Tuesday, February 14, 2017

நல்லதா நாலு வார்த்தை... 80


’விழித்திருக்கும்போது தோன்றும்
கற்பனையில் ஒன்றைப் பார்ப்பதைவிட
கனவில் ஏன் இன்னும் தெளிவாகப் பார்க்கிறது கண்?’
- Leonardo da Vinci
('Why does the eye see a thing more clearly in
dreams than the imagination when awake?')
<>

'விடா முயற்சி, எல்லா
வெற்றிக்குமான ரகசியம்.'
-Victor Hugo
(Perseverance, secret of all triumphs.)
<>

’உள்ளிருந்து சுடர்விடும் ஒளியை
மங்கிடச் செய்ய முடியாது எதனாலும்.’
- Maya Angelou
('Nothing can dim the light which shines from within.')
<>

'நீ மட்டுமே கட்டுப்படுத்த முடியும்
நின் எதிர்காலத்தை.'
- Dr. Seuss
('Only you can control your future.')
<>

'நல்ல அறிவுரையை எப்போதுமே நான்
எவருக்கேனும் கொடுத்துவிடுகிறேன்.
அந்த ஒன்றைத்தான்
அதைவைத்து செய்ய முடியும்,
ஒரு போதும் தனக்கு அது உதவுவதில்லை.’
- Oscar Wilde
('I always pass on good advice. It is the only thing
to do with it. It is never of any use to onself.')
<>

'தங்கள் பாரபட்சங்களை
மாற்றி மாற்றி அடுக்கிக் கொண்டிருப்பதையே
தாங்கள் சிந்தித்துக் கொண்டிருப்பதாக
நினைக்கிறார்கள் நிறைய பேர்.’
-William James
(‘A great many people think they are thinking when
they are merely rearranging their prejudices.’)
<>

'மற்றொருவர் மன வலியை மெலிதாக்குவதென்பது
நம்முடைய மனவலியை மறப்பது.’
-Abraham Lincoln
(”To ease another’s heart ache is to forget one’s own.’)
<>

‘வேறெதையும் விட அதிகமாக
பறவைகள் மனிதர்களிடமிருந்து
வேறுபடும் விஷயம்,
அவை தாம் கட்டிமுடித்தபின்னும் இயற்கையை
அது முன் இருந்தது போலவே வைத்திருப்பதுவே.’
- Robert Lynd
(‘There is nothing in which the birds differ more from man than the way 
in which they can build and yet leave a landscape as it was before.’)
<>

'அனைத்து உங்கள் வாழ்நாளிலும்
நீங்கள் வாழ்ந்திட
வேண்டுகிறேன்.'
- Jonathan Swift
(‘May you live all the days of your life.’)
<>

’உன்னிடம் ஒரு
ஜன்னலிருக்கும் வரை
உற்சாகமானது வாழ்க்கை.’
- Gladys Taber
(’As long as you have a window life is exciting.’)

