Thursday, December 29, 2011

இனிய 2012!


கிழ்வுக்கென்ன வேண்டும்
மனம் ஒன்றைத் தவிர?
மைதிக்கென்ன  வேண்டும் 
அன்பு ஒன்றைத் தவிர?
வெற்றிக்கென்ன வேண்டும் 
முயற்சி  ஒன்றைத் தவிர?
ம்பிக்கைக்கென்ன வேண்டும்
பிரார்த்தனை  ஒன்றைத் தவிர?
ழிகாட்டிட என்ன வேண்டும்
கடமை  ஒன்றைத் தவிர?
வாழ்க்கைக்கென்ன வேண்டும்
பக்குவம்  ஒன்றைத் தவிர?
னிமைக்கென்ன வேண்டும்
2012 -ஐத் தவிர?

The gaiety and happiness
a new Day brings...

the joyful excitements
a new Week unveils...

the spectacular ideas 
a new Month lays out...

the myriad opportunities 
a new Year unfolds...

May you have more,
more of them in 2012!
       
       <><><>                                                                                           
                                                                                           

Monday, December 19, 2011

மழையின் வர்ணங்கள்




தனோடெல்லாமோ ஒப்பிட்டு 
எப்படியெல்லாமோ 
வர்ணித்து விட்டனர் அதை... 
மழை என்று சொன்னாலே போதுமே 
மனதுக்குள் பெய்யுமே!  

ந்த மழைக்குத் தெரியவில்லை
எப்போது பெய்ய வேண்டுமென்று...
ஆனால் அது எப்போது பெய்தாலும் 
சூழ்நிலை மறந்து ரசிக்க 
மனதுக்குத் தெரிகிறது!


நீருக்கு ஏங்கும் வறண்ட நிலம் 
விக்கல் எடுக்கும் மரங்கள் 
வருவதைப் பிடிக்க 
வைத்துள்ள பாத்திரங்கள்.
வழிந்தோடும் வாகன மேற்கூரைகள் 
வடிந்து வீணாகும் தார்ச்சாலைகள்... 
என எல்லா இடத்திலும் 
ஒரு போல பெய்யும் மழை 
அன்பை எப்படிப் பொழிவது 
என்பதைச் சொல்ல வருகிறதோ!


த்தனையோ மணித்துளிகள் 
தொடர்ந்து பெய்தாலும் 
சில மனங்களை மட்டும்
ஈரமாக்க முடியவில்லை
அடை மழையால்!


ழை பெய்கிற பொழுதுகளில் 
மட்டுமே தெரிகிறது 
விரிந்து பரந்த அவர்கள் 
ஆகாயக் கூரையில் 
எத்தனை பொத்தல்கள் என்று 
பிளாட்பாரவாசிகளுக்கு! 


பூமியின் கோபத்தை 
மழையால் ஒத்தியெடுத்து  
ஆற்றியது ஆகாயம்!


காயத்துக்கு 
வாழ்க்கைப்பட்ட நீர் 
ஆசையுடன் பார்க்க வந்தது 
பிறந்த வீட்டை!


னக்கும் எனக்கும் இடையே 
ஒவ்வொன்றாய் விழும் 
மழைத் துளிகளினூடே 
புகுந்து புறப்பட்டு 
உன்னைச் சென்றடைந்த 
என் எண்ணங்களை 
உலர்த்தி எடுத்துக்கொள்!


ன் மேல் பட்ட துளியும் 
என் மேல் பட்ட துளியும் 
எங்கோ ஒன்றாகி 
கடலில் கலந்து 
மறுபடி எழுந்து மேகமாகி 
என்றோ பொழியும் 
நாம் சேர்ந்திருக்கும்போது 
நம் மீது ஒன்றாக!

<><><>
( 'வார மலர் ' 27-11-2011இதழில் வெளியானது )


Saturday, December 10, 2011

தீபம்







ளியில் 
ஒளிந்திருக்கும் பெரு 
வெளியில் சஞ்சரிக்கிறேன்  .
எங்கும் பிரகாசமாக. 
எல்லாம் ஒன்றாக.
எதுவும் மகிழ்ச்சியாக.

கார்த்திகை திருநாள் மனதின் 
கார்மேகம் கனிந்து 
உள்ளுக்குள்ளும் 
பொழிகிறது மழை. 

தீபங்களின் நடுவே 
தீவாக நின்று துதிப்பது 
வேறெதிலும் கிடைத்திராத 
தீராத சந்தோஷம். 

தீபத்தால் ஆராதனை 
செய்கிறோம். இன்று 
தீபத்தை ஆராதிக்கிறோம்.

<><><>



Tuesday, December 6, 2011

திறப்பு விழா




திறப்பு விழா இனிதே முடிந்தது.


பஜாரில் ஏகாம்பரத்தின் புதிய கடை பளிச்சென்றிருந்தது.

கடையைத் திறந்து வைத்தவர் பக்கத்துக் கடைக்காரர். வந்திருந்த அன்பர்கள் கை தட்ட, எல்லாருக்கும் இனிப்பு வழங்கினார் ஏகாம்பரம்.

கோபமாக வந்த அவர் மகன் இரைந்தான். ''என்னப்பா இது? ஒரு பெரிய புள்ளியை வெச்சு நம்ம கடையைத் திறக்கணும்னு ஒரு லிஸ்ட்டே வெச்சிருந்தேன். நீங்க என்னடான்னா, அவங்க எல்லாரையும் விட்டுட்டு பக்கத்துக் கடைக்காரரை வெச்சுத் திறந்து... இப்படிப் பண்ணிட்டீங்களே?''

''எல்லாம் சரியான காரணத்தோடு தான்,'' என்றார் ஏகாம்பரம் பொறுமையாக, ''யோசிச்சுப்பாரு, திறந்து வைக்கிறவங்க இன்னிக்கு வருவாங்க, நாளைக்குப் போயிடுவாங்க. பக்கத்துக் கடைக்காரர் என்னிக்கும் நம்மகூட இருக்கிறவர். அதான் அவரை வெச்சுத் திறக்க வைத்தேன்.''  

(குமுதம் 11-04-2007 இதழில் வெளியானது)





Sunday, November 20, 2011

நாயகி



''ஸாரி சுமி, இன்னிக்கு ஆபீசில லேட் ஆயிட்டுது.  இன்னிக்கு சினிமாவுக்குப் போக முடியாது போல இருக்கு...'' என்றபடியே வந்தான் சேகர்.


''இது உங்களுக்கே நல்லாயிருக்கா? தவறாம ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி ரெடியா இருன்னு சொல்ல வேண்டியது. அப்புறம் லேட்டாயிடுச்சு, வா, அப்படியே பக்கத்துல பீச்சுக்குப் போயிட்டு வரலாம்னு சமாளிக்கிறது.... அப்புறம் இந்த போலி அழைப்பெல்லாம் தேவையா?'' படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள்.

ஒரு நிமிடம் பரிதாபமாக விழித்தான் அவன்.

''சரி, உண்மையான காரணத்தை சொல்லிடறேன். 'சினிமாவுக்குப் புறப்பட்டு இரு'ன்னா நீ நல்லா டிரஸ் பண்ணிட்டு அலங்கரிச்சிட்டு இருப்பே.  பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்.  ஆபீசிலும் வெளியிலும் பொண்ணுங்க நல்லா அலங்கரிச்சிட்டு அழகாக காட்சியளிக்கிறதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உன்னையும் அப்படி அழகு படுத்திப் பார்க்கத் தோன்றித்தான் இப்படி...''

''ஒரு நிமிஷம் இருங்க, இதோ புறப்பட்டு வர்றேன், பீச்சுக்கே போகலாம்!'' என்றாள் அவள்.

(குமுதம் 9 -4 -2008 இதழில் வெளியானது.)

Monday, November 14, 2011

அது வரை மட்டும்!


