Thursday, November 23, 2023

காதில் தென்றல் போல்...

ந்தப் படத்தில் அவர் ஒரே ஒரு பாடல்தான் எழுதினார்.. ஆனால் அந்தப் பாடல் இருக்கையில் அமுதமும் தேனும் அவசியமில்லை என்று தோன்றும். ஆம், அதே பாடல்தான்! "அமுதும் தேனும் எதற்கு?" (தை பிறந்தால் வழி பிறக்கும்)


சுரதா... அழியாத பாடலை தந்தவருக்கு இன்று பிறந்தநாள்!

பாரதிதாசன் மேலிருந்த பற்றினால் அவர் இயற்பெயரை ஒட்டி சுப்புரத்தின தாசன்... சுருக்கமாக சுரதா...

சில படங்களுக்கு வசனம் எழுதியதில் ஒன்று 'ஜெனோவா.'

காதில் வந்து தென்றல் போல் ஒலிக்கும் "கண்ணில் வந்து மின்னல் போல்..." பாடலும் இவருடையதுதான். (நாடோடி மன்னன்)

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா..." என்ற பாடலை விட வேறொன்று வேண்டுமா இவரது இசைத்தமிழ் சொல்ல?

"வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை

வந்தவர் யாருமே நிலைத்ததில்லை

தொகுப்பார் சிலரதை சுவைத்ததில்லை

தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை!"

என்று முடியும் அந்த பாடல்!

>><<>><<

Wednesday, November 22, 2023

சந்தோஷம் என்பது...


‘எப்படி நீ இருக்கிறாயோ அதற்காக வெறுக்கப்படுவது,
எப்படி நீ இல்லையோ அதற்காக விரும்பப்படுவதைவிட
எவ்வளவோ மேல்.’
… சொன்னவர் Andre Gide.
பிரஞ்சு எழுத்தாளர். 1947 இன் இலக்கிய நோபலைப் பெற்றவர்.
இன்று பிறந்த நாள்!
சுவை, இன்னும் சொன்னவை...
‘உண்மையைத் தேடுபவர்களை நம்பு. உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்பவர்களை சந்தேகி.’
‘கரையிலிருந்து கண்ணை எடுக்கும் தைரியமுள்ளவனால்தான் புதுப்புது கடல்களைக் கண்டு பிடிக்க முடியும்.’
‘கலை என்பது கலைஞனுக்கும் கடவுளுக்குமான கூட்டு உருவாக்கம். கலைஞன் எத்தனை குறைவாக செய்கிறானோ அத்தனைக்கு நல்லது.’
‘சந்தோஷத்தைக் கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது? எது அந்த சந்தோஷத்தை உண்டாக்கியது, எது அதை அழித்தது என்பதைத்தான் சொல்ல முடியும்.’
‘நம்மைச் சிரமப் படுத்தி நம் முயற்சியை அதிகம் கோரிய காரியம்தான் நமக்கு மிக முக்கியமான விஷயங்களை கற்றுத் தர முடியும்.’

சந்தோஷம் என்பது அபூர்வமானது, மிகச் சிரமமானது, மிகவும் அழகானது என்பதை அறியுங்கள். இந்த முக்கியமான கண்டுபிடிப்பை நீங்கள் நடத்தியதும் சந்தோஷத்தை ஒரு தார்மீகக் கடமையாக தழுவிக் கொள்ள வேண்டும்.’
‘எல்லாம் முன்பே சொல்லப்பட்டு விட்டது; ஆனால் யாருமே கேட்கவில்லை என்பதால் மறுபடி மறுபடி முன்னுக்குப் போய் தொடங்க வேண்டியிருக்கிறது.’
‘மனிதர்களிடையே நாம் வாழ்வது வரை மனிதத்துவம் பேணுவோம்.’
‘ஆகவே’ என்பது கவிஞர்கள் மறக்க வேண்டிய வார்த்தை.’
'உங்களுக்குள் உயிர்த்திருக்கும்
அந்த ஒன்றுக்கு உண்மையாய் இருங்கள்.'

