கிற கம்பெனியின் திறப்பு விழாவுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார்.
“எட்டாம் தேதியா? அன்னிக்கு வேறே ஒரு வேலை இருக்கே.”
“அப்படியா, சரி சார். பின்னாடி ஒரு நாள் சௌகரியப்படும்போது வரணும்.”
”கண்டிப்பா வர்றேன்.”
போனை வைத்தவர் இவளிடம் பெட்டியில் துணிமணிகளை எடுத்துவைக்க சொன்னார்.
“கோயம்பத்தூர் புறப்படறேன். அங்கேதானே இருக்கார் என் பழைய பாஸ்?  திறப்பு விழாவுக்கு அவர் வந்தாகணும், அதனால போய் வற்புறுத்தி அழைக்கணும்….என்ன, பார்வை ஒரு மாதிரி போகுது?”
”உங்க செய்கைகள் தான் ஒரு மாதிரி போகுது. ஏங்க, உங்க பழைய முதலாளி ஷண்முகம் உங்களைப் படுத்தின பாட்டை ஒரு நாள் விடாம சொல்லி சொல்லி மாய்வீங்க. ராத்திரி பன்னிரெண்டு மணி வரை வேலை வாங்கினது, திட்டோ திட்டுன்னு திட்டறது,  புதுசு புதுசா வேலைகளைத் தலையில் திணிக்கிறது, சரியா சம்பளம் தராதது, சமயத்தில சாப்பிடக்கூட விடாதது அப்படீன்னு எத்தனை இன்னல்களை அடுக்குவீங்க? அதுக்கு நேர் மாறா இப்ப இங்கே பாஸா இருக்கிற மாதவன் உங்களை ரொம்ப  நல்ல நடத்தறார், கஷ்டப்படுத்தறதில்லை, ரிலாக்ஸ்டா வேலை பார்க்கிறீங்க! உண்டா இல்லையா?”
”அதிலென்ன சந்தேகம்?” 
”அப்புறம் ஏன் இப்படி? உள்ளூர்லேயே இருந்தும் இவரை  நேரில் போய் அழைக்காமல் போன் பண்ணி சொல்றீங்க, வரமுடியலேன்னதும் ஓகேன்னு விட்டுடறீங்க. ஆனா கோயம்பத்தூர்ல இருக்கிற அவரைப் போய் நேரில் பார்த்து கண்டிப்பா வரவழைக்கணும்னு கிளம்பறீங்க. அவர் வந்தா என்ன, வராட்டி என்ன? சொல்லப் போனா நாளைக்கு அவர் பார்த்து மலைக்கும்படி நீங்க வளர்ந்து காட்டணும். அதானே எல்லாரும் செய்வது?”
வாசு புன்னகைத்தார்.
”நீ பார்ப்பது தவறான கோணத்தில்! அவர் என்னைக் கஷ்டப் படுத்தியது, நான் உடல் நொந்தது, முணுமுணுத்தது, மனசுக்குள் திட்டியது எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் என் முழுத் திறமையும் வெளிப்பட்டது அவரிடம் வேலைபார்க்கும்போதுதான்.  He demanded more than I could think of myself as capable of. என்னால் எத்தனை விஷயங்கள், எந்த அளவுக்கு செயலாற்ற முடியும் என்று எனக்கே காட்டியது அவர்தான். இன்றைக்கு ஒரு தனி கம்பெனி ஆரம்பிக்கிற துணிச்சல் ஏற்பட்டது அங்கே உருவாகி வளர்ந்த தன்னம்பிக்கையால்தான். அவர் இல்லாமல் இந்தத் திறப்பு விழாவை எப்படி … நினைத்துப் பார்க்கவே முடியலை என்னால்!”

வியப்புடன் நோக்கினாள் ஜனனி.
(’அமுதம்’ ஜூன் 2014 இதழில்  வெளியானது)
><><><

Saturday, April 4, 2015

அவள் - 18 (கவிதைகள்)


113
உன்னால் நிரம்பிய
கணங்களால் நிரம்பியது
வாழ்க்கை.
 ><

114
ஓய்வாகத்தான் அமர்ந்திருந்தாய்
ஒயில் எனில் என்னவென்று
அறிந்துகொண்டேன்
><

115
ஏந்திக் கொண்டுவிட்டேன் கைகளில்
நீ உதிர்த்த புன்னகையை
இன்றைய மன விளக்காய்.
><

116
யாரோ பேசுகிறார்கள்
எனக்குக் கேட்பது
உன் குரலே.
><

117
நீ பார்த்துக் கொண்டிருந்ததால்
உயிர் பெற்றது
ஜன்னல்.
><

118
நினைவுகள் உன் அருகிலேயே
நானோ தொலைவில்.
><

119
என் கற்பனையைக்
கற்பகத் தருவாக்குகிறாய்
நிஜத்தில்.
><

120
என் மனதின் ஆழத்திலிருந்து
இயங்குகின்ற இரண்டு-
நீயும் கவிதையும்.

><><><

Wednesday, April 1, 2015

நல்லதா நாலு வார்த்தை - 44


‘எத்தனை அற்புதமான விஷயம்
ஒவ்வொரு நாளும்!
ஒவ்வொரு நாளின் மதிப்பை விட
உயர்வாய்ப் பாராட்டத்தக்கது 
ஒன்றுமில்லை!’
- Goethe
(‘What a wonderful thing each day is! Nothing is
more highly to be prized than the value of each day!’)
<>

‘திரும்ப வரா பொருள் நான்கு:
பேசிய வார்த்தை, வீசிய அம்பு,
விட்ட சந்தர்ப்பம், கடந்த வாழ்க்கை.’
- Proverb
(‘Four things come not back – the spoken
word, the sped arrow, the past life, and
the neglected opportunity.’)
<>

’வாழ்வினூடே கடந்து செல்லாதீர்,
வளர்ந்து செல்வீர்!’
- Eric Butterworth
(‘Don’t go through life, grow through life.’)
<>

’விதைக்கையில் வருகிறது மகிழ்ச்சி,
அறுவடையின்போது அல்ல.’.
- Jacinto Benavente
(’Happiness comes with sowing, not reaping.’)
<>

‘ஒரு சிறந்த ஞாபக சக்தி
துளி மை அளவுக்கு
சிறந்தது இல்லை.’
- Proverb
(’A good memory is not as
good as a little ink.’)
<>

’நேரக்கூடிய எல்லா தடைகளும் 
முதலில் அகற்றப்படவேண்டும் எனில் 
எதுவுமே முயற்சிக்கப் பெறாது.’
- Samuel Johnson
(‘Nothing will be attempted if all possible
obstacles must first be removed.’)
<>

’மூன்று வண்ணங்கள், 
பத்து இலக்கங்கள்,
ஏழு ஸ்வரங்களே இருக்கின்றன. 
என்ன செய்கிறோம் 
அவற்றை வைத்துக்கொண்டு நாம் 
என்பதே முக்கியம்.’
- Jim Rohn
(‘There are only 3 colours, 10 digits and 7 notes;
it’s what we do with them that’s important.’)
><><><