Monday, February 21, 2022

நோபல் பரிசு பெற்ற தம்பதி...



உலகளாவிய வறுமையை மட்டுப் படுத்துவதற்கான சோதனை பூர்வமான அணுகுமுறைக்காக 2019 இல் நோபல் பரிசு (பொருளாதாரம்) பெற்றவர்.

 

Abhijit Banerjee… Feb. 21. பிறந்த நாள்.

 

மும்பையில் பிறந்து கொல்கத்தாவில் பட்டம் பெற்று, ஹார்வர்டில் பயின்று, பயிற்றுவித்து, எம்.ஐ.டி யில் பேராசிரியராகப் பணிபுரியும் இவரது மனைவி Esther Duflo வும் ஓர் பொருளாதார நிபுணர்.

 

ஜோடியாக நோபல் பரிசு பெறும் ஆறாவது தம்பதி.  இவர்களுடன் பரிசைப் பகிர்ந்தவர் Michael Kremer.

 

ஆங்காங்கே நடத்திய பரிசோதனைகளில் இவர்கள் கண்டுபிடித்துச் சொன்ன ஒரு விஷயம், வறுமைப் பிரதேசங்களில் படிப்பறிவு குறைவாக இருப்பதற்குக் காரணம் உணவின்மை, புத்தகங்களின் போதாமை என்பதை விட கற்றுக் கொடுக்கும் முறை மாணவர்களின் தேவைக்கு ஏற்றதாக இல்லை என்பது. ஆசிரியர்களின் தகுதியை புதுப்பித்துக் கொண்டேஇருப்பதும் முக்கியம் என்கிறார்கள்.


Thursday, February 10, 2022

சிப்பிக்குள் முத்துக்கள்...



சப்புக் கொட்டி ருசித்து சாப்பிடுவோம், அதற்கு காரணமான உப்பு தந்தவனைப் பற்றியோ கண்டுபிடிச்சவனைப் பற்றியோ எப்பவாவது யோசிக்கிறோமா? இப்போ இதை லேப்டாப்பிலேயோ மொபைலிலேயோ படிக்கிறோம். இதை சாத்தியதையாக்க சிப்புகளுக்குள் கப்சிப்பாக அமர்ந்துகொண்டு வேலை செய்யற பில்லியன்கணக்கான டிரான்ஸிஸ்டர்களைப் பற்றியோ அதைக் கண்டுபிடிச்சவர்களைப் பற்றியோ கொஞ்சம்ம் யோசிக்கலாமா?


மூளை சிந்தித்து முடிவெடுக்க எப்படி பல கோடிக்கணக்கான நியூரான்கள் ஒவ்வொண்ணும் பல நூறு பின்னல்கள் போட்டு வேலை செய்யுதோ அதே மாதிரி கம்ப்யூட்டர் தன் முடிவுகளை அள்ளித்தர ஆதாரமானது இந்தச் சில கோடிக் கணக்கான டிரான்சிஸ்டர்கள். தங்களுக்குள் ஒரு தர்க்கக் கதவை அமைத்துக் கொண்டு அதைத் திறக்கவோ மூடவோ செய்து, ஃபைனரியைக் கொண்டு ஃபைன் மெமரி இட்டு, நம்ம சிந்தனையை இமிடேட் செய்யறதனால, நாம் அனுபவிக்கிற எண்ணிலா சௌகரியங்களை எண்ணி பார்த்தால்...!

ஆனால் இப்படி ஒண்ணைக் கண்டு பிடிக்கணும்னு அவங்களும் - அந்த மூணு பேரும் - நினைக்கலே. அவங்க மண்டையை உடைச்சிட்டிருந்ததெல்லாம் பெல் கம்பெனிக்காக ஒரு ஆம்ப்ளிஃபையருக்கான வழியைத் தேடித்தான். கிடைத்ததோ டிரான்சிஸ்டர்! அது சுவிட்ச் ஆகவும் போனஸ் வேலை செய்தது.

அவ்வளவுதான். கம்ப்யூட்டருக்குள் எலெக்ட்ரானிக்ஸ் ஆவி புகுந்தது! இப்ப அது ஆடாத ஆட்டமில்லை.

வில்லியம் ஷாக்லீ, ஜான் பர்டீன் ரெண்டு பேருடன் இணைந்து டிரான்சிஸ்டரை கண்டுபிடித்து பௌதீக நோபலை (1956) வாங்கியவர்...

Walter Brattain… இன்று பிறந்தநாள்.