Tuesday, April 3, 2012

வேண்டாத வேலை!ங்கே சென்றாலும் ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுபவர் ராகவன். ஆனால், இன்று...? இரவு ஒன்பது மணிக்கு தான் முன்பு வந்தேயிராத ஒரு இடத்தில், முன்பின் தெரியாத ஒரு தம்பதியரிடம், இரண்டு மணி முன்பு அறிமுகமான ஒரு இளைஞனுக்காக தான் வாதாடிக் கொண்டிருப்பதை அவராலேயே நம்ப முடியவில்லை.
கப கபவென்று ஏறிக்கொண்டேயிருந்தது நேரம். இனிமேல் கிளம்பி வெகுதூரம் தனியே வீடு செல்லணும் இவர். அவர்களோ அசைவதாக இல்லை. இவரோ விடுவதாக இல்லை.
அவரது அறுபத்தைந்து வயசுக்கு தேவைதானா இது? மனைவி சுமதி நிச்சயம் இவரை வாசலிலேயே மடக்கி வசை பாடுவாள். அவர்களின் ஒரே மகன் ஊரிலில்லாத நேரம். டிரெயினிங்குக்காக மூன்று நாள் டில்லி சென்றிருந்தான். போகும் போது படித்துப் படித்து சொல்லியிருந்தான், கவனம், கவனம் என்று.
அந்த நேரத்திலா இப்படி...
ராகவனின் சொந்தக்காரர் ஒருவர் அந்த மனநல மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். அவரை பார்க்கத்தான் பார்வையாளர்கள் நேரத்தை கேட்டுத் தெரிந்துக் கொண்டு சாயந்திரம் சென்றிருந்தார். போனோம் பார்த்தோம் என்று வந்திருக்கலாம். காபி அருந்த கான்டீனுக்குள் நுழைந்தார். பக்கத்தில் தலை கவிழ்ந்து உட்காந்திருந்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்தார். தன்னைப் போல அவனும் ஒரு விசிட்டர் என்று நினைத்தார்.
“இல்லீங்க. இங்கே சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று குணமடைந்தவன் நான்,” என்று சொன்னான்.
“அப்ப செக் அப்புக்கு வந்தீங்களா?”
“அதெல்லாம் இல்லீங்க, நான் குணமாகி ஆறு வருஷமாச்சு. ஆனால், நான் இங்கேயேதான் இருக்கேன். சமையல் அசிஸ்டன்டா...”
“ஓ அம்மா அப்பா யாரும் கிடையாதா?”
“எல்லாம் இருக்காங்க...”
“வெளியூரிலா?”
“இங்கேயே தான் இருக்கிறாங்க... என்னை சேர்த்துக்க மாட்டேங்குறாங்க.” உடைந்து விட்டான்.
அழுது கொண்டே அவன் சொன்னதிலிருந்து அவன் பெற்றோர் அவனைக் கை கழுவி விட்டதாகத் தெரிந்தது. பூரண குணமடைந்து ஒரு நார்மல் மனிதனாக அவன் ஆன பிறகும் அவனை ஏற்றுக் கொள்ளும் அளவு அவர்கள் நார்மலாக இல்லை.
ராகவனால் அதைத் தாங்கி கொள்ளமுடியவில்லை. “எங்கேப்பா உன் வீடு? நான் சொல்லிப் பார்க்கிறேன்...” என்று விசாரித்தார். முகவரியை வாங்கிக் கொண்டார். மணி ஐந்து தான் ஆச்சு. பார்த்து பேசிவிட்டு எழு மணிக்குள் வீடு திரும்பி விடலாம் என்று நினைத்தார். ஆனால் கொஞ்சமாவது அவர்களை கன்வின்ஸ் பண்ண முடிந்தால் தானே?...
“இல்லைங்க உங்களுக்கு தெரியாது...” என்று தலையை ஆட்டி பலமாக மறுத்தாள் அந்த அம்மா. “தெளிவாயிட்டான்னு நீங்க சொல்றீங்க...”
“டாக்டரே சொல்றார்.”
“சரி டாக்டரே சொல்றார். நம்பறோம் ஆனா மறுபடி அதே மாதிரி ஆயிட்டான்னா?”
“அது எப்படீங்க?”
“முதல்லே தெளிவாயிருந்தவன் தானே அப்படி ஆனான்?... அவன் என்னென்ன பண்ணுவான்னு உங்களுக்கு தெரியுமா?”
“வெத்திலை குழவியை எடுத்து அவ மேலே எறிஞ்சுட்டான் சார், நம்புவீங்களா? நல்ல வேளை இரண்டு தையலோட போச்சு,” என்றார் அப்பா.
