Wednesday, June 21, 2023

அப்பாவி முகம்.. அழுத்தமான நடிப்பு..


காலியாக நிற்கும் ஜெயன்ட் சைஸ் விளம்பரப் பலகையை பார்த்தவுடன் அதில் நம் பேர் பெருசா ஒளிர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கத் தோன்றுமா உங்களுக்கு? அப்படிக் கற்பனை செய்கிறாள் கிளாடிஸ். அரை இஞ்ச் அதிக இடுப்பால் மாடல் வேலை இழந்து நியூ யார்க்கில் வந்து இறங்கியிருந்த அவளுடன் பழகிய பீட்டர் (டாகுமெண்டரி எடுப்பவன்) கொஞ்சம் முந்திதான் அவளிடம் சொல்லி இருந்தான், ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மட்டுமல்ல, மார்க்கம் ஒன்று தெரிந்தால் அதைப் பிடித்துக்கொண்டு கூட மேலே வந்து விடலாம்!’ என்று.

வாழ்க்கையில் பெரிய ஆளாக நினைத்தவளுக்கு இந்த மான்ஹாட்டன் போர்டு ஒரு மார்க்கமாக தெரிந்தது. கையிலிருந்த கொஞ்சமே காசைக் கொண்டு மூணு மாசத்துக்கு அதை வாடகைக்குப் பிடித்து தன் பெயரை படத்துடன் பெருசா அதில் ஒளிர விடுகிறாள். பார்த்துப் பார்த்து மகிழ்கிறாள். பைத்தியம்பாங்க உன்னை என்று அவளைக் காதலிக்கும் பீட்டர் சொன்னது எடுபடவில்லை.
முக்கியமான விளம்பர இடம் போயிடுச்சே என்று ஓடிவரும் சோப்பு கம்பெனி இவான் அவளிடம் கேட்டுப் பார்க்கிறான். 500 டாலர் அதிகம் கொடுத்தாலும் தர மறுக்கவே ஆறு இடங்களை கொடுக்கிறான் அதற்கு பதிலாக. இப்போது ஆறு இடங்களிலும் அவள் பெயர் சூப்பர் ஹையாக. ('8 கேட்டிருக்கலாமோ?') சிற்றி முழுவதும் அவள் பெயர் பாப்புலராகி விடுகிறது. கடைக்குப் போனால் ஆட்டோகிராப் வாங்குகிற அளவுக்கு. டி.வி.யில் தோன்றும் அளவுக்கு.
அவளையே தங்கள் சோப்புக்கு மாடலாக உபயோகிக்கலாம் என்று கம்பெனிக்கு தோன்ற அவள் தேடிய பெரிய கேரியர் கிடைத்து விடுகிறது. ஆனால் அதற்கு விலையாக இவான் அவளிடம் நெருங்க, கையை தட்டிவிட்டு விலகுகிறாள். வீட்டுக்கு வந்தால் பீட்டரின் குட் பை கடிதம். ஏங்கிய பணமும் புகழும் இப்போது வந்தாலும் மனதில் வெறுமை. அப்பவே பீட்டர் சொன்னானே, ஏன் நீ கூட்டத்தோடு கூட்டமாக சந்தோஷமாக இருப்பதை விட்டுவிட்டு தனியாக செல்ல நினைக்கிறேன்னு? யோசிக்கிறாள். கட் பண்ணினால், ஜூவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பீட்டர், பிளேன் சத்தம் கேட்டு மேலே பார்க்க, ‘கிளாடிஸைக் கூப்பிடு பீட்டர்!’ என்று விமானத்தில் பெரிய எழுத்துக்களில்! ஒன்று சேர்கிறார்கள். காரில் செல்லும்போது எதிர்ப்படும் காலி விளம்பரப்பலகை இப்போது அவளைக் கவரவில்லை.
1954, ஆமாம், 54 இல் வந்த ‘It should Happen to You’ படத்தின் அமர்க்களமான கதை அது. கிளாடிஸாக நடித்தவர் Judy Holliday. இன்று பிறந்த நாள்!
Rotten Tomatoes ரேட்டிங் 100% கிடைத்த படம் அது. பீட்டராக வந்தவர் பிரபல Jack Lemmon. முதல் படம் அவருக்கு. 'My Fair Lady' டைரக்டர் George Cukor இயக்கியது..
‘எங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் படத்தில்,’ அப்படின்னு கேத்ரின் ஹெபர்ன் இவரைப் பற்றிச் சொல்லியது உதவ, கொலம்பியாக்காரர்கள் ‘Born Yesterday’ படத்தில் இவரைப்போட, ஆஸ்கார் வாங்கி விட்டுத் தான் ஓய்ந்தார் ஜூடி.
‘Every day’s a Holliday with Judy Holliday...’ என்று ஆரம்பமாகும் இவர் பட ட்ரெய்லர் ஒன்று.
Quote? "திரும்ப திரும்ப அசட்டு அழகியாக வந்து ஆடியன்ஸ் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் நீங்கள் ரொம்ப புத்திசாலியாக இருக்க வேண்டும்!"
'காதலிப்பவர்கள் ஏமாற்ற உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். நண்பர்கள் அப்படி செய்வதில்லை.'
>><<>><<