அது வரை மட்டும் 

எங்கோ ஒரு அசைவு
ஏதோ ஒரு சொல்
என்னுள் ஓர்  எழுச்சியை
ஏற்படுத்துகிறது சட்டென்று!
அதைத்தேடி நான்
அலைகிறேன், தவிக்கிறேன்...
அது வரை என் துக்கத்தை 
அடக்கிக் கொள்ள முடிந்தால் 
அதுவே போதும்!





இத்தனை தானா?

எப்படியோ மறு நாள்
சமாதானமாகி விடுகிறது
மனம்.
அல்லது அதற்கு மறு நாள்.
ஆனால் முதல் நாள்
அது படுத்தும் பாடு!
ஏற்றுக்கொள்ள
படும் சிரமமோ அது?
ஏற்றுக் கொண்டபின்
தோன்றுகிறது:
'இத்தனை தானா இது?'


Friday, November 4, 2011

நலம் வாழ...


டுத்த வாரம் பிறந்த நாள் மைதிலிக்கு.  என்ன பரிசு வாங்குவது என் இனிய மனைவிக்கு?  மண்டையை உடைத்துக் கொண்டேன்.

வாட்ச்? ஏற்கெனவே ரெண்டு இருக்கு. செல் போன்? காமிரா? எல்லாமே இருக்கு.  இருக்கிற வசதிக்கு எது  வாங்கிக் கொடுத்தாலும் அசர வைக்காது மைதிலியை.

புதுசா, உருப்படியா, மறக்க முடியாததாக...

அவள் ஷெல்ஃபைக் குடைந்தேன்.  ஆ, கிடைத்தது ஐடியா!

பிறந்த நாள் அன்று...

வாசலில் பைக் வந்து நிற்க, ''அய் வசந்தி! பார்த்து எத்தனை வருஷமாச்சு! எப்படிக் கண்டு பிடிச்சே என் அட்ரசை?  பிறந்த நாளும் அதுவுமா டாண்ணு வந்து நிற்கிறியே!  என்னங்க, இவள் தான் ஹைஸ்கூலில் என் டியர் சிநேகிதி.  அப்புறம் சந்திக்கவே முடியலே...''  சந்தோஷத்தில் பரபரத்தாள் இவள்.

''நான் எங்கே கண்டு பிடிச்சேன்? எல்லாம் உன் கணவர் ஏற்பாடு தான்!'' என்றாள் வசந்தி.

என் பக்கம் திரும்பினாள் மைதிலி. ''மறக்க முடியாத பரிசுதான்!''

('குமுதம்' 11-06-2008 இதழில் வெளியானது )   

Saturday, October 29, 2011

சந்தோஷ முகம்



''என்ன வாத்தியார் ஐயா? மெடிகல் செக் அப்புக்கு சென்னை போறீங்களாமே? கேள்விப்பட்டேன்.  கண்டிப்பா நம்ம பையன் வீட்டில தான் தங்கணும்.'' பரிவோடு சொன்னார் பொன்னையா.
நீலகண்டன்  புன்னகைத்தார். ஏற்கெனவே  சோமு , பரதன்,லோகநாதன் -- எல்லாருமே தற்போது சென்னையில் இருக்கும் அவரது பழைய மாணவர்கள் -- இவர்களின் பெற்றோரும் அவரை சந்தித்து, தங்கள் மகன் வீட்டில் தங்கிக் கொள்ளச்சொல்லி வற்புறுத்திவிட்டுப் போயிருந்தார்கள்.
''ஆமா, உங்க மாணவன் வெங்கட்டும் அங்கேதானே இருக்கான்?'' என்றாள் மனைவி மரகதம்.
''ஆமா, அவங்கப்பா, அம்மா அவனோட அங்கேயே இருக்காங்க.  இங்கே இருந்தா அவங்களும் வந்து என்னை அங்கே தங்கச் சொல்லியிருப்பாங்க''

ருக்குத் திரும்பியதும் மரகதம் ஆவலுடன் கேட்டாள், ''ஆமா, யார் வீட்டிலே தங்கினீங்க?''
''வெங்கட் வீட்டில் தான்!''
''என்னங்க, வீட்டுக்கு வந்து கேட்டுக் கொண்டவங்க பையன்களை விட்டுவிட்டு அவன் வீட்டில் எப்படி...?'' குழம்பினாள்.
''வெங்கட்டைத் தவிர மற்ற எல்லாரும் கல்யாணமானதும் பெற்றோரைத் தங்களோட அழைச்சிட்டுப் போகாம இங்கே கிராமத்திலேயே விட்டு வெச்சிருக்காங்க. பெத்தவங்களையே கவனிக்காதவங்க, என்னை எவ்வளவு தூரம் வரவேற்பாங்க? ஓர் ஆசிரியர் பார்க்க விரும்பறது தன் மாணவன் முன்னுக்கு வந்து நல்லா இருக்கிறதை மட்டுமில்லே, அவனைப் பெத்தவங்களோட சந்தோஷ முகத்தையும்தான். அதுக்கு நான் அங்கேதானே போகணும்?''

  ( 'குமுதம்'  28-09-2005 இதழில் வெளியானது )



Monday, October 17, 2011

பசித்தாலும்...


''என்னங்க, அந்த பி.இ.பையனையே பேசி முடிச்சிடலாம். நம்ம பொண்ணுக்குப் பொருத்தமா இருக்கான்.''
''எனக்கு மட்டும் என்ன ஆசை இல்லாமலா கௌரி? ஆனா அவங்க ரொம்பக் கேட்கிறாங்களே? பேசாம இந்த எம்.சி.ஏ.வையே பார்ப்போம். நமக்குத் தகுந்த இடம்.''
''அதில்லேங்க, நம்ம பையன் சேகர்தான் இப்ப சினிமாவில பிரபலமாகி நாலஞ்சு படத்தில நடிச்சிட்டு இருக்கானே, இப்ப அவனைப் போய்ப் பார்த்து தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு லட்சம் தான்னு கேட்டால் தரமாட்டேன்னா சொல்லப் போறான்?''
''சரிதான், படிப்பைப் பாதியில விட்டிட்டு குடும்பப் பொறுப்பில்லாம ஓடிப் போனான். என்னான்னு கேட்கலே இதுவரை.  இப்பபோனால் எப்படிப் பேசுவானோ?''
''அதெல்லாம் நம்ம பையன் அப்படி ஒண்ணும் சொல்லமாட்டான். உங்களைப் பார்த்தா போதும், உருகிடுவான்.''
ரை நம்பிக்கையோடு மாநகரம் வந்திறங்கியவர் கண்ணில் அந்த போஸ்டர். மகன் எழுதி இயக்கி நடித்த படம் ரிலீசாகியிருந்தது.
 பார்த்துவிட்டுப் போனால் ரசித்த காட்சிகளை அவனிடம் சொல்லலாம். சந்தோஷப் படுவான்.
உள்ளே நுழைந்தார். தொடங்கி விட்டிருந்தது. திரையில் சேகர். ஆவேசமாகப் பேசினான்.
''...எந்த மூஞ்சியை வெச்சிட்டு என் முன்னே வந்து நிற்கிறே? அன்னிக்குக் கேவலம் நாற்பது ரூபாய்க்கு  உன்னை எப்படியெல்லாம் கெஞ்சினேன்? கொஞ்சமாவது இரக்கப்பட்டியா? கண்டபடி திட்டினே. வீட்டை விட்டு ஓடினேன். பட்டணத்துக்கு வந்து தெருத்தெருவா அலைஞ்சு... இன்னிக்கு நல்லா இருக்கேன்னா அது என் சொந்தத் திறமை! இப்ப அதில குளிர் காய வந்திருக்கியா?''
இவருக்கு சேகர் ஒரு நாள் தன் அபிமான நடிகருக்கு கட் அவுட் வைக்க நாற்பது ரூபாய் கேட்டதும் தான் மறுத்ததும் நினைவில் ஓடிற்று. நம்மைத்தான் சொல்கிறானா? இருக்காது. இது வெறும் கதை தானே? அதற்கு மேல் படம் பார்க்க முடியவில்லை. வெளியே வந்தார்.
விசாரித்து மகனின் வீட்டுக்குள் நுழைந்தபோது...
''நான்தான் சேகரோட அப்பா,'' என்றதும் வேலையாள் பிரமாதமாக உபசரித்தான். ''இதோ வந்திருவாருங்க.குளிச்சிட்டிருக்கார்.''
டீப்பாயில் கிடந்த பேப்பரில் டைரக்டர் சேகரின் பேட்டி வெளியாகியிருந்தது.  ஆவலுடன் எடுத்துப் படித்தார்.
நிருபர்: உங்க படத்தில், வசனம் எல்லாம் தத்ரூபமா இருக்கே, காரணம்?
சேகர்: அதுவா? அனுபவம்தான். நான்  எல்லாவற்றையும்  என் அனுபவத்தில் இருந்துதான் எடுக்கிறேன்.
பேப்பரை மடித்து வைத்தார்.
''வாங்கப்பா, என்ன விஷயம்?'' தலையைத் துவட்டியபடியே வந்தான் சேகர். ''டேய், அப்பாவுக்குக் காபி கொடுத்தியா?''
''ஒண்ணுமில்லேப்பா, உன் தங்கச்சிக்கு கல்யாணம் பேசியிருக்கோம். பையன் எம்.சி.ஏ.  எங்களுக்குத் தகுந்த இடம். உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.''
கொஞ்சமும் தயக்கமின்றிப் பேசிய வார்த்தைகளில் அவரை அறியாமலேயே ஒரு பெருமிதம் சேர்ந்திருந்ததது!