கூடை கூடையாக...


தியோடர் ஒரு எதிர்கால பிரஜை. தன் தனிமையை போக்க ஒரு ஏ. ஐ. (Artificial Intelligence) பொருத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வாங்குகிறான். பழகப் பழக சொக்கும் குரலில் பேசும் சமந்தாவை, அதுதான் அந்த ஓ.எஸ்ஸின் பெயர், நேசிக்கவே தொடங்கி விடுகிறான். ‘Her’ படத்தில் சமந்தாவின் குரலாக படம் முழுவதும் பேசி மட்டும் அசத்தியவர்…
Scarlet Johansson... இன்று பிறந்தநாள்!
கிறங்க வைக்கும் அழகுடன் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஹாலிவுட்டில் வலம் வரும் ஸ்டார்லெட், ஸ்கார்லெட்.
ஹாலிவுட்டின் highest grossing படங்களில் ஒன்றாகிய 'Avengers - Endgame' இல் நடித்தவர்.
ஏழு வயதில் நடிக்க வந்த இவர் ஒரு அட்டகாசமான பாடகி. டிஸ்னியின் 'ஜங்கிள் புக்'கின் “Trust in me..” -இலிருந்து “Set it free..” வரை நிறைய ஹிட்ஸ்! தன் ஃபேவரிட் Frank Sinatra மாதிரி பாடவேண்டும் என்று ஆசை...
பிரபல நடிகையான பின்னும் பிராட்வே நாடகம் ஒன்றில் நடித்தார் ஆசை ஆசையாக. தன் இமேஜ் காணாமல் போய்விடுகிற அளவுக்கு பாத்திரத்தில் ஆழ்ந்து நடித்ததாக பாராட்டு கூடை கூடையாக!
கடந்த காலத்தின் எதிரிகளை வஞ்சம் தீர்க்கும் ‘Black Widow’-வின் நடாஷாவை மறந்திருக்க மாட்டீர்கள்.
பிரபல Christopher Nolan இயக்கிய ‘The Prestige’ படத்தில் இரு பெரும் மேஜிக் நிபுணர்களின் சினேகத்தினூடே அவதியுறுபவராக சிறிய பாத்திரம்தானெனினும் மனதில் பதிந்த மேஜிக் நடிப்பு.
>><<>><<

Saturday, November 18, 2023

இரண்டு கையாலும் ...


200 நாட்கள்! (1881) மிகக் குறுகிய காலமே அந்தப் பதவியில் இருந்தார்.. சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர். தனக்குப் பதவி தரவில்லை என்ற ஆத்திரம் கொலையாளிக்கு. 'கடவுளே! என்ன இது!'தான் இவரது கடைசி வாக்கியம்.

James A Garfield.. இன்று பிறந்தநாள்!
குண்டு பாய்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றபோது உதவிக்கு வந்தார் டெலிபோன் புகழ் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், தான் கண்டுபிடித்திருந்த மெடல் டிடெக்டரைக் கொண்டு. அது பலன் தரவில்லை.
இரண்டு கையாலும் எழுதுவார். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் கூட அவரால் முடியும்!
'முதலில் நான் என்னை ஒரு மனிதனாக்க வேண்டும்,
அதில் வெற்றி பெற்றால் மற்ற
அனைத்திலும் நான் வெற்றியடைவேன்.'
இந்த மணி வாசகத்துக்குச் சொந்தக்காரர்...
இன்னும் சொன்னவை… ‘கடின வேலை செய்யும் ஆற்றல் ஓர் திறமை. அல்லது திறமைக்கு ஒரு சாத்தியமான மாற்று!’
‘எத்தனையோ தொல்லைகள் நேர்ந்து இருக்கின்றன எனக்கு. ஆனால் மிக மோசமான தொல்லை என்பது ஏற்படவேயில்லை.’
‘ஐடியாக்கள்தாம் உலகை ஆள்கின்றன.’
'விஷயங்கள் தானாக மலராது, யாராவது வந்து அதை மலர்த்தும் வரை.'
'நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நீங்கள் மிகப் பெரியவராக இல்லாவிடில் நீங்கள் அதற்கு மிகச் சிறியவர்.'
'உண்மை உங்களை விடுவிக்கும் ஆனால் அதற்குள் அது உங்களை ஒரு வழி பண்ணிவிடும்.'