Saturday, June 17, 2023

காமெடி மன்னர்கள்...




விழுந்து விழுந்து சிரித்தவர்கள் வைத்திருக்கும் லிஸ்டில், விடாது இடம் பெறும் ஜோடி லாரல் ஹார்டி! 1940 களின் காமெடி மன்னர்கள்!

அவர் (லாரல்) ஏதாவது தத்து பித்தென்று பண்ணிவிடுவார். இவர் (ஹார்டி) கொடுக்கிற கோப ரீயாக்‌ஷன் இருக்கிறதே, அட்டகாசமா இருக்கும். அவர் இன்னஸெண்டாக ஒரு பலகையை தட்டிவிட, இவர் பொதேலென்று கீழே விழுவார். 'கொன்னுடறேன் பாரு!' கோபாவேசமாக எழுந்து துரத்துவார்.
ஹார்டிக்கு மேனர்ஸ், எடிகட் எல்லாம் முக்கியம். பதவிசாக அவர் பேசும் ஸ்டைலே அழகாயிருக்கும். லாரல் ஆல்வேய்ஸ் கவனப் பிசகு. அதனால் நேரும் அவதி ஹார்டிக்கு! பல்லைக் கடிப்பதும் தலையைப் பிய்ப்பதுமே இவர் வேலையாகிவிடும்.
எப்படி உருவாச்சு இந்த comic duo? மூணு படங்களில் அவங்க சேர்ந்து நடித்த காட்சிகளில் ஜனங்க ரீயாக்‌ஷனைப் பார்த்த ஸ்டூடியோ டைரக்டர் Leo McCarey அந்த காமெடி ஜோடியை தொடர்ந்து போட்டு படங்களை எடுக்க ஆரம்பித்தார். அவர்களும் கைவரிசையைக் காட்ட, விமரிசையாக ஓடின படங்கள் வரிசையாக...!


1932 இல் ஆஸ்கார் Best Short Film அவார்ட் கூட வாங்கிவிட்டார்கள். ‘Saps at Sea,’ ‘Chums at Oxford,’ 'Way out West’ எல்லாம் காமெடி காவியங்கள்.
எப்பவும் அப்பாவை உதைக்கிறாரேன்னு ஹார்டியைக் கண்டாலே ஆகிறதில்லே லாரல் பொண்ணுக்கு. அவளுக்காகவே 'One Good Turn' படத்தில் ஹார்டியை தான் உதைப்பதாக சீன் வைத்தார் அப்பா லாரல்.
John Wayne -உடன் நடித்த ஒன்றுமாக மொத்தம் 417 படங்கள் நடித்துவிட்டார் ஹார்டி. Babe Hardy என்ற பெயரில் நடிக்க ஆரம்பித்தவர் பெயரை Oliver Hardy ஆக்கியவர் நியூமராலஜிஸ்ட்.
ஹார்டி கண் மூடியபின் லாரல் மூவீ காமிரா முன் வர முன்வரவேயில்லை எத்தனையோ அழைப்பு வந்தும்!
Stan Laurel... ஜூன் 16. பிறந்தநாள்!

