Tuesday, September 27, 2016

அவள் - கவிதைகள்

321
ஆக்ஸிஜன் நீ இல்லையெனில்
ஆக்ஸிடெண்ட் தான்
அடுத்த நிமிடமே.

322
அந்த மலர்களை 
எந்த பெர்முடேஷன் காம்பினேஷனில்
அடுக்கினாலும் இணை 
ஆகவில்லை உன் சிரிப்புக்கு.


323
உடனே மறுபடி புன்னகைக்காதே<
முதல் புன்னகையின்
அர்த்தம் புரியவே
அரை மணி இன்னும் தேவை

324
உதடுகள் சிரிக்கையில்
கண்களும் ஏன்?
இரண்டையும் ஒரே நேரம் ரசிக்க
இயலாமல் நான்!

325
ஏன் நீ முகம் பார்த்ததும்
சிலிர்க்க வேண்டும்,
அதனால் உடைய வேண்டும்
அந்தக் கண்ணாடி?

326
அதிலிருந்து தெறித்த
ஆயிரம் வார்த்தைகளை அள்ளி
உன் புன்னகையின்
அர்த்தத்தைத் தேடுகிறேன்

327
உன்னுடன்
நாளும் எழுந்து கொள்கிறது
அதிகாலையில்!

328
உன்னைக் கண்டதும்
உவமைகள்
ஓடி ஒளிந்து கொண்டன
நாணி.

329
உன் முகம் எனக்கு
இன்றைய வானிலை சொல்லும்
என் ஆகாயம்.

330
க்வாண்டம் ஜம்ப் அறியா
என் நினைவு எலெக்ட்ரான்கள்..
எப்போதும் அவை குதிப்பது
உன் பக்கமாகவே.

>>>0<<<

Wednesday, September 21, 2016

நல்லதா நாலு வார்த்தை... 73

'சிகையை நேர்ப்படுத்துகிறோம் தினமும்.
ஏன் கூடாது நம் இதயங்களை?'
- Chinese Proverb
(”People put their hair in order every day. 
Why not their hearts?’)
<<>>

'நேற்றிலிருந்து ஏதேனும் 
கற்றிருப்போம் என்று 
நாளை  நம்புகிறது.' 
-John Wayne
('Tomorrow hopes we have learnt something from yesterday.')

<<>>

’நாயகன் என்பவன் 
மற்றெவரையும் விட 
அதி தைரியசாலி அல்ல;
இன்னுமொரு ஐந்து நிமிடம் 
அதி தைரியமாக இருப்பவன், 
அவ்வளவே.’
-Emerson
(”A hero is no braver than anyone else;
he is only braver for five minutes longer.')
<<>>

’இருக்கட்டும் வெற்றி மேல் ஒரு கவனம்;
இருட்டான பக்கமொன்றுண்டு அதற்கும்.’
- Robert Redford
('Be careful of success; it has a dark side.')
<<>>

'வாழ்க்கையின் நோவுகள்
தம்மை மூழ்கடித்துவிடாதவண்ணம் 
அவற்றைப் பொறுத்துக் கொள்ள
தம் அனுபவங்களிலிருந்து 
கற்றுக் கொண்டவர்களையே 
சந்தோஷமானவர்கள் என்கிறோம்.'
- Carl Jung
('We deem those happy who from the experience of life
have learnt to bear its ills without being overcome by them.')

<<>>

'உங்களின் சந்தோஷங்கள் பற்றி
உங்களைவிட அதிர்ஷ்டம் குறைந்தவர்களிடம்
உரையாற்றாதீர்கள்.'
-Plutarch
('Do not speak of your happiness to
one less fortunate than yourself.')
<<>>

'எழுதவோ நினைக்கவோ முடியும் 
என்கிற எந்த ஒன்றையும்
படமாக்க முடியும்.'
- Stanley Kubrick.
('If it can be written or thought, it can be filmed.')
<<>>

'வீழாமலேயே இருப்பதில் அல்ல 

நம் மகிமை. 
வீழும் போதெல்லாம் எழுவதில்.'
-Confucius
('Our greatest glory is not in never falling,
but in rising every time we fall.')
<<>>

'தனக்கு எந்தப் பயனுமற்ற மனிதர்களிடம் 
தான் காட்டும் மதிப்பே ஒரு பெரிய மனிதனை 
அடையாளம் காணும் இறுதிச் சோதனை.'
-William Lyon Phelps
('The final test of a gentleman is his respect for
those who can be of no possible service to him.')
<<>>

'செயல் எப்போதும் சந்தோஷத்தைக் 
கொண்டுவருவதில்லைதான்; ஆனால் 
செயலின்றி சந்தோஷம் இல்லை.'
-Benjamin Disraeli
('Action may not always bring happiness;
but there is no happiness without action.')