Thursday, October 6, 2011

வாழ்த்து

குநாதன் தீர்மானமாகச் சொன்னார், ''என்னால் அந்தக் கல்யாணத்துக்கு வரமுடியாது!''
சௌம்யா இடிந்து போனாள். இத்தனை எடுத்துச் சொல்லியும் இவர் நிர்த்தாட்சண்யமாக மறுக்கிறாரே!
அவளுடைய மாமா மகனுக்குக் கல்யாணம்.  மாமாவுக்கும் இவருக்கும் ஆகாது.  பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தி இருக்கிறார்.  தங்கள் பாட்டுக்கு ஒதுங்கியிருந்தபோதும் திமிர் என்று வர்ணிப்பார். அவர் பிள்ளைகளும் இவரை வயதுக்குக் கூட மதிப்பதில்லை.
''இத பாருங்க, கல்யாணம் காட்சின்னு வரும்போது  அவங்க நம்மை மதிச்சாலும் மதிக்காவிட்டாலும் நாம போய் தலையைக் காட்டிட்டு மணமக்களை வாழ்த்திட்டு வந்திடணுங்க.''
''ஐயோ சௌம்யா, அவங்க நம்மை மதிக்கலைங்கிற காரணத்தால நான் அங்கே வரத் தயங்கலே...''
''அப்புறம் என்ன யோசனை?''
''சௌமீ, நாம போறது எதுக்கு? மணமக்களை வாழ்த்தறதுக்குத்தானே? அந்த வாழ்த்து உதட்டிலேருந்து  வந்தா போதாது. மனசார நம்ம உள்ளத்திலேருந்து வரணும். நம்ம மனசிலே அவங்க பேரில் கோபமும் வருத்தமும் இருக்கும்போது எப்படி அது வரும்? அப்புறம் நாம போறதிலே என்ன அர்த்தம்? யாருக்கு என்ன பிரயோசனம்?''
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது அம்மா   சொன்னாள், ''இத பாரு ரகு, நீ சொல்றது சரிதான். உன் மனசில்விசனம் இருக்கும்.  வார்த்தைகள் வெளி உதட்டிலேயிருந்துதான் வரும். ஆனால் இது வெளியில் யாருக்காவது தெரியப்போகிறதா? இல்லையே? அவங்க கோணத்திலேயிருந்து பாரு. நீங்க சிரிச்சபடியே அங்கே வர்றீங்க. எல்லா நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கறீங்க. கைகுலுக்கி வாழ்த்தறீங்க. அதைக் கேட்டு அவங்க மனசு சந்தோஷம் அடையுது. பார்க்கிறவங்களும் சந்தோஷப்படறாங்க. அத்தனை பேரையுமே சந்தோஷப்படுத்த நம்மால முடியுதுன்னா அப்புறம் பிரயோசனமில்லைன்னு ஏன் நினைக்கிறே? யார் கண்டது? ஒரு வேளை அந்த சந்தோஷ சூழ்நிலையில் உன் மனசிலேயும் ஒரு மன்னிப்பு உண்டாகி  மனசார அந்த வாழ்த்தை வாழ்த்திடலாமில்லையா?''
அதுவும் சரிதானே? புறப்பட்டார் ரகுநாதன்.


Monday, September 19, 2011

வாய்ப்பு


வினாடிகள் பொன்னானவை
அதை புரிந்து கொண்ட
வினாடியை அவனால் மறக்கவியலாது.
கண் முன் நிகழ்ந்தது அது.
லாரி மீது மோதி
எகிறித் தெறித்த பைக்கிலிருந்து
இடம் பெயர்ந்து முகம் பேர்ந்து
அந்த வாலிபன்...
ஓடிச்  சென்று தூக்கி
ஆட்டோவில் ஏற்றி...
உதவிடலாமா...?

தயங்கி நின்ற இரு வினாடிகளில்
தட்டிச் சென்றார் அந்த வாய்ப்பை
ஒரு வயோதிகர்.



Tuesday, September 13, 2011

மோதிரக் கை


''என்ன டைரக்டர் சார், உங்க குருநாதர் டைரக்டர் மாசிலாமணி இப்படி கமென்ட் அடிச்சிருக்கார் உங்க லேட்டஸ்ட் படத்தை?'' ஓடி வந்தான் அசிஸ்டன்ட் டைரக்டர் பழநி.
''என்ன, என்ன சொல்லியிருக்கார் என் மூணாவது படத்தை?'' ஆவல் பொங்கிற்று டைரக்டர் சுகந்தனுக்கு.
''காட்சிகளை  இன்னும் விறுவிறுப்பாய் இப்படி இப்படி அமைத்திருக்க வேண்டும்னு எழுதி ஒரு குட்டு வெச்சிருக்கார் பாருங்க.''
''அப்படியா, சபாஷ்!'' துள்ளிக் குதித்தார் சுகந்தன்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''என்னங்க இது, உங்க முதல் படத்துக்கு கமென்ட் சொல்றப்போ பளிச்சென்று நல்லாயிருக்குன்னு ஒரே வார்த்தையில் சொன்னார். ஆனா நீங்களோ அவ்வளவுதான் சொன்னாரான்னு குறைப்பட்டுக்கிட்டீங்க.''
''எஸ்!''
''ரெண்டாவது படத்துக்கும் அதையே தான் சொன்னார். அப்பவும் நீங்க மூஞ்சியைத் தூக்கி வெச்சிட்டு அவ்வளவுதான் சொன்னாரான்னு கேட்டீங்க.''
''ஞாபகமிருக்கு.''
''இப்ப இந்தப் படத்தை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்னு கமென்ட் கொடுத்திருக்கார். இதுக்குப் போய் துள்ளிக் குதிக்கிறீங்களே?''
''ஆமா, ரொம்ப சந்தோஷப்படறேன்.  உடனே போன் போட்டு அவருக்கு சொல்லணும்,'' என்றார் முகம் மலர.
இன்னமும் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த பழநிக்கு விளக்கினார், ''மடையா, என் குருநாதர் சொல்லுவார், எந்த நல்ல படமுமே நூறு பெர்சன்ட் சரியா வராது. அதிலும் இம்ப்ரூவ் பண்ண வழியிருக்கும்பாரு. ஸோ அப்படி என் படத்தை  அவர் சொன்னால் நல்லா வந்திருக்குன்னு தானே அர்த்தம்? எந்த சஜெஷனும் கொடுக்கலேன்னா வெத்துப் படம்னு அர்த்தம்.  அதான் எனக்கு இப்ப சந்தோஷமாயிருக்கு, புரியுதா?"                 


