Thursday, April 26, 2012

வார்த்தை வதை



ஓராயிரம் கவிதைகளைத் தம்முள்
ஒளித்து வைத்துக்கொண்டு
ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக
என் முன் குறுக்கும்நெடுக்குமாக
வலம் வருகின்றன வார்த்தைகள்
காதலின் பாரம் அவற்றின் நடையில்
சொல்லொணா கனத்தை
ஏற்றி வைத்துள்ளது.
இன்னும் அழகின் சாரம்,
வாழ்க்கையின் கோரம்
என்று பல...
வழி விலக்கிக்கொண்டு நடக்கிறேன்
வழி விட்டாற்போல விலகி
அவை என்னைச்
சுற்றிவளைத்துக் கொள்கின்றன
சில சமயம் எனக்கு தோன்றுகிறது
விடுபட வேண்டாமென்று.

<<<<>>>

Sunday, April 22, 2012

குப்பையிலும் மலரும் பூக்கள்...



அன்புடன் ஒரு நிமிடம்-4

குப்பையிலும் மலரும் பூக்கள்...


''ன் தாத்தா, குப்பைச்செடிக்கு ஏதாச்சும் விசேஷம் உண்டா?'' கேட்டான் அபிஜித். ''கிடையாது தானே?''

எட்டவே எட்டாத விஷயம் தன் ஐ.க்யூவுக்கு என்றால் அவன் ஓடி வருவது தாத்தாவிடம் தான்.

''சரி, நீ விஷயத்துக்கு வா,'' என்றார் சாத்வீகன். ''என்ன சந்தேகம் இப்போ?''.

''நேத்து முழுக்க தலையைப் பிய்ச்சுக்கிட்டேன்...'' என்று ஆரம்பித்தான் அபிஜித். ''அப்பா அம்மாவோட நம்ம ஏகாம்பர மாமா வீட்டுக்கு போயிருந்தப்ப தான்... அப்பா இருக்காரே அவரு திடீர்னு பேச்சுக்கு நடுவில அம்மாவிடம், 'வர்ற வழியில பார்த்தியா, குப்பை மேல செடி செடியா வளர்ந்து கிடந்ததே?'ன்னு கேட்டார். நார்மலா வீட்டில வெச்சு இப்படியெல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாம அவரு பேசறதே கிடையாது.''

''அப்படியா?''

''ஆமாங்கிறேன். எனக்கு புரியலே. என்ன தாத்தா இது? இந்த அப்பா என்ன இப்படியெல்லாம் பெனாத்த ஆரம்பிச்சிட்டாரு?''

''யோசிச்சுப்பாரு, புலம்பினாரா என்ன?''

யோசிக்கையில் அப்படி இல்லை என்று தோன்றிற்று

''கொஞ்சம் விலாவாரியா சொல்லு. அப்ப என்ன பேசிட்டிருந்தாங்க?''

''அப்பா புது வீடு கட்டினப்போ வேலை முடியாம, வெளியில வாங்கின கடனைப் பத்தி பேசிட்டிருந்தாங்க எல்லாரும். அது தப்புன்னு மாமா லெக்சர் விட்டிட்டு இருந்தாங்க. அம்மா அப்ப ஏதோ ஒரு பாயிண்டை வேகமா சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பத்தான் இவரு, 'வர்ற வழியில பாத்தியா, குப்பை மேல செடி செடியா வளர்ந்து கிடந்ததே, பார்க்க அழகா இருந்ததில்லையா?'ன்னு...''

''அப்புறம்?''

''அம்மா ஒரு நிமிடம் முழிச்சாங்க. அப்புறம், ஆமா ஆமான்னு பதில் சொன்னாங்க. அப்பா மாமாகிட்டே ஏதோ பேச ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாவும் தொடர்ந்து மாமாவிடம் விட்ட இடத்திலேயிருந்து பேசினாள். நான் தான் தலையைப் பிய்ச்சுக் கிட்டேன்!''