Wednesday, November 15, 2023

வெகு X வெகு தூரத்தில்....


வெகு X வெகு தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு. ஆண்டு 1780. அவர் விருப்பத்தின் தூரத்திற்கு அடர்த்தியான லென்ஸ் மார்க்கெட்டில் இல்லை. தனக்கு வேண்டிய டெலெஸ்கோப்பை தானே தயாரிக்க ஆரம்பித்தார். சரியாக வரவில்லை.

காய்ச்சி ஊற்றிய உலோகங்களுடன் கட்டிப் புரண்டார். உடைந்து விடும் கண்ணாடிகளுடன் ஊசலாடினார். சோர்வுறாமல் முயன்றதில் உயர்ந்த வெற்றி! ஏன், அப்சர்வேட்டரிகளில் உள்ளதைவிட அப்ஸார்பிங் டெலஸ்கோப் தயாரிக்க முடிந்தது அவரால். 6450 மடங்கு பெரிதாக்கி காட்டும் அது!
வைத்துக் கொண்டு வானை அலசியதில் கண்ணில்/ணாடியில் பட்ட நட்சத்திரம் ஒன்று வித்தியாசமாக கண் சிமிட்டியது. அறிவால் நெருங்கியதில் அது ஒரு பிளானட் என்று தெரிந்தது. யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்! கிடைத்தது அந்தக்காலத்தின் அட்டகாசமான அவார்ட்: Copley Medal.
அவர்? William Herschel… நவம்பர் 15. பிறந்த நாள்!


அப்புறம்? அதாகப்பட்டது இவர் கண்ணில் அகப்பட்டது சனியின் இரு சந்திரன்கள். இவர் டெலெஸ்கோப்புக்குள் கண்ணை நுழைத்தால் இருட்டுக்கும், வெளிவந்தால் அறையின் அரை ஒளிக்கும் கண் பழக வேண்டும். மாற்றி மாற்றி செய்யும்போது எத்தனை கஷ்டம்? கை கொடுத்தார் சகோதரி கரோலின். இவர் சொல்ல அவர் எழுதிக் கொள்வார்.
அப்பாவைப் போல இசைக் கலைஞராகத்தான் வாழ்வைத் தொடங்கினார். ​​சிலிர்க்கவைக்கும் சிம்பொனிகளின் கம்போஸர். ஆனால் காதில் இசையிருந்தாலும் கண் வானிலிருந்தது.
சூரியனை ஃபில்டர் போட்டு கண்ணுற்ற போது கண்டுபிடித்ததுதான் Infrared Radiation! பின்னாளில் அது மெடிகல் உலகில் எத்தனை உபயோகமாக இருக்கிறது என்பதை அறிவோம்.
சொன்னது: ‘எனக்கு முன்னால் பார்த்த எந்த மனிதனை விடவும் இன்னும் அதிக தூரம் நான் விண்ணில் உற்று நோக்கியிருக்கிறேன். நான் கவனித்து பார்த்த சில நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்தடைய 20 லட்சம் வருடங்கள் ஆகும் என்று சொல்ல முடியும்.’

நன்றியுடனும் சந்தோஷத்துடனும்...