Wednesday, August 24, 2011

நம்பிக்கை




''கண்ணன், மாதவன் ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் நான் இந்த ப்ராஜெக்ட் லீடர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கணும், '' என்ற எம்.டி. பரசுராம் தன் மேனேஜரின் முகத்தைப் பார்த்தார்.
''ஒ.கே.''
''உங்க அபிப்பிராயம் என்ன, முதல்ல கண்ணனைப் பத்திச் சொல்லுங்க.''
''நல்ல திறமைசாலி. எம்.பி.ஏ. பிளஸ் எம்.எஸ்.  ஐம்பதுக்கு மேல  பிராஜக்டில  அனுபவம் .
''குட்.''
''அது  மட்டுமில்லே. இது வரை எந்த ஐடியா கேட்டும் என்கிட்டே வந்ததில்லே. என்னப்பா உனக்கு சந்தேகமே வராதான்னு நானே அசந்து போய்க் கேட்டேன். நெவர்னு சிரிச்சுக்கிட்டே சொல்வான்...''
''ஒ.கே. மாதவன் எப்படி?''
''திறமை சாலி தான் அவரும்.  எம்.பி. ஏ. பிளஸ் எம்.எஸ். ஐம்பது சொச்சம் பிராஜக்ட்ஸ்...''
''கோ ஆன்.''
''ஆனால் ஒரு விஷயம். ஏதாவது சின்ன சின்ன தவறு பண்ணிட்டு வந்து ஆலோசனை கேட்பார்.''
கண்ணனையே தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் பரசுராமோ, ''ஒ.கே, மாதவனையே போட்டுருங்க,'' என்றார்.
''சார்?''
''பாருங்க, பிராஜெக்ட் லீடர் வேலையில் இருக்கிறவங்க திறமையானவர்களாக இருக்கிறது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நம்பகமானவர்களாக இருப்பதும். தானே செயல் படுகிறவர்களை விட தவறு செய்தாலும் நம்மகிட்டே யோசனை கேட்டு செய்யறவங்க தான் நம்பகமானவங்க.''
''உண்மைதான் சார்,'' என்றார் அவரின் நுண்ணறிவை வியந்தபடி. 

Tuesday, August 16, 2011

எனினும்..



னினும் மீதமிருக்கிறது தன்னம்பிக்கை
அது எழ வைக்கிறது.


எனினும் ஆழ் மனதில்  அன்பிருக்கிறது
அது மறக்க  வைக்கிறது.
 

எனினும் அனுபவ அறிவிருக்கிறது
அது  துவளாதிருக்க செய்கிறது.
 

எனினும் சில நேரம் மழை பெய்கிறது
அது மனதைக் குளிர வைக்கிறது.
 

எனினும் அலைகடல் இசையிருக்கிறது.
அது மகிழ்ச்சி அளிக்கிறது.


'எனினும்' - அந்த வார்த்தையில் என் 
உலகிருக்கிறது!



Sunday, July 10, 2011

வழியனுப்ப வந்தவள்...



ற்று நேரத்தில் புறப்படவிருந்த ரயிலில் அமர்ந்திருந்தான் மகேஷ். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஸ்டேஷனுக்கு வரவில்லை. அப்பா இல்லை. 

சீட்டில் அமர்ந்ததிலிருந்தே அந்த வயதான பெண்மணியைக் கவனித்திருந்தான். பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு அவ்வப்போது கையை அசைப்பதும், 'பத்திரமா போயிட்டு வாடா கண்ணு,' என்று சொல்வதுமாக இருந்தாள். ஆனால் அவள் அதை யாருக்கு சொல்கிறாள்? ஊகிக்க முடியவில்லை. ஆவல் உந்த எழுந்து சென்று அவனிருந்த கம்பார்ட்மெண்டை ஆராய்ந்தான். இந்தப்பக்கம் யாரும் அவள் கையசைப்புக்கு பதில் கொடுக்கிற விதமாக இல்லை.


அதற்குள் ரயில் புறப்பட்டு விட அப்போதும் அவள் கையசைத்து, பத்திரம்.. பத்திரம் என்று சொல்ல.. யார்? யாரை வழியனுப்ப வந்திருக்கிறாள் இவள்? விசுவ ரூபமாய் கேள்வி.


இதற்கிடையில் இவனை சீட்டில் காணாமல் தேடிய டிக்கட் பரிசோதகர், ''என்ன தம்பி, இப்படி சுத்திக்கிட்டே இருந்தீங்கன்னா பெர்த் லிஸ்டை எப்படி செக் பண்றது?'' என்று கேட்டவர், பேசப் பேச கொஞ்ச தூரத்தில் சற்று பழக்கமாகி விட்டார். விஷயத்தை சொன்னான்.


''ஒ அந்த பொம்பளையா?''


''ஆமா சார். அவ யாரை வழியனுப்ப வந்தாள்னு ஒரு ஆர்வத்தில் பார்த்தேன்...''


''யாரையுமே இல்லை. ஒரு நாள் அவள் இதே ரயில்வே ஸ்டேஷனில், வேலை கிடைச்சிருக்குன்னு மும்பைக்குப் போன அவள் மகனை சந்தோஷமா வழியனுப்ப வந்திருக்கிறாள். அவன் தகாத நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக் கடத்தலில் இறங்கி கொலையாயிட்டான். அந்த ஷாக் அவளுக்கு. அந்த வருத்தம். தினம் பிளாட்பாரம் டிக்கட் வாங்கிட்டு வந்து மும்பை செல்லும் ரயிலருகே வந்து நிற்பாள். இதே கையசைப்பு. இதே வசனம். பத்திரமா போயிட்டு வாடா...''


அதற்கு மேல் அவனால்  கேட்க முடியவில்லை. மனதை எதுவோ அழுத்திற்று.


அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இறங்கிக் கொண்டான். நடக்க ஆரம்பித்தான் வீட்டை நோக்கி.
நண்பன் ஒருவன் ஊருக்கு வந்தபோது இவனிடம் குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டியதில் மயங்கி அவனைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தவன்  தன் தாயையும் அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை. 



Friday, June 17, 2011

அமைதி.. சிலிர்ப்பு..

அமைதி 
வேறெதுவும் வேண்டாம் போல் 
தோன்றுகிற மாலை 
வெறுமே என் உள்ளத்தை 
வைத்திருக்கும் வேளை
தானெதுவும் சொல்லாது 
தழுவுமொரு அமைதி 
எதையோ என்னிடம் 
வேண்டி நிற்கிறது.


சிலிர்ப்பு 


சிதறிக் கிடக்கும்
சம்பங்கி மலர்கள்
ஒன்றின் மேல் கூட 
பட்டு விடாமல்
சைக்கிளை ஓட்டிச்
சென்றதில் நேர்ந்த
தடுமாற்றம்
அதில் வென்றதும்
சிலிர்க்க வைத்தது.

Monday, June 6, 2011

இணைந்து நின்று...