ஒரு நிமிடம்தான் யோசனை செய்தார் தாத்தா. ''டே உங்கப்பா விவரமான ஆளு தான். ஒரே வார்த்தையில் எக்கச்சக்கமான சூழ் நிலையை சரி பண்ணிட்டாரே? வீடு கட்ட கடன் வாங்கினதை மாமா விமரிசிக்கிறார். அது அவர் ஐடியா. நம்மைக் குத்தம் சொல்ற மாதிரி அதில் வார்த்தைகள் விழுந்தாலும் அவருக்குள்ள அக்கறையில பேசறார், அவரோட ஐடியாக்களை சொல்றார். அதிலுள்ள நல்லதை எடுத்திட்டு மற்றதை விட்டுடனும். அதை உபயோகிச்சு நாம மேம்பட முடியுமான்னு பார்க்கணும்.இதான் அப்பாவோட மெசேஜ் அம்மாவுக்கு. அழகா கொடுத்திட்டார். அவளும் புரிஞ்சிட்டு பேச்சை தகுந்தாற்போல மாத்திக்கிட்டா. ஐடியல் தம்பதிதான்.''

''என்ன தாத்தா இது? அதுக்கு குப்பைச்செடின்னு சொன்னால்?''

''குப்பையில வளர்ற செடி என்ன பண்ணுது? அதிலுள்ள நல்ல சத்தை மட்டும் எடுத்து, தான் அழகாக வளருது. இல்லையா?'' என்று சிரித்தார் அழகாக.

<<<<>>>>


Thursday, April 19, 2012

சத்தம்


குளித்துவிட்டு அவசரமாக வெளியே வந்த லலிதா கணவனிடம் முறையிட்டாள்.

''பாருங்க, இன்னிக்கும் ஆரம்பிச்சுட்டாங்க அந்தப் பசங்க. கத்தல் தாங்கலே!''
அவள் கோபம் பரசுவுக்கு புரிந்தது.

பக்கத்துக்கு வீட்டு பசங்களுக்கு லீவு விட்டது முதல் இப்படித்தான். கேட் முன்னால கூடி ஒரே சத்தம், ஆரவாரம், லூட்டி தான்.

என்னதான் இரண்டு பேருமே வேலைக்குப் போகிறவர்கள் என்றாலும் காலையிலேயும் மாலையிலேயும் காது கொள்ளாது. இன்னும் ரெண்டு மாதம் அவங்க ரகளைதான்

''இன்னிக்காவது ஆபீஸ் புறப்படறப்போ அவங்களை ரெண்டு வார்த்தை கண்டிச்சு வையுங்க.'' சொல்லிவிட்டு அவசரமாக அவள் முதலில் புறப்பட்டுப் போய்விட்டாள்.

மாலையிலும் அதே சத்தம், ஆரவாரம்.... பரசு இன்றைக்கும் வாயைத் திறக்கவில்லை என்று தெரிந்தது.

''என்னங்க, இப்படி நாம கண்டுக்காம இருந்தா என்ன நினைப்பாங்க அவங்க? இன்னும் துளிர் விட்டுப் போகாதா?''

அவளை அமைதிப் படுத்திவிட்டு சொன்னார் பரசு.

''நானும் கண்டிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா யோசிச்சுப் பாரு. இப்ப தான் நாம ரெண்டு பேரும் ஆபீசில் நிம்மதியா இருக்கிறோம். 'வீட்டைப் பூட்டிட்டு வந்திருக்கோமே, தெருவில ஈ, காக்கை நடமாட்டம் இருக்காதே, எவனாவது உள்ளே புகுந்திடுவானோன்னு ஒரு கவலை மனசுல ஓடிட்டே இருக்குமே! அதிலேர்ந்து நமக்கு விடுதலை தர்றதுக்காகவாவது இந்தப் பசங்களோட ஜாலி கத்தலை மன்னிச்சுடுவோமே?''

லலிதா புன்னகைத்தாள்.
<<<>>>
(சென்ற வார 'குங்குமம்' இதழில் வெளியானது )

Monday, April 16, 2012

அர்த்தமுள்ள வாழ்க்கை


குளித்து முடித்து ஈர டவலை
நனைத்துப் பிழிந்து உலர்த்துவதிலும்
தண்ணீரில் விழுந்து தத்தளிக்கும்
எறும்பைப் பிடித்து வெளிவிடுவதிலும்
கிளினிக்கில் அடுத்த நோயாளியிடம்
சில வார்த்தை விசாரிப்பதிலும்
இலக்கின்றி அரைக் கிலோமீட்டர்
எங்கோ வெளியில் நடப்பதிலும்
என்னமாய்ப் பொதிந்து கிடக்கிறது
வாழ்க்கையின் அர்த்தங்கள்!
<<<>>>

Wednesday, April 11, 2012

சொல்லாமல் கொள்ளாமல்...


