Tuesday, June 23, 2015

நல்லதா நாலு வார்த்தை...49


'முன்னேறிச் செல்வதன் ரகசியம் 
செல்லத் தொடங்குவது.'
- Mark Twain
('The secret of getting ahead is 
getting started.')
<>

’எத்தனை மெதுவாக நகருகிறாய் 
என்பது முக்கியமில்லை 
நீ நிற்காத வரையில்.’
- Confucius
('It does not matter how slowly you
go as long as you do not stop.')
<>

’யாரேனும் ஒருவரின் மேகத்தில் ஓர் 
வானவில்லாக இருக்க 
முயற்சி செய்.’ 
- Maya Angelou
('Try to be a rainbow in someone's cloud.')
<>

'இன்னொரு இலக்கை நிர்ணயிப்பதற்கோ
இன்னொரு கனவைக் காண்பதற்கோ
ஒருபோதும் வயதாகிவிடவில்லை உனக்கு.'
- C. S. Lewis
('You are never too old to set another goal
or to dream a new dream.')
<>

முகம் தரை பட விழுந்தாலும்
முன்னேறிச் செல்கிறாய் அப்போதும்.
- Victor Kiam
('Even if you fall on your face, 
you're still moving forward.')
<>

’ஆனந்தத்தின் ரகசியம்
அன்றாட வாழ்க்கையின் 
அனைத்து விவரங்களிலும்
அப்பழுக்கற்ற அக்கறை கொள்வதில்
அடங்கியிருக்கிறது.’
- William Morris
('The true secret of happiness lies in taking
a genuine interest in all the details of daily life.')
<>

’விஷயங்களை நீ பார்க்கும் 
விதத்தை மாற்றினால்
நீ பார்க்கும் 
விஷயங்கள் மாறும்.'
- Wayne Dyer
('If you change the way you look at things, 
the things you look at change.')
<><><>
(படம்- நன்றி: கூகிள்)

Wednesday, June 17, 2015

அவள் - (கவிதைகள்)

141
நேசம், அன்பு, பாசம் என்று
ஏகமாய் அருகில் கொட்டிக்கிடக்கிறது,
நெருங்க முடியவில்லை உன்னை.

142
 உன்னைத் தாண்டி
நினைப்பைச் செலுத்த முடியாதபடி
குறுக்கே நிற்கும்
உன்னை என்ன செய்வது?

143
அந்த மலருக்கும் உனக்குமான
ஆறு வித்தியாசத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்,
அகப்படவில்லை இன்னும் 
ஒன்றும்.

144
உன்னிலிருந்து கவிதை பிறந்தது
புதிதாக.
அந்தக் கவிதையிலிருந்து நான் பிறந்தேன்
புதிதாக.

145
மனம் பாய்கிற வேகம் இரு
மடங்காகிறது உனைக்
காணும்போதெல்லாம்.

146
என் கனவில் நீ
வருவதில்லை.
என் கனவே நீயாக விரிவதால்.

147
பேசி
புரிய வைக்கிறாய்
சில சமயம்
புரிய வைத்து பின்
பேசாமல் விடுகிறாய்.

><><><>< 

(படம்- நன்றி:கூகிள்)

