Monday, October 29, 2012

மாத்தி நினைக்காதீங்க!அன்புடன் ஒரு நிமிடம் - 19. 

மாத்தி நினைக்காதீங்க!

காலையில்...

சின்ன மகன் அரசுவை உட்கார வைத்து கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தார் வாசு. விருந்தினர் வந்திருந்த போது அவன் நடந்துகொண்ட விதம் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

அந்த மாமா உனக்கு சாக்லேட் கொடுத்தாரில்ல? ஏன் தாங்க்ஸ் சொல்லலே?”

சொல்லலே! என்றான் அவன். புதிதாக அவன் பார்க்காத தினுசில் இருந்ததால் ஆவல் அதைப் பிரிப்பதில் பாய, அவருக்கு தாங்க்ஸ் சொல்ல மறந்து போனான்.

எப்ப யார் எது கொடுத்தாலும் தாங்க்ஸ் சொல்லணும்! சொல்லிக் கொடுத்திருக்கேன்ல? சரி, அவங்க பொண்ணு உன்கிட்ட சைக்கிள் கொடுன்னு கேட்டதுக்கு நோ, நோன்னு சொல்லிட்டியே, ஏன்?”

அவனுக்குக் கொடுக்க தோன்றவில்லை, கொடுக்கவில்லை. அவ்வளவுதான். அதை சொன்னா அப்பா இன்னும் திட்டுவார். ஆகவே மௌனமாக இருந்தான், பதில் சொல்லாமல்.
திருப்பித் திருப்பிக் கேட்டும் மௌனம்.

அப்பா கேட்டா இப்படித்தான் பதில் சொல்லாமல் இருக்கிறதா? இதான் நீ படிச்ச மானர்ஸா?”

மழலை சற்றே மாறியிருந்த வயது மகன் மலங்க மலங்க விழித்தான். நன்றாகத் திட்டினார் இவர்..

பார்த்துக் கொண்டேயிருந்தாள் பாட்டி.

மாலையில்...

வாசு வீட்டுக்குள் நுழைந்ததுமே அழைத்தார் தாத்தா.

என்னப்பா?”

வர்ற புதன் கிழமை உன் பொண்ணுக்குப் பிறந்த நாள் ஆச்சே? ஞாபகம் இருக்கா?”

, ஜானகி சொன்னாளே!

சரி, அவளுக்கு டிரஸ் எடுத்திட்டியா?”
இன்னும் இல்லேப்பா. எடுக்கணும். கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நாளைக்குக் கடைக்கு போகணும்.

சீக்கிரம் எடுத்துடு. அப்புறம் கேக் சொல்லிட்டியா?”

ஓ வழக்கம்போல சேகர் கடையில் ப்ளம் கேக் சொல்லிட்டேன்.

ஆமாமா, அவளுக்கு அதானே பிடிக்கும்? ஒரு கிலோ தானே?”

இல்லேப்பா, அரை.தான் சொன்னேன்.

அது எப்படி போதும்? அவ பிரண்ட்ஸே அரை டஜன் பேர் வருவாங்க. ஒரு கிலோ ஆக்கிடு அதை.

ரெண்டு வினாடி மௌனத்துக்குப் பின், சரிப்பா! வந்தது.

பார்த்துக் கொண்டேயிருந்தாள் பாட்டி.

ம்.. முனகிக் கொண்டாள்.

நேராக அருகில் வந்தாள்.

நீங்க ரெண்டு பேர் பண்றதும் சரியாப்படலியே?” என்றாள்.
அரசுக்கு இன்னும் வயசு நாலு ஆகலை. அவன்கிட்டே போய் ஒரு வளர்ந்த பையனோட நடத்தையை அவன் அப்பா ஆன நீ எதிர்பார்க்கிறே. வாசு வளர்ந்து ஒரு பெரிய பிஸினஸ் மேனாக இருக்கிறான். அவன்கிட்டேபோய் நீங்க ஒரு குழந்தையை எதிர்பார்க்கீறீங்க. எப்படி அவர்களால் அதை பிரதிபலிக்க முடியும்? குழந்தையிடம் குழந்தையை எதிர்பாருங்க. வளர்ந்து ஆளானவனை ஒரு முழு மனிதனாகப் பார்க்கப் பழகுங்க.

அவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

<<<<>>>>

('அமுதம்' செப்டம்பர் 2012 இதழில் எழுதியது) 

Monday, October 15, 2012

முன்னதாக ஒரு முற்றுப்புள்ளி...அன்புடன் ஒரு நிமிடம் - 18. 

முன்னதாக ஒரு முற்றுப்புள்ளி...

ப்பவாவது ஒரு வேளை அப்படி வாய்க்கும். ரம்மியமாய் இசை ஒலிக்க தேநீரை உறிஞ்சியபடி கணவனும் மனைவியும் இனிமையாக உரையாடுவது. அப்படிப்பட்ட ஒரு உரையாடல் துளி பிசகி வீண் விவாதமாக வெடித்தால் வெளிப்படும் வேதனை இருக்கிறதே, அப்பப்பா!

அவர்கள் போய்விட்டு வந்த ஒரு கல்யாண வைபோகத்தைப் பற்றித்தான் யமுனாவும் வினோதும் நாலு வினாடிக்கு இரு முறை சிரிப்பைச் சிந்தியபடி இனிமையில் ஆழ்ந்த உரையாடலில் இருந்தனர்...   