அன்புடன் ஒரு நிமிடம் - 3

சொல்லாமல் கொள்ளாமல்...

காலிங் பெல் ஒலித்தது. எட்டிப் பார்த்தார் ராகவ். கேட்டுக்கு வெளியே கிஷோர் நின்றிருந்தான் மோவாயைத் தேய்த்தபடி.
சற்று தாமதமாகவே கதவைத் திறந்தார்.
''என்ன மாமா என்ன பண்ணிட்டிருந்தீங்க? எத்தனை வாட்டி பெல்லை அமுத்தறது?''
''இல்லேடா இங்கே ஒரு பேஜார் வேலையில் அகப்பட்டு முழி பிதுங்கிட்டிருக்கேன்... உட்காரு. என்ன தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?''
அவன் எதோ சொல்ல வாயெடுக்குமுன், ''ஆ, உன்கிட்டே ஐடியா கேக்கலாமே? ஒரு வெப்சைட் போட்டி. பக்கத்து வீட்டு பையன் என்னை கலந்துக்க சொன்னான். ரெண்டே வரியில எழுதணும். 'To whom do you want to thank before you die and why?' அப்படீங்கிற கேள்விக்கு பதில்... எப்படி எழுதறதுன்னு தலையைப் பிச்சிட்டு...''
''ஓ, வந்து... அது இப்ப...''
''ஒரு நிமிஷம்தான்...இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்றதாயிருந்தா என்ன சொல்லுவே?''
யோசிக்கவேயில்லை. ''எங்க அம்மாவுக்கு தான் முதல்லே! லிஸ்ட் போட முடியாது அவங்க எனக்காக செய்திருப்பதை எல்லாம்!.அப்புறம் எங்கப்பா...'' என்று அவனாகவே அப்பாவுக்குத் தாவினான். "அவரு மட்டும் அந்தக் காலத்திலே எனக்கு அட்வென்ச்சர் கதைகளை படிச்சுக் காட்டவில்லையானா நான் படிப்பில் இத்தனை ஆர்வத்தோடு வளர்ந்திருக்க மாட்டேன்.''
''அப்ப யாழினி...?''
''ஆமா. முதல்லயே சொல்லியிருக்கணும். என் மனைவி இல்லாம நான் ஏது? அடுத்து என் தங்கை. அவளோட பாசம் நான் முன்னேற எத்தனை உதவியா இருந்திருக்கு! என் ஃபிரண்ட் சீதாராமன். பிளஸ் டூ வில் என் ஹை மார்க் ஸ்கோருக்கு அவனுக்கு நன்றி சொல்லணும். ராப்பகலா கூட இருந்து உழைச்சான்...''
அவன் தொடர்ந்து சொல்ல..மாமா உட்கார்ந்தார்.
''இலக்கணமும் கணக்கும் சொல்லித் தந்த ஆறுமுகம் சார், வேலையில சேர்ந்தப்ப முதல் பிராஜெக்ட் லீடராயிருந்த மனோஜ்...கொஞ்சம் கஷ்டம் தான் மாமா, லிஸ்ட் வளர்ந்துட்டேயிருக்கு. ஆஹா, எத்தனை பேரு என் வாழ்க்கையில நான் நல்லாயிருக்க ஹெல்ப் பண்ணியிருக்காங்க... ஏன் உங்களால அதை ஈசியா எழுத முடியலைன்னு புரியுது.--'' என்ன நினைத்தானோ, ''வர்றேன் மாமா, வீட்டில ஒரு வேலை, மறந்துட்டேன்.'' போய்விட்டான்.
போன் ஒலித்தது. ''சித்தப்பா'', என்றழைத்தாள் யாழினி. ''அங்கே வந்தாரா அவரு? என்னோட ண்டை போட்டிட்டு, கோபத்தில வெளியே போனாரு... அதான் கவலையாயிருக்கு.''
''கவலைப்படாதே. இப்ப சரியாகியிருப்பான். அங்கே தான் வந்திட்டிருக்கான்.'' என்றார் அவன் முகத்தில் அறிகுறி பார்த்து நோயை டயாக்னிஸ் செய்து உடனடியாக ஒரு திரைக்கதை எழுதி அதன்படி வைத்தியமும் பார்த்து அனுப்பிய ராகவ்.