''என்ன  வசந்த்?'' என்று நோக்கினார் திருவேங்கடம். எம்.டி. ''சொல்லு.''
''இசட் கம்பெனிக்கு நாம் அனுப்பின என்ட்ரியை நிராகரிச்சிட்டாங்க.''
''ஓஹோ? இம்ப்ரூவ் பண்ணித் தரச் சொல்றாங்களா?''
''வரதன் அட் கம்பெனியோட கான்செப்டை தேர்ந்தெடுத்துட்டாங்க.''
''அட, நிஜமாவா?'' முகத்தில் ஆச்சரியம் காட்டினார்.
''ஆமா சார், எத்தனை பாடுபட்டுத் தயாரிச்சு அனுப்பினது?''
''ஆமாமா,'' என்றார் திரு உணர்ச்சியை முகத்தில் கொட்டியபடி, ''எனக்குத் தெரியாதா என்ன? காபி ரைட்டர் வினித் முதலில் ஒரு டிசைன் போட்டுக் கொடுத்தான். அது சரியில்லே, வேறே போட்டுட்டு வான்னு அனுப்பினே.  அப்புறம் வரிசையா அவன் கொடுத்த மூணுமே போதுமான  திருப்தி தரலே உனக்கு. அப்பால கதிர்வேலைப் போடச்  சொன்னே. அந்த நாலுமே தேறலே. பிறகு ரங்கா போட்டுத் தந்த மூன்றில் கடைசியா ஒன்றை ஓகே செய்வதற்குள் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்டாய் நீ?''
''அப்படியிருந்தும் அந்த ஆட்கள் -- நேத்து முளைச்ச விளம்பர கம்பெனி -- ஆர்டரைக் கவ்விட்டுப் போயிட்டாங்களே சார்?''
''அது எப்படின்னு ஆச்சரியப்படறே இல்லே?''
''ரொம்ப பாஸ்! ஏதோ லக் தான்.''
''இதுலே ஆச்சரியப்பட ஏதுமில்லே வசந்த். அவர்களோட வொர்கிங் பாட்டர்ன் எப்படின்னு விசாரித்தேன். சீஃபிலிருந்து காபி ரைட்டர் வரை எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கான்செப்டாக டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு அம்சமா விருத்தி செய்து எல்லாருடைய பெஸ்டும்  வர்ற மாதிரி ஒரு அட்  தயாரிக்கிறாங்க. உங்களை மாதிரி தனித்தனியா உட்கார்ந்து ஒவ்வொன்றிலும் விமரிசனப் பார்வையை ஓட விடாமல் டீம் வொர்க் செய்யறாங்க. அதான் நம்மை தோற்கடிச்சிட்டாங்க. இனிமேலாவது...?''
''புரிகிறது சார்,'' என்றான் வசந்த்.


Tuesday, May 24, 2011

மனதின் இசை







மனதின் இசை
 
வரைத் திறந்திட
திவலைகள்  தெறித்திட
கவலைகள் வழிவிட
மனதில் கேட்கிற
தீம் தரி கிட...









விடிகாலை

ன்  நினைவுடனே தூங்கி
உன் நினைவுடனே எழுந்து
ஒரு நீண்ட பகலாக
வாழ்க்கை!

Wednesday, May 18, 2011

கனவு வீடு


ந்தக் கிராமத்துக்கே பெருமை சேர்த்துக் கம்பீரமாய் எழும்பியிருந்தது அந்த வீடு.

''என்ன பரமசிவம், உங்க பையன் போட்டிருக்கிற வீடு பிரமாதமா இருக்கே?'' கேட்டார்  நண்பர் மாதவன்.

''ஆமாங்க, சின்னப் பிள்ளையா இருக்கிறப்ப அடிக்கடி சொல்லுவான், 'நான் வளர்ந்து பெரிய ஆளானதும் நம்ம ஊரில் பிரம்மாண்டமா ஒரு வீடு கட்டுவேன்'னு. இப்ப கட்டிட்டான்,'' என்றார் சிரித்தபடி.

''சென்னைக்குப் போய் பிரபல  டைரக்டர் ஆனபிறகு உங்களைக் கண்டுக்கலேன்னு வருத்தப் படுவீங்களே அடிக்கடி, இப்ப நம்ம ஊர் தேடி வந்திருக்கிறான் உங்க பையன்.  இனி எல்லாம் சரியாயிரும்.''

''உங்க வாக்கு பலிக்கட்டும்!'' என்றார் பரமசிவம்.

டுத்த மாதம்.

ஷூட்டிங் முடிந்ததும் வீடு செட்டைப் பிரித்துச் சென்றனர் படக் குழுவினர்.

ஏதோ கொஞ்ச நாளாவது மகனைப் பார்க்க முடிந்ததே என்று திருப்திப் பட்டுக்கொண்டார் அவர்.

/\/\/\/\/\

(குமுதம் 14-01-2009 இதழில் வெளியானது)

Saturday, May 7, 2011

மடிப்புகள்


ணவன் துணிகளுக்கு இஸ்திரி போடுவதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தாள் ராஜி.

எத்தனையோ பையன்களின் யூனிஃபார்ம் சட்டைகளை அயன் பண்ணித் தருகிற கணவனின் பெட்டியால் தங்கள் மகனின் யூனிஃபார்ம் சட்டையையும் ஒரு நாள் அயன் பண்ணி அதை அவன் ஜம்மென்று போட்டுக்கொண்டு போகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்பவும் போல பீறிட்டெழுந்தது.

ஆனால் ராமசாமிக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காது. எதிர் ஃபிளாட்களின் மொத்தத் துணிகளும் காலையிலேயே வந்து குவிந்து விடும்.

இன்றைக்கு எப்படியாவது விசுவின் சட்டையை அயன் பண்ண வைத்து விடணும் என்று தீர்மானித்தாள் ராஜி.

வசரம் அவசரமாக இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த ராமசாமி, ''கடவுளே, போச்சு!'' என்று கத்தினான்.

''என்னங்க ஆச்சு?''உள்ளிருந்து ஓடிவந்தாள் ராஜி.

''பெட்டி முனை கீறி சட்டை கிழிஞ்சிட்டது. அடடா, இது அந்த டி த்ரீ ஃ பிளாட் கோவிந்தனோடது ஆச்சே! லேசில் விடமாட்டாரே?''

''கவலைப் படாதீங்கப்பா!'' என்றொரு குரல் கேட்டது. விசு.

''இது என் சட்டைதாம்பா. எப்படியோ அந்தத் துணிகளோடு சேர்ந்து விட்டிருக்கு!''

''அப்பாடா!'' பெருமூச்சு விட்டான் ராமசாமி. ''வேறே சட்டை போட்டுக்கடா. சாயந்தரம் அம்மா தைச்சுத் தந்துடுவா.''

காலையில் துணிகளோடு துணியாய் பையனின் சட்டையையும் செருகி வைத்திருந்த ராஜி, தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.


( 'குமுதம்' 07-02-2005 இதழில் வெளியானது )

Wednesday, April 13, 2011

கும்பிடப்போன தெய்வம்...



குஷி தாங்கவில்லை ராஜுவுக்கு.

அவனுடைய அபிமான நடிகை அஜந்தாஸ்ரீ தங்கள் ஊருக்கு ஒரு நாள் ஷூட்டிங்குக்காக வருகிறாள் என்று அறிந்ததுமே எப்ப வரும், எப்ப வரும் என்று காத்திருந்த அந்தப் பத்தாம் தேதியும் வந்தது.

''என்னடா ராஜு, இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை, உனக்குக் காலேஜ் இல்லை தானே? என்னோட துணையா கோயிலுக்குக் கொஞ்சம் வாயேன். பக்கத்து ஊர் கோயிலிலே இன்னிக்கு விசேஷம்.'' - அம்மா கேட்டாள்.

''போம்மா நீ வேறே! எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு,'' என்று மறுத்து விட்டு காலையிலேயே கிளம்பி விட்டான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு.

