Thursday, April 30, 2026

அறிவியலின் அந்தப்புரங்களில்...


ஒன்றிலிருந்து நூறு வரை உள்ள எண்களின் கூட்டுத் தொகையை சொல்லுங்கன்னு கேட்டால் ஒன்றிலிருந்து பத்து நிமிடமாவது எடுத்துக்கொள்கிறீர்கள் இல்லையா? ஒரு நிமிடம் கூட எடுத்துக் கொள்ளவில்லை அந்தப் பையன். அசந்து விட்டார் ஆசிரியர். எப்படி? இறுதி பாராவில்.
கணிதத்தில் ஏற்பட்ட ஏகப்பட்ட முன்னேற்றங்களுக்கு காரணமான இந்த ஜெர்மானியர் ஆகப்பெரிய கணித மேதை என்று அழைக்கப்படுகிறார். ஆனாலும் பாவப்பட்ட அம்மாவுக்கு அவரைப் படிக்க வைக்க வசதியின்றி பிரன்ஸ்விக் பிரபுவை உதவி கேட்க வேண்டியதாக இருந்தது.
Carl Friedrich Gauss (1777 - 1855)..... இன்று பிறந்த நாள்! (எழுதப் படிக்கத் தெரியாத அம்மா சொன்ன குறிப்பை வைத்து ‘கணக்குகளை’ப் போட்டு அவரே கண்டுபிடித்தாராம் தன் பிறந்த நாளை என்பாங்க!)
மூன்று வயதில் அப்பா போட்ட தப்புக் கணக்கு ஒன்றைத் திருத்தியது அவர் காட்டிய பல ஆச்சரியங்களில் ஒன்று. ப்ரைம் நம்பர்கள் தோன்றும் முறையை கண்டுபிடித்தது 15 வயதில் என்றால் 19 வயதில் பதினேழு கட்ட ரெகுலர் polygon-ஐ வெறும் காம்பஸ், ஸ்கேல் வைத்துப் போட்டுக் காட்டினார்.
Fundammental Theory of Algebra வை நிருபித்த போது வயது 22. அடுத்த 2 வருடத்தில் கணித உலகை பல அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற ’Disquistiones Arithmmeticae’ புத்தகத்தை எழுதினார்.
Least square method-ஐ வரையறுத்ததோடு அதை வைத்து வரைந்து, விரைந்து கண்டுபிடித்தார் விண்வெளியில் சஞ்சரிக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையை அளவிடுவதை. அறிவியலின் ராணி கணிதம் என்றவர் அந்தக் கணிதத்தின் ராணி என்ற நம்பர் தியரியில் புகுந்து விளையாடினார்.
மின்னல் மாதிரி ஒரே ஒரு முறை கண்ணில் பட்டுச் சென்ற Ceres உபகிரகம் அப்புறம் எப்போ அப்பியர் ஆகும்னு சொன்னாரோ அப்போ தப்பாமல் ஆனது அது! சுமார் 200 வருடத்திற்கு முன் Modular Arithmetic இல் அவர் எழுதியது இன்று கம்ப்யூட்டர் சயின்ஸில் உதவுகிறது..
அறிவியலின் அந்தப்புரங்களில் ஒன்றிலிருந்து ஒன்றாக சுற்றித் திரிந்தவர் மின்காந்தத் தோட்டத்தில் சாதித்ததை நாம் மறந்து விடவில்லை. மேக்னெட்டிக் இண்டக் ஷனை அளப்பதற்கான யூனிட்டுக்கு Gauss என்று இவர் பெயர் தான் இட்டிருக்கிறோம் இல்லையா?
தன் வழிமுறைகளை விலாவாரியாக எழுதி வைத்துவிட்டு போகாதது, தன் பசங்களை அறிவியல் பக்கம் வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதையெல்லாம் சொல்வார்கள், அதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாமே? மேதைகளின் பாதைகளில் வாதைகள் ஆயிரம் இருக்கலாம்…
Quotes?
‘அறிவது அல்ல, கற்றுக்கொள்வதே; அடைவது அல்ல, முயற்சிப்பதே; அங்கே இருப்பது அல்ல, அங்கே செல்வதே ஆகப் பெரும் சந்தோஷம் தருவது!’
‘ஒரு விஷயத்தைத் தெளிந்தறிந்து சோர்ந்தவுடன் அதிலிருந்து விலகுகிறேன், மறுபடியும் அறியாமையின் இருளுக்குள் செல்ல.’
‘ஒருபோதும் திருப்தி அடையாததே மனிதனின் இயல்பு. ஒன்றைக் கட்டி முடித்தான் என்றால் அதில் அமைதியாக உறைவதில்லை, அடுத்ததைக் கட்டத் தொடங்குகிறான்.’
‘மிகக்குறைந்த வார்த்தைகளில் எத்தனை அதிகம் சொல்ல முடியுமோ அத்தனை சொல்லும் வரை நான் திருப்தி அடைவதில்லை. சுருக்கமாக எழுதுவது, நீளமாக எழுதுவதைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.’
விடை: அவன் செய்ததெல்லாம் 50 -ஐ 101 ஆல் பெருக்கியதுதான். அத்தனை எண்களையும் 1+100, 2+99, 3+98 இப்படி அடுக்கிக் கொண்டே வந்தால் மொத்தம் ஐம்பது 101 கள் தானே வரும்? அப்புறம் என்ன, ஐந்தே விநாடியில் பெருக்கி சொல்ல வேண்டியதுதானே, 5050 என்று?

Tuesday, April 28, 2026

மூன்று முறை சிறந்த நடிகர்...