“இவரோட டிரஸ்ஸையெல்லாம் எடுத்து சாக்கடையில் வீசிட்டான் தெரியுமா?”
“பக்கத்து வீட்டுக்காரங்களோட தினம் ஒரு தகராறு!”
“சரிங்க மறுக்கலே. நீங்க பயப்படறது நியாயம் தான். ஆனா யோசிச்சு பாருங்க. உடம்பு சரியில்லாம இருக்கிறப்ப நாமளும் தான் என்னென்ன கலாட்டா பண்றோம்! அதையெல்லாம் மனசில வெச்சிட்டு, உடம்பு சரியான பிறகும் நம்மளை ஒதுக்கி வெச்சுடறதில்லையே?...”
“அது... அதுவும் இதுவும் எப்படி...”
“ஒண்ணாகும்னுதானே கேட்கறீங்க? ஏன் சார், ஒரு தடவை உங்களுக்கு தீராத வயிற்று வலி வந்து அவதிப்பட்டீங்களே, ஞாபகமிருக்கா?”
“உங்களுக்கு எப்படி... அவன் சொன்னானா?”
“யார் சொன்னா என்ன, வந்ததா?”
“ஆமா உயிரே போயிடுச்சு.”
“அந்த சமயத்தில் நீங்க பண்ணினதெல்லாம் ஞாபகமிருக்கா? எத்தனையோ தடவை இவங்களை, அதான் உங்க மனைவியை எட்டி உதைச்சிருக்கீங்க...”
“சில சமயம் வலி பொறுக்க முடியாம...”
“உங்களை நீங்க இழந்த சந்தர்ப்பங்களில் அப்படி நடந்தது. அது மாதிரி அவனும் அவனை இழந்த சந்தர்ப்பங்களில் தான் அப்படி நடந்து கொண்டான். உங்க மனைவி அந்த அடி உதையை வாங்கி கொண்டு உங்களோடு சேர்ந்து உங்க வயித்து வலியை எதிர்த்து போராடினாங்க. நீங்க உங்க மகனை சேர்த்த மாதிரி ஒரு ஆஸ்பத்திரியில் உங்களை சேர்த்திட்டு வீட்டுக்கு வந்திடலை.”
“என்ன சொல்றீங்க,”
“உங்களுக்கு குணமான பிறகு மறுபடி அந்த மாதிரி நோய் வந்திட்டா நீங்க மறுபடி உதைப்பீங்களேன்னு ஒரு தடவையாவது உங்களைவிட்டு ஒதுங்கியிருப்பாங்களா?”
பதிலில்லை.
“நமக்கும் நேர்றது தாங்க. உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஊறு வருது. அந்த சமயம் நாம படற வேதனையில உண்டாகிற எரிச்சலும் கோபமும்... அப்பெல்லாம் நாம நாமாகவே இருக்கிறதில்லே. அந்த வியாதி குணமானதும், டாக்டர் நாம நார்மல்னு சொன்னதும், நாமும் நம்மை சுத்தி இருக்கிறவங்களும் எவ்வளவு சந்தோஷமா, சகஜமா நம்ம வாழ்க்கைப் பயணத்தை தொடர்றோம்? அதே மாதிரி ஒரு உறுப்பு தானே மூளையும்? அதற்கு ஒரு ஊறு வரக்கூடாதா? அல்சரும் நெஞ்சு வலியும் மறைஞ்ச பிறகு வயிறும் இருதயமும் நார்மலா ஃபங்ஷன் பண்ற மாதிரி தானே மூளை என்கிற உறுப்பும் பண்ணும்? இதிலே என்ன சஞ்சலம் இருக்கு?”
அவர்கள் யோசிக்கற மாதிரி இருந்தது.
“கொஞ்சம் நினைச்சு பாருங்க. உங்க மகன் மேல கருணை வையுங்க, தயவு செய்யுங்கனு நான் சொல்லலே. அப்படி அவனும் எதிர் பார்க்கலே. லாஜிகலா யோசிச்சு பாருங்க. உங்களுக்கு சரின்னு படக்கூடிய ஒரு நியாயம் தான்! உண்மை தான்” சொல்லிக் கொண்டே போனார்...
“சார், நீங்க சொல்றது சரின்னு எனக்கு படுதுங்க.” என்றாள் தாய்.
தந்தையும் யோசிக்கிற மாதிரி இருந்தது.
இவர் மணியைப் பார்த்தார் ஒன்பதரை. இனி எப்ப பஸ் பிடித்து புதுநகர் போய்... சுமதி தவிச்சிட்டிருப்பா. இவருக்கு என்ன ஆச்சோன்னு பதைச்சிட்டுருப்பா. பக்கத்து வீட்டு போனும் இன்றைக்கென்று பார்த்து ரிப்பேர்...
ராகவனும் சுமதியும் மட்டுமே வீட்டில், ரிடயராகி ஐந்து வருடமாகிறது. மருந்து கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரே மகன் அபய். அவன் தான் இப்போது டெல்லிக்கு டிரெயினிங்குக்காக போயிருக்கிறான்.