>><<>><<

Wednesday, September 14, 2016

குறிப்பாக சொன்னால்...(நிமிடக் கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 107

ஒரு முறை. இரு முறை. இதோ பதினெட்டு…

ஊஹூம்,  கார் ஸ்டார்ட் ஆகிற வழியைக் காணோம்!

உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கௌதம்.  பார்த்துக்கொண்டு எல்லாரும். சாத்வீகனும்.

எல்லாருமாக சின்னதா ஒரு பயணம், பக்கத்து ஊர் முருகன் கோவிலுக்கு கிளம்புகையில் கார் மக்கர்.

அப்புறம் மெக்கானிக்கை வரவழைத்து ஒருவழியாக கார் ஸ்டார்ட் ஆக ரெண்டு மணி நேரம் ஆகிவிட்டது.

"பேட்டரி டவுன் சார். இடையிடையே வண்டியை ஸ்டார்ட் பண்ணிவிட்டிருந்தா இப்படி ஆகியிருக்காது,” என்று சொல்லிவிட்டுப் போனார்.

”அஞ்சு நிமிஷம் தானே ஆகும், இதுகூட முடியலேன்னா நமக்கே கொஞ்சம்...” மெல்ல சொன்னார் இவர்.

’ஆமாப்பா, வெட்கமாத்தான் இருக்கு. இனிமேல் மறக்காம இதை ரெகுலரா பண்ணிடணும்.”

த்தியானம்.  டயரி எழுதிக் கொண்டிருந்த கௌதமிடம் வந்தார் சாத்வீகன். ”தினமும் தவறாம எழுதிடுவே போலிருக்கே?”

”ஆமா. எதை மறந்தாலும்!’

”அப்படியா, என்னென்ன எழுதுவே?”

”அன்றைக்கு நடந்த முக்கியமான நிகழ்வுகள், சந்தித்த நபர்கள், படித்த நல்ல விஷயம் இப்படி..”

”திரும்ப எடுத்து படிப்பதுண்டா?”

”அடிக்கடி.”

”நல்ல பழக்கம்..” என்று போய்விட்டார்.

று நாள். 

அதேபோல டயரி எழுதும்போது இவர் வந்தார்.

”பர்சனல்தான், இருந்தாலும் நேத்திக்கு நீ என்னென்ன எழுதினேன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆசை. சொல்லலாமில்லையோ?”

”அதுக்கென்னப்பா… ” ஒவ்வொன்றாக படித்தார் கௌதம்.

”எல்லா முக்கியமான, ருசிகரமான, நல்ல விஷயமும் எழுதியிருக்கே… ஆனா நேற்று அந்த கார் ஸ்டார்ட் ஆகாதது… அடிக்கடி ஸ்டார்ட் பண்ணி வைக்காததால பேட்டரி பாதித்தது… பாடம் கற்றுக்கொண்டது... அதை எழுதலியே?”

”ஆமா எழுதலே. அது .. அது...”

”அந்த அனுபவத்தை, அதில தெரிஞ்சுக்கிட்டதை எழுதியிருக்கணும்.  அப்படி போன தடவை இதே விஷயம் நடந்தப்ப அதை உன் டயரியில் எழுதியிருந்தால் நேற்று அப்படி நடந்திருக்காது இல்லையா? நமக்கு நிறையவே அனுபவங்கள் கிடைக்குது. அதில் சில அருமையான பாடங்களும்.  ஆனால் அதை நாம டயரியிலோ அல்லது வேறெதிலுமோ எழுதி வெக்கிறதில்லே.  அனுபவங்களில் கிடைத்த ரசனைகளை குறித்து வைப்பது எத்தனை நல்ல விஷயமோ அதைவிட நல்ல, முக்கியமான விஷயம் அதில் கிடைத்த பாடங்களை எழுதி வைப்பது!”

”ரைட்டா சொன்னீங்கப்பா.”

(’அமுதம்’ மார்ச் 2015 இதழில் வெளியானது)

Tuesday, September 13, 2016

அவள் .. (கவிதைகள்)

311
காலைப் பொழுதையும்
மாலைப் பொழுதையும்
கையோடு கொண்டு வருகிறாயே
எப்படி?


312
கோலமிட்டது நான்
புள்ளிகள் நீ இட்டது.

313
உறங்குகையில் உதட்டில் நெளியும் புன்னகை
உரைக்கிறது கனவில் என்னைக் காண்பதை.