Tuesday, June 13, 2023

மூன்றாமவர்…


வட்டத்தை வரைந்து விடலாம், ஆனா ஓவல் ஷேஃபை எப்படி சரியாக வரைவது? விழித்துக் கொண்டிருந்தார் அந்தக் கலைஞர். அப்ப அவரைச் சந்தித்த பையனுக்கு 14 வயதிருக்கும். ஆவலுடன் ஆராய்ந்து, ஓவலுடன் எலிப்ஸ் முதலான எல்லா வளைவுகளையும் ஒரு பின்னையும் நூலையும் பிடித்து எப்படி வரைவது என்று பின்னி விட்டான் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை. எடின்பர்க் யூனிவர்சிட்டியில் அது பப்ளிஷ் ஆனது. அந்தச் சிறுவன்…

கையில் இருக்கும் மொபைல், காதில் ஒலிக்கும் ரேடியோ, காணும் டி.வி. எல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது இப்போது நமக்கு. இவற்றுக்கெல்லாம் ஆதார வித்திட்டவர் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறார் இன்னும். ஆம். ஒளி, மின்சாரம், காந்தம் மூன்றுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று முதன் முதலில் அறிவித்த வித்தகர்…
அறிவியலில் முதல் மூவர் வரிசையில் ஐன்ஸ்டீன், நியூட்டனை அறிவீர்கள். மூன்றாமவர்…
முதல் வண்ணப் புகைப்படத்தை வழங்கியவர்...
James Clerk Maxwell... இன்று பிறந்த நாள்!
‘அறிவியலின் தந்தை’.. ‘ஒளியின் தந்தை’… எடை போட்டவர்களின் அடை மொழிகள்!
மின்காந்த வீச்சு என்ற இயற்கையின் மாபெரும் பெட்டகத்தை திறந்து வைத்தார் இவர். ரேடியோ அலைகளில் தொடங்கி எத்தனையோ அலைகள் அதிலிருந்து எழுந்தன. அந்த எலக்ட்ரோ மேக்னடிஸம் தியரி! அதன் சமன்பாடுகளை வைத்துத்தான் ஐன்ஸ்டீன் தன் ஸ்பெஷல் தியரி அஃப் ரிலேட்டிவிட்டியைக் கண்டுபிடித்தார்.
‘இவருடன் தொடங்கியது அறிவியலின் புதிய சகாப்தம்,’ என்றார் ஐன்ஸ்டீன், ‘நியூட்டன் காலத்துக்கு பிறகு அறிவியலில் நேர்ந்த மிகச் சிறப்பான, மிகப் பிரயோஜனமான கண்டுபிடிப்புகள் இவருடவையே.’
ஆராய்ந்து சொன்ன மற்றொன்று, சனியைச் சுற்றியுள்ள வட்டங்கள் துகள்களே என்பது.
இந்த விஞ்ஞானிக்குள் ஒரு கவிஞரும் இருக்கிறார். சாம்பிளுக்கு 'மனைவிக்கு' என்ற ஒரு கவிதையின் தொடக்கம்:
‘இந்தத் தனி அறையிலிருந்து கிளம்பி அடிக்கடி
நிலம் மேலும் நீர் மேலும் பறக்க விரும்புகிறேன்,
இருளைக் கிழித்து துயரைத் துளைத்து
என்னை உன்னுடன் இணைக்க…’
48 வருடங்களே வாழ்ந்த இவர் நாலைந்து வருடங்கள் கூட வாழ்ந்திருந்தால் ஏகப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வேலை இல்லாமல் இருந்திருக்கும் என்பார்கள்.
><><><