>>><<<

Sunday, February 12, 2017

அவர் எப்படி.... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 114


எக்மோரில் இறங்கினார்கள் இருவரும். 
”மைலாப்பூரில்தான் மாமா அந்த பரந்தாமன் இருக்காரு. நம்ம தூரத்து சொந்தக்காரரு. அவரை சந்திச்சு பையனைப் பத்தி விசாரிக்கறோம். பையனின் அப்பாவின் ஒண்ணுவிட்ட தம்பியோட சம்பந்தி அவர்.. ஸோ அவர் சொல்றதை வெச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அப்புறம் பையனை அவன் கம்பெனியில் போய்ப் பார்க்கறோம், அதானே நம்ம ப்ளான்?” 
”எக்ஸாட்லி.” தலையாட்டினார் ராகவ். ”உன் மைத்துனிக்கு இந்த இடம் தகைஞ்சிடும்னு நம்புவோம்.”
ஆட்டோவில் ஏறினதும் கிஷோர் மைலாப்பூர் என்று சொல்ல இவர் சைதாப்பேட்டை என்றார். விழித்தான். சைதாப்பேட்டையில் ஒரு ஷோரூம் முன் நின்றது. 
"சோமநாதன் இருக்காரா?”  என்று முகப்பில் விசாரித்துவிட்டு உள்ளே போனார். ”இவரு யார் மாமா, சொல்லவே இல்லே... ஓ, இவருக்கும் பையனைத் தெரியுமா?”
”தெரியாது.”   
அப்புறம் இவரை ஏன்.. குழம்பினான்
”வாப்பா ராகு,” என்று வரவேற்றார் சோமநாதன்.
நலம் கேட்டுவிட்டு.... ”உங்க கம்பெனியில கிளையண்டா இருக்காரே பரந்தாமன் தெரியுமில்ல உனக்கு அவரை?”
”ஓ, நல்லாவே தெரியும்.”
”அவரைப் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா... ஆள் எப்படி ... நாணயமானவரா?” ... துருவித் துருவி விசாரித்தார்.
விசாரிக்க வந்தது பையனைப் பத்தி.. இவர் அந்த பரந்தாமனைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்கிறாரே... கிஷோர் குழம்பினான்.
”ரொம்ப நல்ல மனுஷன். நான் ரொம்ப மதிக்கிற ஆட்களில் ஒருத்தர் அவரு.”
”எதை வெச்சு சொல்றே? அவரோடான உன் பிசினஸ் டீலிங்ஸை வெச்சுத்தானே...”
”அது மட்டுமில்லே. தனிப்பட்ட முறையிலேயும் எனக்கு அவரோட கொஞ்சம் பழக்கம் உண்டு. நிறைய சந்தர்ப்பங்களில் கவனிச்சிருக்கேன். அவர் பேச்சு, நடவடிக்கை, குணம் எல்லாம்...” சில உதாரண சம்பவங்களை சொன்னார்.  

வெளியே வந்ததும் கிஷோர் பார்வைக்கு பதிலளித்தார் ராகவ்.
”உன் கேள்வி புரியுது. பரந்தாமனைப் பார்த்து பையனைப் பற்றி விசாரிக்கத்தான் வந்தோம். ஆனா நாம யார் கிட்ட விசாரிக்கறோமோ அவங்க எப்படிப்பட்டவங்க என்கிறதைப் பொறுத்துத்தான் அவங்க சொல்றதை நாம நம்பறதும் ஏத்துக்கறதும் இருக்கு. அதான் நான் பரந்தாமனைத் தெரிஞ்ச ஒருத்தரைக் கண்டு பிடிச்சேன். இவரு நமக்கு அவரைப் பத்தி சொல்லிட்டாரு. இனிமேல் நாம அவரை சந்திச்சு பேசலாம். உருப்படியான அபிப்பிராயம் கிடைக்கும்னு நம்பலாம்.”
சரிதானே? தோன்றியது இவனுக்கு.
><><><
(’அமுதம்’ ஜூன் 2015 இதழில் வெளியானது)

Friday, February 10, 2017

அவள்... (கவிதைகள்)

381.
நினைவில் பசி வருவதில்லை
நிறைந்தே இருக்கிறது மனம்
உன் நினவுகளில்.

382.
என் சிந்தையின்
ஒரே விந்தை.
நீ.

383.
அழகின்
கரையில் நான்.
கடலாய் நீ.

384.
தொலைத்துவிடாதே என்கிறாய்
என் ரசனையை.

385.
ரொம்பவே இடம் கொடுத்துவிட்டாய்
நாணத்துக்கு.

386.
என் மறதிக்கு சவால்விடும்
உன் நினைவுகள்...

387.
எப்போதோ பேசிய ஒரு வார்த்தை.
உன்னுடன் பேசியது என்பதால்
இப்போதும் நினைவில்.

388.
சட்டென்று மனதில் தோன்றும்
கவிதை.
சர்வகாலமும் மனதில் தோன்றும் 
நீ.

389.
கடன் கேட்டு வந்து நிற்கிறது
அழகு உன்னிடம்.

390.
நீ கொடுத்த உற்சாகம்
மட்டுமே நான்.

