Saturday, December 14, 2013

மெல்ல ஒரு கோபம்...


அன்புடன் ஒரு நிமிடம் - 51 

சாயங்காலம் கடைக்குப் போன இடத்தில் இப்படி ஒரு வம்பு வெடிக்கும் என்று அபிஜித்  எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அதைவிட அதிர்ச்சி அளித்தது அப்போது தாத்தா நடந்து கொண்ட விதம். அந்த வேளையில்போய் அவர் இப்படி...

அடுத்த நாள் ஃபங்க்ஷனுக்காக தைக்கக் கொடுத்திருந்த ஆடைகளை வாங்கக் கிளம்பிய அவர் அவனையும் அழைத்துப் போனார். இன்றைக்கு ஐந்து மணிக்கு டெலிவரி தருவதாக  சொல்லியிருந்த இடத்தில் இன்னும் வேலை முற்றுப் பெறவில்லைஎன்றால் எப்படி இருக்கும்? 

லேசாய் ஆரம்பித்த பேச்சு விவாதமாகி டெம்பரேச்சர் எகிறிவிட்டது. 

"முக்கியமான விசேஷம்னு படிச்சுப் படிச்சு சொல்லி தேதி டயம் எல்லாம் உறுதி பண்ணிட்டுப் போனேனே, அதுக்கு என்ன அர்த்தம்? பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாம இப்படி..."
தாத்தா சூடாகத்தான் கேட்டார் 

கடைக்காரரும், "அப்பவே நான் நாள் பத்தாது, ஆனா எப்படியாவது முடிச்சுத் தர்றேன்னு சொல்லித்தானே டேட் போட்டுக் கொடுத்தேன்? என்னை மீறி தாமதமானா என்ன பண்ண முடியும்?" என்று  குரலை உயர்த்திக் கேட்டார்.

"எப்படியாவது தர்றேன்னா தரணும் இல்லையா? இல்லேன்னா எப்படி எங்க உபயோகத்துக்குக் கிடைக்கும்? இப்படி பொறுப்பில்லாம நடந்துகொண்டா...?"

கடைக்காரர் அதற்கு சூடாக வார்த்தைகளை உதிர்க்க...  

அப்போதுதான் தாத்தா அந்த சூழ் நிலைக்கு சம்பந்தமில்லாத ஒரு காரியத்தை செய்தார். கோபமாக ஜேபியில் கையை விட்ட மாதிரி இருந்தது.  வெளிவந்ததோ ஒரு சாக்லட்.  பிரித்து அதை வாயில் போட்டுக் கொண்டார்.  இவனிடமும் ஒன்றை நீட்ட, அபிஜித் வாங்கிக் கொள்ளவில்லை 

வார்த்தைகள் வேகத்துடன் எழுந்து மோதிக் கொண்டிருக்க  இவர் சாக்லேட்டை வாயில் மென்றபடியே பேசினதைப் பார்த்து அபிஜித்துக்கு தாங்கவில்லை. 

நல்ல வேளை அவன் பயந்த மாதிரி பேச்சு முற்றி தகராறு பெரிதாகி விடவில்லை. இன்னும் ரெண்டு மணி நேரம் தருவதானால் தயார் பண்ணித் தர முடியுமென்று சொல்ல, இவர்கள் பக்கத்தில் கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு வாங்கி வரலாமென்று கிளம்பினர்.

அப்பால் வந்ததுமே அவரை நிறுத்தி அந்தக் கேள்வியைக் கேட்டான். "என்ன தாத்தா சாக்கலேட் சாப்பிட வேறே வேளை இல்லையா? உக்கிரமா ஒரு தகராறு நடக்கிறப்ப இப்படியா  பண்றது?"

"அதுவா? அந்த மாதிரி வேளைகளிலேதான் இப்படி பண்ணணும். My action was quite deliberate..."
விழித்தான்.