டப்பிடிப்பு ஆரம்பமாகியிருந்தது. 'சே, இந்த அம்மா வேறே பேசிப் பேசி அரை மணி நேரம் வேஸ்ட் பண்ணிட்டாங்க.' சலித்துக் கொண்டே தன் அபிமான நடிகையை தேடினான்.

அஜந்தாஸ்ரீயைக் கானோம்.

டைரக்டர் யாரிடமோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். மெல்ல ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரை அணுகி விசாரித்தான். ''ஹீரோயின் எங்கே?''

''ரெண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டாங்க. டைரக்டர் முடியாது இன்னிக்கு நிறைய ஷாட்ஸ் இருக்குன்னார். கெஞ்சி பர்மிஷன் வாங்கிட்டுப் போயிட்டாங்க!''

''அப்படியா, எங்கே?''

''பக்கத்து ஊர் கோயிலிலே ஏதோ விசேஷமாமே?''


(குமுதம் 06-09-2006 இதழில் வெளியானது)

Monday, April 4, 2011

பாடாத பாடல்கள் - 2






பாடல் காட்சி வெறும் பாடல் காட்சியாக மட்டுமில்லாது திரைக் கதையின் ஓர் அங்கமாக இருந்தால் எத்தனை ருசிகரமாக இருக்கும்! இதோ இப்ப பாட்டு வரும்னு சொல்றமாதிரி இல்லாமல் off beat ஆக, பொருத்தமாகவும் புதுமையாகவும் வந்த பாடல்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தேன். இதோ அதன் தொடர்ச்சி.
7 . சொல்ல வேண்டியதே இல்லை. அற்புதமாகத்தானே இருக்கும் அந்தக் காட்சி? 'நூறு பாடல் தொடர்ந்து பாட வேண்டும் அம்பிகாபதி. ஆனால் ஒரு முறை கூட எதிரில் மாடத்திலிருக்கும் தன் காதலி அமராவதி(பானுமதி)யின் முகத்தைப் பார்க்கக் கூடாது..' இந்த நிபந்தனைக்கு உட்பட்டு சிவாஜி ாடுவார். எங்கே அவர் தோற்று விடுவரோ என்ற பதைபதைப்புடன் நம்மைப் பார்த்து ரசிக்க வைக்கும் அந்தப் பாடல் ''சிந்தனை செய் மனமே..'' மறைந்த மேதை ஜி. ராமநாதன் இசையில் அமைந்த மறையாத பாடல் அம்பிகாபதி படத்தில் வருவது. கடைசியில் அவர் தோற்று விடுவதால் தான் கதை நாட்டில் காவியமானது, பாடல் நம் மனதில் ஓவியமானது.
8. 'பட்டணம் தான் போகப் போறேண்டி பொம்பளே..பணம் காசு பார்க்கப் போறேண்டி, நல்ல கட்டாணி முத்தே நீயும் வாடி பெண்டாட்டி தாயே...' என்று கணவன் அழைக்க 'டவுனு பக்கம் போகாதீங்க.. மாமா டவுனாகிப் போயிடுவீங்க,' என்று அவள் தடுக்க அந்தத் தெருக் கூத்து பாடல் 'காலம் மாறிப் போச்சு' (1957)படத்தில் வரும். பட்டணத்தில் என்னென்ன சொகுசான சௌகரியங்கள் என்று அவன் அடுக்க அதில் என்னென்ன இக்கட்டும் இடரும் என்று அவள் சொடுக்க பாட்டிலேயே அவன் திருந்தும் சுவையான பாடல்.
9.உலவும் தென்றல் காற்றினிலே... ராஜ குமாரியை குறி வைத்து ஏமாந்து மந்திரி குமாரியை மணந்த வில்லன் அவளை ஓடத்தில் உலா அழைத்துப் போகும் பாடல். ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளதாக இருக்கும் இந்தப் பாடலில். 'தெளிந்த நீரைப் போலத் தூய காதல் கொண்டோம் நாம்...' என்றவள் தொடங்க, 'களங்கம் அதிலும் காணுவாய், கவனம் வைத்தே பார்.'. என்று அவன் கோடி காட்ட அந்த அப்பாவி மடந்தை அதையும் அவன் குறும்பாக எடுத்துக் கொண்டு 'குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?' என்று பாடுவாள். ஜி. ராமனாதனின் மிக மனம் தொடும் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு நிகர் இதுவரை வரவில்ை.
10. ஆயுதம் இழந்து நிற்கும் ராவணனைப் பார்த்து ராமன் 'இன்று போய் நாளை வாராய்...' என்று சொல்வான் அல்லவா? சம்பூர்ண ராமாயணம் படத்தில் அந்தக் காட்சியைத் தொடர்ந்து வரும் காட்சி இருக்கிறதே இப்போது நினைத்தாலும் மனதில் உருக்கம் இழையோடும். ஆம், அரண்மனைக்கு வந்ததும் ராவணன் அந்த தன் அவல நிலையை நினைத்து வீணை இசைத்து மனம் வாடிப் பாடும் பாடல் கே. வி. மகாதேவன் இசையில் மிளிரும். ''இன்று போய் நாளை வாராய்.. என எனை ஒரு மனிதனும் புகலுவதோ...மண் மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை ஏன் கொடுத்தாய் இறைவா...''
11. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்.. அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்...' இந்தப் பக்கம் சிவாஜி குனிந்து தரையில் அமர்ந்து தன் காதலியின் அப்பா முன் மரியாதையாக பாட அந்தப் பக்கம் சோபாவில் அமர்ந்திருக்கும் எம். ஆர். ராதா உற்சாகமாகி உடன் ஸ்வரம் பாட, 'மாமா!' 'மாப்ளே!' என்று ஒருவரை ஒருவர் நெருங்க ஏற்கெனவே சிவாஜியைக் கொலை செய்ய வந்த வில்லனின் முகமும் வருங்கால மாமாவின் முகமும் ஒன்று போலிருக்கும் என்பதறிந்த நாம் அவர்கள் முகம் பார்த்து பதறப் போகும் வினாடியை எதிர்பார்த்து விலா நோக சிரித்து ரசிக்கும் அந்த சுவையான கர்நாடக சங்கீத காமெடிப் பாடல்...
12. மேற்கொண்டு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாம். சிவாஜி நடித்த முதல் மரியாதை. என்றாலே போதும், அந்த அற்புதமான காட்சிப் பாடல், இளைய ராஜாவின் 'பூங்காற்று' எல்லார் மனதிலும் திரும்பும்!

Sunday, February 6, 2011

மூன்று கண்கள்...




மாலினிக்கு கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர்? சந்தேகமே இல்லை, நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் தான்...

கணினியின் வெண்திரையில் லதிகாவின் இமெயில் அவளைப் பதில் கேட்டது.

'...பாருடி, ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் ஆப்பர்சூநிட்டி! பத்மாவிலேர்ந்து சரளா வரை ஒவ்வொருத்தர் அட்ரஸ் கண்டு பிடிக்க நான் பட்ட பாடு! இருபது வருஷத்துக்கப்புறம் நாம எல்லாரும் ஒண்ணா லூட்டி அடிக்கப் போறோம், ஜெய்ப்பூர், சிம்லான்னு கலக்கப் போறோம். முன்னால நாம காலேஜ் டூர்ல கலக்கின அதே இடங்களுக்கு! எல்லாரும், 'எஸ்' கொடுத்திட்டாங்க. எவ்ரிதிங் அரேஞ்ச்ட். இந்த இருபதாம் தேதி புறப்படறோம். உனக்கும் சேர்த்துத்தான் இடம் போட்டிருக்கு. எதுக்கும் ஒரு ஒ.கே., மெயில் கொடுத்திடு... பை...'

இந்த ஐடியாவை லதிகாவிடம் போட்டுக் கொடுத்ததே மாலினி தான். இப்ப அவளாலேயே வர முடியாதுன்னு சொல்ல வேண்டியிருக்கு.