><><><

Thursday, February 9, 2017

நல்லதா நாலு வார்த்தை... 79

’ஒருவர் இன்னொருவருக்கு அளிக்க முடிகிற
 ஆகப் பெரிய பரிசினை
அளித்திருக்கிறார் என் தந்தை எனக்கு,
அவர் என் மீது நம்பிக்கை வைத்தார்.’
- Jim Valvano
('My father gave me the greatest gift anyone could
give another person, he believed in me.')
<>

'பொறுமையும் சிரத்தையும்,
நம்பிக்கையைப் போலவே,
மலைகளையும் நகர்த்தும்.'
-William penn
('Patience and diligence, like faith, remove mountains.')
<>

'சிந்திப்பதல்ல, 
செயலே வெல்லும்
அச்சத்தை.'
-Clement Stone
('Thinking will not overcome fear but action will.')
<>

'ஆனந்தம் என்பது பெரும்பாலும் நீங்கள் 
அறியாமல் திறந்துவைத்த ஓர் கதவின் வழியாகவே
பதுங்கிப் பதுங்கி நுழைகிறது.'
-John Barrymore
Happiness often sneaks in through a door
you didn't know you left open.')
<>

'அச்சத்தை விட்டொழித்த பின்னரே
ஆரம்பிக்கிறோம் வாழ.'
- Dorothy Thompson
('Only when we are no longer afraid do we begin to live.')
<>

’அன்பு தொலைநோக்கி வழியாகப் பார்க்கிறது;
பொறாமை, நுண்ணோக்கி வழியே.’
-Josh Billings
Love looks through a telescope; envy, through microscope.’)
<>

'நம்பிக்கை என்பது இறகுகளுடன் கூடி
ஆன்மாவில் அமர்ந்திருக்கும் ஒன்று.
வார்த்தைளின்றி ராகம் பாடுகிறது.
நிறுத்துவதேயில்லை.'
- Emily Dickinson
('Hope is the thing with feathers that perches in the soul - and
sings the tunes without the words - and never stops at all.')

<>

'என் நண்பன் அறிவான்
என் இதயத்திலிருக்கும் பாடலை;
நான் மறக்கையில் அதை
எனக்குப் பாடுகிறான்.'
-Donna Roberts
('A friend knows the song in my heart
and sings it to me when my memory fails.')
<>

'எவர் கருத்துக்களை நீங்கள் மதிக்கிறீர்களோ
அவரால் தவறாகப் புரிந்துகொள்ளப் படுவது
எல்லாவற்றிலும் மிக வலி தருவது.'
-Gloria Steinem
('Being misunderstood by people whose opinions
you value is absolutely the most painful.')
<>

’உங்களின் சந்தோஷம் பற்றி உரைக்காதீர் 
உங்களிலும் யோகம் குறைந்தவரிடம்.’
<>
- Plutarch
('Do not speak of your happiness to one less fortunate than yourself.')

