Friday, April 25, 2014

தலைப்பு



'என்னங்க, மலர்ச்சரம் பத்திரிகையிலிருந்து உங்ககிட்டே ஒரு தலைப்புக் கொடுத்து கட்டுரை எழுதித்தரக் கேட்டாங்களே, எழுதி முடிச்சிட்டீங்களா?'' கேட்டாள் சுமதி, பிரபல புள்ளி பராங்குசத்தின் மனைவி.


''அதைத்தான் நாலு நாளா யாரைப்பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். யாருமே ஞாபகம் வரமாட்டேங்கறாங்க..'' தலையைச் சொறிந்து கொண்டார்.

அவளும் யோசித்தாள்.


''ஏங்க, நம்ம ராமசாமியைப்பத்தி எழுதுங்களேன்.''


''ராமசாமியா, யார் அது?'' அவருக்கு நினைவில்லை.


''அதுதாங்க, உங்ககூட காலேஜில ஒண்ணாப் படிச்சதா சொல்வீங்களே?''


''அவனா? அவன் அப்புறம் என்ன ஆனான்?'' யோசித்தார்.


''ஏதோ சமூக சேவை நிறுவனத்தில் செயலாளரா இருக்கிறதா சொன்னாரே, ஒரு முறை?'' என்றவள் அவர் எப்பவோ எழுதிய ஒரு கடிதத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தாள்.


''ஒ, அப்ப ஜமாய்ச்சுரலாம்,'' என்றவர் உட்கார்ந்து ரெண்டு பக்கம் எழுதி, தலைப்பை மேலே எழுதினார்:


'என்னால் மறக்க முடியாத நபர்.'


('குமுதம்' 04-06-2008 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)

Sunday, April 20, 2014

நல்லதா நாலு வார்த்தை... 29


 
'என்ன நேர்கிறது உங்களுக்கு
என்பது பத்து சதவிகிதம்
எப்படி அதை நீங்கள்
எதிர்கொள்கிறீர்கள்
என்பது தொண்ணூறு சதவிகிதம்
என்றானது வாழ்க்கை.'
-Charles Swindoll
('Life is 10% what happens to you
and 90% how you react to it.')
<>

'நகைச்சுவை,
மனித இனத்தின்
வரப்பிரசாதம்.'
- Mark Twain
('Humour is mankind's greatest blessing.')
<>

'தனக்கு வெளியே
வாழ முடியும்போது
ஒரு மனிதன்
வாழத் தொடங்குகிறான்.'
-Albert Einstein
('A person starts to live when he can
live outside himself.')

'உண்மையான எந்த உணர்வும்
அனிச்சையானது.'
-Mark Twain
('Any emotion, if it is sincere, is involuntary.'
<>

'மகிழ்வாயிருப்பதாக ஒருவன்
மனதில் நினைத்தால்,
அதுவே போதும்
மகிழ்வாயிருக்க!'
- Madame de La Fayette
('If one thinks that one is happy,
that is enough to be happy.')

<>

'கலை தெரிந்துகொள்கிறது,
வாழ்க்கை அறிவைப் பிரயோகிக்கிறது;
கலை உணர்கிறது,
வாழ்க்கை செயலாற்றுகிறது.'
-Austin O'Malley
('Art knows, life applies knowledge; art feels, life acts.')
<>
 
'இலக்கிலிருந்து கண்களை
எடுக்கும்போது மட்டுமே
காண்கிறீர்கள் நீங்கள்
அச்சுறுத்தும் தடைகளை!'
- Henry Ford
('Obstacles are those frightful things you
see when you take your eyes off your goal.')
<<<<>>>>
(படம் - நன்றி : கூகிள்)

Tuesday, April 15, 2014

நல்ல முன்னேற்றம்....

 
 
 

அன்புடன் ஒரு நிமிடம் - 57

"லோ," என்றார் சாத்வீகன்.

மரகதம். அவருடைய அக்கா மகள்.

"மாமா, நேத்து நீங்க வந்துட்டுப் போனதிலே இருந்து அனில் உடல்நிலை ரொம்பவே முன்னேற்றம்! உங்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்த போன் ..."

அனில்  அவள் மகன்விபத்து ஒன்றில் தோள்  பட்டையில் அடி பட்டு மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருந்தான். மாவு வைத்து கட்டியிருந்தார்கள். நல்ல வலி, கைக்கு என்ன ஆகுமோ என்ற பயம்.... அரண்டு போனவன் சதா அரற்றிக் கொண்டிருந்தான். நேற்று அவர் போய்ப் பார்த்தார்.  

"நன்றி? அப்படி நான் என்ன.. ஜஸ்ட் வந்து பார்த்துட்டுப் போனேன் எல்லாரையும் போல..."

"இல்லை. அப்படி இல்லைங்கிறதை இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். அதான்..."

"புரியலியே? யாரும் பார்க்க வரவில்லையா?"

"வந்தாங்க, நிறைய பேர் வந்தாங்க. அனுதாபத்தோட விசாரிச்சாங்க. வருத்தப்பட்டாங்க. அதெல்லாம் ஆறுதலாத்தான் இருந்தது. அப்புறம் அவங்களுக்கு அல்லது அவங்க ளுக்கு  தெரிஞ்சவங்களுக்கு நடந்த ஏதாச்சும் ஆக்சி டெண்ட் அதுல எத்தனை பாடு பட்டாங்க என்ன மாதிரி சிக்கல் எல்லாம் எழுந்தது, என்ன பின் விளைவுகள் நேர்ந்திச்சுன்னு எல்லாம் விலா வாரியா விவரிச்சு... எல்லாத்தையும் கேட்டால் என்ன நடக்கும்?  பயம்தானே  அதிகரிக்கும்?"

