Monday, January 21, 2013

காற்றோடு போயாச்சு...





முனா, நில்லு. நான் சொல்றதைக் கேளு! கத்தினான் பரசு.

முடியாது நான் சாகப்போறேன். ஆகாஷ் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்! தண்ணீரில் குதிக்க முன்னேறிச் சென்றாள் யமுனா.

பரந்து கிடந்த குளத்தின் நீரலைகள் ஆழத்தைப் பொதிந்து வைத்தபடி, வா, வா,’ என்று அவளை வரவேற்றன. பரசுவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. ஆனாலும் யமுனாவைக் கோபப்பட மனசில்லை.

சிறு வயது சிநேகம் காதலாக மாறி உள்ளுக்குள் அலை வீசிக்கொண்டிருக்க, தன் விருப்பத்தை வெளியிட பரசு சமயம் பார்த்துக் கொண்டிருந்தபொதுதான் திடீர்ப் பிரவேசமாகக் குறுக்கிட்டான் ஆராய்ச்சியாளன் ஆகாஷ்.

 அதுவரை பரசு, பரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருந்த யமுனா அடியோடு மாறிப்போனாள். ஒரே ஒருநாள் தனியே சந்தித்து பத்து நிமிஷம் பேசினான் ஆகாஷ். அப்படி என்னதான் பேசினானோ, அடுத்த வினாடியிலிருந்தே அவன் மீது மையலாகி விட்டாள் யமுனா.

அவர்கள் காதல் நாளொரு மேனியாக வளர இவனது மனம் பொழுதொரு வண்ணமாக பட்டுப்போனது. ஆகாஷ் மீது பைத்தியமாக மாறிப்போன யமுனா சாதாரணமாகக் கூட தன்னுடன் பேசாமல் போனதுதான் பரசுவுக்குத் தாங்கொணா வேதனையைக் கொடுத்தது.
அப்போதுதான்...

பெரிய தனக்காரர் தன் மகள் சிவகாமியை ஆகாஷுக்கு பெண் பேசும் படலத்தைத் தொடங்கினார். அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாத ஆகாஷ், யமுனாவிடம் மட்டும் சுருக்கமாக, என்னை மறந்து விடு,” என்று சொல்லிவிட்டுக் காணாமல் போய்விட்டான்.

இடிந்து போன யமுனா இப்போது தேடிக்கொள்ளப் பார்க்கும் முடிவு...

ஆழமான குளம் அது. இதுவரை ஆறு பேரைப் பலி கொண்டது. தற்செயலாக அங்கே வந்த பரசு பார்த்துப் பதறிவிட்டான். காதல் தோல்வியின் ஆவேசம் அவளைச் செலுத்த, வேகமாக அவள் முன்னேற, இவனால் பிடிக்க முடியாத இடைவெளி. அப்போதுதான் அது நடந்தது.  

குளத்தின் மறுகரையில் நின்றிருந்த தென்னை மரங்களினூடே பிரகாசமான ஒளியுடன் விண்கலம் மேலே எழும்பியது. அதன் வாசலில் ஆகாஷ். அவன் பேச்சு அசரீரி வார்த்தைகள் போல் வந்து விழுந்தன.

மிஸ் யமுனா, நான் விடை பெறுகிறேன். உங்கள் பூமியில் நிலவும் காதல் என்கிற விசித்திரத்தை ஆராய்ச்சி செய்ய வந்த லிபிகா கிரகவாசி நான்.  மனிதர்களின் மனதை மயக்கும் வித்தை தெரிந்தவர் நாங்கள். ஆகவே உன் மனதில் இருந்த பழைய நினைவுகளை அழித்துவிட்டு என் மீது காதலை உருவாக்கி சோதித்துப் பார்த்து விட்டேன். சோதனைக்கு உன்னைப் பயன்படுத்திக் கொண்டதற்கு என்னை மன்னித்துவிடு. என் பணி முடிந்தது. இந்த நிமிஷமே என் நினைவுகளை உன் மனதிலிருந்து அகற்றி விடுகிறேன்...

கையசைத்துவிட்டு கண்ணாடிக் கதவுக்குள் அவன் சென்றதும் புள்ளியாகி மறைந்தது கலம்.  மந்திரக் கட்டுகளிலிருந்து விடுபட்டவளாகத் திரும்பினாள் யமுனா. பரசுவை அவள் பார்த்த பார்வையில் பழைய அன்பும் வாஞ்சையும் தெரிய சிலிர்த்தான் அவன்.

('ஆனந்த விகடன்' 2006 தீபாவளி மலரில், ஓவிய மேதை மாதவன் அவர்கள் புகழ் பெற்ற உமா பத்திரிகைக்கு வரைந்த பிரபல அட்டைப் பட ஓவியங்களுக்கான சிறுகதைகளை எழுத்தாளர்களிடம் வாங்கி வெளியிட்டிருந்தார்கள். எனக்கு தரப்பட்ட படத்துக்கு நான் எழுதி வெளியான கதை இது.   நன்றி: ஆனந்த விகடன்.)

<<<>>>

Saturday, January 12, 2013

என்னவள்...




ன் அன்பொரு அழகைச்
சுமந்து வரும்
என் அகக்கண் அதில்
குளிர்ந்து விடும்.

ன் முன்பொரு வாசம்
தவழ்ந்து வரும்
அதில் தனியொரு பாசம்
கமழ்ந்திருக்கும்.

நெற்றியிற் கேசம்
கலைந்து விழும்
நின்றதைப் பார்த்தால்
நெஞ்சம் கவிழும்.

சொற்களின் சிக்கனம்
தூண்டிவிடும்
கற்பனை என் முன்
பொங்கி எழும்.

ன் பாதம் தரையில்
நீந்தி வரும்
அது பாக்களை விரலில்
ஏந்தி வரும்.

ண்களில் காந்தம்
ஒளிந்திருக்கும்
காணுமுன்பாகவே
ஈர்த்துவிடும்.

திருப்திப் புன்னகை
உதடுகளில்
திகழ்ந்திருக்கும் நீ
சயனிக்கையில்.

ன் அசைவுகள் தென்றலை
வழிநடத்தும் அந்த
இசையினில் எனக்கு
மெய் மறக்கும்.

துன்பம் உன்னிடம்
துவண்டு விடும்
துணிவோ உன்னிடம்
கற்றுக் கொள்ளும்.

துணையெனும் வார்த்தை
தலை குனியும்
உனை அது முழுதும்
சொலப் போதாமல்!

<<<>>>