<<<>>>

Sunday, April 8, 2012

அப்படியும் இருக்குமோ...



அம்மா இடும் மாவில்

அத்தனை சுவையான சப்பாத்தி பிறப்பது

அன்பும் சேர்த்து பிசையப்படுவதால் இருக்குமோ?


அப்பாவின் திட்டு விழுந்தது
அடுத்த நாளே மறந்து விடுவது
அக்கறையும் சேர்ந்து விழுவதால் இருக்குமோ?

அக்கா பின்னித் தந்த ஸ்வெட்டர்
எக்காலக் குளிரையும் தாங்குவது
பாசம் அதில் பின்னிக் கொண்டதால் இருக்குமோ?

தம்பி மழலையில் மிழற்றிய குட்டிக் கதை
மனசை நனைத்துக் கொண்டிருப்பது
ஆர்வமழையென பொழிந்ததால் இருக்குமோ?

நண்பன் வாங்கித் தந்த டீ
ஆறி இருந்த போதும் அடி நெஞ்சில் இனித்தது
ஆறுதலும் அதில் அடங்கியிருந்ததால் இருக்குமோ?

பாட்டி சொன்ன பழமொழி
பார்த்தா எளிதாயிருந்தாலும் மறக்காதது
அனுபவமும் அதில் சேர்த்தி என்பதாலோ?

<><><>

Tuesday, April 3, 2012

வேண்டாத வேலை!