‘என் தாத்தா ஜெரோனிமோ கதைகள் சொல்வார்... மரணம் தன்னை நெருங்குவதாக உணர்ந்ததும் அவர் முற்றத்தில் உள்ள மரங்களையெல்லாம் ஒவ்வொன்றாக கட்டித்தழுவி குட்பை சொன்னார். ஏனென்றால் அவற்றையெல்லாம் தான் இனிமேல் பார்க்க முடியாது என்று அவருக்குத் தெரிந்ததால்! வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமா? எதுவுமே எப்போதும் நீடிப்பதில்லை என்பதையும் எதையும் சும்மா வந்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நமக்கு கிடைத்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றியுடனும் சந்தோஷத்துடனும் நாம் இருக்க முடிகிறது.’

இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? Jose Saramago.
நோபல் பரிசு பெற்ற முதல் போர்ச்சுக்கல் எழுத்தாளர். 25 மொழிகளில் வெளியாகியுள்ள நாவல், கவிதை, சிறுகதைகள்… இன்று பிறந்த நாள்!
இன்னும் சொன்ன இனியவை:
‘மற்றவர்களுடன் வாழ்வது கஷ்டம் இல்லை; மற்றவர்களைப் புரிந்து கொள்வது தான்...’
‘மனிதர்கள் சிறகு இல்லாமல் பிறந்த தேவதைகள். சிறகில்லாமல் பிறந்து அவற்றை வளரச் செய்வதுபோல் இனியது வேறில்லை.’
‘வெட்டப்படும் போது மரம் அழுகிறது; தாக்கப்படும் போதும் நாய் ஓலமிடுகிறது; ஆனால் மனிதனோ புண்படுத்தப்படும்போது பக்குவமடைகிறான்.’
‘இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் பேசப்படுவதில்லை; தொண்டையில் அடைபட்டுக் கொள்கின்றன; கண்களில் தான் அவற்றைப் படிக்க முடியும்.’
‘வார்த்தைகள் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது எண்ணங்களை மறைப்பதற்காக அல்ல.’
‘சரியாகச் சொல்வதானால் நாம் முடிவுகளை எடுப்பதில்லை; முடிவுகள் நம்மை எடுக்கின்றன.’
‘ஒரு கையால் கொடுப்பதை மற்றொரு கையால் எடுத்துக் கொள்கிறது; அதுதான் வாழ்க்கை.’
‘உங்கள் புத்தகங்களை நீங்கள் தான் எழுத வேண்டும்; வேறு யாரும் அவற்றை உங்களுக்காக எழுத முடியாது; உங்கள் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்ததில்லை.’
‘உங்களை விட்டு நீங்கள் வெளியில் வராத வரை நீங்கள் யார் என்று உங்களால் கண்டுகொள்ள முடியாது. உங்களுக்கு தெரியாதா என்ன?’
‘எந்த மனிதரும் தான் வாழ்க்கையில் அடைய நினைக்கிற அத்தனையையும் அடைய முடியாது. கனவுகளில் மட்டுமே அது சாத்தியம். ஆகவே எல்லாருக்கும் குட் நைட்!’

Friday, November 10, 2023

இல்லாத வீடு இல்லை....

 இல்லாத வீடு இல்லை அது தொடராக வந்தபோது. சொல்லாத நபரே இல்லை அது படமாக வந்தபோது.

'தில்லானா மோகனாம்பாள்'. எழுதியவரின் பிறந்த நாள் இன்று.