ஆஸ்கார் சரித்திரத்திலேயே மூன்று முறை சிறந்த நடிகர் ஆஸ்கார் வாங்கிய ஒரே ஒருவர் தான் உண்டு. மார்லன் பிராண்டோ? இல்லை. ஸ்பென்சர் டிரேஸி? டஸ்டின் ஹாஃப்மேன்? ரிச்சர்ட் பர்ட்டன்? பீட்டர் ஓ டூல்? பால் நியூமேன்? இவங்க யாரும் இல்லை.
Daniel Day-Lewis ஆம், ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை அகாடெமி அவார்ட். (My Left Foot 1990, There will be Blood 2008, Lincoln 2013)
இந்தத் தலைமுறையின் உலகச் சிறந்த நடிகராக கருதப் படுகிறவர்... இன்று பிறந்த நாள்!
ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’யில் நடித்தவர். ஸ்பீல்பர்க்கின் 'லிங்கனிலு'ம்!
ஏற்றுக் கொண்டதெல்லாம் பெரும்பாலும் உணர்ச்சிகரமான, ஆர்ப்பரிக்கிற ரோல்கள். ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் நாடக நடிகராக இருந்து வந்தவர், நாடகத்தின் நேரடி த்ரில்லை திரையில் அனுபவிக்க வைத்து விடுவார்.
ஆக்ரோஷமாக கத்துவதில் ஓர் அழகு, அழகாக உச்சரிப்பதில் ஓர் அமரிக்கை, அமரிக்கையாக காதலிப்பதில் ஒரு ஸ்டைல்!
சிறுவயதில் மற்ற பசங்களால் கேலி செய்யப்படுவதைத் தவிர்த்து தன் நேரத்தை மிமிக்ரி செய்வதில் செலவழித்ததுதான் நடிகர் ஆவதற்கு அடித்தளமிட்டது.
வெரைட்டி தான் இவர் forte. ரொம்பவே ஸெலக்டிவ், கேரக்டர்களைத் தேர்ந்தெடுப்பதில். விதவிதமான கதாபாத்திரங்களிடையே வித்தியாசத்தை அனாயாசமாக காட்டுவார்.
நடிப்பில் துடிப்பைக் கொண்டுவர இவர் எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு எல்லை இல்லை. ‘The Ballad of Jack and Rose’ படத்தில் மனைவியைப் பிரிந்து பதின்ம வயது மகளுடன் தனியே வாழும் கேரக்டருக்காக இவர் மனைவியை விட்டு தனியே வசித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ‘Gangs of NewYork’ படத்தில் நடிக்கும்போது ஷூட்டிங் நாட்கள் முழுக்க நியூயார்க் பாஷையிலேயே பேசிக்கொண்டிருப்பார். படத்தில் நடித்து முடித்தபின் பாத்திரத்திலிருந்து வெளி வருவதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்வாராம்.
பிரபல நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் நாடகம் அது. ‘The Crucible’. அந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் அவர் மகளை காதலித்து மணந்தார்.
காவியம் அது. Cerebral palsy நோய் வாய்ப்பட்ட பையன். இடது காலை மட்டுமே சரியாய் இயக்க முடிகிறவன். எல்லாராலும் உதாசீனப் படுத்தப்பட்டவனை அரவணைக்கும் அன்னைக்கு அவனிடம் நம்பிக்கை. ஓவியனாக, எழுத்தாளனாக உருவாகிறான். ‘My Left Foot’ படத்தில். உலகின் தலைசிறந்த நூறு நடிப்புக்களில் 11-வதாக பிரிமியர் பத்திரிகை அதைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை.
2017-இல் 'Phantom Thread’ படத்தில் நடித்ததோடு திரைக்கு End Card போட்டார்.
சொன்னது: ‘உங்களுக்கென்று ஒரு ரிதம் இருக்கும். அதைக் கண்டு கொள்வதுதான் உங்களை அறிந்து கொள்வதில் ஒரு முக்கியமான விஷயம். என்னுடைய ரிதம் கொண்டுதான் நான் நடிக்கிறேன்..’

ஸ்வர வர்ண லதா....


“ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்தி"ருக்கும் யேசுதாஸ் குரலுக்கு “மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து..” என்று எசப்பாட்டு கொடுக்க இவர் குரல் தான் பொருத்தம். வீணைத் தந்தியின் மென்மையுடன் போட்டியிடும் அளவுக்கு ஒடுங்கியெழும் குரலில் ‘நான் மாமரத்தின் கீழிருந்து..’வை அவர் பாடும் நேர்த்தி! அந்த “உன்னாலே தூக்கம் போயாச்சு, உள்ளார ஏதேதோ ஆயாச்சு!” போயாச்சு -வை அவர் இழுக்கிற இழுப்பில் நம் கவலையெல்லாம் போயாச்சு! “மாமன் நினைப்பில் சின்னத் தா...யிதான்,” என்று இழுத்துப் பாடிவிட்டு “மாசக் கணக்கில் கொண்ட நோ...யிதான்” பாடும்போது நானோ மீட்டர் குறையாது.
ஸ்வர்ணலதா! இன்று பிறந்தநாள். ஸ்வர வர்ண லதா....
இசைக் குடும்பம். இசை பயின்றவர். 3 வயதில் பாட ஆரம்பித்தவர். note உணர்ந்து noteworthy ஆகப் பாடக் கேட்கணுமா?
இவர் பாடல்களில் போவோமா ஒரு ஊர்கோலம்? “போவோமா ஊர்கோலம்.. பூலோகம்ம்ம்ம்ம்ம்…” எத்தனை ம்முக்கு நீண்டாலும் குறையாத மென்மை, உம் போட்டு கேட்க வைக்கும்.
எந்தப் பாட்டு? ‘காட்டு குயில் பாட்டு’ச் சொல்லவா? ‘கானங்கருங்குயிலை கச்சேரிக்கு வரச்’ சொல்லவா? ‘அக்கடா’ன்னு இவர் தொடங்கினால் ‘துக்கடா’ன்னு நாம விட முடியாம கட்டிப் போட்டு விடும் பாடல்கள்!
மாஸ்டர்பீஸ் “என்னுள்ளே..!" ஒரு பூ விரிவதைப் போல அந்த குரல் மெல்ல எழுகிறது. “என்னுள்ளே.. என்னுள்ளே..” என்று ராகத்தின் ஜீவனுக்குள் இட்டுச்செல்லும் குரல்! “கூடு விட்டு கூடு.. ஜீவன் பாயும் போது..” இந்த வரி! குரலின் சிலிர்ப்பில் தனிமையின் தவிப்பை உணர வைக்க முடியுமா? முடிகிறது. அடுத்த வரியில் அவரே பாடுவது போல ‘ஒரு வார்த்தை இல்லை கூற!’
“மாலையில் யாரோ..”வில் “நெஞ்சமே பாட்டெழுது, அதில் நாயகன் பேரெழுது..” என்று உச்ச ஸ்தாயியில் பாடும்போது எந்த உயரத்துக்கு எடுத்துச் செல்லணுமோ அதுவரை எடுத்துச் சென்று நிறுத்துகிறார். அதற்கு ஒரு அங்குலம் கூட மேலெழாமல்… மூன்று முறையும்… awesome! அந்த மாபெரும் இசைக் கோலத்துக்கு முழு நியாயமும் வழங்கியிருப்பார் தான் பாடிய விதத்தால்.
அந்த அசத்தல் பாட்டு! “ஆட்டமா தேரோட்டமா?” ஆடறேன், வலை போடறேன் என்று வார்த்தைகளை இசைவாக, இசையால் முடிச்சுப் போடும் ஸ்டைல்! இவருக்காகவே இசையமைத்ததோ என்று திகைக்க வைக்கும் பாடல் அது. அந்த ஓங்கி ஒலிக்கும் ‘ராக்கம்மா’வில் “அட, ராசாவே பந்தல் கட்டு, புது ரோசாப்பூ மாலை கட்டு…” வை எப்படித்தான் சற்றும் டோன் குறையாமல் கிசு கிசுப்பாகப் பாட முடிகிறதோ?
சொல்ல வேண்டியதில்லை. “போறாளே பொன்னுத்தாயி...” பற்றி. நேஷனல் அவார்டே கிடைத்துவிட்டது. ஜானகிக்கு ஒரு ‘தூரத்தில் நான் கண்ட இதயம்..’ என்றால் இவருக்கு ஒரு ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்.’
மாசி மாசம் பாடலில் ‘ஆகா பிரமாதம்’ சொல்ல வைக்கும் அந்த "ஆசை ஆகா ப்ரமாதம் ... மோக கவிதா ப்ரவாகம் !" அடுத்து “உலகம் உறங்குது, மயங்குது, ஆஹாஹா…” என்று இழுப்பது, ஆஹாஹா! அருண்மொழியுடன் ‘சக்தி வேலி'ல் 'மல்லிகை மொட்டு மனதைத் தொட்டு…'விட்ட பாடல்!
எஸ் பி பியுடன் போட்டி போட்டு இனிமையை வீசுவார் “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்” பாடலில். கார்த்திக்குடன் “ஒன்னப்புதட்டு புல்லாக்கு..” பாடலில் (சின்ன ஜமீன்) “பொழுதன்னிக்கும் குழந்தையைப்போல் இருந்திட்டயே..” வரியில் அப்படியே எம் எஸ் ராஜேஸ்வரியின் குழைவு கொஞ்சும்.
ராவை அவர் உச்சரிக்கும் ரகங்களில் “ர்ர்ராஜாவைப் போல் ஐயராத்துப் பிள்ளை” தனி ரகம். “மாசி மாசத்"தில் “நாளை எண்ணி நான் காத்திருந்தேன், மாமன் உனக்குத்தானே!”வில் உனக்குத்தானேவை அவர் ஒலிக்கும் பாங்கு தனி... “சந்திரரே வாரும்..” பாடும் அழகைக் கண்டு ‘அந்தி வானம் தந்தனத்தோ பாடும்’. வளமான “விடலைப் புள்ளை நேசத்துக்கு..” ராகத்துக்கு இவர் குரல் தனி சோபை தரும். ரஹ்மானின் “முகாப்லா..” பாடலின் வித்தியாச ராகம் இவரிடமிருந்து ஒரு வித்தியாச குரலை கொண்டு வந்திருக்கும்.
அப்புறம் இவருக்காகவே பிறந்த பாடல் ஒன்று உண்டு. “ஆத்தோரம் தோப்புக்குள்ளே..” ('பாஞ்சாலங்குறிச்சி') இந்தப் பாட்டை யாராலும் ஒரு முறை கேட்க முடியாது, ஆமாம், நிறுத்த முடியாது நூறு முறை கேட்கிற வரை. பிழிந்து விடும் இதயத்தை. கழுகு கவ்வும் இரையாக கொண்டு போகப்பட்டு விடுகிறோம் பாட்டோடு.

“மேகாத்து மூலையில மேகம் கருக்கையில சுக்குத் தண்ணி வெச்சுத் தர ஆசைப் பட்டேன்..” இப்படி நாயகியின் ஒவ்வொரு ஆசையையும் அவர் பாட, வரிக்கு வரி நம் உணர்வு பிசையப்பட, "அத்தனையும் பொய்யாச்சு ராசா.."ன்னு சொல்லும்போது குரலின் சோகம் உலுக்கும். “ஒத்தயிலே நிற்குதிந்த ரோசா..”ன்னு முடிக்கும்போது அப்படியே நிற்கிறோம் அவரை இழந்து விட்டோமே என்று...

40 மொழியிலும்...


Gregory Peck நடித்த, 3 ஆஸ்கார் வாங்கிய அற்புதப் படம், ‘To Kill A Mocking Bird’ நினவிருக்கிறதா? அந்தப் புலிட்சர் பரிசு நாவலை எழுதியவர்...
Harper Lee. இன்று பிறந்தநாள்!
வருடத்துக்கு 10 லட்சம் விற்றதோடு 40 மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது அது. தவிர, அவர் எழுதிய ஒரே நாவல் ‘Go Set A Watchman.’
முக்கியமான விஷயம் ஒன்றை மொழிந்தார்:
‘அவருடைய கோணத்திலிருந்து யோசித்துப்
பார்த்தாலொழிய நீங்கள் ஒருவரைச்
சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.’
படிப்பது பற்றி:
‘அதை இழந்து விடுவோமோ என்ற பயம்
தோன்றும் வரை நான் வாசிக்கவில்லை.
சுவாசிப்பதை நேசிப்பவர் எங்கே இருக்கிறார்கள்?’
மேலும் சொன்னவை:
‘கண்ணுக்குத் தோன்றுகிற அளவுக்கு
மோசமானதல்ல விஷயங்கள்.’
‘உரிச்சொற்களைக் களைந்து விட்டால்
உண்மைகள் கிடைத்து விடும்.’
‘சரியாய் யோசிக்கிறவர்கள் தங்கள்
திறமையில் பெருமை கொள்ள மாட்டார்கள்.’
‘ஒருவர் தன் விரோதிகளை கண்டனம் செய்யலாம்,
ஆனால் அவர்களை நன்கு அறிந்து கொள்வது
இன்னும் விவேகமானது.’
><><

அழகிய நடிகைகளில் மிக அழகிய...