ங்கே சென்றாலும் ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுபவர் ராகவன். ஆனால், இன்று...? இரவு ஒன்பது மணிக்கு தான் முன்பு வந்தேயிராத ஒரு இடத்தில், முன்பின் தெரியாத ஒரு தம்பதியரிடம், இரண்டு மணி முன்பு அறிமுகமான ஒரு இளைஞனுக்காக தான் வாதாடிக் கொண்டிருப்பதை அவராலேயே நம்ப முடியவில்லை.
கப கபவென்று ஏறிக்கொண்டேயிருந்தது நேரம். இனிமேல் கிளம்பி வெகுதூரம் தனியே வீடு செல்லணும் இவர். அவர்களோ அசைவதாக இல்லை. இவரோ விடுவதாக இல்லை.
அவரது அறுபத்தைந்து வயசுக்கு தேவைதானா இது? மனைவி சுமதி நிச்சயம் இவரை வாசலிலேயே மடக்கி வசை பாடுவாள். அவர்களின் ஒரே மகன் ஊரிலில்லாத நேரம். டிரெயினிங்குக்காக மூன்று நாள் டில்லி சென்றிருந்தான். போகும் போது படித்துப் படித்து சொல்லியிருந்தான், கவனம், கவனம் என்று.
அந்த நேரத்திலா இப்படி...
ராகவனின் சொந்தக்காரர் ஒருவர் அந்த மனநல மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். அவரை பார்க்கத்தான் பார்வையாளர்கள் நேரத்தை கேட்டுத் தெரிந்துக் கொண்டு சாயந்திரம் சென்றிருந்தார். போனோம் பார்த்தோம் என்று வந்திருக்கலாம். காபி அருந்த கான்டீனுக்குள் நுழைந்தார். பக்கத்தில் தலை கவிழ்ந்து உட்காந்திருந்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்தார். தன்னைப் போல அவனும் ஒரு விசிட்டர் என்று நினைத்தார்.
“இல்லீங்க. இங்கே சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று குணமடைந்தவன் நான்,” என்று சொன்னான்.
“அப்ப செக் அப்புக்கு வந்தீங்களா?”
“அதெல்லாம் இல்லீங்க, நான் குணமாகி ஆறு வருஷமாச்சு. ஆனால், நான் இங்கேயேதான் இருக்கேன். சமையல் அசிஸ்டன்டா...”
“ஓ அம்மா அப்பா யாரும் கிடையாதா?”
“எல்லாம் இருக்காங்க...”
“வெளியூரிலா?”
“இங்கேயே தான் இருக்கிறாங்க... என்னை சேர்த்துக்க மாட்டேங்குறாங்க.” உடைந்து விட்டான்.
அழுது கொண்டே அவன் சொன்னதிலிருந்து அவன் பெற்றோர் அவனைக் கை கழுவி விட்டதாகத் தெரிந்தது. பூரண குணமடைந்து ஒரு நார்மல் மனிதனாக அவன் ஆன பிறகும் அவனை ஏற்றுக் கொள்ளும் அளவு அவர்கள் நார்மலாக இல்லை.
ராகவனால் அதைத் தாங்கி கொள்ளமுடியவில்லை. “எங்கேப்பா உன் வீடு? நான் சொல்லிப் பார்க்கிறேன்...” என்று விசாரித்தார். முகவரியை வாங்கிக் கொண்டார். மணி ஐந்து தான் ஆச்சு. பார்த்து பேசிவிட்டு எழு மணிக்குள் வீடு திரும்பி விடலாம் என்று நினைத்தார். ஆனால் கொஞ்சமாவது அவர்களை கன்வின்ஸ் பண்ண முடிந்தால் தானே?...
“இல்லைங்க உங்களுக்கு தெரியாது...” என்று தலையை ஆட்டி பலமாக மறுத்தாள் அந்த அம்மா. “தெளிவாயிட்டான்னு நீங்க சொல்றீங்க...”
“டாக்டரே சொல்றார்.”
“சரி டாக்டரே சொல்றார். நம்பறோம் ஆனா மறுபடி அதே மாதிரி ஆயிட்டான்னா?”
“அது எப்படீங்க?”
“முதல்லே தெளிவாயிருந்தவன் தானே அப்படி ஆனான்?... அவன் என்னென்ன பண்ணுவான்னு உங்களுக்கு தெரியுமா?”
“வெத்திலை குழவியை எடுத்து அவ மேலே எறிஞ்சுட்டான் சார், நம்புவீங்களா? நல்ல வேளை இரண்டு தையலோட போச்சு,” என்றார் அப்பா.
“இவரோட டிரஸ்ஸையெல்லாம் எடுத்து சாக்கடையில் வீசிட்டான் தெரியுமா?”