கொத்தமங்கலம் சுப்பு!
அவர்யாரென்றால் அவ்வையாரை இயக்கியவர். ரெண்டு வருடம் நன்றாக ஆராய்ச்சி செய்துவிட்டே படம் பிடிக்க க(த)ளம் இறங்கினார்.
வாசனின் வலது கையாக வலம் வந்தவர் ஜெமினியில். டைரக்ட் செய்த மற்றொரு படம் மிஸ் மாலினி. ஆர்.கே.நாராயணனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான ‘Mr.Sampath’தான் அது. நாயகனும் இவரே. ஆம், நடிகராகவும் தடம் பதித்தார். நடித்த 'தாசி அபரஞ்சி' அபார வெற்றி.
திரைக்கதை வசனத்திலும் பங்குண்டு. கைவண்ணம் பெற்று மிளிர்ந்தவை நிறைய. ‘சந்திர லேகா’ விலிருந்து ‘இரும்புத் திரை’ வரை.
ஒரு ச. க. வல்லவர் என்பதை இவர் எழுதிய பாடல்கள் சொல்லும். ‘சபாஷ் சரியான போட்டி!’ என்று பாடல் துறை இவரை வரவேற்றது. ஆமாம், அந்தப் பாடல் இவர் எழுதியதுதான்: "கண்ணும் கண்ணும் கலந்து... சொந்தம்கொண்டாடுதே..."(வஞ்சிக்கோட்டை வாலிபன்).
அப்புறம் 'ஆடிப் பெருக்கி'ல் வருமே அந்த பட்டிமன்றப் பாடல், பெண்களா ஆண்களா என்று, ("பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?") "மனமே முருகனின் மயில் வாகனம்..." ('மோட்டார் சுந்தரம் பிள்ளை')
இவருடைய மற்றொரு நாவலும் அதே சிவாஜி பத்மினி ஜோடி நடிக்க வண்ணப் படமாக வந்தது. "சொல்லாமல் தெரிய வேண்டுமே?" படம்: 'விளையாட்டுப் பிள்ளை' நாவல்: 'ராவ்பகதூர் சிங்காரம்'
வில்லுப் பாட்டு வல்லுநர் என்பது சொல்லும் இன்னொரு விஷயம். அதில் பிரபலம் இவர் சொல்லும் காந்தி மகான் கதை.
ஆட்டோபயாக்ரஃபியை சுவையாக பேசும்படம் இதழில் எழுதியபோது வைத்த தலைப்பு 'பாரு பாரு பயாஸ்கோப்பு பாரு.'
"ஊதும், ஓடும் ரயில்,
அதன் நீளம் ஒண்ணரை மையில்,
உங்கள் ஊரில் நிற்காது, மெயில்!"
50 களில் சிறுவர்களிடையே பிரபலமான பாடல் அது. படம்: 'வள்ளியின் செல்வன்' கதை வசனம் பாடல் இயக்கம் என்று இவர் களமாடிய படம்.
'படிக்காத மேதை'யிலிருந்து 'சில நேரங்களில் சிலமனிதர்கள்' வரை பல படங்களில் நடித்தாரே சுந்தரி பாய்? இவரது மனைவி.

Thursday, November 9, 2023

மற்றொரு முகம்...


அழகுப் பொக்கிஷமாகக் காட்சி தரும் இந்த முகம் 1950 இன் உலக அதிக வசூல் படமான Samson and Delilahவில் டிலைலாவாக நடித்த ஹெடி லாமருடையது.

ஆம், கிளார்க் கேபிளுடனும் சார்லஸ் போயருடனும் நடித்து ஹாலிவுட்டைக் கலக்கிய ஹெடி லாமர்!
இவருக்கு இன்னொரு முகம் உண்டு. ஒரு கண்டு பிடிப்பாளரின் முகம்!
ரெண்டாம் உலக போரின்போது, நீர்முழ்கிக் கப்பல்களிலிருந்து பாயும் ஏவுகணைகளுக்கான தகர்க்க முடியாத ஒரு ரேடியோ அலை மெக்கானிசத்தை பியானோ கம்போஸர் ஒருவருடன் சேர்ந்து கண்டுபிடித்தார்.
Hedi Lammar! இன்று பிறந்தநாள்!

Wednesday, November 8, 2023

கணித்துச் சொன்னபடி ...


