Sunday, June 14, 2015

நம்பிக்கை மனதில்…

அன்புடன் ஒரு நிமிடம்... 82

“நாளைக்கு இண்டர்வியூ எனக்கு. ஆசீர்வாதம் வாங்க வந்தேன் மாமா…” என்றான் மது. அவர் தங்கை மகன்.
“எப்படி தயார் பண்ணியிருக்கே?”  கேட்டார் சாத்வீகன்.
“ரொம்ப பயமா இருக்கு. இது நாலாவது. இதிலேயும் கிடைக்காட்டி அவ்வளவுதான். ஒரு கம்பெனியிலும் கூப்பிடமாட்டான் அப்புறம்.”
“நீதான் நல்ல இண்டெலிஜண்ட் ஆச்சே? முதல்ல அவங்க வெச்ச டெஸ்ட்ல எல்லாம் அமர்க்களமா ஸ்கோர் பண்ணியிருக்கே.”
“அதெல்லாம் டெஸ்ட் எழுதும்போது சரி, ஆனா இண்டர்வியூவில கொஞ்சம் நெர்வஸாயிடறேன்போல. சமயத்தில பதில் சரியா சொல்ல வரலே.”
”விடு. போகப்போக சரியாயிரும்.” கையிலிருந்த பாட்டிலைப் பார்த்தார். காலியாயிருந்தது. அவனிடம் நீட்டினார். ”உள்ளே கிச்சன் மேடையில குடிதண்ணீர் இருக்கும் பானையில். இதில ஃபுல்லா விட்டு எடுத்திட்டு வாயேன்.”
வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான். பானையில் தண்ணீர் இருந்தது. பாட்டில் வாய் சின்னதாய் இருக்கவே, நிமிடம் யோசித்தவன் பக்கத்திலிருந்த சிங்க் மேலாக அதைப் பிடித்துக்கொண்டு மறு கையால் பானையைக் கவிழ்த்தான். சிந்தாமல் பாய்ந்தது..
பாதி நிரம்புகையில் பின்னால் சாத்வீகனின் குரல் கேட்டது. “பார்த்துடா. சிங்க் இப்பதான் வைத்துப் பூசினது. நனைந்துடாமல்…”
”ஓ, அப்படியா?” என்றவன் உஷாரானான். மெதுவாக இன்னும் கவனமாக ஊற்ற ஆரம்பித்தான்.
சிந்தியது. என்ன முயன்றும் சிந்தாமல் ஊற்ற முடியவில்லை. கொஞ்சம் அதிகமாகவே…
“ஐயோ மாமா…” என்றான்
“பரவாயில்லே விடு “
ஹாலுக்கு வந்ததும்… ”உட்கார். இப்ப நடந்ததில ஒரு விஷயம் கவனிச்சியா? பானையில இருக்கிற தண்ணீரை சின்ன நெக் கொண்ட இந்த பாட்டில்ல ஊத்தணும். நீ என்ன பண்ணினே?  யோசித்து சிங்க் மேலே வைத்துக்கொண்டு ஊற்றினாய். சிந்தாது, சிந்தினாலும் கீழே சிங்க்கில்தான் விழும் என்று. ஒரு துளியும் கீழே விழலே. ஆனா நான் வந்து சிங்க் புதுசா பதிச்சதுன்னு சொன்னதும் கீழே சிந்தியது. அதே நீ தான். அதே சிங்க்தான். சூழ் நிலை அப்படியேதான் இருக்கிறது. ஆனா இப்ப புதுசா ஒரு தடுமாற்றம். அது ஏன் வந்தது? அது வரை அனாயாசமாக செய்த விஷயத்தை இப்ப ஏன் செய்ய முடியலே?”
அவன் யோசித்தான்
”சொல்றேன். அதுவரை உன் மேலிருந்த உன் நம்பிக்கை உனக்குப் போய்விட்டது. அதான் காரணம். ஆனால் லாஜிகலாக பார்த்தாயானால் அது அணுவேனும் குறையத் தேவையில்லையே? இதேதான் இண்டர்வியூவிலும் உனக்கு நடக்கிறது.  எல்லா பதிலும் நல்லாவே சொல்ல வரும் உனக்கு. எழுதியிருக்கே டெஸ்ட்லே எல்லாம். ஆனா சூழ் நிலை மாறி அது நேருக்கு நேர் என்று வரும்போது உன்னையறியாமல் உன் நம்பிக்கை காணாமல் போய்விடுது. அவ்வளவுதான். அது போக வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதை நீ நன்றாய் உணர்ந்து கொண்டால் போதும்.”
அவன் முகத்தில் நம்பிக்கை மலர்ந்தது
(’அமுதம்’ ஜூலை 2014 இதழில் வெளியானது.)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புரிய வைத்த விதம் அருமை...

Yaathoramani.blogspot.com said...

எளிய ஆயினும் அற்புதமான விளக்கம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

மதுவை உணர வைத்த விதம் அருமை.

இராய செல்லப்பா said...

அருமையான படிப்பினை கதை. நம்பிக்கை ஒன்றே தாரக மந்திரமாகக் கொண்டு முன்னேறியவர்கள் தாம் உலகில் மிகுதி. சிறப்பான கதை. - இராய செல்லப்பா

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கதை! நம்பிக்கை அதுதானே வாழ்க்கை! அருமை!

”தளிர் சுரேஷ்” said...

உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!