314
கடைசி வரை தெரியப்போவதில்லை 
எத்தனை அஸ்திரம் வைத்திருக்கிறாய்
என்னை வீழ்த்த என்று.

315
நீ சாயுமிடம் 
தான் என்பதால்
ஏகப் பெருமை என்
தோளுக்கு.


316
ஸ்மைல் ப்ளீஸ்.
ஸ்மைல்..
தடால்!
கொஞ்சம் இரு,
எழுந்துக்கறேன்!

317
என் நாளை நீ எடுத்துக்கொண்டுவிட்டு
என்னைக் கேட்கிறாய் 
என்ன சாதித்தாய் இன்றென.

318
இடம் சுட்டி பொருள் விளக்க முடியாதது:
உன் சகல சந்தர்ப்ப 
‘உம்!’

319
எனக்குள் நீ 
எல்லாமாக.

320
ஒரு நாளாவது நானாக
இருக்கவேண்டும் நீ,
என் அவஸ்தை 
புரிந்துகொள்ள.

>><><><<

Sunday, September 11, 2016

நல்லதா நாலு வார்த்தை... 72


'அவசியமானதைச் செய்வதில் 
ஆரம்பியுங்கள்.
செய்யமுடிவதை செய்து தொடருங்கள்.
சட்டென்று பார்த்தால் 
செய்யவே முடியாததையும் 
செய்து கொண்டிருப்பீர்கள்.’
- Francis of Assisi.
('Start by doing what's necessary; then do what's possible;
and suddenly you are doing the impossible.')

<<>>

'போதுமானதே 
மிகுதி, 
விவேகமுள்ளோர்க்கு.
- Euripides
('Enough is abundance to the wise.')
<<>>

'விவேகத்தைவிட ஆனந்தத்தையே
விரும்புகிறது உலகம், 
விவேகமாக.'
- Will Durant
('The world wisely prefers happiness to wisdom.')
<<>>

'அறிவைவிட 
அதிகம் செய்யும் 
பேரார்வம்.'
- William Hazlitt
('Zeal will do more than knowledge.')
<>

'குழந்தைகள் கற்றுக் கொள்வது 
வளர்ந்தவர் இருக்கும் முறையிலிருந்து; 
அவர் பேசுவதிலிருந்து அல்ல.'
- Carl Jung
('Children are educated by what the
grown-up is and not by his talk.')
<>

’குளிருக்கும் பசிக்கும் தாகத்துக்குமானதை
ஏற்படுத்திக் கொண்டுவிட்டால் மற்றனைத்தும் 
ஆடம்பரமும் அதிகப்படியானதுமே.’
- Seneca
('When we have provided against cold, hunger and thirst,
all the rest is but vanity and excess.')
<>

’தனக்குத்தானே பேசுவதில்
ஓர் அனுகூலம்:
குறைந்தபட்சம் யாரேனும் 
கேட்கிறார்கள் அதையென்று 
நமக்குத் தெரிகிறது!’
-Franklin P. Jones
(’One advantage of talking to yourself is that you
know at least somebody's listening.’)
<<>>

'ஒரு பிரசினை என்பது 
நம் ஆகச் சிறந்ததைச் செய்திட 
ஒரு சந்தர்ப்பம்.'
- Duke Ellington
('A problem is a chance for you to do your best.')
<<>>

'மலர்களின் மணம் பரவுவது
காற்றின் திசையில் மட்டுமே;
மனிதனின் நற்குணமோ
எத்திசையும் பரவும்.'
-Chanakya
('The fragrance of flowers spreads only in the direction
of the wind. But the goodness of a person spreads in all directions.')
<<>>

'எல்லாமே நாம் விஷயங்களை 
எப்படிப் பார்க்கிறோம் 
என்பதைப் பொறுத்தது
அவை தம்மில் எப்படி 
என்பதில் அல்ல.'
-Carl Jung
('It all depends on how we look at things,
and not how they are in themselves.')

<<>>

Monday, September 5, 2016

வசதியிலும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 106

சென்னைக்கு சென்றபோது நண்பன் ரகு வீட்டுக்கு சின்னதாக ஒரு விஜயம் செய்தார் வாசு.

எதிர்ப்பட்ட பையனைப் பார்த்ததும்.... ”இது... நம்ம நரேஷ் இல்லை?” 

“அவனேதான். இப்ப பத்தாவது படிக்கிறானாக்கும். இவன்தான் இப்ப வீட்டில வி.ஐ.பி.”