அவர் கணித்துச் சொன்னபடி காமெட் திரும்ப வந்தது. அதைக் காணத்தான் அவர் இல்லை. ஆம், Halley’s Comet. 1758-இல் அது வந்தது. 1456, 1531, 1607, 1682 இல் வந்ததெல்லாம் அதுவேதான் என்று சொன்னவரும் அவரேதான்.

Edmund Halley… இன்று பிறந்த நாள்!
1676. தூர திருஷ்டி கண்ணாடியைக் கொண்டு உலகின் வடபாதி வெளி மண்டலத்தின் அனைத்து நட்சத்திரங்களையும் இடம் குறித்து வைத்து விட்டனர். தென்பாதிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார் இவர். அப்பாவும் அரசரும் (King Charles II) உதவ, தென் அட்லாண்டிக் St Helena தீவைச் சென்றடைந்தவர், பருவநிலை சாதகமாக இல்லாத போதும் 341 நட்சத்திரங்களின் உருவ நிலையைக் குறித்துவிட்டே திரும்பினார். கிடைத்தது Royal Society மெம்பர்ஷிப்பும் Oxford இல் மாஸ்டர் டிகிரியும்.
எப்பவாச்சும் நினைச்சிருப்போமா.. சூரியனைச் சுத்தி வரும் கிரகங்கள் இடறி உள்ளே விழாமலும் பதறி வெளியேறி விடாமலும் செலுத்துவது எது? அதைச் செலுத்தும் விசை அப்பால் தள்ளிச் செல்லச் செல்ல உக்கிரம் குறையணும் இல்லையா? அது அவருக்கு தெரிந்திருந்தாலும் பாதையின் வடிவத்தை படம் பிடிக்க முடியவில்லை.
இப்பதான் ஸீனில் என்டர் ஆகிறார் ஐசக் நியூட்டன். கையில் அந்த ellipse பாதையை வரைந்து கொண்டு. போட்ட கணக்கை தொலைத்துக் கொண்டு.
‘அப்படியா? போடு போடு மறுபடி கணக்கை! எழுது எழுது தியரியை!’ என்று அவரைச் செலுத்தி உற்சாகமும் அச்சடிக்க உதவியும் செய்தார் ஹேலி. உருவானதுதான் ‘Principia’. நியூட்டனின் மாபெரும் படைப்பு.
ஒண்ணு தெரியுமா? உலகின் முதல் பருவக் காற்று வரை படத்தை 1686 இல் வரைந்தது இவருதான். அந்த அடையாளக் குறிகளை இன்னிக்கு வரை பயன்படுத்துகிறோம்.
வயசுக்கும் ஆயுசுக்கும் உள்ள தொடர்பை அட்டவணைப் படுத்தினதும் முதலில் இவரே. இன்ஷூரன்ஸுக்கு அது உதவிற்று. ஆழத் தண்ணீரில் இறங்கி நாலு மணி நேரம் வரை வேலை செய்ய உருவாக்கிய Diving Bell இல் தேம்ஸுக்குள் 60 அடி மூழ்கிக் காட்டியது ஆழ்ந்த அறிவைக் காட்டும்.

Tuesday, November 7, 2023

மட்டற்ற உயரத்துக்கு...


பத்திரிகை ஆபீஸுக்குள் பரதநாட்டியம் ஆடச் சொல்லிக்கொடுக்கும் பிடிவாத விமர்சகர் பாலுவை மனதில் நினைக்கையில்…

அவரைத் தள்ளிக் கொண்டு… ‘மை ஸன் இஸ் யுவர் ஸன்,’ என்றதும் புருவமும் உதடுகளும் துடிக்க, சூர்யா எங்கேன்னு பதறும் அப்பா வேலு நாயக்கர் வருகிறார்.

‘தப்பு அது இல்லடா..’ன்னு முகத்தை ஒரு உதறு உதறும் ஆளவந்தான் அவர் மேலே வந்து நிற்க..

