அன்புடன் ஒரு நிமிடம் - 81.
“என்ன செய்யணும்? சொல்லு.” கேட்டார் சாத்வீகன் நண்பனிடம்.
“சென்னையிலிருக்கிற என்னோட ரெண்டு பசங்களையும் போய் ஒரு நடை பார்த்துட்டு வரணும் நீ. இளையவன் அரவிந்த் நல்ல சம்பாதிச்சு வசதியா வாழ்க்கையை சூப்பரா அனுபவிச்சுட்டு இருக்கான். ஆனா ப்ரதீப் இன்னும் அப்படியே முன்னேறாம நாலு டிஜிட் சம்பளத்திலேயே கஷ்டஜீவனம் நடத்திட்டு… மேலே முன்னேறி சம்பாதிச்சு வாழ்க்கையை அனுபவிக்க எந்த உத்வேகமும் இல்லாம.. ஒரு தகப்பனா எனக்கு மனக்குறை இல்லாம இருக்குமா? அவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லிட்டு வரணும்.”
”அப்படியே,” என்றவர் அடுத்த வாரமே சென்றுவந்தார்.
”பார்த்தியா அந்த வித்தியாசத்தை?”
“ஆமா. இங்கே ஒரு நாள் அங்கே ஒரு நாள் தங்கினேன். ரொம்பவே வித்தியாசம். ஒருத்தன் வாழ்க்கையை பூரணமா அணு அணுவா ரசிக்கிறான். அடுத்தவனோ ஏதோ ஓட்டறான்னுதான் சொல்லணும்.”
”அதான் சொன்னேன். பிரதீப்புக்கு நல்ல எடுத்து சொன்னியா?”
“அவனுக்கு ஏன் சொல்லணும்? இவனுக்கல்லவா? ஏதோ என்னால முடிஞ்ச வரை நல்லாவே எடுத்து சொல்லிட்டுதான் வந்தேன்.”
“ஐயோ நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு…”
“தப்பா புரிஞ்சுக்கிட்டது நீதான்.” அவர் விழிக்க தொடர்ந்தார்.
“அரவிந்த் கிட்ட ஏகப்பட்ட பணம் இருக்கு, சரிதான். படகுக்கார், வில்லா, அதில நீச்சல் குளம், கர்வ்ட் டி.வி. எல்லாம். பிரதீப்பிடம் அதெல்லாம் இல்லைதான் சின்ன வீடு, ஸ்கூட்டி, ஒரு சாதா டி.வி.தான். ஆனா அவன் இயற்கையிலேயே மாபெரும் பணக்காரனா படைக்கப் பட்டிருக்கிறான். அவன்தான் வாழ்க்கையை நீங்க சொன்ன மாதிரி அணு அணுவா அனுபவிக்கிறான். அரவிந்தால் அது முடியலே. அடிப்படையில் அதற்குத் தேவையான அந்த விஷயம் அவன்கிட்ட சுத்தமா இல்லை. புவர் பாய்!”
“அதென்ன விஷயம்?”
“ரசனை, நண்பா ரசனை! அதுதான் வாழ்க்கையை அனுபவிப்பதற்கான ஆதார தேவை.”
புரிவில்லை அவருக்கு.
“ரெண்டு பேரையுமே நல்ல கவனிச்சேன். அரவிந்த் புதுசு புதுசா ஆடம்பர பொருட்களை வாங்கறதிலும் அதை மற்றவர்களிடம் காட்டி அவங்க அப்ரிஸியேஷனை பெறுவதிலும்தான் குறியா இருக்கானே தவிர தான் வாங்கினதை அலசி அம்சம் அம்சமா அனுபவிக்கிறதில்லை. ஒண்ணொண்ணையும் டேமேஜாயிடாமல் பார்த்துக்கறதிலேயும்…அடுத்து எந்தக் காரை அல்லது எந்த ஆடியோ சிஸ்டம் வாங்கறதுன்னு… இதோ வாங்கிட்டேன் பாரு, எங்கிட்ட இருக்குது பாருங்கிறதுதான் அவன் கோஷமா இருக்கு எப்பவும். அடுத்து என்ன செய்யணும் தன் அந்தஸ்தை கூட்ட, அதுக்கு என்ன செய்யணூம்கிறதைத்தான் எப்பவுமே அவன் மனசிலே யோசிச்சிட்டு அதை நோக்கியே ஓடிட்டிருக்கான். ரெண்டு லட்சம் விலயுள்ள சூப்பர் ஆடியோ சிஸ்டம் அவன் வீட்டில இருக்கு ஆனா அதில அவன் பாட்டு கேட்டு ஆறு மாசம் இருக்கும். அப்புறம் அவன் அதை வைத்திருந்து எதற்கு?
“ஆனா பிரதீப் அப்படியில்லே. ஓட்டை ரேடியோதான். ஆனா அது அவன் காதிலே இசை வெள்ளத்தை பாய்ச்சுக்கிட்டே இருக்கு. இந்த பி.ஜி.எம்மைக் கேட்டீங்களா அந்தப் பாட்டைக் கேட்டீங்களான்னு அவன் ரசிச்சு ரசிச்சு பேசற சந்தோஷம்! பாசிப்பயறு வாங்கிட்டு வர்ற நியூஸ்பேப்பர்ல வர்ற துணுக்கிலேயிருந்து டி.வியில வர்ற விளம்பரம் வரை வரிக்கு வரி ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ரசிச்சு சிலாகிக்கிறதும், விமரிசிக்கிறதும்... அக்கம் பக்கத்து மனுஷங்க கூட தோளில கைபோட்டு அன்னியோன்யமா அளவளாவறதும்… என்ன ஒரு குஷி! நேத்து அரை மணி நேரம் அந்த சின்ன ஓடையைக் கலக்கிட்டான் குளிக்கிறப்ப. என்னா உற்சாகம்! என்னா சிரிப்பு! எதுக்கு அவனுக்கு நீச்சல் குளம்? உலகத்தில சீப்பா கிடைக்கிற விஷயங்களிலும் கடல் அளவு பொக்கிஷங்கள் இருக்கு, ரசனை உள்ளவர்களுக்கு மட்டும்! ஆக அவன் மாபெரும் பணக்காரனா இருக்கிறான், கவலையே வேண்டாம்பா உனக்கு!”
(’அமுதம்’ ஜூலை 2014 இதழில் வெளியானது.)
5 comments:
அட்டகாசமான பதிவு... பாராட்டுகள்...
// ரசனை - வாழ்க்கையை அனுபவிப்பதற்கான ஆதார தேவை.. // ஆகா..!
வணக்கம்
ஐயா
கதை நன்றாக உள்ளது அமுதம் இதழில் வெளிவந்தமைக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரசனையில் அடங்கியிருக்கிறது மகிழ்ச்சியின் இரகசியம் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
நல்ல பதிவு! அனைவரும் படிக்க வேண்டிய பதிவு! நன்றி நண்ப!
அசாத்தியமான ஒரு கதை! வாழ்த்துகள். கருத்து அருமை. இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒன்று....
ரசனை - வாழ்க்கையை அனுபவிப்பதற்கான ஆதார தேவை// இது இது தான் இப்போதைய தலைமுறையினருக்குத் தேவை....அனைவருக்குமே!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!