Monday, January 21, 2013

காற்றோடு போயாச்சு...





முனா, நில்லு. நான் சொல்றதைக் கேளு! கத்தினான் பரசு.

முடியாது நான் சாகப்போறேன். ஆகாஷ் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்! தண்ணீரில் குதிக்க முன்னேறிச் சென்றாள் யமுனா.

பரந்து கிடந்த குளத்தின் நீரலைகள் ஆழத்தைப் பொதிந்து வைத்தபடி, வா, வா,’ என்று அவளை வரவேற்றன. பரசுவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. ஆனாலும் யமுனாவைக் கோபப்பட மனசில்லை.

சிறு வயது சிநேகம் காதலாக மாறி உள்ளுக்குள் அலை வீசிக்கொண்டிருக்க, தன் விருப்பத்தை வெளியிட பரசு சமயம் பார்த்துக் கொண்டிருந்தபொதுதான் திடீர்ப் பிரவேசமாகக் குறுக்கிட்டான் ஆராய்ச்சியாளன் ஆகாஷ்.

 அதுவரை பரசு, பரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருந்த யமுனா அடியோடு மாறிப்போனாள். ஒரே ஒருநாள் தனியே சந்தித்து பத்து நிமிஷம் பேசினான் ஆகாஷ். அப்படி என்னதான் பேசினானோ, அடுத்த வினாடியிலிருந்தே அவன் மீது மையலாகி விட்டாள் யமுனா.

அவர்கள் காதல் நாளொரு மேனியாக வளர இவனது மனம் பொழுதொரு வண்ணமாக பட்டுப்போனது. ஆகாஷ் மீது பைத்தியமாக மாறிப்போன யமுனா சாதாரணமாகக் கூட தன்னுடன் பேசாமல் போனதுதான் பரசுவுக்குத் தாங்கொணா வேதனையைக் கொடுத்தது.
அப்போதுதான்...

பெரிய தனக்காரர் தன் மகள் சிவகாமியை ஆகாஷுக்கு பெண் பேசும் படலத்தைத் தொடங்கினார். அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாத ஆகாஷ், யமுனாவிடம் மட்டும் சுருக்கமாக, என்னை மறந்து விடு,” என்று சொல்லிவிட்டுக் காணாமல் போய்விட்டான்.

இடிந்து போன யமுனா இப்போது தேடிக்கொள்ளப் பார்க்கும் முடிவு...

ஆழமான குளம் அது. இதுவரை ஆறு பேரைப் பலி கொண்டது. தற்செயலாக அங்கே வந்த பரசு பார்த்துப் பதறிவிட்டான். காதல் தோல்வியின் ஆவேசம் அவளைச் செலுத்த, வேகமாக அவள் முன்னேற, இவனால் பிடிக்க முடியாத இடைவெளி. அப்போதுதான் அது நடந்தது.  

குளத்தின் மறுகரையில் நின்றிருந்த தென்னை மரங்களினூடே பிரகாசமான ஒளியுடன் விண்கலம் மேலே எழும்பியது. அதன் வாசலில் ஆகாஷ். அவன் பேச்சு அசரீரி வார்த்தைகள் போல் வந்து விழுந்தன.

மிஸ் யமுனா, நான் விடை பெறுகிறேன். உங்கள் பூமியில் நிலவும் காதல் என்கிற விசித்திரத்தை ஆராய்ச்சி செய்ய வந்த லிபிகா கிரகவாசி நான்.  மனிதர்களின் மனதை மயக்கும் வித்தை தெரிந்தவர் நாங்கள். ஆகவே உன் மனதில் இருந்த பழைய நினைவுகளை அழித்துவிட்டு என் மீது காதலை உருவாக்கி சோதித்துப் பார்த்து விட்டேன். சோதனைக்கு உன்னைப் பயன்படுத்திக் கொண்டதற்கு என்னை மன்னித்துவிடு. என் பணி முடிந்தது. இந்த நிமிஷமே என் நினைவுகளை உன் மனதிலிருந்து அகற்றி விடுகிறேன்...

கையசைத்துவிட்டு கண்ணாடிக் கதவுக்குள் அவன் சென்றதும் புள்ளியாகி மறைந்தது கலம்.  மந்திரக் கட்டுகளிலிருந்து விடுபட்டவளாகத் திரும்பினாள் யமுனா. பரசுவை அவள் பார்த்த பார்வையில் பழைய அன்பும் வாஞ்சையும் தெரிய சிலிர்த்தான் அவன்.

('ஆனந்த விகடன்' 2006 தீபாவளி மலரில், ஓவிய மேதை மாதவன் அவர்கள் புகழ் பெற்ற உமா பத்திரிகைக்கு வரைந்த பிரபல அட்டைப் பட ஓவியங்களுக்கான சிறுகதைகளை எழுத்தாளர்களிடம் வாங்கி வெளியிட்டிருந்தார்கள். எனக்கு தரப்பட்ட படத்துக்கு நான் எழுதி வெளியான கதை இது.   நன்றி: ஆனந்த விகடன்.)

<<<>>>

12 comments:

ரிஷபன் said...

எதிர்பாராத ட்விஸ்ட் !

யமுனாவை பரசுவுடன் சேர்த்து வைத்த உங்களுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

வாவ்... திடீரென ஆகாஷ் - ஆகாசத்திலிருந்து வந்தவர் என முடிவில் சொல்லி இருவரையும் சேர்த்து வைத்தது நல்ல முடிவு!

Mahi said...

Crisp story! Ooviyam azhakaa irukkunga.

மனோ சாமிநாதன் said...

ஓவியர் மாதவன் படம் போல இருக்கிறதே என்று உள்ளே வந்தால் அது சரிதான் என்பது போல நீங்களும் எழுதியிருந்தீர்கள். வித்தியாசமான சிறப்பான சிறு கதை! அத‌ற்கு மாதவன் படம் போட்டது உங்களுக்கு ஒரு அரிய சன்மானம்!

Suganthan said...

அப்பட்டமான 'கதை'. ஆனாலும் நல்ல கதை. பாராட்டுக்கள்! படத்தைப் பார்த்தால் அவர்கள் ஏதோ அதிர்ச்சிக்குள்ளானது போல் தெரிகிறது; நீங்கள், யமுனா தற்கொலை செய்யப் போவதாய் எழுதுகிறீர்களே என எண்ணினேன். நல்ல திருப்பம், சந்தோஷ முடிவு. சந்தோஷம். நன்றி.

கோமதி அரசு said...

ஆஹா! நல்ல திருப்பம். பரசுவின் உண்மை காதல் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

cheena (சீனா) said...

அன்பின் ஜனா = கதை நன்று - முடிவு சரியான முடிவு - நல்வாழ்த்துகள் ஜனா - நட்புடன் சீனா

Unknown said...

எதிர் பாரத திருப்பம்! கதை இதயத்தைத் தொட்டது !

ADHI VENKAT said...

வாவ்! சூப்பரான ட்விஸ்ட் சார். எதிர்பார்க்கவேயில்லை. யமுனா பரசுவுடன் சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கதை. நல்ல டிவிஸ்டு. ;) சுபமான முடிவு. ;)

நிலாமகள் said...

நல்லாயிருக்கு சார், உங்க ட்விஸ்ட்டு!

கே. பி. ஜனா... said...

Muthuswamy, K. says:
2006 picture in ananthavikatan connected story written by u (kattodu) is very fine. i am proud abut u.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!