"இந்த மாதிரி சமயத்தில நாம கோபம்கிற  பூதத்தின் பிடியில் சிக்கிடக் கூடாதுங்கறதுதான் ஆக முக்கியம்.  எதிர்த்துப் பேசி நம்மோட நியாயத்தை நிலை நிறுத்த வேண்டியதுதான், ஆனால் அதில் கோபம் நம் கண்ணை மறைச்சு வேறேதிலேயோ கொண்டு விட்டிடக் கூடாது நம்மை. அதான் இந்த சாக்லேட். அத்தனை கொந்தளிப்பான மன நிலையிலும் அந்த சாக்லேட்டின் சுவையை நாம உணர முடியுதுங்கிறதை  கவனிக்கிறப்ப, நாம் நிலை தவற மாட்டோம். இந்த சண்டை சச்சரவு நம்ம வாழ்க்கையின் எதோ ஒரு சிறு பகுதிதான்னும் நம்மோட எந்த மற்ற சந்தோஷத்தையும் இது தொட்டுப் பார்க்கவோ கட்டுப்படுத்தவோ போறதில்லைன்னும் நமக்கு ஞாபகப் படுத்திக்கறோம்." 

இதன் பின்னால் இத்தனை ஆழமான காரணமா? அதிசயித்து அவன் நிற்க சாத்வீகன் சொன்னார், "இன்னொரு பக்கம் வேறொரு நன்மையையும் இதில் விளையும்...."

"என்ன அது?"

"இப்படி செய்யறப்ப அனேகமா மற்றவர் கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகணும்!"

"அதெப்படி நிச்சயமா சொல்றீங்க?"

"புரியலே உனக்கு?  அவங்க யோசிப்பாங்க இல்லையா? சாக்கலேட் சாப்பிட்டுட்டு நிற்கிறவனை எப்படி எரிச்சலூட்ட முடியும்?"

"அதுவும் சரிதான்!"

(அமுதம் செப்டம்பர் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்-  நன்றி: கூகிள்) 

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சாக்லேட் போல இனிப்பான நல்ல கருத்தினைக் கூறும் கதை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

அமுதம் வெளியீட்டுக்கும் பாராட்டுக்கள்.

கவியாழி கண்ணதாசன் said...

உண்மைதான் கோபத்தைக் கட்டுபடுத்தும் சக்தி உள்ளது

Ramani S said...

அருமை அருமை
சமநிலைப் படுத்திக் கொள்ளச் செய்யும்
இந்த யுக்தி கொஞ்சம் வித்தியாசமானதுதான்
கடைப்பிடிக்கக்கூடியதும்தான்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கதை... நன்றி...

வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

/இந்த சண்டை சச்சரவு நம்ம வாழ்க்கையின் எதோ ஒரு சிறு பகுதிதான்னும் நம்மோட எந்த மற்ற சந்தோஷத்தையும் இது தொட்டுப் பார்க்கவோ கட்டுப்படுத்தவோ போறதில்லை/

சிந்திக்க வைக்கும் வார்த்தைகள். நல்ல கதை.

ADHI VENKAT said...

எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய சிறப்பான விஷயத்தை சாத்வீகன் தாத்தா சூப்பரா சொல்லியிருக்கிறார்...

இனி இது போல் முயன்று பார்க்கலாம்...

வெங்கட் நாகராஜ் said...

கருத்துள்ள பகிர்வு. கோபத்தினை அடக்க, கோபத்தில் தவறான வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க நல்ல உத்தி!

இராஜராஜேஸ்வரி said...

இந்த சண்டை சச்சரவு நம்ம வாழ்க்கையின் எதோ ஒரு சிறு பகுதிதான்னும் நம்மோட எந்த மற்ற சந்தோஷத்தையும் இது தொட்டுப் பார்க்கவோ கட்டுப்படுத்தவோ போறதில்லைன்னும் நமக்கு ஞாபகப் படுத்திக்கறோம்."

ஆழமான அர்த்தம் பொதிந்த வழிமுறை...!

Ranjani Narayanan said...

மெல்ல ஒரு கோபம், சாக்கலேட் சாப்பிடதும் மெல்ல மறைந்துவிடும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!