Friday, May 30, 2014

அவள்... 3



 
 
11.

உன்னைக் கண்டதும்

மனதிலிருந்து உதிர்ந்த

வார்த்தைகளை

எடுத்துக் கோர்க்கிறேன்

ஓர் மாலையாக.

 

12.

எப்படி எழுதப் போகிறேன்

என் அடுத்த கவிதையை

என்பது தெரியாது,

எப்படியும் அதில்

இருப்பாய் நீ

என்பது மட்டும் தெரியும்.

 

13

வீசியதென்னவோ நீ

ஒரு பார்வைதான்.

புயலுக்கு சமானமாய்

இருக்கிறது சேதம்.

 

14

சிரிக்கப் போகிறாயா

கொஞ்சம் இரு

அணிந்து கொண்டுவிடுகிறேன் என்

கவச குண்டலங்களை!

 

15

உன் தெற்றுப்பல்லை

மட்டும் நம்பாதே,

நீ சிரிக்கும்போது

அது வேறு

தனியாக சிரிக்கிறது.

 

><><>< 

Friday, May 23, 2014

நல்லதா நாலு வார்த்தை - 31


 
'மகிழ்வோடிருப்பவர்
 மற்றவரையும்
 மகிழ்வுறச் செய்வர்.'
 <>
- Anne Frank
 (‘Whoever is happy will make others happy too.’)

 'அன்புடன் செய்
அனைத்தையும்!’
<>
- Og Mandino
(‘Do all things with love.’)
 

'எதையும் நேராக்கிவிடும்
வளைவே புன்னகை.’
<>
-Phyllis Diller
(‘A smile is a curve that sets everything straight.’)

 
'நம்பலாமா ஒருவரை என்பதை
நன்கறிய நல்ல வழி அவரை
நம்புவதே.'
<>
- Ernest Hemingway
('The best way to find out if you can
trust somebody is to trust them.')


 
உண்மையான ஒரே விவேகம்
ஒன்றும் நாம் அறியோம்
என்பதறிவதே.’
<>
- Socrates
(‘The only true wisdom is in
knowing you know nothing.’)


 
'கையில் நல்ல சீட்டுக்களை
வைத்திருப்பதல்ல வாழ்க்கை;
கையிலிருக்கும் சீட்டுக்களை வைத்து
கவினுற விளையாடுவது!’
<>
- Josh Billings
(‘Life consists not in holding good cards but
in playing those you hold well.’)


 
'இயலும் போதெல்லாம்
இரக்கமுற்றிரு.
இயலும் எப்போதும்.’
<>
- Dalai Lama
(‘Be kind whenever possible. It is always possible.’)


 
><><><><

(படம் : நன்றி: கூகிள் )

Monday, May 19, 2014

அவள்... 2


 
அவள்...

6
எங்கோ சந்தித்த நம்
இருவர் வாழ்வின்
சில நொடிகள்
இரண்டறக் கலந்துவிட்டன
எங்கும் போகமுடியாமல்
நாம்.


7
எதிர்பார்க்கும் கண்ணில்
தெரிகிறது
என் பிம்பம்
நான்
இல்லாத போதும்.
 

8
நீ
படிக்கக் கையில்
எடுத்ததும்
என் கவிதைகள்
நாணிக் காணாமல் போயின.


9
இதயத்தைப்
பக்க அடையாளமாய்
வைக்கிறேன்
உன்னைப் பார்த்த
கணத்தின் மீது.


10.

இடம் வலம்,
மேல் கீழ்
என்று எல்லா விதத்திலும்
திருப்ப முடிந்தது
என் பார்வையை
உன்னைப் பார்ப்பது
வரையில்.

><><><

(படம்: நன்றி: கூகிள்)

Sunday, May 18, 2014

நல்லதா நாலு வார்த்தை... 30


 


'விஷயங்களைத் தள்ளிப்போடுவதை
நிறுத்தப் போகிறேன்,
நாளையிலிருந்து.'
<>
- Sam Levenson
(' I'm going to stop putting things off, starting tomorrow. ')
 

'எதை மட்டுமே விடமுடியாது
எனத் தெரிந்திருப்பதே
எளிமை.'
<.
-Paul von Ringelheim
('Simplicity means knowing what can't be left out.')
 

'விரோதிகளை வெல்பவனை விடத் தன்
விருப்பங்களை வெல்பவனையே பெரு
வீரனென்பேன் யான்.'
<.
-Aristotle
('I count him braver who overcomes his
desires than him who overcomes his enemies.')
 

'வார்த்தைகள்
விடை பெற்றுக் கொண்டதும்
இசை ஆரம்பிக்கிறது'.
<>
-Heinrich Heine
('When words leave off, music begins.')

 
'வாழ்க்கையிலிருந்து அதிக பட்சம்
வாரிக்கொள்ள ஒரு வழி,
அதை ஓர் சாகசமாக நோக்குவதே!'
<>
- William Feather
('One way to get the most out of life
is to look upon it as an adventure.')

 
'வேலைக்கு முன்
வெற்றி வரும் ஒரே இடம்:
அகராதி.'

-Vince Lombardi
('The only place success comes
before work is in the dictionary.')

 
'தன்னைக்
குற்றம் காணாதே!
போற்றிக் கொள்ளாதே!'

