அன்புடன் ஒரு நிமிடம் - 24
இருப்பும் விருப்பும்
“நாலு நாள் லீவு. யசோதாவும் நானும்
யுவனை அழைச்சிட்டு அங்கே வர்றோம். மெயில்லே தகவல் அனுப்பியிருந்தேனே, பார்த்திட்டீங்களா?” என்று ஆரம்பித்து தன் வருகைத்
தேதி பற்றி அப்பாவுக்கு சுருக்கமாகத் தெரிவித்த கௌதம், ‘அம்மாவை முறுக்கு சீடை எல்லாம்
செய்ய ஆரம்பிக்காம ஃப்ரீயா இருக்க சொல்லுங்க. நாலு நாளும் ஊரிலே தான், உங்களோடு தான்....” என்றவன்,
“அப்புறம்
உங்க காரை மாத்தி புதுசா...சரி, எல்லாம் நேரில வந்து பேசிக்கிறேன்!” சட்டென்று வைத்துவிட்டான் போனை.
போனதும்
காரை மாற்ற சொல்லணும் வேறு பெரிய வண்டி வாங்கிக் கொடுக்கணும், என்று நினைத்துக் கொண்டான்.
அநியாயத்துக்கு பழசாகிவிட்டது அந்த வண்டி.
சொன்னால்
கேட்க மாட்டார். அதுக்கென்ன, நல்லாதானே ஓடிட்டிருக்கு என்பார்.
அவன்
ரெண்டு லகரத்துக்கு மேல் சம்பளம் வாங்குகையில் அவர் அந்த பழைய காரைக்
கட்டிக்கொண்டு அழுவதை அவனால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?
ஊரில்
வந்து இறங்கியவனுக்கு முதல் நாளே ஏமாற்றம் காத்திருந்தது. வெளியே கிளம்ப
புறப்பட்டவன் ஷெட் காலியாக இருந்ததைப் பார்த்து புருவம்
உயர்த்தினான்.
“அதுவா? காரை செர்வீஸுக்கு விட்டிருக்கேன், ஒண்ணு ரெண்டு சின்ன வேலை
இருக்குனு சொன்னான். நாலு நாள்ல வந்துடும்.” என்றார் சாத்வீகன்.
“சரிதான், அப்ப இந்த நாலு நாளும் கார்
இல்லையாக்கும்?” ஜீரணிக்க கொஞ்சம் நேரமாயிற்று.
“அதுக்கென்ன, பைக் இருக்கே?” என்று சாவியை நீட்டினார்,
பரவாயில்லே
இதாவது இருக்கே? அதை வைத்துக் கொண்டு சமாளித்தான்.
மூன்றாவது
நாள் அதுவும் பாதையில் ஏதோ உபாதையில் உட்கார்ந்து கொண்டது. இவன் பின்னால் உட்கார
ஹோட்டலுக்கு பார்சல் வாங்க சென்றிருந்தார் அவர். ஆனமட்டும் முயன்று பார்த்தார்கள்.
ஊஹூம், அசைவதாயில்லை அது.
அப்பாவும்
மகனுமாக வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். வீட்டுக்கு.
வொர்க்
ஷாப்பிலிருந்து ஆளைத் தருவித்து அதை சரி செய்ய ஒரு நாள் ஆகிவிட அன்றைக்கு எந்த
வண்டியும் இல்லாமல் கஷ்டமாயிருந்தது. வெளியே போக வர ரொம்ப சிரமமாயிற்று.
மறுநாள்
அந்த பைக் ஓட ஆரம்பித்தபோது அப்பாடா என்றிருந்தது. அதிலேயே அப்பாவுடன்,தோப்புக்கு,
அம்மாவுடன் கோவிலுக்கு, சமயத்தில் பையனுடன் லைப்ரரிக்கு என்று அதை ஐந்து நிமிடம் கூட சும்மா நிற்க
விடவில்லை.
கிளம்பும்
நாள். ரயில்வே ஸ்டேஷனில் எல்லாரும். சூட்கேஸ்களை உள்ளே ஏற்றி விட்டு எல்லாரும்
அமர்ந்தபின் வெளியே அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.
பேச
வேறு விஷயம் இல்லாமல் யோசித்தபோது அவருக்கு நினைவு வந்தது. “அன்னிக்கு வர்றேன்னு போன் செய்தப்ப
அந்தக்காரை மாத்தி புதுசான்னு நம்ம காரைப் பத்தி ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே, என்னடா அது?” என்று கேட்டார்
“அதுவா?” யோசித்தபடியே அவரை ஒரு நிமிடம்
உற்று நோக்கினான்.
“ஒண்ணுமில்லைப்பா, லீவ் இட்!” என்றான்.
காரே
இல்லாதப்ப, அந்த பைக் கூட எத்தனை இதமா, இன்னும் அன்னியோன்யமா இருந்தது
என்று மீண்டும் நினைத்துக் கொண்டான்.
அவர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
அவர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
<<<>>>
('அமுதம்' நவம்பர் 2012 இதழில் வெளியானது)
12 comments:
நம் இயல்பு அதுதான்.. இருப்பதை நேசிக்கக் கற்றுக் கொள்வோம். அருமையான பதிவு.
Gowtham-Yasoda...:) nalla per poruththam! Good story..iruppathin arumai athu illaatha pothu thaane theriyum??
உறவுகளும் அப்படித்தான் - இருக்கும் போது தெரிவதில்லை...
நமக்கு எதையும் மாற்ற மனம் வராது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ கற்றவர்கள் அல்லவா!
காரே இல்லாதப்ப, அந்த பைக் கூட எத்தனை இதமா, இன்னும் அன்னியோன்யமா இருந்தது என்று மீண்டும் நினைத்துக் கொண்டான்.//
உண்மைதான்.
கதை அருமை.
காரே இல்லாதப்ப, அந்த பைக் கூட எத்தனை இதமா, இன்னும் அன்னியோன்யமா இருந்தது என்று மீண்டும் நினைத்துக் கொண்டான்.//
அருமையான உட்கருத்துடன் கூடிய கதை
சொல்லிச் சென்றவிதமும் முடித்த விதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
அன்னியோன்யத்தை நிதர்சனமாக
புன்னகையுடன் உணர்த்திய
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அட இந்த ட்ரீட்மெண்ட் நல்லா இருக்கே!
இருப்பதை ரசித்து விட்டால் இல்லாதது பற்றி யோசிக்க தேவை இருக்காது....
நல்ல பாடம்....
// சொன்னால் கேட்க மாட்டார். அதுக்கென்ன, நல்லாதானே ஓடிட்டிருக்கு என்பார்.//
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் அப்பாக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
நல்லதொரு கதை. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்...
எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதை. அதனால் எல்லோருக்குமே அவரவர்கள் அனுபவத்தை படித்தாற்போல இருந்தது.
வாழ்த்துகள்!
//காரே இல்லாதப்ப, அந்த பைக் கூட எத்தனை இதமா, இன்னும் அன்னியோன்யமா இருந்தது//
நல்ல கதை. அன்னியோன்யமாகவே இருக்குது.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!