ஸ்சிலிருந்து உதிர்ந்து அரையிருட்டில் புதுநகர் ரோட்டில் நடந்தார் ராகவன்.
“நாளைக்கு போய் அவனை அழைச்சிட்டு வந்திடறோம்,” என்று அவர்கள் உறுதியளித்தது உற்சாகத்தைக் கூட்டியது. மனதிலும் நடையிலும்
ரோட்டில் கிடந்த கல்லை கவனிக்கவில்லை. தடுமாறி விழுந்ததில் நல்ல சிராய்ப்பு. சமாளித்து எழுந்து நடந்து வீட்டை அடைந்து... விஷயத்தை சொன்னதும்...
“உங்களுக்கு கொஞ்சமாவது மதியிருக்கா? இப்படிப்போய் ராத்திரியில அலைஞ்சிட்டு வர்றீங்களே... நாம ரெண்டு கிழடுகளும் ஒரு சப்போர்ட்டும் இல்லாம இங்கே ஒதுக்குபுறமான வீட்டில் கிடக்கிறோம். அங்கே நம்ம பிள்ளை ஆயிரம் மைலுக்கப்பால தனியா இருக்கிறான்... மத்தவங்கல்லாம் அவங்க வேலையைப் பார்த்துட்டு நமக்கென்னன்னு இருக்கிறப்ப நீங்க மட்டும் ஏன் தான் இப்படி போய் அனாவசிய பிரச்சனைகளில் இறங்கறீங்களோன்னு தெரியலே. இந்த ஆறு வருஷமா அந்த ஆஸ்பத்திரிக்கு வந்த எத்தனை விசிட்டர்கள்கிட்ட அவன் சொல்லியிருப்பான். இதை? யாராவது அதில் தலையிட்டாங்களா? உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேலை?..''
ராகவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவர் மனதில் தவறு செய்த உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எந்த வகையில் யோசித்தாலும் தான் செய்தது வேண்டாத வேலையாகத் தெரியவில்லை. கீழே விழுந்த வலி இன்னும் குறையாத போதும் கூட.
“எத்தனை தடவை சொன்னாலும் உங்களை திருத்த முடியாது. நம்ம மகன் வரட்டும், சொல்றேன். நாளைக்கு வந்துருவான்.''
ஆனால், அபய் வரவில்லை. தகவலும் வரவில்லை. போன் எதுவும் காணோம் அரண்டு போய்விட்டார்கள்.
கம்பெனிக்கு போன் செய்து கேட்டால் டிரெயினிங் முன் தினமே ஷெட்யூல்படி முடிந்து விட்டதே என்று அதிர்ச்சியான பதில் வந்தது. “எங்களுக்கு ஒரு தகவலும் வரலையே, என்ன ஆச்சு?” என்றார்கள்.
இரண்டு நாள் கழித்து பக்கத்து வீட்டுக்கு போன் வந்தது. அபய் தான் பேசினான்
“என்னடா ஆச்சு?”
“நான் ஓகேம்மா. ஒண்ணுமில்லை. முந்தாநாள் ஒரு ஆக்சிடெண்ட். ஒரு வேன்காரன் இடிச்சுட்டான்.”
“ஐயோ கடவுளே!”
“பரவாயில்லயேமா. ஒண்ணும் ஆபத்தில்லேயே!”
“எப்படிடா நடந்திச்சு, என் செல்லமே?” கேட்டாள் அழுகையினூடே.
“கிளாஸ் முடிஞ்சு வந்திட்டுருந்தேன். ஓரமாய்தான் நடந்து போயிட்டிருந்தேன். வேகமா வந்த வேன் டிரைவர் திடீர்னு இடது பக்கம் ஒடித்ததில் என் மேல் மோதி தூக்கி எறிஞ்சிட்டது. தலையில் நல்ல அடி. ஆனா... “
“ஐயையோ அப்புறம்,”
“அப்புறம் என்ன? எழுந்திருக்க முடியலே. அரை மயக்கமா கிடந்தேன். ஆங்காங்கே ஜனங்க போயிட்டிருந்த ரோடு தான் ஆனா, யாருமே கண்டுக்கலே. பஸ்சிலே போயிட்டிருந்த ஒரு ஆள் பஸ்சை நிறுத்தி இறங்கி வந்து என்னைப் புரட்டி பார்த்து தோள்ல கை கொடுத்து ஒரு ஆட்டோவில் ஏற்றி உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தார். கரக்ட் டயத்தில கொண்டு வந்ததால நான் பிழைச்சேன்னு டாக்டர் அவரை பாராட்டினார். எனக்கு வேண்டியவர்னு அவரை நினைச்சிட்டார் டாக்டர். ஆனா அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. எங்கேயோ கோயிலுக்கு போயிட்டிருந்தவர்...”
மனைவியின் முகத்தை பார்த்தார் ராகவன், ‘அந்த ஆளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று இப்போது அவள் கேட்கவில்லை.
<<<>>>