‘Camp Nowhere’ 1994 இல் வந்த படம். ரெண்டு வாரத்துக்குத்தான் ஏதோ ஒரு சின்ன வேடத்தில் நடிக்க அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு இருந்தாங்க. முக்கியமான நடிகை ஒருவர் திடீரென்று ஒதுங்கிக் கொண்டார். என்ன செய்வது? யோசித்த டைரக்டர் இவரை அந்த ரோலுக்கு ப்ரமோட் செய்தார். அசத்திவிட்டார் அந்தப் பாத்திரத்தில். சின்ன, பெரிய திரை இரண்டிலும் ஸ்டார் ஆகிவிட்டார்.
Jessica Alba… அழகிய நடிகைகளில் மிக அழகிய நடிகைகளில் ஒருவர். இன்று பிறந்த நாள்.
‘Fantastic Four’(2005)-இன் விண் பெண் உடனே நினைவுக்கு வருவார். நான்கு பேர் சென்ற அந்த விண்வெளிக்கலம் காஸ்மிக் கதிர் வீச்சுக் கற்றை மேகம் ஒன்றில் மோதி விட அது அவர்கள் உருவை அடியோடு மாற்றிவிட.. உருவில்லாமலே போன மிஸ் எக்ஸாக வருவார் இவர் அதில். செமத்தியான வேடம். செம ஹிட் படம். அங்கேதான் சந்தித்தார் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த தன் வருங்கால கணவரை. பார்ட் 2 விலும் விண் பவனி வந்தார்.
ஐந்து வயதில் ஆக்ஸிடென்டில் கண் இழந்து விட்ட பெண் வயலினிஸ்ட் அவள். ஆப்ரேஷன் செய்து மாற்று கார்னியாவை ஏற்றுக்கொண்டால்... இப்ப கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது! அச்சுறுத்தும் காட்சிகள். செத்துப் போனவர் கூட கண்ணுக்கு தெரிகிறார். என்ன விசித்திரம்! தேடிக்கொண்டு புறப்படுகிறாள் கண் அளித்தவரையும், காரணத்தையும்.. ‘The Eye’ அவருடைய கண்ணான படங்களில் ஒன்று.
சூப்பர் ஹியூமன்பீயிங் ஆக ஜீன் மாற்றப்பட்டவராக வரும் ‘Dark Angel’ -இல் இன்னொரு வித்தியாசமான ஜெஸிகாவைப் பார்க்கலாம். சொல்லணுமா ‘ஸன் ஸிற்றி' பற்றி? ('Sin City' 2005)
ஐந்து வயதிலேயே ஆர்வம் நடிப்பில். சின்ன வயசில் ஹாலிவுட்டை சுற்றிப் பார்க்க வந்தபோது ஏன் நானும் இங்கே வசிக்கக் கூடாது என்ற நினைப்பு ஓடியதாம் மனதில்..
‘பாத்திரத்துக்கு ஏற்ற தோற்றத்தை வழங்கினால் போதாது, ஏற்ற நடிப்பை வழங்க முடிய வேண்டும், இல்லாவிட்டால் நான் காணாமல் போய்விடுவேன்,’ என்கிறார்.
‘கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவதன் பியூட்டி என்னவென்றால் உங்களுடைய எல்லா விஷயத்தையும் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள், அவர் வாழ்க்கையின் ஒரு பங்காக இருப்பதற்கு உறுதி தருகிறீர்கள்..’ என்று வாழ்வின் அந்த அழகிய தருணத்தை கொண்டாடுகிறார்.
'மிக அழகானவர்கள்' பட்டியல்களில் மிக அதிகமாக இடம்பெறும் இவர் சொல்லுவது, ‘எல்லோருமே அழகுதான்,, மனசுக்குள் அழகானவராக இருப்பதுதான் முக்கியம்.’

Monday, April 27, 2026

தந்திக்குப் பிந்தி...