Sunday, June 14, 2015

நம்பிக்கை மனதில்…

அன்புடன் ஒரு நிமிடம்... 82

“நாளைக்கு இண்டர்வியூ எனக்கு. ஆசீர்வாதம் வாங்க வந்தேன் மாமா…” என்றான் மது. அவர் தங்கை மகன்.
“எப்படி தயார் பண்ணியிருக்கே?”  கேட்டார் சாத்வீகன்.
“ரொம்ப பயமா இருக்கு. இது நாலாவது. இதிலேயும் கிடைக்காட்டி அவ்வளவுதான். ஒரு கம்பெனியிலும் கூப்பிடமாட்டான் அப்புறம்.”
“நீதான் நல்ல இண்டெலிஜண்ட் ஆச்சே? முதல்ல அவங்க வெச்ச டெஸ்ட்ல எல்லாம் அமர்க்களமா ஸ்கோர் பண்ணியிருக்கே.”
“அதெல்லாம் டெஸ்ட் எழுதும்போது சரி, ஆனா இண்டர்வியூவில கொஞ்சம் நெர்வஸாயிடறேன்போல. சமயத்தில பதில் சரியா சொல்ல வரலே.”
”விடு. போகப்போக சரியாயிரும்.” கையிலிருந்த பாட்டிலைப் பார்த்தார். காலியாயிருந்தது. அவனிடம் நீட்டினார். ”உள்ளே கிச்சன் மேடையில குடிதண்ணீர் இருக்கும் பானையில். இதில ஃபுல்லா விட்டு எடுத்திட்டு வாயேன்.”
வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான். பானையில் தண்ணீர் இருந்தது. பாட்டில் வாய் சின்னதாய் இருக்கவே, நிமிடம் யோசித்தவன் பக்கத்திலிருந்த சிங்க் மேலாக அதைப் பிடித்துக்கொண்டு மறு கையால் பானையைக் கவிழ்த்தான். சிந்தாமல் பாய்ந்தது..
பாதி நிரம்புகையில் பின்னால் சாத்வீகனின் குரல் கேட்டது. “பார்த்துடா. சிங்க் இப்பதான் வைத்துப் பூசினது. நனைந்துடாமல்…”
”ஓ, அப்படியா?” என்றவன் உஷாரானான். மெதுவாக இன்னும் கவனமாக ஊற்ற ஆரம்பித்தான்.
சிந்தியது. என்ன முயன்றும் சிந்தாமல் ஊற்ற முடியவில்லை. கொஞ்சம் அதிகமாகவே…
“ஐயோ மாமா…” என்றான்
“பரவாயில்லே விடு “
ஹாலுக்கு வந்ததும்… ”உட்கார். இப்ப நடந்ததில ஒரு விஷயம் கவனிச்சியா? பானையில இருக்கிற தண்ணீரை சின்ன நெக் கொண்ட இந்த பாட்டில்ல ஊத்தணும். நீ என்ன பண்ணினே?  யோசித்து சிங்க் மேலே வைத்துக்கொண்டு ஊற்றினாய். சிந்தாது, சிந்தினாலும் கீழே சிங்க்கில்தான் விழும் என்று. ஒரு துளியும் கீழே விழலே. ஆனா நான் வந்து சிங்க் புதுசா பதிச்சதுன்னு சொன்னதும் கீழே சிந்தியது. அதே நீ தான். அதே சிங்க்தான். சூழ் நிலை அப்படியேதான் இருக்கிறது. ஆனா இப்ப புதுசா ஒரு தடுமாற்றம். அது ஏன் வந்தது? அது வரை அனாயாசமாக செய்த விஷயத்தை இப்ப ஏன் செய்ய முடியலே?”
அவன் யோசித்தான்
”சொல்றேன். அதுவரை உன் மேலிருந்த உன் நம்பிக்கை உனக்குப் போய்விட்டது. அதான் காரணம். ஆனால் லாஜிகலாக பார்த்தாயானால் அது அணுவேனும் குறையத் தேவையில்லையே? இதேதான் இண்டர்வியூவிலும் உனக்கு நடக்கிறது.  எல்லா பதிலும் நல்லாவே சொல்ல வரும் உனக்கு. எழுதியிருக்கே டெஸ்ட்லே எல்லாம். ஆனா சூழ் நிலை மாறி அது நேருக்கு நேர் என்று வரும்போது உன்னையறியாமல் உன் நம்பிக்கை காணாமல் போய்விடுது. அவ்வளவுதான். அது போக வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதை நீ நன்றாய் உணர்ந்து கொண்டால் போதும்.”
அவன் முகத்தில் நம்பிக்கை மலர்ந்தது
(’அமுதம்’ ஜூலை 2014 இதழில் வெளியானது.)

Wednesday, June 10, 2015

நல்லதா நாலு வார்த்தை.... 48


'முடிவிலா விஷயங்கள் இரண்டே இரண்டு: 
பிரபஞ்சமும் மானிட மடமையும். 
முதலாவதைப் பற்றி எனக்கு 
முழு நிச்சயமில்லை.'
- Albert Einstein
('Only two things are infinite, the universe and human
stupidity, and I'm not sure about the former.')
<>

’இதயத்தைத் தவிர எதனாலும் 
இதயத்தை மாற்ற முடியாது.’
- Carroll O'Connor
(”Nothing but the heart can change the heart.’)
<>

’எல்லாவற்றுக்கும் மக்கள்
முன் தலைமுறைகளைக் 
குற்றம் சொல்லக் காரணம்
அதை விட்டால் சொல்ல 
ஓரிடமே வேறுண்டு என்பதே.’
- Doug Larson
('The reason people blame things
on previous generations is that
there's only one other place.')

<>

’இயற்கையின் ஓர் 
அற்புதப் படைப்பு
குடும்பம்.’
- George Santayana
(’The family is one of nature's
masterpieces.’)
<>

’அனைத்து நம் அறிவும் 
நம் பார்வையின் பாற்பட்டது.’
- Leonardo da Vinci.
('All our knowledge has its 
origins in our perceptions.)
<>

'ஏராளமாக சம்பாதிப்பதற்கும் 
செல்வந்தராக இருப்பதற்கும் 
ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.’
- Marlene Dietrich
('There is a gigantic difference
between earning a great deal of
money and being rich.')
<>

’உங்களிடம் வம்பளப்பவர் 
உங்களைப் பற்றியும் 
வம்பளப்பர்.’
- Proverb.
('Who gossips to you will
gossip of you.')
<><><>

Monday, June 8, 2015

அவள் - (கவிதைகள்)




134
நாலு நாளை ஓட்டி விட்டேன்
நீ பேசிய
நாலே வார்த்தைகளைக் கொண்டு.