('அமுதம்' மார்ச் 2012 இதழில் வெளியானது)


16 comments:

bandhu said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நானும் இப்படி கண்டுகொள்ளாமல் போன விஷயங்கள் நெஞ்சை சுட்டன!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்தினைச் சொல்லும் கதை. எத்தனை எத்தனை பேர் இப்படி “எனக்கென்ன வந்தது?” என்று தானே இருக்கிறார்கள்......

ரேகா ராகவன் said...

விபத்தில் சிக்கியவர்களை அம்போ என்று விட்டுவிடாமல் நம் பங்குக்கு ஒரு சிறு உதவியாவது செய்ய வேண்டும் என்பதை எல்லோராலும் நினைக்கத் தூண்டும் கதை. அருமை சார்.

கோவை2தில்லி said...

நல்லதொரு கருத்தை வலியுறுத்தும் கதையாக இருந்தது சார்.

மனிதாபிமானம் என்கிறது இப்போது குறைந்து கொண்டு தான் வருகிறது......:(

Lakshmi said...

நல்ல கருத்தினைச் சொல்லும் கதை. எத்தனை எத்தனை பேர் இப்படி “எனக்கென்ன வந்தது?” என்று தானே இருக்கிறார்கள்......

Ramani said...

மன நிறைவைத் தந்த அருமையான கதை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 3

பழனி.கந்தசாமி said...

நல்ல அனுபவம்.

ரிஷபன் said...

மத்தவங்கல்லாம் அவங்க வேலையைப் பார்த்துட்டு நமக்கென்னன்னு இருக்கிறப்ப நீங்க மட்டும் ஏன் தான் இப்படி போய் அனாவசிய பிரச்சனைகளில் இறங்கறீங்களோன்னு தெரியலே. இந்த ஆறு வருஷமா அந்த ஆஸ்பத்திரிக்கு வந்த எத்தனை விசிட்டர்கள்கிட்ட அவன் சொல்லியிருப்பான். இதை? யாராவது அதில் தலையிட்டாங்களா? உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேலை?..''

Thought provoking.

Vetrimagal Vetrimagal said...

அருமை. நமக்கென்ன என்ற மனப்பான்மை திக்ம் உள்ள நாட்டில் இது போன்ற கதைகளை படித்துதான் ஆறுதல் கொள்ளவேண்டும்!

கோமதி அரசு said...

தர்மம் தலை காக்கும். நமக்கு என்ன என்று போகாமல் உதவி செய்த ராகவனுக்கு அவர் மகனை காப்பாற்ற அவரைப் போல்கருணை உள்ளவர் கிடைத்து விட்டார்.

நல்ல படிப்பினை தரும் கதை.

ராமலக்ஷ்மி said...

நமக்கென்ன என எல்லோருமே நினைத்து விட்டால்....

மிக நல்ல கதை.

தி.தமிழ் இளங்கோ said...

நாம் ஒருவருக்கு காலத்தினால் செய்த உதவியை அவரே நமக்கு திரும்ப செய்ய வேண்டியதில்லை. எதிர்பார்க்கவும் கூடாது. வேறு ஒருவர் மூலமாக வேறு விதத்தில் நமக்கு உதவி தெய்வாதீனமாக வந்து சேரும். “ தர்மம் தலை காக்கும்” என்ற நீதியினை ரொம்பவும் எளிமையாக கதை வடிவில் தந்துள்ளீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கருத்தினை எளிமையாகச் சொல்லியுள்ள கதைக்கு பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘அந்த ஆளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று இப்போது அவள் கேட்கவில்லை.//

தனக்கு அல்லது தன் பிள்ளைக்கு என்று வரும்போது எப்படிக்கேட்பாள்.

இவர் செய்த ஒரு நல்ல காரியம் இவர் பிள்ளையை அங்கு அதே நேரத்தில் வேறொரு நல்லவர் மூலம் காப்பாற்றியுள்ளது.

அருமையான படிப்பினை தரும் கதை.

[ஏனோ தங்களின் 4 ம் தேதி மெயிலைப் பார்க்கத்தவறி விட்டேன். இப்போது தான் பார்க்க நேர்ந்தது. என் டேஷ்போர்டிலும் இந்தத் தங்களின் பதிவு ஏனோ தெரியவில்லை. அதனால் தான் தாமதம். மன்னிக்கவும்]

தக்குடு said...

நல்ல சிந்தனையை தூண்டும் எளிமையானதொரு கதை. ரசித்தேன்!!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!