மகள், கணவன், மாமனார் என்று என்நேரமும் இயங்குகிறவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்... மனசு கெக்கலி பண்ணிற்று.
.
நடந்தது நிஜம் தானா? அவளால் நம்ப முடியவில்லை...



நேற்று மாலை...

கம்பெனியிலிருந்து திரும்பிய கணவர் கணேசனிடம் டூர் பற்றி சொல்ல வாயெடுத்த போது, ''மாலு, சி.சி.ஐ.ஈ. அடுத்த எக்ஸாமுக்கு அப்ளை பண்ணிட்டேன்!''

''ஐயோ, அப்ளை பண்ணிட்டீங்களா? அது பத்தி நாம டிஸ்கஸ் பண்ணவே இல்லையே இன்னும்?''

''அதான் நீ இருக்கியே, அப்புறம் என்ன கவலை? போன வருஷம் எல்லா ஹெல்பும் நீ தானே பண்ணினே... நாளையிலேருந்து உன் வேலை தொடங்குது. ரெண்டு மாசம்... அவ்வளவுதான். வெற்றி நமதே!'' என்று சொல்லிவிட்டார். இனி என்ன சொல்றது... என்னத்தை கேக்கிறது? மெல்ல சொல்லிப் பார்க்கலாமா அடுத்த வருஷம் கூட எழுதலாமேன்னா, கேட்க மாட்டார். வந்த ஸ்பிரிட் போயிடுச்சு உன்னாலம்பார்...

அதற்குள் மகள் சங்கீதா அடுத்த குண்டைப் போட்டாள்.

''மாம், புராஜெக்டில் ஃபர்ஸ்டா வந்தேனில்லையா...டான்ஸிலேயும் ஒரு கை பாருன்னாங்க கமலி டீச்சர். அதான், பேர் கொடுத்திட்டேன். அடுத்த வாரம் ஃபங் ஷன். நீதான் எல்லா ஹெல்பும் பண்றே.''

''அடிப்பாவி, என்கிட்டே ஏதும் கேக்க வேணாமா?''

''உன்கிட்ட கேட்டா என்ன மறுக்கவா போறே என் செல்ல அம்மா?''

''வரவர எல்லாம் உன் இஷ்டம்னு ஆயிப் போச்சு! போய் முடியாதுன்னு சொல்லிடு!''

''நதிங் டூயிங். நாளையிலேர்ந்து ரிஹர்சல். தயாரா இரு.'' இவள் சொன்னதை கொஞ்சமாவது பொருட்படுத்தினால் தானே?

இந்தப் பக்கம் வந்தால் மாமனார் அவர் பங்குக்கு...

''மாலினி, இங்கே வாம்மா!''

''சொல்லுங்க மாமா.''

''ஒரு ஹெல்ப் பண்ணனுமேம்மா... அடுத்த வாரம் கொல்கத்தாவில எழுத்தாளர் மாநாடு இருக்கு. நாளைக்கு நான் கிளம்பணும். தோட்டத்தில தேங்காய் வெட்டற வேலை இருக்கு. கிணத்தில தூர் வார்றதுக்கு ஆள் வருது. கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கறியா?''

''சரி, மாமா.'' என்று சொல்லத்தான் முடிந்தது.



ரி சரி.... எல்லாம் நம் தலை எழுத்து. என்ன உழைத்து என்ன? எல்லாம் வரிசையாய் வேலை வாங்கத்தான் காத்திருக்காங்க.

ரிப்ளையை கிளிக் பண்ணி தோழிக்கு பதில் டைப் பண்ண ஆரம்பித்தாள்.

''ஸாரிடா. . வீட்டில் சில வேலைகள். நான்தான் சொன்னேன் இந்த யோசனையை என்றாலும் என்னால உங்களோட கலந்துக்க முடியலே... ஆல் த பெஸ்ட்!''

'செண்ட்'- பட்டனை கிளிக் செய்யப் போகுமுன் 'டக்'கென்று 'ஹேங்' ஆகிவிட்டது கணினி.
எரிச்சலுடன் எழுந்தாள். போனில் சொல்லலாம் என்றால் வறுத்தெடுத்து விடுவாள் லதிகா. அப்புறம் வந்து மெயிலை அனுப்பலாம்...



சாயங்காலம் வரை ஒன்று மாற்றி ஒன்றாக வேலைகள்...

அப்போது தான் அந்த ஆனந்த அதிர்ச்சி. ஒன்றன் பின் ஒன்றாக...

''அம்மா, டான்ஸ் ப்ரோகிராமில் என் பேரை கேன்சல் பண்ணிட்டாங்க. சரி போங்கடான்னு விட்டுட்டேன். அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்மா,'' என்றபடி வந்தாள் சங்கீதா.
முகத்தைப் பார்க்காமலேயே கிச்சனுக்குப் போனாள்.

கம்பெனியிலிருந்து கணேசனின் போன் கால் வந்தது.

''மாலுக்குட்டி, எனக்கென்னமோ கொஞ்சம் யோசனையா இருக்கு. இப்ப பரீட்சை எழுதினா வீணா உடனே கம்பெனி மாறணுமேன்னு. அப்ளிகேஷனை கிழிச்சுப் போட்டிட்டேன். நீ அடிக்க வர மாட்டியே?'' கெஞ்சினான்.

இந்தப் பக்கம் மாமாவும் கையில் ஏதோ ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு..
''ஒண்ணுமில்லே, மாநாடைஒத்தி வெச்சுட்டாங்கம்மா . இனி இங்கே மத்த வேலைகளை நான் பார்த்துக்கறேன்!''

மூடிய அதே வேகத்தில் திறக்கிற கதவுகள்!

நம்பவே முடியவில்லை...

மனசுக்குள் மறுபடி சிறகடித்தல்கள். சப்தம் அவளுக்கே கேட்டது.

நல்ல வேளை, கம்ப்யூட்டர் காலை வாரியது. இப்ப ஆன் செய்து பார்க்கலாம், எஸ் மெயில் கொடுத்திரலாம். சாதுவாய் மேஜைமேல் அமர்ந்திருந்த தகவல் தேவன் அருகில் வந்தாள்.
போட்டதும் திரை திறந்தது. விட்ட இடத்திலேயே...

சட்டென்று அவளுக்கு எல்லாம் புரிந்து போயிற்று. காலையில் ஸ்கூல் போகுமுன் கம்ப்யூட்டர் பக்கம் சங்கீதா ஒரு நிமிடம் வந்தது ஞாபகத்தில் நின்றது.

'அதான் விட்ட இடத்திலேயே ஓபன் ஆகுதே! பார்த்திருப்பாள். மத்தவங்க கிட்டேயும் அம்மாவுக்கு இப்படி ஒரு பிளான் இருந்திருக்கு என்ற செய்தியைக் கொடுத்திருப்பாள். அதான் உடனே சுதாரிச்சு அவங்களும்....

இத்தனை அன்பா என் மேல? இத்தனை விட்டுக் கொடுத்தலுக்குத் தயாரா இருக்கிறவங்க கூடவா நான் இருக்கேன்? வைரஸாக விழுங்கிற்று அந்த பிரமிப்பு...



''என்னம்மா மெயில்ல?'' என்று அருகில் வந்தாள். ஒன்றும் தெரியாதவள் மாதிரி நடிக்க மகள் சிரமப் படுவதைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது மனதில்.

எட்டிப் பார்க்கிற மாதிரி பார்த்து விட்டு, ''அட, சூப்பர் கெட் டுகெதர்! அம்மா... போயிட்டு வாம்மா. என்னம்மா இது, வர முடியாதுன்னு பதில் அடிச்சு வெச்சிருக்கே? அதை டெலிட் பண்ணும்மா... ஒரே வார்த்தை! ஒகே! கொடு....''