135
சிந்திவிட்டுப் போனாய்
ஒரு புன்னகை..
மந்திரித்து விட்டாற்போல் நான்.

136
உனக்கு விழி.
எனக்கு வழி.

137
இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்,
என் போல் சிரத்தையாய்
சுற்றுகிற கிரகத்தை.

138
ரொம்பவே வெயிட் போட்டுவிட்டேன்
என்கிறார்கள்.
என்ன செய்ய முடியும்?
உன் நினைவுகளைக் கீழே
இறக்கி வைக்க முடியாதே?

139.
எனக்குத் தெரிந்ததெல்லாம்
மன்னிக்கவும், தெரிவதெல்லாம்
நீ
நீ
நீ.

140.
நான் உன்னை நேசிப்பது அதிகமா,
என்னோடு சேர்த்து
இந்த உலகை நீ
நேசிப்பது அதிகமா?

><><><


Thursday, June 4, 2015

அவர்களுக்கு மட்டும்…

அன்புடன் ஒரு நிமிடம் - 81.


“என்ன செய்யணும்? சொல்லு.” கேட்டார் சாத்வீகன் நண்பனிடம்.
“சென்னையிலிருக்கிற என்னோட ரெண்டு பசங்களையும் போய் ஒரு நடை பார்த்துட்டு வரணும் நீ. இளையவன் அரவிந்த் நல்ல சம்பாதிச்சு வசதியா வாழ்க்கையை சூப்பரா அனுபவிச்சுட்டு இருக்கான். ஆனா ப்ரதீப் இன்னும் அப்படியே முன்னேறாம நாலு டிஜிட் சம்பளத்திலேயே கஷ்டஜீவனம் நடத்திட்டு…  மேலே முன்னேறி சம்பாதிச்சு வாழ்க்கையை அனுபவிக்க எந்த உத்வேகமும் இல்லாம.. ஒரு தகப்பனா எனக்கு மனக்குறை இல்லாம இருக்குமா? அவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லிட்டு வரணும்.”
”அப்படியே,” என்றவர் அடுத்த வாரமே சென்றுவந்தார்.
”பார்த்தியா அந்த வித்தியாசத்தை?”
“ஆமா. இங்கே ஒரு நாள் அங்கே ஒரு நாள் தங்கினேன். ரொம்பவே வித்தியாசம். ஒருத்தன் வாழ்க்கையை பூரணமா அணு அணுவா ரசிக்கிறான். அடுத்தவனோ ஏதோ ஓட்டறான்னுதான் சொல்லணும்.”
”அதான் சொன்னேன். பிரதீப்புக்கு நல்ல எடுத்து சொன்னியா?”
“அவனுக்கு ஏன் சொல்லணும்? இவனுக்கல்லவா? ஏதோ என்னால முடிஞ்ச வரை நல்லாவே எடுத்து சொல்லிட்டுதான் வந்தேன்.”
“ஐயோ நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு…”
“தப்பா புரிஞ்சுக்கிட்டது நீதான்.” அவர் விழிக்க தொடர்ந்தார்.
“அரவிந்த் கிட்ட ஏகப்பட்ட பணம் இருக்கு, சரிதான். படகுக்கார், வில்லா,  அதில நீச்சல் குளம், கர்வ்ட் டி.வி. எல்லாம். பிரதீப்பிடம் அதெல்லாம் இல்லைதான் சின்ன வீடு, ஸ்கூட்டி, ஒரு சாதா டி.வி.தான். ஆனா அவன் இயற்கையிலேயே மாபெரும் பணக்காரனா படைக்கப் பட்டிருக்கிறான். அவன்தான் வாழ்க்கையை நீங்க சொன்ன மாதிரி அணு அணுவா அனுபவிக்கிறான். அரவிந்தால் அது முடியலே. அடிப்படையில் அதற்குத் தேவையான அந்த விஷயம் அவன்கிட்ட சுத்தமா இல்லை. புவர் பாய்!”
“அதென்ன விஷயம்?”
“ரசனை, நண்பா ரசனை! அதுதான் வாழ்க்கையை அனுபவிப்பதற்கான ஆதார தேவை.”
புரிவில்லை அவருக்கு.
“ரெண்டு பேரையுமே நல்ல கவனிச்சேன். அரவிந்த் புதுசு புதுசா ஆடம்பர பொருட்களை வாங்கறதிலும் அதை மற்றவர்களிடம் காட்டி அவங்க அப்ரிஸியேஷனை பெறுவதிலும்தான் குறியா இருக்கானே தவிர தான் வாங்கினதை அலசி அம்சம் அம்சமா அனுபவிக்கிறதில்லை. ஒண்ணொண்ணையும் டேமேஜாயிடாமல் பார்த்துக்கறதிலேயும்…அடுத்து எந்தக் காரை அல்லது எந்த ஆடியோ சிஸ்டம் வாங்கறதுன்னு… இதோ வாங்கிட்டேன் பாரு, எங்கிட்ட இருக்குது பாருங்கிறதுதான் அவன் கோஷமா இருக்கு எப்பவும். அடுத்து என்ன செய்யணும் தன் அந்தஸ்தை கூட்ட, அதுக்கு என்ன செய்யணூம்கிறதைத்தான் எப்பவுமே அவன் மனசிலே யோசிச்சிட்டு அதை நோக்கியே ஓடிட்டிருக்கான். ரெண்டு லட்சம் விலயுள்ள சூப்பர் ஆடியோ சிஸ்டம் அவன் வீட்டில இருக்கு ஆனா அதில அவன் பாட்டு கேட்டு ஆறு மாசம் இருக்கும். அப்புறம் அவன் அதை வைத்திருந்து எதற்கு?
“ஆனா பிரதீப் அப்படியில்லே. ஓட்டை ரேடியோதான். ஆனா அது அவன் காதிலே இசை வெள்ளத்தை பாய்ச்சுக்கிட்டே இருக்கு. இந்த பி.ஜி.எம்மைக் கேட்டீங்களா அந்தப் பாட்டைக் கேட்டீங்களான்னு அவன் ரசிச்சு ரசிச்சு பேசற சந்தோஷம்! பாசிப்பயறு வாங்கிட்டு வர்ற நியூஸ்பேப்பர்ல வர்ற துணுக்கிலேயிருந்து டி.வியில வர்ற விளம்பரம் வரை வரிக்கு வரி ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ரசிச்சு சிலாகிக்கிறதும், விமரிசிக்கிறதும்... அக்கம் பக்கத்து மனுஷங்க கூட தோளில கைபோட்டு அன்னியோன்யமா அளவளாவறதும்… என்ன ஒரு குஷி! நேத்து அரை மணி நேரம் அந்த சின்ன ஓடையைக் கலக்கிட்டான் குளிக்கிறப்ப. என்னா உற்சாகம்! என்னா சிரிப்பு! எதுக்கு அவனுக்கு நீச்சல் குளம்? உலகத்தில சீப்பா கிடைக்கிற விஷயங்களிலும் கடல் அளவு பொக்கிஷங்கள் இருக்கு, ரசனை உள்ளவர்களுக்கு மட்டும்! ஆக அவன் மாபெரும் பணக்காரனா இருக்கிறான், கவலையே வேண்டாம்பா உனக்கு!”
(’அமுதம்’ ஜூலை 2014 இதழில் வெளியானது.) 

