Saturday, December 14, 2013

மெல்ல ஒரு கோபம்...


அன்புடன் ஒரு நிமிடம் - 51 

சாயங்காலம் கடைக்குப் போன இடத்தில் இப்படி ஒரு வம்பு வெடிக்கும் என்று அபிஜித்  எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அதைவிட அதிர்ச்சி அளித்தது அப்போது தாத்தா நடந்து கொண்ட விதம். அந்த வேளையில்போய் அவர் இப்படி...

அடுத்த நாள் ஃபங்க்ஷனுக்காக தைக்கக் கொடுத்திருந்த ஆடைகளை வாங்கக் கிளம்பிய அவர் அவனையும் அழைத்துப் போனார். இன்றைக்கு ஐந்து மணிக்கு டெலிவரி தருவதாக  சொல்லியிருந்த இடத்தில் இன்னும் வேலை முற்றுப் பெறவில்லைஎன்றால் எப்படி இருக்கும்? 

லேசாய் ஆரம்பித்த பேச்சு விவாதமாகி டெம்பரேச்சர் எகிறிவிட்டது. 

"முக்கியமான விசேஷம்னு படிச்சுப் படிச்சு சொல்லி தேதி டயம் எல்லாம் உறுதி பண்ணிட்டுப் போனேனே, அதுக்கு என்ன அர்த்தம்? பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாம இப்படி..."
தாத்தா சூடாகத்தான் கேட்டார் 

கடைக்காரரும், "அப்பவே நான் நாள் பத்தாது, ஆனா எப்படியாவது முடிச்சுத் தர்றேன்னு சொல்லித்தானே டேட் போட்டுக் கொடுத்தேன்? என்னை மீறி தாமதமானா என்ன பண்ண முடியும்?" என்று  குரலை உயர்த்திக் கேட்டார்.

"எப்படியாவது தர்றேன்னா தரணும் இல்லையா? இல்லேன்னா எப்படி எங்க உபயோகத்துக்குக் கிடைக்கும்? இப்படி பொறுப்பில்லாம நடந்துகொண்டா...?"

கடைக்காரர் அதற்கு சூடாக வார்த்தைகளை உதிர்க்க...  

அப்போதுதான் தாத்தா அந்த சூழ் நிலைக்கு சம்பந்தமில்லாத ஒரு காரியத்தை செய்தார். கோபமாக ஜேபியில் கையை விட்ட மாதிரி இருந்தது.  வெளிவந்ததோ ஒரு சாக்லட்.  பிரித்து அதை வாயில் போட்டுக் கொண்டார்.  இவனிடமும் ஒன்றை நீட்ட, அபிஜித் வாங்கிக் கொள்ளவில்லை 

வார்த்தைகள் வேகத்துடன் எழுந்து மோதிக் கொண்டிருக்க  இவர் சாக்லேட்டை வாயில் மென்றபடியே பேசினதைப் பார்த்து அபிஜித்துக்கு தாங்கவில்லை. 

நல்ல வேளை அவன் பயந்த மாதிரி பேச்சு முற்றி தகராறு பெரிதாகி விடவில்லை. இன்னும் ரெண்டு மணி நேரம் தருவதானால் தயார் பண்ணித் தர முடியுமென்று சொல்ல, இவர்கள் பக்கத்தில் கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு வாங்கி வரலாமென்று கிளம்பினர்.

அப்பால் வந்ததுமே அவரை நிறுத்தி அந்தக் கேள்வியைக் கேட்டான். "என்ன தாத்தா சாக்கலேட் சாப்பிட வேறே வேளை இல்லையா? உக்கிரமா ஒரு தகராறு நடக்கிறப்ப இப்படியா  பண்றது?"

"அதுவா? அந்த மாதிரி வேளைகளிலேதான் இப்படி பண்ணணும். My action was quite deliberate..."
விழித்தான்.