திரும்பி அவள் முகத்தைப் பார்த்தாள் மாலினி. அவள் கண்ணுக்குள் அதே போல் கணேசனுடைய, மாமாவுடைய முகங்களும் தெரிந்தன.

இந்தப் பாசம். இந்த அன்பு. இதற்காக எதையும் செய்யலாமே!

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுப்பது தானே வாழ்க்கை!

அவள் டூர் செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்து விட்டனர் அவள் குடும்பத்தினர்.

('வார மலர்' இதழில் -ஜனவரி 23, 2011- வெளியானது)

Thursday, January 13, 2011

பாடாத பாடல்கள்! - 1


ரு திரைப் படத்தின் கதையுடன், பாத்திரங்களுடன் ஒன்றியிருப்போம், அப்போது பார்த்து ஒரு டூயட் சாங், அல்லது கனவுப் பாடல் வரும். பார்ப்பது சினிமா என்று ஞாபகப்படுத்தி விடும். இப்படி விலகியிராமல் அதாவது பாடல் காட்சி பாடல் காட்சியாக இல்லாமல் எப்பவாவது சில முறைதாம் திரைக்கதையின் ஒரு காட்சியாக அமையும். சிறந்த திரைக் கதாசிரியரும் இயக்குனரும் அதற்குத்தான் படாத (பாடாத) பாடுபடுவார்கள். இதோ இப்ப பாட்டு வரும்னு சொல்றமாதிரி இல்லாம off beat ஆக, பொருத்தமாகவும் புதுமையான காட்சிகளை அமைத்தும் அவர்கள் தந்த பாடல்கள் சிலவற்றை நான் போற்றி மனதில் பத்திரப் படுத்திக் கொள்வதுண்டு. அந்தப் பொங்கலில் கொஞ்சத்தை இந்தப் பொங்கலின்போது உங்கள் பார்வைக்கு , ஸாரி, கேள்விக்கு வைக்கிறேன்.
1. 'டுத்த வீட்டுப் பெண்' படத்தில் அஞ்சலி தேவியை காதலிக்கும் அப்பாவி டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பாட வராது. அஞ்சலிக்கோ பாட்டுன்னா உயிரு. அடுத்தடுத்த வீடு. பால்கனியில போய் நின்னுக்கற டி.ஆர்.ஆர், பாடறது மாதிரி வாயசைக்கிறார். ''கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே...காதாலே கேட்டுக் கேட்டு செல்லாதே...'' உள்ளே இருந்து கொண்டு அவர் நண்பர் தங்கவேலு பாடுவார். (தங்கவேலுவுக்கே பின்னணி பி.பி.ஸ்ரீனிவாஸ் என்பது இன்னும் ரசமான விஷயம்.) குரலில் மயங்கி அஞ்சலி அவருடன் காதல் கொள்ள, இப்படியாக இந்தப் பாடல் படக் கதையோடு ஒன்றியிருக்கும்.

2. 'வானம்பாடி' என்றொரு பாடம். இதுவும் அ.வீ.பெண் போல வங்காளப் படத் தழுவல்தான். கவிப் போட்டி ஒன்று நடை பெறும். தேவிகா ஒரு பக்கம். எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறு பக்கம். ''பெண்கவியை வெல்ல வந்த ஆண்கவியே வருக, உங்கள் பெட்டகத்தைத் திறந்து வைத்து பொருளை அள்ளித் தருக...'' என்று தொடங்கி இவர் கேள்விகளைப் பாடலாய் வடிக்க, அவர் பதில் சொல்ல, கடைசியில் அவர் பதில் தெரியாமல் விழிக்க...என்று விறு விறுப்பான காட்சி விறு விறு பாடல் ரெண்டும் ஒருங்கே...
3. ந்த சங்கீத வித்வானிடம் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தன் வாழ்க்கை சிதைந்ததால் முடியாமல் போனதோ அவரிடம் தன் பத்து வயது மகனை அனுப்பி படிக்க வைக்கிறாள் கதா நாயகி. அவனும் படித்துத் தேறி விடுகிறான். அடுத்து அந்தக் காட்சி. வயதாகிவிட்ட அவர் மேடையில் பாடுகையில் இருமலில் முடியாமல் பாதிப் பாட்டில் திணற, மீதிப் பாடலைத் தொடர்ந்தபடியே கீழே இருந்து மேடையில் ஏறி வருகிறான் அந்தப் பையன். ஊகித்திருப்பீங்க. 'சங்கராபரணம்' கிளைமாக்ஸ் பாடல்! தொரகுணா இசி வந்தி சேவா...

4. ''நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை, நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை.. ''என்று தம்பிக்காக அண்ணனும் அண்ணனுக்காக தம்பியும் பெண் பார்த்து விட்டு வந்து நீச்சல் குளத்தில் நீந்தியவாறே பாடும் 'படித்தால் மட்டும் போதுமா'வில் வரும் ''பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை..'' என்ற மறக்க முடியாத சிவாஜி -- பாலாஜி பாடல் காட்சி.
5 சிறுமி டெய்சி இரானிக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் டீச்சர் நந்தா ''மிட்டி மிட்டி பாத் ஸே...'' என்ற அந்தப் பாடலைப் பாட ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் அதற்குப் பதில் சொல்கிற மாதிரி சிறுமி இரண்டு வரி பாடுவாள். சபாஷ் என்பார் நந்தா. கிளைமாக்சில் சிறுமி வில்லனால் கடத்தப்பட்டு ஒரு கட்டடத்தில் அடைக்கப் பட்டிருக்கையில் ஏரியாவை மட்டும் ஊகித்து அறிந்த கதாநாயகன் அந்தத் தெரு முனையில் நின்று டீச்சர் நந்தாவை அதே பாடலைப் பாடவைக்கிறான். மூன்றாவது சரணத்தின் போது... காவலுக்கு நின்ற ஆளை பரிதாபமாய் சிறுமி பார்க்க அவன் தலையசைக்க, அவள் பாடுகிறாள். ''சபாஷ்!'' என்ற வரி பிறக்கிறது இங்கே! ஓடிச்சென்று காப்பாற்றுகிறார்கள். 'கைதி நம்பர் 911' என்ற இந்திப் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி இது. தமிழிலும் 'கைதி கண்ணாயிரம்' என்று இந்தப் படம் வந்தது. ''கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்...'' என்ற பாடல். கேட்டிருப்பீர்களே? பின்நாட்களில் வந்த, அதான் சார், குடும்பம் சேர்ந்து ஒரு
பாட்டைப் பாடறதும் அப்புறம் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சு போனபின் கடைசியில் அந்தப் பாட்டு(!) அவங்களை ஒன்று சேர்க்கிறதும் என்று ஒரு 'என்ன கொடுமை சார் இது?' அதுக்கெல்லாம் தாத்தா இந்தப் பாடல் தான்.
6. துரத்தும் போலீசிடமிருந்து தப்ப பிரதீப் குமாரும் ஷேக் முக்தாரும் அந்த நாடகக் கொட்டகை மேடைக்குள் நுழைந்து விடுகிறார்கள். அங்கே கவாலிப் பாடல் பாடும் ஷகீலா பானுவுக்குப் போட்டிப் பாடல் பாட வேண்டிய திடீர் நிலை. சமாளித்து பாடுகிறார்கள். ''மில்னே கி நஜர் தும்சே...'' என்ற விளாசலும் பதில் விளாசலுமாக கலக்கும் பாடல் 'வஸ்தாதோம் கி வஸ்தாத்' இந்திப் படத்தின் அசத்தல் காட்சி. ''பாரடி கண்ணே கொஞ்சம், பைத்தியமானது நெஞ்சம்... '' (சாவித்திரி, அசோகன், மனோகர்.) என்று தமிழ் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்திலும் ரசித்தோம் இதை.

(தொடரும்...நீங்கள் ரசித்தால்!)