Monday, September 5, 2016

வசதியிலும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 106

சென்னைக்கு சென்றபோது நண்பன் ரகு வீட்டுக்கு சின்னதாக ஒரு விஜயம் செய்தார் வாசு.

எதிர்ப்பட்ட பையனைப் பார்த்ததும்.... ”இது... நம்ம நரேஷ் இல்லை?” 

“அவனேதான். இப்ப பத்தாவது படிக்கிறானாக்கும். இவன்தான் இப்ப வீட்டில வி.ஐ.பி.”

சாம்பார் நல்ல டேஸ்டாக இருந்தது. சட்னியும்தான். மல்லிப்பூ இட்லியை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வாசு அவர்களுடன். 

”இந்தா, இதையும் தொட்டுக்கடா.. சூப்பரா இருக்கும்,” என்று மகன் தட்டில் மிளகாய்ப் பொடியை தூவி எண்ணையை வார்த்தாள் ரகுவின் மனைவி.  ஆச்சரியமாக பார்த்த வாசு, தனக்கு வேண்டாம் என்று மறுத்தார்.

”சாயந்தரம் ஸ்கூல் ஃபங்ஷன் இருக்கு, போகணும். சொன்னேனே? டிரஸ் அயன் பண்ணிவெச்சியாம்மா?’ என்று அவன் சொல்லியபோது ”ஓ, ரெண்டு சட்டை பாண்ட் பண்ணிவெச்சிருக்கேன், எது பிடிக்குதோ அதை போட்டுக்க.”

”நான் கொண்டுபோய் விட்டிடறேன், பைக்கில போவோமா இல்லை காரை எடுக்கட்டுமா?” என ரகு கேட்க அவன், ”காரிலேயே போகலாம்பா!”

“அப்ப டிரைவருக்கு போன் பண்ணிடறேன்.”

நினைத்துக் கொண்டார். நல்ல கவனிப்புதான்.

சாப்பிட்டுவிட்டு எல்லாரும் ஹாலில் பேசிக் கொண்டிருந்தனர். சமையலறையிலிருந்து வந்த கனகா, ”இந்த லைட்டையும் போட்டுக்குங்க, வெளிச்சமா இருக்கும்,”என்று இன்னொரு டியூபையும் ஒளிரவிட்டுப் போனாள். 

இவருக்கு வித்தியாசமாக இருந்தது. ஒன்றும் சொல்லவில்லை.

று நாள் நரேஷைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில்...

”அவனுக்கு எந்தக் குறையும் வெக்கிறதில்லே. நல்லா கவனிச்சுக்கறோம். படிக்கிற பையன் இல்லையா?” என்றார் ரகு.

”எல்லாம் சரிதான். பாராட்ட வேண்டியதுதான் . ஆனால்...” இழுத்தார் வாசு, ”வாழப் போகிற பையனும் கூட. இப்படிப் பழக்குவது நாளை அவர்களுக்கு நல்லதில்லை. யோசியுங்கள். இத்தனை எக்ஸ்ட்ரா  கம்ஃபர்ட் தேவையா அவர்களுக்கு? ஒவ்வொரு வசதியிலும் இத்தனை சாய்ஸ் வேணுமா?  வசதியற்ற சூழ் நிலையில் அவர்கள் இருந்தால் அவர்களின் படிப்பும் முன்னேற்றமும் பாதிக்கலாம்தான், மறுக்கவில்லை. ஆனால் கிடைக்கிற வசதிக்குள் வாழ்ந்து முன்னேறவும் அவர்கள் பழக வேண்டாமா? அதிகப்படி வசதியினால் அவர்களுக்குக் கிடைக்கிற நன்மைகளை விட கெடுதலே அதிகம் இல்லையா?”

”அதில்லை, பெத்தவங்க என்ற முறையில் அவங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர்றது நம்ம கடமை இல்லையா?”

”வசதியை ஏற்படுத்துங்கள். ஆனால் வசதிக்குள் மேலும் மேலும் சாய்ஸை ஏற்படுத்தவேண்டாமே? அவனே கேட்காத வசதியை ஏன் அவனுக்கு அளிக்கிறீர்கள் என்று புரியவில்லை. நீ கேட்பதை ஒன்றுக்குப் பத்தாக தருகிறோம், நாங்கள் விரும்புவதை தா, என்கிற மாதிரி… அவனுக்கே புரிகிறது, உங்கள் எதிர்பார்ப்பை அவன் பூர்த்தி செய்யவே அவனை இப்படி கவனிக்கிறீர்களே தவிர அவனுக்கான பங்கை அல்ல நீங்கள் அளிப்பது என்று.  இது அவனுக்கு உங்கள் நோக்கத்தை எப்படியாவது பூர்த்தி செய்யணுமே என்ற அச்சத்தையே எற்படுத்துமே தவிர ஆர்வத்தை அல்ல.  இயல்பாக அவனுக்கு தேவைப்படுவதில் இயன்றதை அளியுங்கள், அதுவே போதுமானது, சரியானதும் கூட.”

(’அமுதம்’ மார்ச் 2015 இதழில் வெளியானது)

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
அருமை

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் அறிவுரை..

கோமதி அரசு said...

அருமையான அறிவுரை.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கதைக் கரு. நான் என் மனதில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த ஒன்று...எங்கள் வீட்டில் இப்படியொரு அனுபவம் இதே போன்று இன்னும் பல விதத்தில்.... பெண் குழந்தை வேறு....அதை வைத்துத்தான்...எழுத நினைத்திருந்தேன். அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.

கீதா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!