<<<>>>

Monday, February 6, 2017

அதன் காரணம்... (நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 113

”ரெண்டு காபி,” என்று வெயிட்டரிடம் சொல்லிவிட்டு தியாகு, ”சொல்லு,” என்றான் வினோதிடம்.
’என்ன கேக்கிறே நீ... திடீர்னு வா காபி சாப்பிடலாம்னு அழைச்சுட்டு வந்தே, சொல்லுங்கிறே... என்ன சொல்றது?”
”காரணத்தை,” என்றான் தியாகு, ”கொஞ்ச நாளா டல்லா இருக்கிறியே..  என்ன பிரசினை? வீட்டிலதான் ஏதோ ஒண்ணுன்னு தெரியுது.”
அடப்பாவி ஊகிச்சுட்டானே...”ஆமாடா,” என்றான். ஒரு பெரு மூச்சு. ”வர வர யமுனா என்கிட்ட நடந்துக்கறது வித்தியாசமா இருக்கு.”
“இப்படி பொதுவா சொன்னா எப்படி..  என்ன வித்தியாசம், என்ன பண்ணினா?”
”இப்பல்லாம் அடிக்கடி என் மேல் கோபப்படறா...” 
"அப்படியா?" ஆச்சரியம் இவனுக்கு. “நிஜமாவா? அவ முகம் கடுத்தே பார்க்கமுடியாதே.. ஒரு வார்த்தை கோபமா கத்தினதா கேள்விப்பட்டதில்லையே?”
”ஆமா. கல்யாணமாகி இத்தனை வருஷமா அப்படித்தானே இருந்தாள்? அதான் இப்ப எனக்கும் தாங்கலே.” 
”அப்ப சண்டை எல்லாம் வருதா...”
”அதெல்லாம் டெவெலப் ஆக நான் விடறதில்லே. ஆனா இப்படி பொழுது விடிஞ்சா பொழுது போனா கோபப்படறது என்னால சகிக்க முடியலே.”
”நம்பவே...”
”உன்கிட்ட சொல்றதுக்கென்ன, சிலசமயம் என்னை அதட்டக்கூட...”
புன்முறுவல் பூத்தான்
”சிரிக்கிறே நீ? ரசிக்கிறியாக்கும்?”
’பின்னே?  நீ ட்ரீட் தர்றணுமாக்கும்...”
”என்னடா புரிஞ்சுக்காம உளர்றே...”
”நீதான் புரிஞ்சுக்கலே,” என்றான், ”இத்தனை வருஷத்துக்கு அப்புறம் யமுனா அப்படி நடந்துக்கறான்னா காரணம் அவள் இப்ப உன்னை  உன்னை பூரணமா நம்பறான்னு... உன் மேல முழு உரிமை கொண்டாட ஆரம்பிச்சுட்டான்னுதானே அர்த்தம்?  இதுவரை அவகிட்டே உன்னைப் பத்தி இருந்த தயக்கம்  எல்லாம் அடியோட விலகிட்டுது, அவள் என்ன சொன்னாலும் அதை நீ பெரிசா எடுத்துக்கொண்டு அவள் மேல் கோபப்பட்டு ஏதும் செஞ்சிட மாட்டேங்கிற நிச்சயத்துக்கு வந்துட்டா. அந்த அஷூரன்ஸை கொடுத்ததும் நீதானே... இப்ப கூட சொன்னியே, அதை சண்டையாக வளர நான் விடறதில்லேன்னு?” 
”ஓஹோ?”
”உரிமையோடு பழகுவதன் வெளிப்பாடுதான் இந்தக் கோபம், அதட்டல் எல்லாம். நீ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்னு இப்ப நம்ப ஆரம்பிச்சு அப்படி செய்யறவளை சீரியஸா எடுத்துக்கொண்டு குழப்பிக்காதே. கொண்டாடு இதை.” 
('அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)

Saturday, February 4, 2017

அவள் - (கவிதைகள்)

371
தென்றலால் 
இன்னும் குளிர்விக்க முடியாத 
மனம் உன்னுடையது.

372.
பார்த்துக் கொண்டேயிருக்கலாம்
மழையை.
பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் 
உன்னை.

373.
மந்திரம் கற்று வந்தேன்
உன்னை மறக்க.
மந்திரம் மறந்துவிட்டது.

374.
அமாவாசை இல்லாத ஊராகிவிட்டது
நீ வந்ததிலிருந்து.

375.
உன்னிலும் அழகான பெண்ணுண்டு.
என் ஞாபகத் தடாகத்தில்
உன் நிழல்.

376.
சுகமாய் நனைகிறேன்
நீ உச்சரிக்கையில்
அருவியாய் விழும்
வார்த்தைகளில்.

377.
அடையாளம் தெரியாத அளவுக்கு
அழகாகிக் கொண்டே போகிறாய்..

378.
அள்ளித் தருவது வார்த்தைகளை
மொழியா உன் அழகா
தெரியவில்லை.

379.
உன் சித்திரம் என் மனதில்.
என் மனம் உன் சித்திரம்.

380.
நீ தரும் ஆறுதலின் இதம்
நீடிக்கும் அடுத்த ஜென்மம் வரையிலும்.

>>><<<