1825. வாஷிங்டனில் அமர்ந்து அந்த ஜெனரலின் உருவப்படத்தை அமைதியாக தீட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓவியர். இளம் மனைவிக்குத் திடீர் நோய் என்று தந்தை அனுப்பிய கடிதம் வந்தது குதிரைத் தபாலில். விரைந்தார் ஊருக்கு. சேதி கிடைக்குமுன்பே இறந்துவிட்ட மனைவியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. செய்தி வந்து சேர நாட்கள் ஆனதே காரணம். மாளாத சோகத்திலிருந்து மீளாத அவர் மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது. ‘துரிதம் உண்டாக்குவேன் கடிதம் செல்ல!’
நிகழ்வு 2. கப்பலில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அவர், ஐரோப்பாவிலிருந்து. சக பயணியான அமெரிக்க விஞ்ஞானி, எலெக்ட்ரோ மேக்னெடிஸத்தில் ஐரோப்பாவில் நடத்திய சோதனைகளைப் பற்றிச் சொல்லுகிறார். இவர் மூளையில் பளிச்! ‘தொலை தூரத்துக்கு சிக்னலைக் கொண்டு செல்ல உபயோகிக்கலாமே இதை?’ முயன்றார். தந்தியை முந்தி சிந்தித்தவர்கள் 36 வருடமாக 26 கம்பிகளுடன் போராடிக் கொண்டிருக்க, ஒரே கம்பிக்குள் கொண்டு வந்தார். அந்த Code -ஐ எழுதினார் Morse.
Samuel Morse…. இன்று பிறந்த நாள்!
Patent கிடைத்தாலும் patronage கிடைக்கவில்லை. ஆறு வருடம் போராடி அரசின் நிதி உதவி பெற்று அமைத்தார் ஒரு ஐம்பது மைலுக்குத் தந்திக் கம்பங்களை. உதவிக்கு போராடிய பேடண்ட் அதிகாரி மகள் அந்த பைபிள் வாசகத்தை சொன்னாள் முதல் தந்தியாக! ‘What hath God wrought?’
தந்திக்குப் பிந்திய விளைவுகள் அமோகம். சேதிகள் புறாக்களாகப் பறந்தன. யுத்தத்திலும் சத்தமில்லாமல் உதவிற்று சத்தமிட்டு! நிகழ்வுகளில் ஒன்று: லண்டனில் தன் காதலியை கொன்று விட்டு தப்பி ஓடுகிறான் ரயிலில் ஒருவன். தந்தியில் அடையாளம் கொடுக்கப்பட்டு அவன் இறங்கும் போது தயாராக அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில்!
அடுத்த 30 வருடத்துக்குள் அமெரிக்கா நெடுகிலும் நீண்ட தந்திக் கம்பி, அட்லாண்டிக்கையும் நீந்திச் சென்றது ஐரோப்பாவுக்கு. முதல் டெலிக்ராமை விக்டோரியா ராணி தந்தியித்தார் அமெரிக்க அதிபர் Buchanan -க்கு.
ஆங்காங்கே போட்டிக் கம்பங்களை நாட்டிய கம்பெனிகளிடமிருந்து போராடிப் பெற வேண்டியதாயிற்று உரிமைகளை. கப்பலில் வந்த விஞ்ஞானியும்கூட சொந்தம் கொண்டாட, சக பயணிகளின் சாட்சியால் ஜெயித்தார். மில்லியன்களை சந்தித்தார். ஐரோப்பாவில் மட்டும் கிடைத்தது 400000 ஃப்ராங்குகள். (இவருக்குப் 18 வருட முன்பே வேறொருவர் கண்டுபிடித்துவிட்டார் தந்தியை என்றொரு 'வதந்தி'யும் உண்டு.)
சூபர் ஹிட் படம், A Beautiful Mind, அதில் Priceton University யில் வரவேற்று பேசும் புரஃபசர் ‘உங்களில் யார் மோர்ஸ் ஆகப் போகிறீர்கள்?’ என்பார்.
மரிப்பதற்குப் பத்து மாத முன் அவர் சிலையொன்றை நிறுவி, ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் கலந்துகொண்ட மோர்ஸ், உலக முழுதுக்கும் ஒரு தந்தியைக் கொடுத்தார்: ‘குட் பை!’.

அறிவியல் தேடல்...


‘எப்படி நாம் கடந்த காலத்தின் சந்ததியோ அதேபோல் வருங்காலத்தின் பெற்றோரும் நாம்தாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.’
சொன்னவர் Herbert Spencer (1820 -1903)
அறிவியலாளர், தத்துவவாதி...பன்முக வித்தகர். இன்று பிறந்த நாள்!
அவர் காலத்தில் மிக அதிகம் பேசப்பட்டவர்.
சர்வ சகஜமாக இன்று நாம் பயன்படுத்தும் 'Survival of the Fittest' என்ற சொற்றொடரை அமைத்தவர் இவர்தான்.
இன்னும் சொன்னவை...
‘கல்வியின் முக்கிய குறிக்கோள் அறிவு அல்ல, செயல்பாடு.’
‘அறிவியல் தேடல்களுக்குள் இறங்காதவர்கள், அவற்றைச் சுற்றியுள்ள கவிதைகளைக் கொஞ்சமும் அறிய மாட்டார்கள்.’
‘நாம் மிகுந்த விருப்பத்துடன் தேடும் பொருட்கள், கிட்டும்போது அந்த அளவு சந்தோஷத்தைக் கொண்டு வருவதில்லை. பெரும்பாலான சந்தோஷங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து வருகின்றன.’
‘நுண்கலைகளில் மிக உயர்ந்த இடத்தை இசைக்குத்தான் தர வேண்டும். எல்லாவற்றையும்விட அதுவே மனிதனின் ஆன்மாவைக் கட்டிக் காக்கிறது.’
‘அன்பு தான் வாழ்வின் முடிவு, ஆனால் அது முடிவில்லாதது. அன்பு தான் வாழ்வின் சொத்து ஆனால் செலவழிக்கத் தீராதது. அன்பு தான் வாழ்வின் பரிசு. அளிப்பதில் கிடைக்கும் பரிசு.’
‘ஒரு மனிதனின் அறிவு ஒழுங்கற்றதாக இருந்தால், அது எத்தனை அதிகம் இருக்கிறதோ அத்தனை குழப்பம் ஏற்படும்.’
‘பாரபட்சத்தை நாம் அனைவரும் எதிர்க்கிறோம் ஆனால் பாரபட்சம் நம் அனைவரிடமும் இருக்கிறது.’

என் கனவுகள்...