“பக்கத்து வீட்டுக்காரங்களோட தினம் ஒரு தகராறு!”
“சரிங்க மறுக்கலே. நீங்க பயப்படறது நியாயம் தான். ஆனா யோசிச்சு பாருங்க. உடம்பு சரியில்லாம இருக்கிறப்ப நாமளும் தான் என்னென்ன கலாட்டா பண்றோம்! அதையெல்லாம் மனசில வெச்சிட்டு, உடம்பு சரியான பிறகும் நம்மளை ஒதுக்கி வெச்சுடறதில்லையே?...”
“அது... அதுவும் இதுவும் எப்படி...”
“ஒண்ணாகும்னுதானே கேட்கறீங்க? ஏன் சார், ஒரு தடவை உங்களுக்கு தீராத வயிற்று வலி வந்து அவதிப்பட்டீங்களே, ஞாபகமிருக்கா?”
“உங்களுக்கு எப்படி... அவன் சொன்னானா?”
“யார் சொன்னா என்ன, வந்ததா?”
“ஆமா உயிரே போயிடுச்சு.”
“அந்த சமயத்தில் நீங்க பண்ணினதெல்லாம் ஞாபகமிருக்கா? எத்தனையோ தடவை இவங்களை, அதான் உங்க மனைவியை எட்டி உதைச்சிருக்கீங்க...”
“சில சமயம் வலி பொறுக்க முடியாம...”
“உங்களை நீங்க இழந்த சந்தர்ப்பங்களில் அப்படி நடந்தது. அது மாதிரி அவனும் அவனை இழந்த சந்தர்ப்பங்களில் தான் அப்படி நடந்து கொண்டான். உங்க மனைவி அந்த அடி உதையை வாங்கி கொண்டு உங்களோடு சேர்ந்து உங்க வயித்து வலியை எதிர்த்து போராடினாங்க. நீங்க உங்க மகனை சேர்த்த மாதிரி ஒரு ஆஸ்பத்திரியில் உங்களை சேர்த்திட்டு வீட்டுக்கு வந்திடலை.”
“என்ன சொல்றீங்க,”
“உங்களுக்கு குணமான பிறகு மறுபடி அந்த மாதிரி நோய் வந்திட்டா நீங்க மறுபடி உதைப்பீங்களேன்னு ஒரு தடவையாவது உங்களைவிட்டு ஒதுங்கியிருப்பாங்களா?”
பதிலில்லை.
“நமக்கும் நேர்றது தாங்க. உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஊறு வருது. அந்த சமயம் நாம படற வேதனையில உண்டாகிற எரிச்சலும் கோபமும்... அப்பெல்லாம் நாம நாமாகவே இருக்கிறதில்லே. அந்த வியாதி குணமானதும், டாக்டர் நாம நார்மல்னு சொன்னதும், நாமும் நம்மை சுத்தி இருக்கிறவங்களும் எவ்வளவு சந்தோஷமா, சகஜமா நம்ம வாழ்க்கைப் பயணத்தை தொடர்றோம்? அதே மாதிரி ஒரு உறுப்பு தானே மூளையும்? அதற்கு ஒரு ஊறு வரக்கூடாதா? அல்சரும் நெஞ்சு வலியும் மறைஞ்ச பிறகு வயிறும் இருதயமும் நார்மலா ஃபங்ஷன் பண்ற மாதிரி தானே மூளை என்கிற உறுப்பும் பண்ணும்? இதிலே என்ன சஞ்சலம் இருக்கு?”
அவர்கள் யோசிக்கற மாதிரி இருந்தது.
“கொஞ்சம் நினைச்சு பாருங்க. உங்க மகன் மேல கருணை வையுங்க, தயவு செய்யுங்கனு நான் சொல்லலே. அப்படி அவனும் எதிர் பார்க்கலே. லாஜிகலா யோசிச்சு பாருங்க. உங்களுக்கு சரின்னு படக்கூடிய ஒரு நியாயம் தான்! உண்மை தான்” சொல்லிக் கொண்டே போனார்...
“சார், நீங்க சொல்றது சரின்னு எனக்கு படுதுங்க.” என்றாள் தாய்.
தந்தையும் யோசிக்கிற மாதிரி இருந்தது.
இவர் மணியைப் பார்த்தார் ஒன்பதரை. இனி எப்ப பஸ் பிடித்து புதுநகர் போய்... சுமதி தவிச்சிட்டிருப்பா. இவருக்கு என்ன ஆச்சோன்னு பதைச்சிட்டுருப்பா. பக்கத்து வீட்டு போனும் இன்றைக்கென்று பார்த்து ரிப்பேர்...
ராகவனும் சுமதியும் மட்டுமே வீட்டில், ரிடயராகி ஐந்து வருடமாகிறது. மருந்து கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரே மகன் அபய். அவன் தான் இப்போது டெல்லிக்கு டிரெயினிங்குக்காக போயிருக்கிறான்.