'உண்மைதான்,' நினைத்துக் கொண்டார்.

"ஆனா நீங்க வந்தீங்க..  என்ன பண்ணினீங்க?”

என்ன பண்ணினேன்? முந்தைய நாள் நிகழ்வு முன்னால்  விரிந்தது.

"இந்தா! சாக்லேட் சாப்பிடலாம் இல்லையா?"  என்று நீட்டியவர் கட்டிலிலேயே அவனருகில் அமர்ந்தார், "எப்படி இருக்கே? சரிதான் போன மாசம்தான் கம்பெனியில செம வேலை தாங்க முடியலேன்னு முணுமுணுத்திட்டிருந்தே? அடுத்த வரமே கிடைச்சிட்டுது போலிருக்கே கட்டாயமா ஒரு ரெஸ்ட்? என்ன நடந்தது? ஏதாச்சும் பிளான் பண்ணிட்டியா என்ன?"

அவனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. விபத்து பற்றியும் சிகிச்சை வலி கஷ்டம் பற்றி சொன்னான்.

"ஆமா, உனக்கு ஞாபகமிருக்கா? பத்து வருஷம் முந்தி நீ பைக் ஓட்ட பழகினப்ப மரத்தில மோதி... ஹாஸ்பிடல்ல சேர்த்தோம், பத்து நாள் இருக்கணும்னு சொன்னார் டாக்டர். ஆனா ஏழாம்  நாளே தேவலையாகி வீட்டுக்கு வந்திட்டேசந்தோஷம் ஒரு பக்கம், ஆச்சரியம் ஒரு பக்கம் எல்லாருக்கும்,  ஞாபகமிருக்கா?"

"அஞ்சு  நாள்!"  திருத்தினான் அதை நினைத்துப் பார்த்து அவன்.

"அஞ்சு நாளிலேவா? நான் ஏழுன்னு நினைச்சிட்டேன்!... அப்புறம் காலேஜில் படிக்கிறப்ப ஒருதடவை அருவியில குளிக்கப் போனபோது  பாறையில வழுக்கி விழுந்து முட்டியைப் பேர்த்துக்கிட்டபோது, அசையப்படாது படுத்தே இருக்கணும் ஒரு வாரம்னு  டாக்டர் சொன்னாரே?"

"ஆமா, ஆமா!" என்றாள் மரகதம், "சாப்பாடெல்லாம் பெட்லேயே..கஷ்டமா இருந்தது பார்க்க."

"உனக்கு அப்படி! உட்கார்ந்து சூப் அது இதுன்னு சாப்பிட்ட இவன்   டிஸ்சார்ஜ் ஆகும்போது பத்து கிலோ வெயிட் ஏறியிருந்தானே? அதை   மறந்திட்டியா? நா எல்லாரும்தானே அவனை கிண்டலடித்தோம்?"

நினைவுபடுத்தி சிரித்தான் அவனும் 

"போன வருஷம்கூட பேர் தெரியாத ஜுரம் வந்து ஒவ்வொரு ஹாஸ்பிடலா மூணு இடத்தில் சோதிச்சு அப்புறம் திருவனந்தபுரம் போகலாம்னு தீர்மானிச்சப்ப என்ன நடந்தது? எல்லாம் அரேஞ்ச் பண்றதுக்குள்ளே எப்படியோ கடவுள் அருளால நீ நார்மல் ஆகி வீட்டுக்கு வந்திட்டே.  சூப்பர் உடம்புதாண்டா உனக்கு!" என்றவர், "இப்ப மட்டும் என்ன, டாக்டர் சொல்லியிருக்காரு இன்னும் நாலு நாள்போல இருக்கணும் இங்கேன்னு. நீ என்ன நினைச்சிருக்கிறியோ!" என்றார் சிரித்தபடி.

எல்லாரும் சத்தமாய் சிரிக்க நர்ஸ் எட்டிப் பார்த்தாள் அந்த அறையிலிருந்துதானா என்று.

ரகதம் போனில் தொடர்ந்தாள். "... மத்தவங்களை  மாதிரி இல்லாம நீங்க மட்டும்தான் இப்படி அவனுக்கு நடந்த இதைவிட பெரிய நோய் நிகழ்வுகளையும் குணமானதையும் சாதாரணமா பேச்சோடு பேச்சா நினைவுபடுத்தி... அது அவனை பாசிடிவா யோசிக்க வெச்சு நம்பிக்கையை அதிகரிச்சு…  இப்ப டாக்டர் சொல்றார் நேத்திக்கு இருந்ததுக்கு நல்ல முன்னேற்றம், நாளைக்கே வீட்டுக்கு போகலாம்னு. அதான் உடனே உங்களுக்கு போன் பண்றேன் சந்தோஷத்தை பகிர்ந்துக்க.   நீங்க ஒரு முக்கிய காரணம் இல்லையா? நான் எதிர்பார்க்கவே இல்லை மாமா "

நான் எதிர்பார்த்தேன் என்று அவர் சொல்லவில்லை.   

('அமுதம்’ நவம்பர் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)