Tuesday, June 2, 2015

நல்லதா நாலு வார்த்தை... 47


’வாழ்க்கையை நேசிக்கிறீர்களா?
காலத்தை வீணாக்காதீர்.
காலத்தால் ஆனதன்றோ வாழ்க்கை?' 
- Bruce Lee
('If you love life, don't waste time,
for time is what life is made of.')
<>

'அதிர்ஷ்டத்தை நம்பத்தான் வேண்டும்
வேறெப்படி நமக்குப் பிடிக்காதவரின் 
வெற்றியை விளக்குவது?'
- Jean Cocteau
(‘We must believe in luck. For how else
can we explain the success of those we don’t like?’)
<>

'நிஜமாகவே நீங்கள் படிக்க விரும்பிடும் 
புத்தகம் ஒன்றிருந்து அதை 
இதுவரையில் யாரும் எழுதியிராவிட்டால்
நிச்சயம் அதை நீங்கள் எழுதவேண்டும்.'
- Toni Morrison
('If there's a book you really want to read,
but it hasn't been written yet,
then you must write it.')
<>

’இயற்கையோடான தன் 
ஒவ்வொரு நடையிலும்
தான் தேடுவதைவிட 
மிக அதிகம் பெறுகிறான் ஒருவன்.’
- John Muir
('In every walk with nature one receives
far more than one seeks.')
<>

'விரைந்து தெரிவிக்கும் நன்றி 
வெகு இனிப்பானது.'
- Proverb.
('Swift gratitude is the sweetest.')
<>

’உற்சாகமே வெற்றியின் 
உண்மையான ரகசியம்.’
- Walter Chrysler
(’The real secret of success is enthusiasm.’)
<>

’செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுவன
செய்தே கற்கிறோம்.’
- Aristotle.
(’What we have to learn to do, 
we learn by doing.)


><><><><