Wednesday, April 18, 2018

அற்புதம் அருகேயே...

அன்புடன் ஒரு நிமிடம் - 124

அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் தன் வீட்டில் அதிகாலையில் கண் விழித்ததுமே எதிரில் கையில் பையுடன் டவுன் நண்பர் சாத்வீகன் நின்றதில் அசந்தார் வேலாயுதம்.

"எப்படி வந்தீங்க? அதும் இந்நேரம்..."

"பாசஞ்சர் ட்ரெயின். ஸ்டேஷன்ல ஜட்கா வண்டி. ஏன் ஆச்சரியம்?"

"என் கவலையோட வெளிப்பாடுதான் அந்த ஆச்சரியம்...  இந்தக் கிராமத்தில செட்டில் ஆனதிலேர்ந்து எனக்கு விசிட்டர்கள், விருந்தாளிகள் ஒரேயடியா குறைஞ்சு போச்சு. யாரும் இங்கே எட்டிப் பார்க்கிறதில்லே.. அப்படி நெருங்கிப் பழகின சொந்த பந்தமெல்லாம் இப்ப என்னை அப்படியே ஒதுக்கிட்டாங்க.”

”என்ன காரணம்?”

”வேறென்ன, இந்தக் கிராமத்தில இருக்கிற வசதிக் குறைவுதான். இத்தனைக்கும் யாராவது இங்கே வர்றேன்னு சொன்னால் போதும், நான் மதுரை ஜங்ஷனுக்கே ஒரு கார் அனுப்பி கூட்டிவர்றேன். பக்கத்து டவுனிலிருந்து வேளா வேளைக்கு ஹோட்டல்லே நல்ல நல்ல டிஷ் எல்லாம் வாங்கி உபசரிக்கிறேன். நெட் கனெக்‌ஷன் ஏற்பாடு செய்யறேன். வென்னீர், ஏ.சி.ன்னு வசதி பண்றேன். கொடைக்கானல், குற்றாலம்னு டூர் போக ஏற்பாடு செய்யறேன். அப்படியிருந்தும்...”

”ஓ, அதெல்லாம் வேறே செய்யறீங்களாக்கும்.. பேஷ், பேஷ்,” என்றாரே தவிர அங்கிருந்த ஒரு வாரமும் அதையெல்லாம் வேண்டாமென்று தவிர்த்துவிட்டார் சாத்வீகன். வீட்டில் கிடைப்பதையே சாப்பிட்டுக் கொண்டார். ஊருக்குள்ளேயே சுற்றினார். 

கிளம்புகையில் ”உன்னை சரியாவே உபசரிக்க முடியலியே...” என்று வருத்தப்பட்டார்  வேலாயுதம். ”இத்தனை சிரமமிருந்தால் எப்படி நீ மறுபடி இந்தப்பக்கம் வருவாய்?”

”அதனால்தான் வருவேன்,” என்றார் சாத்வீகன். ”மற்றவங்க ஏன் விரும்பி வர்றதில்லேன்னு இப்ப புரியுது எனக்கு. அவங்களுக்கு அங்கே கிடைக்கிற விஷயங்களையே இங்கே நீ ஏற்பாடு செய்து கொடுப்பதில் அவங்களுக்கு என்ன விசேஷம் தென்படும்? வீட்டுத் தோட்டத்தில இயற்கை உரம் போட்டு நீங்க வளர்க்கிற காய்கறிகளோட சுவை எங்களுக்கு புதுசு. வயல் கரைகளோட காலாற போகிற வாக் புதுசு.  கட்டிலை எடுத்து முற்றத்தில போட்டு காத்தாட நெடுநேரம் பேசிட்டேயிருந்து கண்ணசறது தனி அனுபவம். இண்டர்நெட்டில் கிடைக்காத பல்லாங்குழியும் தாயமும் விளையாடறது குஷி. பக்கத்து மலையில பாறைப்படிகளில் ஏறி அந்த சுனையில குளிச்சுட்டு அங்கேயே பொங்கி சாப்பிட்டு வர்றதில ஒரு நாள் ஒரு நொடியாவது அற்புதம். இதெல்லாம் விட்டிட்டு நீ எங்களுக்கு எங்க இடத்தில கிடைக்கிற அதே சௌகரியங்களை அப்படியே இங்கே ஏற்பாடு செய்து கொடுத்தால் அதில் எங்களுக்கு என்ன த்ரில் கிடைக்கும்? காட்சி மாறாமல் இடம் மட்டும் மாறினால் போதுமா ரசனைக்கு?”

”அட, இப்படி நான் யோசிக்கலையே...’

’யோசிக்கவே வேணாம். நீ  அற்புதமான இடத்தில் அருமையான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கே. அதை நாங்க புரிஞ்சுக்க, அந்த அனுபவங்களை பகிர்ந்துக்க வழி, நீ எதுவும் யோசிக்காம 
இருக்கறதுதான்.”

><><
('அமுதம்' செப்.2015 இதழில் வெளியானது)

Thursday, April 12, 2018

நல்லதா நாலு வார்த்தை- 88

’ஆரோக்கியம், தூக்கம், செல்வம் மூன்றும்
அனுபவிக்கப்பட வேண்டும் நிஜமாகவெனில்
அவை குறுக்கிடப்பட வேண்டும்.’
- Jean Paul Richter
('For sleep, riches and health to be truly enjoyed,
they must be interrupted.')
 
<>

செய்து முடிக்கப்பட்ட சிறு செயல்கள்
திட்டமிடப்பட்ட பெருஞ்செயல்களைவிட சிறந்தவை.'
- Peter Marshall
('Small deeds done are better than great deeds planned.') 
<>

எல்லாருக்கும் நண்பன்
எவருக்கும் நண்பனில்லை.'
- Aristotle
('A friend to all is a friend to none.') 
<>
’நாளை நீ நடத்து, அல்லது 
நாள் உன்னை நடத்திவிடும்.’
- Jim Rohn
('Either you run the day or the day runs you.') 
<>
ஆழமான காயம் ஒன்று ஏற்படுத்தப்படும்போது
அதை நாம் மன்னிக்காதவரையில்
அதிலிருந்து மீள்வதில்லை.’
-Alan Paton
(”When a deep injury is done to us
we never recover until we forgive.’)
 
<>
நம்மை மகிழ்வாய் வைத்திருக்க
நமக்கு வேண்டியதெல்லாம்
ஆர்வம் கொண்டிருக்க ஓர் விஷயம்தான்.'
- Charles Kingsley
('All we need to make us really happy
is something to be enthusiastic about.')
 
<>
அழகு என்பது உலகில் 
’அழகானதி’ல் மட்டுமே இருப்பது அல்ல.
-Christopher Hawke
('Beauty in the world is not always in the 'beautiful.') 
<>
‘ஒவ்வொரு வீட்டுக்கும் வேண்டும் 
ஒரு பாட்டி.’
-Louisa May Alcott
(’A house needs a grandma in it.’)
<>
பிள்ளைகள் வீட்டைப் பிரிந்தவுடன்
புரிந்துகொள்கிறோம் அவர்களை நிறைய.’

-Lucille Ball
('You see much more of your children once they leave home') 
<>
'அமைதி, நிஜம் இரண்டிலொன்றை தேர்வு செய்ய 
அனைவர் மனதுக்கும் சந்தர்ப்பம் அளிக்கிறார் ஆண்டவர்.
எது பிடிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுங்கள் --
இரண்டையும் பெற ஒருபோதும் முடியாது.'
- Emerson
('God offers to every mind a choice between repose and truth,
take which you please - you can never have both.')
 
><><><