ஒரு திரைப் படத்தின் கதையுடன், பாத்திரங்களுடன் ஒன்றியிருப்போம், அப்போது பார்த்து ஒரு டூயட் சாங், அல்லது கனவுப் பாடல் வரும். பார்ப்பது சினிமா என்று ஞாபகப்படுத்தி விடும். இப்படி விலகியிராமல் அதாவது பாடல் காட்சி பாடல் காட்சியாக இல்லாமல் எப்பவாவது சில முறைதாம் திரைக்கதையின் ஒரு காட்சியாக அமையும். சிறந்த திரைக் கதாசிரியரும் இயக்குனரும் அதற்குத்தான் படாத (பாடாத) பாடுபடுவார்கள். இதோ இப்ப பாட்டு வரும்னு சொல்றமாதிரி இல்லாம off beat ஆக, பொருத்தமாகவும் புதுமையான காட்சிகளை அமைத்தும் அவர்கள் தந்த பாடல்கள் சிலவற்றை நான் போற்றி மனதில் பத்திரப் படுத்திக் கொள்வதுண்டு. அந்தப் பொங்கலில் கொஞ்சத்தை இந்தப் பொங்கலின்போது உங்கள் பார்வைக்கு , ஸாரி, கேள்விக்கு வைக்கிறேன்.
1. 'அடுத்த வீட்டுப் பெண்' படத்தில் அஞ்சலி தேவியை காதலிக்கும் அப்பாவி டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பாட வராது. அஞ்சலிக்கோ பாட்டுன்னா உயிரு. அடுத்தடுத்த வீடு. பால்கனியில போய் நின்னுக்கற டி.ஆர்.ஆர், பாடறது மாதிரி வாயசைக்கிறார். ''கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே...காதாலே கேட்டுக் கேட்டு செல்லாதே...'' உள்ளே இருந்து கொண்டு அவர் நண்பர் தங்கவேலு பாடுவார். (தங்கவேலுவுக்கே பின்னணி பி.பி.ஸ்ரீனிவாஸ் என்பது இன்னும் ரசமான விஷயம்.) குரலில் மயங்கி அஞ்சலி அவருடன் காதல் கொள்ள, இப்படியாக இந்தப் பாடல் படக் கதையோடு ஒன்றியிருக்கும்.
2. 'வானம்பாடி' என்றொரு பாடம். இதுவும் அ.வீ.பெண் போல வங்காளப் படத் தழுவல்தான். கவிப் போட்டி ஒன்று நடை பெறும். தேவிகா ஒரு பக்கம். எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறு பக்கம். ''பெண்கவியை வெல்ல வந்த ஆண்கவியே வருக, உங்கள் பெட்டகத்தைத் திறந்து வைத்து பொருளை அள்ளித் தருக...'' என்று தொடங்கி இவர் கேள்விகளைப் பாடலாய் வடிக்க, அவர் பதில் சொல்ல, கடைசியில் அவர் பதில் தெரியாமல் விழிக்க...என்று விறு விறுப்பான காட்சி விறு விறு பாடல் ரெண்டும் ஒருங்கே...
3. எந்த சங்கீத வித்வானிடம் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தன் வாழ்க்கை சிதைந்ததால் முடியாமல் போனதோ அவரிடம் தன் பத்து வயது மகனை அனுப்பி படிக்க வைக்கிறாள் கதா நாயகி. அவனும் படித்துத் தேறி விடுகிறான். அடுத்து அந்தக் காட்சி. வயதாகிவிட்ட அவர் மேடையில் பாடுகையில் இருமலில் முடியாமல் பாதிப் பாட்டில் திணற, மீதிப் பாடலைத் தொடர்ந்தபடியே கீழே இருந்து மேடையில் ஏறி வருகிறான் அந்தப் பையன். ஊகித்திருப்பீங்க. 'சங்கராபரணம்' கிளைமாக்ஸ் பாடல்! தொரகுணா இசி வந்தி சேவா...
4. ''நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை, நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை.. ''என்று தம்பிக்காக அண்ணனும் அண்ணனுக்காக தம்பியும் பெண் பார்த்து விட்டு வந்து நீச்சல் குளத்தில் நீந்தியவாறே பாடும் 'படித்தால் மட்டும் போதுமா'வில் வரும் ''பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை..'' என்ற மறக்க முடியாத சிவாஜி -- பாலாஜி பாடல் காட்சி.
5 சிறுமி டெய்சி இரானிக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் டீச்சர் நந்தா ''மிட்டி மிட்டி பாத் ஸே...'' என்ற அந்தப் பாடலைப் பாட ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் அதற்குப் பதில் சொல்கிற மாதிரி சிறுமி இரண்டு வரி பாடுவாள். சபாஷ் என்பார் நந்தா. கிளைமாக்சில் சிறுமி வில்லனால் கடத்தப்பட்டு ஒரு கட்டடத்தில் அடைக்கப் பட்டிருக்கையில் ஏரியாவை மட்டும் ஊகித்து அறிந்த கதாநாயகன் அந்தத் தெரு முனையில் நின்று டீச்சர் நந்தாவை அதே பாடலைப் பாடவைக்கிறான். மூன்றாவது சரணத்தின் போது... காவலுக்கு நின்ற ஆளை பரிதாபமாய் சிறுமி பார்க்க அவன் தலையசைக்க, அவள் பாடுகிறாள். ''சபாஷ்!'' என்ற வரி பிறக்கிறது இங்கே! ஓடிச்சென்று காப்பாற்றுகிறார்கள். 'கைதி நம்பர் 911' என்ற இந்திப் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி இது. தமிழிலும் 'கைதி கண்ணாயிரம்' என்று இந்தப் படம் வந்தது. ''கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்...'' என்ற பாடல். கேட்டிருப்பீர்களே? பின்நாட்களில் வந்த, அதான் சார், குடும்பம் சேர்ந்து ஒரு
பாட்டைப் பாடறதும் அப்புறம் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சு போனபின் கடைசியில் அந்தப் பாட்டு(!) அவங்களை ஒன்று சேர்க்கிறதும் என்று ஒரு 'என்ன கொடுமை சார் இது?' அதுக்கெல்லாம் தாத்தா இந்தப் பாடல் தான்.
6. துரத்தும் போலீசிடமிருந்து தப்ப பிரதீப் குமாரும் ஷேக் முக்தாரும் அந்த நாடகக் கொட்டகை மேடைக்குள் நுழைந்து விடுகிறார்கள். அங்கே கவாலிப் பாடல் பாடும் ஷகீலா பானுவுக்குப் போட்டிப் பாடல் பாட வேண்டிய திடீர் நிலை. சமாளித்து பாடுகிறார்கள். ''மில்னே கி நஜர் தும்சே...'' என்ற விளாசலும் பதில் விளாசலுமாக கலக்கும் பாடல் 'வஸ்தாதோம் கி வஸ்தாத்' இந்திப் படத்தின் அசத்தல் காட்சி. ''பாரடி கண்ணே கொஞ்சம், பைத்தியமானது நெஞ்சம்... '' (சாவித்திரி, அசோகன், மனோகர்.) என்று தமிழ் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்திலும் ரசித்தோம் இதை.
(தொடரும்...நீங்கள் ரசித்தால்!)
(தொடரும்...நீங்கள் ரசித்தால்!)