ஸ்சிலிருந்து உதிர்ந்து அரையிருட்டில் புதுநகர் ரோட்டில் நடந்தார் ராகவன்.
“நாளைக்கு போய் அவனை அழைச்சிட்டு வந்திடறோம்,” என்று அவர்கள் உறுதியளித்தது உற்சாகத்தைக் கூட்டியது. மனதிலும் நடையிலும்
ரோட்டில் கிடந்த கல்லை கவனிக்கவில்லை. தடுமாறி விழுந்ததில் நல்ல சிராய்ப்பு. சமாளித்து எழுந்து நடந்து வீட்டை அடைந்து... விஷயத்தை சொன்னதும்...
“உங்களுக்கு கொஞ்சமாவது மதியிருக்கா? இப்படிப்போய் ராத்திரியில அலைஞ்சிட்டு வர்றீங்களே... நாம ரெண்டு கிழடுகளும் ஒரு சப்போர்ட்டும் இல்லாம இங்கே ஒதுக்குபுறமான வீட்டில் கிடக்கிறோம். அங்கே நம்ம பிள்ளை ஆயிரம் மைலுக்கப்பால தனியா இருக்கிறான்... மத்தவங்கல்லாம் அவங்க வேலையைப் பார்த்துட்டு நமக்கென்னன்னு இருக்கிறப்ப நீங்க மட்டும் ஏன் தான் இப்படி போய் அனாவசிய பிரச்சனைகளில் இறங்கறீங்களோன்னு தெரியலே. இந்த ஆறு வருஷமா அந்த ஆஸ்பத்திரிக்கு வந்த எத்தனை விசிட்டர்கள்கிட்ட அவன் சொல்லியிருப்பான். இதை? யாராவது அதில் தலையிட்டாங்களா? உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேலை?..''
ராகவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவர் மனதில் தவறு செய்த உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எந்த வகையில் யோசித்தாலும் தான் செய்தது வேண்டாத வேலையாகத் தெரியவில்லை. கீழே விழுந்த வலி இன்னும் குறையாத போதும் கூட.
“எத்தனை தடவை சொன்னாலும் உங்களை திருத்த முடியாது. நம்ம மகன் வரட்டும், சொல்றேன். நாளைக்கு வந்துருவான்.''
ஆனால், அபய் வரவில்லை. தகவலும் வரவில்லை. போன் எதுவும் காணோம் அரண்டு போய்விட்டார்கள்.
கம்பெனிக்கு போன் செய்து கேட்டால் டிரெயினிங் முன் தினமே ஷெட்யூல்படி முடிந்து விட்டதே என்று அதிர்ச்சியான பதில் வந்தது. “எங்களுக்கு ஒரு தகவலும் வரலையே, என்ன ஆச்சு?” என்றார்கள்.
இரண்டு நாள் கழித்து பக்கத்து வீட்டுக்கு போன் வந்தது. அபய் தான் பேசினான்
“என்னடா ஆச்சு?”
“நான் ஓகேம்மா. ஒண்ணுமில்லை. முந்தாநாள் ஒரு ஆக்சிடெண்ட். ஒரு வேன்காரன் இடிச்சுட்டான்.”
“ஐயோ கடவுளே!”
“பரவாயில்லயேமா. ஒண்ணும் ஆபத்தில்லேயே!”
“எப்படிடா நடந்திச்சு, என் செல்லமே?” கேட்டாள் அழுகையினூடே.
“கிளாஸ் முடிஞ்சு வந்திட்டுருந்தேன். ஓரமாய்தான் நடந்து போயிட்டிருந்தேன். வேகமா வந்த வேன் டிரைவர் திடீர்னு இடது பக்கம் ஒடித்ததில் என் மேல் மோதி தூக்கி எறிஞ்சிட்டது. தலையில் நல்ல அடி. ஆனா... “
“ஐயையோ அப்புறம்,”
“அப்புறம் என்ன? எழுந்திருக்க முடியலே. அரை மயக்கமா கிடந்தேன். ஆங்காங்கே ஜனங்க போயிட்டிருந்த ரோடு தான் ஆனா, யாருமே கண்டுக்கலே. பஸ்சிலே போயிட்டிருந்த ஒரு ஆள் பஸ்சை நிறுத்தி இறங்கி வந்து என்னைப் புரட்டி பார்த்து தோள்ல கை கொடுத்து ஒரு ஆட்டோவில் ஏற்றி உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தார். கரக்ட் டயத்தில கொண்டு வந்ததால நான் பிழைச்சேன்னு டாக்டர் அவரை பாராட்டினார். எனக்கு வேண்டியவர்னு அவரை நினைச்சிட்டார் டாக்டர். ஆனா அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. எங்கேயோ கோயிலுக்கு போயிட்டிருந்தவர்...”
மனைவியின் முகத்தை பார்த்தார் ராகவன், ‘அந்த ஆளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று இப்போது அவள் கேட்கவில்லை.
<<<>>>

('அமுதம்' மார்ச் 2012 இதழில் வெளியானது)