கிருதாவைத் தாண்டி கன்னத்துக்கும் சேர்த்து டை அடித்துவிட்டு வந்த அவன் பெரியப்பா ஏன் எல்லோரும் தன் காதோரம் பார்வையைப் பதிக்கிறார்கள் என்று தெரியாமல் விழித்தது, ஆட்டோவில் ஏறும்போது மனைவியும் ஏறிவிட்டாளா என்று கவனிக்காமல் ஒரு கிலோமீட்டர் போல வந்துவிட்டு திரும்ப சென்று அழைத்து வந்த மாமாவின் நண்பர் வழிந்தது.... என்று கொஞ்ச நேரம் இவர்கள் கல்யாண காமெடி கலாட்டாக்களில் சஞ்சரித்தது மின்சாரமின்றி ஏ.சி.யை உருவாக்கிக் கொண்டிருக்கையில்தான் கரடி நுழைந்தது அவன் செல் வழியாக.

மேலதிகாரி. எடுக்காதிருக்கவும் முடியாது. என்ன செய்யப் போகிறான்? உதட்டில் புன்னகை நெளிய பார்த்தாள் யமுனா. அவனா அசர்கிறவன்?

என்ன கேட்டாரோ? அவன் தெளிவாக பேசினான்.
ஓ அது? சார் இப்பதான் அதைப்பத்தி நானே உங்களுக்கு போன் பண்ண நினைச்சேன். ஒரு நிமிஷம்! அதுக்குள்ளே நீங்களே...

சரிதான், ஆபீசுக்குள் நுழைந்துவிட்டானா? இனி அவ்வளவுதான்! மறையத்தொடங்கியது அவள் புன்னகை.

ஆமா சார், அதைப் பத்தி உங்ககிட்டே கொஞ்சம் விலாவாரியா சில விஷயங்கள் சொல்லணும் சார், நேரில வந்து நான் பேசறேன் சார். உங்க டயமை வேஸ்ட் பண்ணாம சாயங்காலம்போல வந்தேன்னா அரைமணி நேரம் போதும் சார்!...ஆமா சார். அரையே அரை மணி. நாட் எ மினிட் மோர் சார்... தாங்க்ஸ் சார்!

அட! என்ன அழகாக பேசி இப்போது இங்கே நிகழும் இந்த உற்சாக நொடிகள் அறுந்து விடாமல் பார்த்துக் கொண்டான்!

கண் சிமிட்டியபடியே தன்னவளோடு தன் பேச்சைத் தொடர்ந்தான். ...அப்புறம் அந்த ஃபெவிகால் பார்ட்டி, அதான் அந்த சில்க் ஷர்ட் சித்தப்பா எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் நகர விடாமல் பேசிக்கொண்டு...
மறுபடியும் அவர்கள் தங்கள் பொன் வேளைக்குள் நுழைந்தார்கள்.

ஆனால் யாரோ ஒரு ஆங்கிலக் கவிஞர் சொன்னது மாதிரி நாம் ஆல் இஸ் வெல்னு ஆனந்தமா இருக்கிறபோது தானே அசம்பாவிதமா ஏதோ ஒண்ணு கதவைத் தட்டும்?
தட்டியது.

ஆனா டியர், என்ன இருந்தாலும் வெல்கம் ட்ரீட் தரேன் வாங்கன்னு நம்மை அழைச்சிட்டு லாஸ்ட் மினிட்ல கான்சல் பண்ணினாரே உங்க மாமா அவருக்கு இத்தனை வயசுக்கு மேல இப்படி ஒரு எண்ணம் வந்திருக்க வேண்டாம்என்ன நினைக்கிறே நீ?” என்று அவன் அவள் மாமா தன் நாற்பத்தி ஆறாம் வயதில் மறுமணம் செய்து கொள்ளவிருப்பதை பற்றி அலச ஆரம்பித்த பொது அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

போச்சு அஞ்சாறு மாசத்தில ஒரு நாளா வாய்த்த ஆனந்தப் பேச்சு என்று அவள் மனம் அடித்துக் கொள்ள நாவோ அவசரமாய் கொட்டத் தயாரானது ஆவேச வார்த்தைகளை. 

ஆனால் அந்த கணக் கூறில் அவளுக்கு நினைவு வந்தது அவன் சற்று முன்னால் கையாண்ட உத்தியின் மறு பக்கம். அடித்தது ஒரு ஃப்ளாஷ் மூளையில்!

சொன்னாள். “ஓ அதைப் பத்தி ஒரு விஷயம் உங்ககிட்டே சொல்லணும்னு ரெண்டு நாளா  நினைச்சிருந்தேன், சே, இப்ப பார்த்து மறந்து போச்சே... நினைவு வந்ததும் சொல்றேன், அதைக் கேட்டிட்டு அப்புறம் சொல்லுங்களேன் அவரைப்பத்தி!

வியப்புடன் ஒரு வினாடி விழித்தவன் அடுத்த ஜோக்குக்கு திரும்ப, வேளை பொன்னாகவே மீண்டும் தொடர்ந்தது. வேண்டிய வேளையில் வேண்டாத பேச்சு எழுந்து வீண் பிரசினையில் முடிவதைத் தவிர்க்க, இதைப்பத்தி சொல்ல ஒரு விஷயம் இருக்கு, மறந்து போச்சு, கொஞ்சம் பொறு, ஞாபகப் படுத்திக்கிறேன்னு சொல்லி அப்போதைக்கு ஒரு ஃபுல்ஸ்டாப் வெச்சிட்டா போதும், தம்பதிகளிடையே பிணக்கு வராதே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் யமுனா.

('அமுதம்' செப்டம்பர் 2012 இதழில் எழுதியது)
<<<>>>