‘என் கனவுகள் எனக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றிற்காக நான் வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. துன்புறும்போது அவை எனக்குப் புகலிடம். தளையற்று இருக்கும்போது அவை என் ஆகப் பெரிய சந்தோஷம்.’
சொன்னவர்Mary Wollstnecraft…
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெருமைமிகு எழுத்தாளர். 38 வயதிலேயே மறைந்த முக்கியமானவர்களில் ஒருவர். இன்று பிறந்த நாள்..
அவர் காலத்தைய ஆண்களின் மட்டற்ற சுதந்திரமும் அதிகாரமும் பெண்களுக்கு ஏற்படுத்திய சிரமங்களையும் பாதிப்பையும் தன் வாழ்க்கை அனுபவங்களில் உணர்ந்தவர், பெண்ணின் உரிமையை நிலைநாட்டத் துடித்தார்.
‘A Vindication of the Rights of Woman’ என்ற அவரது புத்தகம் பெண்ணுரிமைக்காக எழுந்த பெரும் ஆக்கங்களில் ஒன்று.
இவரே ஒரு பெரிய எழுத்தாளர் என்றாலும் Frankenstein எழுதிய மேரி ஷெல்லியின் அம்மா என்பது இன்னொரு விசேஷம்.
சொன்ன இன்னும் சில:
‘எளிமையும் நேர்மையும் சேர்ந்தே பயணிக்கும், ஏனெனில் இரண்டும் உண்மையை நேசிப்பதால் வருபவை.’
‘எந்த ஒரு மனிதனும் தீமையை தீமை என்று தெரிந்து தேர்ந்தெடுப்பதில்லை, அதை சந்தோஷம் என தவறாக நினைத்துக் கொள்கிறான், தான் தேடும் நன்மை என அதை நினைக்கிறான்.’
‘நான் உன்னிடம் விரும்பியதெல்லாம் உன் இதயமே, அது போய் விட்ட பின் உன்னிடம் எனக்கு கொடுப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை.’

Sunday, April 26, 2026

டிவி காமெடி அரசி...


சினிமா தியேட்டரில் வந்தவர்களை ஸீட்டில் அமர்த்துபவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். உள்ளே ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ‘Strangers in a Train’ படம் ஓடிக்கொண்டிருக்கிறது. முடியப் போகிற நேரத்தில் அடுத்த ஷோ படம் பார்க்க வருகிறது அந்த தம்பதி. அப்பல்லாம் அப்பவே உள்ளே விட்டுடுவாங்க. ஆனால் எப்பேர்ப்பட்ட சஸ்பென்ஸ் படம் அது! அதனால இந்தப் பெண் அவங்ககிட்ட, ப்ளீஸ், இப்ப உள்ள போகாதீங்க, சஸ்பென்ஸ் ஸ்பாயில் ஆயிடும்னு சொல்கிறாள். அங்கே ஆஜரான மேனேஜர் என்ன நடந்ததுன்னு கேட்டவர் ஆன் தி ஸ்பாட் அவள் சீட்டைக் கிழித்து விடுகிறார்.
வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பெண் ஹாலிவுட்டின் பிரபல டிவி ஷோ நடிகையாகி விடுகிறார். அவருக்கு Hollywood Walk of Fame அவார்ட் தருகிறார்கள். பிளாட்ஃபார்மில் பதிக்கும் பித்தளை ஸ்டார் அது. எங்கே பதிக்க வேண்டும் என்று வழக்கம்போல் கேட்டதற்கு அந்தத் தியேட்டர் முன்னால்! என்கிறார் நடிகை.
Carol Burnett... க்வீன் அஃப் டெலிவிஷன் காமெடி! இன்று பிறந்த நாள்!
ஒரு முகம் பாடகி, ஒரு முகம் காமெடி.
ஒரு பாதம் மேடையில், ஒரு பாதம் டி.வி.யில்.
வறுமை உந்தித்தள்ள, பாட்டியுடன் ஹாலிவுட்டில் பாதம் பதித்த சிறுமி அங்கேயே படித்தாள்.தன் தோற்றம் பற்றி பெரிய அபிப்பிராயம் இல்லை. விரும்பியது நாடகமெழுத. ஆனால் நடிப்போடு சேர்த்துத்தான் கற்றுத் தருவாங்க. முதல் முதலாக நடித்தபோது விழுந்த கைதட்டு, வாழ்நாள் முழுதும் அதை விரும்ப வைத்தது.
சின்ன சின்ன சிரிப்பு வேடங்கள்! மெல்ல முன்னேறி… நாடக மேடைகளில் நடந்து.. டிவி ஷோக்களைக் கடந்து.. முதல் திரை பிரசன்னம் ‘என் படுக்கையில் யார் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்?’ படத்தில் டீன் மார்டினுடன்!
பிரபல ஸ்டார் Lucille Ball இன் ‘The Lucy Show’ -வுக்கு அடுத்து அதே அளவு அப்ளாஸ்களுடன் தப்பாமல் கொண்டு போனார், தன் The Carol Burnett Show -வில். 1967 இல்.. ஒளிபரப்பானதுமே பரபரப்பானது. 11 வருடங்களில் 22 எம்மி அவார்ட் வாங்கிய ஷோ அது. அது போதாதா?
எண்பது வயதுக்கு மேலும் அவ்வப்போது டிவியில் தலை காட்டிக் கொண்டு உற்சாகமாக...
சொன்ன பிரபல வாசகம்: ‘இன்பம் என்பது சோகம் ப்ளஸ் காலம்.’

Saturday, April 25, 2026

நெஞ்சில் குடியிருக்கும்...