- Plutarch
('Neither blame or praise yourself.')
><><><><
(படம்: நன்றி: கூகிள்)

Wednesday, May 7, 2014

தொடங்குவது தொடரும்...


அன்புடன் ஒரு நிமிடம் - 58

"பலத்த யோசனை போலிருக்கு!" என்றார் சாத்வீகன்.

'மோட்டுவளை'யிலிருந்து பார்வையை இறக்கினான் அபிஜித். 'இவரிடமும் கேட்கலாமே?' புன்னகைத்தான். "ஒரு சாய்ஸ் தீர்மானிக்கணும். காலையிலிருந்தே யோசனை. நீங்க சொல்லுங்களேன் தாத்தா..."

"சொன்னால் அது என்னோட சாய்ஸாக அல்லவா இருக்கும்?"

"அத்தனைக்கத்தனை பெட்டராகவும் இருக்குமே?" சிரித்தான். "இன்னிக்கு லீவாச்சே, உருப்படியா ஒரு விஷயம் செய்யலாம்னு நினைச்சேன். ரெண்டு முக்கியமான காரியம், ஏற்கெனவே மனசிலே போட்டு வெச்சிருந்தது, இருந்தது. அதிலே எதை செய்யறதுன்னுதான் தீர்மானிக்க முடியலே...."

"ஏன், ரெண்டையுமே..." என்று ஆரம்பித்தவர் வாயை மூடிக் கொண்டுவிட்டார். அதில் ஒன்றைத்தான் செய்யணும் என்பதில் அவன் உறுதியாக இருக்கிறான் என்பதுதான் எழுதாத குறையாக முகத்தில் தெரிகிறதே ... "சரி, ஷூட் தம்."

"ஒண்ணு இந்த வெண்டைக்காய் வித்துக்களை விதைக்கிறது. நம்ம வீட்டு முற்றத்தில சும்மா கிடக்கிற அந்த இடத்தில..."

"சின்ன வேலைதான். அடுத்தது?"
"
அது கொஞ்சம் கஷ்டமானது. இந்த நாலு புத்தகத்தையும் படிச்சுப் பார்த்து அஞ்சு பக்கத்தில ஒரு கட்டுரை எழுதணும்."

யோசிக்க ஒரு நிமிட அவகாசம் கூட எடுத்துக் கொள்ளவில்லை அவர் . " கிளீயர் சாய்ஸ். இதில குழம்ப என்ன இருக்கு? சரி வேறே யாரிடமாவது எதைச் செய்யறதுன்னு கேட்டியா?"

"மூணு பேரிடம்! அம்மா, அப்பா, அப்புறம் என் ஃப்ரண்டு வேணு...."

"என்ன என்ன சொன்னாங்க?"

"எல்லாருமே ஒரே மாதிரி... கட்டுரை எழுதறதைத்தான்! தெரியும் எனக்கு, உங்க சாய்ஸும் அதுவாய்த்தான் இருக்கும்."

"நோ. முதலாவது! அந்த வெண்டைக்காய் விதைக்கிறது."

இவனால் நம்ப முடியவில்லை. ஆச்சரியம் மின் விசிறியாய் மனதில் சுழன்றது.

எல்லாருமே அவனிடம், ஒரு விஷயம் உருப்படியாய் செய்யணும்னு தீர்மானிச்சுட்டே. அப்படீன்னா இரண்டில் எது ரொம்ப கஷ்டமானதோ, முக்கியமானதோ அதை செய்யறது தானே திருப்தி தருவது? என்று அழகாய்க் காரணம்கூட சொன்னார்கள்.

அதை சொன்னான் அவரிடம்.

"அஃப் கோர்ஸ், அவங்க சொன்னது சரிதான் ஒரு கோணத்தில். ஆனா அவங்க ஒரு விஷயத்தைக் கவனிக்க மறந்துட்டாங்க. கட்டுரை எழுதறது கஷ்டமான வேலைதான். சிறப்பானதும் கூட. மூளையை நல்ல ட்ரில் வாங்கறதுதான். ஆனா அந்த வேலையை நீ செஞ்சிட்டா அது இன்னியோட முடிஞ்சிடுது. வெண்டைக்காய் விதைக்கிறது வெகு சிறிய காரியம். என்றாலும் அது ஒரு தோட்டத்தின் தொடக்கம். ஒரு பிராஜெக்டின் ஆரம்பம். நாளையிலிருந்து அதில் உனக்கு தினமும் வேலையும் பொறுப்பும் இருக்கு. விதைக்கிறதுன்னு இன்னிக்கு நீ கமிட் செய்துவிட்டால் தொடர்ந்து உன் உழைப்பையும் யோசனையையும் செலுத்தணும். பின்னாட்களில் வரும் திருப்தி அளவிட முடியாதது. ஆக ஒண்ணைத்தான் என்றால் அதைத் தேர்ந்தெடுக்கிறதுதானே உத்தமமான சாய்ஸா இருக்கும்? அந்த இன்னொரு முக்கியமான விஷயம்... அதை நீ எப்படியும் செய்து விடுவாய். ஆனால் இதை நீ தொடங்கினால் மட்டுமே தொடர்ந்து அந்த விஷயம் நடக்கும்."

யோசித்தான். 'அட, இதை யோசிக்கலியே?'

(’அமுதம்நவம்பர் 2013 இதழில் வெளியானது.’)
><><
(படம் - நன்றி: கூகிள்)