தான் காதலிக்கும் மோனா தன்னைக் காதலிக்கவில்லைன்னு தெரிந்ததும் அதை அப்படியே ஜாலி நட்பாக முகத்தில் பிரதிபலிக்கும் ‘Saagar’ ராஜா தலைகாட்ட..

‘எதுக்குக் கரையறே நீ இப்போ?’ன்னு கரையும் ‘மைக்கேல் மதன' காமேஸ்வரன் எட்டிப் பார்க்கிறார். அவரை முந்திக்கொண்டு

பிய்ந்த முகத்துடன் ‘ஷூட் மீ ஷூட் மீ’ன்னு குருதி கொட்ட அதட்டும் குருதிப்புனல் ஆதி வந்து நிற்கிறபோது..

மன்னனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பெருமாளையும் பார்த்துவிட்டு கையைப் பிசைந்தபடி இயலாமையில் உதட்டைப் பிதுக்கும் தசாவதாரம் ரங்கராஜன் ஸீனுக்கு வர..

‘இது ஞாபகம் இருககா, அது ஞாபகம் இருக்கா'ன்னு ஸ்ரீதேவியிடம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வெந்த மனதின் வேதனையுடன் போட்டிபோட்டுக்கொண்டு குட்டிக்கரணம் அடிக்கும் சீனு அவரைத் தள்ளிக்கொண்டு வர..

அவரை முந்திக்கொண்டு ‘ரெண்டு வருஷமா என் பிள்ளை சாப்பிட்ட சோறு, நான் சாப்பிட மாட்டேனா’ந்ன்னு மகாநதி கிருஷ்ணா சிரிக்க..

‘போதுண்டா, போங்கடா, போய்ப் புள்ளை குட்டிங்களை படிக்க வைங்கடா…’ன்னு தோல்வியின் வேதனையைக் கொட்டும் தேவர் மகன் சக்திவேல் தோன்றுகிறார்.

கலையை அதன் மட்டற்ற உயரத்துக்கு எடுத்துச்செல்ல எத்தனை முயற்சி மேற்கொள்ளுகிறார்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 

Monday, November 6, 2023

இட்ட அடி நோவ..

'தெரியுமா அரசே உங்களுக்கு? ரொம்ப நல்லப் பாடுகிறான் கம்பர் மகன், காதலை,' என்று வம்பிழுக்கிறார் ஒட்டக்கூத்தர்  (நம்பியார்)...

அரசரும் கம்பரும் அம்பிகாபதி(சிவாஜி)யும் அமர்ந்திருக்கையில்!
அப்போது இளவரசி அமராவதி (பானுமதி) மெல்லப் படியிறங்கி வருகிறாள் அடியெடுத்து.
"இட்ட அடி நோவ.. எடுத்த அடி கொப்புளிக்க… வட்டில் சுமந்து மருங்கசைய.." தன்னை மறந்து பாடி விடுகிறான் அம்பிகாபதி!
அரசர் கோபமுற நோக்க, கம்பர் தொடர்ந்து ஒரு வரி பாடி சமாளிக்கிறார். “கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று… கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்.” வெளியே கொட்டிக் கிழங்கு விற்கும் முதியவளின் பாதங்கள், கொளுத்தும் வெயிலில் நோவதைத்தான் சொல்கிறான் தன் மகன் என்று.
‘யாரங்கே? அழைத்து வா அந்த முதியவளை!' ஆணையிடுகிறார் அரசர்.
இருந்தால்தானே வருவதற்கு என நம்பியார் குதூகலிக்க, கம்பர் பதறி மனதில் கலைமகளைக் கும்பிட…
நுழைகிறாள் அந்தப் பாட்டி, 'அப்பா என்னா வெய்யில்,' என்கிறாள், தலையிலிருந்து கொட்டிக் கிழங்குப் பொட்டியை இறக்கியபடி.
காப்பாற்றி விடுகிறாள் சரஸ்வதி!
நம்பும் மன்னர். வெம்பும் நம்பியார்.
'அம்பிகாபதி' படத்தின் அற்புதமான காட்சி.
(ப. நீலகண்டனின் ஷாட் அமைப்பைக் கவனியுங்கள். மிகக் குறைந்த ஷாட்களில் அத்தனை எக்ஸ்ப்ரஷன்களையும் அழகாகக் கேப்ச்சர் செய்திருக்கும் நுணுக்கம்!)
---------

திருவிடை தந்த ஒரு விடை...