"இந்த மாதிரி சமயத்தில நாம கோபம்கிற  பூதத்தின் பிடியில் சிக்கிடக் கூடாதுங்கறதுதான் ஆக முக்கியம்.  எதிர்த்துப் பேசி நம்மோட நியாயத்தை நிலை நிறுத்த வேண்டியதுதான், ஆனால் அதில் கோபம் நம் கண்ணை மறைச்சு வேறேதிலேயோ கொண்டு விட்டிடக் கூடாது நம்மை. அதான் இந்த சாக்லேட். அத்தனை கொந்தளிப்பான மன நிலையிலும் அந்த சாக்லேட்டின் சுவையை நாம உணர முடியுதுங்கிறதை  கவனிக்கிறப்ப, நாம் நிலை தவற மாட்டோம். இந்த சண்டை சச்சரவு நம்ம வாழ்க்கையின் எதோ ஒரு சிறு பகுதிதான்னும் நம்மோட எந்த மற்ற சந்தோஷத்தையும் இது தொட்டுப் பார்க்கவோ கட்டுப்படுத்தவோ போறதில்லைன்னும் நமக்கு ஞாபகப் படுத்திக்கறோம்." 

இதன் பின்னால் இத்தனை ஆழமான காரணமா? அதிசயித்து அவன் நிற்க சாத்வீகன் சொன்னார், "இன்னொரு பக்கம் வேறொரு நன்மையையும் இதில் விளையும்...."

"என்ன அது?"

"இப்படி செய்யறப்ப அனேகமா மற்றவர் கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகணும்!"

"அதெப்படி நிச்சயமா சொல்றீங்க?"

"புரியலே உனக்கு?  அவங்க யோசிப்பாங்க இல்லையா? சாக்கலேட் சாப்பிட்டுட்டு நிற்கிறவனை எப்படி எரிச்சலூட்ட முடியும்?"

"அதுவும் சரிதான்!"

(அமுதம் செப்டம்பர் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்-  நன்றி: கூகிள்) 

Wednesday, December 4, 2013

புதுச் சட்டை

 


''டேய் பாலு, என்னடா பண்றே அங்கே? ஒரு பேபி சட்டைக்கு காஜா போட இவ்வளவு நேரமா?'' கத்திய டெய்லர் ஷண்முகம், ''சே! புதுசா வர்ற பசங்களை வேலைக்கு சேர்த்துக்கிட்டா இப்படித்தான்!'' என்று எரிச்சல் பட்டார்.

''நான் அன்னிக்கே சொன்னேனே இவன் சரியில்லேன்னு... அவனுக்கு தோணற மாதிரி வேலை செய்யறான். நேத்து நாலு சட்டைக்கு அரை மணி நேரத்தில பட்டன் தைச்சு, காஜா போட்டுட்டான். இன்னிக்கு ஒரு சின்ன சட்டையை வெச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கான். ஊஹூம், இவன் தேற மாட்டான்.'' என்று அலுத்துக் கொண்டான் சண்முகத்தின் உதவியாளன் கிருஷ்ணன்.


''சரி, சரி! அதை நீ வாங்கி முடிச்சுடு. பாலு, கொடுடா அதை கிருஷ்ணன் கிட்டே.'' என்று இரைந்தார் சண்முகம்.


''வேணாங்க முதலாளி, இதோ முடிச்சிடறேன்,'' என்று இறைஞ்சிய பாலு, கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுக்க, காத்திருந்த வாடிக்கையாளர் வாங்கிகொண்டு விரைந்தார்.


அவர் போனதும் சண்முகம் இவனிடம், ''ஏண்டா இந்த சின்ன வேலைக்கே இத்தனை நேரம் எடுத்துக்கிட்டா நாளைக்கு நீயெல்லாம் எப்படிடா பெரிய டெய்லரா வரப்போறே?'' என்று அதட்டினார்.


''அது வந்துங்க... இதைச் சின்ன வேலையா நான் நினைக்கலீங்க. ஆறு மாச குழந்தைக்கான சட்டை இது. குழந்தை சட்டையை எப்பவும் வாயிலேதான் கொண்டு போகும். இல்லீங்களா? அப்ப பட்டன் கழன்று அதன் வாய்க்குள்ளே போயிடக்கூடாது இல்லையா? அதான் பட்டனை நல்ல அழுத்தித் தைச்சு காஜாவையும் ஸ்ட்ராங்காப் போட்டேன். அதான் கொஞ்சம் கூடுதலா நேரமாயிட்டுது. மன்னிச்சுக்குங்க'' என்றான் பாலு.


சண்முகத்தின் முகம் சட்டென்று கனிந்தது. அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து சொன்னார். ''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''

(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)