“நெஞ்சில் குடியிருக்கும், அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?”
இந்த ‘இரும்புத் திரை’ சூப்பர் ஹிட்டுக்கு இசையமைத்தவர் யாரென்று தெரியுமா?
எஸ் வி வெங்கட்ராமன். இன்று பிறந்தநாள்!
1948 -இல் சிட்டாடலின் ‘ஞானசௌந்தரி’ வெளியானபோது அந்தப் படத்தின் பாடல் ஒன்று பிரபலமாகி எங்கும் ஒலித்தது நினைவிருக்கும்: “அருள் தாரும் தேவமாதாவே! ஆதியே, இன்ப ஜோதியே!” இவர் இசையே.
பி யு சின்னப்பா, தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம், எம் எஸ் சுப்புலஷ்மி, எம் எல் வசந்தகுமாரி, பட்டம்மாள்… இவர் இசையில் பாடாத சங்கீத பிரபலம் இல்லை.
புகழ் சேர்த்த படம், ‘மீரா.’ 11000 அடியில் 20 பாடல். அனைத்தும் எம்.எஸ். அதிலொன்று கல்கி எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்..’ ‘Toot Gayi Man Bina..’ என்ற இந்திப் பாடலிசையின் இன்ஸ்பிரேஷனில் அமைத்த பிரசித்தி பெற்ற சிந்து பைரவி ராக பாடல். மற்றொன்று, கேட்டாலே உருகும் ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ..?’
'வாராய் என் தோழி..' வருவதற்கு முன் கல்யாணங்களில் தவறாது ஒலித்த ‘புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணே, தங்கச்சி கண்ணே..’ இவரது இசைப் ‘பண்’ணே! அந்த ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’யின் மற்றொரு பாடல் ‘சோலைக்குள்ளே குயிலு குஞ்சு..சும்மா சும்மா கூவுது!’
‘சிங்காரப் பைங்கிளியே பேசு!’ என்றொரு பாடல் ஏ எம் ராஜாவின் தேன் குரலில் ஒலிக்குமே, ‘மனோகரா’வில்? அது!
ஸ்ரீதர் வசனம் எழுதிய ஜெமினி நடித்த ‘மாமன் மகள்’ படத்தில் ‘ஆசை நிலா சென்றதே.. அபலைக் கண்ணீரில் நீந்தியே!’ நாயகியின் விக்கித்துப் போன சோகம் ஜிக்கியின் குரலில். (கால் நிமிடத்துக்கு ஷெனாயுடன் தொடங்கும் அந்தப் பாடலின் orchestration ஒரு ட்ரெண்ட் ஸெட்டர்!) அது உங்கள் நினைவுக்கு வராவிட்டாலும் அதே படத்தில் சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே, மல்கோவா மாம்பழமே!’ மறக்காதே?
அந்தக் கால சிவாஜி பாடல்களின் எந்த லிஸ்டிலும் தவறாது தலை நீட்டும் ‘பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?’(‘மருத நாட்டு வீரன்) ‘அறிவாளி’ படத்தில் ‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்..’
சோழவந்தானில் பிறந்தவர் நாற்பதுகளில் இசை ஆளவந்தார். மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவர்.
ஐந்து வயதிலேயே அழகாக பாடுவார் தியாகராஜ கீர்த்தனைகளை. சங்கீத ஆசையில் சென்னை வந்தார். நாடக மேடையில் இசையமைத்ததோடு நாலைந்து படங்களிலும் நடித்தார். ஏற்பட்ட விபத்தில் படுக்கை வாய்ப்பட்டு நொந்தவருக்கு ‘நந்த குமார்’ படத்துக்கு இசை வாய்ப்பை இசைவாய்த் தந்தது ஏவிஎம்.

புகை என்றால் பகை...


புகை என்றால் தன் காதலனுக்குப் பகை என்பதால், தான் சிகரெட் பிடிப்பதை எப்படியாவது நிறுத்த வழி கேட்டு அந்த சைக்கோதெரபிஸ்டிடம் வருகிறாள் டெய்சி. அவர் அவளை ஹிப்னாடைஸ் செய்ததில் அவளுடைய முன் பிறவிகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளே போய் வருகிறாள். அதில் ஒன்றில் அவள் பிரபல நாட்டியக்காரி மெலிண்டாவாக இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. மெலிண்டாவின் தீவிர அபிமானியான டாக்டர் மிரண்டார், இதாண்டா நான் தேடின பெண்ணென்று! உடனே டெய்சியை காதலிக்கிறார். அவளும் அவரை.
ஆனால் பாருங்கள் அவர் காதலிப்பது தன்னை அல்ல, தன்னுள் இருக்கும் மெலிண்டாவைன்னு தெரிய வந்ததும் - எந்தப் பெண்ணாவது சம்மதிப்பாளா? - உதறி விடுகிறாள். அவரோ விடாப்பிடியாக கெஞ்சுகிறார். மறுபடி தன்னுள்ளே சஞ்சரித்து வந்தவள் அவருக்கு அந்த சந்தோஷச் செய்தியை கொடுக்கிறாள்: “கவலைப்படாதீங்க, என் அடுத்த பிறவி லாரா உங்களைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள் அம்பது வருஷத்துக்குப் பிறகு!”
‘On a Clear Day You can See Forever’ (1970) படத்தில் டெய்சியாக வந்து கலக்கியவர்…
Barbara Streisand. 24 April. பிறந்த நாள்..


ஹாலிவுட்டின் ஒரு பானுமதி. ஆம், பாடகியும் நடிகையும்!.. ஏன் டைரக்டரும் திரைக்கதாசிரியரும் கவிஞரும் தயாரிப்பாளரும் கூட. சென்ற நூற்றாண்டின் மிக அதிக ரெக்கார்டு விற்பனையான பாடகி!
நைட் கிளப் பாடகியாக துளிர்த்து, பிராட்வே நாடகங்களில் மிளிர்ந்து, டிவி சிரீஸில் ஒளிர்ந்து, திரைக்கு வந்தார் மனம் குளிர்ந்து. ஒமர் ஷரிஃபுடன் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஆஸ்கார்! பென்ஹர் புகழ் வில்லியம் வைலர் டைரக்ட் செய்த படமாச்சே? ஒரே படத்தில் நட்சத்திரமானார். அதே பிறந்தநாள் கொண்ட ஷர்லி மக்லீனுக்குப் போவதாயிருந்த ரோல் அது.
இவரின் ‘The Way We Were’ படப் பாடலை கேட்டால் மிகச் சிறிய விமானமொன்றிலேறி மிக உயரத்தில் வளைய வருவது the way you will feel! லிங்க் கீழே.
இவர் இயக்கிய ‘Yenti’ படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். வேறென்ன வேண்டும் திறமையை சொல்ல?
ஆஸ்கார், கிராமி, எம்மி, டோனி, கோல்டன் க்ளோப் என்று நடிப்பு, பாட்டு, நாடக மேடைக்கான அத்தனை டாப் அவார்டுகளையும் அள்ளிக் கொண்ட ஒரே நடிகை.
இவ்வளவும் சாதித்தவர் சொன்னது: நான் உருப்படுவேன்னு எங்க அம்மா நெனைக்கவே இல்லை.

அன்பின் பெருஞ்சொற்கள்...