அதை ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்லலாம். எங்கிருந்தோ வீசும் தென்றல் காற்று என உணரலாம். பல்லாயிரம் ஆண்டு படிந்து பளிங்கு படுத்திவிட்ட பாறைக் கற்களினூடே வழிந்தோடும் அருவி என்று மகிழலாம். வளைந்தும் நெளிந்தும் வட்டமடித்துத் தாழ இறங்கியும் காற்றில் சிறகுகளை அளைந்த வண்ணம் சீராகப் பறக்கும் வானம்பாடியாக எண்ணலாம். ரொம்பக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது புல்லாங்குழல் இசை என்பதும் வாசிப்பது டி. ஆர். மகாலிங்கம் என்றும் தெரியும். அதாவது நீங்கள் தரைக்கு வந்தால்!

புல்லாங்குழல் மேதை டி. ஆர். மகாலிங்கம்... இன்று பிறந்த நாள்!
இசையால் மனிதரை மெய்மறக்கச் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு திருவிடைமருதூர் தந்த ஒரு விடை தான் மாலி அவர்கள். பக்கத்தில் இருந்த சிவன் கோவில் மகாலிங்க சுவாமியின் பெயரையே அவருக்கு வைத்தார்கள்.
உறவினர் கோபால ஐயர் இசைப்பள்ளி நடத்தியது இசைவாக இருந்தது. சற்றே ஆரோக்கியம் குறைந்த பையன் ஆயிற்றே? வாய்ப்பாட்டு படிக்கட்டும் என்றார் தந்தை . பையனுக்கோ ஃப்ளூட் மீது ஒரு காது. யாருக்கும் தெரியாமல் பயின்றவனின் திறமையைப் பார்த்து தகுந்த குருவைத் தேடினார்கள்.
எந்த இசைச் சரத்தைக் காதில் வாங்கினாலும் அதை அப்படியே ஃப்ளூட்டில் பிரதிபலிக்க அந்த வயதிலேயே அவரால் முடிந்தது.
மயிலாப்பூர் தியாகராஜர் உற்சவத்தில் ஏழு வயதில் முதல் கச்சேரி. எந்த அளவு வாசித்தார் என்றால் பார்க்க வந்திருந்த இரு வித்வான்கள் பரவசமாகி உடனே சென்று பொன்னாடை வாங்கிவந்து போர்த்தி ஆசீர்வதிக்கும் அளவு!
நுணுக்கங்களை விமரிசிக்க நமக்கு இசை ஞானம் பத்தாது. ஆனால் எந்த இசை ஞானமும் நமக்கு அவசியம் இல்லை அவர் வாசிப்பதை அணுஅணுவாய் ரசிக்க என்பது கேட்கிற ரெண்டாவது நிமிடமே புரிந்துவிடும்.
நின்னு கேட்க நேரம் இல்லாதவர்கள் அவரது 'நின்னுவினா நாமதேனு..'வை மட்டும் கேட்டாலே போதும். என்னே இது என்று விடுவார்கள் அசந்து.
எத்தனையோ ப்ளூட் கச்சேரிகளை கேட்டிருப்பீர்கள்.. ஆனால் இங்கே புல்லாங்குழலே தன்னால் வந்து தன் அதிகப்பட்ச இசை வெளிப்பாட்டு ஆற்றலை பிரகடனப்படுத்தியது போலிருக்கும்!