சாம்பார் நல்ல டேஸ்டாக இருந்தது. சட்னியும்தான். மல்லிப்பூ இட்லியை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வாசு அவர்களுடன். 

”இந்தா, இதையும் தொட்டுக்கடா.. சூப்பரா இருக்கும்,” என்று மகன் தட்டில் மிளகாய்ப் பொடியை தூவி எண்ணையை வார்த்தாள் ரகுவின் மனைவி.  ஆச்சரியமாக பார்த்த வாசு, தனக்கு வேண்டாம் என்று மறுத்தார்.

”சாயந்தரம் ஸ்கூல் ஃபங்ஷன் இருக்கு, போகணும். சொன்னேனே? டிரஸ் அயன் பண்ணிவெச்சியாம்மா?’ என்று அவன் சொல்லியபோது ”ஓ, ரெண்டு சட்டை பாண்ட் பண்ணிவெச்சிருக்கேன், எது பிடிக்குதோ அதை போட்டுக்க.”

”நான் கொண்டுபோய் விட்டிடறேன், பைக்கில போவோமா இல்லை காரை எடுக்கட்டுமா?” என ரகு கேட்க அவன், ”காரிலேயே போகலாம்பா!”

“அப்ப டிரைவருக்கு போன் பண்ணிடறேன்.”

நினைத்துக் கொண்டார். நல்ல கவனிப்புதான்.

சாப்பிட்டுவிட்டு எல்லாரும் ஹாலில் பேசிக் கொண்டிருந்தனர். சமையலறையிலிருந்து வந்த கனகா, ”இந்த லைட்டையும் போட்டுக்குங்க, வெளிச்சமா இருக்கும்,”என்று இன்னொரு டியூபையும் ஒளிரவிட்டுப் போனாள். 

இவருக்கு வித்தியாசமாக இருந்தது. ஒன்றும் சொல்லவில்லை.

று நாள் நரேஷைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில்...

”அவனுக்கு எந்தக் குறையும் வெக்கிறதில்லே. நல்லா கவனிச்சுக்கறோம். படிக்கிற பையன் இல்லையா?” என்றார் ரகு.

”எல்லாம் சரிதான். பாராட்ட வேண்டியதுதான் . ஆனால்...” இழுத்தார் வாசு, ”வாழப் போகிற பையனும் கூட. இப்படிப் பழக்குவது நாளை அவர்களுக்கு நல்லதில்லை. யோசியுங்கள். இத்தனை எக்ஸ்ட்ரா  கம்ஃபர்ட் தேவையா அவர்களுக்கு? ஒவ்வொரு வசதியிலும் இத்தனை சாய்ஸ் வேணுமா?  வசதியற்ற சூழ் நிலையில் அவர்கள் இருந்தால் அவர்களின் படிப்பும் முன்னேற்றமும் பாதிக்கலாம்தான், மறுக்கவில்லை. ஆனால் கிடைக்கிற வசதிக்குள் வாழ்ந்து முன்னேறவும் அவர்கள் பழக வேண்டாமா? அதிகப்படி வசதியினால் அவர்களுக்குக் கிடைக்கிற நன்மைகளை விட கெடுதலே அதிகம் இல்லையா?”

”அதில்லை, பெத்தவங்க என்ற முறையில் அவங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர்றது நம்ம கடமை இல்லையா?”

”வசதியை ஏற்படுத்துங்கள். ஆனால் வசதிக்குள் மேலும் மேலும் சாய்ஸை ஏற்படுத்தவேண்டாமே? அவனே கேட்காத வசதியை ஏன் அவனுக்கு அளிக்கிறீர்கள் என்று புரியவில்லை. நீ கேட்பதை ஒன்றுக்குப் பத்தாக தருகிறோம், நாங்கள் விரும்புவதை தா, என்கிற மாதிரி… அவனுக்கே புரிகிறது, உங்கள் எதிர்பார்ப்பை அவன் பூர்த்தி செய்யவே அவனை இப்படி கவனிக்கிறீர்களே தவிர அவனுக்கான பங்கை அல்ல நீங்கள் அளிப்பது என்று.  இது அவனுக்கு உங்கள் நோக்கத்தை எப்படியாவது பூர்த்தி செய்யணுமே என்ற அச்சத்தையே எற்படுத்துமே தவிர ஆர்வத்தை அல்ல.  இயல்பாக அவனுக்கு தேவைப்படுவதில் இயன்றதை அளியுங்கள், அதுவே போதுமானது, சரியானதும் கூட.”

(’அமுதம்’ மார்ச் 2015 இதழில் வெளியானது)