அன்பின் பெருஞ்சொற்கள்... (அவர் வரிதான்)
யஷோ வின் ‘வரிகளில் படிந்த நிழல்.’ (கவிதைகள்) படித்தேன்.
ஒரு வருடத்திற்கு ரசித்துக் கேட்கிற கவிதைகளை ஒரே தொகுப்பாகக் கொடுத்துவிட்டார். முதலில் ஏற்படும் ஐயம் இதை விமர்சிக்கும் அளவுக்கு கவிதை ஞானம் எனக்கு இருக்கிறதா என்பது. சரி சிவாஜி நடிப்பை விமரிசனம் மாதிரி இது ஒரு ‘வியப்புசனம்’!
யதார்த்தத்தின் உலகத்திற்கும் பெரும் கனவின் அமானுஷ்ய வெளிகளுக்கும் இடையே அவரது நளினமான தாவல்களின் வேகம் அபாரம்.
தலைப்பு: 'மறுக்கும்.'
சிறகு வற்றி இறகுகள் சிதறிய
நில விள்ளலின் பாரமென கனக்கிறது
நேசத்தின் சொற்தின்ற விழிகள்
இமை திறந்து
பெருவெளிக் கூடடைய எத்தனிக்கையில்
விடியல் மறுக்கும் இரவாகிறாய்.
பிரியம், அன்பு, காதல், லயிப்பு எல்லாவற்றையும் சாதாரண சொற்களாக்கி விடுகின்றன, அவர் கையாண்டிருக்கும் அருஞ்சொற்றொடர்கள். 'எங்கேயும் செல்லாத வானத்’தையும் ‘கனவுகளின் சப்தங்களால் ஆன இரவை’யும் நினைக்கவே புல்லரிக்கிறது. அதற்குள் ‘மணித்துளிகளற்ற கணம்’, ‘இருளை உமிழ்ந்த நெடும் பகல்’, என்று சொல்லிக் கொண்டே போகிறார். ‘யாமத்தின் நீளம் அளக்கும் துயில்…’ என்னவொரு ஒயில் சொற்றொடரில்!
பிடித்து இழுத்து நிறுத்திடும் கவிதைகள்...
தலைப்பு: 'டி என் ஏ.'
போல ஒரு நீ
தேட சில வார்த்தை
அறியாமலிருக்க சிறு தூரம்
தவிக்க அவ்வெழுத்து
கேவ ஒரு கடுஞ்சொல்
அணைக்க உன் கவிதை
அதில் நீ
போல ஒரு நான்.
வானத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து தன் கானத்தில் கோர்க்கிறார். மிகச் சுருக்கமாகவும் மிக விரிவாகவும் அன்பின் போர்வைகளை ஏங்கும் என்பில் போர்த்துகிறார், தன் 'மீளவியலா' கவிதைகளால்!
இதோ ஒன்று!
தலைப்பு: 'யுகமாதல்'
கழியா நாழிகை நீ
களைத்த நிமிடமாய் நான்
யுகமாவாயா.
மணலாழி மனது.. கவிஞ வெறுமை.. கன்ன வெதுமை.. பிம்பத் திரிவு.. தீ இடை... பிரிச்செடுக்க முடியாத உரிச்சொற்றொடர்கள்! கவிதைகளுக்கு அவை highly complementing!
தரிசித்ததில்லை, ஆனால் தரிசிக்க விரும்புவோம் அவர் காட்டும் திசைகளில் கொட்டக் கொட்ட விழித்தபடி அமர்ந்திருக்கும் அழகுகளை.
‘அந்தகாரத்தின் ஒளிக்கீற்றாய் பயணிக்கும் வேகம் உனதன்பு…’ அன்பின் வீச்சை அட்டகாசமாக அளவிடுகிறார் மற்றொரு கவிதையில்!
தலைப்பு: 'என்னுள்ளே.'
ஒரு குழந்தையின் மொழியறிதலாய்
ஒவ்வொரு சொல்லாய்
உள்ளேகுகிறாய் நீ.
(மனத்தினுள் ஏகுபவனின் ஊடுருவலை குழந்தையின் ஒவ்வொரு சொல்லாய் மொழியறிதலை விட மென்மைப் படுத்த முடியுமா?)
கற்பனையின் எல்லை பிரமிக்க வைக்கிறது. ‘...அணுகி வான் பகிர முயலும் அல்காரிதத்தின் ஒன்றும் பூஜ்யமும் சுட்டிய இடங்களில் அமர மறுத்தால்’... என்ன ஆகும்?
அருவியாய் வந்துவிழும் உவமைகள்... ‘பாதியில் நின்று போன தீசிஸ்’, ‘அறிய முற்பட்ட முரண்’, ‘ஆர்வம் தொலைத்த உரையாடல்கள்’...
இசையை இசைக்கிற இவரின் சொற்கள் இசைக்கு மிக இசைவானவை. ‘மனதின் ஆழத்தில் சப்தித்துக் கொண்டே இருக்கும் எழுத்துக்கள் மறைத்த பேரிசை..’
வார்த்தைகள் ரத்தினங்கள். அறிவார், ஆகவே காதலில் ஆட்படுவதை ரத்தினச் சுருக்கமாக...
தலைப்பு: 'என்னை.'
என்னுள்ளே/ என்ன/ நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்/ உன்னை.
அந்த அன்புலகிற்குள் அஸால்டாக அழைத்துப் போகிறார், ‘நம் பிணக்கை உடைக்க/ போதுமானதாயிருக்கிறது/ ஒரு அர்த்தமற்ற மீம்…’ என ஒரு கவிதையைத் தொடங்கும்போது.
ரசித்துப் படிக்க வேண்டிய கவிதைத் தொகுப்பு! அவரே சொல்கிற மாதிரி
‘கவிதைகள் அங்கேதான் இருக்கின்றன
அதற்கானவர்கள் மட்டும்
பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.'
(தலைப்பு: ‘வெவ்வேறாக.')
மிக ரசித்த கவிதை?
தலைப்பு: 'அல்லாது.'
மிஞ்சாப் பேராழி
தீவாரித் தழுவினாற் போலல்லாது
பனியின் துளியொன்றை
அபகரித்தாற்போல
கல.
><><